காக்கும் இயல்பினன்
உலகத்தில்
எம்பெருமானை ஆபத்பாந்தவன்,
அநாத ரக்ஷகன் என்று அழைப்பதுண்டு.
ஸர்வேச்வரனுக்கு எத்தனையோ
பேர்களும் குணங்களும்
உள்ளன. 'பலபல ஆபரணம், பேரும்
பலபலவே' என்பர் சான்றோர்.
நம் தோஷங்கள் எப்படி
எண்ணிக்கையற்றனவோ அவ்வாறே
எம்பெருமானின் குணங்கள்
எண்ணிக்கையற்றவை. ஆகாயத்தில்
நக்ஷத்ரங்களை எண்ண முடியுமா?
ஆற்றிலுள்ள மணலை எண்ண
முடியுமா? நம் தோஷங்களைத்தான்
எண்ண முடியுமா? அப்படியே
பகவானின் குணங்களையும்
திருநாமங்களையும் எண்ண
முடியாது. 'ஸ்ரீரங்கேச
த்வத்குணாநாமிவாஸ்மத்தோஷாணாம்
க: பாரத்ருச்வா?' என்று
பராசரபட்டர் அருளிச்செய்தார்.
இப்படி பல திவ்ய குணங்கள்
உள்ளன என்பதை ஸ்ரீபாஷ்யகாரர்
தமது கத்யத்தில் மிகவும்
ஸ்பஷ்டமாக அருளிச் செய்யத்
தொடங்கிப் பல குணங்களைப்
படித்து, இவை முதலான உயர்ந்த
பல குணங்களை உடையவனே
என்று சொல்லி முடித்தார்.
இப்படி
எவ்வளவோ ஸத்குணங்கள்
எம்பெருமானுக்கு இருந்தபோதிலும்
அநாதி பாப வசத்தால் இருள்தருமா
ஞாலத்தில் பிறந்துள்ள
நாம் "ஆபத்பந்து அநாத
ரக்ஷகன் ஆபத்ஸகன்" என்ற
பகவானின் இரண்டு தன்மைகளில்
புகுந்து கடவுளைத் துதிக்கிறோம்.
ஏனெனில் இங்குப் பிறந்தவர்கள்
அனைவரும் துயரத்தைத்தான்
அநுபவிக்கின்றனர். சுகம்
என்பது லவலேசம் இல்லாவிட்டாலும்
அதைச் சுகமாக நினைத்து
அநுபவிக்கிறோம். உண்மையில்
அந்தச் சுகமும் முன்னும்
பின்னும் துக்கத்தையே
அளிக்கக் கூடியதாகையால்
பெரும்பாலும் இவ்வுலகம்
துக்க பூயிஷ்டமே. ஆகையால்
துன்பத்தை அடைந்துள்ள
நாம் எம்பெருமானைக் கூப்பிட்டு
நமது இடரை நீக்க விரும்பி,
'ஆபத்பந்துவே, அநாதரக்ஷகனே'!
என விளித்து, நம் துயரத்தைப்
போக்க பிரார்த்திக்கிறோம்.
நாம்
சம்பாதிப்பதும் சாப்பிடுவதும்
படிப்பதும் உறங்குவதும்
ஆங்காங்கே சென்று வேலை
பல செய்வதும் எல்லாம்
பகவான் நினைக்காவிட்டால்
நடக்கமாட்டா. கடவுளின்
சங்கல்பம் இல்லாவிட்டால்
கையையும் காலையும் அசைக்க
முடியாது. நீட்டவும்
மடக்கவும்தான் முடியுமா?
கண்களிலுள்ள இமைகளைக்
கொட்டத்தான் முடியுமா?
இவற்றை எல்லோருமே நன்கு
உணர்ந்தவர். ஆயினும்
ஏதோ சில காரியங்களைச்
செய்து பயனை கண்டுவிட்டால்,
'நான் இதைச் செய்தேன்;
இந்தப் பணத்தைச் சம்பாதித்தேன்;
பங்களாவைக் கட்டினேன்;
என்னைத் தவிர வேறு யாரால்
இந்த வேலைகளைச் செய்ய
முடியும்?' என்று அகங்காரப்பட்டுப்
பகவானை நினைப்பதில்லை.
