|
|
Enter subhead content here
|
|
உண்மையை யோசித்துப்
பார்
எத்தனையோ பத்திரிக்கைகள்
வெளிவருகின்றன. சிற்சில
கதைகளையும் ஹாஸ்யம் ததும்பும்
பற்பல விஷயங்களையும்
வெளியாக்கும் பத்திரிக்கைகள்
சில. வேதாந்த சாஸ்திரங்களில்
கூறியுள்ள அபூர்வமான
அர்த்தங்களை வெளிப்படுத்துகிறவை
சில. ராமாயணம், பாரதம்
முதலிய இதிகாச புராணங்களில்
வந்துள்ள கதைகளை வெளிப்படுத்தி
மக்களுக்கு நன்மையைப்
போதிக்கும் பத்திரிக்கைகள்
சில. வேதாந்த சாஸ்திரங்களிலும்
புராணாதிகளிலும் சொன்னவற்றையே
எளிய நடையில் பண்டிதரும்
பாமரரும் பாலர்களும்
நன்றாக அறியும் வண்ணம்
விநோதமான வகையில் போதிக்கின்றன
சில உயர்ந்த பத்திரிக்கைகள்.
இப்படி பலபத்திரிக்கைகளைப்
படித்து விஷயத்தை நன்கு
அறிந்த மக்களுக்கு உண்மையை
புதிதாக ஒன்றும் உரைக்க
வேண்டாம். எல்லாருக்கும்
நான் சொல்லப்போகிற
விஷயம் நன்கு தெரிந்ததே.
ஆயினும் வேதங்களிலும்
உபநிஷத்துக்களிலும்
ராமாயண பாரதாதிகளிலும்
கூறப்படும் அர்த்தங்கள்
பற்பல. அவற்றுள் மிகவும்
ஸாரமான ஓர் அர்த்த விசேஷத்தை
இங்கு இந்த வ்யாஸம் மூலமாக
வெளிப்படுத்த முன்வந்துள்ளேன்.
இதைப் படித்த பிறகு, இவ்
விஷயம் உண்மைதான்; நமக்கு
தெரிந்ததுதான்; ஆயினும்
நன்கு பராமர்சித்து இதற்கு
முன்பு அறிந்துகொள்ள
வில்லை. இப்போதுதான்
இவ்வுண்மையை நன்கு அறிந்தோம்
என்பது எல்லோர்க்கும்
புலப்படும்.
மேற்கூறிய
தலைப்பைக் கண்டதும் எல்லோர்க்கும்
ஓர் ஐயம் உண்டாகலாம்,
அதாவது ஒருவன் பிழைகளைச்
செய்திருந்தால் அவனைத்
திருத்துகிறவர்கள் நல்ல
விஷயங்களை எடுத்துச்
சொல்லி, "நீ செய்வது பிழை,
அப்படி அதைச் செய்யக்
கூடாது. இது நன்மையைத்
தராது. நீயே இவ்விஷயத்தில்
உண்மையை யோசித்துப்
பார்" என்று சொல்வதுண்டு.
அவனும் தான் செய்வது
குற்றம்தான், இது வாஸ்தவம்
என்றெல்லாம் யோசித்துச்
சீர்திருத்தம் அடைவான்.
அதுபோல நாம் எனன பிழை
செய்திருக்கிறோம், அது
எப்படித் தவறாயிற்று,
இதில் என்ன உண்மையை யோசிக்க
வேண்டும் என்று எல்லோருக்கும்
சந்தேகம் ஏற்படலாம்.
ஆம், படிக்காத பாமரருக்குச்
சாதாரணமாக இந்தப் பிழை
உண்டாகவே கூடும். படித்தவருக்கும்
மின்னொளிபோல், இந்த
பிழையைத் திருத்துவதற்கு
க்ஜானம் உண்டாகி மறைந்து
போய்விடும். இது உலகத்தில்
ஏற்படக் கூடியதே; அந்தப்
பிழை என்ன ?
கேண்மின்.
