பித்ரு காரியத்தில்
ஒரு விசேஷம்
மார்க்கண்டேயர்
என்னும் மகரிஷி ஸனத்குமாரருடைய
அநுக்ரகத்தினால் திவ்ய
சக்ஷுஸ்ஸைப் பெற்றார்.
எந்தக் காலங்களிலுமுள்ள
பொருள்களையும் உட்கண்ணால்
காண வல்லமையை அடைந்தார்.
நடந்தது நடப்பது நடக்கப்
போவது ஆகிய எல்லா விஷயங்களையும்
நன்கு அறிந்தார்.
முன்பு
தம்மிடத்தில் சில வினாக்களைக்
கேட்ட பீஷ்மரைப் பார்த்து,
"பித்ரு காரியத்தை நாம்
சிரத்தையுடன் செய்ய வேண்டும்.
எப்படியாவது திரவியங்களை
ஸம்பாதித்து அதை விடாமல்
செய்ய வேண்டும். ஏதோ
மோகத்தால் ஹிம்சை செய்தாலும்
அதைப் பித்ருக்களுக்கு
நிவேதனம் செய்துவிட்டால்
அது ஒருவித மேன்மையையும்
கொடுக்கும். இதற்குத்
திவ்ய சக்ஷுஸ்ஸால் கண்ட
ஓர் இதிஹாஸத்தைக் கூறுகிறேன்"
என்று சொல்லத் தொடங்கினார்.
பரத்வாஜர்
என்னும் முனிவரை நாம்
அறிந்திருக்கிறோம்.
அந்த முனிவருக்கு ஏழு
புதல்வர்கள். அனைவரும்
எல்லாக் கல்வியும் கற்றவர்கள்;
வேதமனைத்தையும் ஓதுபவர்கள்;
மிக்க ஆசாரசீலர்கள்.
பரமாத்மாவினிடம் தமது
மனத்தைச் செலுத்தி யோகாப்யாஸத்தில்
இழிந்து திகழ்ந்தனர்.
இவர்கள் மறுபிறவியில்
விசுவாமித்ர மகரிஷிக்குப்
புதல்வராகப் பிறந்தார்கள்.
வாக்துஷ்டன், க்ரோதனன்,
ஹிம்ஸ்ரன், பிசுனன், கவி,
கஸ்ருமன், பித்ருவர்த்தி
என்று பெயர் பெற்றவர்கள்.
வாக்துஷ்டன் எப்போதும்
தூஷணச் சொல்லைச் சொல்லுபவன்.
க்ரோதனன் கோபமுள்ளவன்.
ஹிம்ஸ்ரன் ஹிம்ஸை செய்பவன்.
பிசுனன் கோள் சொல்லுபவன்.
கவி பரலோகத்தில் பயம்
உள்ளவன். கஸ்ருமன் ஆகாயத்தில்
ஸஞ்சரிக்க விருப்பமுள்ளவன்
(பரலோகத்தை விரும்புபவன்).
பித்ருவர்த்தி தந்தையை
அநுஸரிப்பவன்.
இவர்கள்
தங்கள் பெயர்களுக்குத்
தகுந்தபடி நடத்தை உள்ளவர்கள்.
கார்க்யர் என்னும் முனிவரை
ஆசார்யராக வரித்து, அவரிடம்
வேதம் ஓதிக் கொண்டு
வந்தார்கள். தங்கள் பிதாவான
மகரிஷி (விசுவாமித்திரர்)
ஆசார்யருடைய வார்த்தையைக்
கேட்டு மிக்க நியமத்துடன்
பரம ஆஸ்திக்யத்துடனும்
நற்காரியங்களைச் செய்து
வந்தார்கள். தம் ஆசார்யனிடத்தில்
வினயத்துடனும் பக்தியுடனும்
பணி புரிந்து வந்தார்கள்.
ஆசார்யர் இவர்களின் பக்திக்கு
பரவசராகி எல்லா வேதங்களையும்
கல்விகளையும் கற்றுக்
கொடுத்தார்.
தினந்தோறும்
ஆசார்யனது பசுவைக் காட்டுக்கு
ஓட்டிச் சென்று, புல்
முதலியவற்றை மேயவைத்துச்
சாயங்காலத்தில் இல்லத்துக்கு
ஓட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள்.
