விச்வாமித்திர முனிவரின்
பெருமை
விச்வாமித்திரர்
முதலில் அரசராக இருந்து,
வஸிஷ்ட முனிவரின் ஆச்ரமத்துக்குச்
சென்று, அவர் செய்த உபசாரங்களைப்
பெற்று, அவருடன் பின்பு
விரோதத்தையடைந்து, பல
திக்குகளில் வேள்வி தவம்
முதலியவற்றைச் செய்து
பிரம்மரிஷிப் பட்டத்தைப்
பெற்றார் என்பது ஸ்ரீமத்ராமாயணத்தில்
பாலகாண்டத்தில் சதானந்தர்
வாயிலாகக் கூறப்பட்டுள்ளது.
பிறகு அந்த வஸிஷ்ட மகரிஷியுடன்
பெருநட்புப் பெற்று ஒருவருடன்
ஒருவர் தோழர் ஆனார்கள்
என்பது பிரசித்தமானது.
இந்த முனிவருக்கு இப்படிப்பட்ட
மகத்துவம் வந்ததற்குக்
காரணம் வஸிஷ்ட மகரிஷியின்
அருளே என்பதை, 'அசெள வஸிஷ்டநிர்தேசாத்
ப்ரஹ்மர்ஷித்வமவிந்தத
|' என்று கவிகள் சொன்னார்கள்.
இப்படி வஸிஷ்டருடைய அநுக்ரகத்தினால்
பிரம்மரிஷித்துவம் கிடைத்தது
போலவே அந்த முனிவரின்
அருளினாலேயே இவருக்கு
லோகநாயகனான ராமபிரானைக்
குறித்து ஆசார்யத்துவமும்
ஏற்பட்டது. எல்லா விதத்திலும்
மேன்மை பெற்று, உலகத்திற்குப்
பிதாவாகவும் மாதாவாகவும்
குருவாகவும் உள்ள பகவான்,
ஒருவனுக்குச்சிஷ்யனாக
இருந்து கல்வி கற்றுக்
கொள்வது. 'இன்னாருடைய
சீடன் நான்' என்று சொல்வது
முதலியவை சாதாரணமாகப்
பொருந்தமாட்டா. எவ்வளவோ
அளவற்ற புணணியங்கள் செய்து
பாக்கியசாலியாக இருப்பவர்களைத்தான்
பகவான் தனக்கு ஆசார்யன்
என்று சொல்லுவான். வஸிஷ்ட
மகரிஷி ஸுர்ய வம்சத்திற்கே
குலகுருவாக இருந்து வந்தார்;
அந்த வம்சத்தில் பிறந்த
திலீபன், அஜன், தசரதன்
முதலியவர்களுக்குக்
குருவாக விளங்கினவர்;
மகா புண்ணியசாலி. ஆகையால்தான்
தசரதன் புதல்வனான ராமனுக்கும்
ஆசார்யராக இருந்தார்.
'வஸிஷ்டவ்யபதேசிந:' என்று,
தன் குருவான வஸிஷ்டரைப்
புகழ்ந்து பேசி, அவருடைய
சிஷ்யன் நான்' என்று ராமன்
கூறுகிறான். இதிலிருந்தே
வஸிஷ்டர் மகாபாக்கியத்தைப்
பெற்றவர் என்பது தெரிய
வருகிறது,
ஸ்ரீராமன்
பலை அதிபலை என்ற மந்த்ரங்களையும்
பலவிதமான அஸ்த்ரங்களையும்
விச்வாமித்திரரிடம்
பெற்று, அவரது யாகத்தையும்
பூர்த்தி செய்து வைத்து,
ஆசார்யருக்குச் சிஷ்யனின்
கடமைகள் என்னவோ அவற்றைச்
செய்து ஆசார்யரைத் திருப்தராகும்படி
செய்து வைத்தார். அவரது
வேள்வியைப் பூர்த்திசெய்து
வைத்தது குருதக்ஷிணையாக
முடிந்தது. பிறகும், 'இமெள
ஸ்ம முநிசார்தூல கிங்கரெள
ஸமுபஸ்த்திதெள | ஆஜ்ஞாபய
யதேஷ்டம் வை சாஸநம் கரவாம
தே ||' என்று, "தேவரீரடைய சீடர்கள்
நாங்கள். மேலும், தேவரீர்
உத்தரவுப் படி ஏவல்தேவைகளைச்
செய்யக் காத்திருக்கிறோம்.
