மனம் ஏன் மாறியது
கடவுள்
மனிதர்களை படைக்கும்போது
ஒவ்வொருவருக்கும் காது,
கண், மூக்கு, நாக்கு, மனம்
முதலிய பல கருவிகளை கொடுக்கிறான்.
கண் காது முதலியவை வெளிப்புலன்கள்.
மனம் உட்புலன். ஒவ்வொரு
இந்திரியமும் தனக்கு
ஏற்பட்ட வெளி விஷயங்களை
கிரகித்து ஆத்மாவுக்கு
அந்த அந்த பொருள்களின்
அறிவை உண்டுபண்ணுகிறது.
வெளிப் புலன்கள் வெளியிலுள்ள
பதார்த்தங்களை அறிவிக்கும்போது
மனம் உடனிருந்து வேலை
செய்கிறது. மனம் ஆத்மாவுக்கு
ஏற்பட்ட சுக துக்கங்களை
எடுத்துக் கூறும் கருவி.
இது வெளியிலுள்ள பதார்த்தங்களை
நேரிடையாக அறிவிக்க திறமையற்றது.
முன்பு அநுபவித்த அர்த்தங்களை
வேறு வெளிப்புலன்களை
எதிர்பார்க்காமலே நினைப்பதற்கு
மாத்திறம் திறமை பெற்றது.
இந்த கருவி ஒவ்வொரு
பிராணியினிடத்தும் இருந்துகொண்டு
நல்ல கதியை கொடுப்பதற்கும்
தீய கதியை கொடுப்பதற்கும்
வல்லமை பெற்றது. சாதாரணமாக
இன்று ஒன்றை நாம் நினைக்கிறோம்.
நாளைதினம் வேறொன்றை
நினைக்கிறோம். மறுநாள்
மற்றும் ஒன்றை. ஒரே நிலையில்
மனம் இருப்பதில்லை. கணந்தோறும்
மனம் மாறுதலையடைந்துகொண்டே
வருகிறது. தானம் செய்யவேண்டும்
என்று நினைப்பவன், யாசகரை
கண்டதும் அவனுக்கு ஏதோ
கொடுக்கவேண்டும் என்று
உள்ளே செல்கிறான். பணத்தை
வைத்திருக்கும் பீரோவைத்
திறக்கும்போது முதலில்
நூறு ரூபாய் கொடுக்கவேண்டும்
என்று எண்ணினவன் ஐம்பது
ரூபாய் கொடுத்தால் போதும்
என்று எண்ணிவிடுகிறான்.
பர்ஸை திறக்கும்போது
இருபத்தைந்து கொடுத்தாலே
போதும் என்ற எண்ணம்
உண்டாகிறது. கடைசியில்
யாசகனுக்கு கொடுப்பது
பஞ்சபாண்டவர்களின் கட்டில்கால்
கதையாகிறது. இப்படி ஒவ்வொரு
விஷயத்திலும் மனம் மாறுதல்
அடைவதை பார்த்தே வருகிறோம்.
ஆகையால்
நல்ல காரியங்களை செய்வதோ
கெட்ட காரியங்களை செய்வதோ
எல்லாம் மனத்தின் வசமாகவே
உள்ளன.
சொர்க்கம்,
மோக்ஷம் முதலிய நல்ல
கதியை அடைவதும் நரகம்
முதலிய பெரும் பாதாளத்தில்
விழுவதும் மனத்தினால்தான்
ஏற்படுகின்றன. கோவிலில்
சென்று பகவானை ஸேவிக்க
வேண்டும் என்றும் புண்ணிய
தீர்த்தங்களில் ஸ்நானம்
செய்யவேண்டும் என்றும்
ஸ்ரீராமாயணம் முதலிய
ஸத் கதைகளை நடத்தி வைத்து
கேட்கவேண்டும் என்றும்
தான தர்மங்கள் செய்யவேண்டும்
என்றும் மனம் ஒருவனுக்கு
எண்ணத்தை கொடுத்தால்
அம்மாதிரி நடந்து அவன்
நல்ல கதியை பெறுவான்.
