கோபப்ரஸாதம்
இப்பொழுது
ஒரு ரஸகனமான விஷயத்தை
வரைய விரும்புகிறோம்.
இந்த தலையங்கத்தைக் கண்டதும்
திகைத்து நிற்க வேண்டாம்.
'கோபப்ரஸாதம்' என்று
சொன்னால், 'கோபமும்
ப்ரஸாதமும்' என்ற பொருளும்
ஏற்படும். பெரியவர்கள்
தப்பு காரியங்களைச் செய்யும்
சிறியவர்களைக் கோபிப்பதுண்டு.
நல்ல காரியங்களைச் செய்கிறவர்களிடத்தில்
ப்ரஸாதத்தைக் காட்டுவதும்
உண்டு. இது உலகியற்கை.
இதை நாம் இங்கு கூற வரவில்லை.
ஒரு
மகான் ஒருவரைக் கோபித்துக்
கொள்ளுகிறாரே சில காரணங்களையிட்டு,
அந்த மகானின் அந்த கோபம்
ப்ரஸாதமாக முடிகிறது.
அதாவது மகான்களின் கோபம்
ப்ரஸாதமாகப் பரிணமிக்கிறது.
இதுதான் ஆச்சரியம். பெரும்பாலும்
மகான்களின் கோபம் எப்போதும்
அநுக்ரகரூபமே.
சாதாரணமாக
உலகத்தில் கல்விச் செல்வம்,
ஒழுக்கம், வைராக்கியம்
முதலிய நற்குணங்கள் இல்லாத
பாமரர்களின் கோபம் பிறருக்குத்
துன்பத்தையே விளைவிக்கும்.
அப்படியன்று நற்குணங்களே
உருவான மகான்களின் கோபம்.
உலகத்திலும்
நற்குணம் பொருந்திய
ஒரு யஜமானன் இருக்கிறான்
என்று வைத்துக்கொள்வோம்.
அவனிடத்தில் எல்லா நற்குணங்களும்
உண்டு; ஆனால் கோபம் அதிகம்.
தன்னிடம் வேலை செய்கிறவர்களிடத்தில்
எப்போதும் சிடுசிடுவென்று
எரிந்து விழுவான். 'இவ்வளவு
கோபிஷ்டனாக இருக்கிறானே;
வேலையிலிருந்து நம்மை
நீக்கிவிடுவானே?' என்று
அவனிடம் பயப்பட வேண்டியதே
இல்லை. பெரும்பாலும்
மேற்பார்வைக்குச் சாது
மாதிரி இருக்கும் யஜமானனுக்குத்தான்
பயப்பட வேண்டும். அவன்தான்
வெளியில் தெரியப்படுத்தாமல்
கடைசியில் காரியத்தில்
காட்டிவிடுவான். கோபம்
உள்ளவன் எப்போதும் கெடுக்கமாட்டான்;
சிடுபுடு என்று மேல்விழுவதுடன்
சரி; காரியத்தில் நன்மையைதான்
செய்வான். 'கோபம் உள்ளவர்களிடம்
தான் குணமும் உண்டு' என்று
சொல்வது வழக்கம். அதைப்போல
மகான்களின் கோபம் நல்லதில்
பர்யவஸிக்கிறது.
இதற்கு
மற்றோர் உதாரணத்தைத்
தெளியக் காட்டுகிறோம்.
சூரியன் தன் கிரணங்களையிட்டு
உலகத்தைக் கொளுத்துகிறான்.
ஜனங்கள் தாங்க முடியாமல்
'ஐயோ! என்று கதறித் தவிக்கின்றனர்.
சூரியனுடைய இவ்வளவு கடுமையான
கொளுத்துகையும் எதில்
முடிகிறது? யோசித்துப்
பாருங்கள். மழை பெய்வதில்தானே
முடிகிறது? எவ்வளவுக்கு
எவ்வளவு கொளுத்துகிறானோ
அவ்வளவுக்கு அவ்வளவு
மழை. தன் கிரணங்களைக்
கொண்டு நன்கு கொளுத்தி
சமுத்திரத்திலிருந்து
நீரை எடுத்து ஆவியாக்கி
மேகங்கள் மூலம் நன்கு
வர்ஷிக்கச் செய்கிறான்.
