பற்றாக் குறை
இப்பொழுது
எங்கே பார்த்தாலும் எங்கே
சென்றாலும் ஒரே பேச்சாக
இருக்கிறது. என்ன வார்த்தை
அது? "என் குடும்ப வாழ்க்கையை
நடத்தப் பொருள் போதவில்லையே?
எப்போதும் பற்றாக்குறையாகவே
உள்ளதே?" என்று. இக்காலத்தில்
ஒவ்வொரு பொருளின் விலையும்
விஷம்போல் ஏறிக் கொண்டே
வருகிறது. 'குடும்பத்தை
நடத்தப் போதுமான வருவாய்
இல்லை. குடும்பத்துக்குத்
தேவையான சிலவற்றைத் தான்
வாங்க முடிகிறது. மற்றும்
பலவற்றை வாங்கவே முடிவதில்லை'
என்று அனைவருமே எங்கும்
கவலைப் படுகின்றனர்.
முன்காலத்திலோ
வருமானம் குறைந்திருந்த
போதிலும் பொருள்கள்
மலிந்திருந்தபடியால்
குடும்பத்தை ஸெளகரியமாக
நடத்தி வந்தனர். சிறிது
சேமித்தும் வைத்துக்
கொண்டனர். இக்காலத்தில்
செலவுக்கே போதாமலிருக்கச்
சேமிக்க வழி ஏது? இப்படி
இருக்கும் நிலையில் ஜனங்கள்
சொல்லும் இந்தப் பற்றாக்குறையைப்
பற்றிச் சிறிது கவனிப்போம்.
ஸுகத்துடன் இல்லற
வாழக்கையை நடத்த வேண்டும்
என்றே எல்லோரும் விரும்புகின்றனர்.
ஸுகம் என்பது, ஒருவிதக்
கஷ்டமுமில்லாமல் நினைத்தபோது
எல்லா விஷயங்களையும்
அநுபவிப்பதுதான். இந்த
ஸுகமும் வீடு வாசல் மனை
தோட்டம் மனைவி குழந்தைகள்
முதலியவற்றைக் கொண்டு
அடையப்படுவது. இதற்கும்
மூலம் பொருள்தான். பணம்
இல்லாமல் எந்த ஸுகத்தை
எவன் அடைய முடியும்? இவ்வுலக
வாழக்கையில் எல்லாம்
அர்த்தஸாத்யமாகத்தான்
இருக்கிறது.
"பணம் கையில்
இல்லை என்றால் தாய் நிந்திக்கிறாள்;
தந்தையும் ஸந்தோஷப்படுவதில்லை;
ஸஹோதரனும் பேசுவதில்லை;
வேலைக்காரன் கோபித்துக்
கொள்ளுகிறான்; புதல்வனும்
இவன் சொல்வதைக் கேட்பதில்லை.
இவன் ஆவலுடன் மணந்துகொண்ட
மனைவியும் இவனை அணைத்துக்
கொள்வதில்லை. இதுவரையில்,
தன் உயிரையும் கொடுத்து
உதவுவதற்கு ஸித்தமாக
இருந்த ஸ்நேஹிதன் அப்போது
இவனிடத்தில் பணமின்மையைக்
கண்டு, தன்னிடம் ஏதாவது
பணம் கேட்பானோ என்று
பயந்து இவனைப் பார்த்தும்
பார்க்காதவன் போல் போய்விடுவான்.
இம்மாதிரி உலகத்தில்
பணமில்லாதவனை மதிப்பார்
யாருமில்லை. பணம் இருக்குமிடத்தில்,
முன்பு ஸ்நேஹிதர்களாகவும்
பந்துக்களாகவும் இல்லாதவர்களும்
உறவையும் ஸ்நேஹத்தையும்
கல்பித்துக்கொண்டு
வந்து, நமது செல்வத்தைத்
தேகத்திலுள்ள இரத்தத்தை
அட்டை பூச்சி உறிஞ்சுவதுபோல்
சாப்பிட்டுவிடுவார்கள்.