பிறருடைய வீட்டிற்குச்
சென்று அவரது பொருளை
அபகரிப்பது, எந்த எம்பெருமான்
நமக்கு எல்லா வித வசதிகளையும்
கொடுக்கிறானோ, அவனது
கோயிலுக்குச் சென்று
நடுப்பகலில் அவனது பொருளைக்
கொள்ளையடிப்பது, பொய்
பேசுவது, பிறருடைய பெண்களைக்
கெடுப்பது, கொலை செய்வது
முதலிய எத்தனையோ பிழைகள்
இருக்கின்றன. இந்தப்
பிழைகளை இங்கு எடுத்துக்
கூற வரவில்லை. ஒருவன்
மனைவி மக்கள் அரண்மனை
முதலிய எல்லாச் செல்வங்களுடனும்
இருக்கிறான். அவன், 'இவள்
என் மனைவி, இவன் என் மகன்,
இவன் என் பேரன், இது என்
வீடு' என்றெல்லாம் எண்ணம்
கொள்கிறானே, இதுதான்
இங்கு பெரும் பிழை. மேற்கூறிய
திருட்டுத்தனங்கள் முதலிய
பிழைகளுக்குச் சாமான்யமான
சிறையில் சிறை ஏற்படுகிறது.
இந்தப் பெரும் பிழை செய்பவனுக்குச்
ஸம்ஸாரமாகிற பெரிய சிறையே
வாய்க்கிறது.
உண்மையில்
ஆழ்ந்து கவனித்தால் புருஷனுக்கும்
மனைவிக்கும் என்ன ஸம்பந்தம்
? இவன் யாரோ; அவள் யாரோ.
தகப்பனுக்கும் புதல்வனுக்கும்தான்
என்ன சம்பந்தம் உள்ளது
? பெரிய அரண்மனையில் வசிப்பதனாலேயே
அதற்கும் இவனுக்கும்
என்ன ஸம்பந்தம் உள்ளது
? ஒருவருக்கொருவர் ஒரு
விதச் ஸம்பந்தமும் பெறுவதில்லை.
ஏதோ இவர்கள் செய்த வினை
காரணமாகக் குறிப்பிட்ட
காலங்களில் பரஸ்பர ஸம்பந்தம்
இருப்பதுபோல் தோற்றத்தைக்
கடவுள் செய்து வைக்கிறான்.
இது தவிர வேறு என்ன இதில்
இருக்கிறது ?
சென்னையிலிருந்து
பம்பாய் ரெயிலில் பலர்
ஏறியிருக்கிறார்கள்.
அதில் ஒரு பெட்டியில்
நுாற்றுக்கணக்கான மனிதர்கள்
உட்கார்ந்து போகிறார்கள்.
சிலர் பம்பாய்க்குச்
செல்லுவர். மற்றும் சிலர்
பூனா இன்னும் முன்பான
பல இடங்களுக்குச் செல்வர்.
சிலர் நடுவில் சில ஸ்டேஷன்களில்
ஏறி அமர்வர். வண்டி சிறிது
தூரம் சென்றதும் பெட்டியில்
உட்கார்ந்த சிலர் மிக்க
ஸ்நேகத்தைப் பாராட்டி
வருவர். இதற்கு முன்பு
ஒருவரையொருவர் பார்த்ததில்லை.
சில ஸ்டேஷன்களைக் கடந்ததும்
திடீரென்று சிலர் இறங்கிவிடுவார்கள்.
இதற்குப் பிறகும் ஒருவரையொருவர்
பார்க்கப் போவதில்லை.
பணத்தைக் கொடுத்து எவ்வளவு
துாரம் செல்லவேண்டும்
என்று டிக்கெட் வாங்கியுள்ளார்களோ
அவ்வளவு வரையில்தான்
ஒருவருவருக்கொருவர்
ஒருவிதமான ஸம்பந்தம்
அடைகிறார்கள். பிறகு
வண்டியில் உட்கார்ந்திருப்பவன்
யாரோ ! இறங்கியிருப்பவன்
யாரோ ! அவ்வளவுதான். அதுபோல்
வினையாகிற பணத்தைக் கொடுத்து
நாம் உடலைச் சம்பாதித்திருப்பதனால்
அந்த வினை உள்ள வரையில்தான்
ஸம்பந்தம். அதுபோனதும்
இவன் யார் என்றே தெரியாது.
பஸ்
முதலிய வண்டிகளில் பிரயாணம்
செய்வதற்காகப் பஸ் நிலையங்களில்
காத்துக்கொண்டிருக்கிறோமே,
நம்முடன் அந்த நிலையங்களில்
காத்துக்கொண்டிருக்கிறார்களே,
நம்முடன் அந்த நிலையங்களில்
பேச்சாடி உறவைப் பலர்
கொண்டாடுகிறார்களே,
அப்பொழுது இவர்களுக்கும்
பரஸ்பரம் உண்டாகும் சந்தோஷத்திற்கு
அளவே இல்லை. அவரவர் போகும்
பஸ் வந்ததும் அவரவர்கள்
ஏறிக்கொண்டு ஒருவரையொருவர்
மறந்து அவர்கள் இல்லத்திற்குச்
சென்றுவிடுகிறார்கள்.
