மார்வம் என்பதோர்
கோயில்
ச்ரிய:பதியான
ஸர்வேச்வரன் ஐந்து நிலைகளை
அடைந்திருக்கிறான். பரம்
என்ற நிலையையும், வியூகம்
என்ற நிலையையும், விபவம்
என்ற நிலையையும், அர்ச்சை
என்ற நிலையையும், அந்தர்யாமித்வம்
என்ற நிலையையும் அடைந்து,
தன்னை அடைந்தவர்களுக்கு
அந்த அந்த அநுபவங்களைக்
கொடுத்துச் சந்தோஷிப்பிக்கிறான்.
அவனை அண்டினவர்களுக்காகவே
இப்படிப் பல ப்ரகாரங்களைப்
பெற்று விளங்குகிறான்.
'வரத ஸகலமேதத் ஸம்ச்ரிதார்த்தம்
சகர்த்த' என்று ஆன்றோர்
பணிப்பர்.
வைகுண்டலோகத்தில்
அழகிய அப்ராக்ருதத் திருமேனியைப்
பெற்றுக்கொண்டு மகாலக்ஷ்மியுடன்
பக்தர்கள், பாகவதர்கள்
அனைவரும் வணங்கும் வகையில்
ஸேவை ஸாதிக்கிறான். இந்த
நிலைக்குத்தான் 'பரம்'
என்று பெயர். இது அங்குள்ள
முக்தர்களாலும் நித்யஸுரிகளாலுமே
அநுபவிக்கப் பெறும்.
ப்ராக்ருத லோகமான பூலோக
ஸ்வர்க்க லோகாதிகளில்
உள்ளவர்களால் ஒருகாலும்
அநுபவிக்க முடியாது.
அங்கே சென்று அநுபவிக்கக்
கூடியதானபடியால் இங்குள்ளவர்கள்களுக்கு
அது துர்லபம். பெரும்
தாகம் உள்ளவன் தண்ணீரைக்கண்டு
குடித்துத் தாகத்தை ஆற்ற
வேண்டும் என்ற எண்ணத்துடன்
இருப்பவன். அருகில் தண்ணீர்
கிடைக்காமல் அலைந்து
கொண்டிருக்கும்பொது,
'ஆவரண ஜலம் என்று ஒரு நீர்
உண்டு; அதைப் பருகு' என்று
சொன்னால் அவன் அதை எப்படி
அடையாமல் வருந்துவானோ
அது போலவே பகவானிடம்
'ஒரு நாள் காண வாராயே' என்று
கதறிக் கொண்டிருப்பவனுக்கு
வைகுண்டலோகத்தில் திவ்ய
மங்கள விக்ரகத்தோடு
ஸேவை ஸாதிக்கிறான் என்று
உபதேசித்தால் அதைக் காண
முடியாமல் இவனும் வருந்துவான்.
பரரூபம்
வைகுண்டலோகத்தில் இருக்கிறபடியால்
அது அதிதூரத்தில் உள்ளது.
வியூகம் என்ற ரூபம் அதிதூரத்தில்
இல்லாவிட்டாலும் அண்டத்துக்குள்ளேயே
இருந்தும் பாற்கடல் போல்
அடைய முடியாதது. கேட்டறியலாமே
தவிரக் கண்டறிய முடியாதது.
விபவம் என்ற நிலை ராமகிருஷ்ணாதி
அவதாரங்களைச் சொல்லும்,
இந்த ரூபம் பூமியிலேயே
அவதரித்து ஸஞ்சரித்தது.
ஆனாலும் அந்தக் காலத்தில்
அநுபவிக்கலாமே தவிரப்
பிற்காலத்தவர்களால்
அநுபவிக்க முடியாது.
ராமாவதாரம் த்ரேதாயுகத்தில்
நடைபெற்று அப்பொழுதே
முடிந்துவிட்டது. அந்த
ஸ்ரீராமனைத் துவாபரயுகத்தில்
உள்ளவர்கள் வணங்கி வழிபட
வேண்டுமென்றால் முடியுமா?
