ராமாநுஜ பதம்
பிங்கள
ஆண்டு பிறந்துள்ளது.
ஆன்றோர் அன்றே நீண்ட
ஆலோசனையுடன் இதற்கு
இந்தப் பெயரை இட்டனர்.
பெரியோர் ஒருவருக்கு
ஒரு பெயரை இட்டால் அந்தப்
பெயர் அர்த்தமின்றி இராது.
நன்கு ஆலோசித்துத்தான்
ஒவ்வொரு வேலையையும்
அவர்கள் செய்வார்கள்.
'ஆர்த்ராம்
புஷ்கரிணீம் புஷ்டிம்
பிங்களாம் பத்மமாலிநீம்'
என்றது ஸ்ரீஸூக்தம்.
மகாலக்ஷ்மியைப் 'பிங்களாம்'
என்றது. திருமகளுக்கு
இந்தப் பெயர், பொன்னிறமான
திருமேனியை உடையவளானபடியால்.
இப்படி அனைவரும் பொன்போல்
விரும்பக்கூடிய மங்களகரமான
மகாலக்ஷ்மியின் பெயரை
இந்த ஆண்டு பெற்றபடியால்,
இந்த ஆண்டும் ஸமஸ்தமான
ஜனங்களுக்கும் ஆயுள்,
ஆரோக்கியம், ஐச்வர்யம்,
ஞான சம்பத்து, தன தானிய
சம்பத்து, ஆசாரிய சம்பத்து
முதலிய எல்லா வகையான
மங்களங்களையும் கொடுக்கக்
கூடியதாக அமைந்துள்ளது.
மங்களகரமான
இந்தப் பிங்கள வருஷத்தில்
அன்றோ நம் ராமாநுஜன்
அவதரித்தார்? அவர் அவதரித்த
பிறகே மக்கள் அனைவரும்
நல்ஞானம், நல்லொழுக்கம்
முதலிய நற்குணங்களைப்
பெற்று வாழ்ந்தனர்.
இந்தப்
பூவுலகில் ஸர்வசேஷியான
பகவான் ஒவ்வொரு ஜீவராசியிலும்
அவதரித்திருந்தான். ஆயினும்
அவனைக் கண்டு வணங்கி
அவன் மூலமாக நல்ல ஞானம்
பெற்று ஜீவர் மோக்ஷத்தை
அடைந்தனர் என்று சொல்ல
முடியாது. ராமாநுஜன்
தோன்றிய பொழுதே நாரணர்க்கு
நாம் அடிமைப் பட்டவர்கள்
என்பதை உணர்ந்து உய்ந்தார்கள்.
இதை,
மண்மிசை யோனிகள்
தோறும் பிறந்து, எங்கள்
மாதவனே கண்ணுற நிற்கிலும்
காணகில்லா, உலகோர் களெல்லாம் அண்ண
லிராமாநுசன் வந்து தோன்றிய
அப்பொழுதே நண்ணரு ஞானம்
தலைக்கொண்டு, நாரணற்
காயினரே,
என்று இராமாநுச
நூற்றந்தாதி பரக்கப்
பேசியுள்ளது. இப்படி
மங்களகரமான ராமாநுஜர்
இந்த ஆண்டில் தோன்றியபடியால்
இதுவும் மங்களகரமாயிற்று.
மேலும்,
பகவான் பல பொருள்களைப்
படைத்திருக்கிறான். மண்
நீர் நெருப்பு காற்று
ஆகாயம் முதலிய பூதங்களையும்,
ஆண், பெண், சமுத்திரம்,
வண்டு, யானை, மான், முதலிய
ஜந்துக்களையும் படைத்திருக்கிறான்.
ஒவ்வொரு பொருளையும்
படைத்து நமக்கு உதவ வேண்டும்
என்ற எண்ணமுடைய பகவானின்
திருவுள்ளம் என்ன என்பதை
ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஒவ்வோர் பொருளிலுமிருந்து
ஒவ்வொர் உயர்ந்த தன்மையை
அறிந்து அதன்படி நாமும்
நடக்க வேண்டும் என்ற
பகவானின் கருத்தை ஆராய்ந்து
தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, மண் என்னும்
பூமி மிகப் பொறுமை பெற்றது.
