பகவத்பக்தர்களின்
பெருமை
ச்ரிய:பதியான
நாராயணன் ஸர்வோத்க்ருஷ்டன்
என்பது ச்ருதிகளிலும்
ஸ்ம்ருதிகளிலும் புராணங்களிலும்
பரக்கப் பேசப்பட்டுள்ளது.
இவன்தான் நித்தியஸூரிகள்,
முக்தர்கள், பத்தர்கள்,
மற்றுமுள்ள அசேதனப் பொருள்கள்
இவை எல்லாவற்றைக் காட்டிலும்
எல்லா விதத்தினாலும்
பெருமை பெற்றவன். இவனைக்காட்டிலும்
மேம்பட்டவனும் இல்லை;
ஸமமானவனும் இல்லை. 'ந தத்ஸமஸ்ச
அப்யதிகஸ்ச த்ருச்யதே'
என்றது வேதமும்.
இந்த
ஈச்வரன் எல்லாவற்றைக்
காட்டிலும் மேம்பட்டவன்
என்பதை எல்லா அவதாரங்களிலும்
தானாகவே காட்டியிருக்கிறான்.
ஆயினும் ஸ்ரீகிருஷ்ணா
வதாரத்தில் இவ்விஷயத்தை
ஸ்பஷ்டமாகத் தானே காட்டினான்.
வழக்கமாக,
கோகுலத்தில் செய்யும்
இந்திரபூஜையை, ஸ்ரீகண்ணனுடைய
நியமனத்தின் பேரில் தவிர்த்துக்
கோவர்த்தன மலையையே பூஜைசெய்ய,
அதனால் கோபம் கொண்ட
தேவேந்திரன் ஏழு நாள்
விடாமல் பெருமழை பொழிந்திட,
ஸ்ரீகிருஷ்ணன் கோவர்த்தனகிரியை
எடுத்துக் குடையாகப்
பிடித்து ஆநிரைகள், மற்றும்
ஆய்ப்பாடியிலுள்ளவர்கள்
எல்லாரையும் காப்பாற்றித்
தேவேந்திரனின் கர்வத்தை
ஒழித்தான். தேவேந்திரன்
கண்ணனின் திருவடிகளில்
வீழ்ந்து வணங்கி அபராதக்ஷாபணம்
செய்துகொண்டு போனான்.
இதுபோல,
ஒரு துவாதசியன்று அவேளையில்
நந்தகோபாலர் யமுனையில்
நீராட, வருணபகவான் அவரை
எடுத்துச் செல்ல, கோபம்
கொண்ட பகவான் வருணனை
ஜயித்து அவரை மீட்டு
அழைத்து வந்தார்.
தம்
ஆசார்யரான ஸாந்தீபனி
மகரிஷியின் புத்திரனை
எமனிடமிருந்து மீட்டு
வந்தார். ஒரு ஸமயம் பெருங்
காட்டில் தூமகேது போல்
பயங்கரமான காட்டுத் தீயினால்
பீடிக்கப்பட்ட ஆயர்பாடியிலுள்ளவர்களை
அந்த நெருப்பை வாயினால்
விழுங்கிக் காப்பாற்றினார்.
பிரம்மதேவர்
வத்ஸங்களை அபஹரிக்க,
அவரது கர்வத்தை ஒழித்து
அவரை ஜயித்தார். பாணாஸுர
யுத்தத்தில் தம் பரிவாரங்களுடன்
வந்து பாணாஸுரனுக்கு
உதவி புரிந்த பரமசிவனை
ஜயித்தார்.
இப்படிப்
பிரம்மா, சிவன், இந்திரன்
முதலிய கர்வமடைந்த தேவர்களை
அடக்கி அவர்கள் மூலமாகவே,
தானே பரதெய்வம், ஸர்வோத்க்ருஷ்டன்
என்பதைக் கிருஷ்ணன் வெளிப்படுத்திக்
கொண்டான். ஆகவே, 'பேச நின்ற
சிவனுக்கும் பிரமன் தனக்கும்
பிறர்க்கும் நாயகன் அவனே'
ஆக நின்றான்.