திருடவேண்டும் என்றும்
எப்படியாவது பணத்தை சேமிக்கவேண்டும்
என்றும் பொய் கூறவேண்டும்
என்றும் நல்ல கதைகளை
சொல்வோரை கெடுக்கவேண்டும்
என்றும் மனம் ஒருவனுக்கு
எண்ணத்தை கொடுத்தால்
அம்மாதிரியே அவன் நடந்துவிடுகிறான்.
அதன் மூலமாக நரகம் முதலிய
தீயலோகத்திற்கு சென்று
துக்கத்தை அநுபவிக்கிறான்.
எனவே, மனத்துக்கு எவ்வளவு
வலிமை உள்ளதோ அவ்வளவு
மகிமை உள்ள வலிமை மற்ற
எதற்கும் இல்லை என்றே
சொல்லலாம்.
மனம் நம்
வசமாகிவிட்டால் எல்லாவற்றையும்
எளிதில் சாதிக்கலாம்.
அது இஷ்டப்படி வெளி விஷயங்களில்
சஞ்சரிக்க தொடங்கினால்
அது போகும் வழியே மனிதனும்
சென்று தீய செயலுக்கு
ஆளாகிவிடுவான். ஆனால்
ஒரு சமயத்திலும் மனம்
ஒரு நிலையில் நிலையாக
இருப்பதில்லை. ஒவ்வொரு
நிமிஷமும் ஒவ்வொரு விஷயத்தை
நினைத்துக் கொண்டிருக்கிறது.
இதுதான் சஞ்சலமாயிற்றே.
ஒரு வாலிபன் ஒரு பெண்ணை
மணந்துகொள்ள பெரியோர்களுடன்
அவளை பார்க்க போகிறான்.
பெண்ணை பார்த்ததும் அவன்
மனம் அவளிடத்தில் லயிக்கிறது.
பிறகு நிச்சயம் செய்து
விவாகத்துக்கு ஒரு நாளும்
ஏற்படுத்துகிறார்கள்.
விவாக தினத்தன்று அந்த
பெண்ணின் கையை பிடித்ததும்
என்ன காரணமோ, இந்த பெண்
தனக்கு வேண்டாம் என்று
வெறுத்துவிடுகிறான்.
குடும்பத்தில் மிக்க
ஆசையுடன் வாழ்கையை நடத்திக்
கொண்டுவரும் தம்பதிகளும்
திடீரென்று மனம் உடைந்து
வேறுபாடு அடைகின்றனர்.
இவளிடத்தில் அவனுக்கு
இருந்த மனம் மாறிவிடுகிறது.
அவளுக்கும் கணவனிடத்தில்
மனம் மாறுபடுகிறது.
'இதற்கு
முன்பு இம்மாதிரி நண்பர்களையே
உலகத்தில் பார்த்ததில்லை'
என்று கூறத்தக்க இரு
நன்பர்கள் திடீரென்று
மனவேறுபாட்டை பெற்றுவிடுகின்றனர்.
ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர்
இருந்தார். அவர் அரை குறையாக
கற்றவர்; பூரணமான அறிவு
பெற்றவரல்லர். ஏதோ அதிர்ஷ்டத்தினால்
ஆசிரியர் பதவியை பெற்றுவிட்டார்.
அவர் பையன்களுக்குப்
பாடம் சொல்லிக் கொடுக்க
அவ்வளவு திறமை பெற்றவரல்லர்.
ஆயினும் அவருக்கு பாடங்களை
கற்பிக்க அவகாசம் ஏற்பட்டது.
