மனிதனின் வயது
உலகத்தில்
பிறந்தவர்கள் எல்லோருமே
ஒரே வயது உள்ளவர்கள்
என்பதில்லை. சிலர் பத்து
வருஷ காலம், சிலர் பதினைந்து,
ஐம்பது, நூறு வருஷ காலம்
என்ற ரீதியில் ஜீவித்திருக்கிறார்கள்.
மனிதர்களைத் தவிர மற்றப்
பிராணிகளான ஆடு, மாடு
முதலியவற்றுக்கு இருபது
இருபத்தைந்து வருஷ காலந்தான்
ஜீவனம் இருக்கிறது.
தசரத
சக்ரவர்த்தி அறுபதினாயிரம்
ஆண்டு காலம் ராஜ்யத்தை
ஆண்டு வந்தார் என்றால்
அவருடைய வயது மிகவும்
அதிகம் என்று புலப்படுகிறது.
இராமன் பதினோராயிரம்
வருஷங்கள் ராஜ்யத்தை
ஆண்டு வந்தார் என்று
ஸ்ரீ ராமாயணம் கூறுகிறது.
விசுவாமித்திர மகரிஷி
எத்தனையோ ஆயிரக்கணக்கான
வருஷங்கள் ஒவ்வொரு திக்கிலும்
தவம் புரிந்தார் என்பதும்
புராணங்களில் பிரஸித்தம்.
இப்படி முன்பு செய்த
ஒரு புண்ணிய விசேஷத்தால்
சிலருக்கு ஆயுஸ்ஸில்
அளவு அதிகமாக இருந்த
போதிலும் சாஸ்திரங்களில்
ஏற்பட்டது நூறு வயதுதான்.
வெளிநாடுகளில் நூற்றுக்கு
மேல் இருபத்தைந்து முப்பது
வருஷங்களும் சிலர் இருக்கின்றனர்
என்பதை பத்திரிக்கைகளில்
நாம் படித்து வருகிறோம்.
ஆயினும் பிரம்மதேவனுக்கும்
தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும்
மனிதர்களுக்கும் நூறு
வயது என்றுதான் சாஸ்திரம்
முறையிடுகிறது. இந்த
நூறு வருஷம் என்பதில்
கால அளவில் வேறுபாடு
உண்டாகும். அதாவது நம்
அனுபவத்தில் இருபத்துநான்கு
மணி நேரம் கொண்டது ஒரு
நாள். முப்பது நாள் கொண்டது
ஒரு மாதம். பன்னிரண்டு
மாதங்கள் கொண்டது ஒரு
வருஷம். பித்ருக்களுக்கு
நம்முடைய ஒரு மாதம் ஒருநாள்.
தேவதைகளுக்கு நம்முடைய
ஒரு வருஷம் ஒரு நாள். பிரம்மாவுக்கு
எண்ணாயிரம் யுகம் கொண்டது
ஒரு நாள். இம்மாதிரி வேறுபாடு
இருந்த போதிலும் அவரவர்களுடைய
நாள் அமைப்பை முன்னிட்டு
நூறு வருஷகாலம்தான் ஆயுஸ்.
இப்படி நூறு வருஷகாலம்
ஒருவனுக்கு வயது என்ற
நியதி இருந்த போதிலும்
அவ்வளவு வயது வரையில்
ஜீவிக்கிறார்கள் என்பதில்லை.
பிறந்து பத்து தினங்களிலோ,
ஒரு வருஷத்திலோ. பத்து,
நாற்பது, ஐம்பது முதலிய
வருஷத்திலோ மரணத்தை
அடைகிறார்கள்.
குரங்கு,
எருது, நாய், வெளவால் முதலியவற்றுக்கு
நமக்கு ஏற்பட்டதுபோல்
நூறு வருஷ காலம் என்பதில்லை.
சுமார் இருபது வயதுதான்
அவற்றுக்கு. மனிதர்களிலேயே
நூறு வயதுதான் என்று
ஏற்பட்டிருந்த போதிலும்,
நூற்றுக்கு மேல் நாற்பது
ஐம்பது வருஷங்கள் சிலர்
இருப்பது போல் இவற்றிலும்
சில பிராணிகள் இருபதுக்கு
மேலாகவும் ஜீவித்திருக்கலாம்.
ஜாம்பவான் என்னும் கரடி
நீலன் என்னும் குரங்குகள்
எத்தனை யுகங்கள் ஜீவித்திருந்தன.
