அமுதமும் விஷமும்
'அளவுக்கு
மிஞ்சினால் அமுதமும்
விஷமாகும்' என்ற பழமொழியை
நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம்.
எந்த பொருளையும் அளவுக்கு
மீறி உபயோகப்படுத்தினால்
நன்மை கிட்டாது. அன்னத்தை
நாம் தினந்தோறும் உபயோகப்
படுத்துகிறோம். அதுவே
நமக்கு முக்கியமான ஆஹாரம்.
நமது பிராணனை அது நிலை
நிறுத்துகிறது. இதையே
அளவுக்கு மீறி அதிகமாக
உட்கொண்டால் பிரணனையும்
போக்குகிறது. 'அந்நம்
ம்ருத்யும் தமு ஜீவாதுமாஹு:'
என்று வேதம் கூறுகிறது.
ஒருவனை நேசித்து நமக்கு
அவனைத் தோழனாக்கி கொள்கிறோம்.
அவனிடத்தில் ஸ்நேகம்
வைப்பது என்பது உயர்ந்ததுதான்.
ஆயினும் அதிலும் அளவுக்கு
மீறி ஸ்நேகத்தைப் பாராட்டினால்
அது விபரீதத்திலும் முடிந்துவிடும்.
இராமனுடைய
பாணத்தால் அடிபட்ட வாலி
தனது அந்திம தசையில்
புத்ரனான அங்கதனைப் பார்த்து,
"அதிக ஸ்நேகமும் வைக்க
வேண்டாம்; ஸ்நேகம் வைக்காமலும்
இருக்க வேண்டாம்; அதிகமாக
நேசித்தலும், நேசிக்காமலே
இருத்தலும் அதிக கஷ்டத்தை
கொடுக்கும்" என்று உபதேசிக்கிறான்.
ந
சாதிப்ரணய: கார்ய: கர்த்தவ்யோப்ரணயச்ச
தே| உபயம் ஹி மஹாந் தோஷஸ்
தஸ்மாதந்தரத்ருக் பவேத்
||
(ஸ்ரீமத்ராமாயணம் - கிஷ்கிந்தா
காண்டம் - 22-23)
எனவே எந்த
விஷயத்திலும் 'அதி'யை
(மிகுதியை) விடவேண்டும்.
தானம் என்பது உலகில்
உயர்ந்த தருமம். அதையும்
அளவுடன் செய்யவேண்டும்.
தன்னை மீறி அதிகமாக செய்தால்
தானும் கஷ்டத்தை அடைய
வேண்டிவரும். அதிதானத்தால்
மஹாபலி விஷ்ணுவால் கட்டப்பட்டான்
என்பதை அறிந்திருக்கிறோம்
அல்லவா? அதிக ஆசை வைத்தபடியால்
ராவணன் என்னும் இராக்கதன்
கொல்லப்பட்டான். ஆகையால்
விளையாடுதல், தூங்குதல்,
புசித்தல், கொடுத்தல்,
நேசித்தல் முதலிய எல்லா
விஷயங்களிலும் அளவுக்கு
மீறிப் பற்று வைக்கக்
கூடாது.
அளவுக்கு
மீறினால் அமுதமும் விஷமாகும்
என்பது மாத்திரமல்ல;
உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுமே
ஒரு சமயம் அமுதமாகும்;
அதுவே மற்றொரு சமயம்
விஷமுமாகும். இதை நினைத்து,
'அமுதமும் விஷமாகும்;
விஷமும் அமுதமாகும்'
என்றான் காளிதாஸன்.
விஷமப்யம்ருதம்
க்வசித் பவேத், அம்ருதம்
வா விஷமீச்வரேச்சயா ||
எந்தப்
பொருளை நாம் அநுகூலம்
என்று நினைக்கிறோமோ
அந்த பொருளே மற்றொரு
சமயம் பிரதிகூலமாகவும்
முடிகிறது; எந்த பொருளை
நாம் பிரதிகூலம் என்று
கருதுகிறோமோ அதுவே
மறுசமயம் அநுகூலமாகவும்
அமைந்து விடுகிறது. சந்தனம்,
விசிறி முதலிய பொருள்களை
நாம் கோடை காலத்தில்
உபயோகிக்கிறோம். இவை
இல்லாவிட்டால் அந்த கோடைகாலத்தில்
கஷ்டத்தை அடைகிறோம்.
