அனுமனைப் போன்ற
ஆசார்யர்
ஸ்ரீவேதாந்தேசிகன்
அருளிச்செய்த ஸங்கல்பஸூர்யோதயம்
என்ற நாடகத்திலுள்ள 'தர்ப்போதக்ரதசேந்த்ரியாநந
மநோநக்தஞ்சராதிஷ்டிதே'
என்ற ச்லோகத்திலுள்ள
ஒரு பகுதி 'ஹநுமத்ஸமேந
குருணா' என்பது. இந்த ச்லோகத்தில்
ராமாயணத்தின் ஸாரம்-அதிலும்
ஸுந்தர காண்டத்தின் ஸாரதமமான
அர்த்தம்-வெளியிடப் பெற்றிருக்கிறது
என்பது யாவரும் அறிந்ததே.
பத்துத்
தலையுடைய ராவணன் கடல்சூழ்ந்த
இலங்கை என்ற நகரை ஆண்டு
வந்தான். அவன் அதர்ம மார்க்கத்தில்
நின்று, ராமனுடைய தாரமான
சீதையை அபகரித்துச் சென்றான்.
சீதைக்கு உடையவனான ராமன்
தனக்கு ஆப்தனான அனுமனை
அனுப்பித் தன் பொருளான
சீதைக்குத் தேற்றுதல்
சொல்லியனுப்பினான்.
சீதை சில அடையாளங்களைக்
கூறித் தன்னை ராமன் அடைய
வேண்டுமென்று சொல்லியனுப்பினாள்.
ராமன் இலங்கைக்குச் சென்று,
ராவணனை கொன்று, சீதையை
பெற்றுக் கொண்டான்.
இது ராமாயணக் கதையின்
சாரம்.
ஸ்ரீராமாயணத்தை
மேல்விழுந்தாற்போல்
பார்த்தால் இது புலப்படும்.
உள்ளே பிரவேசித்து ஆராய்ச்சி
செய்தால், வேதாந்தத்தில்
சொல்லப்பெறும் ஸாரமான
அர்த்தங்களைக் காணலாம்.
இலங்கை என்பது ஒன்றுதான்,
ராவணனும் ஒருவன்தான்
என்று நினைக்க வேண்டாம்.
ராவணர் பலர் உண்டு; இலங்கைகளும்
பல உள்ளன. 'ஒரு ராவணனையும்
ஓர் இலங்கையையும் தானே
கேட்டிருக்கிறோம்?'
என்று நினைக்க வேண்டாம்.
ஒவ்வொரு ஜிவராசிக்குமுள்ள
ஒவ்வொரு மனமும் ஒவ்வொரு
ராவணன். ராவணனுக்கு பத்து
தலைகள் இருப்பன போல
மனத்துக்கும் பத்து தலைகள்
உண்டு. வாக், பாணி, பாதம்,
பாயு, உபஸ்தம் என்ற கர்மேந்திரியங்கள்
ஐந்து; கண், காது, மூக்கு,
த்வக், நாக்கு என்ற ஞானேந்திரியங்கள்
ஐந்து; ஆகப் பத்துப் புலன்களும்
பத்துத் தலைக்குச் சமமானவை.
இந்தப் பத்துத் தலைகளைப்
பெற்ற மனமாகிற ராவணன்
மிகுந்த கர்வமுடையவன்.
இவன் கடல்சூழ்ந்த இலங்கையில்
இருப்பது போல், ஸம்ஸாரமாகிற
கடல்சூழ்ந்த உடல் என்ற
இலங்கையில் ஜீவன் வாழ்கிறான்.
உண்மை ராவணன் சீதையைக்
கொண்டுவந்து தன் வசமாக்கி
இம்சித்தது போல், உடலுக்கு
யஜமானனான ஆத்மா என்ற
உயிரை இந்த மனம் தன் வசப்படுத்தி
இம்சிக்கிறது. இந்தச்
சமயத்தில் ராமன் அனுமனை
அனுப்பி ஆறுதல் சொல்லிச்
சீதையைப் பெற விரும்புகிறான்.