இந்த உறவு எவ்வளவோ அவ்வளவுதான்
மனைவி மக்கள் புருஷன்
முதலியவருக்கும் உண்டான
உறவு.
ஒருவனுக்கு இந்த
பிறவியில் ஓரு மகன் பிறந்திருந்தான்.
அவன் ஏதோ ஒரு காரணத்தால்
நோய் கண்டு இறந்து போனான்.
உடனடியாகவே அவன் முன்ஜன்மத்
தந்தையின் சத்ருக்களின்
வீட்டில் பிறந்துவிட்டான்.
இப்பொழுது நாம் இதைக்
கவனிக்க வேண்டும். தனக்கு
மகனாகப் பிறந்தபோது
அந்த மகனை இவன் எவ்வளவு
அன்புடன் வளர்த்திருப்பான்
! பகைவனின் வீட்டில் பிறந்தபோது
அவன் எப்படி நினைத்திருப்பான்?
ஆகையால் என்ன உறவு வைத்திருக்கிறது?
எனவே பந்துக்கள், பகைவர்கள்,
ஜ்ஞாதிகள், நடுநிலைமையில்
உள்ளவர்கள், நண்பர்கள்,
துவேஷத்தைப் பாராட்டுகிறவர்கள்
என்று சொல்வதெல்லாம்
ஒரு நொடியில் பறந்து
போய்விடுகிறது. ஒரே
பிறவியிலும் எவன் பந்துவோ
அவன் பந்து இல்லாமல்
போய்விடுகிறான். நண்பனும்
பகைவனாக ஆகிறான். பகைவனும்
ஸ்நேகிதனாகிவிடுகிறான்.
ஆகையால் எவனுக்கும் யாரும்
பந்துவுமல்ல, சிநேகிதனுமல்லன்,
பகைவனுமல்லன்; ஏதோ ஒரு
வினையை முன்னிட்டு அம்மாதிரித்
தோற்றம் நமக்கு ஏற்பட்டுவிடுகிறது.
ஒருவனுக்கு அவசியம்
பணம் வேண்டியிருந்தது.
அதற்காக அவன்தன் வெள்ளித்
தட்டையோ, மனைவியின்
கழுத்திலுள்ள நகையையோ
மார்வாடிக் கடையில் வைத்து
பணம் வாங்கிக் கொண்டான்.
பணம் பெற்றானே தவிர அந்த
வஸ்துவை மறுபடியும் மீட்டுக்கொள்ள
அவனால் முடியவில்லை.
சில வருஷங்கள் நகர்ந்தன.
மார்வாடியும் காலதாமதமானதினால்
அந்தப் பொருளைப் பிறருக்கு
விற்றுவிட்டான். அதை
வாங்கினவன் உபயோகப்படுத்த
ஆரம்பித்தான். சிலகாலம்
சென்றதும் பணத் தேவையை
முன்னிட்டு மற்றவருக்கு
விற்றுவிட்டான். அவனும்
அப்படியே செய்தான். இங்கேதான்
நாம் உண்மையை யோசிக்க
வேண்டும். தட்டு நகை முதலிய
பொருள்கள் எத்தனை பேருடைய
கைகளில் போயின? ஒருவனிடத்திலேயே
நிலைத்து நின்றனவா? இல்லவே
இல்லை.
அரசாங்கத்தில்
இக்காலத்தில் பணத்தேவையை
முன்னிட்டு நோட்டு அடித்து
வெளிப்படுத்துகிறார்களே.
இதில் ஒரு தத்துவத்தை
யோசியுங்கள். மிகவும்
அழுக்கு அடைந்ததும் கிழிந்ததுமான
ஒரு நோட்டு (நூறு ரூபாய்)
கையில் கிடைக்கிறது.
இதைபார்த்ததுமே நாம்
ஒரு நல்ல விஷயத்தை உணர்ந்து
கொள்ளலாம். இந்த நோட்டு
ஏன் அழுக்கு அடைந்தது?
