யத்ர ப்ராதா
ஸஹோதர:
தலைப்பைக்
கண்டதுமே அனைவருக்கும்
ஸ்ரீமத்ராமாயணத்தில்
மனம் ஓடும்.
தேசே தேசே
களத்ராணி தேசே தேசே ச
பாந்தவா: | தம் து தேசம்
ந பச்யாமி யத்ர ப்ராதா
ஸஹோதர: ||
என்ற ச்லோகம்
ஸ்ரீராமாயணத்தில் யுத்த
காண்டத்தில் உள்ளது.
ராமலக்ஷ்மணர்களுடன்
ராவணன் யுத்தம் செய்த
போது, ஆதிசேஷ அவதாரமான
லக்ஷ்மணன் மிகச் சினம்
கொண்டு அநேக பாணங்களை
வர்ஷம் போல் வர்ஷித்து,
ராவணனுடைய ரதத்தின் மேல்
கட்டியிருந்த த்வஜபடத்தையும்
ஸாரதியின் தலையையும்
அறுத்தான். மேலும், ராவணனுடைய
வில்லையும் முறித்தான்.
இதனால் கடுங் கோபத்துடன்
ராவணன் சீறியெழுந்து,
'உடலில் ஏற்பட்ட நோய்
வேருடன் உடனே அறுக்கப்படாவிட்டால்
மனிதனை எப்படி வலிமை
பெற்று கொன்றுவிடுமோ
அவ்வாறு ராம லக்ஷ்மணர்களின்
பலம் நம்மை விரைவில்
அழித்துவிடும்' என்று
எண்ணியும், 'இவர்களுக்கு
அவ்வப்போது யோசனைகளைக்
கூறி உதவும் விபீஷணனை
முதல்முதலில் கொன்றுவிட்டால்
இவர்களைப் பிறகு அநாயாஸமாக
ஜயித்துவிடலாம்' என்று
நினைத்தும், விபீஷணனை
கொல்வதற்காக, மயனால்
கொடுக்கப்பட்ட சக்தி
என்னும் ஆயுதத்தை எடுத்துப்
பிரயோகித்தான். இதை
கண்டதும் லக்ஷ்மணன் தனக்கும்
ராமனுக்கும் உயிர்நிலை
போல் இருக்கிற விபீஷணனுக்கு
ஆபத்து நேர்ந்துவிடும்
என்று பயந்து, சக்தி என்னும்
அந்த ஆயுதத்துக்கு முன்தான்
நின்று, அநேக பாணங்களை
ஏவி அந்த சக்தியை அறுக்க
முயன்றான். ராவணன் இதைக்
கண்டு லக்ஷ்மணனை சக்தி
அடித்து கொன்றால் மிகவும்
சந்தோஷம் என்று எண்ணினான்.
லக்ஷ்மணன் பலவாறு முயன்றும்
முயற்சி பலன்அளிக்கவில்லை.
மிக்க வேகத்துடன் வந்த
சக்தி லக்ஷ்மணனின் மார்பில்
பாய்ந்துவிட்டது. அதனால்
அவன் மயக்கத்துடன் கீழே
விழுந்தான். இந்த சமயத்தில்
லக்ஷ்மணனைப் பார்த்து
ராமன் கூறிய வாக்கியமே
இது.
"அந்தோ என் அருமை
சகோதரனை இழந்துவிட்டேனே!
என் மனைவி சீதையின் பொருட்டு
சகோதரனை பலி கொடுக்க
நேர்ந்ததே. சுமித்திரை
முதலியவர்களிடத்தில்
'லக்ஷ்மணன் எங்கே?' என்று
கேட்டால் என்ன சொல்வேன்?
மனைவி என்பாள் ஒருத்தியை
அடைவது எல்லாத் தேசத்திலும்
எளியது, எந்த எந்த ஊருக்கு
செல்லுகிறோமோ ஆங்காங்கு
ஒரு பெண்ணை அடைந்துவிடலாம்.
அதன் மூலமாக மாமியார்,
மாமனார், மைத்துனன், அவர்கள்
உற்றார்கள் முதலியோரையும்
சுலபமாக பெற்றுவிடலாம்.