துவாபர யுகத்தில் அவதரித்த
ஸ்ரீகிருஷ்ணனைக் கலி
யுகத்தில் உள்ளவர்களால்தான்
வணங்க முடியுமா? நம்மாழ்வார்
ஸ்ரீகிருஷ்ணனை நேரில்
கண்டு அநுபவிக்க நினைத்தும்
முடியாமல் எவ்வளவோ தவித்தார்
என்பது அனைவருக்கும்
தெரிந்ததே. "பிறந்தவாறும்
வளர்ந்தவாறும் பெரிய
பாரதம் கைசெய்து .. உன்னை
என்றுகொல் கூடுவதே?"
என்று தம் மனோரதம் பூர்த்தி
அடையாமல் அழுது அழுது
மோகத்தையும் அடைந்து
பரிதவித்தார் அல்லவா?
ஆகையால் பின்னுள்ளார்க்கு
வணங்க முடியாத ரூபம்
அது. பெருக்காறு போலே
உள்ளது அந்த நிலை. அதிலே
தேங்கின மடுக்கள் போலிருக்கிறது
அர்ச்சாவதாரம். இந்த
அவதாரம் கோயில் கொண்டிருக்கிறபடியால்
எல்லாராலேயும் சுலபமாக
வணங்கும்படியாக அமைந்திருக்கிறது.
திவ்யதேசங்களிலும் க்ராமங்களிலும்
திருக்கோயில் கொண்டு
எம்பெருமான் திருமேனியை
எடுத்து நிலைநின்றிருப்பதனால்
அனைவராலும் சுலபமாக வணங்கப்படும்
நிலையானபடியால் அந்த
அவதாரம் ஆறுகளிலே தேங்கியுள்ள
ஜலம் போல் ஆகிறது.
திவ்யதேசங்களில்
திருக்கோயில்களில்
எழுந்தருளியிருக்கும்
எம்பெருமானை ஸேவிப்பதற்கு
வெளியூரில் உள்ளவன் அங்கே
செல்ல வேண்டும். அதே திவ்யதேசத்தில்
வசிப்பவன் தன் இல்லத்தைவிட்டுக்
கோயில் இருக்குமிடம்
செல்ல வேண்டும். அவ்வளவு
சிரமத்தையும் சகிக்காமல்
தன் இடத்திலேயே எம்பெருமான்
எழுந்தருளியிருந்தால்
சுலபமாக ஸேவித்துக் கொள்ளலாம்
அல்லவா? பெருந்தாகம்
உள்ளவன், 'ஆற்றிலே தண்ணீர்
தேங்கியிருக்கிறது' என்று
உபதேசித்தால் இதைக் கேட்டுச்
சந்தோஷம் அடைவான்; ஆனாலும்
அவனுக்கு அங்குச் செல்ல
வேண்டிய சிரமம் உண்டு.
வீட்டுக்குள்ளேயே அந்த
நீர் இருக்கிறதென்றால்
மிக்க மகிழ்ச்சி அடைவான்.
அது போல் கோயில் இருக்குமிடம்
செல்லாமல் தன் ஹ்ருதயத்திலேயே
எம்பெருமான் இருக்கிறார்
என்றால் மகிழ்ச்சிக்கு
அளவே இராது. பூமியிலுள்ள
ஜலத்தை வெட்டி எடுத்துக்கொள்ள
வேண்டும். அந்த ஒரு சிரமம்தான்.
அது போல் ஹ்ருதயத்திலுள்ள
பகவானைச் சிரமப்பட்டுப்
பார்க்க வேண்டியது ஒன்று
உண்டு. இப்படி எம்பெருமானுக்கு
ஐந்து நிலைகள்.