ஏன் கிழிந்தது? ஒருவனுடைய
கையிலேயே இருந்தால் அப்படி
இருக்காது. பலபேருடைய
கைகளை அடைந்ததனால்தான்
இந்த நிலையை அடைந்தது
என்பதை நாம் நன்கு உணர்கிறோம்.
மேலே கூறிய தட்டு நகை
முதலிய பொருள்களுக்கும்
இந்த நோட்டுக்கும் வாசி
இல்லை. இதனால் ஒவ்வொரு
பொருளும் ஒருவனுக்கே
உரிமையானதன்று என்பது
நன்கு விளக்கமாகிறது.
இதைப்போலவேதான் ஜீவனும்
ஒருவருக்கு பிள்ளையாக
இருப்பதும், மனைவியாக,
இருப்பதும் மற்றும் பந்துக்களாக
இருப்பதும், மற்றவர்களுக்கும்
அப்படியே இருப்பதும்
இயற்கை. எனவே யார் யாருக்கு
ஸம்பந்தம் உடையவர்?
இக்காலத்தில்
எத்தனையோ கட்சிகளையும்
கட்சித் தலைவர்களையும்
பார்க்கிறோம். ஒரு கட்சியில்
உள்ளவர்கள் ஏதோ ஒரு
வைமனஸ்யத்தை அடைந்து
மற்றொரு கட்சியில் சேர்ந்து
விடுகிறார்கள். அதிலிருந்தும்
மற்றொரு கட்சியில் பிரவேசித்துவிடுகிறார்கள்,
எதிலும் நிலைத்திருப்பதில்லை.
அதுபோலத்தான் ஜீவர்களும்
ஒருவனுக்கே உரிமை பெற்றவராக
இருப்பதில்லை.
ஒரு
ராஜ்யத்தை ஒரு அரசன்
ஆண்டுவந்தான். அந்த ராஜ்யம்
செழிப்பாக எல்லாவித வசதிகளும்
கூடியதாக இருந்தது. இதைக்
கண்ட மற்றொரு ராஜ்யத்து
அரசன் இதைக் கைபற்றவேண்டும்
என்று நினைத்தான். இதை
அறிந்துகொண்ட அந்த அரசன்
பகைவன் தன் ராஜ்யத்தில்
நுழையாமல் இருப்பதை உத்தேசித்து
சேனைகளையும் பணத்தை அதிகமாக
செலவு செய்து தயார் செய்தான்.
அத்துடன் வெடி குண்டு
முதலியவற்றையும் உண்டுபண்ணி
வைத்திருந்தான். இப்படி
இருக்கும் சமயத்தில்
அவ்வரசன் இறந்து வேறு
எங்காவது பிறந்திருந்தாலோ,
அல்லது பகைவனான அன்னிய
அரசனின் வீட்டிலேயே பிறந்திருந்தாலோ
என்ன பயன்? அப்பொழுது
என்ன நடக்கும்? ஆகையால்
ஒரு அரசன் மற்றொரு அரசனை
துவேஷிப்பதோ, ஒரு ராஜ்யத்தில்
உள்ளவர்கள் மற்றொரு
ராஜ்யத்தில் உள்ளவர்களை
நிந்திப்பதோ, ஒரு கட்சிக்காரன்
மற்றொரு கட்சிகாரனிடம்
பகைமை கொண்டாடுவதோ,
ஒரு மதஸ்த்தர் இன்னொரு
மதத்தில் உள்ளவர்களை
நிந்திப்பதோ, ஒரு வர்ணத்தவர்
மற்றொரு வர்ணத்தாரை
துவேஷிப்பதோ பயனற்றது.
அவரவர் செய்த ஒரு செயலை
முன்னிட்டு சிறிது காலம்
ஒருவருக்கொருவர் ஸம்பந்தம்
உள்ளது போல் இருக்குமே
தவிற, உண்மையில் பரஸ்பரம்
யாதொரு ஸம்பந்தமும்
இல்லை. இதை நன்கு உணராமல்
இருக்கும்வரையில்தான்
வெவ்வேறுவிதமான எண்ணம்
மனிதருக்கு உண்டாகலாம்.
இதை நன்கு உணர்ந்தவர்கள்
எல்லோரையும் சமமாகவே
பார்ப்பார்கள். எதிலும்
ஒருவித பற்றுதலை அடைய
மாட்டார்கள்.
இப்படி
ஒரு வைராக்ய விசாரம்,
இனி மற்றொரு பக்கம்.
