மூன்று குற்றங்கள்
உலகிலுள்ள
மக்கள் அனைவரும் தம்
யஜமானனான பகவானுடைய பிரீதியை
முன்னிட்டு அவன் சொன்ன
சட்டதிட்டங்களுக்கு
அடங்கி ஒவ்வொரு காரியத்தையும்
செய்ய வேண்டும். எந்த
காரியத்தை செய்தால் பகவான்
நம்மிடத்தில் ஸந்தோஷமடைந்து
'அளியன் நம் பையல்' என்று
கருதுவானோ அப்படிப்பட்ட
வேலையைச் செய்ய வேண்டும்.
எந்த வேலையைச் செய்தால்
அவனுக்கு வெறுப்பு உண்டாகுமோ
அதைச் செய்யப் கூடாது.
'ஸர்வேச்வரனுக்கு
எது ப்ரீதியைக் கொடுக்கும்?
எது அப்ரீதியைக் கொடுக்காது?
என்பதை எப்படி நாம் அறிவது
என்று கவலைப்பட வேண்டியதில்லை.
வேதம், ஸ்ம்ருதி, இதிஹாஸம்,
புராணங்கள், தர்ம சாஸ்திரம்,
கீதை முதலிய நூல்களைக்
கொண்டு ஸுலபமாக இவற்றை
நாம் அறிந்து கொள்ளலாம்.
பகவான் தன் அபிப்ராயத்தை
வேதங்கள் மூலமாக நன்கு
வெளிப்படுத்தியிருக்கிறான்.
அதை அநுஸரித்து முனிவர்களும்
ஆழ்வார்களும் ஆசார்யர்களும்
நாம் ஸுலபமாக அறியும்
வண்ணம் பல நூல்களை அருளியிருக்கிறார்கள்.
பகவான், தானும் பூமியில்
அவதரித்து நல்லவற்றையும்
கெட்டவற்றையும் தெரிவித்திருக்கிறான்.
சூரியன்
உதிக்கும் ஸமயத்திலும்
ஸூர்யன் அஸ்தமிக்கும்
வேளையிலும் தூங்குவது,
ஜலத்தை அசுத்தம் செய்வது,
திருடுவது, பெரியோர்களை
நிந்திப்பது, கெட்ட சொற்களை
உபயோகிப்பது, கொலைசெய்வது,
கள் குடிப்பது, சிசுஹத்தி
செய்தல், பொய் பேசுதல்,
பரஸ்திரீயுடன் ஸம்பந்தம்
வைத்துக்கொள்ளல், விரோதத்துக்கு
காரணமில்லாமலே பிறரை
ஹிம்ஸித்தல் - இப்படி
அநேகம் செய்யக்கூடாத
செயல்கள் உள்ளன. இவற்றில்
எதைச் செய்தாலும் எம்பெருமானுக்குக்
கோபமே அதிகம் உண்டாகும்
என்பதில் ஸந்தேஹமே இல்லை.
ஆயினும்
இவற்றுள் முக்கியமான
மூன்றை இங்கு எடுத்து
கொள்ளுவோம். 'கோபம்
இன்னது என்பதையே அறியாதவள்
பிராட்டி' என்று நம் ஆசார்யர்கள்
சொல்லுவர். குற்றவாளியைப்
பார்த்துப் பகவான் ஒரு
ஸமயம் கோபிக்கும்போது
பிராட்டி அருகில் வந்துவிட்டால்,
பகவானுடைய கோபம் அப்போதே
மறைந்து விடுமாம். ஏன்?
க்ருபாமூர்த்தியான பிராட்டி
ஸமீபத்தில் இருக்கும்போது
பகவானுடைய கோபாக்னி
அணைந்துவிடுமாம். அப்படிப்பட்ட
ப்ரபாவமுள்ளவளுக்கே
மூன்று குற்றங்கள் பொறுக்க
முடியாதவை. அவ்விதமானால்
பகவானுக்குக் கேட்க வேண்டுமா?
