மூன்று மனிதர்கள்
உலகத்தில்
எத்தனையோ மனிதர்கள்
இருக்கின்றனர். அவர்களைப்பற்றி
இங்கு நாம் சொல்லவில்லை.
விலக்ஷணமான மனிதர்கள்
மூன்று பேர் இருக்கின்றனர்.
அவர்களைப் பற்றித் தான்
நாம் இங்கு வரைகிறோம்.
'பொன் விளைவது பூமியிலே'
என்று ஒரு பழமோழி கூறுவதுண்டு.
உண்மையில் பூமியில் பொன்
விளைகிறது. இது வாஸ்தவம்.
சுரங்கம் முதலிய இடங்களில்
ஸுவர்ணத்தைப் பல சிரமங்களை
கொண்டு ஆராய்ந்து எடுக்கிறார்கள்.
இது ஒரு விதம். மற்றொரு
விதம், பொன்னைப் பூமியிலிருந்து
எடுக்கிறார்கள். அது
எப்படி என்றால் பழவர்க்கங்களைக்
கொடுக்கும் தோட்டங்களை
வைப்பது, தானியங்களை
கொடுக்கும் நிலங்களை
பயிர் செய்வது, வியாபாரங்களை
செய்வது இப்படி. இவற்றின்
மூலமாக பணத்தை சம்பாதித்து
சுவர்ணத்தை வாங்குவது.
இம்மாதிரி நேராகவும்
பூமியிலிருந்து தங்கத்தை
பெறலாம். பரம்பரையாகவும்
பூமியிலிருந்து தங்கத்தை
பெறலாம். இப்படிப்பட்ட
பூமியைப் பெற்று மிக்க
மகிழ்ச்சியுடன் பணக்காரராக
இருந்து வாழ்கிறவர்கள்
மூன்று மனிதர்கள்; அவர்கள்
யார் என்றால் - சூரன், க்ருதவித்யன்,
அறிவாளியான சேவகன். இவர்களைத்தான்
இங்கு மூன்று மனிதர்கள்
என்று குறித்தோம்.
ஸுவர்ணபுஷ்பாம்
ப்ருதிவீம் சிந்வந்தி
புருஷாஸ்த்ரய: | சூரச்ச
க்ருதவித்யச்ச யச்ச ஜாநாதி
ஸேவிதும் ||
(மகா பாரதம்
- உத்யோக பர்வதம்)
பூமியில்
பிறப்பவன் எவனுமே தான்
பணக்காரனாக இருக்க வேண்டும்,
அதற்கு தனத்தை நிறைய
சம்பாதிக்க வேண்டும்,
அதற்கு என்ன வழி செய்யலாம்,
எல்லோருக்கும் மேலாக
மேன்மையுடன் எப்படி விளங்கலாம்
என்று ஆலோசிப்பது உண்டு.
ஒரு பள்ளியில் பையனை
வித்யாப்யாஸம் செய்யச்
சேர்க்கும்போதே அவன்
பெற்றோர் என்ன நினைக்கிறார்கள்
தெரியுமா? இவன் நன்றாகப்
படிக்க வேண்டும்; நல்ல
உத்யோகம் பார்க்க வேண்டும்;
பணத்தை நிறைய சம்பாதித்து
மேன்மையுடன் இருக்க வேண்டும்;
நாமும் அதனால் மகிழ வேண்டும்
என்று. இது எல்லோருக்கும்
உள்ள குணம். இப்படி ஒவ்வொரு
விஷயத்திலும் பார்த்துக்
கொள்ளலாம். ஒரு வியாபாரத்தில்
ஈடுபடுபவன் இப்படியல்லவா
நினைக்கிறான்? வியாதிகளை
நீக்க ஏற்பட்டிருக்கும்
மருந்தை வியாபாரம் செய்பவன்
என்ன நினைக்கிறான்? நன்றாக
நீங்கள் யோசித்துப்
பாருங்கள். 'நமக்கு வியாபாரம்
நன்றாக நடக்க வேண்டும்;
பணம் நிறைய வேண்டும்'
என்றுதானே? இப்படி நினைப்பவனுடைய
அபிப்பிராயம் எப்படி
முடிகிறது? எல்லோரும்
வியாதியால் துன்புறவேண்டும்
என்றுதானே? அப்போதுதானே
இவனது வியாபாரம் வலுக்கும்?