எவ்வளவு அநீதிச் செயல்களை
நாம் அதனிடத்தில் செய்தபோதிலும்
அது பொறுமையுடன் அசையாமல்
உள்ளது. காற்று எல்லா
விஷயங்களுடன் ஸம்பந்தப்பட்ட
போதிலும் அவற்றில் பற்றுதல்
இல்லாமலிருக்கிறது. ஆகாயம்
பரவியுள்ளது போல் இந்த
ஜீவாத்மாவும் வினைப்பயனாக
ஒவ்வொரு சரீரத்திலும்
பரவியிருக்கிறான். தண்ணீரிலுள்ள
தெளிைவைப் பார்த்து நம்
மனம் தெளிவை அடைய வேண்டும்.
வண்டு போல் சாரமான அம்சத்தையே
எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்படி ஒவ்வொரு பொருளிலிருந்தும்
ஒவ்வொரு குணத்தை எடுத்துக்
கொண்டு நாம் க்ஷேமத்தைப்
பெற வேண்டும். இதற்காகவே
பகவான் இவற்றைப் படைத்திருக்கிறான்.
எனவே இவற்றில் ஒவ்வொன்றும்
நமக்கு ஒவ்வொரு குருவாக
அமைகிறது.
பிங்களை
என்ற ஒரு தாசியும் ஒரு
குருவாகக் கருதப்பெறுகிறாள்
புராணங்களில். பிங்களை
என்பவள் ஒரு ஜார புருஷனை
இரவு எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.
தன் வீட்டையும் கட்டில்
படுக்கை முகம் உடல் எல்லாவற்றையும்
அலங்கரித்து வைத்துக்
கொண்டாள். இரவானதும்
பத்து நிமிஷத்துக்கு
ஒரு தரம், முன்பு 'உன் வீட்டுக்கு
நான் வந்து சேருகிறேன்'
என்று சொன்ன ஜாரப் புருஷனை
வாசலில் வந்து பார்ப்பாளாம்.
இப்படிப் பல தடவை பார்த்தும்
அவன் வராததனால் அவனிடத்தில்
ஆசையைவிட்டு அந்தத் தொழிலையே
விட்டுவிட்டாள். 'நிராசா
பரமம் ஸுகம்' என்று தேர்ந்தாள்.
எந்தப் பொருளிலும் ஒரு
ஆசையைக் காட்டுவது துர்குணத்தில்
சேர்ந்தது. துக்கத்தையும்
அளிக்கக் கூடியது என
நினைத்து பகவானிடத்திலேயே
ஆசையை வைத்து அவள் நன்றாகத்
தூங்கினாளாம். 'பிங்களாவத்
நிராச: ஸுப்யாம்' என்றனர்
பெரியோர். ஆகவே அவளும்
ஒரு ஆசார்ய கோஷ்டியில்
சேர்ந்தவள். அந்தப் பெயரைக்
கொண்டது இந்த வருஷம்.
பிங்களையைப் போல் வேறு
பொருள்களில் ஆசையைவிட்டு
பகவானின் திருவடித் தாமரைகளிலேயே
அதிக வியாமோகம் பெற்ற
நம் ஆசார்ய ரத்தினமான
ராமாநுஜன் இந்த வருஷத்தில்
அவதரித்தார். 'யோ நித்யம்
அச்யுதபதாம் புஜ யுக்மருக்
மவ்யாமோஹதஸ் ததிதராணி
த்ருணாய மேநே' என்பதை
நோக்குக.
இந்த ஆசார்யருக்கு
இளையாழ்வான், சடகோபன்,
பொன்னடி, எம்பெருமானார்,
லக்ஷ்மணமுனி, கோயிலண்ணன்,
ராமாநுஜன் என்று பல பெயர்கள்
உண்டு. இவற்றுள் ராமாநுஜன்
என்ற சொல்லைப் பற்றி
சிறிது ஆராய்ந்து அவரது
அருளைப் பெறுவோமாக.
1.
ராமனுடைய தம்பி ராமாநுஜன்
என்ற பொருள் கொள்ளும்போது,
தசரதபுத்திரனான ராமனின்
தம்பி, அதாவது லக்ஷ்மணன்;
அவனுக்குச் சமமானவன்
என்று பொருள்படும்.