நியமனத்தை எதிர்பார்க்கிறோம்"
என்று விச்வாமித்திர
மகரிஷியிடம் ராம லக்ஷ்மணர்கள்
கூறுகின்றனர் என்றால்
விச்வாமித்திரரின் பெருமை
வாசாமமோசரம் என்பது
ஸ்பஷ்டமாக விளங்குகிறது.
இப்படி ஸர்வேச்வரனுக்கு
ஆசார்யனாக இருக்கும்
தன்மை இந்த முனிவருக்கு
வஸிஷ்டருக்குப் போல்
கிடைத்தது என்றால் இது
எவ்வளவு பெருமையைக் கொடுக்கிறது!
இதற்கெல்லாம் வஸிஷ்டரின்
அநுக்கிரகமே காரணம்.
இவ்விஷயத்தில் பெரியோர்
கூறும் ஒரு புராணக் கதையை
வரைகிறேன்.
வஸிஷ்ட முனிவரும்
விச்வாமித்திர முனிவரும்
மிக்க நட்புடன் இருந்தார்கள்.
விச்வாமித்திரர் தாம்
பல வேள்விகளையும் கடுந்தவத்தையும்
புரிந்து, அநேக விதமான
புண்ணியங்களைச் ஸம்பாதித்தார்.
ஒரு நாள், 'இப்படிப் பெரிய
சிரமத்தைப் பாராட்டாமல்
பெரும் புண்ணியத்தைச்
ஸம்பாதித்தேன். இதனால்
நமக்கு என்ன லாபம் கிடைக்கும்?'
என்று யோசித்தார். இந்த
புண்ணியங்கள் மூலமாக
இகலோகத்தில் பெரிய மாடிவீட்டைக்
கட்டிக்கொண்டு சுகமாக
இல்வாழ்க்கை நடத்தலாம்.
சுவர்க்கலோகம் சென்று
ரம்பை, ஊர்வசி முதலியவர்களுடைன்
சுகமாகப் போகத்தை அநுபவிக்கலாம்.
குபேரப் பட்டணத்தை ஆளலாம்.
இந்திரனுடைய பதவியையும்
பெறலாம். அல்லது பிரம்மாவின்
ஐச்வர்யத்தைப் பெற்று
வாழலாம். எவ்வளவு வாழ்ந்தாலும்
இந்த வாழ்வு எத்தனை நாள்
இருக்கக்கூடும்? அநுபவிக்கும்போதும்
பல துன்பங்கள் ஏற்படும்
கோடிக்கணக்கான யுகங்கள்
ஸாக்ஷாத் மகாவிஷ்ணுவை
ஆராதித்துப் பிரம்மப்
பட்டத்தை அடைந்த பிரம்மாவிற்கும்
மதுகைடபர் மூலமாக வேத
அபஹாரம் ஏற்பட்டுக் கஷ்டம்
உண்டாயிற்று. தேவேந்திரனும்
தன் ராஜ்யத்தை இழந்து
பலவிதத் துன்பங்களுக்கு
ஆளானான். இப்படிப் பலவிதமான
துயரங்களுக்கு இருப்பிடமான
இந்தச் செல்வம் நமக்கு
வேண்டாம். பரமானந்தம்
என்று சொல்லப்படும்
பிரம்மானந்தத்தில் மட்டும்தான்
எவ்விதத் துயரமும் கிடையாது.
அதைத்தான் பெற்று அநுபவிக்க
வேண்டும் என்று மோக்ஷத்தில்
அவா ஏற்பட்டது.
ஆகவே,
மற்றப் பயன்களில் அவருக்கு
ஆசை குறைந்துவிட்டது.
