ஜோஸ்யம் பலித்துவிட்டதே!
உலகில்
எத்தனையோ கலைகள் விளங்குகின்றன.
அவற்றுள் ஜ்தோதிஷமும்
ஒன்று. வேதங்களைப் போலவே
ஜ்தோதிஷ சாஸ்திரங்களில்
சொல்லப்படும் அனைத்தும்
உண்மையானவையே. அவற்றில்
எதுவும் பொய்யாகாது.
இதன் மர்மத்தை அறிந்தவர்கள்
ஜ்யோதிஷத்தில் நிபுணர்கள்.
நன்கு ஆராய்ந்து பார்த்தவர்கள்
சொல்லுவதில் அணுவளவும்
பிசகு இராது. வேதங்களின்
ஆறு அங்கங்களில் ஜ்யோதிஷம்
அடங்கியது.
நாம் அனைவரும்
வேதங்களில் கூறியிருப்பவை
யாவும் உண்மை என்றே கருதுகிறோம்.
சில மந்தமதிகளுக்கு நம்பிக்கை
வருவது கடினமாக இருக்கும்.
அவர்களுக்கும் இந்த விஷயத்தில்
உறுதியான நம்பிக்கை வருவதற்காகவே
இஹலோகத்தில் சில பயன்களைக்
குறித்து இஷ்டி முதலியவை
சொல்லப்பட்டிருக்கின்றன.
மழை இல்லாமல் கஷ்டப்படும்
காலத்தில் 'காரீரி' இஷ்டியைச்
செய்கிறான். புத்திரன்
இல்லாதவன் புத்ரகாமேஷ்டியைச்
செய்கிறான். பணம் இல்லாதவன்
வாயு தேவதாகமான யாகத்தைச்
செய்கிறான். செய்தவுடன்
அந்த அந்தப் பலன்களைப்
பெற்று மகிழ்கிறான்.
இதனால் சில விஷயங்களில்
நம்பிக்கை ஏற்படுகிறபடியால்
இதைக் கொண்டு பரலோகத்தில்
ஏற்படும் பலன்களும் அதற்கு
உபாயங்களும் அந்த வேதங்களிலேயே
சொல்லப்பட்டிருக்கிறபடியால்
அவற்றைச் சொல்லும் வேதங்களிலும்
த்ருடமான விஸ்வாஸம் உண்டாகும்
என்பதில் ஸந்தேஹமில்லை.
இதைப்
போலவேதான் வேதாங்கமான
ஜ்யோதிஷ ஸாஸ்திரத்திலும்
விச்வாஸத்தை வைத்துக்
கொள்ள வேண்டும். ஒரு
ஜ்யோதிஷ வித்வானிடம்
முன்பின் தெரியாத ஒருவன்,
தன் ஜாதகத்தைக் கொடுத்தால்,
அவர் அதை நன்கு ஆராய்ந்து
பார்த்துப் பலன்களைக்
கூறுகிறார். நடந்த விருத்தாந்தங்கள்
யாவும் உண்மையாகவே இருக்கின்றன.
இதைக் கொண்டு, நடக்கப்போகும்
விஷயங்களிலேயும் அவர்
சொல்வது உண்மைதான் என்பதில்
எப்படி ஸந்தேஹம் ஏற்படும்?
ஆனால்
இதில் முக்கியமாகக் கவனிக்க
வேண்டியது ஒன்று உண்டு
- பல இடங்களிலும் பெரிய
விளம்பரப் பலகையைத் தொங்கவிட்டுக்
கொண்டு ஜோஸ்யம் பார்ப்பதாகச்
சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் எல்லாரும் சொல்வதில்
எல்லாமே உண்மையாக இருக்குமென்று
நம்ப முடியாது. ஜ்யோதிஷ
நூலில் கரை கண்டு பழகியிருக்க
வேண்டும். நல்ல திறமை
பெற்றிருக்க வேண்டும்.
இப்படிப்பட்டவர்கள்
சொல்வதில் ஒருவித அப்பழுக்கு
இராது.
ஜன்ம பத்திரிகை
சரியானபடி கணிக்கப் படாமலிருந்தால்
பெரிய வித்வான்கள் சொல்வதில்கூடப்
பிழை ஏற்பட்டுவிடும்.
அது அவர்கள் குற்றமன்று.
சரியான காலக் குறிப்புகள்
இல்லாமையினால் ஏற்படும்
குற்றங்கள் அவை. ஆகவே
தேர்ச்சி பெற்ற ஜ்யோதிஷப்
புலவராக இருக்கவேண்டும்.
ஜாதகமும் சரியாகக் குறிப்பிட்டிருக்க
வேண்டும். இப்படி இருந்தால்
அந்த வித்வான் சொல்லும்
பலனும் சரியாகவே அமைந்திருக்கும்.
