ஸம்மார்ஜனம்
ச்ரிய:
பதியான ஸர்வேச்வரன் ஜீவராசிகளுக்கு
ஆக்கையையும், கண் காது
முதலிய உறுப்புக்களையும்
கொடுப்பது எதற்காக?
ஆத்மாக்களுக்கு இவற்றைக்
கொடுத்து இதன் மூலம்
அவன் ஏதோ ஒரு மகிழ்ச்சியை
பெற விரும்புகிறான் போலும்.
'ஸ்வம் உத்திச்ய ஸ்ரீமாந்'
என்று பெரியோர் பணிப்பர்.
'விசித்ரா தேஹஸம்பத்தி:,
ஈச்வராய நிவேதிதும்'
என்று அவன் கொடுத்த
உடல். இந்திரியங்கள்
முதலியவற்றைக் கொண்டு,
அவன் உகப்பு அடைய வேண்டும்
என்று எண்ணி நாம் ஏவல்
தேவைகளைச் செய்ய வேண்டும்.
இப்படி செய்பவர்களிடத்திலேயே
எம்பெருமான் மிகவும்
ஸந்தோஷமடைகிறான்; மற்றவர்களிடத்தில்
வெறுப்பை அடைவான்.
'அந்நாள்
நீ தந்த ஆக்கையின் வழி
உழல்வேன்' என்று ஆழ்வார்
சொல்லுகிறபடி, மனம்
செல்லும் வழியில் நடந்து
கொள்வது மிகவும் வெறுக்கத்தக்கது.
இப்படி நடப்பவன் தன்
ஸ்வரூபத்தின் பலனைப்
பெறமாட்டான். எந்த வேலைகளைச்
செய்தால் பகவான் மேன்மேலும்
ஸந்தோஷமடைந்து நம்மை
கண்குளிரக் கடாக்ஷிப்பானோ,
அத்தகைய வேலைகள் இரண்டு
வகைப்படும்.
ஆஜ்ஞை என்றும்,
அநுஜ்ஞை என்றும் ஏவல்
தேவைகள் இரண்டு வகையாகப்
பிரிக்கப் பெற்றிருக்கின்றன.
அவனவன்வர்ணாச்ரம தர்மங்களுக்கு
ஈடாக எவற்றைச் செய்யாவிட்டால்
எம்பெருமானுக்கு கோபம்
உண்டாகுமோ அவை ஆஜ்ஞா
கைங்கரியங்கள். எவற்றை
செய்யாவிட்டால் எம்பெருமானுக்கு
கோபம் உண்டாகாதோ, செய்ததனால்
ஸந்தோஷம் உண்டாகுமோ
அவை அநுஜ்ஞா கைங்கரியங்கள்.
இவற்றினால் அவரவர் கோரிய
பயன்களையும் பெறலாம்.
ஸந்த்யாவந்தனம், பகவதாராதனம்
முதலியன ஆஜ்ஞையாகும்.
கோயிலில் விளக்கேற்றுவது,
விளக்குமாறு கொண்டு
சுத்தம் செய்வது, கோலமிடுவது
முதலியவை அநுஜ்ஞையாகும்.
அநுஜ்ஞையாக செய்யப்படும்
இந்த கைங்கரியங்களிலும்
முறைதவறு முதலிய குற்றங்கள்
ஏற்படாமல் பார்த்துக்கொள்ள
வேண்டும. அப்படி தவறினால்
ஆஜ்ஞாகைங்கரியத்தை செய்யாமலிருந்தால்
என்ன குற்றம் ஏற்படுமோ
அந்த குற்றம் இவற்றிலும்
ஏற்படும்.