சில சமயம் ஒரு வாரம் பத்து
நாள்கூட வெளியிலேயே மேயவைத்துக்
கொண்டிருப்பார்கள்.
ஸ்தித:
ஸ்திதாம் உச்சலித: ப்ரயாதாம், நிஷேதுஷீம், ஆஸநபந்ததீர:
| ஜலாபிலாஷீ ஜலம் ஆததாநாம் சாயேவ
தாம் பூபதிரந்வகச்சத்
|| (ரகுவம்சம்)
என்று வஸிஷ்ட
மகரிஷியின் தேனுவினிடத்தில்
திலீபன் நடந்து கொண்டது
போல், இவர்கள் கார்க்யருடைய
பசுவினிடத்தில் மிகவும்
பக்தி ச்ரத்தையுடன் இருந்தார்கள்.
ஒரு
நாள் வழக்கம்போல் முனிவரின்
பசுவைக் காட்டுக்கு ஓட்டிச்
சென்றனர். நான்கு தினங்கள்
கடந்தன. இவர்களுக்குப்
பசி அதிகமாகிவிட்டது.
உண்ண உணவும் இல்லை; குடிக்க
நீரும் கிடைக்கவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல்
திகைத்தனர். கவி, கஸ்ருமன்
ஆகிய இருவரையும் தவிர
மற்றவர்கள், "இந்த ஆசார்யனின்
பசுவைக் கொன்றாவது பசியைத்
தீர்த்துக்கொள்ளலாம்"
என்றார்கள். கவியும்
கஸ்ருமனும், "பசுவைக்
கொல்வது பெரும் பாதகம்.
கோவினிடத்தில் தேவதைகளும்
மகரிஷிகளும் திரிமூர்த்திகளும்
மகாலக்ஷ்மியும் வஸிக்கிறார்கள்.
நம்மால் பூஜிக்கப்பட
வேண்டிய இதைக் கொல்வது
எப்படி? மேலும், நம் ஆசார்யனின்
பசு இது. நம் ஆசார்ய பக்தி,
இதைக் கொன்றால் மிக
நன்றாக விளங்குமே! அனைவரும்
நம்மை இகழ்வார்கள். நாம்
இறந்தாலும் இறக்கலாம்;
பசுவைக் கொல்வது யுக்தமாகாது"
என்றர்கள்.
மிஞ்சிய
ஐவரும் ஒரே பிடிவாதமாக
'இதை ஹிம்ஸித்துப் பசியைத்
தீர்த்துக் கொள்ளவேண்டும்'
என்று தீர்மானித்தார்கள்.
அப்போது பித்ருவர்த்தி
என்பவன் அவர்களைப் பார்த்து,
"நான் நித்ய ச்ராத்தம்
செய்பவன். ஆகையால் இந்தப்
பசுவைக் கொன்று நம்
பித்ருக்களைக் குறித்து
ச்ராத்தம் செய்து நாம்
உண்டால் நமக்குத் தோஷம்
வராது" என்றான். அனைவரும்
அதைக் கேட்டு அவ்வாறே
செய்ய முயன்றனர். ச்ராத்தம்
முடிந்தது. அனைவரும்
உண்டு பசியைத் தீர்த்துக்
கொண்டனர்.
எவ்வளவு
தர்மிஷ்டராக இருந்தபோதிலும்
பாவம் செய்பதில் அவர்களுக்கு
அபருசி வந்துவிடுகிறது.
இது மனிதர்களின் இயற்கை.
ஒருவன் நல்ல காரியங்களைச்
செய்துகொண்டே வருவான்.
ஆயினும் நடுவில் திடீரென்று
ஏதோ ஒரு பாபவசத்தால்
அக்ரமம் செய்ய முயல்வான்.
இந்த ஒரு நியதி அவர்களையும்
விடவில்லை. வீடு திரும்பினர்.
கன்று வருவதை மாத்திரம்
கண்ட மகரிஷி, "பசு எங்கே?"
என்று கேட்டார். அவர்கள்
கண்களில் நீரைத் தாரை
தாரையாக் பெருக்கிக்
கொண்டு, "ஐயோ! நாங்கள்
என்ன செய்வது! பெரும்புலி
ஒன்று வந்து பசுவைத்
தின்றுவிட்டது. நாங்கள்
எவ்வளவு முயன்றும் பயனளிக்கவில்லை.
