தேஹ ஸம்பத்து
ஜீவராசிகளின்
எண்ணிக்கை எவ்வளவு என்று
யாராலும் சொல்ல முடியாது.
ஆகாயத்தில் நக்ஷத்திரங்களையும்,
ஆற்றின் மணலையும், எம்பெருமானின்
குணங்களையும், ஜீவர்களின்
தோஷங்களையும் எப்படி
எண்ண முடியாதோ அதுபோலத்தான்
ஜீவர்கள் எத்தனை பேர்
என்று எண்ண இயலாது. பரம
காருணிகனான ச்ரிய: பதி
நாராயணன், மெழுகில் ஒட்டிக்
கொண்டிருக்கும் தங்கப்
பொடிகள் போல், பிரளயகாலத்தில்
ப்ரகிருதியில் ஸம்பந்தித்திருக்கும்
ஜீவராசிகளுக்குத் தேகத்தைக்
கொடுத்துப் படைக்க ஆரம்பிக்கிறான்.
ஈச்வரன் பரம தயாளுவானபடியாலும்,
தானாகவே விஷமமான படைப்பைச்
செய்ய மாட்டான் ஆகையாலும்
அவரவர் செய்த பாவ புண்ணியங்களைக்
கணக்கிட்டுப் பார்த்து
அவற்றுக்குத் தக்கவாறு
உடலைக் கொடுக்கிறான்.
இதில் சிலர் புல் செடி
கொடியாகவும் பிறப்பார்கள்.
சிலர் பூச்சி புழுவாகவும்
பிறப்பர். மற்றவர் ஆடு
மாடு முதலிய திர்யக்காகவும்,
பறவைகளாகவும் ஜனிப்பர்.
இம்மாதிரியே மனிதர்களாகவும்
தேவர்களாகவும் உண்டாகின்றனர்.
புண்ணியத்தை
அநுசரித்து மனிதப் பிறவியிலும்
தேவப் பிறவியிலும் பிறப்பது
போல் பாவத்தை அநுசரித்துப்
புல் பூண்டாகவும் ஜனிக்கின்றனர்.
வாசிகை: பக்ஷிம்ருகதாம்
மாநஸைந்த்யஜாதிதாம்
| சரீரஜை: மர்மதோஷைர்
யாதி ஸ்தாவரதாம் நர: ||
என்று,
சரீரத்தால் ஏற்பட்ட பாவங்கள்
மூலமாக ஸ்தாவரமாகப் பிறக்கிறான்
என்று ஸ்ம்ருதி கூறுகிறது.
'நைராத்ம்யம் ஸ்தாவராணாம்
நஹி நிகமவித: ஸ்தாபயந்தி'
என்று ஸாராவளியில் வேதாந்த
தேசிகனும் கூறினார்.
இப்படிப்
புல், செடி முதலியவையாக
ஜீவன் ஜனிக்கிறான் என்பதில்
ஓர் அதிசயமும் இல்லை.
வஸ்திரம், கலசம் முதலியவையாகவும்
இவன் பிறக்கிறானே, இதுதான்
சந்தோஷப்படவேண்டிய
விஷயம். எவ்வளவோ மகத்தான
பாவங்கள் பண்ணினவன் சிறிதும்
மூச்சுக்காற்று விட முடியாத
நிலையில் உருவை எடுத்துக்
கொள்கிறானே, இதுதான்
வியக்கப்பட வேண்டிய விஷயம்.
நம் ராமாநுஜ ஸித்தாந்தத்தில்
ஒவ்வொரு வஸ்துவிலும்
ஜீவன் கர்மத்தை அநுசரித்து
உட்புகுந்து அந்த உடலைப்
பெற்றிருக்கிறான். இது
வேதாந்தங்களில் தேறின
பொருள். இதைத்தான் ஸ்ரீபாஷ்யகாரர்
பல இடங்களில் எடுத்துக்
காட்டியிருக்கிறார்.
நரகநாசனை
நாவில் கொண்ட அழையாத
மானிடர் பருகும் நீரும்
பாவம் செய்தனதாம் கொலே"
என்றார் பெரியாழ்வார்.
வஸ்த்ரங்களிலும் ஜீவன்
உள்ளான். சில பட்டு வஸ்த்ரம்
எம்பெருமானுக்கு சாத்தப்படுகிறது.