ஆக, தாபமே வர்ஷத்தில்
முடிந்து ஹர்ஷத்தை உண்டுபண்ணுகிறது.
அதுபோலத்தான் மகான்களுடைய
கோபமும்.
சில
இடங்களில் ப்ரஸாதமே கோபமாக
மாறுவதுண்டு; 'அவ்யவஸ்த்தி
தஸித்தானாம் ப்ராஸாதோபி
பயங்கர:' என்ற ரீதியில்.
சில சஞ்சல சித்தர்கள்
தமக்கு பெருமை வரவேண்டும்
என்ற எண்ணி பலர் எதிரில்
சிலருக்கு எதையாவது கொடுத்துவிடுவார்கள்.
இது நமக்கு கிடைத்துவிட்டது
என்று சந்தோஷப்பட முடியாது.
எந்த சமயத்தில் அவர்
மூலமாக என்ன கெடுதி ஏற்படுமோ
என்று பயந்துகொண்டேதான்
இருக்கவேண்டும். நிம்மதியாக
இருக்க முடியாது. அவரே
பத்து நாட்கள் கழித்து
வட்டியுடன் வசூல் பண்ணிவிடுவார்.
இதையும் உலகத்தில் பார்த்திருக்கிறோம்.
இப்படிப்பட்டதன்று மகான்களின்
கோபம்.
இந்த விஷயத்தைப்
புராணங்களிலுள்ள சில
கதைகளையிட்டு நிரூபிக்கிறோம்.
தசரத
சக்ரவர்த்தி தம் புதல்வர்களான
ராம லக்ஷ்மணர்களைக் காட்டுக்கு
அனுப்பியபிறகு, மிகுந்த
வருத்தத்துடன் கெளஸல்யையைப்
பார்த்து, முன்பு நடந்த
ஒரு விருத்தாந்தத்தைச்
சொல்லுகிறார் - 'நான்
ஒரு சமயம் காட்டுக்கு
வேட்டையாடச் சென்றிருந்தேன்.
ஒரு தபஸ்வியின் குமாரன்
தன் பெற்றேர்களுக்காக
ஒரு கலசத்தில் தண்ணீரை
மொண்டுகொண்டிருந்தான்.
சப்தம் மாத்திரம் காதில்
விழுந்தது. ஒரு யானை தண்ணீரைக்
குடிப்பதாக அந்த ஒலியினால்
பிரமித்து அம்பெய்திக்
கொன்று விட்டேன்: அருகில்
சென்றதும், ஒரு தபஸ்வி
குமாரன் என்பதை உணர்ந்து,
அவனை அவன் பெற்றோர்களிடம்
சேர்ப்பித்து நடந்ததைச்
சொன்னேன். அப்போது
அவர்கள் ஆறாத் துயருற்று,
'எங்களைப் போல் நீயும்
புத்திர வியோகத்தினால்
கஷ்டப்படக்கடவாய்' என்று
சபித்தார்கள். இந்தச்
சாபம் கஷ்டத்தைக் கொடுக்க
கூடியதாக இருந்தபோதிலும்
நன்மையையே செய்தது. வெகு
காலம் புத்திரனில்லாத
எனக்குப் புத்திர உத்பத்தியை
நிச்சயம் செய்து கொடுத்தது.'
இதையே
ஒரு கவி சமத்காரமாகப்
பேசுகிறான் -
சாபோப்யத்ருஷ்டதநயாநநபத்மசோபே ஸாநுக்ரஹோ
பகவதா மயி பாதிதோயம்
| க்ருஷ்யாம் தஹந்நபி
கலு க்ஷிதிம் இந்தநேத்த:, பீஜப்ரரோஹஜநநீம்
ஜ்வலந: கரோதி ||
சாபமே
அநுக்ரகத்தில் முடிந்தது
என்பதை ஓர் அழகிய உதாரணத்தையிட்டு
நிரூபிக்கிறான் கவி.