இவர்கள் பாகவதர்களை எப்படி
நினைக்க போகிறார்கள்?
பாகவதர்கள் தங்கள் வீட்டை
அண்டி வந்தால் அலட்சியமாகப்
பேசி அனுப்பிவிடுகிறார்கள்.
'தேவரீர் என் குடிசைக்கு
வந்து என்னையும் என்
சம்பந்தப்பட்டவர்களையும்
அநுக்ரகித்தீர். தேவரீர்
திருவடித் தூள் பட்டுத்தான்
நாங்களும் எங்களுடைய
வீடும் பரிசுத்தமாகி
ஸத்தை பெற்றோம். இதற்கு
முன்பு இந்த வீடு வனமாக
இருந்தது; இப்பொழுது
பவனமாயிற்று' என்று சொல்லுகிறவர்
பணமுள்ள பிரபுக்களில்
யாரோ சில மகான்களே இருக்கிறார்கள்.
எல்லோரும்
இவ்வாறே இருக்கின்றனரா?
இல்லவே இல்லை. பாகவதர்களைப்
பார்த்ததும் மறைந்து
விடுகிறார்கள். எத்ததனையோ
முறை அவர்கள் வீட்டுக்கு
வந்தபோதிலும் முகங்கொடுத்து
பேசாமலே, 'ஏதோ நம்மிடம்
யாசிக்க வந்துள்ளனர்'
என்று நினைத்து வாளா
இருக்கிற பெரிய பிரபுக்களையும்
பார்த்திருக்கிறோம்.
நேரில் சந்திக்கும்போதே
இப்படி நேர்ந்தால் இவர்கள்
கடிதம் எழுதி அதன் மூலமாக
அந்தப் பிரபுக்களிடமிருந்து
என்ன பதிலை எதிர்பார்க்க
முடியும்? அந்தோ! தங்கள்
ஐசுவரியம் முழுவதையுமே
பாகவதர்கள் எடுத்துக்
கொண்டு போய்விடுகிறார்கள்
என்றே நினைக்கின்றனர்.
உண்மையில் இந்தப் பாகவதர்கள்
அந்தப் பிரபுவினுடைய
பணத்தையோ வீட்டையோ
மற்ற பொருள்களையோ எடுத்துக்
கொள்வதில்லை. அந்தப்
பிரபு ஏற்கனவே ஏதாவது
நற்காரியம் செய்திருந்தால்
அதனால் உண்டான புண்ணியங்களை
இவர்கள் அவனெதிராகவே
அவன் கொடுக்காமலே எடுத்துச்
செல்கின்றனர்.
இவ்விஷயத்தை
ஸ்ரீராமன், விபீஷணன்
சரணாகதன் ஆனபொழுது வானர
முதலிகளிடம் விஸ்தாரமாக்
பேசியிருப்பதை நாம் மறுபடி
விஸ்தரிக்க வேண்டியதில்லை.
இப்படி பகவான் மூலமாகவே
நமக்கு எல்லாம் ஏற்பட்டது
என்பதை மறந்து மார்பைத்
தட்டிக் கொண்டு தம்மையே
புகழ்ந்து திரிகின்றனரே
சிலர். சில சமயம் தாங்கள்
செய்யும் வேலை பயனளிக்காவிட்டால்,
'பாழாய்போன தெய்வம்
கெடுத்து விட்டது' என்று
தெய்வத்தின் மேல் குறை
கூறுவாரும் உண்டு. இவ்விதமான
இருப்பையும் நாம் உலகத்தில்
பார்த்துக் கொண்டுதான்
இருக்கிறோம். உண்மையில்
பகவானை நம்பி இருப்பவன்
ஆஸ்திகன். அவன் ஒருகாலும்
பகவானை பழிக்கமாட்டான்.
தனக்கு ஏற்படும் இடர்களில்
அவனையே கூப்பிட்டு தன்னை
காக்க வேண்டிக் கொள்வான்.
பக்தனான
ப்ரஹ்லாதனுக்கு எத்தனையோ
இன்னல்கள் ஏற்பட்டன.