மின்சார விசிறி இல்லாவிட்டால்
மக்கள் எவ்வளவு வருத்தத்தை
அடைகின்றனர்! ஆகாயத்தில்
மேகங்கள் சூழ்ந்து காற்று
அதிகமாக அடித்து மழை
பெய்யும் காலத்தில் இவற்றை
கண்டாலே எரிச்சல் உண்டாகிறது.
ஒருவன்
குளிர்ஜுரத்துடன் கஷ்டப்படுகிறான்.
உடலெல்லாம் நடுக்கம்;
எவ்வளவு கம்பளங்களை மேலே
போட்டு கொண்டாலும்
நடுக்கம் அடங்கவே இல்லை.
அப்பொழுது அவன் நண்பன்
வந்து "நான் மிக குளிர்ச்சியை
தரக்கூடிய குளிர்பானத்தை
அருந்தினேன். உனக்கு
தனியாகத் தயாரித்த பானத்தை
கொடுக்கிறேன்" என்றால்,
கொடுத்தவன் விஷயத்திலும்,
அந்த பானத்திலும் எவ்வளவு
வெறுப்பு உண்டாகிறது!
இதே பானம் கோடைகாலத்தில்
கிடைக்க வேண்டுமே என்று
எண்ணுகிறான்.
ஒரு சமயம்
புத்ரனை கண்டதும் மகிழ்ச்சி
அடைகிறான். மற்றொரு
சமயம் அதே புத்ரனை கண்டதும்
வெறுப்படைகிறான். நன்கு
படித்து பெரியோர் சொல்லும்
வார்த்தைகளை கேட்டு பெரிய
உத்யோகத்தில் இருந்து
கைநிறைய பணத்தை ஸம்பாதிக்கும்
புத்ரனை கண்டதும் தானாகவே
களிப்பு வருகிறது. இதே
புத்ரன் ஊதாரித்தனமாக
பொழுதை போக்கி ஊரார்
தூற்றும்படியாக நடந்துகொண்டால்
மனத்துக்கு வெறுப்புத்தானே
உண்டாகும்? இம்மாதிரியே
மனைவி, கணவன் முதலியவர்களிடத்திலும்
ஒருவருடன் ஒருவர் நடந்துகொள்ளும்
முறையை அநுசரித்து களிப்பும்
வெறுப்பும் உண்டாவதை
பல இடங்களில் கண்டுள்ளோம்.
பித்தரோகம் வந்தபோது
பால் கசக்கும். அப்பொழுது
அதை வெறுக்கிறோம். ஸாதாரண
ஸமயத்தில் அதை ஆவலுடன்
பருகுகிறோம். ஆகையால்
ஒவ்வொரு பொருளுமே ஒரு
சமயம் அநுகூலமாகவும்,
மற்றொரு ஸமயம் பிரதிகூலமாகவும்
இருக்கிறது. இதைத் தான்
கவி அழகாக எடுத்துரைத்தான்.
இப்படித் தோற்றமளிப்பதற்கு
காரணம் என்ன? ஈச்வரனுடைய
இச்சைதான்.
அயோத்தி
என்னும் மாநகரில் அஜன்
என்ற ஓர் அரசன் இருந்தான்.
அவன் சுயம்வரத்தில் இந்துமதி
என்னும் (அப்ஸரஸ்) பெண்ணை
மணந்து கொண்டான். சிறிது
காலம் அவளுடன் வாழ்க்கை
நடத்தினான். ஒரு நாள்
இந்துமதியுடன் உத்யானத்தை
அடைந்தான் இவ்வரசன்.
அங்கு அவளுடன் விளையாடிக்கொண்டும்,
அழகிய பொருள்களை கண்டு
களித்தும் பொழுதை கழித்தான்.
அப்பொழுது
ஆகாயத்தில் நாரத முனிவர்
வீணையை கையில் எடுத்து
எம்பெருமான் நாமங்களை
சொல்லி பாடி கொண்டே
சென்றார். அவரது வீணையில்
ஒரு புஷ்பமாலை பிரகாசித்துக்
கொண்டிருந்தது. அந்த
மாலை அனைவரையும் அறியாமல்
கீழே விழுந்தது. விழும்
சமயம் அது இந்துமதியின்
மேல் விழுந்தது, அது காரணமாக
இந்துமதி சாப விமோசனம்
அடைந்து தன் உருவமுற்றாள்.