இப்படி
இவன் எல்லாரைக்காட்டிலும்
மேம்பட்டவனாக நின்றபோதிலும்
இவனுக்கு மேற்பட்டவர்
ஒருவர் இருக்கிறார்.
அவர் யார் என்றால், இவனிடம்
பக்தி கொண்ட பாகவதர்
பக்தர் என்று சொல்லப்பெறுகிற
மகான்கள்தான். இந்த மகான்கள்
பகவானைக்காட்டிலும்
எல்லா விதத்திலும் பன்மடங்கு
மேம்பட்டவர். பகவான்
தன்னிடம் கூடாத அஸுரப்
பிரகிருதிகளை வென்று
அவர்களுக்கு மேம்பட்டவனாக
நிற்பான். தன்னிடம் ஸ்நேஹபூர்வம்
பக்தி செய்து கூடின பாகவதர்களிடம்
தோல்வியுற்று நிற்பான்.
இது ஒரு பெரிய ஆச்சர்யம்.
ஸ்ரீஸஹஸ்ரநாமத்தில்
விஜிதாத்மா, விதேயாத்மா
என்று படிக்கிறோம் அநுதினமும்
நாம். இங்கு வியாக்யானம்
செய்யும் ஸ்ரீசங்கர பகவத்பாகவதர்,
'அவிதேயாத்மா' என்று பதம்
பிரித்து, 'ஈச்வரன் ஸ்வதந்த்ரன்;
அவன் எல்லாரையும் அடக்குகிறவன்;
தான் ஒருவருக்கும் அடங்காதவன்'
என்று பொருள்படும்படி
உரையிட்டார்.
நம் ஆசார்ய
ஸார்வபௌமரான ஸ்ரீபராசரபட்டர்,
'விதேயாத்மா' என்றே பதம்
பிரித்து, 'அந்த ஈச்வரன்
பக்தர்களுக்கு அடங்கினவன்,
அவர்கள் இட்ட வழக்காக
நடப்பவன்' என்று சுவைமிக்க
பொருளைக் கொண்டார்.
இடக்கை வலக்கையறியாத
ஆயர்பாடியிலுள்ள கோபஸ்திரீகளிடத்தில்
தாஸ்யத்தை யன்றோ இவன்
அநுஷ்டித்துக் காட்டினான்!
'தாஸ்யம் கோகுலபும்ஸ்சலீஷு
குருஷே' என்றார் லீலாசுகர்.
வேதத்திலும்,
'பதிம் விச்வஸ்ய ஆத்மேச்வரம்',
என்று பகவான் பக்தபரதந்த்ரன்
என்று சொல்லப் பெற்றிருக்கிறது.
இங்கு 'ஆத்மேச்வரம்' என்பதற்கு,
'எல்லா ஆத்மாக்களுக்கும்
அவன் ஈஸ்வரன்' என்று பொருள்
கொள்வது ஸாரமற்றது.
இதற்கு ரஸகனமான பொருள்
ஒன்றைக் கேண்மின்: ஆத்மா
ஈச்வர: யஸ்ய' என்று ஸமாஸம்
கொண்டு, 'எவனுக்கு ஜ்ஞாநியான
ஆத்மா ஈச்வரனோ-யஜமானனோ'
என்று பொருள் கூறினால்
சுவைமிக்க பொருள் கிடைக்கும்.
'உண்ணும் சோறு பருகுநீர்
தின்னும் வெற்றிலையும்
எல்லாம் கண்ணன், வாசுதேவ;
ஸர்வம்' என்று சொல்லப்பெற்ற
ஜ்ஞாநி இவனுக்கு ஆத்மாவானபடியால்
அந்த ஜ்ஞாநியான ஆத்மா,
இந்த எம்பெருமானுக்கு
ஈச்வரனாக நிற்கிறான்.