இதைத்தான்
ஆசார்யர்கள் அழகிய உதாரணத்தோடு
காட்டியுள்ளார்கள், "பூகத
ஜலம் போலே அந்தர்யாமித்வம்;
ஆவரண ஜலம் போலே பரத்துவம்;
பாற்கடல் போலே வ்யூஹம்;
பெருக்காறு போலே விபவங்கள்;
அதிலே தேங்கின மடுக்கள்
போலே 'அர்ச்சாவதாரம்'
என்று. இந்த ஐந்து நிலைகளில்
அந்தர்யாமித்வம் என்ற
நிலையை மனத்தில் வைத்துக்கொண்டுதான்
'மார்வம் என்பதோர் கோயில்'
என்ற தலைப்பை குறிப்பிட்டோம்.
இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே
பெரியாழ்வார் பாசுரம்
நினைவிற்கு வரலாம் -
சோர்வினாற்பொருள்வைத்ததுண்டாகிற்சொல்லு
சொல்லென்று சுற்றுமிருந்து ஆர்வினவிலும்
வாய்திறவாதே அந்தகால
மடைவதன் முன்னம் மார்வ
மென்பதோர் கோயிலமைத்து
மாதவனென்னுந் தெய்வத்தை
நாட்டி ஆர்வமென்பதோர்
பூவிட வல்லார்க் கரவதண்டித்தி
லுய்யலு மாமே. (பெரியாழ்வார்
திருமொழி 4-3)
உலகத்தில்
மனித உடல் பெற்று ஒருவன்
இஷ்டமான ஸ்நேகிதர்களையும்
பெண் பிள்ளை, பெண்டாட்டி
மற்றுமுள்ள பந்துக்களையும்
பெற்றுப் பணத்தையும்
சேமித்துச் சுகத்துடன்
வாழ்கிறான். எவ்வளவோ
இன்பங்களை அநுபவித்தபோதிலும்
இவனுக்குக் கடைசிக் காலம்
(மரணம்) என்பது ஒன்று உண்டே;
அது வரும் சமயத்தில்
வாய் திறந்து பேச முடியாமல்
தவிப்பான். அந்தச் சமயத்தில்
இவனுடைய நண்பர்களும்,
மனைவி, புத்திரன், மகள்
முதலிய பந்துக்களும்
இவனைப் பார்ப்பார்கள்.
அருகில் வந்து, 'ஐயோ! இவனுக்கு
இந்தத் தசை வந்துவிட்டதே!'
என்று சிறிதுகூட மனத்தில்
நினைக்கமாட்டார்கள்.
'பின் என்ன நினைப்பார்கள்
அவர்கள்?' என்றால், 'பணம்
எங்கு வைத்திருக்கிறான்?
எவ்வளவு சம்பாதித்திருப்பான்?
நமக்கு எவ்வளவு அதில்
கிடைக்கும்? எல்லாத்
தொகையையும் நாமே பெற்று
விடலாமா?' என்றே எண்ணுவர்.
இப்படி எண்ணுவது இந்தச்
சமயம் தகுமா தகாதா என்று
யோசிக்காமல் இருப்பது
மாத்திரமின்றி இவனிடம்
வந்து கேட்கவும் ஆரம்பித்துவிடுவார்கள்.
"நீ யார்க்கும் தெரியாத
வகையில் எவ்வளவு பணம்
வைத்திருக்கிறாய்? எங்கு
வைத்திருக்கிறாய்? பூமியில்
புதைத்து வைத்திருக்கிறாயா?
யாரிடமாவது கடனாகக் கொடுத்திருக்கிறாயா?
வங்கியில் போட்டு வைத்திருக்கிறாயா?
சீக்கிரம் சொல் சொல்"
என்று ஒரு முறைக்கு ஒன்பது
முறை கேட்பார்கள். அவர்கள்
கேட்பதுதான் மிச்சமாகும்.
இவனோ வாயைத் திறக்க
முடியாமல் தவித்துக்
கொண்டிருப்பான். இப்படிக்
கடைசிக் காலம் ஏற்படும்.