பலராமனின் தம்பி என்று
அர்த்தம் கொண்டால்,
கிருஷ்ணனுக்குச் சமமானவன்
என்று பொருள்படும்.
2.
ராமன் எவனுக்குத் தம்பியோ
அத்தகையவன் என்று அர்த்தம்
கொள்ளும்போது, ராமனுக்கும்
தமையன் என்று ஆகும். தசரதனின்
புதல்வனான ராமனுக்கும்
அண்ணன் - மேம்பட்டவன்.
ராமனைக் கருணாமூர்த்தி
என்று சொல்வது வழக்கம்.
'கருணாகாகுத்ஸ்த' என்றார்
வேதாந்த தேசிகர். கருணையே
உருவாகத் தோன்றிய ராமனையும்
இவர் மிஞ்சியவர். மாதவனான
ராமன், ஆத்ம அநாத்ம விவேகம்
பெற்று நாள்தோறும் பக்தியைச்
செய்பவர்களுக்குத் தனது
இடமான வைகுண்ட லோகத்தைக்
கொடுப்பான். நம் ராமாநுஜரோ
தம்மை அடைந்தவர்களை எளிய
வழியில் நடத்தி அந்த
லோகத்தைத்தமது தகவினாலேயே
கொடுப்பார்.
ஞானம்
கனிந்த நலங்கொண்டு,
நாடோறும் நைபவர்க்கு,
வானம் கொடுப்பது மாதவன்,
வல்வினையேன் மனத்தில்,
ஈனம் கடிந்த இராமாநுசன்
தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது, தன்தக
வென்னும் சரண்கொடுத்தே
என்றது நூற்றந்தாதி.
மேலும், 'உன் பெருங்கருணை
தன்னை என பார்ப்பர், இராமாநுசா
உன்னைச் சார்ந்தவரே'
என்றும் சொல்லிற்று.
நம்முடைய கெட்ட குணங்களையும்
கெட்ட செயல்களையும் அறிவின்மையையும்
கவனிக்காமல் இராமாநுஜர்
தமது கரையற்ற கருணைக்கடலை
கொண்டே நம்மிடத்தில்
அநுக்ரகம் செய்கிறார்
என்பது இதிலிருந்து ஏற்படுகிறது.
பரசுராமனைவிட
மேம்பட்டவர் என்ற பொருளையும்
கொள்ளலாம். பரசுராமன்
இருபத்தொரு தலைமுறைகள்
ஒரு க்ஷத்திரியப்பூண்டும்
இல்லாதபடி எதிரிகளை வென்றான்.
இவர் ஸாங்க்யர் யோகியர்
தார்க்கிகர் பெளத்தர்
பாசுபதர் ஜைனர் முதலிய
வேதவிரோதிகளாகிய எதிரிகளைப்
பூமியில் மறுபடியும்
முளைக்காதபடி அழித்தார்.
பரசுராமரால் க்ஷத்திரிய
வம்சம் அப்போது அழிந்தபோதிலும்
மறுபடியும் முளைத்துவிட்டது.
ராமாநுஜராலே அழிக்கப்பட்ட
எதிரிகள் மறுபடியும்
முளைக்க வழி இல்லாமலே
போய்விட்டது.
3. 'ராமை
எவருக்குத் தங்கையோ
அத்தகையவர்' என்று கொண்டால்
மகாலக்ஷ்மியின் அம்சமான
கோதைப் பிராட்டி நம்
ராமாநுஜருக்குத் தங்கையாகிறாள்
என்ற பொறுள் ஏற்படும்.
'பெரும்பூதூர் மாமுனிக்குப்
பின்னானாள் வாழியே' என்பதை
நோக்கி இதைத் தெரிந்துகொள்ள
வேண்டும். பெரும்பூதூர்
மாமுனிக்கு நான் நால்பின்
வாழியே என்றும் இதற்கு
பொருள் கூறலாம். அதாவது
மாமுனி பிறந்த நக்ஷத்ரம்
திருவாதுரை. ஆண்டாள்
பிறந்த நக்ஷத்ரம் பூரம்.
