கடன்
ருணம் என்பதற்குக்
கடன் என்று பொருள். ஏதாவதொரு
குடும்பச் செலவு நிமித்தமாக
ஒருவன் மற்றொருவனிடத்தில்
பணத்தைக் கடனாகக் கேட்டு
வாங்கிக்கொள்கிறான்.
கடன் கொடுத்தவனை 'உத்தமர்ணன்'
என்றும், கடன் வாங்குபவனை
'அதமர்ணன்' என்றும் சொல்வது
வழக்கம். எப்பொழுதுமே
கடன் வாங்கிய அதமர்ணன்
கீழ்பட்டவனே; வாங்கிய
கடனைத் திருப்பிக் கொடுக்காதவரையில்
கடன்பட்டவன்தானே இவன்?
கடன் வாங்கியும் திருப்பிக்
கொடுக்காமலே காலத்தைச்
சிலர் கழிப்பர். ஏமாற்றிவிடலாம்
என்று இவர்கள் நினைப்பார்கள்.
இப்படி எத்தனையோ பேர்
உள்ளனர். 'கேட்காத கடனும்
பாராத பயிரும்' என்று
சொல்வது உலக வழக்கம்.
கேட்டுக்கூடக் கொடுக்க
இசைவில்லாதவர்கள் கேட்காமலிருந்தால்
எப்படிக் கொடுப்பார்கள்?
இப்படி அயலாரை ஏமாற்ற
நினைக்கும் இவர்கள்தாம்
கடைசியில் ஏமாற்றமடைகிறார்கள்.
ஏனென்றால், இந்த ஜன்மத்திலோ
மறு ஜன்மத்திலோ ஒன்றுக்குப்
பத்தாக வட்டிபோட்டுப்
பகவான் இவர்களிடமிருந்து
ஏதாவது ஒரு காரணத்தை
முன்னிட்டு வசூல் செய்து
கொடுத்துவிடுகிறான்.
ஒரு
பிரபுவினிடத்தில் யாசிக்கப்
பலர் செல்லுகின்றனரே.
இவர்களில் சிலர் நிறையப்
பணம் பெறுகின்றனர். சிலர்
சிறிதளவுதான். மற்றும்
சிலர் ஒன்றுமே பெறுவதில்லை.
இதற்குக் காரணம் என்ன?
முற்பிறவிகளில் இவர்களுடைய
நடத்தையை அநுசரித்து
இப்போது இவ்வாறு நேர்ந்தது
என்றே சொல்ல வேண்டும்.
பிரபுவும் முற்பிறவியில்
அவர்களிடம் பணத்தைப்
பெற்றுக்கொண்டு ஏமாற்ற
நினைக்கவில்லையானாலும்
மற்றும் சில காரணங்களால்
கொடுக்காமல் இருந்துவிட்டான்.
அந்தக் கடனை இப்பொழுது
வேறு வியாஜத்தை முன்னிட்டு
அடைத்து விடுகிறான்.
ஆகையால் கடன் வாங்கியதோ
கொடுத்ததோ வீணாக ஆகமுடியாது.
கடனைக் கொடுக்காமல்
இறந்துவிட்டான் என்றும்,
ஏமாற்றிவிட்டான் என்றும்
அபவாதம்தான் நிற்கும்.
ஆகையால்தான், 'யோர்த்தே
சிசி: ஸ ஹி சிசி:, ந ம்ருத்வாரிஸுசி:
ஸுசி: ' என்று தர்மசாஸ்திரம்
கூறுகிறது. தன் உடலை சோப்புப்
போட்டுத் தேய்த்து ஜலத்தில்
குளித்ததனாலோ மண்ணைப்
பூசித் தேய்த்து மந்திரங்களைச்
சொல்லிக் கொண்டு தண்ணீரில்
குளித்ததினாலோ ஒருவன்
சுத்தன் ஆகமாட்டான்;
வாங்கிய கடனைக் கொடுத்தால்தான்
சுத்தனாவான் என்றது.
இவ்வாறு பணம்
மூலமாகத்தான் கடன் வாங்குவது
அடைப்பது என்பது மாத்திரம்
இல்லை. ஒருவர் நமக்கு
ஓர் உபகாரம் செய்தால்
அதற்குத் தகுந்தாற்போல்
பதிலுதவி செய்யாத வரையில்
நாம் கடன்பட்டவர்தாம்.