இப்படிப்பட்ட
ஜ்யோதிஷ சாஸ்திரத்தில்
மயங்காதவர் யாரும் இல்லை.
ஜ்யோதிஷ வித்வான் ஒருவருடைய
ஜாதகத்தைப் பார்த்துப்
பலன்களைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது
அங்கே பலர் கூடிவிடுகின்றனர்.
தங்களுக்கு ஏற்படும்
பலன்களையும் அறிய ஆவல்
ஏற்படுகிறது. நடந்த விஷயங்களைப்
போல் தங்களுக்கு நடக்கப்
போவதும் நடந்தே தீரும்
என்பதில் ஸந்தேகமே இல்லை.
ஆயினும் அதில் ஓர் ஆவல்,
இவர்களை ஜாதகத்தைப் பார்க்கும்படி
தூண்டிவிடுகிறது. இது
உலக இயற்கை. ஸீதையும்
ஜோஸ்யத்தில் மயங்கினாள்
என்பது ஸ்ரீமத்ராமாயணப்
பிரஸித்தம்.
ஸீதாப்பிராட்டி
ஸ்ரீராமன் காட்டிற்குச்
செல்லும்போது தன்னையும்
அவசியம் அழைத்துச் செல்ல
வேண்டுமென்று வற்புறுத்துகிறாள்.
சக்ரவர்த்தி திருமகன்
காட்டில் பல கஷ்டங்கள்
ஏற்படும் என்று சொல்லியும்
ஸீதை கேட்கவில்லை. கடைசியாக
அவள் தன் தகப்பனாரின்
வீட்டில் இருந்தபோது
ஏற்பட்ட ஒரு ஜ்யோதிஷ
ஸம்பந்தமான நிகழ்ச்சியைக்
கூறுகிறாள் :-
அத சாபி
மஹாப்ராஜ்ஞ! ப்ராஹ்மணாநாம்
மயா ஸ்ருதம் | புரா பித்ருக்ருஹே
ஸத்யம் வஸ்தவ்யம் கில
மே வநே | வநவ வாஸக்ரு தோத்ஸாஹா
நித்யமேவ மஹாபல ||
'நாத!
நான் முன்பு தகப்பனார்
வீட்டில் இருந்தபோது
சில ஜ்யோதிஷ வித்வான்கள்
வந்தார்கள்; என் ஜாதகத்தைப்
பார்த்தார்கள். 'உயர்ந்த
உத்தம பருஷன் இவளுக்குப்
பர்த்தாவாக அமைவான்.
ஆனால் இந்தப் பெண் அந்தப்
புருஷனுடன் கொஞ்சகாலம்
காட்டிலும் வஸிப்பாள்'
என்று சொன்னார்கள்.
இதைக் கேட்டதும், உத்தம
புருஷநே பர்த்தாவாக ஆவான்
என்பதில் எல்லாருக்கும்
சந்தோஷம் இருந்தபோதிலும்,
காட்டில் வாஸம் என்று
கேட்டதும் கஷ்டம் ஏற்பட்டது.
எனக்கும் அப்போது மனத்தில்
வருத்தம் உண்டாயிற்று.
இப்போது இந்த அயோத்தியில்
பன்னிரண்டு வருஷமாக நாம்
ஸுகமாக இருந்தபோதிலும்,
'ஏகாந்தமாக நாம் இருவரும்
காட்டில் எப்போது வாஸம்
செய்யப் போகிறோம்?
அன்று அந்த வித்வான்
சொன்னது பலிக்க வேண்டுமே'
என்ற எண்ணத்துடன் இருந்தேன்.
இப்பொழுது கைகேயியின்
வரத்தைக் கேட்டதும்,
அந்த ஜ்யோஸயம் பலித்துவிட்டதே
என்ற மகிழ்ச்சியுடன்
இருக்கிறேன். ஆகவே நீங்கள்
என்னையும் அவசியம் அழைத்துச்
செல்ல வேண்டும்." என்று
சொல்லுகிறாள்.
ஆகவே,
ஜ்யோதிஷ சாஸ்திரத்தில்
எல்லாரும் மயங்குகிறார்கள்
என்றும், அதில் சொல்வது
பலித்தே தீீரும் என்பதும்
தெளிவாகத் தெரிகின்றன.
இந்த
ஸீதாப்பிராட்டியே, ஸ்ரீராமாயண
யுத்தகாண்டத்தில், ராம
லக்ஷ்மணர்கள் நாகபாசத்தினால்
கட்டுண்டு மூர்ச்சையாகக்
கீழே படுத்துக்கொண்டிருக்கும்போது,
புஷ்பக விமானத்தில் ஏற்றி
வரப்பட்டு அவர்களைப்
பார்த்ததும், ஜ்யோதிஷ
ஸாஸ்திரமே பொய் என்றும்,
அந்த நூலை அறிந்தவர்கள்
பொய் சொல்லுகிறவர்கள்
என்றும் தூஷிக்கிறாள்.
