பிறந்த இடத்தையே
அடையும்
உலகத்தில்
எத்தனையோ ஸித்தாந்தங்கள்
இருக்கின்றன. இந்த ஸித்தாந்தங்களை
ஆதரிக்கும் ஜனங்களும்
ஆங்காங்கு உலாவுகின்றனர்.
சார்வாக மதம் புத்த மதம்
முதலிய மதங்களை ஆதரிக்கும்
ஜனங்கள் உலகத்தில் இருந்த
போதிலும், வேதாந்தி
மதம்தான் அதிகமாகப் பிரசாரத்தில்
இருந்து வருகிறது. அந்த
ஸித்தாந்திகளைத்தான்
அதிகமாக நாம் காண்கிறோம்.
உபநிஷத்தில் சொல்லக்கூடிய
அர்த்தங்களைப் பெரும்பாலும்
இவர்கள் இளைந்து கூறுகிறபடியால்,
இவர்களின் ஸித்தாந்தம்
ஓங்கியிருக்கிறது. இவர்களின்
பிரசாரமும் நிலைத்திருக்கிறது.
இந்த
வேதாந்த ஸித்தாந்திகள்
மூவர் - விசிஷ்டாத்வைத
ஸித்தாந்தி, அத்வைத ஸித்தாந்தி,
த்வைத ஸித்தாந்தி என்று.
இவர்களுக்குள் சிற்சில
விஷயங்களில் அபிப்பிராய
பேதம் இருந்தபோதிலும்,
உபநிஷத் என்ற வேதாந்த
பாகத்துக்குப் பொருள்
கூறுவதில் ஈடுபாடு இருக்கிறபடியாலும்,
பரப்ரஹ்மத்தை இசைந்து
அதை அடைவதில் அபிப்ராயம்
இருக்கிறபடியாலும் இவர்களை
வேதாந்திகள் என்று சொல்வது
வழக்கம். விசிஷ்டாத்வைதிகளிலேயே
எத்தனையோ அபிப்பிராய
பேதங்கள் உள்ளன. அதுபோலவே,
வேதாந்திகளிலும் அபிப்பிராய
பேதங்கள் இருக்கலாம்
அல்லவா?
எம்பெருமானின்
ஸ்வரூப ரூப குண விபவ ஐச்வர்யாதிகளை
வேதாந்தங்களில் கூறியபடி
யதாவஸ்திதமாக அங்கீகரித்துள்ள
எம்பெருமானாரின் மதத்தைச்
சேர்ந்தவர்கள் விசிஷ்டாத்வைதிகளான
நாம். நம் பாஷ்யகாரரான
யதிராஜர் கூறியிருக்கும்
பொருளெல்லாம் உலக அநுபவத்தை
அநுஸரித்தவையே. லோகாநுபவத்துக்கு
முரணாக ஒரு பொருளையும்
அவர் உரைக்கமாட்டார்.
வேதங்களிலும் உலக விவகாரங்களை
அநுஸரித்தே பொருள்கள்
கூறப்பெற்றிருக்கின்றன.
நன்கு ஆழ்ந்து ஆலோசித்துப்
பார்த்தால், உலக விவகாரத்துக்கு
எதிராக வேதங்களில் எந்தப்
பொருளும் கிடையாது என்பது
தேர்ந்து நிற்கும். நம்
பாஷ்யகாரரும் அப்படியே
கூறுவது இயல்பு.
இதற்கு
உதாரணமாக ஒரு விஷயத்தை
எடுத்துக் காட்டுகிறோம்.
எந்தப் பொருளிலிருந்து
எந்த வஸ்து உண்டாகிறதோ,
உண்டான அந்த வஸ்து, தனக்குக்
காரணமான அந்தப் பொருளையே
காலாந்தரத்தில் அடைந்துவிடுகிறது.
அதாவது காரணப் பொருளிலே
காரியப் பொருள் லயித்துவிடுகிறது.
மரக்கட்டையிலிருந்து
உண்டாகும் நாற்காலி,
பலகை, மணை முதலியவை காரியங்களாக
இருக்கும்போது ஒருவிதத்
தன்மையைப் பெறுகின்றன.
கடைசியில், காலாந்தரத்தில்
அவை அழியும்போது மரக்கட்டையாகவே
ஆகின்றன. தங்கத்தினால்
செய்யப்பெறும் வளை, மோதிரம்,
மற்ற வகைகளான நகைகள்
கடைசியில் எப்படி ஆகின்றன
என்பதை சொல்ல வேண்டுமா?