சில தாஸிகளுக்கு கொடுக்கப்
படுகின்றது. இதிலிருந்து
அறிந்து கொள்ளலாம்.
பகவானுக்கு சாத்தப்பட்டது
எவ்வளவோ புண்யம் செய்தது
என்றும் மற்றது பாவம்
செய்தது என்றும். பாகவதர்களின்
குக்ஷியில் சென்ற ப்ரஸாதத்துக்கும்
மற்றவன் சாப்பிட்ட அன்னத்துக்கும்
எவ்வளவு வித்யாஸம்.
"வண்டினமுரலும்
சோலை .... அணி திருவரங்கம்
என்னாது மிண்டர் பாய்ந்துண்ணும்
சோற்றை விலக்கி நாய்கிடுமின்
நீரே என்றார் தொண்டரடிப்
பொடியாழ்வார். இந்த
சோறு பாபம் செய்தபடியால்
இவர்கள் சாப்பிடுவதும்
நாய் சாப்பிடுவதும் ஸமம்
என்று தாத்பர்யம்.
பகவான்,
பாகவதர், மஹான் இவர்களுக்கு
அன்னமிட்டால் இடுபவர்களுக்கு
மாத்திரம் புண்யம் மேன்மை
என்பதில்லை. இடப்பட்ட
அன்னத்துக்கும் மேன்மை
இது. அடுத்த பிறவியில்
"பவநே ஷ்வஸ்த்வபி கீட
ஜன்மமே. மஹான்களில் வீட்டில்
புழுவாகப் பிறக்கக் கடவேன்"
என்று, ஆளவந்தார் ஸாதித்தபடி
உயர்ந்த ஜன்மத்தை அந்த
அன்னம் பெறும். இப்படி
மேன் மேல் உயர்ந்த பிறவையை
அடைந்துவந்தால் மனிதர்களாகவும்
தேவர்களாகவும் பிறக்க
வாய்ப்பு உண்டாகிறது.
இதனால் ஞான ஸம்பத்து
உண்டாகும். ஆக, தேஹ ஸம்பத்தின்
மூலம் ஞான ஸம்பத்து தேறும்.
மேல் நற்கதியைப் பெறலாம்.
ஒரு மஹான் வீட்டுக்கு
வந்தால், ஸ்தாவரங்கள்
ஸந்தோஷப்படுகின்றனவாம்.
புடலை பாகல் அவரை நினைக்கின்றதாம்.
அதிதி பூஜையில் இவரது
வயிற்றில் போவோம்.
அதன் மூலம் மேன் மேல்
நமக்கு க்ஷேமம் என்று.
புஷ்பங்களால் பெருமாளை
அர்ச்சித்தவனுக்கு மாத்திரம்
க்ஷேமம் என்பதில்லை.
அர்ச்சிக்கப்படும் புஷ்பமும்
க்ஷேமம் பெறுகிறது. பாதுகா
ஸஹஸ்ரத்தில் இதைக் காணலாம்.
"செங்கழி நீர் வாய் நெகிழந்து
ஆம்பல் வாய் கூம்பினகான்"
என்ற பாசுரத்தில் இதைத்
தெளியலாம். ஸாயம் ஆனதும்
ஏன் ஆம்பல் கூம்புகிறது?
ஐயோ என்னை கடவுளிடம்
அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தவில்லையே
என்ற கஷ்டத்தால். தாமரைப்பூ
ஏன் மலருகிறது தெரியுமா?
"நான் செவ்வையாக இருக்கும்போதே,
கடவுளிடம் என்னை ஸமர்ப்பிப்பாய்.
நல்ல கதியை நீ பெருவாய்.
நானும் பெருவேன் !" என்று
இவைகளிலும் ஜீவன் இருக்கிறபடியால்,
அதன் மூலம், இருவருக்கும்
நற்கதி உண்டாகும்.
எண்ணக்கண்ட
விரல்களால் இறைப்பொழுதும்
எண்ணுகிலாது போய் உண்ணக்கண்டத்தம்
ஊத்தை வாய்க்கு கவளம்
உந்துகின்றார்களே' என்று
ஆழ்வார் சொன்னார். மாலாகாரருக்கு,
அலங்காரம் செய்ததால்
கிடைத்த பலனைப்பார்க்கவும்.
