பவநாசினி
புனிதமான
பாரதபூமியில் ஜனங்களை
உஜ்ஜீவிக்கும்படி செய்யப்
பல திவ்ய தேசங்கள் போல்
பற்பல புண்ணிய நதிகளும்
புண்ணிய தீர்த்தங்களும்
உள்ளன. காவேரி, கங்கை, நர்மதை,
கிருஷ்ணா, ஹ்ரத்தாபநாசினி,
ஸ்வாமி புஷ்கரிணி முதலிய
பல தீர்த்தங்கள், தங்களிடத்தில்
ஸ்நானம் செய்கிறவர்களைப்
புனிதமாக்கி, அவர்களின்
பாவங்களை நீக்கி, அவர்களுக்கு
உயர்ந்த ஸ்தானத்தைக்
கொடுத்து நன்மைகளைத்
தருகின்றன.
கங்கை என்னும்
நதி தன்னிடத்தில் ஸ்நானம்
செய்பவர்களை மாத்திரம்
பரிசுத்தமாக்குகிறது
என்பது அல்ல; கங்கை என்ற
பெயரை வாயால் சொல்லி
வேறு ஏதேனுமொரு ஸாதாரண
தீர்த்தத்தில் ஸ்நானம்
செய்தாலும் செய்பவனைப்
பரிசுத்தமாக்குகிறதாம்.
காவேரி என்னும் நதி இப்படிப்
பட்ட கங்கையைக் காட்டிலும்
புனிதம்.
கங்கை தன்னிடத்தில்
ஸ்நானம் செய்யும் பாவிகளின்
பாவத்தைப் பெற்றுத் தானும்
பாவம் உள்ளதாக ஆகிறதாம்.
தனக்கு இப்படி ஏற்பட்ட
பாவத்தைப் போக்கிக்
கொள்ளப் புனிதமான காவேரியில்
சேருகிறதாம். காவேரியும்
ஜனங்களுடைய பாவங்களையும்,
கங்கையினுடைய பாவத்தையும்
அடைந்து, 'நாம் என்ன செய்வது?'
என்று யோசிக்கிறதாம்.
அதற்காக ஸ்ரீரங்கப்பட்டணம்
என்னும் திவ்ய தேசத்தில்
அரவணைமேல் பள்ளிகொண்டுள்ள
ஸ்ரீரங்கநாதனுடைய திருவடித்
தாமரைகளைப் பிடித்துக்
கொண்டு தன் கஷ்டத்தை
முறையிட்டுக் கொள்கிறதாம்.
இப்படி
எல்லா நதிகளுக்கும் மேன்மையும்
தாழ்வும் ஏற்படுகின்றன.
ஸ்ரீஅஹோபிலம் என்னும்
திவ்ய தேசத்தில் பெருகிக்
கொண்டு ஓடும் பவநாசினி
என்னும் நதியின் பிரபாவத்தை
சிறிது ஆராய்வோம். இதனுடைய
மாஹாத்ம்யம் வாசாமகோசரம்
என்று ஸ்ரீநாரத பகவான்
பணிக்கிறார். இதன் பெயரே
இதன் மகிமையை வலியுறுத்துகிறது.
எல்லா ஜனங்களுடைய பாவத்தையும்
இது நீக்க வல்லது. அதனால்
ஏற்படும் தன் பாவத்தையும்
நீக்கிக்கொள்ள வல்லது.
இது ஸ்வபர நிர்வாஹகமாம்.
இருட்டிலுள்ள பொருளை
அறிய விளக்கை ஏற்றுகிறோம்.
அவ்விளக்கு மற்றப் பொருள்களைப்
பிரகாசப்படுத்துவது
போல் தன்னையும் பிரகாசப்படுத்திக்
கொள்கிறது. அதுபோல்
இந்த நதியும் மக்களின்
பாவங்களைப் போக்கடிப்பதோடல்லாமல்
பாவிகள் தன்னிடத்தில்
ஸ்நானம் செய்வதனால் ஏற்படும்
தன் பாவத்தையும் போக்கடித்துக்கொள்கிறது.