ஒவ்வொரு சமயமும் பகவான்
தானே ரக்ஷித்தான்? த்ரெளபதியின்
துன்பத்தைக் கிருஷ்ணன்தானே
நீக்கினான்? கஜேந்திராழ்வானுக்கு
எற்பட்ட கஷ்டத்தை ஆபத்பந்துவான
ஸர்வேச்வரன் அலை குலைய
தலைகுலைய வந்து காப்பாற்றினான்.
நான்கு கைகளை உடைய பகவான்,
சரணாகதி செய்த அந்த சிறந்த
யானையை காப்பாற்ற கருதி,
'அதற்கு என்ன ஆபத்து எற்பட்டதோ?
எந்த வழியில் அதை நீக்கலாம்?'
என்ற எண்ணத்துடன் எட்டு
கைகளையும், அதற்கு தக்கவாறு
எட்டு ஆயுதங்களையும்
எடுத்துகொண்டு காப்பாற்ற
ஓடி வந்தான். காகாஸுரனையும்
கழுகையும் வேடனையும்
குரங்கையும் ராக்ஷஸனாகிய
விபீஷணனையும் அவரவர்களுக்கு
தக்கவாறு உதவி புரிந்து
ரக்ஷித்தான்.
இறைவன்
காக்கும் தன்மையை உடையவனாகையால்,
ஆண் பெண் பெரியவர் குழந்தை
உயர்ந்த ஜாதியில் பிறந்தவன்,
அல்லாதவன் என்ற வேறுபாட்டை
பார்க்க மாட்டான். யாராக
இருந்தாலும் ஆபத்து நேரும்போது
மனப்பூர்வமாகப் பகவானை
நினைத்து கதறினால் அவன்
நேராக வந்தோ, மறைமுகமாக
இருந்தோ ரக்ஷிப்பதில்
ஊக்கமுடையவன். இவ்விஷயத்தை
இதிஹாஸ புராணங்களை நேராகப்
படித்தோ, வித்வான்கள்
உபந்யாஸம் சொல்லப் கேட்டோ
அனைவரும் தெரிந்துகொண்டிருப்பதனால்,
தங்களுக்கு துன்பம் நேரும்போது
ஸஹஸ்ரநாம பாராயணம் செய்து,
ஸர்வேச்ரனை 'ஆபத்பந்து,
அநாதரக்ஷகன்' என்று துதிக்கின்றனர்.
இதிஹாஸ புராணங்களிலுள்ள
கதைகள் இருக்கட்டும்;
பெரியோர் மூலமாக இவ்விஷயத்தில்
கேட்டிருக்கிற ஒரு கதையை
இங்கு விண்ணப்பித்துக்
கொள்கிறேன்.
ஓர் ஊரில்
ஒரு குலாலன் இருந்தான்.
அவன் அவ்வூர் மக்களுக்கும்
வெளியூர் மக்களுக்கும்
மண்பாண்டங்களைச் செய்து
விற்று ஜீவிக்கிறவன்.
இக்காலத்தில் மண்பாண்டம்
என்றாலே தெரியாமல் இருக்கலாம்.
எவர்சில்வர் பாத்திரங்களும்
பிளாஸ்டிக் பண்டங்களும்
மலிந்து கிடக்கிறபடியால்
அவற்றைத்தான் மக்கள்
உபயோகிக்கின்றனர். முற்காலத்தில்
இவை இல்லையாதலால் மண்
பாத்திரங்களையே உபயோகித்து
வந்தனர். மண் பாத்திரங்களில்
சமையல் செய்து சாப்பிட்டால்
உடலுக்கு நல்லது என்று
வைத்தியர்களும் சொல்வதுண்டு.
இந்த குலாலன் தான் செய்த
பாத்திரங்களை விற்று
ஜீவிக்கிறவனாதலால் மக்கள்
கேட்கும் போதெல்லாம்
இல்லையென்னாமல் கொடுத்து
வந்தான்.
ஒரு சமயம் சங்கராந்திப்
பண்டிகை வந்தது. பண்டிகைக்கு
அனைவரும் தங்கள் வீட்டிலுள்ள
பழைய மண்பாத்திரங்களை
விலக்கிப் போட்டுவிட்டுப்
புதிய பாத்திரங்களை எடுத்துக்
கொள்வது வழக்கம். ஸங்கராந்திப்
பண்டிகை வந்துள்ளபடியால்
குலாலன் அதற்கு தக்கவாறு
முன்னமே பாத்திரங்களை
செய்துவிட்டான். ஆனால்
அவை பச்சையாக இருந்தன.