பாதாள லோகத்து ஜனங்களுக்கு
50000 - 70000 என்ற கணக்கிலும் மேலும்
ஸுக வாழ்க்கையுடன் ஜீவனம்
அமைந்துள்ளதாக நாரத முனிவர்
இந்திரனிடம் தாம் பார்த்து
வந்ததாகச் சொல்லுகிறார்.
'குரங்கு,
மாடு முதலியவற்றுக்கு
இருபதே வயது இருக்க, இந்த
பூமியில் பிறந்து மனிதர்களுக்கு
மாத்திரம் நூறு வயது
ஏற்பட்டதற்குக் காரணம்
என்ன? இவர்களை மாத்திரம்
பூவுலகத்தில் நூறு வருஷம்
வைத்து ஹிம்சிக்க வேண்டும்
என்பது பிரம்மதேவனின்
எண்ணமா?' என்ற ஐயம் எல்லாருக்கும்
உண்டாகலாம். கதாகாலக்ஷேமம்
பண்ணும் பெளராணிகர்கள்
இதற்கு வேடிக்கையாகச்
சொல்லும் கதையைச் சொல்லுகிறோம்.
கேண்மின்.
உலகத்தைப்
படைக்கும் பிரம்மதேவர்
பூவுலகத்தைப் படைத்ததும்
அங்கு மனிதர்களையும்,
ஆடு மாடு முதலிய பிராணிகளையும்
படைக்க விரும்பினார்.
இங்கே படைக்கப் பெறும்
பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும்
ஒரே விதமான ஆயுஸ்ஸைக்
கொடுக்க வேண்டுமேன்றே
எண்ணினார். இங்கே பிறந்தவர்களுக்கு
ஸுகம் என்பது மிகச் சொற்பமானபடியாலும்,
துக்கம் பெரும்பாலும்
அதிகமானபடியாலும் மனிதர்களுக்கு
அதிக வயதை அவர் கொடுக்க
விரும்பவில்லை. ஆகையால்
பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும்
ஒரே வயதைத்தான் கொடுக்க
விரும்பினார். அவற்றை
ஸ்ருஷ்டித்துச் சில காலம்
கழித்து, பிரம்மா முதலில்
குரங்குகளைப் பார்த்து,
'ஓ குரங்குகளே! நாற்பது
வயது உங்களுக்கு கொடுக்கிறேன்.
இன்னும் மேலே ஜீவித்திருக்கவேண்டும்
என்ற எண்ணம் இருந்தாலும்
சொல்லலாம். இவ்வளவு
வேண்டாம் என்றிருந்தாலும்
நீங்கள் கூறலாம். உங்களுடைய
விருப்பப்படி நான் செய்ய
சித்தமாக இருக்கிறேன்'
என்றார். குரங்குகள்
இதைக் கேட்டதும் தலையில்
கையை வைத்துக் கொண்டு
அழ ஆரம்பித்தன.
பிரம்மா,
'ஏன் குரங்குகளே அழுகிறீர்கள்?
உங்கள் விருப்பபடி நான்
சித்தமாயிருக்க மனத்தில்
கவலை ஏன் ?" என்றார்.
குரங்குகள்,
'எங்களுக்கு நாற்பது
வயது என்று சொன்னதைக்
கேட்டதுமே மனம் அலைபாய்கிறது;
துன்பம் நெஞ்சை அடைக்கிறது;
எங்களுக்குப் பேசவும்
முடியவில்லை. நாங்களோ
குரங்குகள்; ஒரு கிளையிலிருந்து
மறு கிளைக்கு ஓடிச் சென்று
குதிக்கும் பிராணிகள்.
நாங்கள் வசிப்பதற்கு
வீடு வாசல் என்பதே கிடையாது.
மரங்களில் தாவிக்கொண்டே
காலத்தைக் கழிக்கவேண்டிய
பிராணிகள். வெயிலிலோ
மழையிலோ இருந்து வாழ்கையைக்
கடக்கவேண்டும். அதிக
வெயில் உண்டானபோது அதைப்
போக்கிக் கொள்ளச் சக்தியற்றவர்கள்.