வேத
வித்யா வ்ரதே ஸ்நாதே
ச்ரோத்ரியே ஸ்வமாகதே நந்தந்தி
ஓளஷதய ஸர்வா: யாஸ்யாம:
பரமாம்கதிம் யம் யம்
ஸ்ப்ருசதி பாணிப்யாம்
யம் யம் பச்யதி சஷுஷா ஸ்தாவராண்ய
பிமுச்யந்தே கிம் புன:
பாந்த வாஜனா:
அத்யயனம்
முதலிய நற்கார்யங்கள்
செய்தவன் வந்ததும் வீட்டுத்தோட்டத்தில்
உள்ள செடிகளெல்லாம் ஸந்தோஷமடைகின்றன.
இவர் மூலம் நாம் பரம கதியை
அடைவோம் என்று. மஹான்கள்
கண்ணால் பார்க்கப்பட்டவை
தொடப்பட்டவை எல்லாம்
பாபங்களிலிருந்து விடுபட்டு
வாழ்கின்றன.
அருகம்
புல் துளஸி முதலியவை
எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கப்
பட்டால் அவைகள் ஸம்ஸாரமாகிற
பாம்பின் விஷத்தையும்
போக்கடிக்கும் ஓளஷதியாக
மாறுகின்றன என்றார் ஸ்வாமி
தேசிகன்.
ஆக, இவ்வாறு
பகவான், பாகவதர்களுக்கு
உபயோகப்பட்ட பொருள்கள்
எல்லாம் அடுத்த பிறவியில்
மேன்மையைப் பெற்று க்ரமேண
உயர்ந்த கதியை அடைகின்றன,
என்பது ஸாரார்தம்.
இப்படி,
ஒவ்வொரு பிறவியிலும்,
இருந்து கொண்டிருக்கும்
இவன் ஏதோ ஒரு புண்ணியவிசேஷத்தால்,
மனிதப் பிறவியை அடைந்துவிடுகிறான்.
இது கிடைக்கப் பெறாத
பிறப்பு. 'துர்லபம் மாநுஷம்
ஜன்ம'. 'அரிது அரிது மானிடராய்ப்
பிறத்தல் அரிது' என்று,
ஆன்றோர் கூறுகிறார்கள்.
இந்த மானிடப் பிறவியில்
ஒவ்வொரு காரியத்தைச்
செய்வதற்குத் தகுந்தபடி
உடலை அமைத்துக் கொடுத்திருக்கிறான்
இறைவன். கண் காது மூக்கு
நாக்கு த்வக் முதலிய
ஐந்து ஞாநேந்திரியங்களையும்,
வாக்கு பாணி பாதம் பாயு
உபஸ்தம் என்ற ஐந்து கர்மேந்திரியங்களையும்
அமைத்திருக்கிறான். இந்தப்
பத்து விதமான இந்திரியங்களையும்,
எல்லாவற்றுக்கும் பொதுவான
மனத்தையும் கொண்டு ஸர்வ
ஸுகங்களையும் ஜீவன் இந்தப்
பிறவியில் அநுபவிக்கிறான்.
இப்படி ஈச்வரன் கொடுத்த
இந்திரியங்களோடு கூடிய
இந்த உடலைச் சரியான வழியில்
உபயோகப் படுத்தவேண்டும்.
நாக்கு என்ற கருவியை
எதற்கு கொடுத்திருக்கிறான்
என்றால் வஸ்துக்களை ருசிபார்த்து
அல்வா, லட்டு முதலியவற்றைச்
சாப்பிடவோ, கெட்ட வார்த்தைகளைச்
சொல்லவோ என நினைக்க
வேண்டாம். எம்பெருமானின்
குணங்களையும் அவன் திருநாமங்களையும்
பரக்கப் பேசுவதற்காகவுமே.
இம்மாதிரியே ஒவ்வொரு
கருவியையும் நல்வழியில்
செலுத்தச் செய்ய வேண்டும்.
'ஜிஹ்வே கீர்த்தய கேசவம்'
என்பதை இங்கு மறக்க வேண்டாம்.
