நடப்பது நடந்தே தீரும்
பேயாழ்வார்
அவதார ஸ்தலமான மயிலையில்
பத்மாவதி நாயிகா ஸமேதரான
ஸ்ரீநிவாஸப் பெருமாள்
ஸந்நிதி ஒன்றுள்ளது.
அதில் வேங்கடேசப் பெருமாள்
எழுந்தருளியிருந்து
அனைவரையும் அருள் பாலித்துக்
கொண்டிருக்கிறார். இந்த
ஸ்ரீநிவாஸப் பெருமாள்
ஸந்நிதி ஸ்ரீவேதாந்த
தேசிகருடைய தேவஸ்தானத்துக்கு
உள்பட்டது. எம்பெருமான்
ஸர்வ ஸ்வதந்த்ரன். இதை
"பதிம் விச்வஸ்ய ஆத்மேச்வரம்"
என்று வேதம் பலமுறை காட்டுகிறது.
ஆயினும் அவன் பக்தர்களுக்கும்
ஆசார்யர்களுக்கும் உள்ளடங்கினவன்
என்றும் ப்ரமாணங்கள்
கூறுகின்றன. இவ்விஷயம்
உண்மைதான் என்பதற்கு
ஸாக்ஷியாக இக்கோயில்
அமைந்துள்ளது. இது ஜனங்களுக்கு
நன்கு விளங்கும் வகையில்
ஸ்ரீநிவாஸப் பெருமாள்
நம் ஆசார்ய ஸார்வபெளமனான
வேதாந்த தேசிகனுக்கு
அதீனமான வகையில் அந்த
ஆசார்யனின் அநுக்ரஹம்
பெற்ற பக்தர்கள் அனைவர்க்கும்
ஸகலாபீஷ்டபலனையும் கொடுத்துக்
கொண்டு எழுந்தருளியிருக்கிறான்.
இவ்வாலயத்தில்
ஆராதனங்கள் உரிய காலங்களில்
பரமைகாந்திகளான அர்ச்சகர்களைக்
கொண்டு நன்கு நடத்திவருகின்றனர்.
மூன்று காலத்திலும் பலவேதவ்யுத்பன்னர்களைக்
கொண்டு வேதபாராயணமும்
செவ்வனே நடந்து வருகிறது.
மற்ற கோயில்களில் இக்கால
ரீதியில் பல அசுத்திகள்
தவிர்க்க முடியாமல் இருந்தாலும்
இவ்வாலயத்தில் ஒருவிதமான
குற்றமும் இல்லாமல்,
பரமைகாந்திகள் கூட தீர்த்த
ப்ரஸாதங்களை ஸ்வீகரிக்கும்
வகையில் ஆராதன கைங்கர்யம்
நடந்து வருவது விஸ்மயாவஹம்.
இந்த ஸமயம் வேதபாராயணத்தின்
நூறாவது ஆண்டு விழாவில்
மணம் மிக்க ஒரு மலர் வெளிவந்து
அனைவரையும் ஆனந்த ஸாகரத்தில்
மூழ்கச் செய்கிறது. இதை
பகவான் செய்யவேண்டும்
என விரும்பினான் போலும்.
அவனது விருப்பத்தை யாரால்தடுக்க
முடியும்.
நம் அனைவர்க்கும்
யஜமாநனான ஸர்வேச்வரன்
நம் விஷயத்தில் எதை எப்படி
நடத்த வேண்டும் என்று
நினைக்கிறானோ அதை அப்படியே
நடத்த சக்தி பெற்றவன்.
அவனது நினைவை ஒருவராலும்
ஒரு பொழுதும் மாற்ற
முடியாது. அவன் நம்முடைய
ஹ்ருதயத்தில் புகுந்து
கொண்டு அவனது விருப்பத்தை
நாம் மாற்ற நினைத்தாலும்
மாற்ற முடியாமல் செய்துவைக்கும்
ஆற்றலுடையவன்.
ஈச்வரஸ்ஸர்வபூதாநாம்
ஹ்ருத்தேசே அர்ஜுந ! திஷ்டதி
| ப்ராமயந் ஸர்வபூதாநி
யந்த்ராரூடாநி மாயயா
||
என்று கீதை கூறுகிறது.