திராட்சைப் பழங்களின்
சுவையைப் பருக ஆசைப்
பட்டவன் புளியம்பழத்தை
நுகர ஆசைப்படுவானா? ஆகையால்
மோக்ஷத்தை அடைய வேண்டும்
என்ற விருப்பம் உள்ளவராக,
அதற்குத் தடங்கலான இகபரலோகத்தில்
சுகத்தைக் கொடுக்கக்
கூடிய புண்ணியங்களை அயலாருக்கு
விநியோகப்படுத்த வேண்டும்
என்ற எண்ணம் பெற்றார்.
அதற்காக, தாம் செய்த புண்ணியங்களை
விருப்பம் உள்ளவர் வந்து
பெற்றுக் கொள்ளலாம்
என்று பறைசாற்றினார்.
கோயில்களில் உயர்ந்த
பதார்த்தங்களை விநியோகம்
செய்யப்போவதாகக் கேட்டால்
ஜனங்கள் திரள்திரளாக
எப்படி வருவார்களோ அது
போல விச்வாமித்திரருடைய
வார்த்ையைக் கேட்டதும்
ரிஷிகள் திரண்டு ஓடி
வந்தனர். முனிவர் அவர்
அவர்களுக்கு தகுந்தவறும்
விரும்பியவாறும் தமது
எல்லாப் புண்ணியங்களையும்
கொடுத்துச் செலவு செய்தார்.
இவ்விஷயத்தைக் கேள்வியுற்ற
வஸிஷ்ட மகரிஷி கடைசிச்
சமயத்தில் விச்வாமிததிரரிடம்
வந்து சேர்ந்தார். கெளசிகரான
இவர் வஸிஷ்டருக்கு எதைக்
கொடுப்பது என்று யோசித்தார்.
'எல்லாப்
புண்ணியங்களையும் அனைவருக்கும்
கொடுத்துவிட்டேனே. இந்த
முனிவருக்கு எதைக் கொடுப்பது?'
என்று தீர்க்க காலம்
ஆழ்ந்த யோசனையில் இருந்தார்.
கடைசியில் தீர்மானம்
செய்தார். 'முப்பத்திரண்டு
ஆயிர வருஷகாலம் கடுந்தவம்
செய்திருக்கிறேன். இதை
யாருக்கும் கொடுக்க
வேண்டாம் என்று நினைத்தேன்.
வஸிஷ்டரோ என் மிக்க
நட்புக்கு உரியவர். எதையும்
கொடுக்காமல் இவரை அனுப்புவது
நியாயமல்ல' என்று எண்ணி,
வஸிஷ்டரைக் கூப்பிட்டு,
அர்க்யம் பாத்யம் முதலியவற்றை
அவருக்குக் கொடுத்து
உபசரித்து, நீண்ட காலம்
தாம் செய்த தவப் புணணியத்தை
அவருக்குக் கொடுத்துவிட்டார்.
வஸிஷ்டர் அதைப் பெற்றுக்
கொண்டு தமது இல்லம்
அடைந்தார். இப்படி விச்வாமித்திரர்
தமது புண்ணியபலன் அனைத்தையும்
அயலாருக்குக் கொடுக்க
வேண்டும் என்ற பெருவேள்வியை
முடித்துவிட்டார்.
சில
காலம் சென்றது. வஸிஷ்டர்
தமது ஆசிரமத்தில் உட்கார்ந்துகொண்டு
ஒரு நாள் தீர்க்க ஆலோசனையில்
ஆழ்ந்தார். 'நம்முடன்
பகைமைப்பட்டு, நம் மூலமாகப்
பிரம்மரிஷிப் பட்டத்தையும்
பெற்றுப் புகழ்பெற்று
விளங்கினவர் விச்வாமித்திரர்.
அவர் விரக்த அக்ரேஸரராய்
மோக்ஷத்தை அடைய விரும்பிப்
பரமாத்மாவினிடம் லயித்திருக்கிறார்.