பிரதியுபகாரம் செய்துதான்
நம் கடனை நீக்கிக் கொள்ளவேண்டும்.
பகவானைத் துளஸீ புஷ்பங்களைக்
கொண்டு அர்ச்சிக்கிறோம்;
ஸஹஸ்ரநாமங்களைச் சொல்கிறோம்;
பிரதக்ஷிணப் பிரணாமங்களைச்
செய்கிறோம். இவற்றினால்
பகவானும் நம்மிடம் கடன்பட்டவனே.
இந்தக் கடனைத் தீர்க்க
ஏதாவது வழிசெய்து கழித்து
விடுவான். 'கோவிந்தா'
என்று அன்று சொன்னதை
நினைந்து நினைந்து உருகி,
'ருணம் ப்ரவ்ருத்தம்'
என்று சொல்லி, 'அந்தக்
கடன் மனத்தை விட்டு நீங்கவில்லை'
என்று கதறினான் கிருஷ்ணன்.
ஒரு
யஜமானனது இல்லத்தில்
ஒருவன் வேலை செய்கிறான்.
சரீர சிரமத்தையும் பாராமல்
ஓயாது உழைக்கிறான். சரீரம்
தேய்ந்துவிடுகிறது. சம்பளமோ
மிகவும் ஸ்வல்பம். பார்ப்பவர்கள்
என்ன சொல்கிறார்கள்?
"ஜன்மாந்தரத்தில் ஏதோ
கடன் பட்டான்; அதனால்தான்
உடம்பைத் தேயும்படி உழைத்துக்
கடனை நீக்கிக் கொள்கிறான்"
என்று.
கொடுத்து வைத்தால்
கிடைக்கும் என்று சொல்லுகிறார்களே!
இதுக்கு என்ன பொருள்.
போன பிறவியில் ஒருவனுக்குக்
கொடுத்தால் அது கடன்தானே.
இந்தப் பிறவியில் கடவுள்
அதை தீர்த்துவைப்பார்
என்பது.
பிறப்பைப் பெறும்போதே
நாம் மூன்று கடன்களுடன்
பிறக்கிறோம். ரிஷிகளிடத்திலும்
தேவர்களிடத்திலும் பித்ருக்களிடத்திலும்
கடன்பட்டிருக்கிறோம்.
உபநயனம் செய்து கொண்டு,
குருகுலத்தில் வஸித்து,
வேதத்தை அத்யயனம் செய்வதனால்
ரிஷிகளின் கடனை அடைக்கிறோம்.
மணம்புரிந்து வேள்வி
முதலிய சடங்குகளைச் செய்து
தேவர்களின் கடனைத் தீர்க்கிறோம்.
ஸந்ததியை உண்டுபண்ணிப்
பித்ருக் கடனைப் போக்குகிறோம்,
ஸ்ரீராமன் புத்திரனாகப்
பிறந்த பிறகுதான் தசரத
சக்ரவர்த்தியின் கடைசிக்
கடனான பித்ருருணம் கழிந்தது
என்று 'தசரத-சர மருண-விமோசன'
என்று ரகு வீரகத்யத்தில்
சொல்லப்பட்டது.
தீலிபன்
புத்திர ஸந்ததியைப் பெற்ற
பிறகு கடனிலிருந்து விடுபட்டான்
என்பதைக் காளிதாஸன் மிகவும்
சமத்காரமாகச் சொல்லுகிறான்
-
ந ஸம்யதஸ் தஸ்ய பபூவ
ரக்ஷிதுர் விஸர்ஜயேத்
யம் ஸுதஜந்மஹர்ஷித: | ருணாபிதாநாத்
ஸ்வயமேவ கேவலம் ததா பித்ரூணாம்
முமுசே ஸ பந்தநாத் || (ஸ்ரீரகுவம்சம்
3-20)
திலீபன் என்ற அரசன்
ஸந்ததியில்லாமல் வருத்தமுற்றான்.