ஒரு நிலத்தில் கரும்பைப்
பயிரிட்டு அறுவடையானதும்
மறுபடி அதிலேயே நெல்லைப்
பயிரிட வேண்டுமென்றால்
என்ன செய்கிறார்கள்?
முதலில் நெருப்பயைிட்டுக்
கரும்பின் அடிக்கட்டைகளை
எல்லாம் கொளுத்துகிறார்கள்.
இப்படிச் செய்யாவிட்டால்
நெல்லை நன்கு பயிரிட
முடியாது. இப்படி நெருப்பிட்டுக்
கொளுத்தினால் உபரோதம்
இல்லாமலிருப்பதோடு,
உரமாகவும் ஆகி, நெல் விதையின்
வளர்ச்சியையும் தூண்டிவிடுகிறது.
இது போலத் தான் மகான்களுடைய
கோபத்தின் காரியமாகும்.
ஒரு
சமயம் இரண்டு கந்தர்வர்கள்
அப்ஸரஸ் ஸ்திரீகளுடன்
நிர்வாணமாக ஜலத்தில்
கிரீடை செய்து கொண்டிருந்தபோது
நாரத மகரிஷி வந்தார்.
அவரைப் பார்த்துங்கூட
நிர்வாணமாகவே ஜலத்தில்
விளையாடிக்கொண்டே இருந்தனர்.
இதைக் கண்டு கோபித்த
அவர், "நீங்கள் மரம் போல்,
என்னைக் கண்டும் வணங்காமல்
இருந்தபடியால் மரமாகவே
ஆகவேண்டும்" என்று சபித்துவிட்டார்.
இதைக் கேட்டு, அவர்கள்
வருந்தி, அவரை வணங்கி
மன்னிப்புக் கேட்க, "ஸ்ரீகிருஷ்ணனுடைய
அருளினால் உங்களுக்குச்
சாபவிமோசனம் ஏற்படும்;
அவருடைய தரிசனமும் கிடைக்கும்"
என்றார். அவர் சொன்னபடி
இருவரும் இரட்டை மருதமரங்களாக
ஆனார்கள். ஸ்ரீகிருஷ்ண
தரிசனமும் ஏற்பட்டது.
அவன் செய்த அத்தனை பாலலீலைகளையும்
'யமலார்ஜுநத்ருஷ்டபால
- கேளிம்' என்ற கணக்கில்
அநுபவித்தார்கள். இவ்வளவுக்கும்
காரணம் மகானான நாரத மகரிஷியின்
சாபம்தான்.
தசாவதாரம்
செய்த பகவானுடைய கதைகளைக்
கேட்டு நாம் ரஸிக்கிறோம்.
விபவத்தில் நேரிலும்
கண்டு அநுபவித்திருக்கிறார்கள்.
இப்படி எப்பெருமானுடைய
கதைகளைக் கேட்டு க்ஷேமங்களை
நாம் அடைகிறோமே; இதற்குக்
காரணம் என்ன? பகவான் இந்த
உலகத்தில் அவதரிக்காவிட்டால்
அந்தக் கதைகளை அநுபவிப்பது
ஏது? ஆக அவனுடைய அவதாரங்கள்தாம்
காரணம். இது நிற்க. பகவானும்
ஸ்ரீவைகுண்டலோகத்தில்,
'உலகத்திலுள்ள ஜனங்களுடன்
எப்போது கலந்து பரிமாறுவோம்?
நாம் பூலோகத்தில் பிறந்து
அவர்களுக்கு ஸேவை கொடுத்து
அவர்களுடைய கஷ்டங்களை
நீக்கி நம் இடத்துக்கு
அழைத்து வந்து அவர்களுடன்
ஸுகத்தை எப்போது அநுபவிப்போம்?'