வைத்யர்கள் நன்றாக பணத்தை
சம்பாதித்து மாடியைக்
கட்டிக்கொண்டு இருக்க
வேண்டும் என்று நினைத்தால்,
அந்த நினைவு எதில் முடிகிறது?
எல்லோரும் வியாதியை
எப்போதும் பெற வேண்டும்
என்பதில்தான். அப்போதுதான்
இவர்களது வியாபாரம் ஜீவிக்கும்.
இப்படி ஒவ்வொரு தொழிலிலும்
இதை நன்கு ஆலோசித்துக்
பார்த்துக் கொள்ளலாம்.
இப்படி
ஒவ்வொருவனும் தங்கத்தை
புஷ்பிக்கக் கூடிய பூமியை
பெற்று பணக்காரனாக இருந்து
வாழ வேண்டும் என்று நினைத்தாலும்
அது எல்லோருக்கும் சுலபமாக
முடிவதில்லை; மூன்று
மனிதர்களுக்கே அது சுலபமாக
முடிகிறது. அவர்களில்,
சூரன் ஒருவன். அசகாயசூரன்
என்று ஒருவனைப் புகழ்கிறோமே
அவன்; அதாவது எந்த காரியத்தை
நினைத்தாலும் அதில் பல
தடங்கல்கள் ஏற்பட்டாலும்
அவற்றை நீக்கி, பின்வாங்காமல்
காரியத்தைச் செய்து முடிக்கிறானே
அவன்தான் சூரன். இப்படிப்பட்டவனுக்கு
எல்லாம் சுலபமாகத்தானே
முடியும்? சிலர் வியாபாரம்
செய்து பெரிய மனிதராகவேண்டும்
என்று நினைப்பார்கள்.
அவர்கள் அந்த காரியங்களை
செய்யும் போது மகத்தான
இடையூறுகள் பல ஏற்பட்டுவிடும்.
சரி, இனி நாம் என்ன செய்வது
என்று பின்வாங்கிவிடுவார்கள்.
பெரும்பாலும் நற்காரியங்களை
செய்வதற்கு பல தடங்கல்கள்
கட்டாயம் ஏற்படும். எப்படிப்பட்ட
மகான்களாக இருந்தாலும்
இவை நேரிடத்தான் செய்யும்.
கெட்ட காரியங்களைச் செய்பவர்களுக்கு
தடங்கலே ஏற்படாது. இது
கண்கூடு. இராவணன் சீதையை
அபகரித்துக் கொண்டு
போனபோது என்ன தடங்கல்
ஏற்பட்டது? நடுவில் தடங்கலாக
வந்த ஜடாயுவும் மாண்டுவிட்டார்.
ராமனின் பட்டாபிஷேகத்துக்கு
எத்தனை விக்னங்கள் ஏற்பட்டன
!
ச்ரேயாம்ஸி பஹுவிக்நாநி
பவந்தி மஹதாமபி | அச்ரேயஸி
ப்ரவ்ருத்தஸ்ய குதோ
யாந்தி விகாதகா: ||
கொடியவன்
ஒருவன், பெருந்துஷ்டன்,
எப்போதும் தப்புக் காரியங்களையே
செய்பவன், சாஸ்திரவிருத்தமான
வேலைகளையே செய்கிறவன்,
திருடுபவன், கள் குடிப்பவன்
இப்படிப்பட்டவனுக்கு
சீக்கிரத்தில் தண்டனை
ஏற்படுவதில்லை. இவன்
செய்த பாவகர்மங்களுக்கு
உடனே பெரும் சிக்ஷையை
கொடுக்க வேண்டும் பகவான்.
ஆனாலும் இந்த பாவியின்
பாபகர்மாவிற்கு பலன்
உடனே கிடைப்பதில்லை.