பொய்
பேசுதல், பரஸ்திரீ கமனம்,
காரணமில்லாமல் ஹிம்ஸித்தல்-இவை
மூன்றும் திவ்ய தம்பதிகளுக்குப்
பொறுக்க முடியாதவை.
இவற்றைச் செய்தவனிடத்தில்
இவர்களுடைய கோபம் அதிகமாக
இருக்கும். 'க்ஷிபாம்யஜஸ்ரமசு
- பாநாஸுரீஷ்வேவ யோநிஷு'
என்ற கணக்கில் மேன் மேலும்
இவர்களை நரகத்திலேயே
தள்ளுவான்.
ஸ்ரீராமர்,
தம்பி லக்ஷ்மணனுடனும்,
மனைவி ஸீதையுடனும் வனவாஸம்
செய்தபோது, ஸுதீக்ஷ்ண
மகரிஷியின் ஆச்ரமத்தில்
ஓர் இரவைக் கழித்தார்.
காலையில் அவரிடத்தில்
விடைபெற்று மேலே சென்ற
போது ஸீதையினிடமிருந்து
ஆயுதங்களைப் பெற்றுக்
கொண்டார். பிராட்டியும்
ஆயுதங்களைக் கொடுத்துக்
கம்பீரமாயும் ஸ்நேக பூர்வகமாயும்
ராமரிடத்தில் ஒரு வார்த்தை
சொல்லுகிறாள்:
த்ரீண்யேவ
வ்யஸநாந்யத்ர காமஜாநி
பவந்த்யுத | மித்யாவாக்யம்
குருதரம் தஸ்மாத் குருதமே
உபே || பரதாராபிகமநம் விநா
வைரம் ச ரெளத்ரதா | மித்யாவாக்யம்
ந தே பூதம் ந பவிஷ்யதி
ராகவ || குதோபிலஷணம் ஸ்த்ரீணாம்
பரேஷாம் தர்மநாசநம் | தவ
நாஸ்தி மனுஷ்யேந்தர்
ந சாபூத்தே கதாசன || ப்ரதிஜ்ஞாதஸ்
த்வயா வீர தண்டகாரண்யவாஸிநாம்
| ரிஷீணாம் ரக்ஷணார்த்தாய
வத: ஸம்ப்ரதி ரக்ஷஸாம்
||
(ஸ்ரீமத் ராமாயணம் - ஆரண்ய
காண்டம்-9) என்று.
"பொய்
பேசுதல் எல்லா குற்றங்களைக்
காட்டிலும் கொடியது.
இதையும் காட்டிலும் மிகக்
கொடியவை பரஸ்த்ரீ கமனமும்,
காரணமில்லாமல் ஹிம்ஸித்தலும்.
இவை துக்கத்தைக் கொடுப்பவை.
ராமா, நீர் பொய் பேசுவதில்லை
என்பது லோகப்ரஸித்தமானது;
எனக்கும் தெரியும். இதுவரையிலும்
நீர் பொய் பேசியதில்லை;
இனிமேலும் பொய் பேசமாட்டீர்.
இரண்டாவதான பரதார கமனமும்
உம்மிடத்தில் இல்லை.
நீர் பரஸ்திரீகளைக் கண்களாலுங்கூட
பார்ப்பதில்லை. இதுவும்
எனக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால் மூன்றாவதாக சொன்ன
குற்றம் மாத்திரம் உம்மிடத்தில்
ஸம்பவிக்கும் போல தோன்றுகிறதே.
காட்டிலுள்ள ராக்ஷஸர்களை
ஸம்ஹரிப்பதாகப் பிரதிஜ்ஞை
செய்திருக்கிறீரே. அவர்கள்
நம்மிடத்தில் என்ன குற்றம்
செய்திருக்கிறார்கள்?
தாய் தந்தையர் சொற்படி
பதினான்கு வருஷம் காட்டில்
வாஸம் செய்து திரும்ப
வேண்டியதுதானே முக்கியம்?