எனவே அந்த ஜ்ஞாநிக்கு
இவன் கட்டுப்பட்டவன்
என்று தெரிகிறது. இந்தச்
சுவை நிறைந்த பொருளை
மனத்தில் வைத்துத்தான்
ஸ்ரீபராசரபட்டர், விதேயாத்மா'
என்று பதம் பிரித்துப்
பொருள் உரைத்தார். இப்படி
எல்லாரிலும் உயர்ந்த
எம்பெருமானுக்கும் மகான்கள்
உயர்ந்தவர்கள் என்று
ஏற்பட்டது.
ஆகையால்தான்
இவ்வளவு மகிமைப் பெற்ற
பாகவதர்களிடத்தில் ஒருவிதத்திலும்
ஒருபோதும் அபசாரப்படக்கூடாது.
ஒரு மனிதன், தான் செய்யக்கூடாத
(விடவேண்டிய) விஷயங்களில்
முக்கியமானது பாகவத அபசாரம்.
முக்கரணங்களாலும் பாகவதாபசாரத்தைச்
செய்யக்கூடாது. அப்படி
நேர்ந்துவிட்டால், அதற்குப்
பரிஹாரமாக அவர்களிடத்திலேயே
க்ஷமையைப் பிரார்த்தித்துக்கொள்ள
வேண்டும். மற்றத் தெய்வங்களிடத்திலோ
பகவானிடத்திலோ அடிபணிந்து
வேண்டிக்கொண்டாலும்
குற்றம் போகாது; பகவானைக்
காட்டிலும் அவர்கள் உயர்ந்தவர்களானபடியால்.
பகவானிடத்தில்
குற்றம் செய்துவிட்டால்,
அது போகப் பகவானிடத்திலும்
க்ஷாபணம் செய்து கொள்ளலாம்;
பாகவதர்களிடத்திலும்
செய்து கொள்ளலாம். பாகவதர்களிடத்தில்
அபசாரப்பட்டால், அது
நீங்க, அவர்களிடத்திலேயே
க்ஷாபணம் செய்துகொள்ள
வேண்டும். எல்லாருக்கும்
மேம்பட்ட அந்தப் பகவானிடத்தில்
வேண்டிக்கொண்டாலும்
அந்தக் குற்றம் போகாது.
சீதாப்பிராட்டியினிடத்தில்
குற்றம் செய்த காகாஸுரன்
இங்குமங்கும் ஓடிக் கடைசியில்
அவள் முன்னிலையிலேயே
விழுந்தான். சீதாதேவி
கருணையினால் 'சிரஸ்ச
பாதயோஸ்தஸ்ய யோஜயாமாஸ
ஜாநகீ' என்ற ரீதியில்,
அந்தக் காகத்தினுடைய
தலையை ஸ்ரீராமனுடைய திருவடிகளில்
சேர்த்துவைத்துவைத்தாள்.
இப்படி இவள் தன்னிடத்திலே
அபசாரப் பட்ட இவனுடைய
குற்றத்தைப் பொறுத்து
ஸ்ரீராமனின் திருவடிகளில்
சேர்ப்பித்தபடியால்தான்,
இதை உணர்ந்த ராமன் காகத்தை
அநுக்ரகித்தான்.
இப்படியே,
இவ் விஷயத்தை அம்பரீஷோபாக்கியானத்தினால்
தெளிவாக அறியலாம். பகவானால்
ஏவப்பெற்ற சக்ராயுதம்
அம்பரீஷரிடத்தில் அபசாரப்பட்ட
துர்வாஸரைத் துரத்த,
தமக்குப் புகலிடம் தேடி
அவர் மூன்று உலகங்களிலும்
ஓடிக் கடைசியில் பிரம்மாவை
அடைந்தார். அங்கே தமக்கு
ரக்ஷணம் கிடைக்காமால்
பரமசிவனையும் அடைந்தார்.
பரமசிவன், "மகாவிஷ்ணுவின்
சக்ராயுதமானபடியால்
அவருக்கு அடங்கிக் கீழ்ப்படிந்திருக்கும்
என்னால் ஒன்றும் செய்ய
முடியாது. எனக்குத் தெரிந்த
ஓர் உபாயத்தைச் சொல்லுகிறேன்.