ஆக புனர்பூசம், பூசம்,
ஆச்லேஷம், மகம். நான்கு
நக்ஷத்ரங்கள் நடுவில்
உள்ளன. ஆகையால் ராமாநுச
நக்ஷத்ரத்துக்கு பின்
நான்கு நக்ஷத்ரம் கழித்து
அவதரித்தவள் என்று ஏற்படும்.
இப்படி பலபடியாக இந்தப்
பதத்திற்குப் பொருள்
கூறுவர் பெரியோர். ஆயினும்
நாம் இங்கு ஒரு பொருளைக்
கூற விரும்புகிறோம்.
ப்ரதமோளச்நந்தரூபஸ்ச
த்விதீயோ லக்ஷ்மணஸ்
ததா | த்ருதீயோ பலராமஸ்ச
கலெள ராமாநுஜோ முநி:
||
என்ற வசனத்தைப் பார்த்தால்,
ஆதிசேஷனாகப் பகவானுக்கு
அந்தரங்க கைங்கர்யம்
செய்பவர்தாம் லக்ஷ்மணனாகவும்
பலராமனாகவும் ராமாநுஜனாகவும்
அவதரித்தார் என்று ஏற்படுகிறது.
ஆகவே ஒருவரே நான்கு ரூபம்
எடுத்துக்கொண்டு பல
கைங்கர்யங்களைச் செய்திருப்பது
திண்ணம். இவர்களுள் லக்ஷ்மணனை
ராமாநுஜன் என்று சொல்வது
வழக்கம். 'ராமாநுஜம் லக்ஷ்மண
பூர்வஜம் ச' என்றது ராமாயணம்.
ஆதிசேஷனையும் ராமாநுஜன்
என்று சொல்லலாம். 'ராமாநுஜஸ்
த்வாதிசேஷ:' என்றது நிகண்டு.
இவர்கள் இருவரையும் எந்தக்
காரணத்தை முன்னிட்டு
ராமாநுஜன் என்று சொல்லுகிறோமோ
அந்தக் காரணத்தை முன்னிட்டே
பலராமனையும் நம் ஆசார்யரான
இவரையும் ராமாநுஜன் என்கிறோம்.
லக்ஷ்மணனிடத்தில் ராமாநுஜன்
என்ற சொல்லை வழங்குவதற்கு,
போஜராஜன் என்ற மகாகவி
வழிகாட்டியுள்ளான். அந்தக்
கவி இயற்றிய ராமாயண சம்பூவிலுள்ள
ஒரு ச்லோகத்தை ஆழ்ந்து
கவனிக்க வேண்டும்.
ஸ்வத
ஸ்ஸித்தம் யஸ்மிந் இதர
துரவாபம் விஜயதே, ஸுமித்ராபுத்ரத்வாதபி
ஜகதி ராமாநுஜபதம் | யதீயா
க்ஷித்வந்த்வப்ரதிநிதி
பவேத் அம்புஜயுகம், நிசீதே
நிர்நித்ரம் யதி தமபி
ஸாக்ஷாத்க்ருத ஸ: ||
என்பது
போஜராஜனின் அழகிய வாக்கு.
ராமாநுஜன் என்ற சொல்,
ராமனின் தம்பியான லக்ஷ்மணனைச்
சொல்வது போலவே பரதனையும்
சத்ருக்னனையும் சொல்லலாம்.
இந்த இருவருங்கூட அண்ணனுக்குத்
தம்பி முறையிலன்றோ உள்ளனர்?
ஆனால் ராமாநுஜன் என்ற
சொல் அவர்களிடத்தில்
சேராமல் இருக்கிறது என்பதை,
'இதர துரவாபம்' என்ற பதத்தினால்
இந்தக் கவி காட்டுகிறான்.
எனவே அதற்குக் தக்கவாறு
இதற்குப் பொருள் கூற
வேண்டுமென ஏற்படுகிறது.
இதைச் சிறிது ஆராய மனத்தைச்
செலுத்துவோம்.
இங்கு
ராமாநுஜன் என்ற இடத்தில்
'ராம' என்ற சொல் தசரதனுடைய
புதல்வனான ராமனைக் குறிக்க
வந்ததன்று. பின் எதை என்றால்,
ஸாக்ஷாத் நாராயணனான பரமாத்மாவை.