ஊசுர் லக்ஷணிநோ
யே மாம புத்ரிண்யவித
வேதி ச | தேத்ய ஸர்வே ஹதே
ராமே ஜ்நானிநோந்ருதவாதிந:
|| யஜ்வநோ மஹிஷீம் யே மாமூசு:
பத்நீம் ச ஸத்ரிண: | தேத்ய
ஸர்வே ஹதே ராமே ஜ்நாநிநோந்ருதவாதிந:|| ஊசு:
ஸம்ஸ்ரவணே யே மாம் த்விஜா
கார்த்தாந்திகா: ஸுபாம்
| தேத்ய ஸர்வேஹதே ராமே
ஜ்நாநிநோந்ருதவாதிந:
|| வீரபார்த்திவபத்நீத்வம்
யே தந்யேதி ச மாம் விது:
| தேத்ய ஸர்வே ஹதே ராமே
ஜ்நாநிநோந்ருதவாதிந:
||
"ஜ்யோதிஷ வித்வான்கள்
என்னை மக்கட்பேறுடையவர்கள்,
அவிதவை என்று சொன்னார்களே,
ஆச்வமேதம் முலிய வேள்விகளை
செய்பவனுடைய பத்தினி
என்றும் வீர அரசனின்
பத்தினி என்றும் சொன்னார்களே.
இப்போது என் பர்த்தா
இறந்து கடக்க, அவர்கள்
ஜ்யோதிஷம் மூலம் சொன்னது
பொய்யாகிவிட்டதே! அவர்கள்
அனைவரும் பொய்யர் ஆனார்கள்"
என்கிறாள். இதனால் ஜ்யோதிஷம்,
ஆரூடம், ரேகை முதலிய ஸாஸ்த்திரங்களை
நம்பவேண்டாம் சொன்னதாகத்
தானே முடிகிறது?
மேலும்,
ஸாமுத்ரிகா லக்ஷண சாஸ்திரத்தையும்,
இதைப் போலவே தூஷிக்கிறாள்.
சிற்சில அங்க அடையாளங்களைக்
கொண்டு மனிதனின் பெருமையை
அறிவது வழக்கம். ஆஜானுபாகுவாக
இருந்தால் உத்தம புருஷணாக
இருப்பான். சில மத்ஸ்யங்கள்
(மச்சங்கள்) சில சில இடங்களில்
இருந்தால் அதைக் கொண்டும்
பலனை அறிவதுண்டு. ஸீதையும்
தன் உடம்பிலுள்ள அடையாளங்களைக்
கொண்டு தன் மேன்மையை
நினைத்திருந்தாள். இப்போது
ராமன் இறக்க அந்த அடையாளங்கள்
யாவும் வீணாயின என்று
வருந்துகிறாள்.
இமாநி
கலு பத்மாநி பாதயோர்
யை: கில ஸ்த்ரிய: | ஆதிராஜ்யேபிஷிச்
யந்தே நரேந்த்ரை: பதிபி:
ஸஹ || வைதவ்யம் யாந்தி யைர்
நார்யோ லக்ஷணைர் பாக்யதுர்லபை:
| நாத்மநஸ் தாநி பஸ்யாமி
பஸ்யந்தீ ஹதலக்ஷணா ||
இதனால்
ஜ்யோஸ்யம் அதனுடன் சம்பந்தப்பட்ட
ஸாமுத்ரிகாலக்ஷண சாஸ்திரம்
முதலியவை பொய்யானவை
என்று ஏற்படவில்லையா
என்று சிலருக்குச் சந்தேகம்
எழலாம். இதன் உண்மை வருமாறு:-
உண்மையில்
ராமன் இறக்கவில்லை என்பது
மத்யஸ்தர்களுக்குத்
தெரிந்த விஷயம். ராமன்
மூர்ச்சையடைந்தான். கருடன்
வந்து தொண்டு புரிந்ததும்
மூர்ச்சை தெளிந்துவிட்டது.
மேலும் யுத்தம் செய்ய
ஆரம்பிக்கிறான்; ராவணனை
ஸம்ஹரிக்கிறான். ஸீதையுடன்
பட்டாபிஷேகத்தையும்
செய்துகொள்கிறான். இது
எல்லாருக்கும் தெரியும்.