புள்ளூரும்
பொன்மலையைக் காணாதார்
கண்ணென்றும் கண்ணல்ல
கண்டாமே, தொண்டர்க கினியானைக்
கேளாச் செவிகள் செவியல்ல
கேட்டாமே. அவன் பெருமை
பேசாதார் பேச்சென்றும்
பேச்சல்ல கேட்டாமே, துழாய்மார்வனை
ஆர்வத்தால் பாடாதார்
பாட்டென்றும் பாட்டல்ல
கேட்டாமே, சங்கமேந்தும்
கையானைக் கைதொழா கையல்ல
கண்டாமே, உள்ளாதார் உள்ளத்தை
உள்ளமாக் கொள்ளோமே. நினையாதார்
நெஞ்சு என்றும் நெஞ்சல்ல
கண்டாமே.
என்று பெரிய
திருமொழியில் சொன்னவையெல்லாம்
கண்டு, ஒவ்வொர் இந்திரியத்தையும்
நல்வழியில் போகச் செய்ய
வேண்டும்.
இதை அநுசரித்துப்
பெரியோர் பணிப்பது ஒன்று
உண்டு: விசித்ரா
தேஹஸம்பத்தி: ஈச்வராய
நிவேதிதும் | பூர்வ மேவ
க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்தபாதா
திஸம்யுதா || என்று,
ஈச்வரன்
பரமதயையினால் நமக்குக்
கொடுத்த உடலை அவனுக்கே
அர்ப்பணம் செய்து பிறப்பின்
ஸாபல்யத்தை அடைய வேண்டும்.
அவனுக்கு அர்ப்பணம் செய்வதாவது,
அவனது கைங்கரியத்தில்
ஈடுபடச் செய்வது: கைங்கரியம்
என்றால் அவனுக்கு உகப்பான
வேலையைச் செய்வது. எந்த
வேலையைச் செய்தால் எப்பெருமான்
நம்மிடத்தில் அதிக அன்பைக்
காட்டுவானோ அத்தகைய
வேலைகளைச் செய்வது. 'உனக்கே
நாம் ஆட்செய்வோம்' என்று
திருப்பாவையில் கோதைப்
பிராட்டி திருவாய் மலர்ந்தருளியபடி
நாம் நடந்து, எம்பெருமானுக்கு
உகப்பை உண்டுபண்ண வேண்டும்.
அப்போதுதான் நமது கிருஷிபலித்தது
என்று அவன் சந்தோஷப்படுவான்.
இப்படி
எம்பெருமானை உத்தேசித்துக்
கைங்கரியம் செய்யுமிடத்தில்,
எந்தக் கைங்கரியத்தைச்
செய்தால் பகவான் அதிக
உகப்பை அடைவான் என்று
பார்க்க வேண்டும். கைங்கரியங்கள்
பல விதங்களாக அன்றோ
இருக்கின்றன? மாலை கட்டுதல்,
விளக்கேற்றுதல், கோயில்
சுத்தி செய்தல், துதி
செய்தல், நமஸ்கரித்தல்,
ப்ரணாமங்கள் செய்தல்,
பூஜை செய்தல், வேத வேதாந்தங்களையும்
அவற்றின் அர்த்தங்களையும்
ஆராய்தல் முதலிய பல வகையில்
எதைச் செய்தால் பகவானுக்கு
அதிக அன்பு உண்டாகும்
என்று பார்ப்போம். எந்த
கைங்கர்யத்தைச் செய்தாலும்
பகவானுக்கு உகப்பு என்பது
உண்டு; அதில் சந்தேகமே
இல்லை. ஆயினும் அதில்
வாசி இருப்பது போல்
உகப்பிலும் வாசி உள்ளது.
இவ்விஷயத்தில் இதுதான்
உயர்ந்த கைங்கரியம் என்று
நம்மால் நிச்சயிக்க முடியாது.
நம் ஆசார்யர்கள் குசாக்ரபுத்திகளானபடியாலும்,
பகவானது அபிப்ராயத்தை
நேராகவும் ப்ரமாண மூலமாகவும்
ஆராய்ந்து பார்க்கும்
சக்தி உள்ளவர்களானபடியாலும்
அவர்கள் சொற்படி நாம்
பின்பற்ற வேண்டும். அதிலும்
ஸ்ரீராமாநுஜரும் ஸ்ரீதேசிகனும்
எந்த விஷயத்தை எடுத்துச்
சொல்லுகிறார்களோ அதில்
ஐயப்பாடு என்பது இல்லவே
இல்லை. அவர்கள் சொல்லும்
பேச்சு ஆணித்தரமானது;
அசைக்க முடியாத விஷயம்
அவர்கள் கூறுவது. ராமாநுஜ
சிஷ்யன், தேசிகசிஷ்யன்
நான் என்றுகூறிக்கொண்டே
அவர்கள் சொல்வதைப் பின்பற்றாமல்
இருப்பவர் எவ்வளவோ உற்ஸவங்களையும்
ததீயாராதனைகளையும் செய்து
வைத்தாலும் பயனற்றவராகவே
ஆவர். அவர்களைக் காட்டிலும்
நாம் புத்திசாலிகள் அல்லர்.