ஆனால், ப்ராதாவான சகோதரன்
இருக்கும் தேசத்தை பார்க்க
முடியாது. அதாவது எல்லா
உறவினரையும் பெற்றுவிடலாம்;
பிராதாவான சகோதரனை மாத்திரம்
பெற முடியாது" என்று ராமன்
மிக்க வருத்தத்துடன்
லக்ஷ்மணனை கண்டு வானர
வீரர்களுடன் புலம்புகிறான்.
இங்கு,
மேல் கதையின் தொடர்பு
எவ்வாறு போகிறது என்பதை
நாம் விவரிக்க வரவில்லை.
இந்த லோகத்தில் லக்ஷ்மணனை
ப்ராதா என்றும் சகோதரன்
என்றும் ராமன் கூறியது
எவ்வாறு என்பதை மாத்திரம்
ஆராய முன்வந்துள்ளோம்.
லக்ஷ்மணன்
ராமனுக்கு ப்ராதா என்பதில்
ஐயமில்லை. தன் ஸபத்னி
மாதாவான (சிற்றன்னை) சுமித்திரையின்
புதல்வன் லக்ஷ்மணன் ஆனபடியால்
ராமனுக்கு அவன் தம்பி
என்பது வாஸ்தவம். ஒரு
புருஷனுக்கு பல மனைவியரிடத்தில்
பல புத்திரர்கள் பிறந்தால்
அனைவரும் அண்ணன் தம்பி
என்ற முறையை அடைந்தவர்கள்தாம்.
ஆயினும் அவர்கள் சகோதரர்கள்
ஆகமாட்டார்கள். ஒரு தாயின்
வயிற்றில் உடன் பிறந்தவர்களைத்தான்
சகோதரர் என்று சொல்வது
வழக்கம். லக்ஷ்மணனையும்
சத்துருக்னனையும் சகோதரர்கள்
என்று சொல்லலாம்; இவர்கள்
இருவருக்கும் சுமித்திரை
ஒருத்தியே தாயானபடியால்.
ஆகையால் கைகேயியின் புதல்வனான
பரதன் ராமனுக்கு ப்ராதாவாக
இருந்தபோதிலும் எப்படி
சகோதரனாக மாட்டானோ
அவ்வாறே ராமனுக்கு லக்ஷ்மணனும்
ப்ராதாவாக இருந்த போதிலும்
சகோதரர் ஆகமாட்டான்.
மேலும் ப்ராதா என்று
சொன்னாலே போதும்; சகோதரன்
என்று சொல்வது அதிகம்.
அல்லது சகோதரன் என்று
சொன்னாலே போதும்; ப்ராதா
என்று சொல்வது அதிகம்.
பல கேள்விகள் இங்கு அவகாசம்
பெறுகின்றன. இதற்கு பல
பெரியோர்கள் சொல்லும்
வகையில் விடை அளிக்கிறோம்.
எல்லா
உலகங்களுக்கும் மூலகாரணமாகவும்
எல்லாவிதமான பந்துவாகவும்
உள்ள பகவான் லோக கண்டகனான
ராவணனை கொல்ல வேண்டும்
என்று தேவதைகளால் பிரர்த்திக்கப்
பெற்று, தசரத சக்ரவர்த்திக்கு
திருக்குமாரனாக அவதரித்தான்.
பகவான் தயை, ஸெளசீல்யம்,
ஸெளலப்யம், வாத்ஸல்யம்
முதலிய திருக்கல்யாண
குணங்களுக்கு இருப்பிடமானவன்.
இப்படி உயர்ந்த குணங்களுக்கு
ஸமுத்திரம் போன்றவன்
ஆனபடியால் புதல்வனிடத்தில்
பிதா இருக்க வேண்டிய
நிலையையும், பிதாவினிடத்தில்
புத்திரன் இருக்க வேண்டிய
நிலையையும், ப்ராதாக்கள்
ஒருவருக்கொருவர் இருக்க
வேண்டிய நிலையையும்,
மற்றும் பந்துக்கள் ஒருவருக்கொருவர்
நடந்துகொள்ள வேண்டிய
நிலையையும் தானே அநுஷ்டானமுகத்தினாலும்
உபதேசமுகத்தினாலும்
காட்டுகிறான்.