நாமும் அம்மாதிரி ஆக
வேண்டும்' என்று அவர்
ஆவல் கொண்டார். அதனால்
தாம் செய்த புண்ணியமனைத்தையும்
அயலாருக்குக் கொடுக்க
விரும்பி, அனைவரையும்
அழைத்தார். விச்வாமித்திரருக்கும்
சீடர் மூலமாகச் சொல்லியனுப்பினார்.
தேவதைகளும் மற்றுமுள்ள
ரிஷிகளும் வந்து வஸிஷ்டரிடமிருந்து
புண்ணியங்களைப் பெற்றுச்
சென்றனர். விச்வாமித்திர
முனிவர் தாம் எல்லாப்
புண்ணியங்களையும் அயலாருக்குக்
கொடுத்து எதிலும் விருப்பமில்லாதவராக
இருந்தபடியால், முதலில்
போக விருப்பமற்றவராகவே
இருந்தார். ஆயினும் வஸிஷ்டர்
சீடர்மூலமாகச் சொல்லி
அனுப்பினபடியால், 'சென்றுதான்
பார்ப்போம்' என்று எண்ணி,
வஸிஷ்டரின் ஆசிரமத்திற்குச்
சென்றார்.
இவர் செல்வதற்கு
முன்னமே எல்லாப் புண்ணியங்களையும்
விநியோகப்படுத்திவிட்டார்
வஸிஷ்டர். ஆனாலும், ஸ்வர்க்கலோகத்தில்
ஸகல முனிவர்களுடன் ஏழரை
நாழிகை ஒன்று கூடி ஸத்ஸங்கம்
மூலமாக விசாரத்தைச் செய்திருந்தார்.
அந்தப் புண்ணியம் ஒன்றுதான்
வஸிஷ்டரிடம் இருந்தது.
அதில் நான்கில் ஓர் அம்சத்தை
விச்வாமித்திரருக்குக்
கொடுக்க ஆவல் கொண்டார்
வஸிஷ்டர். இதைப் கேட்டு,
"இது அப்படி உயர்ந்த புண்ணியத்தில்
சேர்ந்ததல்ல; இதை நான்
விரும்பவில்லை" என்றார்
விச்வாமித்திரர்.
பல
மகரிஷிகளும் இதை உயர்ந்த
புண்ணியத்தில் சேர்க்க
ஒப்புக்கொள்ளவில்லை.
வஸிஷ்ட முனிவரின் ஆசிரமத்திற்குப்
பலதேவதைகளும் மகரிஷிகளும்
வந்திருந்தபோதிலும்
இவரது புண்ணியத்தில்
ஓர் அம்சத்தைப் பெற திக்கஜங்கள்,
அகஸ்தியர், ஆதிசேஷன்,
சூரியன் ஆகியோர் மாத்திரம்
வராமல் இருந்தனர். அவர்களுக்குத்
தங்கள் தங்கள் வேலைகள்
இருந்தபடியால் அவற்றை
விட்டு வர முடியாமற்
போயிற்று. அவர்களைக்
கூப்பிட்டு, 'ஸத்ஸங்கம்
மூலமாகச் செய்த பிரம்மவிசாரம்
உயர்ந்த புண்ணியத்தில்
சேருமா சேராதா?" என்று
கேட்கலாம் என்று பார்த்தால்,
அவர்கள் வரச் சம்மதிக்கவில்லை.
வஸிஷ்ட முனிவர் தாமே
அவர்கள் இருக்கும் இடத்திற்குச்
சென்று, தமது கீழ்க்கூறிய
புண்ணியத்தில் நாலில்
ஒரு பங்கைக் கொடுத்து,
அவர்கள் செய்யும் வேலையை
இந்தப் புண்ணியத்தின்
மூலமாக நடத்த ஏற்பாடு
செய்து, அவர்களைத் தம்
ஆசிரமத்துக்கு அழைத்து
வந்தார். அந்தப் புண்ணியத்தின்
பெருமையினால் சூரியன்
இல்லாமலே கதிரவன் வேலை
நடந்தது. நான்கு யானைகள்
இங்கு வந்தபோதிலும்
உலகம் ஒருவித அசைவுமின்றி
அப்படியே நின்றது. ஆதிசேஷன்
இங்கு வந்துவிட்டாலும்
பூமி கம்பமின்றியே இருந்தது.