பகவானுக்கு
புஷ்பங்களை மாலையாக கட்டி
ஸமர்ப்பிக்க வேண்டும்
என்று எண்ணி புஷ்பமாலையை
தொடுப்பவன் அசுத்த ஸ்தலங்களில்
புஷ்பங்களை வைப்பதோ,
காலில் நூலைக் கட்டித்
தொடுப்பதோ செய்தால்
இந்த கைங்கரியம் குற்றமுள்ளதாகவே
முடியும். எனவே இவற்றை
நன்றாக கவனித்து சரிவர
செய்தல் வேண்டும்.
யாவத்ய:
பாம்ஸுகணிகா:, மார்ஜநே
கேசவாலயே | வர்ஷாணி திவி
தாவந்தி ரிஷ்டத்யஸ்தமலோ
நர: ||
எம்பெருமானுடைய
கோயிலில் விளக்குமாறு
எடுத்து எவன் சுத்தம்
செய்கிறானோ அப்போது
அதிலிருந்து எவ்வளவு
தூசுகள் வெளிவருகின்றனவோ,
அத்தனை வருஷகாலம் அவன்
அழுக்கற்றவனாக ஸ்வர்க
லோகத்தில் ஸுகத்தை அநுபவிக்கிறான்.
இவன் செய்யும் தொழில்
சிறியதாக இருந்த போதிலும்
பகவானுடைய கோயிலில்
செய்கிறபடியால் அளவற்ற
பலனைக் கொடுக்கிறது.
யுவனாச்வனின்
புதல்வன் மாந்தாதா, பெரும்
பலமுடையவன். சக்ரவர்த்தி,
ஸார்வபெளமன் என்னும்
சொல் இவனையே குறிக்கும்.
எல்லா உலகையும் ஏகதேசமாக
எவன் ஆட்சி புரிகிறானோ
அவனைத்தான் சக்ரவர்த்தி
என்று சொல்வது. மாந்தாதா
ஏழு தீவுகளோடு கூடிய
பூமி முழுவதையும் ஆண்டு
வந்தான்.
யாவத் ஸூர்ய
உதேதிஸ்ம யாவத் திஷ்டதி
மேதிநீ | தத் ஸர்வம் யெளவநாச்வஸ்ய
மாந்தாது: க்ஷேத்ரமுச்யதே
||
என்று கூறுவர். இவ்வளவு
ஐச்வர்யங்களைப் பெற்றும்,
அவன் கர்வமில்லாமல் தான
தர்மங்களையும் நித்யமான
கைங்கரியங்களையும் செய்துகொண்டு
குருவினிடத்தில் அதிகப்
பக்தியுடன் இருந்தான்.
அவன்
ஒரு ஸமயம், 'இவ்வளவு ஸம்பத்து
நமக்கு எப்படி உண்டாயிற்று?'
என்று எண்ணினான். இதை
அறிய விரும்பி மனைவியுடன்
தன் குலகுருவான வஸிஷ்ட
மகரிஷியை வணங்கி வினவினான்.
இதை கேட்ட வஸிஷ்டர் சொன்னார்
- "அரசே! நீ முற்பிறவியில்
சூத்திரனாகப் பிறந்திருந்தாய்.
பிறருக்குப் பல ஹிம்ஸைகள்
செய்து வந்தாய். உன் பார்யையான
இவள் முன்பிறவியிலும்
உனக்கு மனைவியாகவே இருந்தாள்.
உனக்கு பல பணிவிடைகள்
செய்து வந்தாள். நீங்கள்
இருவரும் வாஸுதேவனுடைய
ஒரு கோயிலில் வேலைக்காரர்களாக
இருந்தீர்கள். அந்த கோயிலுக்கு
காலை மாலை இரு வேளைகளிலும்
நீரைக் கொண்டு வந்து
தெளிப்பது. சாணத்தைக்
கொண்டு மெழுகுவது, விளக்குமாறு
கொண்டு விளக்குவது,
கோலமிடுவது முதலிய நற்காரியங்களைச்
செய்து வந்தீர்கள். இப்படிப்
பல நாள் பக்தியுடனும்
சிரத்தையுடனும் செய்து
வந்தபடியால் உங்களுடைய
ஜன்மாந்தர பாபங்கள் தொலைந்தன.