நமக்கு ஸம்பந்தமற்ற மற்ற
விஷயங்களில் நாம் ஏன்
தலையிட வேண்டும்?" என்றாள்.
இதிலிருந்து,
பல குற்றங்கள் இருந்த
போதிலும் இவற்றுள் இம்மூன்று
குற்றங்கள் மிகக் கொடியவை
என்பதை அஜ்ஞாத நிக்ரஹையான
பிராட்டி தன் வாயாலேயே
வெளிப்படுத்தினாள்.
இம் மூன்று குற்றங்களை
பற்றி சிறிது ஆராய்வோம்.
பொய்
பேசுதல்.
மனிதன் எக்காரணத்தைக்
கொண்டும் ஸத்யத்திலிருந்து
நழுவக்கூடாது; பொய்யே
பேசக்கூடாது. பொய் பேசுவதனால்
பல அனர்த்தங்கள் ஏற்படும்.
ஸத்ய வசனம் எப்படியும்
இவனைக் காப்பாற்றும்.
'ஸத்யமூலானி ஸர்வாணி
ஸத்யாந் நாஸ்தி பரம்
பதம்' என்று ஜாபாலி மகரிஷியிடம்
ஸ்ரீராமர் கூறுகிறார்.
நம்முடைய பிதாவை ஸத்திய
ஸந்தராக்க எண்ணியே தமது
செல்வம் அனைத்தையும்
விட்டு ராமர் காட்டை
அடைந்தார்.
தர்ம
புத்திரருக்கும் துர்யோதனாதிகளுக்கும்
இடையே சூதாட்டாம் நடந்தது.
கபடத்தினால் தர்ம புத்ரருக்கு
தோல்வி ஏற்பட்டது. இதனால்
பஞ்ச பாண்டவர்களுக்கே
உரியவளான த்ரேளபதியை
தாஸீ (வேலைக்காரி) என்று
சொல்லி, த்ரோணர், பீஷ்மர்,
க்ருபர் மற்றும் பல மகான்கள்
நிறைந்திருந்த சபையில்
அவளது கூந்தலைப் பிடித்து
இழுத்து துச்சாதனன் பரிபவம்
செய்தான். அப்போது அவள்
பல தர்மங்களை எடுத்துச்
சொல்லி கடைசியில் கூறுகிறாள்
"இது சபையா? இதில் பல வ்ருத்தர்கள்
இருந்தால் அல்லவா இது
சபையாகும்? ஆனால் இங்கும்
பல வ்ருத்தர்கள் (பீஷ்மர்,
த்ரோணாதிகள்) இருக்கிறார்களே
என்றால் இவர்கள் வயதில்
மாத்திரம் வ்ருத்தர்கள்.
எவர் தர்மங்களை எடுத்து
சொல்கிறார்களோ அவர்களே
உண்மையான வ்ருத்தர்கள்.
எங்கு ஸத்யம் இல்லையோ,
அது தர்மத்திலும் சேராது.
சில சமயத்தில் ஸத்யம்
போல் தோன்றும்; ஆனால்
அது கபடத்துடன் கூடியதாக
இருந்தால் உண்மையில்
ஸத்யம் ஆகாது. எனவே, கபடத்துடன்
சேராமல் ஸத்ய வசனம் இருக்க
வேண்டும்; அந்த மாதிரி
ஸத்யத்துடன் கூடியதுதான்
தர்மமாகும்; அப்படிப்பட்ட
தர்மத்தை சொல்பவர்கள்
தான் வ்ருத்தர்கள். அப்படிப்பட்ட
மகான்களால் சூழப்பெற்றதுதான்
சபையாகும். இங்கு ஸத்யமும்
இல்லை; தர்மமும் இல்லை;
வ்ருத்தர்களும் இல்லை;
எனவே இது சபையாகாது. ஆகையால்
இங்கு அக்ரமம்தான் மிஞ்சியிருக்கும்"
என்றாள்.