அதில் ஒரு பையன் முன்பே
வேறு ஆசிரியரிடம் நன்கு
கற்றவன். அவன் உதவியை
கொண்டு இவர் பாடத்தை
நடத்தினார். அதன் மூலமாக
அவனிடத்தில் ஏற்பட்ட
ஆசைக்கு அளவே இல்லை. இந்த
பையன் எதை சொன்னாலும்
அவர் கேட்பார். இவன் இஷ்டப்படியே
பள்ளியிலும் தன் இல்லத்திலும்
ஏற்படும் வேலைகளிலும்
பொதுவான காரியங்களிலும்
இந்த ஆசிரியர் நடந்து
வந்தார். சிறிது காலமாயிற்று.
இந்த ஆசிரியருக்கும்
பையனுக்குமே மனத்தில்
முன்போல் அன்பு இல்லை.
பையனுக்கும் மனம் அவரிடத்தில்
மாறிவிட்டது.
இப்படி
பல விஷயங்களில் உலகத்தில்
மன மாறாட்டம் அதிகமாக
ஏற்படுகிறது. ஏன்? மனம்
குரங்கு போன்றது. குரங்கு
ஒரு கிளையிலிருந்து மற்றொரு
கிளைக்கு தாவும். மறுபடி
அந்த கிளையிலிருந்து
இந்த கிளைக்கு தாவும்.
வேறொரு கிளைக்கும் தாவும்.
ஒரே நிலையில் இல்லாத
பிராணி அது. 'குரங்கு கையில்
அகப்பட்ட பூமாலை' என்று
சொல்லுவதுண்டு. குரங்கு
கையில் பூமாலை கிடைத்தால்
அதை என்ன என்ன செய்யும்
என்று சொல்ல வேண்டுமா?
பூவினின்று மணக்கும்
மணத்தையா அது கவனிக்கும்?
மிக மென்மையாக மாலை உள்ளது
என்று பூவின் பெருமையைத்தான்
அது கவனிக்குமா? உடனடியாக
கசக்கி மாலையை எறிந்து
எடுமே.
ஏதோ அதிருஷ்டத்தினால்
ஓர் உயர்ந்த ரத்தினம்
குரங்கின் கையில் கிடைத்தால்
அதை அது என்ன செய்யும்?
மூக்கால் மோந்து பார்க்கும்,
முத்தமிடும், நாவினால்
நுகரும், தூரத்தில் எறியும்,
மறுபடி எடுக்கும். அடிக்கடி
அதை பார்த்து சிரிக்கும்.
அந்த ரத்தினத்தை கல்லால்
பொடி செய்யாமல் இருந்தால்
போதும்; அதுவே அந்த ரத்தினத்தின்
அதிர்ஷ்டம். அல்லது அந்த
ரத்தினத்தை அடைபவனது
அதிர்ஷ்டம். இம்மாதிரி
நிலையை உடைய குரங்குக்குச்
சமமானது மனம். இது பகவானிடத்திலோ
வித்வானான உயர்ந்த பாகவதனிடத்திலோ
ஸத் விஷயங்களிலோ நிலைத்திருக்காது.
மோகமாகிய
பெருங்காட்டில் மனக்குரங்கு
சஞ்சரிக்கும். அழகிய
பெண்களின் கொங்கைகளாகிய
மலையில் செல்லும் ஆசையாகிய
கிளைகளில் தாவும். இதை
எப்பெருமானிடத்தில்
பக்தியாகிய கயிற்றால்
கட்டினால்தான் நிலைத்து
நிற்கும். இப்படி மனம்
மிக சஞ்சலமாக இருக்கும்
தன்மையை நினைத்தே, 'சஞ்சலம்
ஹி மந: கிருஷ்ண' என்று அர்ஜுனன்
கிருஷ்ணனிடம் சொன்னான்.
கிருஷ்ண பரமாத்மாவும்
"மனத்தை அடக்குவது சிரமம்தான்.
ஆயினும் மிக்க பயிற்சியினாலும்
வைராக்கியத்தினாலும்தான்
அடக்கி கொள்ள வேண்டும்"
என்றான். எந்த விஷயத்தையும்
அப்யாஸத்தால் பயிலலாம்.