ராமன்
சித்திரகூடத்தில் இருந்த
போது, அவனுக்கு பட்டாபிஷேகம்
செய்து வைக்க வேண்டும்
என்ற மனோபாவத்துடன்
வந்த பரதனை லக்ஷ்மணன்
வேறு விதமாக நினைத்தான்.
அப்பொழுது ராமன் லக்ஷ்மணனைப்
பார்த்து, "ஒரு ப்ராதா
தன் மற்றொரு ப்ராதாவை
கொல்வதும் அடிப்பதும்
வேறு விதமாக கருதுவதும்
ந்யாயமாகுமா? நமக்கு
உயிர் நிலையன்றோ அவன்?
பிதாவைத்தான் கோபத்துடன்
ஏதாவது பேசிவிடலாமா?"
என்று உபதேசித்தான்.
சுக்ரீவன்
தன் அண்ணனான வாலியை கொன்று
தனக்கு கிஷ்கிந்தையில்
அபிஷேகம் செய்து வைக்க
வேண்டும் என்று ராமனிடத்தில்
வேண்டிக்கொண்டான். வாலி
சில அபராதங்களை செய்திருக்கிறான்
என்பதை மனத்தில் கொண்டு
சுக்ரீவன் தனதிடத்தில்
செய்த சரணாகதியை ஏற்று
கொண்டு, சுக்ரீவனிடத்தில்,
"உனது விருப்பத்தை நிறை
வேற்றி வைக்கிறேன்" என்றான்
ராமன். இதை அருகில் கேட்டுக்
கொண்டிருந்த லக்ஷ்மணன்
ராமனை நோக்கி, "அண்ணா,
இவ்விருவரும் அண்ணன்
தம்பிகளாயிற்றே. அவர்கள்
பிறகு ஒன்று சேர்ந்து
விடுவார்கள். இந்த சமயத்தில்
சுக்ரீவன் சொன்ன வார்த்தையை
கேட்டு அதன்படி நடப்பது
எனக்கு உசிதமாக தோன்றவில்லை"
என்றான். இதை கேட்ட ராமன்,
"லக்ஷ்மணா, உலகத்திலுள்ள
அண்ணன் தம்பியர் எல்லாரும்
ஒரே அபிப்ராயத்துடன்
இருப்பார்கள் என்று நினைக்க
வேண்டாம். அதிலும் குரங்கு
சாதியில் பிறந்த சுக்ரீவனின்
ஒழுக்கத்தை நினைக்க வேண்டாம்.
ஒரு தகப்பனாருக்கு பல
மனைவியர் இருந்தபோதிலும்
எந்த தாய் வயிற்றில்
பிறந்தாலும் ஒற்றுமையுடன்
இருக்க வேண்டும் என்பதை
தலையால் வகிக்க வேண்டும்.
இம்மாதிரி பரதன் ஒருவன்தான்
உத்தமனான ப்ராதா, மற்ற
யார் அப்படி இருக்க முடியும்?"
என்று பதில் சொன்னான்.
இப்படி
ராமன் பல இடங்களில் கூறுவதை
நன்கு ஆராய்ந்து பார்த்தால்
ஒரு விஷயம் புலப்படுகிறது.
அதாவது ஒரு தகப்பனுக்கு
ஒரு தாயினிடத்தில் பிறக்கும்
புதல்வர்களை சகோதரர்கள்
என்று எப்படி நினைக்கிறோமோ
அப்படியே ஒரே தகப்பனுக்கு
பல தாயாரிடத்தில் பிறக்கும்
புதல்வர்களையும் சகோதரர்கள்
என்றே நினைக்க வேண்டும்.
இங்கு
ராமன், லக்ஷ்மணன் பிந்நோதரனாக
இருந்த போதிலும் அவனை
சகோதரன் என்றே கருதுகிறான்
போலும். 'சகோதரனிடத்தில்
எவ்வளவு வாஞ்சையை வைப்பேனோ
அவ்வளவு வாஞ்சையை லக்ஷ்மணனிடத்தில்
வைத்திருக்கிறேன்' என்பதை
நன்கு வெளிக்காட்ட, 'ஸஹோதர:'
என்று சொன்னான். ஸஹோதர
துல்யன் என்று பொருள்.