இவர்கள் மூர்ச்சையுடன்
சயனித்துக் கொண்டிருப்பதைப்
பார்த்து, இவர்கள் இறந்துவிட்டதாகவே
நினைத்து ஸீதை இப்படிக்
கூறினாள். 'ஹதே ராமே-ராமன்
இறந்தபிறகு' என்று சொன்னாள்.
உண்மையில் ராமன் இறந்தானா?
இல்லை. இவளுக்கு அம்மாதிரி
க்ஷணகாலம் தோற்றம் அளித்தான்.
அது போலவே சாஸ்திரம்
பொய் என்றும், அதைச்
சொன்ன ஞானிகள் பொய்யர்
என்றும் அவள் சொன்னதும்
க்ஷணகாலத் தோற்றமே.
ஸீீதையை த்ரிஜடை ஆச்வாஸப்படுத்தும்போது,
"இந்த புஷ்பக விமானம்
உன் பர்த்தா உண்மையிலேயே
இறந்திருந்தால், உன்னை
ஏற்றிக்கொள்ளவே செய்யாது;
க்ஷணகாலமும் வைத்துக்
கொள்ளாது. உடனே உன்னைக்
கீழேத் தள்ளிவிட்டிருக்கும்"
என்கிறாள். இதிருலிருந்தே
இது ராவணனுடைய மாயை என்பதை
ஸீதை உணர்ந்துவிட்டாள்;
தெளிவு பெற்றாள்; ஆகையால்
இங்கு ராமனும் இறக்கவில்லை;
சாஸ்திரம் பொய்யல்ல;
சாஸ்திரஜ்ஞரும் பொய்யரல்லர்.
மேலும்,
'ஹதே-ராமே - ராமன் இறந்த
பிறகு இவர்கள் பொய்யர்கள்.
ராமே ஹதே ஸதி - ராமன் இறந்திருந்தால்
இவர்கள் பொய்யர்கள்'
என்று இரண்டு படியாக
அர்த்தம் கொள்ளலாம்.
முதற் படியில், ராமன்
இறந்துவிட்டான்; ஆக இவர்கள்
பொய்யர் என்றும் ஏற்படும்.
இரண்டாவது படியில், ராமன்
இறந்திருந்தால் இவர்கள்
பொய்யர் என்று அர்த்தமாகும்.
'சிஷீணாம் புநராத்யாநாம்
வாசம் அர்த்தோநுதாவதி'
என்ற ரீதியில், இவளுக்கு
ராமனுடைய பல-பராக்ரம-ஸெளர்ய-வீர்யங்கள்
தெரிந்தபடியால், மேலே
வரும் ஸம்பவங்களை அநுஸரித்துத்தான்
இவளுக்கு வாக்ப்ரயோகம்
ஏற்பட்டது. இதை அறிந்துதான்
வால்மீகியும் இம்மாதிரி
பிரயோகித்தார்.
மேலும்,
'ஸர்வேஹதே ராமே' என்ற இடத்தில்,
'அஹதே ராமே' என்றும் பதம்
பிரிக்கலாம். அப்போது
அந்ருதவாதிந: என்பது
காகு. இப்படி ஸ்வரபேதம்
கொண்டால் ஒருவிதச் சிரமமுமில்லை.
ராமன் கொல்லப்படாமலிருந்தால்
ஞானிகள் பொய் சொல்பவர்களா?
ராமே அஹதே ஸதி ஜ்ஞாநிந:
அந்ருதவாதிந: கிம்?
இம்மாதிரி
பல வகையில் இந்த ச்லோகங்களுக்குப்
பொருள் கூறலாமாகையால்
எல்லாம் ஸமஞ்ஜஸமாகிறது.
'ஸர்வேஹதே' என்ற இடத்தில்
அகாரப்ரஸ்லேஷம் கொண்டு
'அஹதே' என்று கொள்வது
உசிதம். காவியங்களிலும்
ராமாயணத்தில் பல இடங்களிலும்
இம்மாதிரி ப்ரஸ்லேஷம்
கொண்டு அர்த்தம் கூறுவது
வழக்கம்: ஸ்வரஸம்; ஸந்தர்ப்பாநுகுணமுமாகிறது;
அர்த்தத்தை போஷிக்கவும்
செய்கிறது. உதாரணமாக
இரண்டு இடங்களைக் காட்டுகிறோம்
:-
1. ராமன் ஸமுத்திரராஜனிடம்
வந்து, 'இலங்கைக்குச்
செல்ல வழி கொடு' என்று
கேட்கிறான். அதற்காக
அன்ன ஆஹாரமின்றி மூன்று
தினங்கள் நியமத்துடன்
தர்ப்பத்தின் மேல் படுத்துக்கொள்கிறான்.
அப்பொழுதும் ஸமுத்திரராஜன்
தன் ஸ்வரூபத்தைக் காட்டவில்லை.