உதாரணமாக, மிக்க வலிமை
பெற்ற ஒரு காளை மாட்டை
கழுத்தில் எடுத்து போட்டுக்
கொண்டு ஒரு மைல் தூரம்
யாராலும் செல்ல முடியாது.
ஆயினும் இதை எளிதிலேயே
செய்யலாம். ஒருவன் பதினைந்து
தினங்கள் கொண்ட ஒரு
சிறிய கன்றை கழுத்தில்
போட்டு கொண்டு ஒரு
மைல் தூரம் சென்றான்.
இதை எளிதில் செய்ய முடியுமே.
இம்மாதிரி அந்த கன்றையே
மாதக்கணக்கிலும் வருஷக்கணக்கிலும்
கழுத்தில் எடுத்துக்கொண்டே
இரண்டு மைல் மூன்று மைல்
தூரம் செல்ல ஆரம்பித்தான்.
முதல் தினத்திலிருந்து
வழக்கத்திலேயே வந்துள்ளபடியால்
கன்று பெரிதாகியுங்கூட
ஆயாஸமின்றி எடுத்துச்
செல்ல முடிந்தது இவனுக்கு,
கன்றும் நாளுக்கு நாள்
வயதாகியும் பலிஷ்டமாகியும்
வந்தது. இவன் நேற்று எடுத்து
சென்ற கன்றுதானே என்று
தினந்தோறும் எடுத்து
செல்லலானான். இத அப்யாஸத்தால்
ஏற்படுகிற விஷயம். திடீரென்று
ஒரு பெரிய மாட்டை யாரால்தான்
எடுத்து செல்ல முடியும்?
இம்மாதிரியே
மனத்தை நாம் நல்ல விஷயங்களில்
அப்யஸித்து வந்தால் மாறாட்டமில்லாமல்
ஒரே விஷயத்தில் நிலைத்து
நிற்கும் என்ற அபிப்ராயத்துடன்
ஸ்ரீகிருஷ்ணன், 'அப்யாஸேந
து கெளந்தேய, வைராக்யேண
ச க்ருஹ்யதே' என்றான்.
ஆகையால் கணவன் மனைவி
தாய் தந்தை புதல்வன்
நண்பர்கள் முதலிய இவர்களுக்கு
பரஸ்பரம் இருக்கும் அன்பு
ஒரு நிலையில் இருக்காது.
மாறாட்டத்தை அடைந்தே
தீரும். யஜமானன் தனக்கு
அடுத்த வேலைக்காரனிடத்தில்
அதிக அன்பை பாராட்டுகிறான்;
அவன் சொன்னபடி கேட்கிறான்.
வேலைக்காரன் இட்டதே சட்டம்.
இம்மாதிரி இருந்தும்
அந்த யஜமானன் அந்த சிப்பந்தியினிடத்தில்
மன மாறாட்டத்தை அடைந்து
அவனை வேலையிலிருந்து
நீக்கிவிடுவதை பல இடங்கிளில்
பார்க்கிறோம்.
இப்படி
உலகத்தில் மன மாறாட்டம்
அடைவதை பல இடங்களில்
பார்த்திருப்பதோடு
அல்லாமல் ராமாயணத்திலும்
இதை கேட்டிருக்கிறோம்.
