நாங்கள் நாங்களே!
நீங்கள் நீங்களே!
இந்தத்
தலைப்பைக் கண்டதும் ஒருவரும்
சந்தேகப்பட வேண்டாம்.
உலகத்தில் அவரவர் அவரவர்தாம்.
ஒருவன் மற்றொருவன் ஆகமாட்டான்.
அதுபோல் நாங்கள் நாங்கள்தாம்;
நீங்களும் நீங்கள்தாம்.
நீங்கள் நாங்களாகமாட்டீர்கள்;
நாங்கள் நீங்கள் ஆகமாட்டோம்,
அப்படியிருக்க இது என்ன
தலைப்பு?
இந்தத் தலைப்பின்
கருத்தை நன்கு எடுத்துக்
காட்டுகிறோம். நன்கு
கவனித்துப் படியுங்கள்.
ஒரு மகான் நன்கு படித்தவர்;
வேதங்களைச் சரியான வயதில்
கசடறக் கற்றவர்; வேதாங்கங்களையும்
நன்றாக அப்யஸித்தவர்.
சாஸ்திரங்களில் கரை கண்ட
ஞானம் உடையவர்; உபநிஷத்தின்
உட்பொருளை ஸதாசார்யன்
மூலமாகப் பயின்றவர்.
அவருக்கு நிகர் அவரே
என்று சொல்லும்படியான
அறிவைப் பெற்றவர். இம்மாதிரி
அறிவைப் பெற்றது மாத்திரமின்றி
அநுஷ்டானத்திலும் சிறப்பைப்
பெற்றவர். கல்வியைக்
கற்றது மாத்திரமின்றி
நடைமுறையிலும் அதன்படி
நடந்து வருகிறவர்களே
மகான்கள்.
சிலர் சிறந்த
ஞானத்தைப் பெற்றிருக்கலாம்;
அவரது அநுஷ்டானம் நன்றாக
இராது; உலகத்தவர் பரிகசிக்கும்படி
நடந்துகொள்வர். உதாரணமாக,
மேடையில் அமர்ந்து, "சிகையை
வெட்டிக் கொள்ளக் கூடாது;
பொய் பேசுதல் தவறு; காலங்களில்
ஸந்தியாவந்தனம் செய்தல்
வேண்டும். பிறர் பொருளை
அபகரித்தல் குற்றம்"
என்று இம்மாதிரி பல உபதேசங்களைச்
செய்வர். ஆனால் உபதேசம்
செய்பவர் சிகையை எடுத்துவிட்டிருப்பார்;
பொய் சொல்ல தயங்க மாட்டார்;
ஸந்தியாவந்தனமே சரியாக
தெரியாதவராக இருப்பார்;
பிறர் பொருளை விரும்பி,
அதற்காக அக்ரமமான செயலைச்
செய்வதில் வல்லவராக இருப்பார்.
இப்படி உபதேசிப்பது ஒன்றும்,
செய்வது ஒன்றுமாகப் பலரிடத்தில்
கண்டுள்ளோம். இது உபயோகமற்றது.
நாம் எப்படித் தெரிந்துகொண்டு
இருக்கிறோமோ, எப்படி
உபதேசம் செய்கிறோமோ,
அநுஷ்டானத்திலும் அம்மாதிரியே
நடந்துகொள்வதுதான்
அழகு. இல்லாவிட்டால்
ஒருவனுடைய கல்விஞானம்
நாய்வாலுக்குச் சமமாகவே
ஆகிவிடும். இக்காலத்தில்
பணம் நிறைய உள்ளது. அது
நல்ல வழியில் ஸம்பாதித்தது
அல்ல. அக்ரமமாக ஸம்பாதித்தது.
அதைக் கொண்டு யாசித்தோ
வேறு வகையிலேயோ தர்மகார்யம்
செய்வது பலனை அளிக்காது.
பாபம்தான் சேறும் என்று
சொல்லுவர். பத்ரிகையிலும்
சிலர் எழுதுவர். ஆனால்
செய்வது இம்மாதிரிதான்.
நாயின் வால் எதற்கும்
உபயோகமற்றது. தன்னுடைய
மறைக்க வேண்டியதை மறைத்து
கொள்ளாது. அந்த வால்
உயரேதானே தூக்கிக் கொண்டிருக்கும்?
பசு, எருது முதலியவற்றின்
வால் மர்ம ஸ்தலத்தை மறைத்துவிடும்.
ஈ, கொசு முதலியவற்றையும்
ஓட்டிக்கொள்ளும். நாய்
வாலோ அதற்கும் பயனற்றது.