மண் கட்டியிலிருந்து
உண்டாகும் கலசம் அகல்
முதலிய பொருள்கள் அழியும்
காலத்தில் மண்ணில் லயிக்கின்றன.
இதை நம் அநுபவத்தில்
பார்த்துத்தான் இருக்கிறோம்.
ஆகையால் எந்த பொருளும்
தான் அழியும் காலத்தில்
தன் காரணமான மூலப்பொருளில்
தன் காரியத்தன்மைகளை
விட்டு லயித்து விடுகிறது;
எனவே தான் பிறந்த இடத்தையே
மறுபடியும் அடைந்துவிடுகிறது.
வேதாந்தங்களில்
மூலப்ரக்ருதி என்ற ஒரு
காரண பொருள் உண்டு. அது
மஹத் அஹங்காரம் இந்திரயங்கள்
பஞ்ச தன்மாத்ரைகள் பஞ்ச
பூதங்கள் என்ற ரீதியில்
மாறுதலை அடைகிறது. அதாவது
ப்ரக்ருதியிலிருந்து
மஹத் என்ற தத்துவமும்,
மஹத்திலிருந்து அஹங்காரம்
என்ற தத்துவமும், அந்த
அஹங்காரம் மூன்று விதமாகப்
பிரிந்து அதில் ஒன்று
பதினொரு இநதிரியங்களாகவும்,
மற்றொன்று சப்த தன்மாத்ரையாகவும்
மாறுகின்றன. இந்த தன்
மாத்ரை ஆகாயமாகவும்,
அந்த ஆகாயம் ஸ்பர்ச தன்மாத்ரையாகவும்,
அது வாயுவாகவும் வாயு
ரூபதன்மாத்ரையாகவும்,
அது தேஜஸ்ஸாகவும், அதுவும்
ரஸ தன்மாத்ரையாகவும்,
அதுவும் ஜலமாகவும், அதவும்
கந்த தன்மாத்ரையாகவும்,
அதவும் ப்ருதிவியாகவும்
மாறுதலை அடைகின்றன. இப்படி
மூலப்ரக்ருதி, எல்லா
வஸ்துக்களுக்கும் காரணமாக
இருக்கிறது. இப்படி உண்டான
தத்துவங்களிலிருந்து
உலகம் உண்டு பண்ணப் பெறுகிறது.
இம்மாதிரியே
ச்ருஷ்டிக்ரமத்தில்
மதங்களில் பேதங்கள் பலவகை
இருக்கலாம். நம் கண்ணுக்குப்
புலப்படும் ஒவ்வோர்
உடலிலும், முன்கூறியபடி
இருபத்துநான்கு தத்துவங்கள்
அடங்கியுள்ளன. இதற்கு
லயம் வரும் காலத்தில்
எப்படி உண்டாயிற்றோ
அப்படியே கிரமமாக லயித்துவிடுகிறது.
அதாவது அது அது தான் பிறந்த
இடத்தை அடைந்து மூலப்ருக்ருதியாகவே
நிற்கிறது. இந்த எல்லாப்
பொருளிலும் எம்பெருமான்
ஸ்வரூபத்தினால் பரவியிருக்கிறபடியால்
அவன் பிரதானனாக இருந்து
காரியங்களை உண்டு பண்ணுகிறான்.
ஆகையால் எல்லாவற்றுக்கும்
அவன்தான் மூலக் காரணம்.
அந்த அந்த பொருள்கைளை
உடலாக வைத்துக் கொண்டு
மாறுதலை அடைந்து தானே
உலகமாக இருக்கிறான்.
பிரளய காலத்தில் அந்த
அந்த தன்மைகளை விட்டு
மூலக்பொருளாக நிற்கிறான்.
இப்படி உபநிஷத்துக்களில்
கூறப்பெற்றிருக்கும்
விஷயம் உலக அநுபவத்தை
எவ்வாறு ஒத்திருக்கிறது
என்பதை சொல்லாமலே உணர்ந்துகொள்ளலாம்
அல்லவா?
உலக அநுபவத்துக்கும்
வேதாந்தங்களில் சொல்லப்பெறும்
விஷயங்களுக்கும் ஒற்றுமை
இருப்பதற்கு இது ஓர்
உதாரணம் ஆயிற்று. இவ்வாறே
பல விஷயங்களில் ஒற்றுமை
இருப்பதை மற்றொரு சமயத்தில்
எடுத்துக்காட்டுகிறோம்.
ஸ்ரீபாஷ்யகாரர் வேதங்களுக்கும்
உலக விவகாரத்துக்கும்
ஒற்றுமையில்லாமையை பேசமாட்டார்
என்பதைத்தான் நாம் உணர
வேண்டும்.