அதிக மழைப் பெய்யும்போதும்
உடலெல்லாம் சிலிர்த்து
நாங்கள் படும் கஷ்டத்திற்கு
அளவே இல்லை. இத்துடன்
உண்பதற்காவது ஏதாவது
வழி உண்டா என்றால் அதுவும்
இல்லை. நாங்களே பழம் முதலியவற்றைக்
கொடுக்கும் மரங்களை
உற்பத்தி செய்துகொள்ள
முடியாதவர்கள். எங்காவது
காட்டிற்குச் சென்று
பழம் முதலியவற்றை சாப்பிடலாம்
என்றால் அங்கே மனிதர்கள்
காவல் இருந்து எங்களைத்
துரத்துகிரார்கள். புலி,
சிங்கம் முதலியவற்றுக்கு
நடுங்குகிறோம். மனிதர்கள்
எப்போதாவது விரும்பி
எங்களுக்கு ஆகாரம் கொடுத்தால்தான்
நாங்கள் சாப்பிட முடியும்.
பிறருடைய கையை எதிர்பார்த்து
ஜீவிக்கிறவர்கள் நாங்கள்.
எங்களுக்கு வயது நாற்பது
என்று நீர் சொன்னதுமே
துன்பம் அதிகரித்துக்
கொண்டு வருகிறது. ஆகையால்
எங்களுக்கு இருபது வயதே
போதும்' என்றன. பிரம்ம
தேவர் அப்படியே என்று
சொல்லிவிட்டார்.
பிறகு
எருதைப் பார்த்து 'உங்களுக்கே
நாற்பது வயது கொடுக்கிறேன்.
உங்களுடைய அபிப்ராயம்
என்ன'? என்று கேட்டார்.
எருது பிரம்மதேவனின்
வார்த்தையைக் கேட்டதும்
மிக்க மனக் கவலையுடன்
கண்களில் நீரைப் பெருக்கிக்கொண்டு
சொல்ல ஆரம்பித்தது -
'நாங்களோ மாடுகள். எங்களுக்கு
சுகம் என்பதே கிடையாது.
இரவு பகல் என்று வேறுபாடு
இல்லாமல் எங்களை உபயோகப்படுத்தி
வேலை செய்யும்படி மனிதர்கள்
துன்புறுத்துகிறார்கள்.
பகலெல்லாம் நிலத்தை உழவேண்டிய
வேலை. ஏதாவது செய்ய தவறினால்
கம்பின் நுனியில் இரும்பாலான
முள்ளை வைத்து எங்களை
குத்துகிறார்கள். அப்பொழுது
எங்களுக்கு உயிர் போய்
உயிர் வருகிறது. மறுபிறவிதான்
அப்போது எடுக்கிறோம்.
காலை வேளை போல் மாலை
வேளையிலும் புன்செய்
நிலங்களை உழும்படி எங்களை
ஹிம்சிக்கின்றனர். பகலில்
படாத பாடு பட்டு கவலையுடன்
இருக்கும் நாங்கள் இரவில்
சொஸ்தமாகத் தூங்கலாம்
என்று எண்ணுகிறோம்.
ஆனால் அந்த எண்ணமும்
நிறைவேறுவதில்லை. இரவில்
வண்டி நிறைய நெல் மூட்டைகளை
அடுக்கி, அந்த வண்டியில்
எங்களைக் கட்டி வெளியூருக்கு
அந்த வண்டியை இழுக்கும்படி
செய்கிறார்கள். இவ்வளவு
கஷ்டப்படுத்தும் ஜனங்கள்
எங்களுக்கு உணவையாவது
சரிவர கொடுக்கிறார்களா
என்றால் அதுவும் இல்லை.
ஏதோ நான்கு வைக்கோலை
எங்கள் முகத்துக்கு எதிரில்
தூவிவிட்டு தண்ணீரையும்
சரிவர காட்டாமல் அவர்கள்
நன்கு உணவை உண்டு சொஸ்தமாக
தூங்குகின்றனர்.
நாங்கள்
ஒரு சமயம் நினைத்ததுண்டு;
"ஓர் ஊரில் எங்களை ஓர்
உழவன் உணவையும் கொடுக்காமல்
இரவு பகலின்றி துன்புறுத்திக்
கொண்டிருந்தான். 'ஐயோ!
மகா பாவி இப்படிச் செய்கிறானே!
வேறு ஊருக்காவது போனால்
கொஞ்சமாவது செளக்கியத்தை
அடையலாம்.' என்று எண்ணினோம்.
அப்பொழுது வெளியூரிலிருந்து
வந்த ஒருவன் எங்களை ரூபாயைக்
கொடுத்து வாங்கிக் கொண்டு
போனான். 'மகா பாவியிடமிருந்து
தப்பினோம். இனியாவது
சுகத்தை அடைவோம்.' என்று
பேசிக்கொண்டே போனோம்.