சிறு பையன்கள் விளையாட்டுக்காக
அதன் வாலில் ஓலையைக்
கட்டி கொளுத்துவார்கள்.
அதனால் அதற்கு தீங்குதான்
உண்டாகும். அம்மாதிரிதான்
கற்றவனின் ஞானம் அநுஷ்டானத்தில்
அமையாவிட்டால் அனர்த்தத்தைத்தான்
கொடுக்கும்.
சாஸ்திரங்களில்
உசிதமான ஞானம் உடையவர்
ஒருவர் தம்மை ஜனங்கள்
புகழ வேண்டும் என்று
எண்ணி, வித்வத்ஸபை ஒன்றை
ஏற்படுத்தினார். அப்பொழுது
பல வித்வான்கள் சூழ்ந்திருந்தனர்.
அந்த ஸபையை நடத்துகிறவர்,
வித்வான்களைப் பார்த்து,
"இங்கு வந்துள்ள உங்களைக்
கண்டதும் மனம் மகிழ்கிறது.
அனைவரும் குடுமியுடனும்
வேஷ்டியுடனும் புண்ட்ரங்களுடனும்
இருப்பதைக் கண்டு மிகவும்
ஸந்தோஷிக்கிறேன்" என்று
நன்கு புகழ்ந்தார். ஸபை
முடிந்ததும் வித்வான்கள்
வீட்டுக்குச் சென்றார்கள்.
இரவு ஏழு மணி ஆயிற்று.
இந்த ஸபை நடத்துபவர்
தினமும் ராமாயணம் சொல்லுகிறவர்.
அன்றிரவு விபீஷண சரணாகதிப்
ப்ரகரணம் சொல்ல வேண்டியதாக
இருந்தது: இவர் அதை எடுத்துச்
சொல்லுகிறார் - "விபீஷ்ணாழ்வான்
'ஸர்வலோகசரண்யாய' என்று
நான்கு ராக்ஷஸர்களுடன்
ஸ்ரீ ராமனிடத்தில் வந்து
தன் கஷ்டத்தை மிக்க உரத்த
குரலில் சொல்லிக்கொண்டு
வருகிறான். இந்தச் சத்தத்தைக்
கேட்டதும் ஸ்ரீராமனிடம்
உள்ள வானர முதலிகள் ஸ்ரீராமனிடம்
வந்து ஒரே கூச்சல் போட்டன.
'சத்ருவான ராவணன் வசிக்கும்
இடமான இலங்கையிலிருந்து
இந்த ஐந்து ராக்ஷஸர்கள்
வந்திருக்கிறபடியால்
நமக்கும் ஸ்ரீராமனுக்கும்
என்ன ஆபத்து வருமோ?' என்று
எண்ணி, ஒரே மாதிரி எல்லாக்
குரங்குகளும் பெருத்த
கூச்சல் போட ஆரம்பித்தன.
இது எப்படி இருக்கிறதென்றால்
இன்று பகல் வித்வத்ஸபையில்
ஒரு வித்வான் ஏதோ ஒரு
விஷயம் சொன்னபோது,
மற்ற எல்லா வித்வான்களும்
ஒரே சமயத்தில் அர்த்தமற்ற
கூச்சல் போட்டார்களே
அப்படி அந்தக் குரங்குகள்
போட்டன" என்றார்.
மேலும்
இவர் பணத்தில் ஆசையாலும்,
அங்கு உபந்யாஸ மண்டபத்திலுள்ள
சில லெளகிகர்களுடைய ஆதரவை
அடைய வேண்டும் என்று
எண்ணியும், "இந்த வித்வான்கள்
இப்படித்தான் எப்போதும்
கூச்சலிடுவார்கள்" என்று
வித்வான்களைப் பரிகசித்து,
லெளகிகர்களை மிகவும்
புகழ ஆரம்பித்துவிட்டார்.
இப்படிச் செய்பவர் எவ்வளவு
படித்திருந்தும் என்ன
லாபம்? படிப்புக்குத்
தகுந்த அறிவும் வளரவில்லை;
அறிவுக்குத் தகுந்த ஆசாரமும்
இல்லை என்று தானே இவரைச்
சொல்ல வேண்டும்? குடுமி
உள்ளவர்களிடம் அக்ஷதையை
சேர்த்தால் கீழே விழுந்து
விடுகிறது. க்ராப் செய்து
கொண்டு வந்த உங்கள்
தலையில் அக்ஷதை சேர்த்தால்
அப்படியே இருக்கிறது.
எனறும் புகழுகிறார. ஐயோ
இப்படியும் ஒருவரா?