இது
நடந்த சம்பவம். பல வருஷங்களுக்கு
முன்பு கர்நாடக மாநிலத்தில்
ஒரு ஏழை வைதீக ப்ராமண
குடும்பத்தில் பிறந்த
பையன் அகில இந்திய போலீஸ்
பரீக்ஷையில் தேறிவிட்டு
மேல் பயிற்சிக்காக டில்லிக்கு
200 மைல் தொலைவில் உள்ள
முசோரி என்ற இடத்திற்கு
போவதற்காக சென்னையில்
ரயில் ஏறி இரண்டு நாட்களில்
டில்லிப்போய் சேர்ந்தான்.
ப்ரதேச பாஷை ஹந்தி தெரியாது.
ரயில் ஸ்டேஷனிலேயே எங்கு
போய் தங்குவது என்று
தெரியாமல் சோர்ந்து
போய் உட்கார்ந்துவிட்டான்.
புதிய இடம் புரியாமல்
ஊருக்கே திரும்பி விடலாம்.
போலீஸ் வேலையே வேண்டாம்
என்று தீர்மானித்துவிட்டான்.
அவனையே கவனித்துக் கொண்டிருந்த
ஒரு ரயில்வே அதிகாரி
அவனிடம் நெருங்கிக் கேட்டார்
ஹிந்தியில். "அப்பா, உனக்கு
என்ன கஷ்டம் இப்போது?"
பையன் புரியாமல் முழிக்கவே
ஆங்கிலத்தில் மறுபடியும்
கேட்டார். பையன் தன் கதையைச்
சொல்லி தான் திரும்பி
ஊருக்குப் போவதாகச்
சொன்னான்.
அதிகாரி
அவனை சமாதானப் படுத்தி
"அப்படிச் செய்யாதே. நீ
ஏழைக் குடும்பத்திலிருந்து
வந்தவன். பெரிய உத்யோகம்
கிடைத்திருக்கிறது. முசோரிக்குப்
போய் சேர். வேலையை விடாதே."
பையன் - "எப்படிப்
போகிறது? எனக்கு ஒன்றுமே
தெரியவில்லையே. ராத்திரி
எங்கு தங்குவேன். பாஷை
புரியவில்லையே."
அதிகாரி:
- "கவலை வேண்டாம். நான் உனக்கு
ஸ்டேஷனிலேயே இடம் வாங்கித்
தருகிறேன். ராத்திரி
தங்கி விட்டு காலையில்
புறப்பட்டு 8 மணிக்கு
தயாராய் இரு. நானே வந்து
உனக்கு உதவி செய்கிறேன்."
பையன்
சரி என்று சொல்லவே, அதிகாரி
அவனை ஒரு அறையில் தங்க
ஏற்பாடு செய்துவிட்டு
மறுநாள் காலை 8 மணிக்கு
வந்து அவனை அழைத்துக்
கொண்டு ஒரு பஸ்ஸில்
ஏற்றி 10 மைல் தூரத்தில்
உள்ள காஷ்மீர் கேட் என்ற
இடத்தில் உள்ள பெரிய
பஸ் நிலயத்திற்கு போய்
முசோரி போகும் ஒரு
பஸ்ஸில் ஏற்றிவிட்டார்.
அதிகாரி: - "நீ ஜாக்கிரதையாக
போய் போலீஸ் பயிற்சி
காலேஜில் சேர். உனக்கு
எல்லா க்ஷேமமும் உண்டாகும்.
பையன்: - "நீங்கள்
யார்? உங்கள் பெயரையே
சொல்லவில்லையே. எதற்காக
முன்பின் தெரியாத என்னிடம்
பரிவு காட்டி உபகாரம்
செய்கிறீர்."
அதிகாரி:-
"நான் யார், என்பெயர் முதலிய
விவரங்கள் உனக்கு வேண்டாம்.
போய் வருகிறேன் என்று
சொல்லிவிட்டு திடீரென்று
மறைந்தார். அந்த பையனுக்கும்
இந்த அதிகாரிக்கும் என்ன
சம்பந்தம்? இன்னொருபக்கம்.
வயதான
ஒருவர் வெளியூரிலுள்ள
தன் பிள்ளைக்கு உடம்பு
சுகம் இல்லை என்று தெரிந்து
பிள்ளையிடம் செல்லுவதற்காக
ரயில் டிக்கெட் வாங்கிக்
கொண்டார். ரயில் வந்தது.