அது போலவே பகவானும்
உபதேசங்களைச் செய்வித்து
இந்த ஆத்மா க்ஷேமத்தை
அடைய விரும்பி, தேசிகன்
என்ற ஆசார்யனை, ஸம்ஸாரக்
கடலில் விழுந்து அமுங்கியுள்ள
ஜீவராசிகளினிடையே அனுப்பிகிறான்.
இதுதான் ஸ்ரீராமாயணத்தின்
ஸாரமான அர்த்தம். இதைத்தான்
ஸங்கல்பஸூர்யோதயம்
என்ற நாடகத்தில் ஒரு
ச்லோகத்தால் வேதாந்த
தேசிகர் வெளிப்படுத்தினார்.
ஆசார்யனுக்கு
தேசிகன் என்று பெயர், தேவாநுக்ரஹதாரித்வாத்
சிஷ்யாநுக்ரஹகாரணாத்
| கருணாரஸமூர்த்தித்வாத்
தேசிக: ப்ரோச்யதே புதை:
||
என்று, தேசிகன் என்ற
சொல்லுக்கு பெரியோர்
உரையிட்டனர். ஆசார்யன்,
குரு, தேசிகன் என்று சொல்லப்பெறுகிற
அவனிடத்தில் தெய்வத்தின்
அநுக்ரகம் பரிபூர்ணமாக
இருக்கும். இறைவனின்
அருளற்றவன் பெரிய பதவியை
அடைய முடியாது என்பது
எல்லாருக்கும் தெரிந்ததே.
இப்படிப்பட்ட ஆசார்யன்
சிஷ்யனிடத்தில் அநுக்கிரகம்
புரிவான். அவன் கருணையே
வடிவெடுத்தாற்போல்
இருப்பான். இவன் கோபிஷ்டனாக
இருந்தால் ஜனங்களை உஜ்ஜீவிக்கச்
செய்ய முடியாது அல்லவா?
ஆகையால் தெய்வ அநுக்ரகம்
பெற்றுச் சிஷ்யனிடத்தில்
அநுக்ரகமும் கருணையும்
உள்ளவன் ஆசார்யன். ஆகவே
அவனைத் தேசிகன் என்பர்.
ஆஞ்சநேயர்
தேசிகன் ஸ்தானத்தில்
இருக்கிறார். அவர் ராமனுடைய
அநுக்ரகத்தைப் பரிபூர்ணமாகப்
பெற்றவர். எந்தச் சீதையை
ராமனிடம் சேர்ப்பிக்க
வேண்டும் என்ற நினைத்தாரோ
அந்தச் சீதையினிடத்தில்
அவர் நல்ல எண்ணம் கொண்டவர்;
சீதையினிடத்தில் கருணையுள்ளவர்.
ஆகையால்தான் ராமன் அவரைச்
சீதாபிராட்டியிடம் அனுப்பினான்.
ஸுந்தரகாண்டத்திலும்
இந்த அர்த்தத்தை நன்கு
காணலாம்.
'ஹநுமத்ஸமேந
குருணா' என்பதை நாம் இங்கு
நன்கு ஆராய்தல் வேண்டும்.
காமம், க்ரோதம், லோபம்,
மோகம், மதம், மாத்ஸர்யம்
என்று ஆறு துர்க்குணங்கள்
உள்ளன. இவற்றை ஊர்மிஷட்கம்
என்பர். ஸமுத்திரத்தில்
மூழ்கினவனை அலைகள் எப்படி
அமுக்குமோ அதுபோலவே
ஸம்ஸார ஸமுத்திரத்திலுள்ள
நம்மை இந்தத் துர்க்குணங்களான
அலைகள் அமுக்கி அழிவை
விளைவிக்கும். இந்த ஆறு
தீக்குணங்களையும் விட்டு
நாம் எல்லாருமே நற்பண்புகளைப்
பயில வேண்டும். அதிலும்
ஆசார்ய ஸ்தானத்தில் இருப்பவன்
இந்த ஆறு தீமைகளுக்கு
வசமற்றவனாக விளங்க வேண்டும்;
இவற்றை வென்று ஜயக்கொடி
நாட்டவேண்டும. ஆசார்யன்
காமத்துக்கும் வெகுளிக்கும்
பேராசைக்கும் மோகத்துக்கும்
மதத்துக்கும் மாத்ஸர்யத்துக்கும்
அடங்கியவனாக இருந்தால்
அவன் தன்னையே காத்துக்
கொள்ள அசக்தனாகிறான்.