தன் பத்தினியான இந்துமதி,
மாலை மேலே விழுந்தது
காரணமாக உயிரிழந்தாள்
என்ற காரணத்தால் அஜன்
மிகவும் துன்பமுற்றான்.
அவளுக்கு முன்பு உண்டான
சாபத்தால் அப்ஸரஸ் உருவத்தை
விட்டு இந்துமதியின்
உருவம் ஏற்பட்டிருந்தது.
நாரத பகவான் வீணையின்
மாலை விழுந்து அந்த சாபம்
போம் என்றும் இருந்தது.
எனவே அவள் தம் ரூபத்துடன்
சென்றுவிட்டாள்.
ஆயினும்
அஜனுடைய கஷ்டம் எப்படி
நீங்கும்? அவன் தன் மனைவியின்
மரணத்தை நினைத்து அதிகமாக
வருந்த ஆரம்பித்தான்;
நான்கு பக்கங்களும் பார்த்தான்.
இந்த மாலை தவிர வேறொன்றையும்
இவள் மரணத்துக்கு காரணம்
என்று கருதுவதற்கில்லை
என்று ஊகித்தான். "மாலையே!
நீ அல்லவோ இந்துமதியின்
உயிரை போக்கினாய்? உன்னை
நானும் என் மார்பில்
போட்டுக் கொள்கிறேன்.
என் உயிரையும் போக்கு"
என்று புலம்பி மாலையை
போட்டுக் கொண்டான்.
அவனது உயிர் போகவில்லை.
ஒரு பொருள் ஒருவருக்கு
தீங்கை கொடுக்கிறது.
மற்றவருக்கு தீமையை செய்வதில்லை.
எது அமுதமோ அது விஷமும்
ஆகிறது; விஷமும் அமுதமாகிறது.
ஒரே மாலை இந்துமதியின்
உயிரை போக்கி விஷமாயிற்று;
அதே மாலை அஜனது உயிரை
போக்கடிக்கவில்லை. ஆகையால்
ஒரு வஸ்து ஒருவருக்கு
அநுகூலமாகவும் மற்றவருக்கு
பிரதிகூலமாகவும் ஆகிறது.
ப்ரஹ்லாதன்
ஹிரண்யகசிபு கொடுத்த
விஷத்தை பருகினான். அவனை
அது ஒன்றுமே செய்யவில்லை.
மற்றொருவன் அந்த விஷத்தை
சாப்பிட்டிருந்தால்
அது அப்போதே அவனது உயிரை
போக்கியிருக்கும். நஞ்சை
பருகி பலர் மரணமடைந்ததை
பார்த்திருக்கிறோம்
அல்லவா?
கிருஷ்ண பகவான்
பூதனை என்னும் கொடிய
அரக்கியின் மடியில் உட்கார்ந்து
நஞ்சு கலந்த பாலை உட்கொண்டார்.
அதனால் ஒரு தீங்கும்
உண்டாகவில்லை. பரமசிவன்
சமுத்திரத்தை கடைந்தபோது
உண்டான ஹாலாஹலம் என்னும்
கொடிய விஷத்தை சாப்பிட்டார்.
அவரை அந்த விஷம் என்ன
செய்தது? ஆகையால் பகவத்
ஸங்கல்பத்தினால் அமுதமும்
விஷமாகலாம்; விஷமும்
அமுதமாகலாம்.
மைசூர்
என்னும் நகரத்துக்கு
அருகில் வைகுண்டநாதன்
கோயில் ஒன்று இருந்தது.
இப்போதும் அது முன்போல்
பாதுகாக்கப் பெறாமல்
இருக்கிறது. அந்த கோயிலருகில்
ஒரு பக்தன் எப்போதும்
எம்பெருமானை வணங்கியும்
துதித்தும் வலம் வந்தும்
பாதுகாத்துக் கொண்டிருந்தான்.
அவன் சொன்னதெல்லாம்
பலித்தது. எப்பெருமான்
அவனிடத்தில் அதிக ஆவல்
கொண்டிருந்தான். இதை
கொண்டு சிலர் அவனை கெளரவித்தார்கள்.