என்று உள்வெதுப்புடன்
துடித்துக் கொண்டிருக்கிறான்.
இது வாஸ்தவமான விஷயம்.
இப்படி இரு திறத்தாருக்கும்
நன்மை வேண்டும். இந்த
நன்மைக்கெல்லாம் மூலகாரணம்
எவை என்று ஆராய்ந்தால்,
பகவானுக்கு ஏற்பட்ட மகரிஷிகளின்
சாபங்கள்தாம்.
பிருகு
மகரிஷியின் மனைவியை,
இந்திரனுக்கு உதவி செய்ய
வந்த பகவான், தம் சக்ராயுதத்தால்
கொன்றுவிட்டார். சினம்கொண்ட
மகரிஷி பகவானைச் சபித்தார்.
'தஸ்மாத் த்வம் மாநுஷே
லோகே ஜநிஷ்யஸி ஜநார்தந!
| தத்ர பத்நீவியோகம்
த்வம் ப்ராப்ஸ்யஸே பஹுவார்ஷிகம்
|| மனுஷ்ய லோகத்தில் நீ
பிறக்க வேண்டும்' என்று
சாபம் கொடுத்தார். பகவான்
'எனக்கும் இதனால் நன்மை
ஏற்படும். ஜனங்களுக்கும்
நன்மை உண்டாகும்' என்று
எண்ணி, அந்தச் சாபத்தைத்
தலைமேல் தாங்கினார்.
மகான்களுக்குப்
பெரும்பாலும் கோபமே
வராது; அவர்கள் ஆறு சத்துருக்களையும்
(காம, க்ரோத, லோப, மோஹ,
மத, மாத்ஸர்யம்) ஜயித்தவர்களானபடியால்
துஷ்டர்கள் செய்யும்
தப்புக் காரியங்களைப்
பார்த்து அவர்களைச் சிக்ஷிப்பதுடன்,
நல்ல ச்ரேயஸ்ஸை உண்டுபண்ண
வேண்டுமென்று எண்ணி,
சில இடங்களில் கோபத்தைக்
காட்டுவார்கள். இந்தக்
கோபத்தை ஒரு கணமேனும்
ஒருவராலும் தடுக்க முடியாது.
உலகத்தைப் படைக்கும்
ப்ரம்மதேவனின் படைப்பையும்,
உலகத்தை அழிக்கும் ருத்ரனுடைய
அழித்தலையும் பகவானால்
தடுக்கமுடியும். ஆனால்
மகான்களுடைய கோபத்தை
பகவானாலும் அடக்க முடியாது.
எனென்றால் அவர்களுடைய
சாபத்துக்கு இவனே இலக்காக
ஆகிறானே!, அவர்கள் கோபத்தினால்
சபித்தால் 'சற்று இரு
என்றோ' 'பெற்றுக்ககொள்ள
மாட்டேன்' என்றோ சொல்கிறானோ!?
இல்லையே!. ஆக பகவானாலும்
ஒரு க்ஷண காலம் கூட அவர்களின்
கோபத்தை அடக்க முடியாது.
இதை திருவள்ளுவரும் மிக
அழகாக திருக்குறளில்
சொல்லுகிறார்:-
குணமென்னும்
குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல்
அரிது. (அறத்துப்பால்
- அதிகாரம்-3)
இங்கு 'காத்தல்'
என்பதற்கு 'தடுத்தல்'
என்று பொருள். இந்த குறளுக்கு
மற்றொரு பொருளும் கூறலாம்.
காத்தல் - ரக்ஷணம்; அதாவது
மகான்கள் தங்களுக்கு
திடீரேன்று உண்டாகும்
கோபத்ைதை க்ஷண காலம்
கூட காப்பாற்றி வைத்துக்
கொள்ள மாட்டார்கள்.
மின்னல்போல் வந்த சுவடு
தெரியாமல் மறைந்து விடும்
'கோபம் வந்ததா என்ன? நம்பவே
முடியவில்லையே?' என்று
சொல்லும்படி இருக்கும்.