அஹோபிலம்
என்னும் பர்வதத்தில்
எங்காவது ஏதாவது ஜலப்பரப்பு
தென்படுமேயானால் அவையெல்லாம்
புண்ணிய தீர்த்தங்கள்;
கங்கைக்கு ஸமமானவை. ஹ்ருத்தாபநாசினி.
ஸ்வாமி புஷ்கரிணி, ஆகாச
கங்கை, பூமி கங்கை, சந்திர
புஷ்கரிணி, கங்கை, கோதாவரி,
காவேரி, தாமிரவருணி, நர்மதை
முதலிய புண்ணிய நதிகளும்
புண்ணிய தீர்த்தங்களுமெல்லாம்,
ஸ்ரீந்ருஸிம்ஹனுடைய
ஆஜ்ஞையால் இந்த மலையிலுள்ள
தீர்த்தங்களில் கலந்துகொள்கின்றன.
இந்த எல்லாப் புண்ணிய
தீர்த்தங்களைக் காட்டிலும்
பவநாசினி உத்தமமானது.
கோடிக்கணக்கான ஜன்மங்களில்
செய்த பாவங்களும் விலகுகின்றன.
'தீர்த்தாநாம்
உத்தமா பவநாசிநீ' என்று
புராணங்கள் இதை மிகவும்
புகழ்கின்றன. அஹோபிலத்துக்குப்
போகும்போது இந்த நதியைக்
கண்களால் பார்த்த மாத்திரத்திலேயே
பாவங்கள் யாவும் போய்விடுகின்றனவாம்.
இந்தத் தீர்த்தத்தைப்
பகவானுக்கு அபிஷேகம்
செய்து பருகினால் ஸகல
ரோகங்களும் போகின்றன.
அவன் முன்னோர்களும்
நரகத்திலிருந்து விடுபட்டு
ஸந்தோஷம் அடைகின்றனர்.
பவநாசினி என்னும் நதி
பெருகும் இடத்துக்கு
சென்றாலே பாவங்கள் விலகுகின்றன.
உலகத்திலுள்ள மனிதர்கள்
அளவற்ற பாவங்களைச் செய்திருக்கிறார்கள்.
அந்தப் பாவங்களை நீக்க
எத்தனையோ விதமான க்ருச்ரங்கள்
சாஸ்திரங்களில் கூறப்பெற்றிருக்கின்றன.
இவற்றைச் செய்தால்தான்
அவரவர்கள் பாவங்கள் போகும்.
அப்படிச் செய்யாமலிருந்தாலும்
பவநாசினி என்னும் இந்த
நதியில் ஸ்நானம் செய்தும்,
இந்தத் தீர்த்தத்தைக்
கொண்டு சாளக்ராம சிலைக்கு
அபிஷேகம் செய்தும் இந்தத்
தீர்த்தத்தைப் பருகினால்
ப்ரஹ்மஹத்யாதி ஸர்வ பாபங்களும்
தொலைந்துவிடும்.
பவநாசினியில்
ஸ்நானம் செய்தால் ஸர்வ
மங்களமும் கிடைக்கும்.
ஸர்வ ரோகங்களும் போகும்.
ஸர்வ ஆரோக்யங்களும்
கிட்டும்.
ப்ரஹ்மதேவன்
ஜனங்களுடைய பாவத்தைச்
சுலபமாகப் போக்கடிக்க
கருதி, பவநாசினி என்னும்
இந்த நதியைப் படைத்தான்.
தர்மதேவதையைப் பார்த்து,
"நீ நதிரூபமாக ப்ரவஹித்து
அஹோபிலத்தில் இருக்க
வேண்டும். உன்னிடத்தில்
ஸ்நானம் செய்பவர்கள்
புனிதமாகி க்ஷேமத்தைப்
பெறுவார்கள்" என்றான்.