'ந ச தர்ஸயதே மந்தஸ் ததா
ராமஸ்ய ஸா கர: |' என்றார்
வால்மீகி.
நாம் இங்கே
சிறிது ஆராய்ந்து பார்ப்போம்.
ராம தூதரான ஆஞ்ஜநேயர்
இலங்கைக்குச் சென்று
சீதையைப் பார்க்க ஸமுத்திரத்தைத்
தாண்ட ஆரம்பித்தார்.
அப்போது இந்த ஸமுத்திரம்
தன்னுள்ளே கிடக்கும்
மைநாக பர்வதத்தைப் பார்த்துக்
கூறுகிறது:-
ஸலிலாதூர்த்வம்
உத்திஷ்ட, திஷ்டத் வேஷகபிஸ்
த்வயி | அஸ்மாகம் அதிதிஸ்ஸைவ
பூஜ்யஸ்ச ப்லவதாம்வர:
||
"மைநாகமே ! உனக்கு மேலும்
கீழும் நாற்புறமும் வளர்வதற்குச்
சக்தி உண்டு. ஸமுத்திரத்திலிருந்து
மேலே எழுந்திரு. இந்தக்
குரங்கு உன்னிடத்தில்
இளைப்பாறிக் கொண்டு
மேலே செல்லட்டும். நமக்கு
ஓர் அதிதி கிடைத்திருக்கிறான்.
இவன் எல்லா வகையிலும்
பூஜிக்கத் தக்கவன். இக்ஷ்வாகு
வம்சத்தில் பிறந்த ஸகரராஜாவினால்
உண்டுபண்ணப் பட்டவன்
நான். எனவே எனக்கு ஸாகரம்
என்று பெயர். இஷ்வாகு
ஸந்ததியில் பிறந்த ஸ்ரீராமனுக்கு
இவன் ஸசிவனாக ஆகிறான்.
இவனை வரவேற்பது உனக்கும்
நன்மையைக் கொடுக்கும்;
எனக்கும் மேன்மையைக்
கொடுக்கும். இல்லாவிட்டால்
என்னை எல்லாரும் பழிப்பார்கள்"
என்று சொல்லிற்று.
இப்படிச்
சொன்ன ஸமுத்திரராஜன்,
இக்ஷ்வாகு வம்சத்தில்
பிறந்த ராமனே நேரில்
வந்து தன் வாயால் கெஞ்சிக்
கூத்தாடி மூன்று நாள்
உபவாஸத்துடன் பிரார்த்தித்தபோதும்
தன் வடிவைக் காட்டி வழியைக்
கொடுக்கவில்லை. கண்ணனுக்கு
யமுனாநதி தானாகவே வழி
கொடுத்தது போலன்றோ
கொடுக்கவேண்டும்? இந்தத்
தோஷத்தை இவனிடத்தில்
சுட்டிக் காட்டுவதற்காகவே
வால்மீகி இவனை முட்டாள்
- 'மந்த:' என்றார். உண்மையிலேயே,
ஸமுத்திரராஜன் முட்டாளா?
இல்லவே இல்லை. 'அமந்த:' என்று
இங்கு பதம். 'சமர்த்தன்'
என்று பொருள். சமர்தனானபடியால்
தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை.
யமுனையைக் போல் வழியைக்
கொடுத்துவிட்டால் ஸேதுபந்தனம்
முதலியவற்றுக்கு வழியே
இல்லை. பிற்காலத்திலுள்ளவர்கூட
ராமன் கட்டிய ஸேதுவைப்
பார்த்து மோக்ஷத்தை
அடைய விரகே இல்லை. பின்பும்
ப்ரஹ்மாஸ்த்ர ப்ரயோகம்
செய்யும்போதும் உலகத்திலுள்ள
ஜனங்களின் க்ஷேமத்தைக்
கருதி, 'ராமா! என் ஸ்வபாவத்தை
நான் மாற்றிக் கொள்ள
முடியாது. அணையைக் கட்டி
அதன் வழியாக இலங்கைக்குச்
செல்லலாம்' என்று இவ்வளவே
சொல்லிற்று. ஆகவே ஸேது
பந்தனம் முதலியவை நடக்கவேண்டும்
என்று எண்ணியே மிகவும்
ஸாமர்த்தியமாகக் கடல்
நடந்துகொண்டது. இதைக்
காட்டவே வால்மீகி, 'தர்ஸயதே
மந்த:' என்று பிரயோகித்தார்.
இரண்டு விதமாகப் பிரித்து
அர்த்தம் கொள்ளலாம்
என்று போலும்.