நாங்கள் பயந்து ஓடி வந்தோம்"
என்று ஒரே மாதிரி கூறினார்கள்.
மகரிஷி வருத்ததுதுடன்,
"உங்களுக்காவது ஓர் ஆபத்தும்
நேராமல் இருந்ததே. அதைப்பற்றிப்
பெருமகிழ்ச்சியடைகிறேன்"
என்று சொல்லி, சிஷ்யர்கள்
சொன்னதை நம்பித் தம்
வேலையில் ஈடுபட்டார்.
இவர்கள் பசுஹிம்ஸை
செய்ததனாலும், ஆசார்யனிடத்தில்
பொய் கூறியதனாலும் பெரும்
பாவம் இவர்களுக்கு ஏற்பட்டது.
சில தினங்கள் ஆனபிறகு
இவர்களுக்கு இறப்பு நேர்ந்தது.
க்ரூரமான செயல் செய்தபடியால்
ஹிம்ஸைத் தோழிலையுடைய
வேட்டுவச் சாதியில் சோதரர்களாகப்
பிறந்தார்கள். கோஹத்தி
செய்திருந்தபோதிலும்
ச்ராத்தத்தில் பித்ருக்களுக்கு
அதைக் கொண்டு அர்ச்சனை
செய்தபடியால் முன்ஜன்ம
ஸ்மரணம் இவர்களுக்கு
இருந்தது. தசார்ணம் என்னும்
தேசத்தில் இவர்கள் பிறந்தனர்.
தங்கள் தொழிலைச் சரிவரச்
செய்தனர். பேராசையையும்
பொய்யையும் அறவே விட்டார்கள்.
எவ்வளவு எதைச் செய்தால்
உயிர் தங்குமோ அதை மாத்திரம்
செய்து ஜீவித்திருந்தனர்.
ஸர்வ காலங்களிலும் பகவானை
ஆராதித்து பக்தியோகத்தில்
ஆழ்ந்து அமர்ந்திருந்தனர்.
தாங்கள் செய்த பாவச்
செயலால் தாழ்ந்த பிறவியைப்
பெற்றிருந்த போதிலும்
ஹிம்ஸை செய்யப்பட்ட கோவை
(பசுவை)ப் பித்ருக்களுக்கு
நிவேதனம் செய்ததனால்
பூர்வஜன்மங்களின் ஸ்மரணமும்,
முன்பு செய்த யோகாப்யாஸமும்
இவர்களை விடவில்லை.
இவர்கள்
முதியோரான தங்கள் தாய்
தந்தையர்க்கு ஒருவிதக்
குற்றமுமின்றிப் பணிவிடை
செய்து வந்தார்கள். காலக்கிரமத்தில்
பெற்றோர் இறந்த பிறகு,
தங்களது வில் முதலிய
ஆயுதங்களை விட்டுப் பிராணத்தியாகம்
செய்தனர். பிறகு ஜாதிஸ்மரர்களாய்,
காலஞ்சரம் என்னும் மலையில்
மிருகங்களாய்ப் பிறந்தனர்.
அந்தப் பிறவியிலும் பகவானிடத்தில்
மனத்தை செலுத்தி யோகத்திலேயே
ஆழ்ந்திருந்தனர். மிகப்
பொறுமையுடனும், ஸுகதுக்கங்களைச்
சமமாகப் பாவித்தும்,
சிற்றின்பத்தில் பற்று
இல்லாமலும், நல்ல காரியங்களைச்
செய்து கொண்டும் காட்டில்
வசித்து வந்தனர். பிறகு,
முன்பு பசுவை ஹிம்ஸை
செய்ததனாலும் ஆசார்யனிடம்
பொய் கூறியதனாலும் இன்னும்
எத்தனை பிறவி பிறக்க
வேண்டுமோ என்று வருந்தியவர்களாய்,
நீரையும் பருகாமல் மலைச்
சிகரத்திலிருந்து கீழே
விழுந்து உயிரை விட்டனர்.
பிறகு
ஒரு தீவில் சக்ரவாகப்
பறவைகளாகப் பிறந்தனர்.