அவ்வூருக்குச் சென்றதும்
முன்பு இருந்த இடமே பரவாயில்லை
என்று தோன்றும்படியாக
இவன் எங்கைள்ச் செய்துவிட்டான்.
எப்போதும் வேலை வாங்கிக்
கொண்டான். தீனியைக்
காட்டுவதேயில்லை. இப்படி
ஆயிற்று எங்கள் பிழைப்பு.
ஆகையால் எங்களுக்கு நாற்பது
வருஷம் வேண்டவே வேண்டாம்;
இருபதே போதும்," என்றன.
பிரம்ம தேவர் அப்படியே
என்று சொல்லிவிட்டார்.
பிறகு
நாயைப் பார்த்து முன்போலவே
கேட்டார். இதற்கு நாய்கள்
கூறிய பதிலாவது - "நாங்கள்
அளவற்ற பாவங்களைச் செய்து
இந்த பிறவியை எடுத்திருக்கிறோம்.
எங்கள் பிறவியைவிடக்
கீழ்பட்ட பிறவியே கிடையாது.
ஒருவன் மற்றவனை வெய்யும்போது
'சீ நாயே!' என்று ஏளனமாகப்
கூறுகிறான். இது ஒன்றே
எங்கள் பிறவி மிகவும்
மட்டம் என்பதற்குச் சான்றாகும்.
நாய்ப் பிறவியைப் பெற்றுள்ள
நாங்கள் மனிதர்களுக்கு
எவ்வளவோ உபகாரம் செய்கிறோம்.
வீட்டு வாசலிலும் வீட்டின்
தோட்டப்புறத்திலும்
படுத்துக் கொண்டு காவல்
புரிகிறோம். அந்நியன்
எவனாவது வந்தால் குரைத்து
அவனை விரட்டி, வீட்டு
எஜமானுக்குக் காட்டிக்
கொடுக்கிறோம். ஒவ்வொரு
வீட்டிலும் களவு போகாமல்
வஸ்துக்களைப் பாதுகாத்துத்
தருகிறோம். களவு போய்விட்டால்
மோப்பம் கொண்டு, திருடனையும்
திருடப்பட்ட பொருள்களையும்
காட்டிக் கொடுக்கிறோம்.
இவ்வளவு செய்தும் எங்களை
வீட்டிற்குள்றே போகவிடாமல்
துரத்தியடிக்கிறார்கள்.
கோவிலுக்குள் சென்றுவிட்டால்
அசுத்தி உண்டாகி விடுகிறது
என்று எண்ணி ஸம்ப்ரோக்ஷணம்
செய்கிறார்கள். வீட்டில்
நிறைய பக்ஷணங்களை செய்துவிட்டு,
'இவர்கள் இறந்துவிட்டால்
நாம் நன்றாகத் தின்னலாம்'
என்று எண்ணும் பூனைகளை
வீட்டிலேயே வைத்தும்
வளர்த்தும் பாலைக் கொடுத்தும்
உதவி புரிகிற ஜனங்கள்,
பலவிதமாக உபகாரம் செய்யும்
எங்களைத் துரத்தியடிக்கிறார்கள்.
எங்களுக்கு எச்சியிலைலுள்ள
மீந்திருக்கும் பருக்கைச்
சோறுதான் ஆகாரம். எங்கோ
ஏதோ ஒரு நாய்க்குத்
தான் காரில் பயணமும்,
யஜமானனின் படுக்கையிலே
படுக்கையும் ஏற்படுகின்றன.
இப்படி பருக்கைகளையும்
அசுத்தமான உணவையும் தின்று
வயிறு வளர்க்கும் எங்களுக்கு
இருபது வருஷகாலம் போதாது
என்றெண்ணி நாற்பது வருஷங்கள்
எங்களுக்குக் கொடுக்கிறீர்.
குரங்கு, மாடு இவற்றைப்
போலவே எங்களுக்கும்
இருபது வயது போதும்,"
என்று புலம்பி முறையிட்டன.
பிரம்மதேவன் அவற்றிற்கு
இரங்கி, "அப்படியே கொடுக்கிறேன்"
என்று சொல்லிவிட்டார்.
பிறகு
வெளவாலைப் பார்த்து முன்போலவே
கேட்டார். வெளவால், "பிரம்மதேவரே!,
குரங்கு, நாய், எருது இவற்றைவிட
நாங்கள் எதில் சிறந்தவர்கள்?
எங்கள் உடலமைப்பைப் பார்த்தாலே
உடனே உயிரை விட வேண்டுமென்று
எங்களுக்கேத் தோன்றும்.
