முதல் அத்யாயம்
ந
நாரசிம்ஹாத் அதிகச்சதேவோ ந
தீர்த்தம் அந்யத் பவநாச
ஹேதோ: | ந காருடாத்ரே:
அபரோஸ்திசைலோ ந பக்த
ஜந்தோ ரபரோஸ்தியோகீ
!! ||
நரம் கலந்த சிங்கம்
என்கிற அழகிய சிங்கத்தைக்
காட்டிலும் உயர்ந்த தெய்வம்
கிடையாது. எல்லா அவதாரங்களைக்
காட்டிலும் ந்ருஸிம்மாவதாரம்
முக்கியம் என்றன்றோ
ஆசாரியர்கள் கூறுவது.
நரஸிம்ஹ தநுர கெளணீ ...........
என்று கூரத்தாழ்வான்
வரத ராஜஸ்தவத்தில் அருளிச்
செய்தார். பவநாசினி என்னும்
புண்ணிய தீர்த்தத்தைக்
காட்டிலும் உயர்ந்ததான
தீர்த்தம் கிடையாது.
இந்த புண்ணிய தீர்த்தத்தின்
பெயரே இதன் மகிமையை காட்டுகிறதல்லவா?
பவத்தில், ஸம்ஸாரத்தில்
ஏற்படும் கஷ்டங்களையும்
அதாவது ஆதிவ்யாதிகளையும்
போக்கடிக்கிறது. ஸம்ஸாரமாகிற
கஷ்டத்தையும் போக்கடிக்கிறது
இந்த தீர்த்தம். ஆக இஹபரஸாதகம்
என்று ஏற்படுகிறது. காருடசைலம்
என்ற இம்மலையைக் காட்டிலும்
உயர்ந்த மலை கிடையாது.
அத்யுத்க்ருஷ்டமான தெய்வத்தையும்,
மிக மேன்மை பெற்ற தீர்த்தத்தையும்
வஹிக்கிறபடியால் இம்மலை
மிக மேன்மை பெற்றது என்பதில்
என்ன ஸந்தேகம்? இதில்
பிரவஹிக்கிற நதியினிடத்திலும்,
உயர்ந்த இம்மலையினிடத்திலும்,
இதில் வஸிக்கின்ற உயர்ந்த
தெய்வமான நரஸிம்மனிடத்திலும்
பக்தியை செலுத்துகிறவரைக்
காட்டிலும் உயர்ந்த யோகி
வேறு யார் உளர் என்கிறார்கள்
பெரியோர்.
நாராயணம்
நமஸ்க்ருத்ய நரம்சைவ
நரோத்தமம் | தேவீம் ஸரஸ்வதீம்
வ்யாஸம் ததோ ஜயமு தீரயேத்
||
முன்னொரு ஸமயம் புண்ணியமான
கங்கா நதியின் கரையில்
பகவானிடத்தில் மனத்தை
செலுத்திய செளனகர் முதலிய
மகரிஷிகள் பரமஸந்தோஷத்துடன்
நாரத முனிவரை வணங்கி
கேட்டனர். எல்லாம் அறிந்த
முனிவரே! ஞானிகளின் தலைவரே!
ஸம்ஸாரத்தில் அடிவைத்து
தவிக்கின்ற மனத்தை உடையவர்களை
கரையேற்றுபவரே! நினைத்தபடி
காரியங்களைச் செய்ய திறமை
பெற்றவரே! மகாத்மாவான
ஹிரண்ய கர்ப்பனின் புதல்வனே!
மஹரிஷியே! தேவரீரை வணங்குகிறோம்.
எங்களுக்கு அருள் புரிந்து
நாங்கள் கேட்குமவற்றைச்
சொல்லி அருள்புரிய வேண்டும்.
தேவரீர் தகப்பனாரான பிரம்மாவிடமிருந்து
ஸங்கிரஹமாக சில புண்ணிய
நதிகளையும் சில க்ஷேத்திரங்களையும்
பற்றிக் கேட்டோம். ஸ்ரீமுஷ்ணம்,
திருமலை, ஸாலக்கிராமம்,
நைமிசாரண்மம், ஸ்ரீரங்கம்,
வ்ருஷபாத்ரி, நாராயணமலை,
அனந்தசயனம், பைல்வம்,
குரங்கம், மலையமலை, ஸிம்ஹாத்ரி,
அஹோபிலம் இவை முதலியவைகளைக்
கேட்டு அறிந்தோம். வ்ருஷபர்
என்பவர் கபிலருக்கும்,
கபில முனிவர் புருகுத்ஸருக்கும்,
புருகுத்ஸர் அக்ஷபாதருக்கும்,
இதை எடுத்துரைத்தனர்.