ஆஹாரம் இல்லாமல் அந்தப்
பிறவியையும் போக்கடித்துக்
கொண்டார்கள். பிறகு
மானஸ ஸரஸ்ஸில் ஹம்ஸங்களாகப்
பிறந்து முந்திய பிறவிகளில்
நடந்ததை நினைத்துக் கொண்டு
மிக்க நியமத்துடன் ப்ரஹ்ம
த்யானத்திலேயே ஈடுபட்டனர்.
அந்த ஸரஸ்ஸில் தபத்துடனும்
யோகத்துடனும் இருந்த
பொழுது நீபதேசத்துக்கு
அரசனான விப்ராஜன் சேனைகளோடு
அவ்விடத்துக்கு வந்தான்.
அவன் அழகிய உருவத்துடனும்,
ஆடை ஆபரணங்கள் முதலியவற்றுடனும்
நன்றாக விளங்கினான்.
அவனைக் கண்டதும் ஏழாவதான
(பித்ருவர்த்தி) ஹம்ஸம்,
'நாமும் இவனைப் போல்
ஆடை ஆபரணங்களை அணிந்து
அழகிய மஹிஷிகளுடன் விளையாட
வேண்டும்' என்று நினைத்தான்.
தன் சகோதரர்களான ஹம்ஸங்களுடனும்
சொன்னான். அதைக் கேட்ட
ஐந்தாவதான கவி என்ற ஹம்ஸமும்,
ஆறாவதான கஸ்ருமன் என்ற
ஹம்ஸமும், "உனக்கு மந்திரிகளாக
நாங்கள் பிறக்கிறோம்"
என்று கூறின.
மற்ற ஹம்ஸங்கள்,
மூன்று ஹம்ஸங்களைப் பார்த்து,
"தவத்திலும் யோகத்திலும்
விளங்குகிற உங்களுக்கு
ஏன் இப்படிப்பட்ட புத்தி
உண்டாயிற்று? தியானத்தில்
ஆழ்ந்தவர்களுக்கு வேறு
விஷயத்தில் பற்று இருக்கலாமா?
எனவே நீங்கள் மூவரும்
அவரவர் விருப்பப்படி,
ஒருவன் காம்பில்யம் என்னும்
நாட்டில் அரசனாகவும்,
மற்ற இருவரும் மந்திரிகளாகவும்
பிறக்கக்கடவீர்கள்" என்று
சாபமிட்டன.
இதைக்
கேட்ட மூவரும், "நாங்கள்
என்ன செய்வது? எப்படிப்பட்டி
தர்மசிந்தை உள்ளவர்களுக்கும்
அதர்மத்தில் எண்ணம் மின்னல்
போல் தோன்றி மறைவதுண்டு.
விசுவாமித்ர மகரிஷி எல்லாப்
புலன்களையும் அடக்கி
உக்ரமானதபஸ்ஸைச் செய்துகொண்டிருந்த
போதிலும் மேனகை முதலிய
அப்ஸரஸ் ஸ்திரீகளிடம்
மோகம் கொண்டு தவத்திலிருந்து
நழுவினதைக் கேட்டதில்லையா?
கெளதமர் என்னும் மகரிஷி
இந்திரன் அனுப்பிய ஓர்
அப்ஸரஸ் ஸ்திரீயினிடம்
ஆயிரக்கணக்கான வருஷங்களைக்
கழித்துக்கொண்டு தமது
தவத்திலிருந்து நழுவி,
அவ்வளவு வருஷங்கள் கழிந்ததையும்
ஒரு நிமிஷம் கழிந்ததாகவே
எண்ணி ஏமாற்றம் அடையவில்லையா?
எனவே நாங்களும் விப்ராஜன்
என்னும் அரசனைப் பார்த்ததும்
அவனைப் போல் பல போகங்களை
அநுபவிக்க விரும்பினோம்.
இதைக் கொண்டு நீங்கள்
சபிக்க வேண்டுமா?" என்றனர்.
மற்ற
நான்கு ஹம்ஸங்களும்,
"உங்களுடைய மனோரதமும்
பூர்த்தியாக வேண்டும்.
எங்கள் சாபமும் பலித்தே
ஆக வேண்டும். ஆனால் இந்த
சாபத்துக்கு ஒரு முடிவு
உண்டு. இங்கிருந்து (யோகத்திலிருந்து)
நழுவி ராஜவம்சத்திலும்,
மந்திரி வம்சத்திலும்
பிறப்பீர்கள். பித்ருவர்த்தி
என்பவனுக்கு ஸர்வ பிராணிகளுடைய
பாஷையின் ஞானமும் உண்டாகும்.