ந ஸா
ஸபா யத்ர ந ஸந்தி வ்ருத்தா; ந
தே வ்ருத்தா யே ந வதந்தி
தர்மம் | ந வை தர்மோ யத்ர
ந ஸத்யமஸ்தி ந தத் ஸத்யம்
யத் சலேநாநுவித்தம் ||
இங்கு
நாலாவது பாதத்தில் கூறப்பட்டதை
உற்று நோக்க வேண்டும்.
இதை உதாஹரணத்துடன் விளக்குகிறேன்:
பஞ்ச பாண்டவர்கள் ஸ்வர்க்கம்
செல்லுகிறார்கள். வழியில்
ஆங்காங்கே ஒவ்வொருவர்
விழுந்துவிடுகிறார்.
கடைசியில் தர்மபுத்திரர்
மாத்திரம் இந்திரனைக்
காண்கிறார். திடீரேன்று
திரும்பி பார்த்து தம்முடன்
வந்தவர்களைக் காணாமல்
அவர் இந்திரனைப் பார்த்து,
"என் அருமை ஸஹோதரர்களும்
மனைவியும் எங்கே?" என்று
புலம்பிக் கேட்கிறார்.
அதற்கு இந்திரன், ஒரு
தூதனைக் காட்டி, "தர்மபுத்திரா!
இவனுடன் செல். அவர்களை
பார்க்கலாம்" என்றான்.
தர்மபுத்திரர்
மிகவும் ஆவலுடன் சென்றார்.
சிறிது தூரம் சென்றவுடன்,
வரும் தர்மபுத்திரரைப்
பார்த்து, பீமன் முதலியவர்களும்
த்ரெளபதியும், "தர்மபுத்திரரே,
நீர் இங்கு வர வேண்டும்.
உம்முடைய காற்று எங்கள்
மேல் வீசுகிறபடியால்
நரகயாதனையே இல்லாமல்
இருக்கிறது. இன்னும்
சிறிது நேரம் இங்கேயே
இரும்" என்று கேட்டுக்
கொண்டார்கள்.
இதைப்
பார்த்த தர்மபுத்திரருக்குக்
கஷ்டம் ஏற்பட்டு விட்டது.
'ஐயோ' என்று புலம்பினார்.
சிறிது நேரம் கழித்துத்
தூதனுடன் இந்திரனை அடைந்தார்.
"தேவேந்திரா, என் தம்பிகள்
நரகத்தில் இருக்கிறார்கள்
என்று சொன்னால் போதாதா?
நான் அங்கே செல்லாமல்
இருந்திருப்பேனே. ஏதோ
வ்யாஜத்தைக் காட்டி என்னை
அங்கே போகும்படி செய்தாயே.
எனக்கும் நரகயாதனை வேண்டுமா?"
என்று கேட்டார். இதற்கு
இந்திரன் ரஸகனமாகன பதிலைக்
கூறினான்.
"முன்பு பாரத
யுத்தத்தில் ஸ்ரீகிருஷ்ணனுடைய
சூழ்ச்சியை நீ நன்கு
உணர்ந்திருந்தும், பொய்
சொல்ல கூடாது என்ற எண்ணம்
இருந்தும், ஜயத்தில்
ஆசையுள்ளவனாக, 'அச்வத்தாமா
ஹத:' என்று உரத்த குரலிலும்,
'குஞ்சர' என்று மெல்லிய
குரலிலும் சொன்னாய்.
ஒரு யானைக்கு 'அச்வத்தாமா'
என்ற பெயரை வைத்து அதை
ஸம்ஹாரம் செய்தது வாஸ்தவமே.
ஆயினும் இந்த கபடத்தை
நன்கு உணர்ந்திருந்தும்,
கபடபூர்வமாக இதை நீ சொன்னபடியால்
அதன் பலனை நீ அவசியம்
அநுபவித்தே தீரவேண்டும்
என்று எண்ணி இவ்விதம்
செய்தேன். நீ வியாஜத்தோடு
பொய் சொன்னாய்; நானும்
ஒரு வியாஜத்தினால் உன்னை
நரகத்துக்கு அனுப்பினேன்"
என்றான்.