இதைத்தான் முகுந்த மாலையில்
"கபவாத பித்தை: கண்டா வரோதன
விதைன" என்று சொன்னார்.
"கபம் வாதம் பித்தம்" என்றால்
மனைவி புதல்வன் மகள்
முதலியவர்கள். ஓரு சமயம்
இந்த கிழவன் நான் பணம்
வைக்க வில்லை. இந்த நபருக்கு
10 ஆயிரம், அந்த நபருக்கு
10 ஆயிரம் கடன் கொடுக்க
வேண்டும் என்று சொன்னால்
'இது புத்தி ஸ்வாதீனமில்லாமல்
உளருகிறது என்பர். ஐயோ'.
இவன் எவ்வளவு பணத்தைச்
சம்பாதித்தால்தான் என்ன?
எத்தனையோ பந்துக்களையும்
நண்பர்களையும் அடைந்தால்தான்
என்ன? இவனுடன் பணமோ பந்துக்களோ
உடன் வரப்பொவதில்லை.
இவன் செய்த புண்ணியம்,
பாவம் என்ற இரண்டுதாம்
உடன் வரும். ஆகையால் இவன்
பாவம் செய்திருந்தால்
அதற்குத் தகுந்தபடி யமயாதனைகள்
பல நேரிடும். புண்ணியம்
செய்திருந்தால் நல்ல
உலகம் கிடைக்கும். எனவே
யமயாதனைக்குப் பயந்து
பாவங்கள் அனைத்தும் தீர
எம்பெருமானை ஹ்ருதயத்தில்
நன்கு வைத்துப் பூஜித்தல்
வேண்டும். இந்தக் கருத்தை
ஆழ்வார் இந்தப் பாசுரத்தால்
வெளிப்படுத்தினார்.
திவ்யதேசங்களிலும்
க்ராமங்களிலுமுள்ள கோயில்
எல்லாருக்கும் பொதுவாக
இருக்கும். எல்லாரும்
ஒன்று சேர்ந்து அங்கே
சென்று பூஜிக்கலாம்,
ஸேவிக்கலாம், அங்குச்
செல்லக்கூடாத ஸேவார்த்திகள்
அங்குச் செல்வதால் தோஷங்கள்
ஏற்படும் கோயிலுக்கு.
பூஜிப்பவர்களில் சிலர்
ஸ்நானம் அநுஷ்டானம் முதலியவற்றை
நன்கு செய்து, பிறகு பூஜிக்கிறார்கள்
என்பதில்லை. ஏதோ பணத்தை
முன்னிட்டு ஒரு தொழில்
என்று எண்ணி நடத்துவதால்,
ஈச்வரனுக்கு அங்கு அதிக
ஸாந்நித்யம் இருக்கிறது
என்று சொல்லவும் முடியாது.
அர்ச்சகர்களுடைய மாகாத்மியத்தாலும்
அவன் செய்யும் பூஜாவிசேஷத்தின்
பலத்தாலுமே பகவானுக்கு
ஸாந்நித்யம் அதிகம்.
'அர்ச்சகஸ்ய ச மாஹாத்ம்யாத்
அர்ச்சநாயாம் விசேஷத:ச
ஸாந்நித்யம் அதிகம் ப்ரோக்தம்'
என்று சாஸ்திரம் கூறுகிறது.
எனவே வெளியிலுள்ள கோயில்கள்
எல்லாமே எப்பொழுதும்
நன்றாகவே ஒருவிதத் தோஷமும்
இல்லாமல் அமைந்திருக்கின்றன
என்று சொல்ல முடியாது.
நம் ஹ்ருதயமாகிற கோயிலை
அடைய அலைந்து செல்ல வேண்டியதில்லை;
ஒருவிதத் தோஷமும் இல்லாமல்
அமைந்திருக்கும்.
நமது
சரீரத்தில் ஹ்ருதயம்
என்பது தாமரை மொட்டுப்
போல் இருக்கிறது. அது
தலைகீழாக இருக்கும்.