முதலில் பாத்திரங்களை
செய்ததும் சூளையில் வைத்து
வேகவைத்து பிறகு உபயோகப்படுத்துவது
வழக்கம். குலாலன் பாத்திரங்களை
செய்ததும் சூளையில் அடுக்க
வழக்கம் போல் முயன்றான்.
அப்பொழுது ஜோதிஷ சாஸ்திரத்தில்
பரிசயமுள்ள ஒரு மகான்
அவனைப் பார்த்து, "இப்பொழுது
கிரகங்களின் சஞ்சாரங்களைப்
பார்த்தால் இருபது நாள்
மழை விடாமல் பெய்யும்
என தோன்றுகிறது. ஆகவே
நீ சூளையில் இவற்றை அடுக்கினால்
யாவும் வீணாகிவிடும்.
பிறகு உனது விருப்பம்"
என்றார்.
இதைக் கேட்டதும்
அவனுக்கு பயம் வந்துவிட்டது.
'இவ்வளவு பொருள்களும்
வீணாகிவிடும். மேலும்,
ஊரிலுள்ள மக்களுக்கு
ஸங்க்ராந்திக்கு கொடுக்க
முடியாமலும் போய்விடும்.
என்ன செய்வது?' என்று யோசித்தான்.
கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு
வந்தான். அவன் அவ்வூரிலுள்ள
மக்களை பார்த்து, "உங்களுக்கு
இப்பொழுது பாத்திரங்களை
கொடுக்க வேண்டும். மழையோ
விடாமல் பெய்யப் போகிறது.
சூளை போட்டால் நம் இருவருக்கும்
கஷ்டம். எனவே பச்சையான
இந்த பாத்திரங்களையே
உங்களுக்கு கொடுத்துவிடுகிறேன்"
என்று சொல்லி வழக்கம்
போல் அவரவர்களுக்கு
கொடுக்க வேண்டடியவற்றை
அவரவர் வீட்டில் வைத்து
போய்விட்டான்.
ஒரு
வாரம் ஆயிற்று. ஒரு வீட்டில்
ஒரு சின்னப் பூனை அவன்
வைத்திருந்த ஒரு பெரிய
பாத்திரத்தில் குட்டி
போட்டுவிட்டது. இதை
யாரும் அறிந்து கொள்ளவில்லை.
இப்படியிருக்க, அவ்வூரில்
ஒரு பெரிய மகான் குயவனைப்
பார்த்து, "நீ பச்சைப்
பாத்திரங்களை வைத்துவிட்டாயே.
இவற்றை நாங்கள் எப்படி
உபயோகிப்பது? ஒரே நாளில்
தண்ணீர் பட்டதும் இவை
உடைந்துவிடாதா? இப்பொழுது
இரண்டு நாள் மழைக்கு
யோகமில்லை. இதற்கு முன்
பொழிந்துவிட்டது. மேலும்
இரண்டு மூன்று தினங்கள்
கழித்துத்தான் மழை பெய்யும்.
நான் உனக்கு உத்தரவாதம்
அளிக்கிறேன்" என்றார்.
அவன்
இதைக் கேட்டதும், "சரி,
இப்பொழுதே பாத்திரங்களை
அடுக்கி சூளை போட்டுவிடுகிறேன்"
என்று சொல்லி, எல்லா
பாத்திரங்களையும் அடுக்கிவிட்டான்.
ஒரு பாத்திரத்தில் பூனை
குட்டி போட்டிருப்பதை
இவனும் கவனிக்கவில்லை;
வீட்டிலுள்ளவர்களும்
கவனிக்கவில்லை. நெருப்பையும்
வைத்து விட்டான். சூளை
நன்றாக எரிந்து கொண்டிருக்கிறது.
குட்டியின் தாயான பூனை,
வழக்கம் போல் அவ் வீட்டில்
குட்டிகளுக்கு பால் கொடுக்க
வந்தது; அதிர்ச்சி அடைந்தது.
குட்டிகளும் இல்லை, பாத்திரமும்
இல்லையே என்று இரு கண்களிலும்
நீர் ததும்ப அழுது புலம்பி,
நான்கு பக்கமும் பார்த்தது.