இப்படி இருக்க, அவன் பிறருக்கு
எப்படி ஞானோபதேசம் செய்ய
முடியும்? அவனுடைய வார்த்தைதான்
எப்படிப் பலிக்கும்?
ஸ்வயம் தரிதும் அக்ஷம:
கிமபராந் அஸெள தாரயேத்?
காமம்
என்பது இகலோகத்தில்
புலன்களுக்கு ஏற்படும்
ஸுகம். க்ரோதம் என்பது
கோபம். லோபம் என்றால்
பேராசை. மோகம் என்பது
நல்லறிவின்மை. மதம் எனப்படுவது
கர்வம். மாத்ஸர்யம் என்பது
பொறாமை. இந்தத் துர்க்குணங்களைத்
தூரத்தில் வைக்க வேண்டும்.
இவற்றை வென்றவன்தான்
மகான்; ஆசார்யஸ்தானத்துக்கு
அருகனானவன்.
ஆசார்ய
ஸ்தானத்தில் வைக்கப்பட்ட
அநுமார் கீழ்க் கூறிய
ஆறு துர்க்குணங்களை வென்றவர்
என்பதைச் சுந்தரகாண்டத்தின்
ஆரம்பத்திலேயே வால்மீகி
பகவான் காட்டுகிறார்.
அநுமார் சமுத்திரத்தைத்
தாண்டியபொழுது மைநாகமலை,
நாகலோகத்துத் தாயான
ஸுரஸை, ஸிம்ஹிகை என்ற
அரக்கி ஆகியவர்கள் தடங்கலாக
வந்தனர். இலங்கைக்குச்
சென்றதும் உள்ளே போவதற்குத்
தடங்கலாக இலங்காதேவியும்
வந்தாள். இந்த நான்கு
பேரும் காம-க்ரோத-லோப-மோகமே
உருவானவர்கள்.
ததிதம்
கந்தவத் ஸ்வாது கந்தமூலபலம்
பஹு | ததாஸ்வாத்ய ஹரிச்ரேஷ்ட
விச்ராந்தோநுகமிஷ்யஸி
||
"அநுமநே, நீர் மிக்க மணமுள்ளதும்
ருசிகரமுமான கிழங்கு
வேர் பழம் முதலியவற்றை
உண்டு செல்லலாம்" என்ற
மைநாகமலை சொல்லிற்று.
இதைப் பொருட்படுத்தாமல்,
கண்டு கேட்டு உற்று மோந்து
உண்டு உழலும் ஐந்து கருவிகளுக்கு
வசமற்றவராக அநுமார் தாம்
நினைத்த குறியையே நோக்கிச்
சென்றார். ஆகவே காமரூபமான
மைநாக மலையையே இவர் வென்றவர்
ஆனபடியால் காமத்தை ஜயித்தவர்
என்பதில் ஐயமில்லை, கோடிக்கணக்கில்
பணம் சம்பாதிக்கலாம்.
இவ்வுலகத்தில் ஆசாபோகங்களை
அநுபவிக்கலாம். பிறகு
மோக்ஷம் போகலாம் என்றருப்பவர்
எப்படி ஆசார்யர் ஆவர்?
இதனால் ஏற்பட்ட விஷயம்
- பம்பாய் விஜயம் கோயமுத்தூர்
விஜயம் சென்னை விஜயம்
என்று சொல்லிக் கொண்டும்
நான் நிறைய பணம் உள்ளவன்
நிறைய சிஷ்ய சம்பத்தை
பெற்றவன். நிகர் யார்
என்று சொல்லிக் கொண்டும்,
அதன் மூலமாக கர்வம் அடைந்தும்
காம பரவசருமானவர்கள்
எப்படி ஆசார்யர்கள் ஆவார்கள்
என்பது.