'ராமோ விராமோ விரஜ:' என்று
ஸஹஸ்ரநாமத்தில் ராம:
என்ற சொல் பகவானின்
பெயராகச் சொல்லப்பெற்றிருக்கிறது.
இங்கே, தசரதனுடைய புதல்வன்
என்ற பொருள் அல்ல; ஸஹஸ்ரநாமம்
அனைத்துமே எம்பெருமானின்
குணக்ருதமான பெயரைச்
சொல்லுவதற்காக வந்தபடியால்.
'யாநி நாமாநி கெளணாநி'
என்று ஆரம்பத்திலே சொல்லியிருக்கிறது.
ஆகையால் இங்கு ராமபதம்
ஏதோ ஓர் அர்த்தத்தைக்
கருதி நாராயணனைச் சொல்லுகிறது
என்று கொள்ள வேண்டும்.
'யோகிகளின் ஹ்ருதயத்தில்
அவன் விளையாடுகிறான்;
அவர்களை ஆனந்திப்பிக்கிறான்'
என்று அர்த்தம்.
பரமசிவன்
பார்வதியைப் பார்த்து,
'ராம ராம ராம' என்று மூன்று
தடவை சொல்லுவதனாலேயே
ஸஹஸ்ரநாமம் சொன்ன பலனைப்
பெறலாம் என்றார். அவருடைய
கருத்தும் இதையொட்டித்தான்.
எப்படி ஒரு நாயகன் நாயகியான
தன் மனைவியை ஆனந்திப்பிக்கச்
செய்கிறானோ, அவளது மனத்தில்
விளையாடுகிறானோ, அதுபோலவே
பகவானும் நம் மனத்தில்
இருந்துகொண்டு விளையாடுகிறான்.
ஆனந்திப்பிக்கிறான்.
பரமசிவனிடத்திலும் அப்படித்தான்.
உண்மையில் நாம் அனைவரும்
- பரமசிவன் உட்பட-பகவானுக்கு
மனைவியானபடியால் நாயிகா
நாயகபாவத்தை இட்டு அர்த்தம்
கொள்வது ஸ்வரஸமாகவே
அமைகிறது.
மேலும், பரமசிவன்
மகாலக்ஷ்மியின் அம்சபூதன்
ஆனபடியால் பகவானுக்கு
நாயிகையாக ஆகிறான் என்பதில்
சந்தேகமில்லை. ஸ்ரீஸூக்தத்தில்,
'ஆர்த்ராம் ஜ்வலந்தீம்,
ஆர்த்ராம் புஷ்கரிணீம்,
ஆர்த்ராம் ய:கரிணீம்'
என்று மூன்று இடங்களில்
மகாலக்ஷ்மியை 'ஆர்த்ராம்'
என்று சொல்லியிருக்கிறது.
குளிர்ந்த சுபாவமுள்ளவள்,
குளிரச் செய்பவள் என்ற
இரண்டு பொருள்களை இங்கே
சிலர் கூறுவர். ஆயினும்
இதில் அவ்வளவு அர்த்தபுஷ்டி
இல்லை. இந்த இரண்டு பொருளையும்
ஒரு பதமே சொல்லுவதற்குப்
போதுமானதன்றோ? ஆகவே
வித்யாரண்யபாஷ்யத்தில்
ரஸகனமான பொருள் கூறியிருப்பதைச்
சுவைத்து இன்புற வேண்டும்.
'ஆர்த்ராநக்ஷத்ரோத்பந்நாம்
ருத்ரரூபாம் வா' என்று
அங்கு அர்த்தம் சொல்லியிருக்கிறது.
இதனால், லக்ஷ்மியே பரமசிவரூபமாக
விளங்குகிறாள் என்பது
ஸ்பஷ்டமாகிறது. பகவானுடைய
அம்சமே எல்லா ஜீவர்களும்
என்பது ஸூத்ர பாஷ்யாதிகளில்
எல்லாருக்கும் தெரிந்த
விஷயம். 'அம்சோ நாநாவ்யபதேசாத்'
என்பது ப்ரஹ்மஸுத்ரம்.