நீங்கள் ராஜபோகத்தில்
இருக்கும்போது ஒரு ஸமயம்
ஒரு புருஷன் இரண்டு ச்லோகங்களைச்
சொல்வான். அதிலிருந்து
உங்களுக்கு எங்கள் ஞாபகமும்,
உங்கள் பூர்வஜன்ம ஸ்மரணமும்
கிடைக்கும். அதிலிருந்து
யோகத்தை செய்து நற்கதியைப்
பெறுவீர்கள்" என்றார்கள்.
இப்படி
இவர்கள் பேசிக்கொண்டு
இருந்தபோது அங்கு வந்து
விப்ராஜன் இந்த ஹம்ஸங்களை
நன்கு பார்த்தான். இவற்றின்
அடக்கம், நடத்தை, ப்ரஹ்மத்யானம்,
தவம் முதலியவற்றை ஆராய்ந்தான்.
பறவையினத்தில் பிறந்து
இவற்றுக்கு இவ்வளவு மேன்மை
எப்படி ஏற்பட்டது என்று
ஆலோசித்துக்கொண்டு,
இவற்றுள் ஏதாவது ஓர்
அன்னத்துக்கு புதல்வனாக
நாம் பிறக்க வேண்டும்
என்று நினைத்தான். தன்
புதல்வனான அணுஹனுக்கு
ஆட்சியைத் தந்து, மானஸ
ஸரஸ்ஸின் கரையிலேயே தவம்
செய்யத் தொடங்கினான்.
இப்படியிருக்க,
ஏழு ஹம்ஸங்களில் பித்ருவர்த்தி
என்பவன், அணுஹன் என்னும்
அரசனுக்கு ப்ரஹ்மதத்தன்
என்ற பெயருடன் குழந்தையாகப்
பிறந்தான். கல்விகளில்
தேர்ச்சி பெற்றான். தியானம்,
தவம் முதலியவற்றை விடாமல்
செய்து வந்தான். சாபம்
பெற்ற மற்ற இருவரும்
பாஞ்சாலன், கண்டரீகன்
என்ற பெயர்களுடன் மந்திரியின்
புதல்வர்களாகப் பிறந்தார்கள்.
அணுஹன்
தன் புதல்வனான ப்ரஹ்மதத்தனின்
அறிவையும், ஸகலவிதத்
திறமையையும், எல்லாப்
பாஷைகளிலும் வல்லவனாக
இருக்கும் தன்மையையும்
பார்த்து ராஜ்யத்தில்
அவனை அபிஷேகம் செய்வித்து
யோகம் மூலமாக நற்கதியை
அடைந்தான். சாபம் கொடுத்த
நான்கு ஹம்ஸங்களும் ச்ரோத்ரிய
குலத்தில் மிகவும் தரித்ரனான
ஒருவனுக்குப் புதல்வர்களாகப்
பிறந்தார்கள். பல பிறவியாகத்
தொடர்ந்து வந்த யோகாப்யாஸத்தை
தொடர்ந்து நடத்தி வந்தார்கள்.
அந்தணர் குலத்துக்குத்
தக்கபடி வேதங்களை ஓதி
நன்கு விளங்கினர்.
ஒரு
சமயம் தம் தகப்பனாரிடம்
சென்று இரு கைகளையும்
கூப்பிக்கொண்டு வணங்கி,
"தந்தையே! நாங்கள் உங்களுக்குப்
புதல்வர்களாகப் பிறந்துள்ளோம்.
எங்களுக்கு வேண்டியவற்றைத்
தேவரீர் செய்து வைத்தீர்.
நீர் ஆசார்யன், உம்மிடம்
விடை பெற்றுக்கொண்டு
தவம் செய்யக் காட்டுக்குப்
போகிறோம்" என்றனர்.
தந்தை,
"அருமைப் புதல்வர்களே!
நானோ தரித்ரப் ப்ராஹ்மணன்.