ஸுரஸை என்ற நாகலோக
மாதா கோரமான உருவத்தை
எடுத்து அநுமாரின் எதிரில்
வந்து, "எனக்கு நீ சாப்பிடும்
பொருளாக ஆகிறாய்" என்ற
கோபத்துடன் சொன்னாள்.
'இத்யுக்த்வா ஸுரஸா க்ருத்தா'
என்ற ரீதியில் அவள் இருந்தபடியால்
அவள் கோபரூபியாகிறாள்.
அவளையும் வென்று ஆஞ்சனேயர்
தம் குறிக்கோளிலேயே
மனத்தைச் செலுத்தினார்.
பிறகு
ஸிம்ஹிகை என்ற ராக்ஷஸி
பேராசையால் அநுமனை விழுங்கிவிட
எண்ணி அவரது நிழலையே
பிடித்து இழுத்தாள்.
அவளது பேராசை எப்படிப்பட்டது
என்பதை நன்கு உணரலாம்.
ஆகவே லோபரூபியான அவளை
அநுமார் ஜயித்தபடியால்
லோபத்தையும் இவர் வென்றவர்.
இலங்கைக்குச்
சென்றதும், அநுமாருடைய
பலத்தையும், பெண்ணான
தன்னுடைய பலவீனத்தையும்
அறியாமல், மோகத்தால்
அவரைக் கைத்தலத்தால்
வேகத்துடன் அடிக்கத்
தொடங்கினாள் லங்காதேவி.
அநுமான் மோகரூபியான
அவளை வென்று இலங்கையுனுள்
நுழைந்தார். அவள் ராக்ஷஸியானபடியாலும்
தமோகுணம் நிறைந்துள்ளபடியாலும்
அவள் மோகரூபி என்பதில்
சந்தேகமில்லை. ஆகவே மோகத்தையும்
அவர் வென்றவரானார்.
இப்படிக்
காமம் க்ரோதம் லோபம்
மோகம் ஆகியவற்றை வென்றதும்
மனிதனுக்குக் கர்வம்
(மதம்) ஏற்பட்டுவிடும்.
'நமக்கு இவ்வளவு சக்தியுள்ளது;
நமக்கு நிகர் யாருமில்லை'
என்று நினைக்கிறான்.
கொக்கைக் கண்பார்வையாலேயே
கொளுத்தின கெளசிகன்
என்ற பிராம்மணனுக்கு
மதம் உண்டாகவில்லையா?
அநுமனும் மைநாகம் ஸுரஸை
ஸிம்ஹிகை இலங்கை இவற்றை
அநாயாஸமாக வென்றபடியால்
கர்வம் உண்டாக வழி உண்டு.
ஆனால் மதத்தையும் இவர்
வென்றார். 'நான் சமுத்திரத்தைத்
தாண்டி இலங்கைக்கு வந்தேன்.
இலங்கையோ பெரிய பட்டினம்.
சமுத்திரமும் பெரியது.
ராவணனும் மிக்க வலிமையுடையவன்.
குரங்குகள்தாம் இங்கு
வந்து என்ன செய்ய முடியும்?
தேவதைகளாலும் வெல்ல முடியாதது
இந்த நகரம். ஸாம தான பேதங்களால்
ராமன்தான் இங்கு வந்து
என்ன செய்ய முடியும்?
சமுத்திரத்தைத் தாண்டி
வந்த நான்தான் இவ் விஷயத்தில்
என்ன செய்ய முடியும்?'
என்று தாம் மதமற்று இருக்கும்
தன்மையை வெளியிட்டார்.
'மத்த: ப்ருத்யவர: கஸ்சித்
நாஸ்தி ஸுக்ரீவஸந்நிதெள'
என்று, தாம் மிகவும் தாழ்ந்தவர்
என்று சீதாபிராட்டியிடம்
சொன்னார். ஆகவே இவர்
மதத்தையும் வென்றவர்.
மாத்ஸர்யம்-பொறாமை.
ஒரு வித்வான் மற்றொரு
வித்வானைப் படித்தவனாகக்
கூறமாட்டான். "நானே நன்கு
படித்தவன்; மிகவும் நுட்பமான
பொருளை அறிந்தவன்; எனக்குத்
தெரிந்தது மற்றவருக்குத்
தெரியாது" என்று பிறரிடத்தில்
குறையையே சொல்லிக் கொண்டிருப்பான்;
பிறரைப் புகழமாட்டான்.