பகவானைப்
போலவே அவன் மனைவியான
பிராட்டியும் விபு ஆனபடியால்
எல்லா ஜீவர்களும் பிராட்டிக்கும்
அம்சபூதர்கள். ஆகவே பரமசிவனும்
அவளது அம்சமாக ஆகிறான்
என்பதில் சந்தேகமே இல்லை.
எனவே பிராட்டியின் அம்சமானபடியால்
பரமசிவனும் பகவானுக்கு
நாயகி ஆகிறான். நாராயணன்
அவனது ஹ்ருதயத்தில் ரமிக்கிறான்,
ஆனந்திப்பிக்கிறான்.
'உமையுணர்த்த வண்டலம்பும்
தாரலங்கல் நீண்முடியான்தன்
பெயரே கேட்டிருந்து அங்கு
ஆரலங்கல் ஆனமையால் ஆய்ந்து'
என்றார் திருமழிசையாழ்வார்.
ஆகவே,
ராம என்ற சொல் நாராயணனைக்
குறிக்கிறது என்பது ஸ்பஷ்டமாகிறது.
அவனது அநுஜன் என்பதற்கு
உடன் பிறந்தவன் என்று
அர்த்தம். பிறப்பு என்பது
தாயின் வயிற்றிலிருந்து
பிறந்தமையைச் சொல்ல
வந்ததல்ல. 'அன்று நான்
பிறந்திலேன் பிறந்தபின்
மறந்திலேன்' என்று ஆழ்வார்
விவக்ஷித்த அர்த்தத்தையே
இங்கும் கொள்ளவேண்டும்.
அதாவது நாராயணனுக்கு
நான் அடிமைப்பட்டவன்
என்ற அறிவைப் பெற்றவன்
என்று தெரிகிறது. 'அஹமஸ்யாவரோ
ப்ராதா குணைர் தாஸ்யமுபாகத:'
என்பதிலிருந்து லக்ஷ்மணனுக்கு
இப்படிப்பட்ட அறிவு உண்டு
என்பது நன்கு விளங்கும்.
'பகவானுக்கு நான் அடிமைப்பட்டவன்'
என்ற எண்ணம் எல்லாருக்குமே
இருந்தபோதிலும், லக்ஷ்மணனுக்கு
இந்த விஷயத்தில் எவ்வளவு
தீவிரமான அத்யவஸாயம்
இருக்கிறதோ அவ்வளவு
மற்றவர்க்கு இல்லை என்பது
தெரிந்த விஷயமே. ஸர்வ
காலத்திலும் ஸர்வ தேசத்திலும்
சேஷத்வஞானம் என்பது ஆதிசேஷனுக்கன்றோ
உண்டு? ஆகையால் அல்லவா
சேஷன் என்ற பெயர் அவருக்கு
உண்டாயிற்று? 'சேஷ இதீர்யதே
ஜநை:' என்றார் ஆளவந்தார்.
ஆகையால்
அவரது அவதாரமான லக்ஷ்மணனுக்கும்
பலராமனுக்கும் நம் ஆசார்யரான
இவருக்கும் சேஷன் என்ற
பெயரைக் கூறலாமாகையால்,
ராமாநுஜன் என்ற சொல்
ஆதிசேஷனைப் போலே இந்த
மூவருக்கும் சாலப் பொருத்தமாகிறது.
இதைக் காட்டவேதான் போஜராஜன்,
'ஸ்வதஸ்ஸித்தம்' என்று
முதலிலேயே குறிப்பிட்டான்
என்பது ரஸமான விஷயம்.
எம்பெருமானின்
படுக்கையான இவருக்கு
பல பெயர் இருந்தாலும்
'சேஷன்' என்கிற பெயரில்
விருப்பம் என்றார் ஸுந்தர
பாஹு ஸ்தவதில். அநந்தன்
என்றும் பெயரில் இவருக்கு
அவ்வளவு நோக்கமில்லை.
சக்ரவர்த்தி திருமகன்
என்றும் தாசரதி என்றும்
சொன்னாலும் ராமனுக்கு
ப்ரீதியாம். வஸுதேவஸூனு
என்றும் பார்த்தஸாரதி
என்றும் பாண்டவதூதன்
என்றும் சொன்னால் க்ருஷ்ணனுக்கு
உகப்பாம். அதுபோல். மேலும்
"ராமாநுஜன்" என்பதற்கு
வேறுவிதமாகவும் பொருள்கூறலாம்.