உடனே ப்ரஹ்மாவின் நியமனத்தை
முன்னிட்டுத் தர்மதேவதை
பவநாசினியாயிற்று.
போர்க்களத்தில்
எவர் மரணமடைகிறார்களோ
உபவாஸத்துடன் விரதத்தை
எவர் செய்கிறார்களோ,
பிறந்தது முதல் இறந்து
போவது வரை மாமிசத்தையே
எவர் உண்ணாமலிருக்கிறார்களோ
இவர்களுக்குச் சாஸ்திரங்களில்
எந்த எந்த புண்ணிய லோகங்கள்
சொல்லியிருக்கின்றனவோ
அவையனைத்தும் பவநாசினி
நதிக்கரையில் வாஸம் செய்பவர்களுக்கு
கிடைக்கும் என்கிறார்
ஸ்ரீநாரத மகரிஷி.
எம்பெருமானின்
அவதாரமான நரங்கலந்த சிங்கரூபமான
எம்பெருமான் ஒன்பது வகைப்படுகிறான்.
'ஜ்வாலாஹோபிலமாலோலக்
ரோடகாரஞ்ஜபார்கவா: | யோகாநந்தச்
சத்ரவட: பாவநோ நவமூர்த்தய:
||
இவர்களுள் ஜ்வாலாந்ருஸிம்ஹன்
அவதரித்து இரணியனின்
ஹ்ருதயத்தை இருகூறாகப்
பிறந்தான். தன் பக்தனான
பிரஹ்லாதனுக்குப் பலவிதமான
ஆபத்துக்களை விளைவித்த
அவுணனின் ஆகத்தை வள்ளுகிரால்
போழ்ந்த பின்னும் அவனது
சீற்றம் தணியவில்லை.
இதைக் கணிசித்த தேவர்கள்
அஞ்சி, 'என்ன செய்வது?' என்று
திகைத்தார்கள். அவர்கள்,
"தம் தபந்தமிவாதித்யம்
மத்யாஹ்நே தீப்ததேஜஸம்
| அபிஷிக்தமயோத்யாயாம்
ஜகதத்யாநுபச்யது" என்கிறபடி,
கங்கை முதலிய புண்ணிய
நதிகளால் எம்பெருமானுக்கு
அபிஷேகம் செய்தால் சீற்றம்
தணியுமோ என்று எண்ணினார்கள்.
அப்படியே தேவகங்கையை
அழைத்து நம் ஸ்வாமியை
நீராட்டினார்கள். அதுதான்
பவநாசினி என்று பெயர்
பெற்று விளங்கியது.
பவநாசினி
விண்ணுலகத்திலிருந்து
மண்ணுலகத்துக்கு வந்தபோது
பெரு வேகத்தைக் காட்டிற்று.
வந்த வேகம் உலகம் முழுவதையுமே
அழித்துவிடும்போல்
தோன்றிற்று. பகீரதனால்
பிரார்த்திக்கப்பெற்ற
கங்கை ஆகாசத்திலிருந்து
வரும்போது பரம வேகத்துடன்
பரமசிவனின் சிரஸ்ஸில்
விழுந்தது போல் இந்த
நதியும் பயங்கரமாகத்
தோற்றமளித்தது. மன்னவர்
அனைவரும் அஞ்சினர். விண்ணுலகமும்
கலங்கியது. இதில் உண்டான
அலைகள் பெரும் சப்தத்தை
உண்டாக்கின. இதைப் பார்த்துப்
பயந்த தேவேந்திரன், யக்ஷர்,
கின்னரர், கிம்புருஷர்
முதலியவர்கள் என்ன செய்வது
என்று உணராமல், கடைசியில்
தங்கள் குலகுருவான ப்ருஹஸ்பதியை
அடைந்தனர்.