ஆசார்ய நியமனத்தை முன்னிட்டுக்
காமதேனுவின் புதல்வியான
நந்தினியை ஆயாஸத்தையும்
பொருட்படுத்தாமல் பேணி
வந்தான். அதன் பயனாகக்
குழந்தை பிறந்தது. வெகு
நாளாக மகப் பேறு இல்லாமல்
இப்போது கிடைத்தபடியால்
ஆனந்தத்துக்கு எல்லை
சொல்ல முடியுமா? இப்படி
அளவற்ற சந்தோஷ சமயத்தில்
அரசர்கள் என்ன செய்வார்கள்?
தப்புச்செயல்களைச் செய்து
சிறையில் விலங்கிடப்பட்ட
திருடர் முதலியவர்களைக்
கட்டிலிருந்து விடுவிப்பார்கள்.
திலீபனோ அரசை நன்கு
ஆண்டு வந்தான். அவனது
ராஜ்யத்தில் சூதாடுபவர்
இல்லை; மதுபானம் செய்பவர்களும்
இல்லை; திருடர்களும்
இல்லை; 'ந ஸ்வைரீ ஸ்வைரிணீ
குத:?' என்றபடி ஜாரனும்
தாஸியும் இல்லை. இவர்கள்
இருந்தால்தானே சிறையில்
இவர்களை அடைக்கவும் கட்டவும்
முடியும்? கட்டியிருந்தால்தானே
கட்டிலிருந்து அவிழ்த்துவிடமுடியும்?
ஆகையால் அந்தச் சமயத்தில்
ஒருவரையும் கட்டிலிருந்து
அவிழ்த்துவிட முடியவில்லையாம்.
ஆனால் பித்ரு ருணம் என்ற
கட்டிலிருந்து அவன் தானே
அவிழ்த்து விடப்பட்டானாம்.
இப்படி அழகாகக் கவி வர்ணிக்கிறான்.
ஸ்வாயும்புவ
மந்வந்தரத்தில் ஸுதபஸ்
என்ற பிரஜாபதி இருந்தார்.
அவரது மனைவியின் பெயர்
ப்ருச்நி. இவர்கள் இருவரும்
பிரம்மா நியமித்த படைப்பு
என்ற தொழிலை விட்டு
பகவானை உத்தேசித்துக்
கடுந்தவம் புரிந்தனர்.
பகவானைப் போல் புத்திரனையும்
வேண்டிக்கொண்டனர். அவர்களுக்கு
ப்ருச்நிகர்ப்பன் என்ற
பெயருடன் பகவான் புதல்வனாகப்
பிறந்தான். அதிதி ப்ரஜாபதி
என்ற அவர்களுக்கே உபேந்திரனாகவும்
பிறந்தான். அவர்களே தேவகி
வஸுதேவர்களாகப் பிறந்ததும்
கிருஷ்ணனாக அவதரித்து
அவர்கள் வேண்டிக் கொண்ட
வரம் என்ற கடனை அடைத்தான்
பகவான்.
அஷ்ட வஸுக்களில்
சிறந்தவர் த்ரோணர்.
அவரது மனைவியின் பெயர்
தரை. இவர்கள் பகவானின்
குழந்தைப் பருவத்து விளையாட்டுக்களை
அநுபவித்து அதனால் பக்தியைப்
பெற விரும்பினார்கள்.
அதற்காக அவர்கள் நந்தகோபாலனாகவும்
யசோதையாகவும் பிறந்தபோது
அந்தக் கடனை நீக்க ஆயர்பாடியில்
சென்று தன் லீலாம்ருதஸரஸ்ஸில்
அவர்களை மூழ்கச் செய்து
மகிழ்வூட்டினான் கண்ணன்.