தசரத சக்கரவர்த்தியின்
மூன்றாம் மனைவியான கைகேயி
ஸ்ரீராமனிடத்தில் வைத்திருந்த
அன்பை ஒரு நிமிஷத்தில்
மாற்றிக்கொண்டாளே. 'அயோத்தியை
ராமன் ஆண்டால் என்ன? பரதன்
ஆண்டால் என்ன? எனக்கு
ஒருவிதமான வேறுபாடும்
இல்லை. இவ்விருவரிடத்திலும்
வைஷம்ய புத்தி எனக்கு
இல்லை' என்று சொல்லி,
ராமனிடத்தில் அதிக ஆவல்
கொண்ட கைகேயி ராமனின்
பட்டாபிஷேகத்தை கலைக்க
வேண்டும் என்று எண்ணி
சொல்ல வந்த கூனியின்
கழுத்தில் உயர்ந்த முத்தாபரணத்தை
போட்டாள் அல்லவா? இப்படிப்
பட்ட இவளது மனம் ஏன் மாறியது?
"இப்போதே ராமனை பதினான்கு
வருஷம் காட்டுக்கு அனுப்புகிறேன்,
பரதனுக்கு அபிஷேகம் செய்ய
ஏற்பாடு செய்கிறேன்"
என்று சொல்லி, கணவனான
தசரதனிடத்தில் இவ்விஷயத்தை
கூறினாள் அல்லவா?
ஸ்ரீராமன்
சிறியவனாக இருந்தபோது
உண்டை வில்லை எடுத்து
கூனியின் கூனைப் பார்த்து
விளையாட்டு என்று கருதியே
அடித்தான். அது அவளுக்கு
துன்பத்தை கொடுத்தபடியால்
அவளது மனம் மாறியது. இது
நியாயமே. கைகேயின் மனம்
ஏன் மாறியது? இவள் ராமனிடத்தில்
அதிக அன்பு கொண்டவள்தானே?
'எல்லாம்
எம்பெருமானின் ஸங்கல்பத்தினால்
நடக்கின்றன' என்று வேதாந்திகள்
கூறுகின்றனர். ஒரு பொருளினிடத்தில்
பிரீதியை வைப்பதோ பகையை
பாராட்டுவதோ நமது முயற்சியினால்
நடப்பதன்று; நம்முடைய
நினைப்பினால் நடைபெறுவதுமன்று.
இவை பகவத் ஸங்கல்பாயத்தம்,
'ஆத்மனஸ் து காமாய ஸர்வம்
ப்ரியம் பவதி' என்று வேதமும்
கூறுகிறது. நாம் ஒருவரிடத்தில்
அதிக ஆவலை காட்ட வேண்டும்
என்று எண்ணம் கொண்டாலும்
அது அப்படியே நடைபெறுவதில்லை.
நம் மனம் வேறு விதமாகவே
முடிகிறது. பகவான் அந்த
அந்த விஷயங்களுக்கு தகுந்தாற்போல்
முன்பே ஒரு காரணத்தை
ஏற்பாடு செய்து மன மாறாட்டத்தை
உண்டு பண்ணுகிறான்.
கைகேயி
தனக்கு திருமணமாவதற்கு
முன்பு தந்தையின் இல்லத்திலிருந்து
வந்தாள். அப்பொழுது
துர்வாஸர் என்ற முனிவர்
கேகய மகாராஜனின் அரண்மனைக்கு
வந்தார். அரசன் முனிவரை
கண்டு உகந்து வரவேற்று
அர்க்கிய பாத்யாதிகளை
ஸமர்ப்பித்து, "ஸ்வாமிக்கு
என்ன திருவுள்ளம்? அதை
செய்ய அடியேன் ஸித்தனாக
இருக்கிறேன்" என்றான்.
முனிவர் மிக்க மகிழ்ச்சியுடன்,
"நான் ஒரு வேள்வி செய்ய
நினைத்திருக்கிறேன்.