ஸ்ரீமகாவிஷ்ணுவே எல்லாருக்கும்
தெய்வம்; ஆனதால் அவரை
அடையும்" என்று உபதேசித்து
அனுப்பி விட்டார். பிறகு,
'உபாயோஸ்மி ஹரே! ஸ்ம்ருதௌ'
என்றபடி, பகவானை அடைய,
பரமசிவனும் ஆசார்யனானபடியால்
அவர் சொற்படியே பகவானை
அடைந்தார். அங்கும் பகவான்,
"நான் பக்தபராதீனன்; அஸ்வதந்த்ரன்;
பக்தர்களான ஜ்ஞாநிகள்தாம்
எனக்கு உயிர். அவர்கள்
சொற்படிதான் நான் கேட்பவன்.
பதிவிரதைகளான பெண்கள்
எப்படிப் பர்த்தாவை உபசரிக்கிறார்க்ளோ
அப்படி என்னை உபசரித்து
ஆராதிக்கிறபடியால் அவர்களுக்கு
நான் கீழ்ப்படிந்தவன்.
அதனால் இவ்விஷயத்தில்
எதையும் செய்யச் சக்தியற்றவனாக
உள்ளேன். ஆனால் இதற்கு
ஓரு வழி உண்டு; நீர் எந்தப்
பாகவதரான அம்பரீஷரிடத்தில்
அபசாரப்பட்டீரோ அவரிடத்திலேயே
சென்று மன்னிப்பு கோரினால்
ஒருவேளை பரிஹாரம் ஏற்படலாம்"
என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
துர்வாஸர்
பகவான் சொற்படி அம்பரீஷரிடம்
சென்று மன்னிப்புக் கோர,
சக்ராயுதம் சாந்தமாகிவிட்டாது.
இதனால் பாகவதர்களிடத்தில்
தப்புச் செய்தால் அவர்களிடத்திலேயே
மன்னிப்புக் கோர வேண்டும்
என்பதைப் பகவானே வெளியிடக்
காட்டினார்.
பகவானிடத்தில்
அபசாரப்பட்டால் பாகவதரிடத்தில்
க்ஷமைகொள்ள அந்த அபசாரம்
நீங்கும் என்பதை ஸ்ரீராமபிரான்
காட்டியருளினார். வாலிவதத்துக்குப்
பிறகு நான்கு மாதகாலம்
ஸுகமாக இருந்து பிறகு
சீதையைத் தேடலாமென்று
ராமர் நியமித்தார். ஸுக்ரீவன்
தாரையின் போகமயக்குகளால்
நான்கு மாதம் கழிந்தும்
அதை உணராமல் ஸமயாதிலங்கனம்
செய்துவிட்டான். மிகச்
சினங் கொண்ட ராமர் மிகச்சீறி
இளையபெருமாளை அனுப்பினார்.
அவர் ராமருடைய வார்த்தையை
ஸுக்ரீவனிடம் சொல்ல,
ஸுக்ரீவன் பயந்து, தன்
குற்றத்தை க்ஷமித்தருள
வேண்டும் என்று வேண்டிக்கோள்ள
இளையபெருமாளும் பெருமாளும்
சாந்தராக ஆனார்கள்.
கௌதம
மகரிஷியின் தர்மபத்தினி
அஹல்யை. அவள் தேவேந்திரனிடத்திலுள்ள
மோகத்தினால் தன் பர்த்தாவுக்கு
துரோகம் செய்தாள். பிறகு
கௌதம சாபத்தால் கல்லாக
இருந்தவள் ராமபாத தூளியினால்
நிஜஸ்வரூபத்தை அடைந்துவிட்டாள்.
இதனால், பாகவதரிடத்தில்
அபசாரப்பட்டாலும் பகவானுடைய
அநுக்ரகத்தினால் தப்பு
நீங்கிச் சுத்தமாகி விடலாம்
என்று ஏற்படுகிறதே என்று
சிலர் ஸந்தேஹப்படலாம்.
இதை நன்கு ஆராய்ந்து
உண்மையை உணர வேண்டும்.