அந்த இதயத்தில் ஓர் அக்னிஜ்வாலை
மிகச் சிறிய உருவத்துடன்
அசையாமல் இருக்கிறது.
அந்தச் சுடர் நடுவே கருமுகில்
வண்ணமுள்ள பகவான் லக்ஷ்மியுடன்
தானாகவே நிலைநின்றிருக்கிறான்.
தன்னைத் தியானம் செய்ய
வேண்டும் என்ற விருப்பத்துடன்
இருக்கும் ஜனங்களை அநுக்ரகிப்பதற்காகவே
இம்மாதிரியான நிலையைப்
பெற்று எம்பெருமான் இதயத்தில்
வசிக்கிறான்.
நீலதோயதமத்யஸ்த்தா
வித்யுல்லேகேவ பாஸ்வரா
| நீவாரசுகவத் தந்வீ பீதாபா
ஸ்யாத் தனூபமா | தஸ்யா:சிகாயா
மத்யே பரமாத்மா வ்யவஸ்த்தித:
||
என்று வேதம் ஸ்பஷ்டமாக
இதைக் கூறுகிறது. ஸ்வாமி
தேசிகனும் வரதராஜ பஞ்சாசத்தில்
(20) மிகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்
-
தந்வீ ஹ்ருதி ஸ்புரதி
காபி சிகா முநீநாம், ஸெளதாமிநீவ
நிப்ருதா நவமேககர்பா
||
"ஆகாயத்தில் ஒரு மின்னல்
அசையாமல் இருக்க வேண்டும்.
அதன் நடுவே புதிய மேகம்
ஒன்றும் இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் எப்படியோ
அதுபோல், தேவாதிராஜனே,
முனிவர்களின் இருதயத்திலுள்ள
ஓர் அசையாமலிருக்கும்
அக்னிஜ்வாலையின் நடுவே
நீலமேக ச்யாமளனான நீ
விளங்குகிறாய். உன்னை
முனிவர்கள் அனைவரும்
தியானம் செய்கிறார்கள்"
என்கிறார். "நீ பல இடங்களில்
வசிக்கிறாய். பிராட்டி
தோன்றிய பெரிய திருப்பாற்கடலிலும்
வசிக்கிறாய். ஸம்ஸார
மண்டலத்துக்கு மேலே உள்ள
ஸ்ரீவைகுண்ட லோகத்திலும்
உயர்ந்த திருமாமணி மண்டபத்தில்
நீ வசிக்கிறாய். இப்படிப்பட்ட
திவ்யமான அழகிய வாஸஸ்தலங்கள்
உனக்கு இருந்தபோதிலும்
அதில் அதிக ஆதரம் காட்டாமல்
மனிதர்களுடைய இதயம்தான்
உயர்ந்தது என்று எண்ணி
அதில் மிக்க மகிழ்ச்சியுடன்
வசிக்கிறாய். மனிதனின்
இதயமோ சரீரத்திற்குள்
மிகவும் ஸூக்ஷ்மமான துவாரமாக
உள்ளது. சரீரத்தைப்பற்றி
அதிகம் சொல்லவே வேண்டாம்.
அதில் மிகவும் ஆபாசமான
பொருள்கள் நிறைந்துள்ளன.
அந்த மனிதனின் இதயத்தை
விரும்பி வசிப்பது என்பது
உன் பெருங் குணத்தைக்
காட்டுகிறது. சேதனர்களிடத்திலுள்ள
உன் அன்பு தவிர வேறு என்ன
அதற்குக் காரணம் சொல்ல
முடியும்? அந்த:களேபரமிதம்
ஸுஷிரம் ஸுஸுக்ஷ்மம்
ஜாதம் கரீச கதமாதரணாஸ்பதம்
தே" என்றும் அருளிச்செய்தார்.