அகஸ்தியர் இவ்விடம் இருந்தபோதிலும்
விந்தியமலை உயராமலே இருந்தது.
இதைக் கண்ட அனைவரும்
வியப்படைந்தனர்.
'இது
உயர்ந்த புண்ணியம்' என்பதை
அறிந்த கெளசிகர் ஓர்
அம்சத்தைப் பெற்றுத்
தம் ஆசிரமத்துக்கு வந்தார்.
வந்ததும் அங்கே தர்மதேவதையைக்
கண்டார். தர்மதேவதை, "நீர்
முப்பத்திரண்டு ஆயிர
வருஷகாலம் செய்த தவப்பயனை
வஸிஷ்டருக்குக் கொடுத்தீர்.
அந்தத் தவத்தின் பலனாக,
ஸவர்க்க லோகத்தில் ஸத்ஸங்கம்
மூலமாக வஸிஷ்டர் பிரம்ம
விசாரத்தைச் செய்தார்.
அதில் நான்கில் ஒரு பங்கை
நீர் பெற்றபடியால் ஸ்ரீமந்தாராயணனே
உம்முடைய திருவடிகளில்
விழுந்து சிஷ்யவிருத்தியைச்
செய்யப் பொகிறான். நாலில்
ஓர் அம்சத்தை அகஸ்தியர்,
சூரியன் முதலியவர்களுக்குக்
கொடுத்து அவர்களின்
காரியங்களைச் செய்துவிட்டமையால்
அந்த நான்கில் மற்றோர்
அம்சம் கழிந்துவிட்டது.
அரை பாகம் அவருக்கு அப்படியே
இருக்கிறது, அதனால் பகவான்
அதிகமாக சிஷ்ய விருத்தியை
அவருக்குச் செய்யப்போகிறார்"
என்று சொன்னது. இதைக்
கேட்ட கெளசிகர் மிக்க
விஸ்மயமடைந்து புன்னகை
செய்து கொண்டார்.
இந்த
விஷயத்தை ஸர்வஜ்ஞரான
வஸிஷ்ட பகவான் நன்கு
உணர்ந்தவரானபடியால்,
கெளசிகர் தசரத சக்கரவர்த்தியிடம்
வந்து தமது யாகத்தை இடையூறின்றிச்
செய்துவைக்க ஸ்ரீராமனைப்
பிரார்த்தித்தபோது,
கொடுக்க மாட்டேன் என்று
சொன்ன தசரதனைப் பார்த்து,
ஸ்வதர்மம்
ப்ரதிபத்யஸ்வ நாதர்மம்
வோடுமர்ஹஸி | ஸம்ச்ருத்யைவம்
கரிஷ்யாமீத்யகுர்வாணஸ்ய
ராகவ || இஷ்டாபூர்த்தவதோ
பூயாத் தஸ்மாத் ராமம்
விஸர்ஜய | தவ புத்ரஹிதார்த்தாய
த்வாமுபேத்யாபியாசதே
|| பாலகாண்டம் (21)
என்று
பல காரணங்களைச் சொல்லி,
ராமனை அனுப்பும்படி செய்து
வைத்தார். ஆகவே, விச்வாமித்திரர்
இராமபிரானைச் சீடனாகப்
பெற்றது, முதலில் தம்மிடமிருந்து
முப்பத்திரண்டு ஆயிர
வருஷகாலம் செய்த புண்ணியத்தைப்
பெற்ற வஸிஷ்டருடைய அநுக்ரகத்தினால்
விளைந்ததுதான்.
இதனால்
நாம் தெரிந்துகொள்ள
வேண்டியது. ஒரு சீடனுக்கு
உயர்ந்த ஆசார்ய சம்பந்தம்
ஏற்படுவதும் ஓர் ஆசார்யனுக்கு
உன்னத சிஷ்ய சம்மதம்
ஏற்படுவதும் அதிக புண்ய
பயனாக இருக்கும் என்பது.