பணம் இல்லாதபோது இவனை
ஒருவரும் சீந்துவார்
இல்லை. ஆகையால் எவ்விதமாயினும்
பணம் ஸம்பாதிக்க முயற்சி
செய்ய வேண்டும்" என்று
ஒரு கவியும் சொன்னான்.
ஆனாலும்
ஒரு குடும்பத்திலுள்ளவன்,
தன் குடும்பத்துக்குப்
போதுமான அளவு வருவாய்
வந்தபோதிலும் அதில்
அவன் திருப்தி அடைவதில்லை.
தனக்குப் போதவில்லை,
பற்றாக்குறை என்று சொல்லிக்
கொள்கிறான். பல இடங்களில்
இதைக் காணலாம். ஒருவனுக்கு
நாலு காணி நிலம் இருந்து
அதில் அதிக வரும்படி
வந்தாலும், அதைக் கொண்டு
வாழக்கையை ஸுகமாக நடத்த
ஸெளகரியம் இருந்தும்,
திருப்தியடையாமல் இது
தனக்குப் போதாது என்று
சொல்லிக் கொண்டு மேன்மேலும்
நிலங்களை வாங்குவதிலோ
பங்களாக்களை வாங்கி அதன்
மூலம் பணம் ஸம்பாதிப்பதிலோ
வியாபாரம் செய்து பணத்தைத்திரட்டுவதிலோ
நோக்கமுடையவனாக இருக்கிறான்.
உலகத்திலுள்ள அனைவருக்குமே
இந்த ஸ்வபாவம் உண்டு.
எங்கேயாவது
ஓரிடத்தில் இப்படி மேன்மேலும்
ஆசையில்லாதவன் இருப்பானோ
என்றால் அது அத்தி பூத்தது
போலத்தான். உண்மையில்
தன் குடும்பத்துக்குப்
போதுமான வருவாய் இல்லாதவன்
இப்படித் தன் குடும்பத்துக்குப்
போதுமான பொருளை ஸம்பாதிக்க
ஆசைப்படுவதில் தவறில்லை;
ஒரு விதத்தில் அதற்குப்
பொருத்தம் உண்டு. ஆயிரக்
கணக்கான ரூபாய்களை ஸம்பாதித்துத்
தன் குடும்பத் தேவைக்கும்
மேலாகத் திரட்டி வைத்து
அதிலும் திருப்தி பெறாமல்
பொருள் ஈட்டுவதிலேயே
மனத்தைச் செலுத்தி, தர்மகாரியங்களில்
எள்ளளவும் மனத்தைச் செலுத்தாமல்
இருக்கிறார்களே, இதுதான்
மிகவும் வியக்கத்தக்கது.
மக்கள்
யாவரும் ஒரேவிதமான பணக்காரர்களும்
அல்லர்; ஒரேவிதமான ஏழைகளும்
அல்லர்; படிப்பு முதலிய
மற்ற எல்லா விஷயங்களிலும்
போலப் பண விஷயத்திலும்
தாரதம்யம் உண்டு. ஒருவன்
பத்தாயிரம் ரூபாய்க்கு
அதிபதி; ஒருவன் ஐம்பதினாயிரத்துக்கு;
மற்றவன் லக்ஷத்துக்கு;
இன்னொருவன் கோடிக்கு.
இப்படியிருக்க ஒவ்வொருவனும்
தனக்கு மேல் பணக்காரனைப்
பார்த்துத் தான் தரித்ரன்
என்று எண்ணுகிறான். இப்படி
எண்ணினால் எல்லாரும்
தரித்ரர்கள்தாம். தனக்குக்
கீழ்நிலையில் உள்ளவர்களைப்
பார்த்தால், எல்லாரும்
பணக்காரர்களே, இதைத்தான்
ஒரு கவியும் சொன்னான்:
உபர்யுபரி
பச்யந்த: ஸர்வோ யாதி
தரித்ரதாம் | அதோத: பச்யத:
கஸ்ய மஹிமா நோபஜாயதே
||
ஆகையால் தனக்குக் கீழ்நிலையிலுள்ள
ஏழை மக்களைப் பார்த்து,
தான் எவ்வளவோ செல்வன்
என்று எண்ணி ஸந்தோஷமடைய
வேண்டும். இதுதான் அறிவுள்ளவனின்
தன்மை. எப்போதும் திருப்தி
இல்லாமல் பற்றாக்குறையை
ஏறிட்டுக்கொண்டு மேன்மேலும்
பணம் ஸம்பாதிப்பதில்
மேல் விழுந்து செல்கிறவன்
புத்திசாலியாகமாட்டான்.