இப்படி
சகோதரன் என்பதற்கு சகோதரதுல்யன்
எனப் பொருள் கொண்டு
ஓர் அர்த்தம் சொல்லப்பட்டது.
மற்றொரு சமாதானமும்
கேண்மின்.
ராமன் காட்டுக்கு
வந்ததும் குகனை சந்தித்தான்.
குகப் பெருமாளின் பக்தி
அதிசயத்தையும் குணாதிசயத்தையும்
கண்டு, வேறு சாதியில்
பிறந்திருந்தபோதிலும்
அவனை தன் சகோதரன் என்றே
நினைத்தான்.
பிறகு சுக்ரீவனை
தம்பியாக கருதினான்.
விபீஷணன் அரக்க வம்சத்தில்
பிறந்திருந்த போதிலும்
அவனையும் தன் சகோதரனாக
கருதினான்.
தாய் தந்தை
இருவருமே வேறாக இருக்கும்போதும்
குக பெருமாளையும் சுக்ரீவனையும்
விபீஷணனையும் சகோதரர்
என்று ராமன் கருதினான்
என்றால் ராமனின் குணம்
எவ்வளவு விஞ்சியிருக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இவர்களையே சகோதரர்கள்
என்று நினைப்பவன் ஒரு
தகப்பனாருக்கே பல மனைவியர்
மூலம் பிறந்தவர்களை சகோதரர்கள்
என்று ஏன் நினைக்கமாட்டான்?
ஆக லக்ஷ்மணனை சகோதரன்
என்று இவன் நினைக்க தட்டில்லை;
மற்றொரு
சமாதானமும் கேண்மின்
- 'ப்ராதா ஸஹோதர:' என்ற இடத்தில்
'ஸஹ:, அதர:' என்று பிரிக்க
வேண்டும். ஸஹ:- ஸஹநசீல:, பொறுத்து
கொள்பவன். பசிதாகம்
முதலியவை எவ்வளவு துன்புறுத்தினாலும்
அவற்றை லக்ஷ்யம் செய்வதில்லை.
நன்கு பொறுத்து தன்
வேலையை சரிவர செய்பவன்.
அதர: - பயமற்றவன். போரில்
பயந்து பின்வாங்குபவனல்லன்.
முன்னிலையிலிருந்து
எதிரியை அம்புகளினால்
அடித்து விரட்டுகிறவன்.
இப்படி ஸஹ: அதர: என்று பதம்
பிரித்து பொருள் கூறுவதனால்
ப்ராதா, ஸஹோதர: என்ற இரண்டும்
சேர்த்து சொன்னது சாலப்
பொருத்தம் பெறுகிறது.
இப்படி
பல முறையில் இவ்விடத்தில்
சமாதானம் கூறுவதுண்டு.
இந்த பிரகாரங்களை காட்டிலும்
மற்றொரு விதத்தில் ரஸகனமான
சமாதானம் ஆன்றோர் சொல்வர்.
தசரதர்
புத்ர சந்ததியை முன்னிட்டு
புத்ர காமேஷ்டி என்னும்
வேள்வியை செய்தார். அப்பொழுது
தேவதைகள் ஒன்று சூழ்ந்து
மகாவிஷ்ணுவினிடத்தில்,
'ராவணனை ஸம்ஹரிக்க, தேவரீர்
தசரதனுக்கு நான்கு புத்திரர்களாகப்
பிறக்க வேண்டும்' என்று
வேண்டி கொண்டனர். புத்ரகாமேஷ்டி
முடியும் தருணத்தில்
அக்னியிலிருந்து ப்ராஜாபத்ய
புருஷன் கையில் பாயஸ
கலசத்தை எடுத்துக் கொண்டு
வெளிவந்தான். அவனிடமிருந்து
பாயஸ கலசத்தை தசரதர்
பெற்று, முனிவர்களின்
நியமனத்தை முன்னிட்டு,
தம் மூன்று மனைவியருக்கும்
பாயஸத்தை ஒருவிதமாக பிரித்து
கொடுத்தார். ப்ராஜாபத்ய
புருஷன் கொடுத்த பாயஸம்
மூலமாகத்தான் ராமன்,
லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன்
ஆகிய நால்வரும் பிறந்தார்கள்
என்பது நிர்விவாதம்.