அதில் அஹோபிலத்தின்
பெருமை விஸ்தாரமாக உபதேசிக்கப்பட்டது.
அப்பொழுது நாங்கள் கர்மாநுஷ்டானத்தில்
ஈடுபட்டிருந்தபடியால்
மிக அவதானத்துடன் இவ்விஷயத்தை
கேட்க முடியாமல் போய்விட்டது.
இதை நினைத்து மிக வருத்தடைகிறோம்.
தேவரீரை இப்பொழுது நேரில்
சந்தித்தோம். நடந்தது,
நடக்கிறது, நடக்கப் போகிறது
என்று சொல்லக்கூடிய
மூன்று காலங்களிலும்
உள்ள பொருள்களின் தத்துவத்தை
அறிய சக்தியுள்ள தேவரீரிடத்தில்
இந்த அஹோபில க்ஷேத்திர
மகிமையை அறிய அவா எங்களுக்கு
உண்டாகியிருக்கிறது.
ஆச்ரம தருமங்களிலும்
இப்பொழது நாங்கள் மனத்தை
செலுத்துவதில்லை. க்ருஹக்ருத்யத்திலும்
எங்களுக்கு ஆஸ்தை இல்லை.
பகவத் த்யானத்திலும்
ப்ரீதி இல்லை. இஹலோக
ஸுகத்தை அடைய வேண்டுமென்று
அதற்குக் காரணமான தனத்தை
சம்பாதிப்பதிலும் அவா
இல்லை. எங்களுக்கு அஹோபில
க்ஷேத்திரத்தின் மகிமையை
கேட்க வேண்டுமென்கிற
ஒரே தாகம்தான் உள்ளது.
தாகம் உள்ளவன் தண்ணீரை
எப்படி விரும்புவானோ,
பசி உள்ளவன் ஆஹாரத்தை
எப்படி எதிர்பார்ப்பானோ,
அப்படியே தேவரீரிடமிருந்து
இந்த க்ஷேத்திரத்தின்
மகிமையைக் கேட்க விரும்புகிறோம்.
தேவரீர் படித்தவர், மஹாகவி,
ஸமர்த்தர், பிறருடைய
பலனையே தன்பலனாகக் கருதுகிறவர்.
தேவரீர் எங்களை உய்யும்படி
செய்ய வேண்டும்.
இதைக்
கேட்டதும் நாரத முனிவர்
சந்தோஷம் அடைந்தார்.
சிரித்த முகத்துடன் சொல்லத்
தொடங்கினார். மகரிஷிகளே!
உலகத்தில் மிகப் புனிதமான
பல க்ஷேத்திரங்கள் உள்ளன.
அவை எல்லாவிதமான புருஷார்த்தங்களையும்
கொடுக்கக் கூடியவை.
பிரம்மாவினால் படைக்கப்பட்டவை.
அவைகளை மனத்தாலும் கணக்கிட
முடியாது. அவைகளின் மகிமை
வாசாமகோசரமானது. ஸந்தோஷத்தால்
சிலவற்றை மாத்திரம் சொல்லுகிேற்ன்.
அவந்தீ, குருக்ஷேத்திரம்,
காசி, பத்ரிகாச்ரமம்,
கயை, ப்ரயாகம், கேதாரம்,
தேவதாருவனம் முதலியன
புண்ணிய க்ஷேத்திரங்கள்.
இவைகளில் ப்ரயாகம் என்பது
உயர்ந்தது. உலகத்துக்கு
வெகு சீக்கிரத்தில் பரிசுத்தியை
கொடுக்கக்கூடியது. ஏன்
எனில் அமாவாசையில் இந்த
ப்ரயாகத்தில் மூன்று
கோடி பத்தாயிரம் புண்யநதிகளும்
சேருகின்றன. இப்படியே
அஹோபிலம் என்னும் திவ்ய
தேசத்தில் ஸ்ரீந்ருஸிம்ஹன்
எழுந்தருளியிருக்கின்றார்.
அப்பெருமானின் நான்கு
பக்கங்களிலும் மூன்று
யோசனை விஸ்தாரமுள்ள
இடமுள்ளன. கயை, ப்ரயாகை,
காசி, கங்கை இவைகளைக்
காட்டிலும் நூறு மடங்கு
அதிக ப்ரபாவம் பெற்றது.