2. மற்றோர்
இடம் :- ஸா மே ந ஸய்யாமாரோடுமிச்சத்
யலஸகாமிநீ |
ராவணன் மந்த்ராலோசனை
செய்யும்போது சொல்லும்
வார்த்தை இது: 'அந்த ஸீதை
என் படுக்கையில் ஏறுவதற்கு
விரும்பவில்லை' என்பது
இதன் பொருள். 'ஸாமேந' என்ற
இடத்தில் 'மே' என்று பதம்
பிரித்துப் பொருள் கூறினோம்.
'ஸா அமேத ஸய்யாம்' என்றும்
பதம் பிரிக்கலாம். 'அந்த
ஸீதை அமேந - தரித்ரேண' என்று
பொருள். அதாவது ராஜ்யத்தைவிட்டு
காட்டுக்கு வந்து ஒருவித
ஸம்பத்தும் இல்லாமல்
பெரும் தரித்திரனான ராமனோடுகூடப்
படுக்கையில் இருக்க விரும்புகிறாள்.
அல்லது, ஸமாப்யதிகதரித்ரனான
புருஷோத்தமனான ராமனோடு
படுக்கையில் ஏற விரும்புகிறாள்.
அதாவது, ஆதிசேஷனாகிய
படுக்கையில் பகவானான
ராமனுடன் இருந்து விளையாட
விரும்புகிறாள் என்றும்
பொருள் கூறலாம்.
இப்படிப்
பல இடங்களில் அகாரப்ரஸ்லேஷம்
செய்து விசேஷார்த்தங்கள்
கூறுவது பெரியோர்களின்
வழக்கம். அது போல் இங்கும்
'அஹதே ராமே' என்று பதம்
பிரித்து அர்த்தத்தை
அநுஸந்திப்பது ரஸாவஹமாக
இருக்கும்.
ஆகவே எந்தச்
சாஸ்திரமும் பொய்யல்ல.
அதை நன்கு அறிந்து வஞ்சனையின்றி
லோபமின்றிச் சொல்பவர்களும்
பொய்யர் ஆகமாட்டார்கள்.
உதாஹரணமாகப் பஞ்சாங்கத்தைப்
பார்த்துக் கொள்வோம்.
திதி வார நக்ஷத்திரங்களில்
ஏதாவது பிசகு ஏற்படுகிறதா?
இன்ன கிழமையில் இன்ன
நக்ஷத்திரத்தில் அமாவாஸ்யை
என்ற இந்தத் திதியில்
சூரியக் கிரகணம் ஏற்படும்
என்று வெகு நாட்களுக்கு
முன்பே குறிப்பிட்டுவிடுகிறார்கள்
சாஸ்திரப்படி. அதில்
சிறிதளவும் மாறுதல் இல்லாமல்
அப்படியே ஏற்படுகிறது.
ஸூர்ய சந்த்ர க்ரஹணங்கள்
ஆகாசத்தில் எங்கேயே வெகுதூரத்தில்
நடக்கின்றன. இங்கிருந்து
எத்தனையோ நாட்களுக்கு
முன் குறிப்பிடுகிறார்கள்.
அளவும், காலம் முதலியவையும்
மாறுபடுவதில்லை. இவை
எல்லாவற்றையும் திடீரென்று
ஒருவர் எப்படி சொல்லமுடியும்?
இதற்காக ஏற்பட்ட ஜ்யோதிஸ்ஸாஸ்திரம்
மூலம் அதனை நன்கு அப்யஸித்தவர்களே
சொல்லமுடியும். ஆகவே
இது வேதத்துக்குப் பிரதான
அங்கமாகச் சொல்லப்பட்டது.
இங்கு
சமத்காரமாக ஒரு கதையுண்டு.
அதை எழுதுகிறோம். ஓர்
ஊரில் ஒரு பிச்சைக்காரன்
இருந்தான். தினமும் காலை
பிச்சை எடுத்து சாப்பிடுவது
வழக்கம். தினமும் காலை
எழுந்து தனது வேலையை
முடித்துக் கொண்டு போய்
பிச்சை எடுப்பது வழக்கம்.
ஒரு நாள் வழக்கமான வீட்டுக்குப்
போனான். வாசல் கதவு உள்ளே
தாளிட்டிருந்தது. திறக்கும்வறை
கொஞ்சம் உட்கார்ந்திருக்கலாம்
என்றெண்ணி வாசல் திண்ணையில்
உட்கார்ந்தான். வீட்டுக்குள்
ஓர் கிழவி தோசை சுட்டுக்கொண்டிருந்தாள்.
அப்பொழுது வாணலியில்
தோசையை வார்க்கும்போது
சொர் என்று சப்தம் வருமல்லவா.
இவன் வெளியில் உட்கார்ந்தபோது
அந்த சப்தம் காதில் விழுந்தது.