எனவே ஈச்வரன் அந்தர்யாமி
ஆனபடியால் நம் உள்ளே
இருந்து நம்மை ஆட்டி
வைப்பவன். ஆகையால், அவனது
விருப்பம் ஒரு நாளும்
பழுதாக மாட்டாது. அவனை
ஸத்யஸங்கல்பன் என்று
வேதாந்தங்கள் முறையிடுகின்றன.
நாம் எல்லாவிதமான செளகரியங்களை
பெற்றிருந்தபோதிலும்
பெரிய அரசனாக இருந்தபோதிலும்
ஒரு காரியத்தை செய்யவேண்டும்
என்று நினைத்தால் அதை
அப்படியே செய்து முடித்துவிடுகிறோம்
என்று சொல்ல முடியாது.
சில வேலைகளை நினைத்தபடி
செய்து முடிக்கிறோம்.
சிலவற்றை செய்ய முடியாமல்
கைவிட்டுவிடுகிறோம்.
பகவான் நம்மைப் போன்றவன்
அல்லன். எந்த எந்த சமயத்தில்
எதை எதை நடத்த நினைக்கிறானோ
அதை அதை அவ்வப்போது
முடித்துவிடுகிறான்.
அகர்த்தும் அகிலம்
கர்த்தும் அந்யதாகர்த்துமப்யலம்
| ஸங்கல்பஸசிவ: காலே சக்திர்
வே லேச:ஸ: தாவக: ||
என்றார்
வேதாந்த தேசிகன். ஆகையால்,
பகவான் ஒரு விஷயத்தில்
விருப்பம் கொண்டு நம்
தலையில் ஒரு லிபியை எழுதியிருந்தால்
அந்த விதி பழுதாகாமல்
பலித்தே தீரும்.
ராமன்
காட்டுக்கு சென்ற போது
இளைய பெருமாள் மிக்க
சினம் கொண்டு தகப்பனான
தசரதனிடத்திலும் தாயான
கைகேயினிடத்திலும் தமையனான
பரதனிடத்திலும் பலவகை
அவதூறுகளைச் சொன்னான்.
இதைக் கேட்ட ராமன் "இது
தந்தை, தாய், பரதன் இவர்களது
பிழையினால் ஏற்பட்டது
அல்ல. நம் விதிபயன் இது.
நீ யாரிடத்திலும் கோபம்
கொள்ளாதே. அவரவர் விதிப்படிதான்
எல்லாம் நடைபெறும். நாம்
காட்டுக்கு சென்று அங்கே
பல துன்பங்களை அநுபவிக்க
வேண்டும் என்று பகவான்
நினைத்திருக்கிறான்.
முற்பிறவியில் நாம் செய்த
பாவ புண்யங்களை அநுபவித்துதானே
ஆகவேண்டும். அதன்படி
பகவான் ஏற்படுத்திய விதி
இது" என்றான். இந்த கருத்தை
கம்பநாட்டு ஆழ்வார் அழகாக
பாசுரம் இட்டு காட்டியிருக்கிறார்.
அந்த பாசுரம் இதோ.
நதியின்
பிழையன்று நறும் புணலின்மை
அற்றே பதியின்
பிழையன்று பயந்து நமைம்
புரத்தால் ! மதியின் பிழையன்று
மகன் பிழையன்று மைந்த
! விதியின் பிழை - நீ இதற்கு
என் கொல் வெகுண்டது?
என்றான்.
"பரதனுடைய கட்சியில்
இருந்துகொண்டு அவனுக்கு
நன்மையே செய்யவேண்டும்
என்று எவர் விரும்புகிறார்களோ
அவர்கள் அனைவரையுமே கொன்றுவிடுகிறேன்,
ஐயோ பாவம் ! நாம் யாருக்கும்
தீமை செய்யக் கூடாது.