பீஷ்மாசாரியர் பரசுராமனிடம்
தனுர் வித்தையை கற்றுக்
கொண்டார். அவர் சிஷ்யன்
பீஷ்மன். பரசுராமன் ஆசார்யரானார்.
"சிஷ்யாத் இச்சேத் பராஜயம்"
என்ற வகையில், சிஷ்யரான
பீஷ்மர் பரசுராமனையும்
வென்றார் என்றால் பீஷ்மருடைய
ப்ரபாவம் எவ்வளவு என்பதை
பார்க்க வேண்டும். அம்பா,
அம்பாலிகா விஷயமாக விவாஹம்
நடந்தபோது நான் மணந்து
கொள்ளமாட்டேன் என்று
சொன்ன பீஷ்மரிடம் சொல்லி
மணக்கச் செய்கிறேன் என்று
சொன்ன பரசுராமர் போரில்
தோற்றார். த்ரோனாச்சார்ய
பீஷ்மர்களும் தன் சிஷ்யனான
அர்ஜுனனிடம் தோல்வி
அடைந்தனர். சீடனிடம்
தோல்வி அடைந்தாலும்
குணம் என்றெண்ணி பூர்ணமாக
வித்தையை இவர்கள் கற்றுக்
கொடுத்தனர். த்ரோணர்
தன் புத்ரனான அஸ்வத்தாமாவுக்கு
சொல்லிக் கொடுக்காத
விஷயங்களை சீடன் அர்ஜுனனுக்கு
பயிற்சி செய்து வைத்தார்.
ப்ரஹ்மாஸ்தரத்ததை திரும்பி
பெற்றுக் கொள்ளும் வகையில்
அர்ஜுனனை தயார் செய்தார்.
அஸ்வத்தாமாவுக்கு இவ்விஷயத்தை
கற்பித்துக் கொடுக்கவில்லை.
இதனால் அர்ஜுனனிடம் உள்ள
மதிப்பு தன் குமாரனிடம்
இல்லை என்பது ஸ்பஷ்டம்.
ஸாந்திபினியிடம்
சிஷ்யனாக பகவான் க்ருஷ்ணன்
அமைந்தான் என்றால் இவருடைய
அத்ருஷ்டம் மஹாத்தானது.
இதன் மூலம் இறந்த ஆசார்யன்
குமாரனையும் யமலோகம்
சென்று மீட்டுக் கொடுத்தார்.
இப்படியல்லவோ சீடன்
இருக்கவேண்டும். நம்
ராமானுஜனுக்கு கூரத்தாழ்வார்
முதலியாண்டான் சிஷ்யர்களாக
அமைந்தனர். இது ராமானுஜன்
அத்ருஷ்டம். அதின் இஷ்டம்
அத்ருஷ்டம். "ராமானுஜார்
யவசக: பரிவர்திஷீய' என்று
ராமாநுஜ ஆசார்யனின் இஷ்டப்படி
தாம் நடந்துகொள்வதாக
கூரத்தாழ்வான் சொன்னார்.
எந்த ராமாநுஜமுனியின்
திருவடி திருமுடி ஸம்பந்தத்தால்
மனிதனுக்கு பரமபதம் கிட்டுமோ
அந்த உடையவர் தனது முக்தியை
கூராத்தாழ்வார் சம்மந்தத்தால்
ஏற்பட்டது என்று தனது
வசனத்தாலேயே சொல்கிறார்
என்றால் ஆழ்வான் பெருமை
வாசாம கோசரம் என்பதில்
என்ன ஸந்தேஹம்?
இக்காலத்தில்
ஆசார்யனும் உள்ளனர்.
சீடர்களும் உள்ளனர்.
என்ன லாபம்? சிஷ்யன் ஸத்கதியை
அடைய ஆசார்யனோ உபதேசிப்பதில்லை.