ரா மா நு ஜ ன் என்று பதம்
பிரித்து மக்களுக்கு
ப்ரஹ்மாநந்தமாகிற மோக்ஷத்தைக்
கொடுத்து உய்விக்க எம்பெருமான்
அநுப்ரவேசம் செய்த அநந்தாழ்வான்
(ஆதி சேஷன் என்றும் அதனால்
ஆதிசேஷநே ராமாநுஜனாகப்
பிறந்தான் என்றும் பொருள்
கிடைக்கும். இதனை விரித்து
பொருள் கூறும் ப்ரகாரத்தை
மற்றொரு சமயம் கூறுவோம்.
நாராயண
என்பது நான்கு எழுத்துக்கள்
கூடியது. ராமாநுஜ என்பதும்
அவ்வாறே. நான்கு அக்ஷரங்களையுடைய
நாராயண என்று சொல் இல்லை
என்றால் எவ்வாறு மக்கள்
அதை உச்சரித்து நற்கதியை
அடைய முடியும். இது போலத்தான்
ராமாநுஜ என்ற பதமில்லாமலிருந்தால்
மக்களுக்கு ஸத்கதி ஏது.
இதைச் சொல்லும் ப்ரமாணம்
'நசேத் ராமாநுஜேத்யேதத்
சதுரா சதுரக்ஷ ரி காம்
தசாம் ப்ரதியத்யேரன்
ஜந்தவோஹந்த மாத்ருசா:
|
மேலும் ஸ்ரீமந்நாராயண
சரணெள சரணம் ப்ரபத்யே,
ஸ்ரீமதே நாராயணாய நம:
என்பது த்வயம் மந்த்ரம்.
வைஷ்ணவர்களான நமக்கு
த்வய மந்திரம் வேறு. உச்சரிக்கவேணும்
ப்ரகாரம் அந்யாத்ருசம்.
இதை எப்படி என்பதை ஸ்ரீஸ்வாமி
தேசிகன் யதிராஜ ஸப்ததியில்
காட்டியுள்ளார்.
அநுகல்பபூத
முரபித்பத் ஸதாம் அஜஹத்
த்ரிவர்கம் அபவர்கவைபவம்
சலசித்தவ்ருத்தி வினிவர்தனெளஷதம்
சரணம் யதீந்த்ர சரணம்
விருணிமஹே என்பது. எம்பெருமானுடைய
திருவடி எப்படி எல்லாபலத்தையும்
கொடுக்குமோ அவ்வாறே
ராமாநுஜனுடைய திருவடிகளும்
கொடுக்கும் வல்லமை பெற்றது.
ஆனால் அந்த சரணம் அமுக்யம்.
இந்த சரணம் முக்யம். இங்கு
அவருடைய ஐதீஹ்யம் காட்டப்
பட்டுள்ளது.
திருநாராணபிரத்தில்
அரையர் ஒருவர் இருந்தார்.
அவர் பெருமாளுடன் பேசுவார்.
பெருமாளும் பேசுவார்.
அவர் எப்பொழுதும் பாசுரங்களைச்
சொல்லி அபிநயம் நயம்
செய்வார். எம்பெருமானும்
இவரது அபநயங்களைப் பார்த்து
சிரக்கம்பனம் செய்து
ஆடுவார். ஆனால் அரையர்
கர்விஷ்டர் இராமாநுஜரிடம்
பக்தி இல்லாதவர். பகவானே
நம்முடன் பேசும்போது
இவர் எதற்கு என்பவர்.
ஒரு சமயம் எம்பெருமானிடம்
எனக்கு மோக்ஷம் உண்டா
என்று கேட்டார். பகவானும்
இல்லை என்றார். நான் பாடினேனே
உம்மைப் பற்றி என்றார்.
நானும் பதிலாக ஆடனேன்
என்றார். ஆனால் என் செய்வது
என்று கேட்க ராமாநுஜருடைய
திருவடியை ஆச்சர்யத்தால்தான்
மோக்ஷம் என்றார். பிறகு
அவரை ஆச்சர்யத்து முக்தி
பெற்றார்.
*****
|