எல்லோ விஷயத்திலும்
சாதுவாகவே இருக்கவேண்டும்
என எவன் நினைக்கிறானோ
அவன் எல்லா துன்பங்களுக்கும்
ஆளாவான். கைகேயினால்
தூண்டப்பட்ட துஷ்டரான
தன் தகப்பனாரை கம்பத்தில்
கட்டவேண்டும். கொல்லவும்
வேண்டும். பகைவர்களை
வெல்லும் திறமையைப் பெற்ற
நீரும் நானும் இருக்கும்போது
பரதனுக்கு அபிஷேகம் செய்து
வைக்க யாருக்குத்தான்
சக்தி உள்ளது. இதைப் பார்த்துவிடுவோம்"
என்று சீறி விழுந்த லக்ஷ்மணனைப்
பார்த்து ராமர் கூறுகிறார்
:-
கைகேய்யா: ப்ரதிபத்திர்ஹி
கதம் ஸ்யாத் மம பீடநே
? யதி பாவோ ந தைவோயம்
க்ருதாந்தவிஹிதோ பவேத்
|| (அ.22.16) கஸ்ச தைவேந ஸெளமித்ரே
! யோத்துமுத்ஸஹதே புமாந்
| யஸ்ய ந க்ரஹணம் கிஞ்சித்
கர்மணோந்யத்ர த்ருச்யதே
|| (அ.22.21) ருஷயோப்யுக்ரதபஸோ
தைவேனாபி ப்ரபீடிதா:
| உத்ஸ்ருஜ்ய நியமாந்
தீவ்ராந் ப்ரச்யந்தே
காமமந்யுபி:|| (அ.22.23)
"லக்ஷ்மணா!
நான் ஒன்று சொல்லுகிறேன்.
பொறுமையுடன் கேள். பரதனின்
தாயான கைகேயி என்னிடத்தில்
எவ்வளவு அன்பு செலுத்தியிருந்தாள்
என்பது உனக்குத் தெரிந்த
விஷயமே. பரதனைவிட என்னிடத்திலன்றோ
ஆசையை அதிகமாகக் காட்டியிருந்தாள்.
நானும் அவளிடத்தில் இப்போதும்
எந்த விதத்திலும் கோபத்துக்குக்
காரணமான செயலைச் செய்யவில்லை.
அப்படியிருக்க என்னைக்
காட்டிற்கு அனுப்பித்
துன்புறச் செய்ய வேண்டும்
என்ற எண்ணம் எப்படி உண்டாகும்?
இது தெய்வ ஸங்கல்பத்தினால்
உண்டானது. நம் விதியின்
பயன் என்றன்றோ கருத
வேண்டும்? தெய்வத்துடன்
யார்தான் போரிட முடியும்?
தெய்வம் என்பது நம் எதிரில்
நின்று பதில் சொல்லுகிறதா
நம் கேள்விகளுக்கு? அதைக்
கேட்டால் பதில் சொல்வதாக
இருந்தாலும், "உன் வினைப்பயன்.
நான் என்ன செய்ய முடியும்?"
என்று சொல்லிவிடுகிறது.
காட்டில் எத்தனை மஹரிஷிகள்
தவம் புரிகின்றார்கள்?
அவர்கள் வெகுளி எனும்
கோபத்தையும் காமம் எனும்
ஆசையையும் ஜயித்துத்
தவம் புரிந்து, உயர்ந்த
பதவியைப் பெற வேண்டும்
என்ற விருப்பமுள்ளவர்கள்.
காமமும் கோபமும் தம்
தவத்துக்கு இடையூறு என்பதை
அவர்கள் நன்கு அறிந்தவர்களே.
ஆயினும் கடுந்தவம் புரியும்போது
மேநகை, ரம்பை முதலிய தேவமாதர்களால்
பீடிக்கப்பட்டுத் தவத்திலிருந்து
நழுவி விடுகின்றனர்.
கோபத்துக்கும் ஆளாகின்றனர்.
இதற்கு விச்வாமித்ரரையே
பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இப்படி மஹான்களான முனிவர்கள்
காம, கோபங்களுக்கு வசமாகிறார்களே!
இதற்கு என்ன காரணம்? தெய்வம்
தான் காரணம். நம்மால்
என்ன செய்ய முடியும்?
கடவுள் காட்டிய வழியில்தான்
செல்ல முடியும். அந்தக்
கடவுளை எதிர்த்து போரிட
நமக்கு என்ன சக்தி இருக்கிறது?"
என்று ராமர் பதிலளித்தார்.
ஆகையால்
பகவான் எப்படி நினைக்கிறானோ
அதன்படிதான் நடக்குமே
தவிர அதை எதிர்த்து நம்
விருப்பப்படி எந்தச்
செயலையும் செய்ய முடியாது.
இதற்குக் கர்ண பரம்பரையாகக்
கேட்டதும், புராணத்தில்
உள்ளதுமான ஒரு கதையை
இங்கு உதாஹரணமாக வரைகிறோம்.