(வரதராஜ பஞ்சாசத் - 21)
எனவே
எம்பெருமான் பிராட்டியுடன்
மனிதர்களை அநுக்ரகிக்க
எண்ணித் தலைகீழாக இருக்கும்
தாமரை மொட்டுப் பொன்ற
இதயத்துக்குள்ளே வாஸம்
செய்கிறான். இந்த இதயம்தான்
எம்பெருமானுக்குக் கோயில்
ஆகிறது. இந்த கோயில்
கொண்ட எம்பெருமானைத்
தியானம் செய்து பாவங்களைப்
போக்கி, யமயாதனைக்கு
ஆட்படாமல் நல்ல கதியைப்
பெற அனைவரும் முயல வேண்டும்.
தலைகீழாக இருக்கும் இந்த
இதய புண்டரீகத்தை நிமிர்த்திப்
பகவானை ஸேவிக்க வேண்டும்.
இதைக காட்டுவதற்காகவே,
"கோயில் அமைத்துத் தெய்வத்தை
நாட்டி" என்று ஆழ்வார்
பணித்தார். இதை நிமிர்த்துவது
என்பது எல்லாருக்கும்
எளிதன்று; சில மகான்களுக்குத்தான்
முடியும். கெட்ட குணங்களை
அறவே ஒழித்திருக்கும்
பெரியவர்களுக்குத் தான்
இது சுலபமாக முடியும்.
அவர்கள் விஷயத்தில்தான்
இதயத்தில் வசிக்கும்
எம்பெருமான் காட்சி கொடுப்பான்.
ராகாதிதூஷிதே
சித்தே நாஸ்பதீ மதுஸூதந:
| ந ரதிம் குருதே ஹம்ஸ:
கதாசித் கர்தமாம்பஸி
||
ஆகையால், ராகாதிகளால்
தூஷிக்கப்படாத ஹ்ருதயம்
உள்ளவர்கள்தாம் ஹ்ருதயத்தில்
வசிக்கும் எம்பெருமானை
பார்க்க முடியும். இப்படி
அந்தர்யாமியாக இதயத்தில்
வசிக்கும் எம்பெருமானோடு
நமக்கு ஒருவிதப் பகையும்
இல்லாமல் இருந்தால் அவனை
அங்கேயே நேராக ஸேவிக்கலாம்.
ஆகையால் இதற்காக வேறு
எங்கும் செல்ல வேண்டாம்.
நம்முடைய பாவம் எல்லாம்
சுலபமாகப் போய்விடுமாகையால்
அதைப் போக்கக் கங்கைக்கோ
குருக்ஷேத்திரத்திற்கோ
போகவும் வேண்டாம்.
யமோ
வைவஸ்வதோ ராஜா யஸ் தவைஷ
ஹ்ருதி ஸ்தித: | தேந சேத்
அவிவாதஸ் தே மா கங்காம்
மா குரூந் கம: ||
இங்கு, 'யம:'
என்பது யமனைச் சொல்வதற்கு
வந்ததல்ல; நம் ஹ்ருதயத்தில்
வசித்து நம்மை நியமிக்கும்
எம்பெருமானைச் சொல்ல
வந்தது. "சூரிய வம்சத்தில்
எல்லாரையும் நியமிக்கும்
எம்பெருமான் ஸ்ரீராமனாக
அவதரித்தான். அந்த எம்பெருமான்
உன் இதயத்தில் இருக்கிறான்.
அவனுடன் 'த்வம் மே, அஹம்
மே' என்ற விவாதமற்று அவனைத்தியானித்தால்
சுலபமாகவே நமக்கு நல்ல
கதி ஏற்படும். இதற்காக
வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்"
என்பது இந்த சுலோகத்தின்
கருத்து. இப்படி எம்பெருமான்
ஐந்து நிலைகளைப் பெற்றிருக்கிறான்.