அது மாத்திரம் அல்ல. காலமும்
அவன் செய்யும் வேலைக்கு
அநுகூலமாகவே ஒத்துப்
போகும்.
நது ஸத்யோ
அவிநீதஸ்ய த்ருச்யதே
கர்மண: பலம் | காலோப்யங்கீபவத்யத்ர
ஸஸ்யாநாமிவ பக்தயே ||
என்றார்
வால்மீகி மகரிஷி. இராவணன்
செய்த சீதாபஹாரத்தை காட்டிலும்
கொடிய பாவம் ஏதாவது
உண்டா? அவனுக்கு வழியில்
யமன் போல் வந்த ஜடாயுவும்
மாண்டுவிட்டார் அல்லவா?
அவன் செய்த தப்புக் காரியத்திற்கு
காலம் அநுகூலமாகவே இருந்தது.
ஆகையால் அஸத்காரியங்களில்
விக்னம் ஏற்படாது; ஸத்காரியங்களில்
அது ஏற்பட்டே தீரும்.
இம்மாதிரி சமயங்களில்,
'விக்னம் வந்துவிட்டதே.
நம்மால் ஏதும் செய்ய
முடியாது' என்று பின்வாங்குவர்
சிலர். இவர்கள் பலமற்றவர்கள்,
திறனற்றவர்கள், வழி தெரியாதவர்கள்.
சூரனாக இருப்பவன் எப்படிப்பட்ட
விக்னங்கள் வந்தபோதிலும்
அவற்றை பொருட்படுத்தாமல்,
தான் ஆரம்பித்த காரியத்தை
சாதித்தே தீருவான். இவனிடத்தில்
தைரியலக்ஷ்மி இருக்கிறபடியால்
பூமியைப் பெற்று அதன்
மூலமாக பணத்தை திரட்டிவிடுவான்.
இரண்டாவது
மனிதன் க்ருதவித்யன்
என்பவன்; கல்விகளைப்
பயின்று அவற்றின்மூலம்
வித்வான் எனப் பெயர்
பெற்றவன். 'வித்வாந் ஸர்வத்ர
பூஜ்யதே' என்ற ரீதியில்,
இவன் சென்ற இடமெல்லாம்
கெளரவத்துடன் வாழ்வான்.
முற்காலங்களில் வித்வான்களுக்கே
பெருமதிப்பைக் கொடுத்து
வந்தார்கள். அந்த காலத்தில்
எல்லோரும் பெரும்பாலாகப்
படித்தவர்களானபடியால்
வித்வான்களின் பரிச்ரமத்தை
அறிந்திருந்தார்கள்;
ஆகையால் தங்களை போல்
பல சிரமங்களையும் பொருட்படுத்தாமல்
இரவு பகல் தூக்கமின்றியே
பசிவேளையிலும் கிடைத்தால்
சாப்பிடுவது, இல்லையெனில்
பட்டினி கிடப்பது என்ற
ரீதியில் இருந்து கல்விகளைப்
பெற்றவர்கள் என்று எண்ணி,
கெளரவப்படுத்துவது வழக்கம்,
வித்வாநேவ
விஜாநாதி வித்வஜ்ஜநபரிச்ரமம்
| நஹி வந்த்யா விஜாநாதி
குர்வீம் ப்ரஸவவேதநாம்
||
(அப்பய்ய தீக்ஷிதர்
- குவலயானந்த:)
என்றபடி,
உண்மையான வித்வான்களுக்கன்றோ
வித்வான்களின் பரிச்ரமத்தை
அறிய முடியும்? மலடி எப்படிப்
பிறருடைய ப்ரசவ வேதனையை
அறிவாள்? ப்ரசவ வேதனை
எப்படி இருக்கும் என்று
அவளைக் கேட்டால் அவளால்
யாது சொல்ல முடியும்?
அதுபோல, அவித்வான்களுக்கு
வித்வானின் பரிச்ரமம்
எப்படி தெரியும்? ஆகையால்
அரைகுறையாக படித்தவர்களுக்கோ,
படிப்பே இல்லாமல் ஏதோ
ஒரு அதிருஷ்டவசத்தால்
நிறைய பணம் சம்பாதித்தவர்களுக்கோ,
வித்வான்களின் பெருமையும்
வித்யை கற்றவர்களின்
பெருமையும் தெரியா; ஆகையால்
அவர்கள் வித்வான்களை
வெகுமதிக்க மாட்டார்கள்.