மணி போல் எனக்கு நான்கு
பிள்ளைகள் பிறந்து எல்லாக்
கல்விகளையும் கற்றபிறகு
என்னை விட்டு செல்வது
ந்யாயமா? எனக்கு பொருள்
முதலியவற்றை திரட்டி
கொடுப்பவர் யார்? புதல்வனுக்கு
பொருள் திரட்ட வயதான
பிறகு தந்தையை அநாதரித்து
போவது ந்யாயமா?" என்றான்.
இதை கேட்ட புதல்வர்கள்,
இரண்டு ச்லொகங்களை கூறி,
"காம்பில்யம் என்னும்
நாட்டின் அரசனான ப்ரஹ்மதத்தனிடம்
இந்த ச்லோகங்களை கூறுங்கள்.
அவன் பல பிரகாரமாக பகுமானங்களை
கொடுப்பான்" என்று சொல்லிக்
காட்டுக்கு சென்று யோகத்தில்
ஆழ்ந்தனர்.
ஓர் இரவு
ப்ரஹ்மதத்தன் மனைவியுடன்
படுத்திருந்தான். அப்போது
ஒரு பெண் எறும்புக்கும்
ஆண் எறும்புக்கும் கலகம்
ஏற்பட்டது. அவை ஒன்றுக்கொன்று
ரோஷத்தால் பேசிக்கொண்டிருந்தன.
ஆண் எறும்பு எவ்வளவு
சமாதான முறையில் சொல்லியும்
பெண் கேட்கவில்லை. இந்த
விவாத வார்த்தையைக் காதால்
கேட்டு ப்ரஹ்மதத்தன்
சிரித்தான். அவனது சிரிப்பைக்
கண்ட அவன் மனைவி தன்னைப்
பரிகசித்து சிரிக்கிறான்
என்று எண்ணி கோபம் கொண்டாள்.
இவன் எவ்வளவு சொல்லியும்
கேட்கவில்லை. "எறும்பின்
பாஷை உங்களுக்குத் தெரிவதாவது?"
என்று கேட்டான். அதிலிருந்து
உண்ணாவிரதத்தைத் தொடங்க
ஆரம்பித்தாள். ப்ரஹ்மதத்தனும்
மிகக் கோபம் கொண்டு
காட்டுக்கு சென்றான்.
அங்கு
அசரீரி வாக்கின் மூலமாகத்
தன்னை அணுகி ஒரு பிராமணன்
வருவதை அறிந்துகொண்டு
தன் ராஜ்யத்துக்குத்
திரும்பிச் சென்றான்.
அப்போது முன்சொன்ன
நான்கு சகோதரர்களின்
தந்தையான பிராமணன், 'இது
தான் சமயம்' என்று எண்ணி
புதல்வர்கள் சொன்ன ச்லோகங்களை
படித்தான். அந்த இரண்டு
ச்லோகங்கள் இவை -
ஸப்த
வ்யாதா தசார்ணேஷு ம்ருகா:
காலஞ்ஜரே கிரெள சக்ரவாகா:
சரத்வீபே ஹம்ஸா: ஸரஸி
மாநஸே || தேபி ஜாதா: குருக்ஷேத்ரே
ப்ராஹ்மணா வேதபாரகா:
| ப்ரஸ்திதா தீர்கமத்வாநம்
யூயம் கிமவஸீதத ||
"முதலில்
தசார்ண தேசத்தில் ஏழு
வேட்டுவர்களாகப் பிறந்தோம்.
காலஞ்ஜர மலையில் மிருகங்களாகப்
பிறந்தோம். பிறகு ஒரு
தீவில் சக்ரவாகப் பறவைகளாகப்
பிறந்தோம். பிறகு மானஸ
ஸரஸ்ஸில் ஹம்ஸங்களாகப்
பிறந்தோம். அதன் பிறகு
நாங்கள் நால்வர் குருக்ஷேத்திரத்தில்
அந்தணர்களாகப் பிறந்தோம்.
இப்பொழுது நற்கதியைப்
பெறப் புறப்பட்டோம்.
நீங்கள் மூவர் மாத்திரம்
ஏன் ராஜ்யத்தில் இருந்து
கவலைப்படுகிறீர்கள்?"
என்பது இதன் பொருள்.