இப்படிப்
போலியான மகானன்றிக்கே
உயர்ந்த குணத்தை உடைய
மகான் கீழே கூறப்பட்டவர்.
அவர் ஒரு சமயம் உலகத்தைப்
பார்த்தார். எல்லா ஜனங்களும்
எம்பெருமானிடத்தில்
ஈடுபடாமல் தினந்தோறும்
மூன்று நான்கு வேளை நன்றாகச்
சாப்பிட வேண்டும், ருசித்துச்
சாப்பிட ேவ்ண்டும். ஆடு
மாடு போல இருக்க வேண்டும்,
அழகான உடை அணிந்து கொள்ள
வேண்டும், நன்றாக அலங்கரித்துக்
கொண்டே இருக்க வேண்டும்
என்ற எண்ணத்துடன் இருந்தனர்.
இஹலோக ஸுகம் பஹுக்லேசுத்துடன்
கூடியது. அதில் பல ச்ரமங்கள்
உள்ளன. அதை விட்டு விடவேண்டும்
என்று சாஸ்திரம் படித்தவர்கள்
கூறுகிறார்களே. அது தவறு.
உமி தவிடு முதலியவைகளுடன்
கூடியதானபடியால் நெல்லை
விட்டு விடுகிறார்களா?
முள்ளுடன் கூடியது பலாச்
சுளை என்ற காரணத்தால்
பல பழத்தை விட்டு விடுகிறோமா?
அதனால் பழத்தை யாரும்
வாங்குவதில்லையா? இப்படி
சிலர் சொல்லுவர் மனிதர்கள்.
இவர்களைக் கண்டு, 'இவர்களுடன்
நாம் சேர்ந்தால் நாமும்
கெட்டுவிடுவோம், நம்
புத்தியும் மாறிவிடும்,
ஓழுக்கமே போய்விடும்.
எம்பெருமானையே மறந்துவிடுவோம்'
என்று நினைத்தார். அவர்களோ
இவருடன் கலந்து, 'இவரையும்
கெடுத்துவிட வேண்டும்'
என்று எண்ணி அருகில்
வரத் தொடங்கினர். அவர்களைக்
கண்டதும் இவர் வெறுப்புடன்
கூறுகிறார் -
அத்யப்ரப்ருதி
ஹே லோகா:! யூயம் யூயம்
வயம் வயம் நாஸ்தி ஸங்கதிரஸ்மாகம்
யுஷ்மாகம் ச பரஸ்பரம் அர்த்தகாமபரா
யூயம் நாராயணபரா வயம் வயம்
து கிங்கரா விஷ்ணோ:, யூயம்
இந்த்ரியகிங்கரா:
"ஜனங்களே!
இன்று முதற்கொண்டு நீங்கள்
நீங்கள்தாம்; நாங்கள்
நாங்கள்தாம். எங்களுக்கும்
உங்களுக்கும் ஒருவிதச்
ஸம்பந்தமும் இல்லை. நீங்கள்
பணத்திலும் சிற்றின்பத்திலும்
நிறைய அவா உடையவர்கள்.
நாங்கள் ஸ்ரீமந் நாராயணனிடத்தில்
ஆசை உடையவர்கள். நீங்கள்
பணத்திலும் இகலோக இன்பத்திலும்
ஆசை உடையவர்களானபடியால்
ஐம்புலன்களுக்கு வேலைசெய்யும்
வேலைக்காரர்கள். நாங்கள்
எம்பெருமானுடைய வேலைக்காரர்கள்.
ஆகையால் உங்களுடன் நாங்கள்
சேர மாட்டோம். எங்கள்
தன்மையே வேறு; உங்கள்
தன்மையே வேறு" என்கிறார்.
அதாவது,
எம்பெருமானையே நம்பினவர்கள்;
அவனைத் தவிர மற்ற விஷயங்களில்
ஆவலே இல்லாதவர்கள்; அந்த
ச்ரிய:பதியான ஸர்வேச்வரனிடத்தில்
எக்காலமும் எல்லாவிதக்
கைங்கரியங்களையும் செய்ய
வேண்டும் என்று பாரிக்கிறவர்கள்;
அவனைத் தவிர மற்ற விஷயங்களில்
கண்ணோட்டமற்றவர்கள்;
அவனிடத்தில் அவனது பணிவிடையைத்
தவிர மற்ற எந்தப் பொருளையும்
யாசிக்காதவர்கள் - இப்படிப்பட்டவர்கள்
பெரிய மகான்கள். இந்த
மகான்களின் கடாக்ஷம்
நம்மேல் ஒரு நிமிஷம்
விழுந்தாலும் போதும்;
அது உயர்ந்த பதவியை அளித்துவிடும்.
'மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம்
நய க்ஷணேபி தே யத்விரஹோதிதுஸ்ஸஹ:'
என்று ஆளவந்தார் கூறியபடி,
இந்த மகான்களுடைய பிரிவு
எம்பெருமானுக்கே பொறுக்க
முடியாதாம். எம்பெருமான்
ஒரு நிமிஷங்கூட இத்தகைய
மகான்களின் பிரிவைப்
பொறுத்துக்கொள்ள முடியாமல்
தவிக்கிறானாம். அப்படிப்பட்டவர்களே
மகான்கள்.
இவ்வுலகில்
பிறந்து, எவ்வளவோ கஷ்டங்கள்
வந்த போதிலும் அவற்றைப்
பொருட்படுத்தாமல், பகவானையே
ஸேவிக்க வேண்டுமென்று
எண்ணி, அவனிடத்திலேயே
மனத்தைச் செலுத்தியபடியால்
இவ்வுலகக் கஷ்டங்களாகிய
பாம்புகள் பல உடம்பைக்
கடித்தபோதிலும், அந்தக்
கடியை அறிந்து கொள்ளாமல்
ஸதா எம்பெருமானைப் பற்றி
பாடிக் கொண்டே இவர்கள்
பொழுது போக்குவார்கள்.
சாதாரண ஜனங்கள் இவ்வுலக
இன்பத்தில் மனத்தைச்
செலுத்தினவர்களானபடியால்
அதற்குத் தகுந்தாற் பொல்
நடந்துகொள்ள வேண்டியதாக
இருக்கும். பணமில்லாமல்
எந்த ஸுகத்தைத்தான் இங்கே
அநுபவிக்க முடியும்?
அதற்காகப் பணத்தைச் சம்பாதிக்க
முயலுவார்கள். தவறான
வழியில் பணத்தைச் சேமித்து
ஸுகத்தில் ஆழ்வார்கள்.
அதற்கும் முடியாவிட்டால்
பெரிய பணக்காரனிடத்தில்
சென்று யாசித்துப் பெறுவார்கள்.
எவ்வளவுதான்
பணம் வந்தால் என்ன? எல்லாம்
நம்முடைய சாண் வயிற்றுக்குத்தானே?
இந்தச் சாண் வயிற்றை
நிரப்ப, வயலில் சிந்திய
செந்நெல் தானியமே பற்றாதா?
குளத்திலும் கிணற்றிலுமுள்ள
ஜலத்தை இரண்டு கைகளால்
எடுத்துப் பருகினால்
தாகம் தணியாதா? அழுக்கடைந்த
கந்தல் துணி வழியில்
சுலபமாகக் கிடைக்கக்கூடுமே.
அதைக் கொண்டு நம் உடலை
மறைத்துக்கொண்டால்
ஆகாதா? இப்படியிருக்க,
தமது வயிற்றுக்காக அல்ப
அரசர்களை யாசிப்பதற்கு
ஏன் போக வேண்டும் என்ற
எண்ணம் இவர்களுக்கு உண்டாவதே
இல்லை. அரசர்களிடம் சென்று
தமது வயிற்றுக்காக யாசிக்கிறார்களே,
இது ஒரு நாளா, இரண்டு நாளா?
தன் உடல் விழுமளவுதானே
யாசிக்கவேண்டும்? தனஞ்சயத்தை
(ஜாடராக்கினியை)த் தணிப்பதான
தனம் இவ்வுலகிலுள்ள செல்வம்,
தனஞ்சயனை (அர்ஜுனனை) மேன்மையுறச்
செய்யும் தனம் எம்பெருமான்.
இந்த எம்பெருமானாகிற
தனம் நமக்கு நன்மையைக்
கொடுக்கக்கூடியதாக
இருக்கும்போது ஆபாசமான
உலகிலுள்ள தனத்துக்கு
ஏன் ஆசைப்பட வேண்டும்
என்ற எண்ணம் இவர்களுக்கு
உண்டாவதே இல்லை. ஆக, கண்டு
கேட்டு உற்று மோந்து
உண்டு உழலும் இந்த ஐங்கருவி
செல்லும் வழியே சென்று
அந்த ஐங்கருவிகள் திருப்தி
அடையவேண்டும் என்று எண்ணி,
அதற்காகப் பணத்தில் ஆசை
வைத்து, அக்ரமமான செயல்களில்
ஈடுபட்டுக் காலத்தைக்
கழிக்கும் மூட ஜனங்களின்
ஸம்பந்தம் எங்களுக்கு
வேண்டவே வேண்டாம் என்று
மகான்கள் சொல்லுகிறார்கள்.