உலகில்,
மாதம் முடிந்தவுடன் கையில்
சம்பளத்தைப் பெற வேண்டும்
என்று எண்ணி, அதையே முக்கியப்
பலனாகக் கருதி வேலையைச்
செய்பவர் சிலர் உள்ளனர்.
அவர்களுக்கு இவ்வுலகத்திலும்
ஸுகமில்லை; பரலோகத்திலும்
ஸுகமில்லை. இங்குள்ள
யஜமானனும் திருப்தியடைய
மாட்டான். பகவானும் ஸந்தோஷம்
அடைய மாட்டான். தாழ்ந்த
வேலையோ, உயர்ந்த வேலையோ
எதுவாக இருந்தாலும் அதில்
இழிகிறவன் சிரத்தையுடன்
செய்து முடிக்க வேண்டும்.
அவனே எல்லா ஸுகங்களையும்
பெறுவான். நீங்கள் உண்மையில்,
'இது பகவத் கைங்கர்யம்.
இதைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இவ் வேலை நமக்கு கிடைத்ததே'
என்று எண்ணி ஆதரவுடன்
செய்தபடியால் உங்களுக்கு
நிகர் ஒருவருமில்லை.
இப்படி
இருந்த ஸமயத்தில் ஒருநாள்,
குரு க்ஷேத்திரத்தில்
பிறந்த ஸெளவீரன் என்னும்
அரசன் தன் மனைவியுடனும்
சைனியத்துடனும் நீங்கள்
இருந்த கோயிலுக்கு வந்தான்.
ஸகல ஐச்வர்யத்தோடும்
ஆபரணங்களோடும் கூடிய
அரசனைப் பார்த்ததும்,
உனக்கு அவனைப் போல்
பெரிய அரசனாக வேண்டும்
என்ற எண்ணம் உண்டாயிற்று.
உன் மனைவியும் சந்தனம்
புஷ்பம் ஆபரணம் முதலியவற்றினால்
அலங்கரிக்கப் பெற்ற அரசனது
மனைவியைக் கண்டு, 'நாமும்
இவள் போல் இருக்கக்
கூடாதா? இவ்வளவு மேன்மை
நமக்கும் உண்டாகக் கூடாதா?'
என்று விரும்பினாள்.
நன்றாகப்
படித்தவனையோ, நல்ல அழகுள்ளவர்களையோ,
உயர்ந்த செல்வனையோ பார்த்து
நாமும் அம்மாதிரி ஆக
வேண்டும் என்று எண்ணுவது
உலக வழக்கந்தானே? நம்மைப்
போல் அவர்களும் ஆகவேண்டும்
என்று நினைப்பதுதான்
தவறு. இப்படிப்பட்ட உங்களுடைய
மனோரதத்தை அனைவருடைய
ஹ்ருதயத்திலும் வாசம்
செய்யும் பகவான் அறிந்தவனானபடியால்
இதைப் பூர்த்தி செய்ய
நினைத்தான். அன்றிரவு
கோயிலில் உள்ள விளக்கு
எண்ணெய் இல்லாததனால்
அணையும் தறுவாயில் இருந்தது.
திரியும் குறைந்துவிட்டது.
இதைக் கண்ட நீ, உண்பதற்காக
வைத்திருந்த எண்ணெயை
விளக்கில் சேர்த்தாய்.
உன் மனைவியும் மேல் வஸ்திரத்தின்
நுனிப்பாகத்தைக் கிழித்து
திரியாக வைத்தாள். உடனே
விளக்கு நன்றாக ஜ்வலிக்க
ஆரம்பித்தது. இப்படி
உயர்ந்த வேலைகளை நீங்கள்
செய்தபடியால் உன்னதமான
ராஜ்யத்தையும், உங்களது
உடலில் உஜ்வலமான ஒளியையும்
பகவான் கொடுத்தார்.