இப்படி ஓர் அவதாரத்திலேயே
இரண்டு தம்பதிகளின் பிரார்த்தனையைப்
பூர்த்திசெய்ய நினைத்து,
ஒரு தம்பதிக்குக் குழந்தையாகப்
பிறந்தான்; மற்றொரு
தம்பதியினிடத்தில் தன்
விளையாட்டைக் காட்டி
மகிழ்வித்தான். இப்படிக்
கடன் என்பது பணத்திலும்
உண்டு; உபகாரத்திலும்
உண்டு. பிறவியிலும் உண்டு;
வரத்திலும் உண்டு. இவை
தவிரப் புண்யபாபம் என்ற
வினையிலும் உண்டு,
ஒருவன்
மற்றொருவனுக்குத் தந்தையாகவும்
தாயாகவும் மகனாகவும்
வேறுவிதப் பந்துவாகவும்
பிறப்பது அவரவர் செய்த
வினையை அநுசரித்தது என்பதில்
ஸந்தேகமில்லை. இதுவும்
ஒரு விதமான கடனை நிவிருத்தி
செய்வதற்காகவே. புத்திரன்
முற்பிறவியில் ஒருவனிடத்தில்
தான் செய்த நன்மை தீமைகளின்
பயனை அடைவதற்குத் தானே
அவனுக்குப் புதல்வனாகப்
பிறக்கிறான்? பிறந்து
அந்தக் கடனைத் தீர்த்துக்கொள்கிறான்.
இம்மாதிரியேதான் ஒவ்வொரு
பந்துவும். இதைத்தான்
சாஸ்திரம் கூறுகிறது
-
ருணாநுபந் தரூபேண பசுபுத்ரஸுதாதய:| ருணக்ஷயே
நிவர்த்தந்தே கா தத்ர
பரிதேவநா ||
ஆகையால் நாம்
ஒரு பிறவியில் ஒருவனுக்குத்
தீமையோ நன்மையோ செய்திருந்தால்
அடுத்த பிறவியில் அதற்குத்
தகுந்தாற்போல் நமக்கு
அவன் நன்மையையோ தீமையையோ
செய்வான். இப்படிச் செய்து
ஒருவருக்கு ஒருவர் கடனைத்
தீர்த்துக் கொள்கிறார்கள்.
இதற்கு
ஓர் உதாரணம் கேண்மின்
-
ஓர் ஊரில் ஓர் அந்தணர்
இருந்தார். அவர் பரம பாகவதர்.
சுத்தாத்மா; வேதம் அனைத்தையும்
ஓதியவர்; பிறருக்கு மனத்தாலும்
அபகாரம் செய்ய நினைக்கமாட்டார்.
காலை எழுந்ததுமுதல் படுக்கும்வரை
நித்ய கர்மாநுஷ்டானத்தை
தவறாமல் நடத்துபவர்.
காமம், கோபம், லோபம்
முதலியவற்றை வென்றவர்.
அவர் ஒரு சமயம் திவ்யதேச
எம்பெருமான்களை ஸேவித்து
ஆனந்திக்க நினைத்தார்.
அதற்காக திவ்யதேச யாத்திரையாக
சென்றார். பல திவ்யதேசங்களுக்குச்
சென்று எம்பெருமானை தரிசித்து
அகம் கரைந்து, கண்ணீர்
மல்கி ஆனந்த சாகரத்தில்
மூழ்கினார்.
கடைசியாக
அவர் ஒரு திவ்யதேசத்திற்கு
செல்ல விரும்பி பக்கத்திலுள்ள
கிராமத்தில் தங்கினார்.
அவர் அந்த ஊருக்கு சென்றபோது
மாலை நேரமாகிவிட்டது.
சூரியன் அஸ்தமித்துவிட்டான்.
மெல்ல மெல்ல இருள் சூழ்ந்துவிட்டது.
அந்த கிராமத்திலேயே அன்றிரவை
கழிக்க நினைத்தார். அந்த
ஊர் கோடியில் ஓர் இல்லத்தில்
மந்தமாக ஒரு விளக்கு
எரிந்து கொண்டிருந்தது.
இவரது மனம் அந்த இல்லத்தையே
நோக்கியது. மெல்ல மெல்ல
அந்த வீட்டை அடைந்தார்.
வீடு தாழிட்டு இருந்தது.
கதவை பளீர் என்று தட்டினார்.
உள்ளிருந்து ஒரு பெண்மணி
கதவை திறந்து மின்னல்
கொடி போல காட்சி அளித்து,
"நீர் யார்? எங்கிருந்து
வருகிறீர்?" என்று கேட்டாள்.
இவர் தமது நிலமையைக்
கூறி, "இரவு இங்கே தங்கி
காலையில் போகலாம் என்று
நினைக்கிறேன்," என்றார்.
இதைக் கேட்டதும் அவள்
ஏற இறங்க இவரை பார்த்தாள்.