பித்ருக்களுடைய ப்ரீதியின்
பொருட்டு கயைக்குச்
செல்ல வேண்டும். உடலை
விட்டு நற்கதியைப் பெற
கங்கையை அடைய வேண்டும்.
மந்திரோப தேசத்தின்
பொருட்டு காசிக்குச்
செல்ல வேண்டும் என்று
சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்த மூன்று விதமான பலனையும்
அஹோபிலத்தில் பெறலாம்.
மேலும்
காசியில் ஆயிரம் யுகமும்,
ப்ரயாகத்தில் இருபது
யுகமும், கயையில் நூறு
யுகமும் வசித்தால் மனிதன்
எப்பலனைப் பெறுவானோ
அப்பலனை அஹோபில க்ஷேத்திரத்தில்
ஒரு தினம் வசித்த மாத்திரத்தினாலேயே
பெறுகிறான். கயையில்
ஒருவன் பத்தாயிரம் பாகவதர்களுக்கு
அன்னமளித்தால் எந்த பலனைப்
பெறுவானோ, ப்ரயாகத்தில்
இலட்சம் பாகவதர்களுக்கு
போஜனமளித்தால் எந்தப்
பலனைப் பெறுவானோ, காசியில்
இரண்டு இலட்சம் பேருக்கு
அன்னமளித்தால் எந்தப்
பலனைப் பெறுவானோ அந்த
பலனை அஹோபிலத்தில் ஒரு
க்ராஸம் அளித்த மாத்திரத்தினாலேயே
பெற்று விடுகிறான். ஒரு
க்ராஸம் அன்னதானத்திற்கே
இப்படி பலன் என்றிருந்தால்
பரிபூர்ணமாக அன்னமிட்டாலோ,
அனேக பாகவதர்களுக்கு
அன்னமிட்டாலோ எவ்வளவு
பலனை அடைவான் என்பதைச்
சொல்லவும் வேணுமோ.
செளனகரே!
இந்த தேசத்தில் அணுவளவு
ஒரு பொருளை ஒருவருக்குக்
கொடுத்தால் அப்பொருள்
மேருமலை போல் பெரியதாகி
விடுகிறது. மேருமலை என்பது
தங்கமலை. அதனுடைய உயரமும்
ஆழமும் விஸ்தாரமும் அளவிட
முடியாதது. அவ்வளவு பரிமாணமுள்ள
தங்கத்தை ஒருவன் தானம்
செய்தால் அதற்கு ஏற்படும்
பலனை மனத்தாலும் நினைக்க
முடியாது! அது போல் ஆகிவிடுகிறது.
இந்த திவ்யதேசத்தில்
கொடுக்கப்படும் அணுமாத்திர
திரவியமும், ஆலமரத்தின்
விதை எப்படி பெரிய வ்ருக்ஷமாக
மாறுகிறதோ அவ்வாறு ஆகிவிடுகிறது
இந்தச் சிறிய பொருள்.
காலையில்
எழுந்து ஹரி: என்று பகவந்நாமகீர்த்தனம்
செய்வது போல் "அஹோபிலம்
அஹோபிலம்" என்று நான்கு
எழுத்தை உச்சஸ் ஸ்வரத்துடன்
சொல்ல வேண்டும். இந்த
நான்கெழுத்துள்ள உத்தமமான
மந்திரத்தை சொல்பவன்
ஐந்து மகாபாதகங்களின்றும்
விடுபடுகின்றான். எல்லா
பாபங்களையும் இந்த மந்திரம்
அழித்து விடுகிறது. நான்கு
அக்ஷரமுள்ள மந்திரம்
பிரம்மாவினால் பூஜிக்கப்
பட்டது. தர்மம், அர்த்தம்,
காமம், மோக்ஷம் என்கிற
நான்கு புருஷார்த்தங்களையும்
தரவல்லது. இந்த தேசத்தில்
மூன்று யோசனை அளவு ஸ்ரீந்ருஸிம்ஹன்
மிக அபிமானம் வைத்திருக்கிறான்.
அவ்விடத்தில் பல முனிவர்கள்
வசிக்கின்றனர்.
மேலும்
அந்த வீரக்ஷேத்திரத்தில்
வைராக்கிய சீலர்களும்
பயமற்றவர்களும் நாராயணனுடைய
திருவடித்தாமரைகளில்
மனத்தைச் செலுத்திய மகரிஷிகளும்
வாசம் செய்கின்றனர்.