"ஆகையால் உண்மையும்
கபட பூர்வமாக சொன்னால்,
அது குற்றத்தில்தான்
சேரும். இப்படி சொன்னதனால்தான்,
பாரத யுத்தத்தில் நாலு
அங்குலம் பூமிக்கு மேல்
நின்று கொண்டிருந்த
தர்மபுத்திரருடைய தேர்,
அதர்மம் இவருக்கு ஏற்பட்டுவிட்டது
என்று எண்ணி, தர்ம தேவதையினால்
பூமியைத் தொடும்படி
செய்யப்பட்டது.
மற்றொரு
சமயம் தர்மபுத்ரர் தேவலோகத்தில்
ஸுகம் அநுபவிக்கும் போது
ஜனங்கள் இங்கும் அங்கும்
போய் கொண்டிருந்தனர்.
என்ன காரணம் என்று தர்மபுத்ரர்
கேட்க ஹரிசந்திரனின்
தங்க விக்ரஹம் பார்க்க
என்று சொன்னார்கள்.
நானும் பார்க்கப் போகலாமா
என கேட்க இந்திரன் சொன்னது:
நீ கபடமாகவாவது பொய்
பேசுபவர். ஹரிசந்திரன்
அப்படியல்ல. ஆக நீ போய்
பார்த்தால் அந்த விக்ரஹம்
இரும்புமயமாகிவிடும்
என்றானாம்.
ஆகையால்
பொய் சொல்லக்கூடாது;
ஸத்யம் சொல்வதிலும்
மிகவும் கவனம் செலுத்த
வேண்டும்.
பரதாராபிகமனம்
இதுவும்
ஒரு பெரிய பாதகம். ராவணன்
முதலானவர்களுடைய விருத்தாந்தங்களை
நாம் நன்கு உணர்ந்திருக்கிறபடியால்
இதை அதிகம் விவரிக்க
வேண்டாம். இந்த தோஷம்
உள்ளவர்களுக்கு ராவணனுடைய
சித்திரவதைதான் ஏற்படும்
என்பதை நினைக்க வேண்டும்.
'நமக்கு
இஷ்டமான ஒரு பரஸ்த்ரீயை
ஒருவருக்கும் தெரியாமல்
நாம் அநுபவித்தால் யாருக்குத்
தெரிய போகிறது?' என்று
சிலர் எண்ணலாம். மனிதர்களை
ஏமாற்றினாலும் தெய்வத்தை
ஏமாற்ற முடியாது. தெய்வத்தினிடத்தில்
சிக்ஷை கட்டாயம் ஏற்பட்டுவிடும்.
ஸர்வாந்தர்யாமியான எம்பெருமான்
நம்முடைய ஹ்ருதயத்தில்
எப்பொழுதும் இருக்கிறபடியால்
அவருக்கு தெரியாமல் நாம்
எதை செய்ய முடியும்?
புருஷன்
இருந்தாலும் இறந்தாலும்
பரஸ்திரீயை அபஹரிப்பது
குற்றமாகாது என்று சொல்வது
மிகவும் கீழ்த்தரமானது.
இதைத்தான் பெரிய குற்றமாக
சீதை கணக்கிட்டிருக்கிறாள்.
காரணமின்றி
பிறரை ஹிம்ஸித்தல்
இதையும்
பெரிய குற்றமாக ஸீதை
கருதுகிறாள். காட்டிலுள்ள
முனிவர்கள் என்ன குற்றம்
செய்கிறார்கள்? 'க்ருஷ்ணா
ராமா' என்று அவர்கள் தனியே
உடகார்ந்து தவம் யாகம்
முதலியவற்றை செய்கிறார்கள்.
இவர்களை ராக்ஷஸர்கள்
எவ்வளவு ஹிம்ஸை செய்கிறார்கள்?