உத்தமே
க்ஷண கோபக ஸ்யாத், மத்யமே
கடிகாஸ்தம் | அதமே ஸ்யாத
ஹோராத்ரம், ம்ருத்யந்த
மதமாதமே ||
உத்தம புருஷனிடத்தில்
கோபம் ஒரு க்ஷண காலம்
தான் தங்கியிருக்கும்.
மத்யமனித்தில் இரண்டு
நாழிகை. அதமனிடத்தில்
ஓர் இரவு பகல். அதமாதமனிடத்தில்
மரணம் வரையிலும் இருக்கும்.
உத்தமோத்தமர்களான மகான்களின்
கோபம் க்ஷண காலம் கூட
இருக்காது என்பது தெளிவு.
இப்படிப்பட்ட
மகான்கள் கோபிக்க மாட்டார்கள்.
கோபித்தாலும் க்ஷண காலம்
கூட அது நிலைத்து நிற்காது.
அப்படி இருந்தாலும் அது
அநுக்ரஹத்தில் முடிந்து
நன்மையையே விளைவிக்கும்.
ஸூர்யன்
ஆதபத்தைக் கொண்டு கொளுத்துகிறான்.
அதனால் மணலும் சுட்டுவிடுகிறது.
குடை பிடித்துப் போகிறவர்கள்
கூட கஷ்டத்தை அடைகிறார்கள்.
உடலெல்லாம் வெந்து போகிறது.
வியர்வை சொல்ல இயலாது.
மருதாகம வார்தயாபி
சூந்யே ஸமயே ஸம்ப்ரதி
ஸம்ப்ரவ்ருத்ததாபே. உரசி சிசவே புபுஷுவே
அதி சத்பூத் க்ருதிம்
ஆனசரனிலே ந
என்றான்
ஒரு கவி. தாபமே அதிகம்.
காற்றும் இல்லை. பாம்புக்குஞ்சுகள்
தவிக்கின்றன. தாய் பாம்பும்
என்ன செய்யும். தன்னுடைய
வாயினால் காற்றை ஊதி
அவைகளை சமாதானப் படுத்தியது.
பாம்புக்கு வாதாசனம்
எனப் பெயர் உண்டே. இப்படி
சூர்யன் தபிக்கிறான்.
ஆனால் இப்படியிருந்தால்
உடனே மழை என்று சொல்லுகிறோம்.
கிரணத்தைக் கொண்டு நமக்கு
தாபத்தை உண்டு பண்ணுகிறவனே
கிரணத்தால் பூமியில்
உள்ள தண்ணீரை எடுத்து
மழையையும் கொடுக்கிறான்.
இது எல்லோருக்கும் கண்கூடு.
யாக்ஞவால்கர்
ஒரு மஹரிஷி. பெரிய மஹான்.
அவருக்கு இரண்டு மனைவிகள்.
ஒருத்தி ஸொத்தைப் பெற்றுக்கொண்டாள்.
அதுதான் அவளுக்குச் செல்வம்.
மற்றொருத்தி ப்ரஹ்மஞானம்
என்னும் ஸொத்தை அடைந்தாள்.
அவளுக்கு சீடர்கள் மூன்று
பேர். சந்தர காண்தன், மஹா
மேதன் விஜயன் என்று பெயர்.
அவர்கள் ப்ராமண குலத்தில்
பிறந்தவர்கள். அவர்களுக்கு
14 ஆயிரம் சீடர்கள். இவர்கள்
பரமசிவனிடத்தில் நிர்வாணன்
என்றும் பஸ்மதாரி என்றும்
சில ஹீனச் சொற்களை சொல்லி
கேலி செய்தார்கள். அதனால்
வெகுண்ட சிவன் மூன்று
ஆசார்யர்களையும் 14 ஆயிரம்
சீடர்களையும் சபித்துவிட்டார்.