நீ
வேளாளனாக இருந்து பகவானுக்குப்
பணிவிடை செய்தபடியால்
அளவற்ற மகிமையைப் பெற்றாய்.
பலனில் ஆசையில்லாதவனாக,
வேறு எங்கேயும் மனத்தை
செலுத்தாதவனாக எப்போதும்
விஷ்ணுபூஜையைச் செய்பவன்
எவ்வளவு பலனைப் பெறலாம்
என்பதை இதிலிருந்து யோசிப்பாயாக.
பகவானை ஆராதிப்பவன் ஒரு
ஸமயத்திலும் கஷ்டப் படமாட்டான்.
புஷ்பம் தீபம் தூபம்
நீராஜனம் சந்தனம் முதலிய
உயர்ந்த வஸ்துக்களைக்
கொண்டு பகவானைப் பூஜிப்பாயாக.
கோயில்களில் தும்பு
தூசி இல்லாமலிருக்கும்படி
ஸம்மார்ஜனத்தைச் செய்.
இன்னும் மேன் மேலும்
ஐச்வர்யத்தைப் பெறுவாய்.
மெதுவாகவும்,
நான்கு பக்கங்களிலும்
கீழேயும் பார்த்துக்கொண்டு,
பூமியில் இருக்கும் ஜந்துக்களுக்கு
ஒரு விதத் தீங்கும் வராமலிருக்கும்படி
விளக்குமாறு கொண்டு
கோயிலைச் சுத்தம் செய்ய
வேண்டும். இப்படிச் செய்பவன்
அக்னிஷ்டோமம் வாஜபேயம்
அச்வமேதம் முதலிய நற்காரியங்களைச்
செய்தால் ஏற்படும் பலனைப்
பெறுவான். கோடிக்கணக்கான
வருஷங்கள் விஷ்ணுலோகத்தில்
வஸிப்பான். கடைசியில்,
நான்கு வேதங்களையும்
கற்றவனாகவும், அழகுள்ளவனாகவும்,
நற்குணம் பொருந்தியவனாகவும்,
ராஜாவாகவும், அனைவராலும்
கொண்டாடப் பெறுபவனாகவும்
பிறப்பான். தான் இறந்து
போகும்வரையில் கோயிலில்
இம்மாதிரி வேலையைச் செய்பவனும்,
புதிய ஆலயங்களை ஏற்படுத்திப்
பகவானைப் பிரதிஷ்டை செய்ய
ஏற்பாடு செய்பவனும் வைகுண்ட
லோகத்தை நேராக அடைந்துவிடுவார்கள்.
நரம்
கலந்த ஸிம்ஹ உருவத்தைத்
தங்கம் முதலிய உலோகங்களால்
செய்வித்துப் பூஜை செய்ய
ஏற்பாடு செய்பவன் விஷ்ணுலோகத்தை
விட்டு வரவே மாட்டான்.
இப்படி பகவதாலயத்தில்
ஆதரவுடன் பகவத் கைங்கரியத்தை
செய்பவன் தன் இருபத்தொரு
தலைமுறையிலுள்ள பந்துக்களை
ஸ்வர்க்க லோகத்துக்கு
அனுப்புகிறான். ஸமுத்திரமும்
அழிந்து விடலாம்; இமயமலையும்
சிதறிவிடலாம். ஆனால்
நாராயணனுடைய கோயிலைச்
சுத்தி செய்பவன் விஷ்ணுலோகத்திலிருந்து
கீழே விழமாட்டான்.
அரசே!
நீ செய்த புண்ணியத்தின்
பலன் இது. இனி மேன்மேலும்
பகவதாலயங்களை ஏற்படுத்தி
அங்கு நற்காரியங்களைச்
செய்து கொண்டுவா. மேன்மேலும்
க்ஷேமத்தைப் பெறுவாய்"
என்றார் வஸிஷ்டர்.