கௌதம
மகரிஷி அஹல்யையைச் சபித்ததும்
அவள் தன் குற்றத்தை உணர்ந்து
மன்னிப்புக் கேட்டாள்.
பிறகு முனிவர் "ராமர்
இங்கு எழுந்தருளும்போது
சாபவிமோசனம் ஏற்படும்"
என்று அநுக்ரகித்தபடியால்தான்
இந்தச் சாபம் ராமபாத
தூளிகளால் நீங்கியது.
அப்படி அவர் சொல்லாமலிருந்தால்
ராமபாத தூளிகள்தாம் என்ன
செய்ய முடியும்? ஐயாயிரம்
வருஷங்கள் கழித்துக்
கங்கையில் நீராடினால்
இந்தச் சாபம் போகும்
என்றோ, அல்லது இங்கு
ஒரு மாமரம் கிளம்பும்;
பல வருஷங்கள் கழித்து;
அதில் ஒரு பழம் உண்டாகும்;
அதை சாப்பிட்டால் உன்
சாபம் நீங்கும் என்றோ
அவர் சொல்லியிருந்தால்
அப்போது அந்தச் சாபம்
எப்படி நீங்கும் என்று
நீங்களே சிந்தியுங்கள்.
அவர் சொற்படி இரண்டில்
ஒன்றை செய்தாலல்லவோ
பாவம் போகும்? ராமபாததூளிதான்
என்ன செய்யும் அப்போது?
எனவே,
ராமபாததூளியினால் சாபம்
நீங்கியது என்பது கௌதமர்
சொற்படியே நடந்தபடியால்,
இவருக்கு அவளிடத்தில்
அபசாரத்தை க்ஷமித்து
அநுக்ரகம் ஏற்பட்டது
என்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது
என்பதை உணர வேண்டும்.
ஆகையால்
பகவானிடத்தில் அபசாரப்பட்டால்
அவரிடமோ பாகவதரிடமோ
க்ஷமைகொண்டால் போகும்.
பாகவதரிடத்தில் அபசாரப்பட்டால்
பகவானிடத்தில் க்ஷமைகொண்டால்
ஒரு காலும் போகவே போகாது;
பாகவதரிடத்திலே க்ஷமைகொண்டால்தான்
போகும் என்று இருக்கிறபடியால்
பகவானைக் காட்டிலும்
பாகவதர்களுக்குப் பெருமை
அதிகம்.
சரணாகதி என்பது
எல்லாப் பாவங்களையும்
நீக்கி வைகுண்டலோகத்தில்
பகவதநுபவமாகிய பலனைக்
கொடுக்கக் கூடிய உபாயம்.
இது பகவானிடத்தில் செய்யக்கூடியது.
இது எல்லாரும் அங்கீகரித்த
விஷயம். பாகவதாபசாரம்
ஆகிய கொடிய வினையும்
பகவானிடத்தில் க்ஷாபணம்
செய்து கொள்வதாகிய சரணாகதியினால்
போகவேண்டிய ஒன்றுதானே?
அப்படிப் போகாமலிருந்தால்
சரணாகதியின் மகிமை குறந்துவிடுமே!
ஸ்ரீபாஷ்யகாரரும் கத்யத்தில்,
"பகவதபசார-பாகவதாபசார-அஸஹ்யாபசாரரூப
... க்ஷமஸ்வ" என்று பாகவதாபசாரமும்
பகவானிடத்தில் பண்ணும்
சரணாகதியினாலேயே போகும்
என்று ஸாதித்திருக்கிறாரே.
அப்படி இருக்கப் பாகவதாபசாரம்,
பாகவதர்களிடத்தில் க்ஷமாபணத்தில்தான்
விலகும்" என்று எப்படிச்
சொல்ல முடியும்? இதற்குப்
பரிஹாரம் கேண்மின்:
ஒருவன்
கோடிக்கணக்கான பிறவிகளை
எடுத்து இந்தப் பிறவியில்
சரணாகதி செய்துகொள்ளுகிறான்.