இக்காலத்தில் இது சகஜம்.
'துஷ்ட: ஸர்வத்ர பூஜ்யதே'
என்று படிக்க வேண்டும்.
போஜாராஜாவின் ஸபையில்
எத்தனையோ வித்வான்கள்
வெகுமதிக்கப்பட்டு வாழந்தார்கள்
என்பது உலகப் பிரசித்தம்.
உயர்ந்த
கல்விகளையும் வேதநூல்களையும்
வேதாந்தங்களையும் அவற்றின்
உள்ளர்த்தத்தை ஆசிரியர்கள்
மூலமாக உபதேசம் பெற்று
ஆராய்ந்து பார்த்த பெரும்
வித்வான்கள் சாதாரண மனிதர்களல்லர்;
மகா பாகவதர்கள், மகரிஷிகள்
என்றே இவர்களைச் சொல்ல
வேண்டும். இவர்களின்
வாக்கிலிருந்து வரும்
வார்த்தைகளெல்லாம் சாதாரண
வார்த்தைகள் அல்ல. இவர்கள்
சொல்லுவது பெரும்பாலும்
பலித்துவிடும். சாதாரணமாக
உலகத்திலுள்ள ஸாதுக்கள்
சொல்லும் வார்த்தை,
மேல் ஏற்படக்கூடிய பொருளை
அநுசரித்து இருக்கும்.
இவர்களுடை வார்த்தையை
அநுசரித்து மேற்பயன்
(பொருள்) பலிக்கும். இவர்கள்
வாக்கிலிருந்து எது வந்தாலும்
அப்படியே அது பலித்துவிடும்.
லெளகிகாநாம்
ஹி ஸாதூநாம் அர்த்தம்
வாக் அநுவர்த்ததே | ரிஷீணாம்
புநராத்யாநாம் வாசம்
அர்த்தோநுதாவதி ||
(பவபூதி
- உத்தர ராம சரிதம்)
என்றபடி,
இந்த வித்வான்களுடைய
வாக்கு ஏற்பட்டபடி பொருள்
அமையும். இப்படிப்பட்ட
அருள்வாக்கை உடையவர்களானபடியால்
இவர்கள் எங்கே சென்றாலும்
எல்லோராலும் பூஜிக்கப்
பெறுவார்கள். இவர்கள்
மனம் வைத்தால் போற்றவும்
போற்றுவார்கள்; வேறு
விதமாக மனம் இருந்தால்
தூற்றவும் தூற்றுவார்கள்.
ஆகையால் பயந்தும் பக்தியுடனும்
இவர்களை எல்லோரும் பூஜிப்பார்கள்
என்பதும் ஒரு ரகசியம்.
மூன்றாவது
மனிதன் - "யஸ்ச ஜாநாதி ஸேவிதும்'
என்று சொல்லப்பட்டவன்;
நிபுணசேவகன் அவன். யஜமானனிடத்தில்
வேலை செய்யும் சேவகன்
அதிஸமர்த்தனாக இருக்க
வேண்டும். எந்த எந்த சமயத்தில்
யஜமானனிடத்தில் எப்படி
எப்படி நடந்து கொண்டால்
நம்மேல் யஜமானன் மிக்க
திருப்தியடைந்து எல்லா
செளகரியங்களையும் செய்து
வைப்பான் என்று அறிந்து,
அம்மாதிரி நடக்க தெரிந்து
கொள்ள வேண்டும் சேவகன்.