இவர்கள் நால்வருக்கும்
காரணமான பாயஸம் ஒரே கலசத்தில்
இருந்தபடியால் இவர்கள்
நால்வருமே ஒரே உதரத்திலிருந்து
உண்டானவர்கள் என்று சொன்னால்
விரோதமில்லை. எனவே ஒரே
கலசத்தின் உதரத்தில்
(மத்யத்தில்) நின்ற பாயஸம்
மூலமாக இவர்கள் உண்டான
படியால் இவர்கள் சகோதரர்கள்
என்று சொல்வதை யாரால்
மறுக்க முடியும்?
பாயஸத்தை
புசித்த கெளஸல்யை முதலியவர்கள்
மூலமாக இவர்கள் பிறந்தபோதிலும்
பாயஸம் என்பது ஒரே கலசத்தில்
முதலில் வைக்கபட்டபடியால்
அதை வைத்துகொண்டு சகோதரர்
என்று சொல்லலாமே. இதை
நினைத்துதான் ஸ்ரீராமன்
லக்ஷ்மணனை சகோதரன் என்று
சொன்னது. இப்படி பெரியோர்
சொன்ன வழி மிக்க சுவையுடனும்
போற்றத்தக்கதாயும்
உள்ளது.
ஆகையால், 'யத்ர
ப்ராதா ஸஹோதர:' என்று
ராமன் கூறியதாக வால்மீகி
சொன்னது மிக பொருத்தமேயாகும்.
ராமன்
இங்கு லக்ஷ்மணனை புகழ்ந்து
பேசினான். இன்னும் ஓர்
இடத்தில், சத்ருக்னனையும்
பரதனையும் புகழ்ந்து
பேசுகிறான். "கோதாவரிக்கரையில்,
லக்ஷ்மணனிடம், பரதனோடும்
சத்ருக்னனோடும் உன்னோடும்
நான் எப்பொழுதும் சேர்ந்து
ஸந்தோஷிக்கப் போகிறேன்"
என்றான். லக்ஷ்மணனிடம்
நேரில் இருக்கும் போதே
இப்படிச் சொல்வதின்
கருத்து என்ன. அவர்களடன்
சேராமல் உன்னுடன் சேர்ந்திருப்பது
சேர்கையில் சேர்த்தியில்லை
என்பது. இதனால் பரதனையும்
சத்ருக்னனையும் புகழ்ந்தான்
ஆயிற்று. இவ்வாறு, ஸஹோதரப்பாசம்
ராமன் காட்டுகிறான்.
யஷப்ரச்னத்தில்
தர்ம புத்ரன் "ஒருவனை
பிழைப்பிக்கச் செய்கிறேன்.
நீ யாரை வேண்டுகிறாய்"?
என்றதற்கு யஷனைப்பார்த்து
"எனது ஸபத்நிபுதரனான
நகுலனைதான் வேண்டுகிறேன்"
என்றான். ஸஹோதரன் அல்லாதவனாக
நகுலன் இருந்தபோதிலும்
ஸஹோதர வாஞ்சை எப்படி
உள்ளது என்பதை கவனிக்கவேண்டும்.
இதுதான் முக்யம்.
இக்காலத்தில்
பணத்தின் ஆசையாலும் வேறு
வித நினைவாலும் ஸஹோதரர்களே
சண்டை செய்து கொலைவரையில்
நாடுகிறார்கள். அந்தோ
!. முன்பு எல்லாம் பந்து
பரிபாலனம் அதிகம். வாலியும்
சுக்ரீவனையும் ராவணனையும்
விபீஷணனையும் போல் இருக்கிறார்கள்.
குணத்தை நாடுவதில்லை.
ராமாதிகள் போல் இருக்க
வேணும்.
*****
|
|
|
|
|
|
|
|