இவன் இதைக் கொண்டு தோசை
வார்கிறாள் என்பதை ஊகித்தான்.
இப்படி 15 தடவை சொர் என்ற
சப்தம் வந்தால் 15 தோசை
வார்த்தான் என்று ஊகித்து
கொண்டான். பிறகு கதவை
திறந்துவிட்டு கிழவி
வந்தாள். அவளைப்பார்த்ததும்
ஏதாவது பசிக்கு சாப்பாடு
கொடு என்று வினவினான்.
அந்த கிழவி ஒன்றுமில்லை
என்றும் போ என்றும்
கத்தினாள். அதற்கு இவன்
ஏனம்மா பொய் பேசுகிறாய்.
நான் ஜோஸ்யக்காரன்.
நீ தோசை வார்த்தாய்.
அதில் 15 அப்படியிருக்க
இல்லை என்கிறாயே, இது
நியாயமா என்றான். கிழவியும்
நான் தோசை வார்த்தது
எப்படி தெரியும், அதிலும்
15 என்று எப்படித் தெரியும்
என்று இவன் ப்ரபல ஜ்யோஸ்யக்காரன்தான்.
சாதாரண பிச்சைக்காரன்
அல்லன். என நினைத்து 3 தோசை
இவனுக்கு கொடுத்தாள்.
இதை வாங்கிக் கொண்டு
நான் சொன்னது சரிதானே
நீயே பார் என்று சொல்லிவிட்டு
அதை வாங்கிக் கொண்டு
வெளியில் வந்தான். அந்த
கிழவி ஊரில் எல்லோரிடமும்
இவன் சாமான்யமான பிச்சைக்காரன்
மாத்ரமல்லன். ஜோஸ்யமும்
நன்கு சொல்பவன் என்று
வெளியில் ப்ரசாரம் செய்து
விட்டாள். ஊரில் நன்கு
ப்ரசாரம் ஆகிவிட்டது.
ஒரு
சமயம் வண்ணான் ஒருவனுடைய
கழுதை தொலைந்துவிட்டது.
அவன் தேடியும் காணப்படவில்லை.
அப்பொழுது இந்த ஜோஸ்யக்காரன்
நினைவு அவனுக்கு வந்தது.
வண்ணானும் இவனிடம் கெஞ்சி
கூத்தாடி என் கழுதை எங்கு
இருக்கிறது கிடைக்குமா
என்று எல்லாம் கேட்டான்.
இரவு வேலையில் கழுதைகள்
ஓடிப்போகாமல் இருக்க
ஒவ்வொரு கழுதைகளின்
காலை ஒன்றோடு ஒன்று
சேர்த்து கட்டி வைப்போம்.
ஒன்றாக இருந்தால் அதன்
முன் இரண்டு கால்களை
பின்னி வைப்போம். அப்படி
செய்யாமல் இருந்துவிட்டேன்
என்றும் கேட்டான். இவனும்
தான் ஜோஸ்யக்காரன் அல்ல
என்பதை தெரியப்படுத்தாமல்
நாளை நான் இதற்கு கணிதம்
போட்டு சொல்கிறேன்
என்று சொல்லி அனுப்பிவிட்டான்.
சாயங்காலம் இவன் அந்த
கழுதையை தேட ஆரம்பித்தான்.
எங்கோ ஒரு மூலையில்
மேய்ந்துகொண்டிருந்ததை
கவனித்தான். உடன் அதைக்
கட்டி தனது தோட்டத்துக்கு
ஸமீபத்திலுள்ள குட்டிச்
சுவரின் அருகில் கட்டிவிட்டான்.
மறுநாள் காலை வண்ணான்
இவனைக் கேட்க, நான் ஜோஸயம்
பார்த்தேன். அதில் தெரியவந்தது
- ஒரு பர்லாங்கு தூரத்தில்
உள்ள சுவரின் பக்கத்தில்
கட்டப்பட்டுள்ளது. அதை
ஓட்டிக்கொண்டு போ என்று
பதில் சொன்னான். வண்ணானும்
அவன் சொற்படி போய்
பார்க்க கழுதை கண்ணில்
தெரிந்ததும் வெகு ஸந்தோஷத்துடன்
ஓட்டிக்கொண்டு போனான்.
அதன் பிறகு இந்த ஜோஸ்யகாரன்
ப்ரபலமாக ஜோஸ்யம சொல்லுபவன்
என்று தம்மட்டை அடித்துவிட்டான்.
ஒரு
சமயம் அந்த ஊர் பெரிய
அதிகாரி வீட்டில் இரண்டு
வெள்ளிப் பாத்திரங்கள்
காணாமல் போய் விட்டது.