கீழ் நடந்த பிறவிகளில்
க்ரூரமான பாகவதாபசார
அஸஹ்யாபசாரங்கள் கட்டாயம்
நேர்ந்தே இருக்கும்.
இதில் ஸந்தேஹமே இல்லை.
ஸ்ரீ ஆளவந்தாரே, "சாஸ்திரங்களில்
சொல்லப்பட்ட பாபகர்மாக்களில்
ஒவ்வொன்றையும் ஆயிரம்
தடவைகளுக்குக் குறையாமல்
நான் செய்திருக்கிறேன்.
அப்படிச் செய்யப்படாத
பாவங்களே இல்லை" என்று
சொல்லுவதனால், நம்மைப்
போன்றவர்களைப் பற்றிக்
கேட்கவே வேண்டாம். ஆக,
முற்பிறவிகளில் செய்த
பாகவதாபசாரங்கள் இந்தப்
பிறவியில் செய்த பகவத்சரணாகதியினால்
போகாவிட்டால் இவனுக்கு
நற்கதியே கிடைக்க வழியில்லாமற்
போய்விடும். அந்த அந்தப்
பிறவிகளில் இருந்த பாகவதர்கள்
இப்போது இல்லாததனால்
அவர்களிடத்தில் எப்படி
க்ஷாபணம் செய்ய முடியும்?
பிறவியிலேயே ஏற்பட்ட
பாகவதாபசாரம்தான், அந்தப்
பாகவதர் பரமபதித்துவிட்டால்
அவரிடத்தில் இவன் எப்படி
க்ஷாபணம் செய்துகொள்ள
முடியும்? ஆக, பாகவதாபசாரம்
இரண்டு விதம்; ஒன்று, 'இந்தப்
பிறவியில் இந்தப் பாகவதரிடத்தில்
அபசாரப்பட்டேன்' என்று,
இப்போது நடக்கும் சரணாகதி
செய்யும் பிறவியில் அறியப்படாமலிருப்பது.
அந்த அந்தப் பிறவியில்
செய்யும்போது புத்திபூர்வகமாகத்தான்
செய்திருக்கிறான்; ஆனால்
இப்போது அது விதிதமன்று.
மற்றொன்று, இப்போது
இந்தப் பிறவியில் நன்றாகத்
தெரிந்தது. அதாவது ஒரு
பாகவதரிடத்தில் ஒருவன்
புத்திபூர்வகமாக அபசாரத்தைச்
செய்தால் பிறகு, அவன்
செய்தது ஞாபகத்தில் வருகிறபடியால்
இது விதிதமான பாகவதாபசாரம்.
முன்பு சொன்னது அவிதிதம்.
இவற்றுள், அவிதிதமான
பாகவதாபசாரம் பகவத்சரணாகதியினால்
தொலைந்துவிடும். விதிதமானது
பாகவதர்களிடத்தில் செய்யும்
க்ஷமாபணத்தினால் ஏற்பட்ட
அவரது அநுக்கிரகம் வழியாகப்
பகவானுக்கு ப்ரஸாதம்
ஏற்பட்டுத் தொலையும்.
இதைத்தான், 'பகவதபசாரபாகவதாபசார...க்ஷமஸ்வ'
என்ற கோர்வையில் சேர்த்து
ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச்
செய்தது.
ஆகையால், அவிதித
பாகவதாபசாரமோ இந்தப்
பிறவியிலேயே ஏற்பட்டதும்,
அந்தப் பாகவதர் பரமபதித்தபடியால்
அவரிடம் க்ஷாபணம் செய்துகொள்ள
முடியாததுமான அபசாரமோ
பகவத்சரணாகதியாலேயே
போய்விடும். மற்றவை,
அவரிடத்திலேயே க்ஷாபணம்
செய்து போக்கிக் கொள்ள
வேண்டும் என்பது சாஸ்திரங்களில்
தேறின பொருள். இதை ஸ்ரீதேசிகன்
ஸாதித்துள்ள கத்ய வியாக்யானத்தை
நன்கு ஸேவித்து உணர்ந்துகொள்ளலாம்.
*****
|