இவனும் சத்விஷயத்தின்படி
நடப்பதில்லை. ஸங்கேத
மாத்திரம் தான். புகழ்
வந்தால் போதும் என்பதில்
கண். இப்படிப்பட்ட சிஷ்யர்கள்
எத்தனை பேர் இருந்தால்
என்ன? ஆசார்யன் என்ற பெயர்
வந்தால் போதும் என்ற
எண்ணம்தானே தவிர, அவன்
உஜ்ஜீவிக்க வேண்டும்
என்கிற எண்ணம் லவலேஸமும்
இல்லை. கால கதி இதுதான்.
பரமபதம் மோக்ஷம் என்பது
உண்டு. பகவான் இருக்கிறான்.
தர்மம் தலைகாக்கும் என்பதை
மறந்துதான் வேலை செய்கின்றனர்.
மதுர
கவி நம்மாழ்வாரை ஆசார்யராகக்
கொண்டவர். ஆசார்யரான
நம்மாழ்வார் எந்த ரீதியில்
தர்மத்தை அநுஷ்டித்துக்
காட்டினார். அவரது பாசுரங்களைக்
கொண்டே நன்கு அறியாலாம்.
"கண்ணினுன் சிறுத் தாம்பினால்
கட்டுண்ணப் பண்ணிய பெரும்
மாயன் என்னப்பனில்" என்று
பகவானை மதிக்காமல் ஆழ்வானான
ஆசார்யனை மதித்தார்?
ஏன்? ஸம்ஸாரமானது காராக்ரஹம்.
அந்நாள் நீ தந்த ஆக்கையின்
வழி உழல்வேன் என்றார்
ஆழ்வார். மேலும் "திண்ணமழுந்தக்
கட்டி பல செய்வினை வன்
கயிற்றால் புண்ணை மறைய
வரிந்து என்னைப் பாரவைத்தாய்
புறமே" என்றும் சொன்னார்.
இதைத்தான் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என்று
மதுரகவி சொன்னார். அதிலிருந்து
சிஷ்யனை விடுதலை செய்ய
விரும்புவன் ஆசார்யன்.
பகவானோ நம்மை ஸம்ஸாரத்தில்
கர்ம பாசம் என்னும் கயிற்றினால்
கட்டுண்ணுபடி செய்பவன்.
காராக்ரஹத்தில் தள்ளும்
அவனை நாம் பூஜிப்பதா?
அதிலிருந்து விடுதலை
செய்பவனை பூஜிப்பதா?
யோசித்துப் பாருங்கள்.
யசோதையால் கட்டமுடியவில்லை
கண்ணனை. கண்ணன் பார்த்தான்.
என்னை உன்னால் கட்டமுடியாது.
நானே கட்டு உண்ணுகிறேன்
என்று அவள் தன்னை கட்டும்படி
செய்துகொண்டான் என்பது
பூர்வர்களின் உரை. அதைவிட
ரஸகனமான உரை உண்டு. அது
என்ன என்றால் நாம் செய்த
பாப பாசத்தால் நம்மை
கட்டுண்ணும்படி செய்பவன்.
ஆக ஸம்ஸார ஸாகரத்தில்
தள்ளுபவன் எம்பெருமான்.
ஆசார்யனோ அவிழ்த்து
விடுபவன். ஆக நாம் ஈச்வரனை
விட ஆசார்யனை மதிக்க
வேண்டும் என்கிறார்.
ஆசார்யர்களே பணத்தின்
ஆசையால் ஸம்ஸார பாசத்தால்
இங்கேயே இருக்கவேண்டும்
இதை அவிழ்த்துக் கொள்ள
கூடாது என்றும் எண்ணினால்
அவர்கள் நம்மை எப்படி
அவிழ்த்துவிடுவார்கள்.
அந்தோ. அவ்வளவு பணம்
பந்து புத்ரன் முதலியவர்களிடம்
பாசமாக இல்லாத ஆசார்ய
சம்பந்தமும் விரக்தனான
சிஷ்ய சம்பந்தமும் அத்ருஷ்டாயத்தம்.
|