அதில் அந்தர்யாமித்வம்
என்ற நிலை நமது இதயத்திலேயே
கோயில் கொண்டிருக்கிற
நிலை. இந்தக் கோயில்
வெளிக் கோயில்களைக்
காட்டிலும் உயர்ந்தது,
ஒருவிதத் தோஷமும் அற்றது
என்பதை, 'மார்வம் என்பதோர்
கோயில்' என்பதனால் பெரியாழ்வார்
கூறினார்.
"வெற்பென்றிரும்
சோலை வேங்கடம் என்று
இவ்விரண்டும் நிற்பென்று
நீமதிக்கும் நீர்மைபோல்
நிற்பென்று இளம் கோயில்
உள்ளம் வைத்துள்ளினேன்.
வெள்ளத்திளங்கோயில்
கைவிடேல்" என்று இரண்டாம்
திருவந்தாதியில் பாகவதனுடைய
ஹ்ருதய கமலத்தில் மிக
ஆதரவுடன் பகவான் வஸிக்கிறான்
என்றார். கீழ்கூறிய இரண்டு
மலைகளில் ஆனந்தத்தோடு
நிவாஸம் செய்கிறாய்.
அது போல் என்னுடைய ஹ்ருதய
கமலத்திலும் வாஸம் செய்கிறாய்.
எல்லாவற்றுக்கும் பாலாலயம்
போல் அமைந்த க்ஷீராப்தியை
மறந்து விடாதே" என்கிறார்.
'நாகத்தனை குடந்தை வெ:கா
திருவெவ்வுள்' நான் திருவந்தாதி
36. 'கல்லும் கணைகடலும் வைகுந்த
வானாடும்' பெரிய திருவந்தாதி
68. இந்த பாசுரங்களிலும்
இதைக் காணலாம்.
மாமனார்
க்ருஹத்தில் வாஸம்தான்
சிறந்தது என்று சொல்வது
வழக்கம். ச்வசுரக்ருஹநிவாஸ:
ஸ்வர்கதுல்யோ நராணாம்
என்பதும் உண்டு. அவ்வாறு
மாமனார் வீடாகிற க்ஷீராப்தியில்
வாஸம் செய்யும் லக்ஷ்மி
பதியும் அதை பழகவிட்டு
பாகவதர் ஹ்ருதயத்தில்
வாஸம் செய்ய விரும்பி
ஓடிவந்து விடுகிறான்
என்றார் பெரியாழ்வார்,
"பனிக் கடலில் பள்ளி கோளை
பழக விட்டு ஓடிவந்து
என்மனக் கடலில் வாழவல்ல"
என்பது அவர் பாசுரம்.
"குமரிப்
பெண்ணின் ஹ்ருதயத்துள்ளே
நான் குடியிருக்க வாடகை
என்ன தரவேண்டும்" என்பதை
கேட்டுள்ளோம். யுவதியினிடம்
இதைக் கேட்க அவள் சொலவது
'குமரிப் பெண்ணின் ஹருதயத்துள்ளே
குடியிருக்க நீ உன் தாய்
தந்தையை விடவேண்டும்'
என்பது. இதனால் அவர்களை
மதிக்காமல் என்னிடமே
இருக்க வேண்டும். அவர்களை
விட்டுவிடவேண்டும் என்பது
ஏற்படுகிறது. இங்கு ஆழ்வார்
சொல்வதை கவனிக்க வேண்டும்.
என்னிடத்தில் வஸிக்க
ஆசைப் படுகிறாயே, இதற்கு
காரணம் அவர்கள்தாநே.
அவர்கள் மூலம் தானே நீ
உண்டானாய். அவர்களை பெண்ணின்
மனசில் ஆசை வைக்கும்
காதலுனும் அவர்கள் பெற்றோரிடத்தில்
அதிக ஆசை வைக்க வேண்டும்
என்பது. வெள்ளத்தினங்
கோயிலிருந்துதாநே உனக்கு
ஆவிர்பாவம். அந்த பாலாலயத்தை
நீ மறக்காமல் ஆதரவு காட்ட
வேண்டும் என்பது ஸாரார்த்தம்.
*****
|