அவர்கள் சொல்வதை அறிந்து
கொள்வதற்கே சக்தி இல்லை
என்றால் அவர்களுக்கு
மேல் நம்மால் யாது சொல்ல
முடியும்?
ஸ்ரீபாஷ்யகாரர்
கடைசிக் காலத்தில் தம்
சீடர்களிடம் சில விஷயங்களைக்
கூறியுள்ளனர. "ஸ்ரீபாஷ்யத்தை
வாசிப்பது, தமிழ் மறையை
ஓதுவது, தேவாலயங்களில்
தினமும் ஆராதித்துக்
கைங்கரியம் செய்வது,
யது மலையில் வசிப்பது,
அர்த்தாநுஸந்தானத்தோடு
த்வயமந்த்ரத்தை உச்சரிப்பது,
சிறந்த பாகவதர்களிடத்தில்
அடிபணிந்து இவன் என்
பையன் என்று அவர்கள்
அபிமானத்தைப் பெறுவது
இவை முதலியவை எல்லா மங்களத்துக்கும்
காரணம்" என்றார். இதிலும்
முதல்முதலில் செய்ய வேண்டிய
கைங்கரியம் ஸ்ரீபாஷ்யத்தைத்
தத்தம் ஆசார்யர்களிடமிருந்து
காலக்ஷேபம் செய்து பிறருக்குச்
சொல்லிவைப்பது. இதில்
சக்தியற்றவனாக இருந்தால்
திருவாய் மொழி ஓத வேண்டும்.
இதிலிலும் சக்தியற்றவனாக
இருந்தால் அந்த அந்த
திவ்யதேசங்களிலுள்ள
எம்பெருமானுக்கு அமுதபடி
சாத்துவது. அதிலும் சக்தியற்றவனாக
இருந்தால் த்வயமந்த்ரத்தை
அர்த்தத்துடன் மனனம்
செய்வது என்ற ரீதியில்
அதிலும் ஒரு நியதியை
காட்டினார். இவற்றுக்கு
ஸங்க்ரஹமான ச்லோகத்தைப்
பெரியோர் கூறுவதுண்டு
:-
ஸ்ரீபாஷ்யம் த்ரவிடாகமப்ரவசநம்
ஸ்ரீஸ்தலேஷ்வந்வஹம் கைங்கர்யம்
யதுசைலநித்யவஸதிஸ் ஸார்த்தத்வயோச்சாரணம்
| யத்வா பாகவதாபிமாநவஸதி:
ச்ரேய: ஸதாம் இத்யலம் சிஷ்யாந்
ப்ராஹ யதீச்வர: பரமகாத்
விஷ்ணோ: பதம் சாஸ்வதம்
||
படித்வா ஸ்ரீபாஷ்யம்
ப்ரவசநமசக்தெள சடரிபோர் கிரி
ச்ரத்தா தத்தத்ப்ரபுவிரசிதஸ்தாநநிவஹே
| ப்ரபோ : ஸேவா யத்வா ப்ரபதநமநோரர்த்தமநநம் குடீம்
க்ருத்வா தஸ்மிந் யதுகிரிதடே
நித்யவஸதி: ||
இப்படி ஸ்ரீபாஷ்யகாரர்
சொன்ன விஷயத்தை ஸ்ரீஸ்வாமி
தேசிகன் தமது ரஹஸ்யத்ரயஸார
க்ரந்தத்தில் ஸ்ரீபாஷ்யகாரர்
அருளிச் செய்ததாகவே ஐந்து
கைங்கரியங்களைச் சுட்டிக்
காண்பித்திருக்கிறார்:-
1.
ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்து
ப்ரவர்த்திப்பித்தல். 2.
அதுக்கு யோக்யதை இல்லையாகில்
அருளிச்செயல் கேட்டு
ப்ரவர்த்திப்பித்தல். 3.