அவர்கள் கரன் தூஷணன்
த்ரிசிரஸ் என மூவராகவும்
14 ஆயிரம் ராக்ஷசர்களாகவும்
பிறந்தனர். இந்த ஆசார்யரும்
சீடர்களும் ருத்ரனிடம்
சரண் புக அவன் ப்ரஸன்னனாக
ராமனின் மூலம் போர்
செய்து க்ஷேமத்தை அடைவீர்கள்
என்று பரம பாகவதர்களானபடியால்
"தருணை ரூப ஸம்பைன்னெள"
என்று சூர்பனகை சொன்னவுடன்
பூர்ம ஜன்ம ஸ்மரணம் ஏற்பட்டு
ஸ்ரீராமனிடம் போர் புரிய
வந்து மாண்டனர். ஸ்ரீராம
பாணத்தால் மாண்டு ஸ்வர்க்கத்தையும்
அடைந்தனர். இக்கதை சேஷ
தர்மத்தில் பீஷ்ம யுதிஷ்ட்ர
ஸம்வாதத்தில் உள்ளது.
ஆகவே மகான்களின் கோபம்
நன்மையில் முடியும்.
விஸ்வாமித்ரரிடம் உண்டான
வசிஷ்டரின் கோபம் விஸ்வாமித்ரரை
ப்ரஹ்ம ரிஷியாக்கிவிட்டது
அல்லவா? மேலும் பரசு ராமன்
க்ஷத்ரியர்களுக்கு தனுர்
வித்தையை கற்றுக் கொடுக்கமாட்டேன்
என்று பிரதிக்ஞை செய்திருந்தார்.
கர்ணன் அவரிடம் நான்
க்ஷத்ரியன் அல்லன் என்று
சொல்லி தனுர் வித்தையைக்
கற்றுக் கொண்டான். வண்டு
பரசுராமனின் தொடையை
துளைத்தது. கர்ணன் மடியில்
அவர் தூங்குகிறார். எழுப்ப
வேண்டாம் என இருந்தான்.
பிறகு தானாக எழுந்தார்.
கர்ணனைப் பார்த்து நீ
என்னை எழுப்பாமல் இருந்தபடியால்
ப்ராமணன் அல்ல, க்ஷத்ரியன்
என்று சொல்லி சபித்தார்.
இது இவனுக்கு தான் க்ஷத்ரியன்
என தெரியப் படுத்திவிட்டது.
இந்த சாபம் ப்ராமணன்
அல்ல, க்ஷத்ரியன்தான்
என ஞானத்தை கொடுத்தபடியால்
அநுக்ரஹமாகவே ஆயிற்று
என்று நினைத்தான்.
இதேல்லாம்
ஒரு புறம் இருக்கட்டும்.
முக்மான விஷயம் ஒன்று
சொல்கிறேன். நாம் அளவில்லா
பாபம் செய்கின்றோம்.
பகவானுடைய விதிநிஷேதங்களை
செய்வதில்லை. எம்பெருமானுக்கு
நம்மேல் கோபம். அது எதில்
முடிகிறது ? சிக்ஷையைக்
கொடுக்கிறான். அது நன்மையில்தானே
சேறுகிறது. காகத்தினிடம்
கோபம் கொண்டு ப்ரஹ்மாஸத்ரத்தை
ஏவினான். அதனால் கண்ணை
இழந்தது. அது ஹிதத்தில்
முடிந்ததாகவே கருதுகிறோம்.
சீறி அருளாதே
என்றாள் கோதை. இதன் கருத்து
என்ன ? சீறுவதும் அருளில்
முடியும் என்பது. ஆக பகவானின்
கோபம் ப்ரஸாதமாகவே அமையும்.
சித்ரகேது என்பவன் பார்வதியை
பரிஹாஸம் செய்தான். அவளும்
சாபமிட்டாள். அதற்கு
அவன் உனது கோபம் ப்ரஸாதத்தில்தான்
பர்யவஸிக்கும் என்று
அதை தலையால் பெற்றான்.
இப்படி பல இடங்கள்.
*****
|