சிலர் தண்ணீரையே பருகித்
தவம் புரிகின்றனர். மற்றும்
சிலர் காற்றையே உட்கொண்டு
வேறு ஆகாரத்தைப் புசியாமல்
தவத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஜடை தரித்த சிலர் ஸாதாரணமான
குடிசையில் வாழ்ந்துகொண்டும்
இருக்கின்றனர். சிலர்
தண்டம் ஏந்தியவர்களாக
உள்ளனர். பிரணவத்தை ஓயாமல்
கூறிக் கொண்டு ஆனந்த
ரூபமான பிரஹ்மத்தினிடம்
மனத்தைச் செலுத்தி உண்மையான
தியானத்தில் ஈடுபட்டு
உலக குருவான பகவானைச்
ஸந்தோஷிப்பித்துக்
கொண்டு சிலர் இருக்கின்றனர்.
வெளி விஷயங்களில் மனத்தைச்
செலுத்தாமல் ஸாதுக்களுடன்
சேர்ந்து நற்புத்தியைப்
பெற்று எல்லாப் பிராணிகளிடமும்
இரக்கமும் நட்பும் பணிவும்
கொண்டு சிலர் இருக்கின்றனர்.
பிரஹ்மசர்யத்தோடு
கூடியவர்களும், எல்லாப்
பிராணிகளிடமும் ஸாம்யபுத்தி
உள்ளவர்களும், வீண்வார்த்தை
பேசாதவர்களும், வேதத்தை
ஓதுகிறவர்களும், ஆர்வத்துடன்
கூடியவர்களும், ஸதாசாரம்
உள்ளவர்களும், ஸீதோஷ்ண
ஸுகதுக்கங்களில் மாறுபாடில்லாமல்
வாழ்பவர்களும், பொறுமை
உள்ளவர்களும், எல்லா
வஸ்துக்களிடமும் ஸ்வாத்மபுத்தியும்
ஈச்வர புத்தியும் செலுத்துகிறவர்களும்,
கிடைத்ததைக் கொண்டு
ஸந்தோஷம் அடைகிறவர்களுமான
மஹான்களும் இருக்கின்றனர்.
வீடு, வாசல், உயிர், பெண்,
பிள்ளை அனைத்தையும் பகவானிடம்
அர்ப்பணம் செய்து அப்பகவானை
உத்தேசித்து யாகம் செய்கிறவர்களாய்
மோக்ஷத்திலேயே அபிருசி
உள்ளவர்களாய் இவர்கள்
அந்த வீரக்ஷேத்திரத்தில்
வாசம் செய்கின்றனர்.
மூன்று
யோஜனை விஸ்தீர்ணமும்,
மூன்று யோஜனை நீண்டதுமான
அந்த க்ஷேத்திரத்தில்
கருடாத்ரி என்று பெரியதொரு
மலை உள்ளது. அம்மலையில்
சந்திர சூரியர்களைத்
தொடுகின்றவையும், துக்க
ஸாகரத்தைத் தாண்டும்படி
செய்து வைக்கின்ற ஸேதுக்கு
ஸமமாகக் கருதக் கூடியவையுமான
சிகரங்கள் உடையது. அவற்றில்
மேரு மலைபோல் விசாலமானதும்
தங்க மயமாக விளங்குவதுமான
ஒரு சிகரம் உள்ளது. அச்சிகரத்தினுடைய
நிழல் பூமியில் படுவதே
இல்லை. எனவே ஸாதாரணமான
மனிதன் மரம் முதலியவற்றின்
நிழல் அசைவது போன்ற
அசைவே அங்கு இல்லை, அஸுரர்களுக்கு
அரசனான ஹிரண்யகசிபுவைப்பற்றி
நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
அவனுடைய அரண்மனையில்
உள்ள ஸ்தம்பத்தில் ந்ருஸிம்ஹன்
அவதரித்தான். அந்த ஸ்தம்பந்தான்
இப்பொழுது இந்த மலையாகக்
காட்சியளிக்கிறது, என்று
சொல்லலாம். ஆகையாலேயே
இப்பொழுதும் இந்த மலையின்
மத்தியில் ஜ்வாலைகளோடு
கூடிய ந்ருஸிம்ஹன் ஆயிரக்கணக்கான
சூரியனுடைய ப்ரபைக்கு
ஸமமான ப்ரபையை உடையவனாக
ஸேவை ஸாதிக்கின்றான்.