பிறகு வாசனையை உணர்ந்துகொண்டே
சூளை எரியும் இடத்துக்கு
வந்து சேர்ந்தது; கத்திற்று.
இதைக் கேட்டதும் பாத்திரத்திலுள்ள
பூனைக் குட்டிகளும் கத்த
ஆரம்பித்தன. மிகவும்
கோரமான அழுகை குரல்
உண்டாயிற்று.
இதைக்
கேட்டதம் குலாலன் திகிலடைந்தான்.
"ஐயோ! நான் என்ன செய்வது?
சூளையையும் பிரிக்க முடியாதே!
பூனைக் குட்டியையும்
மீட்டுக் கொடுக்க முடியாதே!
மகாபாவியானேனே!" என்று
புலம்ப ஆரம்பித்தான்.
தெய்வத்தை நினைத்தான்;
தன் செயலை நொந்தான்:
"பூனைக் குட்டியும் அழியப்
கூடாது. பாத்திரங்களும்
வீணாகப் கூடாது. ஆபத்
காலத்தில் பந்துவான நீதான்
என்னை காப்பாற்ற வேண்டும்.
இப்படி காப்பாற்றிக்
கொடுக்க எனக்கு வேறு
நாதனும் இல்லை" என்று
சொல்லி புலம்பினான்.
அவ்விரண்டு தினங்களும்
சோறு தண்ணீர் எதுவும்
இல்லாமல் இங்கேயே படுத்துக்
கொண்டான்.
பூனையின்
செயலை சொல்லவும் வேண்டுமா?
அதுவும் திக்பிரமத்தை
அடைந்து கதறிக் கொண்டே
பகவானை நினைத்தவண்ணம்
இருந்தது. பகவான் இவர்களை
கை விடுவானா? ஆபத் காலத்தில்
காப்பாற்றும் தனது தன்மையை
விட்டுவிடுவானா? அவனுக்கு
இது பெரிய பிருதமன்றோ!
இரண்டு
நாட்கள் சென்றன. மனக்
கவலையுடன் குலாலன் சூளையில்
இருந்த பாத்திரங்களை
எடுத்தான். எந்த பாத்திரத்தில்
பூனை குட்டிகள் இருந்தனவோ
அந்த பாத்திரமும் அதற்கு
மேலும் கீழுமுள்ள பாத்திரங்களும்
பச்சையாகவே இருந்துவிட்டன.
மற்ற எல்லா பாத்திரங்களும்
சூளையில் நன்கு வெந்து
பளபளவென்று இருந்தன.
இவன் பார்க்கும்போதே
ஏதோ பகவத்செயல் ஒன்று
நடந்திருப்பதை உணர்ந்தான்.
பாத்திரங்களை எடுத்ததும்
பூனைக்குட்டிகள் மிக்க
பரபரப்புடன் வெளியே ஓடிவந்தன.
தாய் பூனை ஓடிவந்து அவற்றை
அணைத்துக் கொண்டது.
குலாலன் மிக்க மகிழ்ச்சி
அடைந்தான். இதல்லவோ
எம்பெருமானின் செயல்?
இப்படி எம்பெருமானைத்
தவிர வேறு யாரால் செய்யமுடியும்?
"கடவுளை வணங்கியவன்
ஒருகாலும் துன்பத்தை
அடையமாட்டான்" என்று
எல்லோரிடமும் சொல்லிக்
கொண்டு குலாலன் வியப்புடன்
வீடு சென்றான். இதை கண்களால்
நேரில் பார்த்துக் கொண்டிருந்த
மக்களும் பகவானின் ஆச்சரியமான
சக்தியையும் இரக்கத்தையும்
புகழ்ந்துகொண்டு தங்கள்
தங்கள் இல்லத்தை அடைந்தனர்.
பூனையும் மட்டற்ற மகிழ்ச்சியை
அடைந்து பகவானை மனத்தால்
வாழ்த்திக் கொண்டே குட்டிகளுடன்
தன் இருப்பிடம் சேர்ந்தது.
இப்படி அனைவரையும்
ஆபத்காலத்தில் நினைத்த
மாத்திரத்திலேயே காக்கும்
சுபாவத்ததை உடையவன் பகவான்:
ஆகையால் அவனையே எப்பொழுதும்
மூன்று கரணங்களாலேயும்
பூஜித்து இன்புறுவோமாக.