இந்த மகான்களும் வேலைக்காரர்கள்தாம்;
எம்பெருமானிடத்தில்
வேலை செய்யும் வேலைக்காரர்கள்தாம்.
ஆனால் முதலில் கூறப்பட்டவர்கள்,
இந்த்ரியங்களுக்கு வேலைக்காரர்கள்.
அடுத்தவர்கள், வகுத்த
விஷயமான எம்பெருமானுக்கு
வேலைக்காரர்கள். உலகத்தில்
ஒரு யஜமானிடத்தில் உள்ளவர்கள்
அவனுக்கே வேலை செய்யவேண்டும்;
மற்றவனுக்கு வேலை செய்வது
உசிதமன்று. எந்த யஜமானன்
நமக்கு மாதந்தோறும்
சம்பளம் அளிக்கிறானோ
அவனுக்குத் தானே வேலை
செய்வது ந்யாயம் ஆகும்?
மற்றொருவனுக்குச் செய்வது
எப்படிப் பொருந்தும்?
அதுபோலவே, நமக்குப்
பிறந்தது முதல் கடைசி
வரையில் அந்த அந்தச்
சமயத்தில் எல்லாவிதமான
உபகாரங்களையும் செய்து
வருகிறான் எம்பெருமான்.
பிறக்கும்போதே
பசியால் வருந்துகிற நமக்கு
உணவாகத் தாயினிடத்தில்
பாலை எம்பெருமான் உண்டுபண்ணுகிறான்.
இப்படி எல்லாக் காலத்திலும்
அவன்தான் உதவுகிறான்.
இப்படி உபகரித்துவரும்
எம்பெருமானுக்கு வேலைக்காரனாக
இருப்பதை விட்டு, ஐங்கருவிகளுக்கு
வேலை செய்து ஏன் பொழுதைப்
போக்க வேண்டும்? ஆகையால்
ஸ்ரீமன்நாராயணனிடத்தில்
ஆவல் கொண்டு அடிமை செய்யும்
எங்களுக்கும் வீண்பொழுது
போக்கிக் கொண்டிருக்கும்
உங்களுக்கும் ஒருவித
ஸம்பந்தமும் இல்லை என்று
அறுதியிடுவதே உண்மை தத்வம்.
"கா
சிந்தா மம ஜீவநே யதி ஹரி
விச்வம்பரோ கீயதே நோ
சேதர்பக ஜீவனாய ஜ நநீஸ்தந்யம்
கதம் நிஸ்ஸரேத் | இத்யாலோச்ய
முஹு: முஹு: யதுபதே லக்ஷ்மிபதே
கேவலம் த்வத் பாதாம்
புஜஸேவனாய ஸததம் காலோ
மயா நீயதாம்" || என்பது நீதிச்லோகம்.
உலகத்தை பரிக்கிறவன்
பகவான். ஆக நம்மையும்
அவன் பரித்துக் கொண்டுள்ளான்.
கர்பத்தில் சிசுவாக இருக்கும்
ஸமயம் நாம் எவ்வாறு ஜீவத்தோம்.
பிறந்த பிறகுதான் நமக்காக
தாயின் ஸ்தனத்தில் பாலையும்
உண்டு பண்ணுகிறான். பிறகும்
நம் ஜீவதை அவன்தானே செய்கிறான்.
ஸ்ரீரங்கம் ப்ராகாரத்தில்
செப்பனிடும் காலம் ஒரு
தவளை பெருத்தும் மழமழ
வென்றும் எப்படி ஜீவித்திருந்தது.
இவ்வாறு பல அபூர்வ விஷயங்கள்
உள்ளன. ஆக அவனையே மஹான்
துதி செய்வார்கள்.
ஈசன்
தனது கையால் மேருமலையைத்
தூக்கினான். வெள்ளி மலையில்
உள்ளான். குபேரனுக்கு
ஸ்நேஹிதன் அப்படியிருக்க
கையில் கபாலத்தை வைத்துக்
கொண்டு பிக்ஷையை வாங்க
திரிகிறான். ஆதலால் தலையெழுத்துதான்
நன்கு இருக்கவேணும்.
"சொல்லி குறைவிலன் வேண்டித்தரல்லாம்
தரும் கோதிலான மணிவண்ணன்
மாமாயன் இருக்க அவனை
விட்டு புல்ன்களுக்கு
ஏன் வேலை செய்ய வேண்டும்"
என்று எண்ணுவர் மஹான்.
*****
|
|
|
|
|
|
|
|