தாங்க முடியாத கூட்டம்.
பெட்டியில் ஏறமுடியாமல்
தவித்து கஷ்டபட்டு ஒரு
காலை வைத்து ஏறியும்
விட்டார். அதற்குள் ஓடிவந்த
ஒரு முரட்டு இளைஞன் தான்
ஏறுவதற்காக கீழே பிடித்து
தள்ளிவிட்டு தான் ஏறிக்
கொண்டான். ரயில் நகர்ந்தது.
கிழவர் கீழே விழுந்து
சிறிய காயத்தோடும் பெரிய
தாக்கத்தோடும் வீடு
திரும்பினார். பிள்ளைக்கு
குணமாகிவிட்டது என்று
கடிதம் வந்துவிட்டது.
மறுநாள் காலை தினசரி
பத்திரிக்கையில் செய்தி:-
அதே ரயில் வண்டி அன்று
இரவு தடம்புரண்டு கவிழ்ந்து
எல்லா உயிர்களையும் பலி
கொண்டது.
இந்த
கிழவருக்கும் அந்த இளைஞனுக்கும்
என்ன ஸம்பந்தம்? கிழவர்
பிழைத்தார். இளைஞன் என்ன
ஆனான்?
எனவே உண்மையில்
ஒருவருக்கொருவர் ஒருவித
ஸம்பந்தமும் இல்லாமல்
இருக்க அப்படி ஸம்பந்தம்
இருப்பது போல் நினைத்து
அது காரணமாக மயக்கம்
கூடாது. "எல்லாம் பகவானுடைய
செல்வம்; நமக்கும் பிறருக்கும்
ஒருவித ஸம்பந்தமும் இல்லை;
ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு
கடவுள் நம்மை சிறிது
நேரமோ, சிறிது காலமோ
பிணைத்து வைத்திருக்கிறார்"
என்று எண்ணியிருப்பதுதான்
மங்களத்தை கொடுக்கும்.
எல்லாம் நன்மைக்கே.
சித்ரகேது
எனும் ஒரு அரசன் இருந்தான்.
ராஜ்யம் பெரியது. அதை
ஆள்வதற்கு மக்கள் அவனுக்கு
இல்லை. பெருங்கஷ்டம்.
ஒரு சமயம் நாரதர் அங்கு
வந்தார். அவரை வணங்கி
பூஜித்து தனது கஷ்டத்தை
தெரிவித்தான். அவர் இதனை
மறுத்தார். அப்படியும்
தனது மனைவிகள் 100 பேர் உள்ளனர்.
அதில் ஒருவற்கும் குழந்தை
இல்லையே என்று புலம்பினான்.
அவர் மந்திரித்து பழத்தைக்
கொடுத்தார். அப்பழத்தை
மூத்த மனைவிக்குக் கொடுத்தான்.
கர்ப்பம் தரித்து அவளுக்கு
ஓர் புதல்வன் பிறந்தான்.
குழந்தையினிடத்திலும்
அதன் தாயின் இடத்திலும்
அன்பை அதிகம் பாராட்டினான்.
இதனால் கோபமடைந்த மற்ற
மனைவிகள் விஷத்தைக் கொடுத்து
அந்த சிசுவை இறக்கச்
செய்தார்கள். பிறகு இறந்த
குழந்தையைப் பார்த்து
புரண்டான், அழுதான், புலம்புனான்.
இதைச் சொல்லவும் வேண்டுமோ?.
அப்பொழுதும் நாரதர்
அங்கு வந்து இவனுக்கு
ஆறுதலைச் சொன்னார்.
இவன் இறந்த குழந்தையை
பிழைக்கச் செய்யவேண்டும்
என்று மன்றாடினான். நாரதரும்
பிழைக்கச் செய்தார்.
அப்பொழுது அப்பா 'குழந்தாய்!'
என்று அதை கட்டிக் கொள்ள
முயற்சித்தான். அப்பொழுது
அந்த சிசு சொன்னதாவது.
எந்த பிறவியில் நான்
உனக்கு குழந்தை. எத்தனையோ
பிறவிகள் எடுத்தேன்.