யத்
ப்ருதிவ்யாம் வ்ரீஹியவம்
ஹிரண்யம் பசவஸ் ஸ்த்ரிய:
| ஏகஸ்யாபி ந பர்யாப்தம்
தஸ்மாத் த்ருஷ்ணாம் பரித்யஜேத்
||
என்று மகரிஷியும் மிகவும்
அழகாகச் சொன்னார். இவ்வுலகில்
பூமி தானியம் யானை குதிரை
பொன் பெண் பசுக்கள்
முதலிய எவ்வளவு ஐஸ்வர்யம்
உண்டோ இவை அனைத்தையும்
ஒருவனிடத்திலேயே கொடுத்தாலும்
அவன் திருப்தியடைவானா
என்றால் அது ஸந்தேஹம்தான்.
முன்பு இவற்றில் கோடியில்
ஓர் அம்சத்தைப் பெற்றிருந்தோமோ
இல்லையோ? இப்பொழுது
எவ்வளவோ மடங்கு உலகம்
முழுவதையும் பெற்றிருக்கிறோமே
என்று திருப்தியடைவதில்லை.
இன்னும் சில அம்சங்களைப்
பகவான் படைத்து நமக்கு
அளித்தால் அவற்றையும்
பெற்று வாழலமே என்றுதான்
எண்ணுகிறான். மனிதனின்
சித்த விருத்தி இப்படி
அமைந்திருக்கிறது.
இதில்
உதாஹரணத்துக்கு ஒரு விஷயத்தை
எடுத்துக் கொள்ளலாம்.
யயாதி என்பவர் பேரரசர்.
அவர் எவ்வளவோ இன்பங்களை
அநுபவித்தார். பிறகு
ஒரு சாபத்தினால் அகாலத்தில்
அவருக்குக் கிழத்தன்மை
வந்துவிட்டது. அந்த மாறுபட்ட
உடலைக் கண்டு அஞ்சினார்.
'ஐயோ, எப்படி இனி இவ்வுலக
இன்பங்களை அநுபவிக்க
முடியும்?' என்று கவலை
கொண்டார். இன்பங்களில்
நசை (ஆசை) யுற்றவராய் வாலிபப்
பருவத்தில் இருந்த தம்
புதல்வர்களிடத்தில்
கிழத்தன்மையைக் கொடுத்து
அவர்களது யெளவனத்தைப்
பெற்றுத் தாம் இன்பம்
துய்க்க விரும்பினார்.
பிறருடைய யெளவனத்தைப்
பெற்றாவது ஸுகிக்க வேண்டும்
என்று அவர் விரும்பினார்.
அதிலும் தம் புதல்வனின்
யெளவனத்தை விரும்பினார்.
அவருடைய புதல்வனாவது
நீண்ட காலம் இவ்வின்பங்களை
அநுபவித்திருந்தால்
ஒருவாறு பொருந்தும்.
அதுவுமில்லை.
இது போகட்டும்.
பிள்ளைகளாவது தகப்பனாருடைய
வார்த்தையைக் கேட்டு
யெளவனத்தைக் கொடுக்கலாம்.
கொடுக்க ஸம்மதிக்கிறார்களா?
இல்லை. ஏனென்றால் அவர்களும்
இவ்வுலக இன்பங்களை அநுபவிக்க
ஆசையுள்ளவர்கள்தாமே?