அதுக்கு யோக்யதை இல்லையாகில்
உகந்தருளின திவ்ய தேசங்களுக்கு
அமுதுபடி திருவிளக்கு
திருமாலைகளை உண்டாக்குதல். 4.
அதுக்கு யோக்யதை இல்லையாகில்
த்வயத்தினுடைய அர்த்தாநு
ஸந்தானம் பண்ணுதல். 5. அதுக்கு
யோக்யதை இல்லையாகில்
என்னுடையவன் என்று அபிமானிப்பான்
ஒரு ஸ்ரீவைஷ்ணவனுடைய
அபிமானத்திலே ஒதுங்கி
வர்த்தித்தல் செய்யலாம்.
இப்படி
ஸ்ரீபாஷ்யகாரர் சொன்னதையே
ஸ்ரீஸ்வாமி தேசிகன் பின்பற்றி
உரைத்து ஸ்ரீபாஷ்யத்தின்
பெருமையைப் பரக்கப் பேசினார்.
ஸ்ரீபாஷ்யாதிகாரி என்றாலே
ஒரு பெருமை உண்டு. வேதாந்தங்களில்
கூறியுள்ள மறைமுகமான
அர்த்தத்தை வெளியிட வந்தது
வ்யாஸ ஸுத்ரம். இந்த ஸூத்ரத்தின்
அர்த்தத்தை யதாவஸ்த்திதமாக
அறியும்பொருட்டு இதர
மதங்களை நிரஸிப்பதுடன்
பாஷ்யமிட்டார் ஸ்ரீபாஷ்யகாரர்.
அப்படிப் பட்ட மகிமை
பொருந்தியதும், 'ஸ்ரீ'
என்ற அடைமொழியுடன்கூடியதுமான
ராமாநுஜபாஷ்யத்தை வாசித்து
இதரர்களுக்குப் போதித்து
இருப்பவர் பெரிய மகான்.
'திரிம்ஸத்வாரம் ச்ராவித-சாரீரகபாஷ்ய
:' என்றபடி, முப்பது தடவை
காலக்ஷேபம் ஸாதித்தார்
ஸ்ரீஸ்வாமி தேசிகன் என்றால்,
அவருடைய பெருமை எவ்வளவு
என்று யோசித்துப் பாருங்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீபாஷ்யத்துக்கு
அதிகாரியாவதே துர்லபம்.
இப்பொழுது உள்ளவர்கள்
ஸ்ரீபாஷ்யத்துக்கு அதிகாரியாக
இருப்பவர்களிடத்தில்
அதிக - அரியாக (சத்துரு)
இருக்கிறார்கள். என்னே!
இப்படி எம்பெருமானுக்கு
எல்லா இந்திரியங்களைக்
கொண்டும் ஜ்ஞாந யஜ்ஞமாகிற
இந்த ஸ்ரீபாஷ்யத்தை வாசித்து
ப்ரவர்த்திப்பிக்கிற
கைங்கரியம் ஸர்வோத்க்ருஷ்டம்.
ஆகையால் இப்படிப்பட்ட
அதிகாரிகளை விசேஷமாக
ஸத்கரிப்பது எம்பெருமானுக்கு
மிக்க உகப்பைக் கொடுக்கும்.
எனவே
ஒவ்வொருவரும் வேதாந்தவிவரணரூபமான
ப்ரஹ்மஸூத்ரத்துக்கு
வியாக்கியானமான ஸ்ரீபாஷ்யத்தைக்
காலக்ஷேபம் செய்ய முயற்சி
செய்ய வேண்டும். லெளகிகர்களாக
இருந்தபோதிலும் இந்த
ஸ்ரீபாஷ்யத்தில் சொன்ன
அர்த்த விசேஷங்களை எளிய
முறையில் அறிந்துகொள்ள
முடியும். இது மிகவும்
கடினமான விஷயம் என்று
ஒதுங்கிப் போகவேண்டாம்.