அதிகாரி என்ன செய்வது
என்று யோசித்தான். அது
சமயம் வேலைக்காரன் இந்த
ஜொஸ்யகாரனை புகழந்து
பேச அவனும் ஸம்மதித்து
இவனை அழைத்து வரச்சொன்னான்.
வேலைக்காரனும் வெள்ளிப்பாத்திரம்
திருடு போனதை இவனிடம்
சொல்ல. இவனும் அதிகாரியைப்பார்த்து
உனது பாத்திரம் காணாமல்
போனதை கண்டு பிடிக்கத்தாநே
என்னை வரவழைத்தீர்கள்
என்றான். அதிகாரியும்
இதை எப்படி இவன் உணர்ந்தான்.
ஆக இவன் ப்ரபல ஜோதிஷன்
என்று நினைத்து அவனிடம்
எப்படி போயிற்று அது
கிடைக்குமா என்றெல்லாம்
கேட்டான். இவனும் 2 தினங்களில்
கணித சாஸ்த்திப்படி பார்த்து
விடை சொல்கிறேன் என்று
சொன்னான்.
பிறகு அதிகாரி,
ப்ரபல ஜோதிஷனிடம் சொல்லியிருக்கிறேன்.
அவர் உண்மையை சொல்லிவிடுவார்.
திருடனுக்கு பெரிய தண்டனை
கொடுக்கப் போகிறேன
என்று பறை சாத்தினான்.
இது விஷயம் ஊரில் பரவ
உண்மை திருடன் தன் உள்ளுக்குள்ளே
நடுங்கினான். என்ன செய்வது
என்பது புரிய வில்லை.
கடைசியில் ஒரு முடிவுக்கு
வந்தான். இரவு 9 மணிக்கு
ஜோதிஷனிடம் சரணமடைந்தான்.
இவனும் கம்பீரமாக அதை
என்னிடம் கொடுத்துவிடு.
நான் எப்படியாவது சமாளிக்கிறேன்
என்று அவைகளை வாங்கிக்கொண்டான்.
பிறகு மறுதினம் இரவில்
அதிகாரியின் தோட்டத்துக்குள்
அவைகளை புதைத்தான். அதற்கு
மறுநாள் அதிகாரியிடம்
சென்று கணித சாஸ்த்திரப்படி
பார்த்ததில் உங்கள் தோட்டத்துக்குள்
அவை புதைக்கப்பட்டிருப்பது
தெரிய வந்தது என்றான்.
அதிகாரியும் பார்க்க
இவைகளை கண்டு ஸந்தோஷமுற்று
அரசனிடம் சொல்ல இவனை
ஆஸ்தான ஜோதிஷராக நியமித்தான்.
இதுதான் ஆச்சர்யம். கால
ஸ்திதி எப்படியுள்ளது
என்பதை மக்களே பாருங்கள்.
இப்படித்தான்
உலகம் நடக்கிறது. ஒரு
பொய்யை ஒன்பது தடவை
பேசினால் உண்மையாக ஆகிவிடுகிறது.
ஏமாற்றம் அடையாதீர்கள்.
நீங்களும் ஏமார வேண்டாம்.
மற்றவரையும் ஏமாந்துபோகும்படி
செய்ய வேண்டாம்.
வைத்ய
சாஸ்த்ரம்போல் ஜோதிஷ
ஸாஸ்த்ரமும் உயர்ந்ததுதான்.
ஆனால் சரிவர கற்றவர்கள்
சொன்னால் பலிக்கும்.
அரைகுரை வைத்யம் கற்றவர்கள்
சொல்வது சில சமயம் விபரீதத்தில்
முடியும். சில ஜோதிஷர்கள்
வாக்கில் சனி இருக்கும்
என்பதுண்டு. அவர்கள்
எதை சொன்னாலும் அது
அப்படியே பலித்துவிடும்.
சில ஸாதுக்கள்
மஹான்கள் அவர்கள் நடக்கப்
போவதைத்தான் சொல்ல
திறமை பட்டவர்கள். சிலர்
ருஷப்ராயர்கள். அவர்கள்
எதைச் சொன்னாலும் அப்படியே
பலித்துவிடும். அது அவ்வளவு
ப்ரபாவம் பெற்றவர்கள்.
முன் சொன்னவர்கள் வாக்கு
இருக்கும் அர்த்தத்தை
அநுசரித்துதான் வரும்.
பின் சொன்னவர்களின்
வாக்கை அநுசரித்து பொருள்
ஏற்படும். இது விசேஷம்.
லெளகீகாநாம்
சாதூநாம் அர்த்தம் வாக்
அநுவர்ததே | ருஷீநாம்
புனராத்யானாம் வாசம்
அர்தோ அநுதாவதி ||
*****
|