தேவகுருவான
ப்ருஹஸ்பதி. "நீங்கள்
அஞ்ச வேண்டாம். நீங்கள்
அனைவரும் ஒன்று சேர்ந்து
இந்த நதியை ஸ்தோத்திரம்
செய்யுங்கள். யாரோ ஒரு
மகரிஷி தேவேந்திர பதவி
அடைய வேண்டுமென்று எண்ணி
தபஸ் செய்து, அதன் மூலமாகப்
பயங்கரமான நதியை ஸ்ருஷ்டித்துவிட்டாரோ
என்று, இந்திரனே, நீ அஞ்சுகிறாய்
போலும். உண்மையான நதியே
இது. இதனை நீங்கள் சரணமடைந்து
துதியுங்கள். ஜ்வாலா
ந்ருஸிம்ஹனுடைய திருமேனி
ஸம்பந்தமும் திருவடி
ஸம்பந்தமும் பெற்றபடியால்
அவ்வெம்பெருமான் போலவே
பெருமுழக்கத்துடன் இந்த
நதி வெளியே வந்துள்ளது.
ஸ்துதிப்ரியனான பகவானைப்
போலவே இதுவும் ஸ்துதிப்
பிரியை" என்றார்.
இதனைக்
கேட்ட தேவர் அனைவரும்
அந்த நதியை அடைந்து பல
முகங்களாலே ஸ்தோத்திரம்
செய்தனர். ஆயினும் இந்த
நதி தன் சீற்றத்தைக்
குறைத்துக்கொள்ள வில்லை.
அஞ்சின தேவர்கள், 'ஆவார்
ஆர் துணை?' என்று கலங்கிய
சமயத்தில், தீடீரென்று
ஆகாசத்திலிருந்து ஒரு
வாணி சொல்லத் தொடங்கியது:
"தேவர்களே, இந்த அஹோபில
க்ஷேத்ரத்தில் க்ஷேத்ரபாலகனாகப்
பணி புரிந்து வருகிறார்
கபாலபைரவர் என்பவர்.
அவரைச் சரணமடையுங்கள்"
என்று. இதைக் கேட்ட இந்திரன்
முதலியவர்கள் கபாலபைரவரைத்
தேடிப் பார்த்தனர். அவர்களின்
கண்ணில் அவர் புலப்படாமல்
இருக்கவே, மானஸிகமாக
அவரை ஸ்தோத்திரம் செய்து
தம் இருப்பிடம் சென்றார்கள்.
கபாலபைரவர்
இந்திரனின் ஸ்தோத்திரத்துக்கு
வசப்பட்டு இந்த நதியின்
கோபத்தை சமிப்பிக்க
ஒரு வழியைக் கையாண்டார்.
துதிக்கு வசப்படாதவர்
யாருமில்லை; எனவே நாமும்
இதைத் துதிப்போம் என்று
எண்ணினார். "பவநாசினியே,
உலகில் பாவம் செய்தவர்களை
காக்க வேண்டும் என்று
எண்ணி, பகவான் தன் திருவடியில்
உன்னை உண்டு பண்ணினான்.
மலர்ந்த முகத்தை உடையவளாக
நீ ஆகி, பயத்தினால் நடுங்கி
கொண்டிருப்பவர்களைக்
காக்க வேண்டும்" என்று
பலவாறு புகழ்ந்தார்.
பவநாசினி இந்தத் துதிக்குப்
பயப்படவில்லை. தனது வேகத்தை
மீண்டும காட்டினாள்.
பர்வதங்களெல்லாம் பெயர்ந்துவிடும்போல்
அதிக கர்வத்துடன் வந்தாள்.
கபாலபைரவர் தமது ஸ்தோத்ரம்
வீணாகப் போனது கண்டு
கடுங்கோபம் கொண்டார்.