இவரது மேனி அழகையும்
முக ஒளியையும் வாக்கின்
மென்மையையும் கண்டு 'இவரை
பர்த்தாவாகப் பெற பாக்கியம்
பெற்றிலோமே' என்று மனம்
நொந்து, 'ஸ்வாமி, இரவை
நீங்கள் இந்த வீட்டில்
சுகமாக கழிக்கலாம். நான்
கொடுக்கும் உணவையும்
உண்ணவேண்டும்' என்று
சொன்னாள். அவள் மனம்
இவரித்தில் லயித்துவிட்டது.
தன் பர்த்தாவையும் ஏமாற்றி
இவரை இசைவித்து எங்காவது
அழைத்துச் சென்றுவிடவேண்டும்
என்று எண்ணினாள் அந்த
கொடும்பாதகி.
கபடமற்ற
மனம் உடைய இவர் புனித
மனத்துடன் அவள் கொடுத்த
ஆகாரத்தை உட்கொண்டார்.
வாசல் திண்ணையிலேயே 'நாராயணா'
என்று சொல்லி அலுப்பால்
உறங்கிவிட்டார். காட
நித்திரையில் ஆழ்ந்தார்.
நடு நிசி. பெண்மணி தூக்கம்
இல்லாமல், பர்த்தாவின்
தூக்கத்தை எதிர்பார்த்துக்கொண்டே
படுத்தாள். பர்த்தா நன்கு
உறங்கிவிட்டான். இதுதான்
சமயம் என்று எண்ணி, அவள்
கதவைத் திறந்து, வாசற்பக்கம்
தாழிட்ட பின்பு, தூங்குகிற
அந்தணனைப் பார்த்தாள்.
'என்ன அழகு!' என்று சொல்லிக்
கொண்டே தன்னையும் அறியாமல்
இவரை அணைத்துக்கொண்டாள்.
அந்தனர் திடுக்கிட்டு
எழுந்து, "இது என்ன அநியாயம்!
குலப்பெண்கள் செய்யும்
காரியமா இது? கற்பை காற்பதல்லவோ
தர்மம்? நான் பரதேசி பிராமணன்.
என்னை காதலிப்பது நீதியும்
அன்று; உனக்கு லாபமும்
இல்லை. தரும நெறி நழுவாமல்
நடந்து வந்த துறவி போன்ற
எனக்கு இது ஒரு பரீக்ஷையா?"
என்று சொல்லி வெறுத்தார்.
இவர் எவ்வளவு சொல்லியும்
அவள் தன் எண்ணத்தை மாற்றிக்
கொள்ளவில்லை.
"அம்மணி!
உன் பர்த்தா உள்ளே உறங்கிக்
கொண்டிருக்கிறார். அங்கே
சென்று உன் காதல் வெறியைத்
தணித்துக்கொள். இதுதான்
நியாயம்" என்று சொன்னார்.
இதைக் கேட்டப் பெண்மணிக்கு
அந்தணரிடம் காதலும் சினமும்
கலந்து வெள்ளமிட்டு ஓடின.
உடனே உட்பக்கம் சென்றாள்.
பெட்டியிலிருந்த கத்தியை
எடுத்து தன் பர்த்தாவைக்
கொன்றுவிட்டாள். அப்படியே
வெளியில் வந்து "ஸ்வாமி
என் பர்த்தா இறந்துவிட்டார்.
ஆகையால் நீர்தான் எனக்கு
கதி. பர்த்தாவும் நீர்தான்"
என்று சொல்லிக் கொண்டு
பலாத்காரமாக கட்டிக்
கொண்டாள். இவர் இந்த
காட்சியைக் கண்டதும்
'இது எந்த விபத்தில் முடியுமோ!'
என்று நடுங்கி அவளை திரஸ்கரித்துவிட்டு
வாசலில் ஓட ஆரம்பித்துவிட்டார்.