பிரபல பண்டிதர்களும்,
எளிய ரீதியில் எடுத்துரைக்க
வல்லமை பெற்றவர்களுமான
மகான்களிடத்தில் சென்று
அடிபணிந்து இதன் சுருக்கத்தைக்
காலக்ஷேபமூலமாகத் தெரிந்து
கொள்ளலாம். அப்படித்
தெரிந்த வித்வான்களை
முதல் முதலில் ஸத்கரித்து
எப்பெருமானது உகப்பையும்
பெறலாம். இதற்காகத்தான்
ஸர்வேச்வரன் நமக்குக்
கரணகளேபரங்களைக் கொடுத்து
உதவி புரிந்திருக்கிறான்,
மேலும்
ஒரு விஷயம் கேண்மின்
- யஜ்ஞம் யாகம் என்று சொல்லப்படும்
வேள்வி மூன்று வகைப்படும்.
யாகம் என்பது தேவதையை
ஆராதிக்கும் வேலை, கைங்கரியம்.
ஸ்ரீமந்நாராயணன் நமக்கு
அபீஷ்ட தெய்வமானபடியால்
அவனை ஆராதிப்பதுதான்
யாகம். 'யஜ தேவபூஜாயாம்'
என்று சொல்கிறபடி, பகவானுக்கு
அர்க்ய பாத்யங்களை ஸமர்ப்பித்து
நிவேதனம் செய்விப்பது
முதலியவை யாகம் என்று
ஏற்படுகிறது. இதற்கு
த்ரவ்யமய யஜ்ஞம் என்று
பெயர். இது ஒரு யஜ்ஞம்.
வாக்யஜ்ஞம் என்பது மற்றொன்று.
வேதம் ஓதுதல், திருவாய்மொழி
ஓதுதல் முதலியவை இந்த
வகையில் சேர்ந்தவை. இதனாலேயும்
பகவானுக்குப் பிரீதி
உண்டாகும். 'வாக்யஜ்ஞேநார்ச்சிதோ
தேவ: ப்ரீயதாம் மே ஜநார்தந:'
என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.
ஜ்ஞாந யஜ்ஞம் என்பது
மற்றொன்று. வேதார்த்தங்களையும்
அவற்றின் விவரணமான ஸூத்ரபாஷ்யார்த்தங்களையும்
விசாரித்து நன்கறிவது
இது. இதனால் பகவானுக்கு
அளவில்லாத பிரீதி. இதைத்தான்
பாஷ்யத்தை வாசித்து ப்ரவர்த்திப்பித்தல்
என்றார். வேதம், திருவாய்மொழி
ஓதுவது என்ற வாக் யஜ்ஞத்தைக்
காட்டிலும், த்ரவ்ய யஜ்ஞத்தைக்
காட்டிலும் மிகச் சிறந்ததாக
இதை ஆசார்யர்கள் கருதுகிறார்கள்.
'ஸ்ரேயாந் த்ரவ்யமயாத்
யஜ்ஞாத் ஜ்ஞானயஜ்ஞ: ப்ரகீர்த்தித
:' என்று பகவானும் சொன்னார்,
ஆகவே,
எல்லாக்கைங்கரியங்களைக்காட்டிலும்
ஜ்ஞாநயஜ்ஞமாகிற வேத வேதாந்த
ஸ்ரீபாஷ்யாதி க்ரந்தங்களின்
விசேஷ அர்த்த ஜ்ஞாநத்தைச்
சம்பாதிப்பதற்கு பகவான்
கரணகளேபரம் முதலிய கருவிகளை
நமக்கு கொடுத்து உபகரிக்கிறான்.
இதைத்தான், 'விசித்ரா
தேஹஸம்பத்தி: ஈஸ்வராய
நிவேதிதும் | பூர்வமேவ
க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்தபாதாதி
ஸம்யுதா ||' என்று சொல்லியிருக்கிறது.
பணத்தை
ஸம்பத் என்பது வழக்கம்.
அது போல் மஸா புண்யம்
செய்து தேஹ ஸம்பத்தை
அடைந்துள்ளோம். கடலில்
செல்லும் ஓடம் நடுவில்
உடைவதற்கு முன் அக்கரை
செல்ல வேண்டும். அதுபோல
இந்த சரீரம் உடைவதற்கு
முன்பே ஸம்ஸார ஸமுத்ரத்தின்
கரையை தாண்டி அடைய வேண்டும.
அதற்காக உடைவதற்கு முன்பே
அதற்குத் தகுந்த உபாயத்தை
அநுஷ்டிக்கக் கடவன் என்றது
சாஸ்த்ரம்.
*****
|
|
|
|
|
|
|
|