எத்தனையோ தாய் தந்தைகள்
எனக்கு உண்டு. ஒரு சமயம்
நீயும் எனக்கு குழந்தையாகப்
பிறந்திருப்பாய். ஆடு
மாடு மனிதன் ஈ கொசு எனற
வகையில் பிறவிகள் நமக்கு
ஏற்பட்டுள்ளன. கடைகளில்
உள்ள பண்ய வஸ்துக்கள்
எப்படி கை மாறுகிறதோ
அதேப்ரகாரம்தான் நமக்கும்
மாறுதல் என்று வேதாந்தத்தைச்
சொல்லி மறைந்து விட்டது.
பிறகு அவனுக்கு சிசு
மூலமாகவும் நாரதர் மூலமாகவும்
ஆங்கீரஸர் மூலமாகவும்
உண்மை புரிய வந்தது. பிறகு
வேதாந்த ஞானம் பெற்றவனாகி
ஞானியானான். இக்கதை பாகவதத்தில்
உள்ளது. ஆக ஒருவருக்கு
ஒருவர் ஸம்பந்தமில்லை.
ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன்
தஞ்சமன்று. வேதாந்த தேசிகன்
தனது ரஹஸ்ய த்ரய ஸாரத்தில்
தீர உரைத்துள்ளார்.
"நம்பினேன்
பிறர் நன் பொருள் தன்னையும்,
நம்பினேன் மடவாரையும்
முன் எனலாம்" என்றார்
மதுரகவியாழ்வார். எல்லாம்
பிறர் பொருள் நம்பெருமானுடைய
பொருள், அவனுக்கும்
அவைகளுக்கும் தான் உண்மையான
ஸம்பத்தம். நமக்கும்
அவைகளுக்கும் எள்ளளவு
கூட ஸம்பந்தமில்லை. நாம்
புத்ரன் மனைவி பெண் பொருள்
என்று ப்ரமிக்கிறோம்.
நமம நமது (மே) என்று எண்ணுகிறோம்.
ஆடு காட்டில் இருந்து
'மே' என்று கத்தினால் என்னவாகும்.
இதைக் கேட்ட புலி வந்து
பாய்ந்து அதை சாப்பிட்டு
விடும். அது போல் நாம்
ஸம்ஸாரக்காட்டில் 'மே'
எல்லாம் என்னுடையது என்று
காத்தினால் யமனாகிற புலி
நம்மேல் பாய்ந்து ஹிம்ஸிப்பான்.
இது தான் தத்துவம். இதை
யோசிக்கவேண்டும். ஸந்யாஸிகள்
துரந்தவர்கள். அவர்கள்
கூட நம் புதல்வன், நம்
பெண், நம் பேரன், என்று
மடியில் வைத்தும் கொஞ்சியும்
கூத்தாடுகிறார்கள். ஐயோ,
மாயையின் கார்யத்தை நினைத்துப்பார்.
புதல்வன் வேண்டியவன்
என்று அபிமானித்து நேரில்
பணம் கொடுப்பது, பிறர்
மூலமாக கொடுக்கச் செய்வது,
புத்திரனோடும் பெண்ணோடும்
பேசுவது இவையெல்லாம்
உண்மை துரவியின் காரியமல்ல.
யமலோகத்தில் நரக யாதனைப்போல்
ஸ்வர்க லோகத்திலும்
யாதனை உண்டு இவர்களுக்கு.
துரவியானபடியால் ஸ்வர்கலோகம்
பந்துவாலனம் முதலியவை
உள்ளபடிய யவ்யாதனையும்
உண்டு. தேவ இந்திரன் இப்படிப்பட்டவர்களை
சென்நாய் ஓனாய் முதலியவைகளின்
வாயில் இவர்களை தள்ளி
கடிக்கச் செய்கிறான்
என்பது சாஸ்த்திரம்.
ப்ரபன்னர்கள் இவர்கள்
ஆக இவை எப்படி ஸம்பவிக்கும்
என்று என்ன வேண்டாம்.
பாபன்னர்களான இவர்களுக்கு
இவ்வாறு வாலனம் முதலியவை
எவ்வாறு ஏற்படும். பாபன்ன
ஆபாஸர்கள் இவர்கள். சரியான
முறையில் நடந்திருந்தால்
இவை உண்டாகாது. காலாந்தரத்தில்
ஸரியான முறையில் முட்டி
நடைபெறும் என்றுதான்
சொல்ல முடியும். இவ்விஷயங்களை
பரமபத ஸோபானத்தில் கண்டு
அறியலாம். ஆக ஜாகரூகர்களாக
இருக்க வேண்டும் எல்லோரும்.
*****
|
|
|
|
|
|
|
|
Enter supporting content here
|
|
|
|