பெண்களுக்கு புத்தி சாதுர்யம்
அதிகம் அல்லவா? அவள் எண்ணம்
நிறைவேறாமல் போகவே,
காதல் மிக்க கோபமாக
மாறியது. கத்தியை எடுத்துக்
கொண்டு, "ஐயோ! ஐயோ!" என்று
கூச்சலிட்டாள். ஜனங்கள்
சேர்ந்துவிட்டனர். "மகா
பாவி! இந்த அந்தணன் நேற்றிரவு
என் வீட்டிலேயே சாப்பிட்டு
என் பர்த்தாவையும் கொன்று,
பலாத்காரமாக என் கற்பையும்
அழிக்கிறான். இது என்ன
அநியாயம்! உண்ட வீட்டிலேயே
தீமையைச் செய்கிறான்.
என்னை நீங்கள்தான் காப்பாற்றவேண்டும்"
என்று கூச்சலிட்டாள்.
திரள் திரளாக கூடிய ஜனங்கள்
அந்த பெண்ணின் வார்த்தையையே
உண்மை என்று எண்ணி அந்தணரை
ஒரே கட்டாக கட்டி அவ்வூர்
அதிகாரியிடம் கொண்டு
சேர்த்தனர். இம்மாதிரி
நிலையில் பெண்களின் வாக்குத்தான்
ஓங்கி நிற்கும் என்பதில்
சந்தேகமில்லை. அதிகாரி,
'புருஷன் இப்படி செய்வது
சகஜம்தான்' என்று சொல்லி,
அவரது இருகைகளையும் கத்தியால்
துண்டித்துவிட்டான்.
'தெய்வமே, இது
என்ன அநியாயம்' என்று
ஓலமிட்டுக் கொண்டு நீர்
ததும்பிய கண்ணுடன் அவர்
அவ்வூரைவிட்டு வெளியேறினார்.
என்ன செய்வார், பாவம்!.
ஒரு பாவமும் அறியாதவர்;
அவர் கதி இப்படியாகிவிட்டது.
கிடைக்கும் உணவை சாப்பிட
கைகள் இல்லாமல் போய்விட்டன.
மன வருத்தமுற்று, தாம்
குறிப்பிட்ட திவ்யதேசத்தை
அடைந்தார். கோவில் வாசலில்
பகவானை வாயார வாழ்த்தினார்.
பகவான் கருணைகொண்டு
ஆகாச வாக்கு ரூபமாகச்
சொன்னார் "வாசலில் நிற்கும்
அந்தணனை சகல மறியாதைகளுடன்
அழைத்துவந்து தீர்த்த
பிரசாதங்களை கொடுத்து
ஸேவை செய்து வைக்கவேண்டும்"
என்று. இதைக் கேட்டதும்
பரபரப்புடன் அர்ச்சகர்
பரிசாரர்களும் அதிகாரிகளும்
பயத்துடனும் சிரத்தையுடனும்
அந்தணரை வாத்ய கோஷம்
முழங்க கர்ப கிருகத்திற்கு
அழைத்துச் சென்றனர்.
'இதுவும் ஒரு தெய்வச்
செயல்தான்' என்று நினைத்து,
அவர் ஸர்வேச்வரனை ஆபாத
சூடம் அநுபவித்து ஆனந்த
பாஷ்பம் பெருக்கிக் கொண்டு
'பகவனானே! உன் அற்புத லீலையை
என்னவென்று சொல்வது?
இன்று எனக்கு ஸேவை சாதிக்கஅருள்
புரிந்த நீ நேற்று, 'இவன்
கொலையாளி அல்ல; அந்த
பெண்ணே கொலையைச் செய்து
பழியை இவன் மேல் சுமத்தியிருக்கிறாள்'
என்று சொல்லி என்னை
நிரபராதி என்று காட்டியிருக்கக்
கூடாதா? உன்னை புஷ்பங்கள்
எடுத்து அர்ச்சிக்கக்
கூட கைகள் இல்லையே! 'நாராயணா
ஓ மணி வண்ணா' என்று கதறிய
கஜேந்திரனுக்கு புஷ்பத்தை
எடுத்துக்கொள்ள ஒரு
கையாவது இருந்தது. உன்னை
கண்டு வணங்குவதற்கும்
கையில்லாத பாவியானேன்!"
என்று உச்ச ஸ்வரத்தில்
கூச்சலிட்டு அழுதார்.