ஒவ்வொன்றும்
தான் பிறந்த இடத்தைனே
அடையும் என்பதைப்பற்றி
நம் தூப்புல் குல மணியான
ஸ்ரீவேதாந்த தேசிகர்
அதி ரஸமாகவும் சமத்காரமாகவும்
ஒரு விஷயத்தில் கூறியிருப்பதை
நாம் நன்கு அறிந்து ரஸிக்க
வேண்டும். முதலாழ்வார்கள்
மூன்று பேர்; பொய்கைமுனி
பூதத்தார் பேயாழ்வார்
அவர்கள். இந்த திவ்ய ஸூரிகள்
திருக்கோவலூரில் வந்து
சேர்ந்து சிறு இடைகழியில்
இருட்டில், இடியும் மழையும்
தாங்க முடியாமல் தங்கி,
அங்கு எம்பெருமானை ப்ரத்தியக்ஷமாக
கண்டு, மூன்று திருவந்தாதிகள்
பாடினார்கள். இம்மூன்றும்
கங்காப் பிரவாகம் போல்
அமைந்துள்ளன.
கங்கை
எம்பெருமானின் திருவடியிலிருந்து
உண்டாயிற்று என்பதை நாம்
தெரிந்து கொண்டிருக்கிறோம்;
அவ்வெம்பெருமானின் திருவடியிலிருந்து
உண்டான கங்கை மூன்று
பிரிவாக வெள்ளமிட்டது.
தேவ லோகம், மனுஷ்ய லோகம்,
பாதாள லோகம் என்ற மூன்று
இடங்களுக்கும் மூன்று
பிரிவை அடைந்த கங்கை
சென்றது. இப்படி பிரிந்த
கங்கைதான் பொய்கையாழ்வார்,
பூதத்தாழ்வார், பேயாழ்வார்
என்ற மூன்று ஆழ்வார்களின்
மூன்று திருவந்தாதிகளாக
மாறுதலை அடைந்தது. முன்பு
கங்கையாக இருந்த பொழுது
எம்பெருமானின் திருவடியிலிருந்து
உண்டாயிற்று அல்லவா?
இப்படி அந்த கங்கை திருவந்தாதிகளாக
மாறியபிறகு அதே திருவடியை
அடைந்துவிட்டது. பிறந்த
இடத்தையே மறுபடியும்
அது அடைந்துவிட்டது.
அதாவது மூன்று திருவந்தாதிகளும்
எம்பெருமானின் திருவடிகளை
சொல்வதற்காகவே வந்தன.
கங்கை மூன்று வெள்ளமிட்டு
தோன்றிற்று அல்லவா?
அப்படி தோன்றிய வெள்ளங்கள்
போல் மூன்று திருவந்தாதிகள்
தோன்றின. எம்பெருமானின்
திருவடிகளையே அவை போற்றுகின்றன.
இது உண்மை. இந்த அர்த்தத்தையே
ஸ்ரீஸ்வாமி தேசிகன் சமத்காரமாக
கூறினார். இதனால் உபநிஷத்துக்களிலும்
உலக அநுபவத்திலும் ஏற்பட்ட
'பிறந்த இடத்தையே அடையும்'
என்னும் நீதியை நன்கு
விளக்கிக் காட்டினார்.
இதுதான் தூப்புல் குலமணியின்
ஸாமர்த்திய விசேஷம்.
ஸ்ரீஸ்வாமியின் தேஹளீச
ஸ்துதியிலுள்ள அழகிய
ஒரு ச்லோகத்தை கண்டு
களியுங்கள். அந்த ச்லோகம்
இதோ -
ஸ்வச்சந்த விக்ர
மஸமுந்ந மிதாத முஷ்மாத் ஸ்ரோதஸ்த்ரயம்
யதபவத் தவ பாதபத்மாத்
| வேதாள - பூத - ஸரஸாமபதிச்ய
வாசம் ப்ராயேண தத்ப்ரஸவ
பூமிமவாப பூய:||
இம்மாதிரி
வேதாந்தங்களிலும் லோகாநுபவத்திலும்
உள்ள அர்த்தவிசேஷங்களை
அழகிய உதாரணத்துடன் அழகிய
ரீதியில் ரஸகனமாக எல்லோரும்
அறியும் வகையில் எடுத்துக்
காட்டுவது ஸ்ரீஸ்வாமி
தேசிகனுக்கே உரியது.
இப்படி பற்பல விஷயங்கள்
உள்ளன.
*****
|