எங்களுக்கு வாக்-குதம்
என்று பெயர். வாயும் ஆசனவாயும்
எங்களுக்கு ஒன்று. பட்சியின்
இனத்தில் நாங்கள் சேர்ந்தவர்கள்
என்றும் சொல்லலாம்.
எங்களுக்குத் தனியிடம்
கிடையாது. எங்கு இருள்
அதிகமாக உள்ளதோ அங்கேதான்
நாங்கள் வசிப்போம்.
இக்காலத்தில் எல்லா இடத்திலும்
மின்சார விளக்குப் போட்டு
இருட்டைப் போக்கடித்து
விடுகிறார்கள். மலையில்
உள்ள குகைகளையெல்லாம்
வீடாக்கிவிடுகிறார்கள்.
எப்போதும் எங்கும் தலைகீழாகத்
தொங்கிக் கொண்டிருக்கிறோம்.
இதுவே எங்களுக்கு ஒரு
பெரும் சிக்ஷை. இப்படிப்
பலத் துன்பங்களையடைந்துள்ள
எங்களுக்கு இருபது வயரே
போதும்" என்று வேண்டிக்
கொண்டன. பிரம்மதேவர்
இசைந்தார்.
இவ்வாறு
நான்கு பிராணிகளிடத்திலும்
நடந்த விஷயத்தை மனதில்
வைத்துக் கொண்டு, இவற்றைவிட
மனிதன் அறிவுள்ளவன்;
ஆகையால் இவ்வுலகில் ஏற்படும்
பல கஷ்டங்களைக் கண்டு
பயப்படுகிறவன். எனவே
அவன் நாற்பது வயதை விரும்பமாட்டான்
என்று எண்ணி, அவனைப் பாரத்து,
இந்த நான்கு பிராணிகளின்
விஷயத்தையும் கூறி "உங்களுக்கு
நாற்பது வயது வேண்டுமா
அல்லது இருபது போதுமா?"
என்று கேட்டார். இதைக்
கேட்டதும் மனிதன் இரண்டு
கைகளையும் தலையில் வைத்துக்
கொண்டு, "பிரம்மதேவரே,
நாங்கள் மனிதர் அல்லவா?
எங்களுக்கு கைகளும் கால்களும்
உண்டு. அறியும் தன்மையையும்
பெற்றுள்ளோம். நீர்
கொடுக்கும் இருபது வருஷங்களிலோ
நாற்பது வருஷங்களிலோ
எந்த ஸுகத்தை அனுபவிக்க
முடியும்? எங்களுக்கு
இந்த வயது போதாது" என்று
புலம்பிக் கொண்டு மேன்மேலும்
வயதை வேண்டிக் கொண்டான்.
பார்த்தார்
பிரம்மா. அப்படியானால்
அந்த நான்கு பிராணிகளுக்கும்
கொடுக்க இருந்த இருபது
இருபது வயதையும் (அதாவது
4 X 20 = 80), உங்களுக்குக் கொடுக்க
இருந்த இருபதையும் சேர்த்து
நூறு வயதாகக் கொடுத்துவிடுகிறேன்"
என்று சொன்னார். இவ்வளவு
கொடுத்தும் மனிதன் திருப்தி
இல்லாமல் ஏதோ ஒருவாறு
இசைந்தான். இம்மாதிரி
மனிதனுக்கு ஏற்பட்டது
நூறு வயது. இது உண்மை என்பதில்
சிறிதும் ஐயமில்லை. கீழ்க்
கூறிய நான்கு ஜந்துக்களின்
இருபது இருபது வயதை இவன்
அடைந்தான் என்பது அவை
செய்யும் தொழிலை அந்த
அந்த இருபது வருஷங்களில்
இவன் செய்வதனாலேயே புலப்படும்.
முதல்
இருபது வருஷங்கள் குரங்கின்
வயது. எனவே குரங்குக்கு
ஏற்படும் சேஷ்டைகள் இவ்வருஷங்களில்
ஏற்படும். பால்யத்தில்
அங்கும் இங்கும் விளையாடி
அர்ததமற்ற சேஷ்டைகளை
இவன் செய்து வருகிறான்.
'என்ன குரங்கு சேஷ்டை!'
என்று பரிகசிப்பதும்
உண்டு. இருபது முதல் நாற்பது
வரையில் எருதின் வயது.