இது பதினைந்து தினங்களில்
முடிவு பெறும். இதற்கு
வேண்டிய பொருள்களையும்
உன் அரண்மனையில் தனியாக
ஓர் இடத்தையும் தர வேண்டும்"
என்று கேட்டார். அரசன்,
"துர்வாஸரோ மிகக் கோபம்
கொண்டவர்; ஏதாவது இவ்விடத்தில்
தீய செயல் ஏற்பட்டால்
சபித்துவிடுவார். ஆகையால்
அவருக்கு இங்கு இடம்
கொடுப்பது ஏதாவது அநிஷ்டத்தில்
முடியும்' என்று எண்ணி,
"முனிச்ரேஷ்டரே, தேவரீர்
வேள்வி செய்யத் தகுந்த
இடமாக, இந்த நாட்டில்
பதினைந்து மைல் தூரத்தில்
ஒரு கட்டிடத்தை கட்டித்
தருகிறேன். வேண்டிய பொருள்களையும்
கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்"
என்றான். முனிவர் அதற்கு
சம்மதிக்கவில்லை.
இவ்விஷயத்தை
கேட்ட கேகய மகாராஜனின்
புதல்வியான கைகேயி தந்தையை
பார்த்து "அப்பா! நீர்
இந்த முனிவருக்கு அரண்மனையிலேயே
இடம் கொடும். நான் பக்கத்திலேயே
இருந்து இவரை உபசரிக்கிறேன்.
அதை பற்றி உமக்கு கஷ்டம்
வேண்டாம்" என்றாள். கேகயன்,
பெண் சொன்னபடியே சம்மதித்தான்.
துர்வாஸர் வேள்வியை செய்யத்
தொடங்கினார்.
பத்து
தினங்கள் சென்றன. தினந்தோறும்
காலையிலும் மாலையிலும்
நகரிலுள்ள ஜனங்கள் முனிவரைத்
தரிசிக்க வருவார்கள்.
முனிவர் அந்த சமயம் யோகத்தில்
ஆழ்ந்திருப்பார். ஜனங்கள்
புனிதத்தன்மை பெற்ற முனிவரின்
முகத்தை தரிசித்து வலம்
வந்து பல பாடல்களை பாடி
செல்வர். இப்படி இருக்கும்
தருணம் கைகேயி, யோகத்தில்
ஆழ்ந்திருக்கும் முனிவர்
அசையாமலும் பேசாமலும்
ஒரே நியதியுடன் இருப்பதை
கண்டு, முனிவரின் முகத்தில்
ஒரு சித்திரத்தை வரைய
நினைத்துவிட்டாள். இவள்
அறியாத பெண்ணாகையால்
ஏதோ விளையாட்டாக எண்ணிவிட்டாள்.
சித்திரம் வரைவதில் மிக்க
திறமை பெற்றவள் இவள்.
அசையாமலும் ஆடாமலும்
இவர் இருந்தபடியால் இவரது
இரு தாடைகளிலும் ஒரு
புலியையும் ஒரு சிங்கத்தையும்
வரைந்துவிட்டாள். இதை
முனிவரும் அறியவில்லை.
மறு
நாள் காலை ஜனங்கள் முனிவரை
தரிசிக்க வந்தனர். புலி
போலவும் சிங்கம் போலவும்
இவர் காக்ஷி அளித்தார்.
இதைக் கண்ட ஜனங்கள் மிரண்டு
திரண்டு, "ஐயோ! புலியும்
சிங்கமும் இங்கு வந்து
பயமுறுத்துகின்றனவே!
திடீரென இவை இங்கு எப்படி
வந்தன?" என்று கூக்குரல்
இட்டு ஓடத்தோடங்கினர்.
அரசன் இதைக் கேட்டு வந்து
பார்த்துப் பயந்தான்.
பெரும் கூச்சல் ஏற்பட்டது.
முனிவர் யோகத்திலிருந்து
எழுந்து 'இது என்ன? எல்லா
ஜனங்களும் என்னை கண்டு
வெறுக்கிறார்களே! நேற்றைய
முந்திய தினம்போல் என்னிடத்தில்
ஜனங்கள் நெருங்கவில்லையே!'
என்று யோசித்தார். ஜனங்களின்
பேச்சை கேட்டு விஷயத்தை
தெரிந்து கொண்டார்.