அப்பொழுது ஆகாசவாக்கு
உண்டாயிற்று - "வேதியரே,
இவை எல்லாம் கர்மருணத்தின்
செயல்கள். நீர் முற்பிறவியிலும்
அந்தணராகவே பிறந்திருந்தீர்.
பொய் பேசாதவர்; அக்ருத்யத்தை
மனத்தாலும் நினையாதவர்.
ஒரு சமயம் அந்தி வேளையில்
குளக்கரையில் சந்தியாவந்தனம்
செய்துகொண்டிருந்தீர்.
அப்போது ஒருவன் உம்
எதிரில் கத்தியைத் தீட்டிக்
கொண்டு வந்து, "இவ்வழியாக
ஒரு பசு சென்றதா என்று
கேட்டான்?". நீர், "இவ்வழியாகத்தான்
சென்றது" என்று கைகளால்
காட்டினீர். உடனே அவன்
அவ்வழியே சென்று பசுவைக்
கொன்றுவிட்டான். அந்தப்
பசுதான் இப்பொழுது உம்முடைய
கைகளைத் துண்டிக்க காரணமாக
இருந்தப் பெண். அந்தப்
பெண்ணின் புருஷன்தான்
பசுவைக் கொன்றவன். தன்னைக்
கொன்றது காரணமாகவே அந்தப்
பசு பெண்ணாகப் பிறந்து
அவனையே பர்த்தாவாக அடைந்து
அவனைக் கொன்றது. இதுதான்
உண்மை. இப்படி மறுபிறவியை
அடைந்து ஒருவருக்கொருவர்
கடன்களை நிவர்த்திசெய்து
கொண்டீர்கள். ஆகையால்
தெய்வம் இதில் என்ன செய்ய
முடியும்? அவரவர் செய்த
பாவ புண்ணியங்கள் கடனாக
இருந்துகொண்டு, அவற்றுக்குத்
தகுந்தாற்போல் பலனை
கொடுக்கின்றன. இதைத்தான்
'ருணாநுபந்த ரூபேண பசுபுத்ரஸுதாதய:'
என்பது" என்றது,
பிறகு
அந்தணருக்கு பகவானின்
அருளால் கைகள் முளைத்துவிட்டன.
மனச்சாந்தியையும் பெற்றார்.
பகவானைத் துதித்தார்.
திவ்யதேச யாத்திரையை
முடித்துக் கொண்டு தமது
இல்லத்திற்கு திரும்பி
வந்து சேர்ந்தார்.
எண்ணை
வியாபாரி. அவன் தினமும்
இரண்டு மாடுகளை செக்கில்
பிணைத்து ஆடுபவன். அதில்
கிழத்தால் மலிந்த மாடு
ஒன்று. அதை செக்கில் கட்டி
ஹிம்ஸிக்கிறான். ஐயோ!
என்ன செய்வது. வருத்தம்
அம்மாட்டுக்கு. அது நினைத்தது.
முன் பிறவியில் இவனிடம்
கடன் வாங்கி கொடுக்காமல்
இருந்திருப்பேன். அதன்
காரணமாக இவ்வாறு அழைக்க
நேர்ந்திருக்கிறது என்று.
இதே ஸமயம் (இந்த மாட்டின்
பூர்வஜன்மத்தில் மனிதனாகப்
பிறந்த ஸமயம்). இந்த செக்குக்காரனிடம்
200 ரூபாய் கடன் வாங்கி கொடுக்காமல்
இருந்தபடியால் தன் தகப்பனார்
மாடாகப் பிறந்து ஹிம்ஸையை
அடைகிறது என்ற ஸ்வரம்
மகனுக்கு உண்டாயிற்று.
அக்கடனை நீக்கவேண்டும்.
அப்பொழுதுதான் ஹிம்ஸை
ஏற்படாது என்று உடனே
காலை எழுந்து மகன் இந்த
செக்குக்காரனிடம் 200 கொடுத்தான்
தன் தகப்பன் கடன் இது
என்று சொல்லி. அவனும்
அதைப் பெற்றுக் கொண்டான்.
அன்றிரவே இந்த முதிர்ந்த
மாடு இறந்துவிட்டது.
இதனால் உழைக்கவேண்டிய
நிர்பந்தமும் இல்லை.