எருது எப்படி பாரங்களை
சுமக்கிறதோ அது போல
குடும்பத்தில் பாரத்தைப்
பெற்று அன்ன ஆகாரம் இல்லாமல்
ஊரூராகத் திரிந்து வேலைகளைச்
செய்கிறான். நாற்பது
முதல் அறுபது வரை இவனது
உண்மையான வயது. மனிதனுக்கு
ஏற்பட்ட வேலைகளை அப்போதுதான்
சரிவர செய்கிறான். புராணங்களை
படிக்க வேண்டும் என்றும்,
கோவில்களுக்குச் சென்று
எம்பெருமானைச் சேவிக்க
வேண்டும் என்றும், புண்ணிய
தீர்த்தங்களில் ஸ்நானம்
செய்ய வேண்டும் என்றும்,
பெரியோர்களிடத்தில்
விநயத்துடன் இருக்க வேண்டும்
என்றும், நல்ல காரியங்களைச்
செய்ய வேண்டும் என்றும்
நல்ல எண்ணங்கள் உண்டாகின்றன.
அறுபது
முதல் எண்பதுவரை நாயின்
வயது. தேகத்தில் சக்தி
குறைந்து விடுகிறபடியால்
எங்கும் போக முடியாமல்
வீட்டிலேயே தங்கி வீட்டைக்
காவல் செய்வதும் ஏற்படுகிறது.
இவனைவிட சிறியவர்கள்,
"வீட்டை ஜாக்கிரதையாகப்
பார்த்துக் கொள்" என்று
கூறிப் போய்விடுவார்கள்.
எண்பது முதல் நூறு வரையில்
வெளவாலின் வயது. பகலிலேயே
பார்வையற்றுவிடும். சுவாதீனமாக
உட்காருவதோ படுப்பதோ
முடியாமல் வீட்டில் தொங்கிக்
கொண்டுதான் இருக்க முடியும்.
வாய் முதலிய துவாரம்
வழியாகக் கஞ்சி முதலியவைப்
பெருகிக் கொண்டே இருக்கும்.
மற்றும் சொல்ல முடியாத
சில அநுபவங்களும் ஏற்படும்.
அந்த அந்த வருஷங்களில்
மனிதனுக்கு ஏற்படும்
சம்பவங்கள் எல்லாவற்றையும்
நாம் பார்த்துக் கொண்டுதான்
இருக்கிறோம். இப்படித்
தனது இருபது இல்லாமல்
மேலும் எண்பது பெற்றபடியால்
இவனுக்கு நூறு வயது ஏற்பட்டது.
இதை
பெரியாழ்வார் தனது பாசுரங்களில்
காட்டியுள்ளார். "சீயினால்
செறிந்தேறிய புண் மேல்
செற்றல் ஏறிக்குழம்பிருந்து
எங்கும் ஈயினால் அரிப்புண்டு
மயங்கி எல்லை வாய்ச்
சென்று சேர்வதன் முன்னம்".
"சோர்வினால் பொருள்
வைத்ததுண்டாகில் சொல்லு
சொல்லென்று சுற்றுமிருந்து
ஆர்வினவில் வாய் திறவாதே
அந்த காலம் அடைவதன் முன்னம்".
"மேல் எழுந்ததோர் வாயுக்
கிளர்ந்து மேல் மிடற்றினையுள்ளெழவாங்கி
காலும் கையும் விதற்விதிற்றேறி
கண்ணுறக்கம் அதாவதன்
முன்னம்" என்று சொன்னார்.
திருமங்கை மன்னனும்
"முற்ற முத்துக் கோல்
துணையா முன்னடிநோக்கி
வளைந்து இற்ற கால்போல்
தள்ளி மெள்ள விருந்தங்கு
இளையா முன்" "முதுகு பற்றிக்
கை தலத்தால் முன் ஒரு
கோல் ஊன்றி விதிர் விதிர்த்து
கண் சுழன்று மேற்கிளைக்
கொண்டு இருமி" "உறிகள்
போல் மெய் நரம்பெழுந்து
ஊன் தளர்ந்து உள்ளம்
எள்கி நெறியை நோக்கி
கண் சுழன்று நின்று நடுங்காமுன்"
என்று அருளிச் செய்தார்.
இதனால்
மனிதனின் வார்த்தக்யாவஸ்தை
மிக க்ருரம் என்பது நன்கு
பரியும். ஆக கடைசி அவஸ்தை
வெளவாலின் அவஸ்தை யைக்காட்டிலும்
மிக கடினம். இவ்வாறு மனிதனின்
ஆயுர்வ்யவஸ்தை.
*****
|