உண்மையில் நன்கு படித்தவன்
என்பதற்கு என்ன அடையாளம்
என்றால், சாமானியமாகப்
படித்தவனையும் போற்றி,
அவனுக்குச் சமம் யாருமில்லை
என்று புகழ்வதுதான்.
அரைகுறையாகப் படித்தவன்தான்
பிறரிடத்தில் குறையைச்
சொல்லிக்கொண்டிருப்பான்.
பண்டிதம்மன்யனுக்குத்தான்
இந்த துர்குணம் உண்டு.
உயர்ந்த பண்டிதன் மாத்ஸர்யமற்றவனாகவே
இருப்பான். அநுமார் எல்லாவற்றிலும்
சிறந்தவரானபடியால், 'ஜயத்யதிபலோ
ராம:' என்று சொல்லி, ராமனையும்
லக்ஷ்மணனையும் சுக்ரீவனையும்
துதித்து, 'அவர்களுக்கு
நான் வேலைக்காரன்' என்று
தம்மைத் தாழ்ந்தவராகவே
சொல்லிக்கொண்டார்.
ஆகவே இவரிடத்தில் மாத்ஸர்யம்
என்பது லவலேசமும் கிடையாது.
இதைத்தான் எல்லாரும்
அறிய வேண்டும் என்று
வால்மீகி பகவான் சுந்தர
காண்டத்தில் காட்டினார்.
ஆசார்யனுக்குக்
கீழ்க்கூறிய ஆறு துர்க்குணங்கள்
இல்லாமலிருக்க வேண்டும்
என்பதைக் காட்டுவதற்காகக்
கதையின் போக்கை வால்மீகி
பகவான் அமைத்துக் காட்டினார்.
சுந்தர காண்டத்திலேயே,
காம க்ரோத லோப மோக
மத மாத்ஸர்யங்களை அநுமார்
வென்றவர் என்பதை வேறு
சான்றுகளை இட்டும் தெரிந்துகொள்ளலாம்.
இப்படி உண்மைப் பொருளை
உணர்த்துவதற்காகவே, 'ஹநுமத்ஸமேந
குருணா' என்று வேதாந்த
தேசிகர் பணித்தார்.
கீழ்ச்
சொன்ன வகையில் ஆசார்யனுக்கும்
ஹநுமானுக்கும் ஸாம்யம்
ஏற்படவேண்டும். இது மாத்திரமல்ல.
ஹநுமான் நவ வ்யாகரண பண்டிதர்.
ஆசார்யனும் சாஸ்த்ரங்களில்
பாண்டித்யம் பெற்றிருக்க
வேண்டும். தர்கம் வ்யாகரணம்
முதலிய எந்த சாஸ்த்ரங்களை
எடுத்தாலும் தட்டு தடங்கள்
இல்லாமல் பாடம் சொல்லவும்
வ்யாக்யார்த்தம் சொல்லவும்
திறமை பெற்றிருக்க வேண்டும்.
பாக சாஸ்த்ரத்தில் எனக்கு
ஸாமர்த்யம். ஜோதிஷத்தில்
வைத்யத்தில் பரிசயம்
என்றால் அது போதாது.
ஒருவன் குடு குடு என்று
பலிச்சம்ளாம் ஆடுவதிலும்
கிரிகிட்டிலும் கோலியிலும்
ஸமர்த்தன் என்றால் அது
நமக்கு உபயோகப் படாது.
ஆத்ம வித்தையில் ஸாமர்த்யம்
வேண்டும். யாவித்யா ஸாவிமுக்த
யே என்பது சாஸ்த்ரம்.
மற்றய காம சாஸ்த்ரத்திலும்
வாத்ஸ்யாயன பாஷ்யத்திலும்
பரிசயம் இருந்தால் என்ன
லாபம். சிச்னோதரே - யோ
அபிரதஸ்ய என்று இவர்களை
தூஷித்துள்ளது நூல்.
*****
|