வஜ்ராயுதத்துக்கு ஸமமான
அழகிய மங்களகரமான நகங்களால்
அந்த ஹிரண்யகசிபுவின்
மார்பைக் கிழித்துக்
கொண்டிருக்கும் நிலையில்
ஸேவை அளிக்கிறான். இவ்விடத்தில்
அப்பெருமானுடைய திருக்கைகளால்
அன்று வாளவுணனது கிளர்ந்த
பொன் ஆகத்தைக் கிழித்தப்படியால்
ஏற்பட்ட ரத்தம் அலம்பப்பட்டதால்,
ரத்தகுண்டத்தைக் கண்களால்
பார்த்து ந்ருஸிம்ஹனை
எவர்கள் மனத்தால் நினைக்கிறார்களோ
அவர்கள் ரத்தங்கலந்த
யோனியை ஒரு சமயமும்
அடைவதில்லை.
இந்த உக்ரமான
ந்ருஸிம்ஹனுடைய கோபம்
தணிவதற்காகத் தேவதைகள்
கங்கையை இங்கு கொண்டுவந்து
மிக ஆதரவுடன் அபிஷேகம்
செய்து வைத்தனர். அந்த
கங்கை இப்பொழுது மிகவும்
பயங்கரமாக மேற்கு முகமாய்ப்
பிரவகிக்கிறது. பகவானுடைய
கோபதாபத்தைப் போக்கடித்தபடியால்
நமக்கு ஸம்ஸாரத்தில்
உண்டான ஸந்தர்ப்பத்தையும்
போக்கடிப்பதாக அமைந்துள்ளது
இந்த நதி. எனவே, பாவநாசினி
என்ற பெயருடன் விளங்குகிறது
என்று மகரிஷிகள் இதன்
பிரபாவத்தை அறிந்து இதன்
கரையில் வாஸம் செய்ய
நிச்சயம் செய்தார்கள்.
இந்த
கருட மலையின் நூறு யோஜனை
விஸ்தீர்ணமுள்ள தெற்குப்
பாகத்தில் மகரிஷிகள்
வசிக்கின்றனர். வடபாகத்தில்
இரண்டு யோஜனை விஸ்தாரமுள்ள
இடத்தில் மிக புண்ணியமான
நந்தியாசிரமம் உள்ளது.
அங்கு நந்திகேசுவரர்
வசிக்கிறார். அவர் பரமசிவனைக்
குறித்துப் பயங்கரமான
தவம் புரிந்தார். மூன்று
உலகங்களினாலும் கொண்டாடப்பட்ட
பரமசிவன் அவருக்கு முன்
தோன்றி பரமத கணங்களுக்கு
யஜமானனாக இருக்கும் தன்மையை
அவருக்குக் கொடுத்தார்.
இவ்விடத்து வடபாகத்தில்
ஸ்ரீசைலம் என்கிற மலை
உள்ளது. அது கருட மலையின்
ஒரு பாகம். பயங்கரமானது.
அங்கே தேவதைகளும் மானவர்களும்
வசிக்கின்றனர். பரமேச்வரர்
தம் இருப்பிடமான கைலாச
மலையையும் விட்டு மிகப்
பிரீதியுடன் அங்கே வாஸம்
செய்கிறார். அங்கே தாமாகவே
தோற்றமளித்து அனைவருக்கும்
வேண்டிய வரங்களைக் கொடுக்கிறார்.
அங்கு ஜனங்களின் பாபங்களை
அழிக்கின்ற க்ருஷ்ணை
என்னும் நதி ப்ரவகிக்கிறது.
இந்தக் கருடமலையின் எல்லை
அதுதான். சிறிய சிறிய
மலைகளும் புண்ணியமான
நதிகளும் ஸித்தர்கள்
வசிப்பதற்கு யோக்யமான
ஆசிரமங்களும் அங்கு உள்ளன.
இப்படி ந்ருஸிம்ஹன்,
வசிக்கக் கூடிய இம்மலையின்
வைபவம் வாக்குக்கும்
மனத்துக்கும் எட்டாததாயும்
பூஜிக்கத் தகுந்ததாயும்
உள்ளது.
இவ்வாறு நாரத
பகவான், மகரிஷிகளிடம்
சொன்னார். இதைக் கேட்ட
மகரிஷிகள், "நாரத முனிவரே!
எந்த இடத்தில் கருடமலை
எங்கு உள்ளது? பாவனமான
அந்த க்ஷேத்திரம் எங்கிருக்கிறது?