மந்திரிகளுடன்
அவ்வரசன் இதைக் கேட்டதும்
பூர்வ ஜன்ம ஸ்மரணம் ஏற்பட்டு,
இந்த அந்தணனுக்குப் பெருத்த
சம்மானங்களளித்து, தன்
வயிற்றில் பிறந்த (விப்ராஜன்,
முன்பு ஹம்ஸத்தின் வயிற்றில்
பிறக்க ஆசைப்பட்டவன்)
விஷ்வக்ஸேனனுக்கு முடிசூட்டிவிட்டு,
இரண்டு மந்திரிகளுடன்,
நான்கு அந்தணர்கள் இருக்கும்
காட்டுக்குச் சென்று
அவர்களிடம் சேர்ந்தான்.
"பிறகு
எழுவரும் சேர்ந்து முன்போல்
யோகம் முதலிய நற்காரியங்களை
நன்கு நடத்தி நற்கதியைப்
பெற்றனர். இவ்விஷயத்தை
ஸனத்குமாரருடைய அருளினால்
உட்கண் பெற்ற நான் நேரில்
பார்ப்பது போல் பார்த்தேன்.
ஹிம்ஸையைச் செய்தாலும்
அதைப் பித்ருக்களுக்கு
நிவேதனம் செய்து ச்ராத்தத்தில்
விநியோக்ப்படுத்தினால்
காலக்கிரமத்தில் ஹிம்ஸை
செய்ததனால் வரும் பிறவிகள்
வந்தாலும் ச்ரேயஸ்ஸைக்
கொடுத்துவிடும்" என்று
மார்க்கண்டேயர் பிஷ்மருக்குச்
சொன்னார்.
இங்கு ஒரு
ஹாஸ்யமான கதை நடந்தது.
அதை எழுதுகிறோம். ஒரு
ஆஸ்திக குடும்பம் எப்பொழுதும்
வேதாத்யயனம் தான தர்மம்
யாகம் ஹோமம் பித்ருச்ராத்தம்
முதலியவைகளைச் செய்வது
வழக்கம். இவர்கள் தன்
புத்ரனுக்கு விவாஹம்
நடத்த மற்றொரு குடும்பபெண்ணை
தேடி முடித்தனர். அந்த
குடும்பம் அவ்வளவு ஆஸ்திக
குடும்பமல்ல. யாகம் ஹோமம்
ச்ராத்தம் முதலியவைகள்
என்ன என்பதே தெரியாது.
பெண் வாழ்க்கைக்காக புக்ககத்தில்
இருக்கும் ஸமயம். இவர்கள்
பித்ருச்ராத்தம் செய்ய
வேண்டிய காய் கறி சாமான்
இலை இவைகளை வாங்கிவந்தனர்.
இதைப்பார்த்து இவை எதற்காக
என்று இந்த பெண் கேட்டாள்.
இவர்களும் இது உனக்குத்
தெரியாதா? இதைக் கொண்டு
ச்ராத்தம் செய்தால் பித்ருக்கள்
புசித்து நமக்கு அநுக்ரஹம்
செய்வார்கள் என்று சொன்னார்கள்.
அன்றைய தினம் 2 ஸ்வாமிகள்
நிமந்தரணத்து வந்து நன்கு
புசித்து சென்றனர். இவர்
சாப்பிட்டதால் மேல் லோகத்தில்
உள்ள பித்ருக்கள் ஸந்தோஷம்
அடைவார்கள் என்று சொன்னதை
மனதில் வைத்துக் கொண்டாள்
இந்தப் பெண். ஆறு மாதங்கள்
கடந்தன. இந்த பெண்ணின்
புருஷன் வெளியூருக்குச்
சென்றிருந்து இரவு ஒரு
மணிக்கு வந்தான். இவன்
மிக அலுப்பால், தன் மனைவியிடம்
என்னை எழுப்பிவிடாதே
என்றான். மறு நாள் காலை
10 மணி. இவனோ எழுந்திருக்கவில்லை.
மாடியில் தூங்குகிறான்.
வயிறோ பசியால் வதைக்கிறது.
இந்தப் பெண் மாடியும்
கீழுமாக போய் வந்து
என்ன செய்வது என்று யோசித்தாள்.
வயிற்றில் ஒன்றுமில்லாமையையும்
பார்க்கிறாள். எழுப்ப
வேண்டாம் என்று சொன்னதையும்
யோசிக்கிறாள். இவளுக்கும்
பசி. கடைசியில் ஒன்று
தோன்றிற்று. யாராவது
வீதியில் செல்லுகிறார்களா
அந்தணர்கள் என பார்த்தாள்.