பிறகு உட்கண்ணால் கைகேயியின்
செயல் இது என்று எண்ணி
அவளைச் சபித்தார்.
"கைகேயி,
இப்பொழுது ஜனங்கள் என்னை
கண்டு வெறுத்தது போல்
உன்னையும் ஒரு சமயம்
எல்லா ஜனங்களும் வெறுப்பார்கள்.
அப்படி அனைவரும் வெறுக்கும்படியான
ஒரு செயலை நீ செய்வாய்.
இப்படிப்பட்ட செயலை செய்தும்
உன் மனத்தில் கலக்கமும்
வருத்தமும் ஏற்படா, முகத்திலும்
ஒரு விகாரமும் ஏற்படாது"
என்ற முனிவர் சபித்தார்.
இதை கேட்ட கைகேயி, "ஸ்வாமிந்,
ஏதோ அறியாத்தனமாக செய்துவிட்டேன்;
இதை பொறுத்தருளவேண்டும்"
என்றாள். துர்வாஸர், "நீ
என்னை இது வரையில் நன்கு
உபசரித்தபடியால் ஒரு
சமயத்தில் உன் பர்த்தாவைக்
காப்பாற்றுவாய். அதன்
மூலமாக பர்த்தா உன் இஷ்டப்படி
நடந்து உன் வார்த்தையை
கேட்டு உன்னை மகிழ்விப்பான்.
இப்படி சித்திரம் வரைந்து
அபசார பட்டதனால் முன்கூறிய
சாபத்தையும் பெறுவாய்"
என்று சொல்லி தாம் வந்த
காரியத்தை முடித்துக்
கொண்டு சென்றுவிட்டார்.
அவருடைய அநுக்கிரகம்,
சம்பராசுரனைத் தசரதர்
வென்றபோது கைகேயிக்கு
பலித்தது. சாபம் ஸ்ரீராமனை
காட்டுக்கு அனுப்பும்படியான
மனத்தை உண்டு பண்ணிற்று.
ஆகையால்
மனிதனின் மனம் ஒரே விஷயத்தில்
நிலைத்து நிற்காது. எனவே
கெட்ட விஷயங்களில் மனத்தை
செலுத்தாமல் ஸத்விஷயங்களில்
பயிற்சி செய்து நிலைக்க
செய்து நல்ல கதியை பெற
விரும்ப வேண்டும்.
மனைவி
புருஷர்களுக்கே ஏதோ
ஒரு காரணத்தால் மனம்
மாறி டைவர்ஸ் செய்து
கொள்ளுகிறார்களே. எத்தனை
வருடம் குடித்தனம் செய்துள்ளனர்.
எவ்வளவு நகை புடவை ஆஹாரங்கள்
பெற்றுள்ளனர். எப்படியோ
மாறிவிடுகிறது. தாய்
தந்தை புத்ரன் இவர்கள்
கொடுக்கும் ஆனந்தம்
அல்பம். மஹத்தான ஆனந்தத்தை
அளிக்கும் பர்தாவை எவள்
விடுவாள்? மஹா பாபம் என்றாள்,
ஸீதா பிராட்டி கெளஸல்யையினிடம்.
குரங்கு
போல் உள்ள மனதை வெளி
விஷயங்களாகிற கிளைகளில்
ஸஞ்சரிக்க விடாமல் எம்பெருமானிடம்
உயர்ந்த பிரியம் என்ற
கிளையில் சஞ்சரிக்க வைக்க
வேண்டும் என்று மனதை
விளித்து ஆழ்வார்கள்
பாடுகின்றனர். இதுதான்
ஸம்ஸார பந்தத்திற்கு
மோக்ஷத்துக்கு காரணம்.
நஞ்சமே, நல்லை
நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்னக்
குறைவினம். மைந்தனை மலராள்
மணாளனை துஞ்சும்போது
விடாது தொடர் கண்டாய.
என்றவைகளை கவனிக்கவும்.
*****
|