மிக விசாலமான இம்மலை
இருக்க, இதன் ப்ரபாவம்
ஏன் ஓரிடத்தில் மாத்திரம்
அமைந்துள்ளது? இதை விசதமாக
எங்களுக்குச் சொல்ல
வேண்டும்" என்று கேட்டனர்.
நாரதர்
கூறுகிறார் : இந்தப் பூமியானது
மிக விஸ்தாரமானது. ஏழு
தீவுகளுடனும், மலைகளுடனும்,
ஸமுத்திரங்களுடனும்,
கூடியது. இந்தப் பூமியில்
தீவுகளில் ஒன்றான ஜம்பூத்வீபம்
என்ற ஒரு தீவு உள்ளது.
இந்தப் பூமிக்குக் கர்மபூமி
எனப்பெயர். இந்தத் தீவில்
பரத கண்டத்தில் மேருமலைக்கும்,
க்ருஷ்ணவேணிக்கும் தென்பாகத்தில்
ஏழு யோஜனை அளவுள்ள இடத்தில்
பூர்வ ஸமுத்திரத்திற்கும்
மேற்கில் அஹோபிலமென்ற
ப்ரஸித்தமான இடம் உள்ளது.
அஹோபிலமென்னும் க்ஷேத்திரத்தில்
கருடமலை என்னும் மலை
ப்ரஸித்தமானது. எங்கும்
நிறைந்துள்ள பகவான் ஓரிடத்தில்
மாத்திரம் எப்படி விளங்குகிறாரோ
அதபோல் இம்மலையின் ப்ரபாவமும்
இந்த க்ஷேத்திரத்தில்
அபிவ்யக்தமாக உள்ளது.
பலவிதமான மரங்களாலும்
கொடிகளாலும் பலவித பட்சிகளாலும்
அலங்கரிக்கப்பட்டது.
தமாலம், அசோகம், தென்னை,
கதம்பம், பூவரசமரம், பலா
மரம், முல்லை, மல்லிகை,
ரோஜா, சம்பந்தி, சந்தனமரம்,
புளியமரம், விளாமரம்,
முதலிய மரங்களாலும்,
புஷ்பக் கொடிகளாலும்
சூழப்பட்டிருக்கிறது.
புஷ்பங்களில் உள்ள வண்டுகள்
தேனைப் பருகி ரீங்காரம்
செய்துகொண்டு பாடுகின்றன.
யானை, சிங்கம், புலி, நரி,
கரடி, முதலிய மிருகங்களும்
வசிக்கின்றன. மணிகளால்
அலங்கரிக்கப்பட்ட ஸர்ப்பங்கள்
படத்தை எடுத்துக் கொண்டு
பயங்கரமான காட்சி தருகின்றன.
மிலேச்சர்கள் கையில்
வில்லையும் அம்பையும்
எடுத்துக் கொண்டு தங்கள்
மனைவிமாருடன் பயமற்றவர்களாயும்
பிறர்க்கு அச்சந் தருபவர்களாயும்
வசிக்கின்றனர். மகரிஷிகள்
தங்கள் நித்யகர்மா அநுஷ்டானங்களை
வழுவில்லாமல் செய்துகொண்டு
பகவானிடத்தில் மனத்தைச்
செலுத்தி நிர்பயராக வசிக்கின்றனர்.
கந்தர்வர்களும், கிந்நரர்களும்
அப்ஸர மாதருடன் கூடி
விளையாடுகின்றனர். இப்படி
அவர்கள் அனைவருக்கும்
அவர்கள் விரும்பும் அவற்றைக்
கொடுத்துக் கொண்டு
அந்த மலை உள்ளது. அம்மலையின்
மகிமையைச் சொல்லுவதற்குப்
ப்ரஹ்மாவும் சக்தியற்றவர்
என்றால் நம் போன்றவர்களைக்
குறித்துச் சொல்லவும்
வேண்டுமா? அம்மலையின்
தென்புறத்தில் வேங்கடமலை
என்னும் மலை உள்ளது. அம்மலையிலேதான்
ஸ்ரீநிவாஸன் நித்தியர்களுக்கும்,
முக்தர்களுக்கும் மகரிஷிகளுக்கும்
ஸேவை ஸாதித்துக் கொண்டு
அநேகவிதமான போகங்களை
அநுபவித்துக் கொண்டு
விளங்குகிறான்.
*****
Chapter-3
|