ஆபத்ஸகன்
எனப்பெயர். தனக்கு ஆபத்
நேர்ந்தாலும் அவன் காப்பாற்றிக்
கொள்வான். நமக்கு வந்தாலும்
ரக்ஷிப்பான். அவனுக்கு
ஆபத்காலத்தில் நம்மை
ஸகாயாக தோழனாக உடையவன்.
த்ரெளபதி ப்ரஹ்லாதன்
கஜேந்தரன் இவர் மூலமாகத்தானே
தனக்கு வரும் அபகீர்தியை
ரக்ஷித்துக் கொண்டான்.
இவர்கள்தானே அவ்பொழுது
அவனுக்கு ஏற்படும் ஆபத்தை
ரக்ஷித்தார்கள். இல்லாவிடில்
அவனுக்கு சரணாதரக்ஷசுத்வம்
என்னும் பிறிது பழாய்
விடுமல்லவா?
"ஸயக் பவிஷ்யதி
தத: சரணாகதானாம் ஸம்ரக்ஷிதா".
இது பிருதம் வரதத்வதீயம்
என்றார். ஸ்வாமி தேசிகன்.
துயரறு சுடரடிததொழுது
எழு என்மனமே என்றார்
ஆழ்வார். அவனுக்கு பூதனை
சகடாஸுரன் முதலியவர்களால்
வரும் துயர். நமக்கு, கண்ணனுக்கு
இவர்களால் என்ன ஆபத்நேரிடுமோ
என்ற துயர். இப்படி ஏற்பட்ட
ஆபத்தை - கஷ்டத்தை நீக்குபவன்
எனவும் பொருள் கொள்வது
உண்டு. காக்கும் இயல்பினன்
கண்ணபிரான் என்றார் ஆழ்வாரும்.
ஸ்ரீபராசரபட்டர்
காலத்தில் நடந்து விஷயம்.
ஸ்ரீங்கத்தில் ப்ராகாரம்
சிதிலமாய் விட்டது. அப்பொழுது
ஒரு சில்பி மேஸ்த்ரி
வேலை செய்தான். ஓரிடத்தில்
ஒரு பெரிய தவளை ஒன்று
மதிள் சுவரில் யானைபோல்
பருத்திருந்தது. அதைப்பார்த்தான்.
இதற்கு எப்படி ஆஹாரம்
கிடைக்கும். வழியே இல்லையே.
நாம் எவ்வளவு ஆஹாரம்
உட்கொண்டாலும் ஸுதலமாவதில்லை
என்று யோசித்தார். இதெல்லாம்
பகவத் ஸங்கல்பம். அவனல்லவா
காக்கும் ஸ்வபாவமுள்ளவன்
என்று நினைத்து தானும்
அவன் மேல் பாரத்தை வேலை
செய்யாமல் சும்மா இருந்து
விட்டான். பகவான் என்ன
செய்வார். நம்மிடம் பாரத்தை
ஒப்படைத்தபடியால் தினமும்
அவன் வீட்டுக்கு சாப்பாடு
கட்டிக் கொண்டு தலையில்
சிம்மாடு வைத்து அதில்
ஆஹாரத்தை வைத்து கொடுத்து
வந்தான். சில நாட்கள்
சென்றன. அவன் இறந்தான்.
அதிலிருந்து பகவானும்
தலையில் சுமந்து போகவில்லை.
ஸ்ரீபட்டர கேட்டார்:
ரங்கநாதா! இனிமேலாவது
சாப்பாடு கட்டி சுமந்து
கொண்டு போகும் வேலை
நின்றதா என்றார். பகவானும்
சிரித்தார். ஆக பகவானின
ரக்ஷணப்ரகாரத்ததை எப்படி
வர்ணிக்க முடியும். தாய்
வயிற்றில் இருக்கும்
சிசுவை யார் காப்பாற்றுகிறது.
அதற்கு யார் ஆஹாரம் கொடுக்கிறார்கள்.
பிறந்த பிறகாவது தாய்
பால் பருகுகிறது என்று
சொல்லலாம். ஆக ரக்ஷணத்துக்காக
ஏற்பட்டவன் பகவான்.
*****
|