சிலர் பொறாமையினால்
வெறுத்தார்கள். வெறுத்தவர்கள்
ஒரு நாள் கோயில் பூசாரியிடம்
ஆயிரம் ரூபாய் கொடுத்து,
அந்த பக்தன் வரும்போது
விஷம் கலந்த தீர்த்தத்தை
கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பூசாரி முதலில் கொடுக்க
மாட்டேன் என்று மறுத்துவிட்டான்.
ஆனாலும் பொறாதவர்கள்
பயமுறுத்தினார்கள். தன்
பிராணனுக்கு பயந்தும்
பணத்தின் ஆசையினாலும்
விஷம் கலந்த தீர்த்தத்தை
கொடுக்க அவன் தீர்மானித்துவிட்டான்.
மறுநாள்
அந்த பக்தன் துதிகளை
செய்து கொண்டு கடவுளை
வணங்க வந்தான். பூசாரி
உண்மையில் விஷத்தை கொடுக்க
மனமில்லாதவனானபடியால்
விஷயத்தை பக்தனிடம் சொல்லிவிட்டான்.
"இதற்கு நீ பயப்பட வேண்டாம்.
இது எம்பெருமானின் ஸங்கல்பம்.
நீ அப்படியே கொடு" என்று
சொல்லி, விஷம் கலந்த
தீர்த்தத்தை வாங்கி கொண்டு,
"அச்சுத, அனந்த, கோவிந்த"
என்று பகவந்நாமங்களை
சொல்லி பருகினான் பக்தன்.
அவனை அது ஒன்றுமே செய்யவில்லை.
இப்படி எல்லாம் பகவத்
ஸங்கல்பம் மூலமாக நடக்கிறபடியால்
எந்த பொருளும் அநுகூலமுமன்று;
பிரதிகூலமுமன்று. எல்லாம்
கடவுளின் பொருளானபடியால்
உண்மையில் எல்லா பொருள்களிடத்திலும்
உயர்ந்த நன்மையே உண்டு.
அவரவர்
செய்த வினையை முன்னிட்டு
சில பொருள்கள் அற்பமான
சுகத்தை அளிப்பனவாகவும்,
துக்கத்தை கொடுப்பனவாகவும்
தோற்றமளிக்கின்றன. வினைகளிலிருந்து
விடுபட்டு முக்தர்களானவர்கள்
எல்லாவற்றிலும் அதிகமாக
ஸுகத்தையே காண்பர். எனவே
எல்லா பொருள்களும் எம்பெருமானின்
விபூதி என கருதி அவற்றில்
நன்மையையே பாராட்ட வேண்டும்.
அன்னம்
ம்ருத்யும் உத ஜீவாதும்
ஆஹு: என்றது வேதம். தினமும்
ஆஹாரார்த்தமாக அன்னம்
சாப்பிடுகிறோம். சில
சமயம் அதுவே மென்னை பிடித்துவிடுகிறது.
மரணஹேதுவாக ஏற்படுகிறது.
ஸ்ரீராமனிடத்தில் எவ்வளவு
அன்பு பாராட்டினாள் கைகேயி.
பரதனிடம் கூட அவ்வளவு
ப்ரீதி காட்டவில்லை.
எப்படி நடந்து கொண்டாள்
என்பதையும் உணர்ந்திருக்கிறோமே.
ராமனும்
தாயினிடம் கூட அவ்வளவு
ப்ரீதி செலுத்தவில்லை.
கைகேய்யா: ப்ரதிபத்தி:
ஹி கதம் ஸ்யாத் மம பிடனே.
என்னை துன்புறுத்த கைகேயிக்கு
இப்படி எண்ணம் எப்படி
உண்டாயிற்று என்கிறான்
ராமன். நெருப்புக்கு
ஏற்பட்ட ஸவபாவம் ஓளஷண்யம்
அது எப்படி ப்ரஹ்லாதன்
விஷயத்தில் இல்லாமலும்
சீதனமாகவும் போய் விட்டது.
எல்லாம் பகவத் ஸங்கல்பம்.
அம்பரீஷரிடம் அபசாரப்பட்ட
துர்வாஸரை துரத்திவந்த
ஸுதர்சன ஆழ்வான், அவர்
வேறிடம் செல்லும்போது
அதிக பராக்ரமத்துடன்
கொளுத்த ஆரம்பித்தது.