கீழ்ச்
சொன்ன அநுஜ்ஞா கைங்கரியம்
எத்தனையோ வகையாக இருந்த
போதிலும், தூசி இல்லாமல்
ஸம்மார்ஜனம் செய்து சுத்தி
செய்வது பார்வைக்குத்
தாழ்ந்ததாகத் தோன்றியபோதிலும்
இது எவ்வளவு பலனைக் கொடுப்பது
என்பதை உணர வேண்டும்.
இதுதான் உயர்ந்த கைங்கரியம்.
திருமழிசைப்பிரான் ஓர்
ஆச்ரமத்தில் உடகார்ந்து
யோகம் செய்தபோது அவ்விடத்தை
ஒரு கிழவி பரிசுத்தி
செய்து நித்திய யெளவனத்தைப்
பெற்றாள் என்பதைக் கேட்டிருக்கிறோம்.
நம் ஆசார்யர்களும் பகவானுடைய
திருவீதியிலுள்ள குப்பைகளைப்
போக்கிச் சுத்தம் செய்வதாகிய
கைங்கரியத்தைச் செய்தார்கள்.
இப்படிப்பட்ட ஆசாரியர்களை
நான் வணங்குகிறேன் என்றார்
ஸ்ரீஸ்வாமி தேசிகன்.
கர்மப்ரஹ்மாத்மகே
சாஸ்த்ரே கெளதஸ்குதநிவர்தகாந்
| வந்தே ஹஸ்திகிரீசஸ்ய
வீதீசோதககிங்கராந்
|| (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம்
- உபோத்காதிகாரம்)
"யானைமலை
என்னும் காஞ்சீபுரத்தில்
எழுந்தருளியிருக்கும்
தேவராஜனுடைய வீதிகளைச்
சோதிக்கும் கிங்கரர்களை
வணங்குகிறேன்" என்றார்.
பகவானுடைய வீதி என்பது
அவன் எழுந்தருளும் இடம்;
அதாவது வேதம். அவ்வேதத்தை
நன்கறிந்து, தப்பர்த்தங்களைச்
சொல்லுகிறவர்களை நிரஸித்துச்
சரியான வழியில் நின்று
அர்த்தங்களைச் சொல்லுகிறவர்கள்,
பகவானுடைய வீதியாகிய
வேதத்தை சோதிப்பவர்கள்.
அப்படிப்பட்ட கிங்கரர்களை
வணங்குகிறேன் என்றும்
பொருள்படும்படி கூறினார்.
இதனாலேயே பகவான் மேன்மேலும்
திருப்தி அடைவான் என்பது
திண்ணம்.
ஏழு தீவுகளுடன்
கூடிய பூமியை ஆண்டுவந்தவர்
அம்பரீஷர் என்னும் அரசர்.
அவன் என்ன செய்தான் தெரியுமா?
தினமும் கோயிலுக்குச்
செல்வான். செறுக்கு இல்லாமல்
தானே ஸம்மார்ஜனீயை எடுத்து
தூசி இல்லாமல் கோயிலை
சுத்தம் செய்வான். எம்பெருமானும்
இவனது நடத்தையைப் பார்த்து
அருள் புரிந்தான்.
மேலும்
தனது சக்ராயுதத்தையே
இவனைக் காக்க இவனிடம்
ஒப்படைத்தான். சீக்ர
கோபியான துர்வாஸரும்
இவனிடம் அஞ்சினார் என்பதும்
புராணப் ப்ரஸித்தம்.
நமது
இராமாநுஜ ஸம்ப்ரதாயமே
திருக்கச்சிகள் மூலமாக
தேவாதிராஜன் பரப்பினான்
என்பதும் ஆறு வார்த்தைகள்
ஏற்பட்டு நமது ராமாநுஜன்
ஸம்ப்ரதாயத்தை ஸ்தாபித்தார்
என்பதையும் உணர்க.
*****
|