ஹிம்ஸையும் இல்லை. ஆக
எப்படியாவது கடனை தீர்க்க
வேண்டும். தன்டனையைப்
பற்றி நாம் விவரிக்க
வேண்டிய அவசியம் இல்லை.
இது எல்லோர் வீட்டிலும்
ஒவ்வொரு விஷயத்திலும்
உள்ளன. பையன் சொன்னதைக்
கேட்காமல் எந்த வேலையும்
செய்யாமல் திரிந்து கொண்டிருந்தால்
நாம் என்ன சொல்வோம்.
கடன் எத்தனை நாளைக்கோ
என்றுதான் சொல்லுவோம்.
டாக்டரிடம் கணக்கில்லாமல்
பணத்தைக் கொடுத்து குணமானாலும்
குணமாகாமல் போனாலும்
இதைத்தானே சொல்வோம்.
கடன் பட்டுள்ளது செலவு
செய்துதானே ஆகவேண்டும்
என்று வருத்தம் சொல்லுவோம்.
எதிர் பாராமல் ஒருவன்
நமக்கு நிறைய பணத்தைக்
கொடுத்தால் அவன் நம்மிடம்
கடன்பட்டடிருக்கிறான்
என்று சொல்வதுண்டு.
முகமே தெரியாமல் நமக்கு
ஒருவன் உபகாரம் செய்தால்
இதைத்தானே சொல்லுவோம்.
லக்ஷக் கணக்கில் பணத்தைக்
கட்டி இழந்துவிட்டால்
முன் ஜன்மத்தில் அவனை
நாம் ஏமாற்றினோம். இப்பொழுது
அவன் நம்மை அழவைக்கிறான்
என்போம். திருடன் கொள்ளையடித்த
பணத்தை திருடினால் நாம்
இதை இவனிடமோ மற்றவரிடமோ
முன் பிறவியில் நடத்தினோம்.
ஆக இது நமக்கு ஏற்பட்டது
என்று கஷ்டத்தை ஆற்றிக்
கொள்வோம்.
ஒரு
விஷயம் கேண்மின். கடன்
கொடுத்தவன் வாங்கினவனிடம்
கேட்பான். அவனும் சமயம்
சொல்வான். அந்த சமயம்
நாம் அவன் வீட்டு வாசலிலிருந்து
கேட்போம். பதில் சரியானதாக
ஏற்படவில்லை. பிறகு கொஞ்ச
நாள் கழித்து அவன் வீட்டுத்
தின்னையில் உட்கார்ந்து
கேட்போம். அப்பொழுதும்
வராது இருந்தால், அவன்
வீட்டுக்கு உள்ளேயே படுத்துக்
கொண்டு கொடுத்தால்
போவேன் என்போம். நாம்
கடன் பட்டபடியால் இதைத்
தீர்த்துக்கொள்ள சில
ஆலயங்களில் இன்று கேட்கிறோம்.
நாம் அடைவதில்லை. ஆக சில
ஆலயங்களில் உட்கார்ந்து
கேட்கிறான். அப்படியும்
நாம் இசைவதில்லை. அதற்காக
சில ஆலயங்களில் படுத்துக்
கொண்டு கடனை வாங்கிக்
கொள்கிறான். இந்த விஷயத்தைக்
காட்டத்தான் மூன்று திருக்
கோலத்தில் சேவை ஸாதிக்கிறான்.
இதை
ஆழ்வார் நினைத்துதான்
"நின்றது எந்தை
ஊரஹத்து இருந்தது எந்தை
பாடகத்து அன்று வெக்கினைக்
கிடந்தது முன்னெல்லாம் அகின்று நான்
பிறந்திலேன் பிறந்தபின்
மறந்திலேன் நின்றதும்
இருந்ததும கிடந்ததும்
என் நெஞசுளே" என்றார்
எவன்
எவன், எப்படி எப்படி, யார்
யார் இடத்தில், எந்த எந்த
வகை, எப்பொழுது எப்பொழுது,
கடன் பட்டிருக்கிறானோ
அவனவன் கடனை, அவனவனித்தில்,
எப்படி எப்படி தீர்க்கவேண்டும்
என்பதை, அந்த அந்த சமயம்
யோசித்து, தெய்வம் செய்கிறது.
இதுதான் ஸாரம்.
*****
|