இவன்தான் எல்லோரைக்காட்டிலும்
மேம்பட்டவன். ஒரு யஜமானனிடத்தில்
நூறு சேவகர்கள் இருந்தார்களேயானால்
அவர்கள் எல்லாரிடத்திலும்
யஜமானன் ஒரே விதமான திருப்தியுடன்
இருப்பான் என்று சொல்ல
முடியாது. அவரவர் தங்கள்
தங்கள் காரியங்களைப்
பிழையின்றி சரிவர செய்து
வந்தாலும் சில சேவகர்களிடத்தில்தான்
யஜமானன் அதிக திருப்தியை
காட்டுவான். இதற்கு காரணம்
யாதேனில் இவர்கள் வேலையை
சரிவர செய்வது மட்டுமல்ல,
யஜமானன் எந்த எந்த காரியத்தை
செய்தாலும் அதுதான் சரி,
நீங்கள் செய்வதுதான்
நியாயம், மற்றவர்கள்
செய்வது அநீதியில் சேர்ந்தது
என்று அந்த யஜமானன் திருப்தியடைவதற்காக
சில மதுரமான பேச்சுக்களை
பேசி மயக்குகிறானே, இது
தான் அவன் திருப்தியடைகிற
காரணமாகிறது. 'நம்மை ஏமாற்றி,
நம்மிடமுள்ள பணத்தை பறித்துக்
கொள்வதற்காக, நம் மனம்
திருப்திபெற இவன் பேசுகிறான்'
என்பதை யஜமானன் அறிந்து
கொள்வதில்லை.
ஸுலபா:
புருஷா ராஜந் ஸததம் ப்ரியவாதின:
| அப்ரியஸ்ய ச பத்யஸ்ய
வக்தா ச்ரோதா ச துர்லப:
||
(ஸ்ரீமத் ராமாயணம் - அரண்யகாண்டம்
37)
என்றபடி, சிரிக்க சிரிக்க
சொல்லி யஜமானனைத் திருப்தியடைய
செயதுவிடுவார்கள். இப்படிப்பட்டவர்கள்
சுலபமாக எங்கும் கிடைக்கலாம்.
இவர்கள் யஜமானனின் பணத்தை
பறிக்க ஆவல் கொண்டவர்கள்;
ஆகையால் யஜமானன் அநீதி
செய்தாலும் 'நீ செய்ததுதான்
சரி' என்று சொல்லி அவனை
மயக்கிவிடுவார்கள். இப்படி
நடப்பவன்தான் நிபுணசேவகன்.
இவனிடத்தில் யஜமானன்
கையாளாக இருந்து விடுகிறான்.
இவன் இருக்குமிடம் தேடி
யஜமானன் தன்னிடமுள்ள
பணத்தை கொடுத்து வருவான்.
நம்மிடமுள்ள பணத்தை அபகரிக்க
இவன் இம்மாதிரி சூழ்ச்சிகளை
செய்கிறான் என்பதை யஜமானன்
எப்படி அறிவான்? இவன்தான்
தனத்தினால் கர்வம் கொண்டுள்ளானே!
ஆக இப்படிப்பட்ட சேவகன்
யஜமானனிடமிருந்து சம்பாதித்து
பூமியிலிருந்து சுவர்ணங்களை
திரட்டிவிடுவான்.
மேற்கூறிய
மூன்று மனிதர்களில் இவன்தான்
பணத்தை திரட்டுவதில்
அதிஸமர்த்தன். சூரனாக
இருக்கலாம்; படித்தவனாகவும்
இருக்கலாம்; ராஜாவினிடத்தில்
ஸேவை பண்ணத் தெரியாமல்
இருந்துவிட்டால் என்ன
பலன்? இதைக் காட்டுவதற்காகவே,
ஒரு கோவையில் மூவரையும்
காட்டும்போது, சூரனும்
க்ருதவித்யனும் நிபுணஸேவகனும்
என்று ஒரே மாதிரி சொல்ல
வேண்டியிருக்க. அப்படி
சொல்லாமல், சூரனும்,
க்ருதவித்யனும், ஸேவைசெய்ய
எவன் அறிகிறானோ அவனும்
என்று விலக்ஷணமாக கூறியுள்ளது.
கீதையை முழுக்க உபதேசம்
செய்தபிறகு அர்ஜுனனை
பார்த்து ஸ்ரீகிருஷ்ண
பகவான் "இது பெரும் ரகசியம்.