கடைசியில், புரு என்பவன்
இசைந்தான். இவ்வாறு மிகவும்
முயன்று யெளவனத்தை அடைந்து
அவர் திருப்தி அடைந்தாரா
என்றால் இல்லை. இறுதியில்
அவரே சொல்லுகிறார்:
ந
ஜாது காம: காமாநாம் உபபோகேந
சாம்யதி | ஹவிஷா க்ருஷ்ணவர்த்மேவ
பூய ஏவாபிவர்ததே ||
"ஓரிடத்தில்
நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.
அதை அணைக்க ஜலத்தை ஒருவன்
கொட்டினான். அது அணைந்து
விட்டது. இதைப் பார்த்துக்
கொண்டிருந்த மற்றொருவன்
வேறோர் இடத்தில் மற்றொரு
ஸமயம், நெருப்புப் பிடித்துக்
கொண்டபோது, 'நெய்யும்
ஜலத்தைப் போல் ஒரு திரவபதாரத்தம்தானே?
இதைப் கொண்டு அணைக்கலாம்'
என்ற எண்ணி, அதில் நெய்யைக்
கொட்டினான். அது, அணைவதற்குப்
பதிலாகக் கொழுந்து விட்டு
எரிய ஆரம்பித்தது. மேன்
மேலும் இவன் நெய்யைக்
கொட்ட, அந்த அக்கினி
விருத்தியடைந்துகொண்டே
இருந்தது; அணையவே இல்லை.
அது போல இவ்வுலக இன்பங்களை
யெளவனத்தைக் கொண்டு
அநுபவித்துவிட்டால்
ஆசை தீர்ந்துவிடும் என்று
நான் நினைத்தேன். ஆனால்
இது மேலும் மேலும் விருத்தியடைகிறதே
தவிரத் திருப்தி ஏற்பட்டுத்
தீர்ந்தபாடில்லை" என்கிறார்
யயாதி.
ஒரு பெண்ணை மணந்து
கொண்ட ஒருவன் அவளிடத்தில்
திருப்தி பெறாமல் மள்றொருத்தியையும்
விரும்புகிறான். அதே
மாதிரி பல பசுக்களைப்
பெற்றவன் உலகிலுள்ள எல்லாப்
பசுக்களையுமே தனதாக்கிக்
கொள்ள விரும்புகிறான்.
இது போல் நிலம் ரத்தினம்
பொன் எல்லாவற்றிலும்
ஒருவனுக்கே ஆசை பிறக்கிறது.
இதை நினைத்தே, 'ஏகஸ்யாபி
ந பர்யாப்தம்' என்றார்
மகரிஷி.
இப்படித் தனக்கு
வேண்டிய அளவும் அதற்கும்
மேலாகவும் பொருள்களைப்
பெற்றிருந்தும் திருப்தி
பெறாமல் பற்றாக்குறையையே
ஏறிட்டுக் கொண்டு, தான்
பெறாத விஷயங்களைக் காட்டி,
அதை அடையவில்லையே, இதை
அடையவில்லையே என்று பேசுகிறார்களே
தவிர, 'எனக்கு இதுவே போதும்'
என்று சொல்பவர் ஒருவரும்
இல்லையே!
ஒருவன் ஒரு
க்ராமத்துக்குப் போகிறான்.
அங்கு 10 ஏக்கர் நிலம் நன்கு
விளைச்சலுடன் இருக்கிறது.
அதைப்பார்த்ததும் அட,
இது நம்முடையதாக இருக்கக்
கூடாதா என்று எண்ணுகிறான்.
அவனே மற்றுமொறு க்ராமத்துக்குச்
செல்கிறான். அங்கும்
இதே மாதிரி காண்கிறான்.
எண்ணமும் முன்போலவே
உண்டாகிறது. அழகான ஒரு
பெண்ணைப் பார்த்ததும்
இப்பெண் என் மனைவியாக
இருக்கக் கூடாதா என்று
நினைக்கிறான். இப்படி
எந்தப் பெண்ணைப் பார்த்தாலும்
ஒரே நினைவுதான். வெள்ளிக்கடை,
நகைக் கடை முதலிய இடங்களில்
மனைவியை அழைத்துக் கொண்டு
போனாலே ஒரே அனர்த்தம்தான்.