நாரதர்
ப்ரஹ்மாவின் புதல்வர்.
காநசாஸ்த்ரத்தில் மிக்க
தேர்ச்சி பெற்றவர். வீணையை
எடுத்துக் கொண்டு பகவானின்
குணங்களை வாசித்துக்
கொண்டு எல்லா இடங்களிலும்
ஸஞ்சரிப்பவர். இவரைப்
போலத் தும்புரு என்பவரும்
வீணை வாசிப்பதில் மிக்க
திறமையுள்ளவர். தும்புரு
நாரதர் என்று இவர்களைச்
சேர்த்துச் சொல்வது
வழக்கம்.
ஆயர்பாடியில்
கண்ணன் வளர்ந்தபோது
ஒரு ஸமயம் காட்டில் வேணுகாநம்
செய்ய ஆரம்பித்தானாம்.
அந்த காநத்தைக் கேட்டு
அனைவருமே மதிமயங்கி மெய்மறந்து
திகைத்தனர். அப்பொழுது
எல்லாப் பாடகர்களிலும்
மேன்மை பெற்ற தும்புருவும்,
நாரதரும் கூடத் தங்களது
வீணையைக் கீழே போட்டுவிட்டு
மெய்சிலிர்த்து அப்படியே
ஆழ்ந்து விட்டனராம்.
................
மது ஸூதநன் வாயில் குழலினோசை
செவியைப் பற்றி, வாங்க நன்னரம்புடைய
தும்புருவோடு நாரதனும்
தம் தம் வீணை மறந்து, கிந்நர
மிதுநங்களும் தம் தம்
கிந்நரம் தொடுகிலோமென்றனரே.(பெ.
தி. 3.6.5)
என்று பெரியாழ்வார்
அருளிச் செய்தார்.
இப்படி
காநப் ப்ரியரும், காந
ப்ரவீணருமான நாரதரிடத்தில்
ஒரு சிஷ்யன் இந்தக் கல்வியைப்
பயில எண்ணி அவரை ஆசார்யராக
வரித்தான். நாரதர் அவனிடத்தில்
க்ருபை கூர்ந்து காநசாஸ்த்ரத்தை
நன்றாகக் கற்றுக் கொடுத்தார்.
ஸாதாரணமாக, பாட வேண்டுமென்ற
ஆசையுள்ளவர்கள் எப்போதும்
பாடல்களைப் பாடிக் கொண்டே
இருக்க வேண்டும். ராகங்களை
ஆலாபநம் செய்து கொண்டே
இருக்க வேண்டும். எங்காவது
ஸங்கீத வித்வான் பாடும்பொழுது
அந்தக் கச்சேரிக்குச்
சென்று ஊக்கத்துடன் கவனித்துக்
கொண்டும் இருக்க வேண்டும்.
இப்படிச் செய்தால்தான்
காநசாஸ்த்ரத்தில் தேர்ச்சி
பெற முடியும். நாரத முநிவர்
தமக்கு மிகவும் அந்தரங்கனான
இந்த சிஷ்யனுக்கு ஸங்கீதம்
நன்றாகக் கற்றுக் கொடுத்து
வந்தார். அத்துடன் ஸங்கீதக்
கச்சேரி எங்கெங்கு நடக்குமோ
அங்கங்கு தம்முடன் அந்த
சிஷ்யனையும் அழைத்துக்
கொண்டு போவார். அந்தந்த
ஸமயங்களில் ராகங்களின்
ஆலாபநங்களைச் சுட்டிக்
காட்டிச் சொல்லிக் கொடுப்பார்.
இது வழக்கம்.
ஒரு ஸமயம்
தேவ லோகத்தில் ஸங்கீதக்
கச்சேரி நடந்தது. அங்கு
'ஹாஹா, ஹீஹீ என்று இரண்டு
கந்தர்வர்கள் பாட ஆரம்பித்தனர்.
இவர்களின் ஸங்கீதக் கச்சேரி
நடக்கிறது என்றாலே ஜனங்கள்
சூழ்ந்து விடுவார்கள்.
கேட்பவர் மெய்மறந்தும்
விடுவார்கள். இப்படிப்
பெருமை பெற்ற இவர்களது
கச்சேரி ஆரம்பித்து விட்டால்,
தேவமாந ரீதியில் ஆயிரம்
வருஷங்களுக்கு மேல் நடைபெறும்.