எல்லோருக்கும் உபதேசம்
செய்ய கூடாது" என்ற சொல்லும்போது,
ஓர் அழகான ச்லோகம் அமைந்துள்ளது
-
இதம் தே நாதபஸ்காய நாபக்தாய
கதாசந | ந சாசுச்ரூஷவே
வாச்யம் ந ச மாம் யோப்யஸூயதி
|| (கீதை - 18-68)
இந்த ச்லோகம்தான்
நமக்கு நினைவுக்கு வருகிறது
இங்கு. 'விரதம் செய்யாதவனுக்கு
சொல்ல வேண்டாம். அபக்தனுக்கு
இதை சொல்ல வேண்டாம்.
சுச்ரூஷை செய்யாதவனுக்கு
சொல்ல வேண்டாம்' என்று
சொன்னவர், 'அஸூயை உள்ளவனுக்கும்
சொல்ல வேண்டாம்' என்று
ஒரே ரீதியில் சொல்ல
வேண்டியிருக்க, 'எவன்
நம்மிடத்தில் பொறாமையை
காட்டுகிறானோ அவனுக்கு
சொல்ல வேண்டாம்' என்று
விலக்ஷணமாக சொல்லியிருக்கிறார்.
இதிலிருந்து என்ன ஏற்படுகிறது
என்றால், கீழ்கூறியவர்களுக்கு
சொன்னாலும் சொல்லலாம்;
அஸூயை உள்ளவனுக்கு ஒருகாலும்
இதை உபதேசிக்ககூடாது
என்பது. அது போல் இங்கும்,
எவன் யஜமானனிடத்தில்
ஸேவை செய்ய அறிந்திருக்கிறானோ
அவன் பூமியிலிருந்து
பணத்தை பறித்து கொள்கிறான்
என்று விலக்ஷணமாக கூறியதனால்,
கீழ் கூறிய இரண்டு பேரை
காட்டிலும் இவன் பணம்
திரட்டுவதில் அதிஸமர்த்தன்
என்று ஏற்படுகிறது. ஆக,
சூரனாகவோ படித்தவனாகவோ
இருக்க வேண்டும். அல்லது
சூரத்தன்மையும் படிப்பும்
இல்லாமற் போய்விட்டாலும்
ஸேவை செய்யத் திறன் பெற்றவனாக
இருக்க வேண்டும். இவன்
எளிதில் பணத்தை சம்பாதித்து
விடுவான்.
உதாஹரணமாக
நவாபு காலம், முகலாய ராஜ்யம்.
அப்பொழுது கத்தரிக்காய்
வாசலில் வண்டியில் விற்பனை.
அரசன் மந்திரியை பார்த்து
கத்தரிக்காய் தினமும்
விற்பனையாகிறதே. அது
அப்படி உயர்ந்ததா என்று
கேட்டான். அதற்கு சேவகனான
மந்திரியின் விடை - காய்
கறிகளில் அதுதானே உயர்ந்தது.
அதை அறிவிக்கவே அதன்
தலையில் பகவான் க்ரீடம்
வைத்துள்ளானே என்றான்.
இதைக் கேட்ட அரசன் தினமும்
அரசன் அதை வாங்கி சாப்பிட்டான்.
சில நாட்கள் ஆயின. அதிக
உஷ்ணமானபடியால் உடலில்
சிறங்கு சொறி உண்டாகிவிட்டன.
அரசன் கஷ்டப் பட்டான்.
பிறகு மந்திரி கூறியதை
மறந்து கத்தரி அப்படி
என்ன உயர்ந்தது என்றான்.
அதற்கு இந்த மந்திரி
சேவகன் அதைவிட தாழ்ந்த
பதார்த்தம் எதுவுமே இல்லை.
அதனால்தான் அதன் ப்ருஷ்டபாகத்தில்
பகவான் ஆணியை அடித்திருக்கிறான்
என்றான். இதற்கு பின்
வாங்குதை நிறுத்தினான்.
இதனால் என்ன தெரிந்துகொண்டோம்.
அரசன் மனோபாவத்தை அநுசரித்து
நடந்து கொள்ள வேண்டும்
என்பது.
*****
|