எல்லா நகைகளும் எல்லா
பாத்திரங்களும் நம்முடையதாகவே
இருக்கக் கூடாதா என்ற
எண்ணம்தான் பெண்களுக்கு
உண்டாகிறது. ஒவ்வொரு
பொருளிலும் ஒவ்வொரு
விஷயத்திலும் கிடைத்தது
போதாது. மேலும் மேலும்
வேண்டும் என்ற எண்ணம்தான்
சம்பவிக்கிறது. படித்த
பண்டிதர்களுக்கும் இது
சகஜமாகிவிட்டது. பல்
மயிர் புலன்கள் எல்லாம்
கிழத்தன்மை அடைந்துவிட்டது.
ஆனால் த்ருஷ்ணா, ஆசை யெளவனத்திலேயே
இருக்கிறது. இதுதான்
ஆச்சர்யம்.
படிப்பிலும்,
பகவதநுபவத்திலும், தர்மகாரியங்களிலும்
பற்றாக்குறையைக் காட்டுவது
எவ்வளவொ ச்ரேயஸ் கரம்.
ஒரு கல்வியைக் கற்றவன்
அதில் மேல்மேலும் கற்க
வேண்டும், மற்றக் கல்விகளையும்
கற்க வேண்டும் என்று
ஆசைப்படுவது உசிதம்.
தர்மகாரியங்களைச் செய்பவன்
செய்த தர்மத்தை மறுபடியும்
செய்ய வேண்டும் என்றும்,
மற்றத் தர்மங்களையும்
செய்ய வேண்டும் என்றும்
அதில் பற்றாக்குறையைக்
காட்டி நடப்பது எவ்வளவோ
நன்மைகளை விளைவிக்கும்.
பொருள் திரட்டுவதில்
இதைக் காட்டுவது இவனுக்கோ
பிறருக்கோ எவ்வித நன்மையையும்
தராது. ஏனெனில், மேன் மேலும்
பொருளில் ஆசை வைத்து,
அதைத் திரட்டத் தீய வழிகளில்
சென்று விடுவான். இறுதியில்
அவனுக்கு அது தீங்கை
விளைவித்துவிடும். அக்ரமமான
காரியங்களில் இறங்கியபடியால்
நரகம் முதலிய துக்கங்களுக்கும்
ஆளாகிவிடுவான். ஆகையால்
அதிக ஆசையை விட்டொழிப்பதே
நன்மையைக் கொடுக்கும்.
'தஸ்மாத் த்ருஷ்ணாம்
பரித்யஜேத்' என்று மகரிஷியும்
கூறினார்.
ஸெளபரி ஒரு
மஹரிஷி. அவர் பெண்ணை மணந்து
கொள்ள ஆவல் கொண்டார்.
50 பெண்களை மணந்தார். அளவு
இல்லா இன்பம் அடைந்தார்.
ஒவ்வொருவரிடத்தில்
மகன் பேறு எத்தனையோ
பெற்றார். ஆயினும் ஆசை
போகவில்லை. குழந்தைகளின்
அப்த பூர்த்தி வரையில்
நாம் இருக்கலாம் என ஆசை.
அது முடிந்ததும் உபநயனம்
பர்யந்தம் ஆவலுடன் இருக்க
ஆசை. பிறகு அவர்களுக்கு
விவாஹம் பர்யந்தம்.. இப்படியே
காலத்தை கழித்தார். கடைசியில்
அவருக்கே ஒன்று தோன்றிற்று.
ஆசைக்கு அளவே இல்லை. மநோரதம்
என்னும் அகல நதிக்கு
கறை ஏது என்று தீர்மானித்தார்.
மனோரதாநாம அதடா: ப்ரவாஹா:
என்றார். இந்த ப்ரவாஹம்
மனிதனை அடித்து கொண்டுதான்
போகும். இதை தடுக்க முடியாது
என தீர்மானித்தார்.
*****
|