இந்த ஸங்கீதத்தைக் கேட்க
நாரதரும் தம் சீடனை அழைத்துக்
கொண்டு சென்றிருந்தார்.
தம் அருகிலேயே அவனை உட்கார
வைத்துச் சில விஷயங்களைச்
சொல்லிக் கொடுத்து
வந்தார்.
இந்தக் கச்சேரியைக்
கேட்க எல்லா தேவர்களும்
பல முநிவர்களும் திரண்டிருந்தனர்.
வருணன், யமன் அக்நி முதலியவர்களும்
ஆநந்த பரவசர்களாய் காநாமுதத்தைச்
செவியால் பருகிக் கொண்டிருந்தனர்.
இம்மாதிரி இருந்த போது
யமன் நாரதமுநிவரின் அருகில்
இருந்த அவரது சிஷ்யனைப்
பார்த்துப் பார்த்துச்
சிரித்துக் கொண்டிருந்தான்.
யமனுடைய
புன்னகையைக் கண்ட சிஷ்யன்,
"காரணமின்றியே யமன் என்னைப்
பார்த்து ஏன் சிரிக்க
வேண்டும்? ஒரு தடவை அல்லவே.
பல தடவை சிரிக்கிறானே
! ஏதோ விசேஷம் இருக்க
வேண்டும். நம் ஆசிரியரான
நாரதர் நமக்கு அவ்வப்போது
ஏதோ சொல்லிக் கொடுக்கிறாரே.
அதைப் பற்றிப் பரிஹாஸமாகப்
புன் முறுவல் செய்ய அவச்யமில்லை.
இதற்காகச் சிரிக்க வேண்டுமானால்
வருணன், அக்நி, குபேரன்
ஆகிய அனைவருமே சிரிக்க
வேண்டும். யமன் மாத்ரம்
இப்பொழுது புன்னகை செய்கிறான்.
ஆகையால் என் ஆயுளைக்
கவர எண்ணித்தான் நகைக்க
வேண்டும்" என்று கவலை
கொண்டான்.
உடனடியாக
அவன் தன் ஆசார்யரான நாரதரிடமும்
இதைத் தெரிவித்தான்.
நாரதர் தம் சீடனுக்கு
ஏதாவது ஆபத்து விளையுமோ
என பயந்தார். யமநிடமிருந்து
இவனை மீட்க என்ன வழி செய்யலாம்
என்று யோசித்தார். "உயிரைக்
கவரும் இந்த யமனுக்குத்
தெரியாமலிருக்குமிடத்தில்
இவனைக் கொண்டு வைக்க
வேண்டும்" என்று நினைத்தார்.
பிறகு தமது யோக மாயையினால்
அவனை யாருக்கும் தெரியாதபடி
ஐம்பது கோடி காதம் தூரத்திலுள்ள
ஒரு மலையின் சிறிய குஹை
போன்ற பொந்தில் வைத்து
விட்டார். சிஷ்யன் அங்கு
இருந்ததையோ சென்றதையோ
யாருமே அறியவில்லை.
அரை
மணி நேரம் ஆயிற்று. பிறகு
யமன் நாரதரையே பார்த்துப்
புன்னகை புரிய ஆரம்பித்தான்.
பல தடவை அவரைப் பார்த்து
நகைத்தான். நாரதர், "நம்
சீடனை எங்கோ ஓரிடத்தில்
கொண்டுபோய் வைத்துவிட்டோம்.
இனி யமன் என்ன செய்ய முடியும்?
அவன் எதை யோசித்துக்
கொண்டிருப்பான்? என்று
எண்ணி, அவனைப் பல தடவை
பார்த்தார். அவர் பார்த்த
பொழுதெல்லாம் அவன் சிரித்துக்
கொண்டே இருந்தான். இதை
அவர் கவனித்துக் "யமன்
நம்மிடத்திலும் ஏதோ
கெட்ட அபிப்ராயத்துடன்
சிரிக்கிறான். இவனை நேராகவே
விசாரித்துவிட வேண்டும்"
என எண்ணினார்.