அதுவே அம்பரீஷரிடம் செல்லும்போது
குளிர்ந்திருந்தது. ஏன்?
ராமனால் ஏவப்பட்ட
த்ருண ரூபமான ப்ரஹ்மாஸ்த்ரம்
எங்கு எங்கு சென்றாலும்
தாபத்தை கொடுத்தது.
அப்பொழுது அது விஷயம்
தற்செயலாக ராமனிடம் திரும்பிய
போது குளிர்ச்சிகரமாக
அமைந்தது. பிறகு அவன்
வேறு பக்கம் போகபோக
தாபகரம் விஷம். இதெல்லவற்றிற்கும்
காரணம் அவன் ஸங்கல்பம்.
இதனால் அமுதமும் விஷம்.
விஷமும் அமுதம்.
அவரவர்
மனைவி புத்ரர்களே ஒரு
சமயம் அமுதம் பிற சமயம்
விஷம், இது கண்கூடு.
"சதேவ
ப்ரீதயே பூத்வா பன: து:
காய ஜாயதே ததேவ கோபாய
சயத: ப்ரஸாதாய ச ஜாயதே
என்பது விஷ்ணுபுராணம்.
இதனால் என்ன தெரிந்து
கொண்டோம் என்றால்,
எல்லாம் பகவத் விபூதியானதால்
எல்லாம் ப்ரியம் அத்யந்த
அநுகூலம் என்பது. இப்படியானால்
ஒரு கேள்வி.
நாம்
ஏன் சந்தனத்தை பூசிக்
கொள்கிறோம்? அமெத்யத்தை
ஏன் பூசிக்கக் கூடாது.
பன்னீர் ஏன் தெளிக்க
கூடாது? இது பக்ஷ்யம இது
அபக்ஷ்யம் என்று ஏன்
ஒதுக்க வேண்டும். வெங்காயம்
சாப்பிட்டால் என்ன? உள்ளி
பூண்டு புசித்தால் என்ன.
இதற்கு விடை உபய லிங்காதிகரண
வ்யாஸ ஸூத்ரத்திலும்
பாஷ்யத்திலும் என்னுடைய
வ்யாக்யானமான பாவ சந்திரிகையிலும்
பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீ பகவத் விபூதி. பிறனும்
பகவத் விபூதி. அப்படியிருக்க
உன்னுடைய தனத்தை என்
அவனிடம் கொடுப்பதில்லை.
உன் பத்ரனுக்கும் மனைவிக்கும்
அலங்காரம் செய்கிறாய்.
பிறர் புத்ரனுக்கும்
சத்ரு புத்ரனுக்கு ஏன்
அப்படி செய்கிறதில்லை.
உன்னுடைய தனத்தை அபஹரித்தால்
ஏன் கோபம். பாம்பை பார்த்தால்
ஏன் உத்வேகம். இப்படி
ப்ரச்னம் செய்தால் என்ன
பதில் சொல்வாய். இது
என்னுடையது. பையன் என்னுடையவன்.
இது பயங்கரம். என்றெல்லாம்
கூறுவாய். இதுதான் ஏன்.
கர்மம் புண்ய பாபம் என்று
சமாதானம். இவை இல்லாதவனுக்கு
அநுகூலத்வம் ப்ரதிகூலத்வம்
தோன்றாது. ஸர்வம் போக்யம்
என்றே தோன்றும். ஜடபரதர்
பகவத் பக்தர். இது சாப்பிடக்கூடும்
இது கூடாதது என்பது அவருக்கு
இல்லை. எல்லாவற்றையும்
தான் சாப்பிட்டார். நமக்கு
கர்ம சம்பந்தம் உள்ளபடியால்
தோன்றாது. அதனால்தான்
இது ஹேயம் இது உபாதேயம்
என்ற பித்து. அதனால் இவ்வாறு
கேள்வி உண்டாகிறது. பகவானிடத்தில்
மனதை வைத்தவனுக்கு உலகத்தில்
உண்டாகும் உபத்ரவமே இல்லாதபடியால்
எதிலும் தோஷபுத்தி உண்டாகாது.
ஆக இது அமுதம் இது விஷம்
என்கிற விஷம் புத்தி
என்பதே கிடையாது. எல்லாம்
அநுகூலமாம்.
*****
|