இவர்கள், 'ராக்ஷஸர்களுக்கு
ஏதாவது தீங்கு வரவேண்டும்'
என்று எண்ணி அபிசார யாகம்
செய்கிறார்களா? இல்லையே.
உண்மையில் இவர்கள் செய்யும்
நல்ல காரியங்களால் உலகம்
முழுவதற்கும் க்ஷேமமே
ஏற்படும். கோவில்களில்
த்ரிகாலமும் பூஜைகள்
நன்றாக நடந்து வந்தால்
நாட்டுக்கு அபிவிருத்திதானே
ஏற்படும்? இதை ஒருவன்
கெடுக்க வந்தால் அவனைவிடப்
பெரிய பாவி வேறு யார்?
விச்வாமித்ரர் செய்த
யாகத்தை ஸுபாஹு, மாரீசன்
என்பவர்கள், ரத்தம் மாம்ஸம்
முதலியவற்றை கொட்டி
அழிக்க ஆரம்பித்தனர்.
விச்வாமித்ரர் இவர்களுக்கு
கெடுதலை நினைத்தா யாகம்
செய்தார்? இல்லை. ஆயினும்
காரணம் இல்லாமல் ஸத்புருஷர்களை
ஹிம்ஸிப்பது ராக்ஷஸர்களுக்கு
ஸகஜமாகிவிட்டது. இக்காலத்திலும்
இத்தன்மை உடையவர்கள்
எவ்வளவோ பேர் இருக்கின்றனர்.
கடைசியில் தீங்கு செய்வர்களுக்கே
ஆபத்து ஏற்படுகிறது.
இப்படி பிராட்டி
ராமனிடத்தில் இந்த மூன்று
குற்றங்களை எடுத்துக்
கூறுவதன் கருத்தை சிறிது
ஆராய்வோம்.
மேலே நடக்குப்
போகும் விஷயங்களை ராமனுக்கு
குறிப்பால் உணர்த்துகிறாள்.
"இம்மூன்று குற்றங்களும்
கொடியவை; இவற்றை செய்பவனை
உடனே தண்டிக்க வேண்டும்.
ராவணன், தான் ஒரு ஸன்யாசி
என்று சொல்லப் போகிறான்.
இது ஒரு முதல் குற்றம்.
பிறகு என்னை அபகரிக்கப்
போகிறான். இது இரண்டாவது
குற்றம். காட்டில் தவம்
செய்யும் ஸாதுக்களை காரணம்
இல்லாமல் ஹிம்ஸிக்கிறான்.
இது மூன்றாவது குற்றம்.
ஆக இம்மூன்று குற்றங்களுள்ள
இந்த ராவணனை உடனடியாக
தண்டிக்க வேண்டும்" என்று
காட்டுகிறாள் போலும்.
ஆகையால்
நாம் தினந்தோறும் நல்ல
காரியங்களையே செய்ய வேண்டும்.
ஒரு குற்றத்தையும் செய்யக்
கூடாது. எத்தனையோ குற்றங்கள்
சாஸ்த்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன.
எதைச் செய்தாலும் பகவானுக்கு
நம்மிடத்தில் அப்ரீதிதான்
ஏற்ப்படும். அவற்றிலும்
மேலு கூறிய மூன்று குற்றங்கள்
பகவானுக்கும் பிராட்டிக்கும்
நம்மிடத்தில் வெறுப்பையே
விளைவிக்கும். இந்த குற்றங்கள்
வெளியில் தெரிந்துவிட்டால்
ஜனங்களும் நம்மை அவமதிப்பார்கள்.
எனவே சரீர சுத்தி, வாக்கு
சுத்தி, அகாரணமாக ஒருவரையும்
ஹிம்ஸிக்காமல் இருக்கவேண்டும்
என்னும் சுத்தி என்ற
இம்மூன்றையும் மனிதன்
ஸம்பாதித்துக்கொள்ள
வேண்டும்.
*****
|
|
|
|
|
|
|
|