யாவரும் எதிர்பாராத வகையில்
திடீரென்று தமது தலையை
அறுத்து அந்த நதியில்
எறிந்து விட்டார்.
இதைக்
கண்ட இந்த நதி வெட்கமுற்றுத்
தனது வேகத்தை தடுத்துக்
கொண்டாள். அவரது தலையுடன்
பெருகி ஓடுவதற்கு அஞ்சினாள்.
பிறகு அந்தர்வாஹினியாக
பாதாளலோகத்துக்குச்
சென்றுவிட்டாள். அங்கும்
அழகிய ரூபத்துடன் வந்த
ஒரு நங்கையை ஆதிசேஷன்
கண்டு, "நீ யார்?" என்று வினவினான்.
இவள் தன் வரலாற்றைக்
கூறினாள்.
இதைக் கேட்ட
ஆதிசேஷன், "நதி பிரவகித்துச்
செல்லும்படியான வசதிகள்
இங்கு இல்லை. நீ பூலோகத்துக்கே
சென்றுவிடு" என்றாள்.
பிறகு இவள் பூலோகத்துக்கு
வந்து சேர்ந்தாள். தன்
உற்பத்தி இடமான ஒரு மரத்தடியில்
அந்த பைரவர் தலையைப்
பிரதிஷ்டை செய்தாள்.
அவருடைய சிரஸ், அங்கு
வந்து ஸேவிக்கும் ஜனங்களுடைய
கோரிக்கையை நிறைவேற்றுகிறதாம்.
பிறகு இந்த நதி மேற்கே
சென்று கிருஷ்ணா நதியுடன்
சேர்ந்து, தன் பர்த்தாவான
ஸமுத்திரராஜனை அடைகிறது.
இங்கே
பைரவர் எவ்வளவு தியாகம்
செய்தார் என்பதைக் கவனிக்க
வேண்டும். சிங்கவேள்
குன்றத்துக்கு யஜமானனான
பகவானும் இந்தப் பைரவருக்கு
மறுபடி தலையை கொடுக்க
முயன்றார். பைரவர், 'பின்னுள்ளோர்
என்னைக் கண்டு, லோகஜீவனார்த்தமாகத்
தன் தலையையும் அறுத்து
போட்டான் பைரவன் என்னும்
புகழ் எனக்கு எப்பொழுதும்
இருக்க வேண்டும். தலையைப்
பெற்றுக் கொண்டால் என்
புகழ் மறைந்துவிடும்'
என்று மறுத்துக் கூறினார்.
பகவான்
மிகவும் சந்தோஷத்துடன்
இந்த க்ஷேத்ரத்துக்கு
வந்து, "பைரவனுடைய ப்ரீதிக்கு
எவர் பாத்திரமாகிறார்களோ
அவர்களுக்கு நான் எல்லாவித
ஐசுவரியத்தையும் கொடுக்கிறேன்"
என்றான். இவ்வாறு பவநாசினி
என்னும் புனித நதி பகீரதனால்
கொண்டுவரப்பட்ட கங்கையைக்
காட்டிலும், திருமாலிருஞ்சோலை
மலையில் அழகருடைய திருவடிகளிலிருந்து
உண்டான நூபுரகங்கையைக்
காட்டிலும் அதிகமான வைபவத்தை
உடையது. மற்றுமுள்ள காவேரி
முதலிய நதிகளை காட்டிலும்,
புண்ணிய தீர்த்தங்களைக்
காட்டிலும் உயர்ந்தது.
'கங்கையில்
புனிதமான காவிரி நடுவு
பாட்டு' என்று திருமாலையில்
காவிரி என்னும் நதி, கங்கையைக்
காட்டிலும் பெருமையையுடையது
என்றார். இப்பொழுது
அந்த காவிரியைக் காட்டிலும்
நவந்ருஸிம்ம ஸம்பந்தமுள்ள
பவனாசினி மிகப் பெருமை
பெற்றது.
*****
|