உடனே நாரதர்
அவனைப் பார்த்து, "தர்ம
ராஜனே! முன்பு என் சிஷ்யனைப்
பார்த்துச் சிரித்துச்
கொண்டிருந்தாய். இப்பொழுது
என்னையே நேராகப் பார்த்துச்
சிரிக்கிறாய். என்னிடத்திலேயே
உன் கைவரிசையைக் காட்ட
விரும்புகிறாயா? இதுதான்
உன்னால் முடியுமா?" என்று
கேட்டார். இதைக் கேட்ட
யமன் மேலும் சிரிக்க
ஆரம்பித்தான்.
"நாரத
முநிவரே! நான் உம்மையோ,
உமது சீடனையோ ஒரு கை
பார்த்துவிட வேண்டும்
என்று நகைக்கவில்லை.
முதலில் உமது சீடனைப்பார்த்துச்
சிரித்ததற்குக் காரணம்
கூறகிறேன். உமது சீடன்
ஒரு மணி அவகாசத்திற்கு
மேல் ஜீவிக்க முடியாது.
அதற்குள் இறந்து போக
வேண்டும். இங்கிருந்து
வெகு தூரத்திலுள்ள ஒரு
மலையின் குஹையில் அவன்
இருந்து அவன் தலைமேல்
ஒரு பெரிய பாராங்கல்
விழுந்து இறக்க வேண்டும்
என்பது அவன் தலைவிதி.
இது எப்படி நடைபெழ்ம்?
அவனோ இங்கே கச்சேரியில்
மூழ்கிக் கிடக்கிறான்.
இதை விட்டுப் போகவும்
இசைய மாட்டான். கச்சேரி
முடிவதற்கோ பல வருஷங்கள்
உள்ளன. அவன் அந்த மலைக்கு
நடந்து செல்வதும் முடியாத
கார்யம். இப்படி இருக்க
அவன் தலையில் எழுதியுள்ள
விதி எப்படிப் பலிக்கும்
என்று விதியை நினைத்து
அவனைப் பார்த்துச் சிரித்தேன்.
உம்மைப் பார்த்து இப்போது
அடிக்கடி நகைத்ததற்குக்
காரணத்தையும் கூறுகிறேன்.
கேளும். பகவான் ஒருவனுக்கு
நன்மையையோ, தீமையையோ
செய்ய வேண்டும் என்று
நினைத்தால், அந்த பகவத்ஸங்கல்பம்
ஒருக்காலும் வீணாக ஆகமாட்டாது.
கட்டாயம் பலித்துவிடும்.
நடக்க வேண்டியது நடந்தே
தீரும். அதற்கு பல இடையூறுகள்
இருந்த போதிலும் தான்
நினைத்ததை நடத்துவதற்கு
வேண்டிய ஏற்பாடுகளைப்
பகவான் செய்து வைத்து
விடுவான். இவன் விதி மலைக்
குஹையில் பாராங்கல்லால்
அடிபட்டு இறக்க வேண்டும்
என்று இருக்கிறபடியால்
அதற்கு வேண்டிய வசதிகளை
ஆசார்யரான உமது மூலமாகவே
செய்துவிட்டான். அவனது
விதியை ஜயித்துவிட வேண்டும்
என்று எண்ணிய நீர் ஏதோ
சூழ்ச்சியைச் செய்தீரே,
அது அவனை விதிக்கு உள்ளாகும்படி
முடித்துவிட்டதே! தேவரீர்
தாமே இதற்கு காரணமானீர்
என்று உம்மைப் பார்த்துச்
சிரித்தேன்" என்று பதிலளித்தான்.
இப்படி
இவர்கள் பேசிக் கொண்டிருந்த
போது அந்த மலை குஹையிலுள்ள
பெருங்கல் படபட வென்று
சிஷ்யன் தலையில் விழுந்தது.
அந்த ஒலியை இருவரும்
கேட்டனர். நாரதரும், "நம்மால்
செய்ய இயன்றது எதுவுமில்லை.
எல்லாம் பகவானின் ஸங்கல்பத்தால்
நடைபெறுகிறது" என்று
நினைத்து ஆச்சர்யப்பட்டார்.
இவ்விதமே
பகவத் ஸங்கல்பத்தால்
நாம் எதிர்பார்க்காத
விதத்தில் பல பல நன்மைகளும்
உண்டாகும் என்பதிலும்
ஸந்தேஹமில்லை. அவரவர்கள்
அநுபவ பூர்வமாக இதை அறியலாம்.
அறிந்துமிருப்பீர்கள்.
*****
|