ஏதோ அதிர்ஷ்டம். இரண்டு
பேர்கள் தென்பட்டனர்கள்.
அவர்களை அழைத்து அமுது
செய்து வைத்து தக்ஷிணையும்
கொடுத்து, அப்பாடா என்று
சொல்லி தானும் சாப்பிட்டு
பாத்திரங்களை ச்சுத்தி
செய்து படுத்துக் கொண்டு
விட்டாள். நேரமானது. புருஷன்
எழுந்துவந்து ஸ்நானங்களைக்
கரமமாக முடித்து சாப்பிடவந்தான்.
ஒன்றுமே இல்லை. இவன் மனைவியைக்
கேட்க "இப்பொழுதுதானே
உங்களை உத்தேசித்து இருவர்க்கு
அன்னமிட்டேன். பசி அடங்கவில்லையா"
என்று கேட்டாள். இவனுக்குக்
கோபம் அதிகம். அவர்கள்
யாரோ சாப்பிட்டால் எனக்கு
எப்படி பசி அடங்கும்
என்று சீறினான். இவளோ
மேல் லோகத்திலிருப்பவர்களுக்காக
இங்கு இருப்பவருக்கு
அன்னமிட்டால் பசியடங்கும்
என்று சொன்னீர்களே.
இப்பொழுது மாடியில்
உள்ள உங்களுக்குக்கூடவா
பசி அடங்கவில்லை என்றாள்
இந்த பெண். பார்த்தான்
யோசித்தான். உயிருடன்
உள்ள என்னை உத்தேசித்து
ச்ராத்தம் செய்துவிட்டாயா
என்றான்.
ஜாபாலி என்னும்
முனிவர் இம்மாதிரிதான்
இராமனிடம் கேட்டான்.
'அஷ்டகை பித்ருச்ராத்தங்கள்
இவை யெல்லாம் ப்ரயோஜனமற்றவை.
இறந்து போனவன் இங்கு
எதை சாப்பிடப் போகிறான்.
இவையெல்லாம் ஜனங்களுக்கு
உபத்ரவம்தான் என்று'.
இராமபிரான்
இவர் சொன்னதை க்ரூரமாக
கண்டித்து பதில் கூறியுள்ளார்.
இராமாயணத்தில் இது ப்ரஸித்தம்.
நாம் ச்ராத்தம் செய்வதால்,
அவர்கள் வேறு பிறவி எடுத்து
சஞ்சரித்திருந்தாலும்,
பித்ருதேவதைகள் ஸந்தோஷமடைந்து
அன்றைதினம் எதிர்பாராத
வகையில் சில லாபங்கள்
அவர்களுக்கு கிடைக்குமாறு
செய்வார்கள். நாம் முறைப்படி
மணி ஆர்டர் முதலியவைகளைச்
செய்தால் அது சரியாக
விலாஸதாரர்களுக்கு கிடைக்கும்.
முறைதவறினால் கிடைப்பது
அரிது. ஆனால் கொடுக்கும்
ரூபாயை அப்படியேவா கொடுக்கிறான்.
வேறு ரூபாய்களைத்தானே.
அதே போல் வேறு வகையில்
இவர்களுக்கு சேரும்படி
பித்ருதேவதைகள் செய்கின்றன.
நாம் செய்யும் யாகங்களால்
தேவதைகள் அல்லது பகவான்
த்ருப்தி அடைந்து பயன்
கொடுப்பதுபோல் இங்கும்
பகவத் ஸங்கல்பத்தால்
நடைபெறுகிறது. இதற்காக
தபம் புரிந்து வரம் வாங்கிக்
கொண்ட பித்ருதேவதைகள்
விஸ்வாதிகள் சபித்துவிடுகிறார்கள்
என்பதையும் அறியவேண்டும்.
நாம்
ஒருவனுக்கு உதவி செய்தால்
அவனே நமக்கு உதவி செய்வான்
என்பதில்லை. பகவான் ஸந்தோஷமடைந்து
மற்றவர் மூலமாகவும் செய்து
தருவதுண்டு. இதை எல்லாவற்றையும்
கருதிதான் நாம் நற்கார்யங்களை
செய்கிறோம்.
*****
|