கோடரி
கோடரி
பரசு - இந்த தலைப்பைக்
கண்டதும் பரசுராமனின்
அவதாரம் நினைவுக்கு வரலாம்.
ஸ்வாமி தேசிகன் இந்த
அவதாரவ்ருத்தாந்தத்தை
தயாசதகத்தில் விவரித்துக்
கூறியுள்ளார். அதாவது
நாம் பசுயாகம் செய்வது
சாஸ்த்ரத்துக்கு ஸம்மதமானது.
அதுபோல் இவரும் நரபசுயாகம்
செய்தார். அம்பரீஷோபாக்யானத்தில்
நரபசு பலிசெய்து யாகம்
செய்ய முயன்றர் என்பது
ராமாயணத்தில் ப்ரஸித்தம்.
இங்கு துஷ்டர்களான அரசர்களை
வேரறுக்கச் செய்தார்.
தனது கோடரியைக் கொண்டு
எல்லா அரசர்களையும் வெட்டி
வீழ்த்தினார். இது பார்வைக்கு
கொடும்செயல் என்று தோன்றும்.
இல்லவே இல்லை. பசுக்களைக்
கொன்று யாகம் செய்தால்
உண்மையில் அந்த பசு புண்யலோகம்
அடைகிறது. அதுபோல் துஷ்ட
க்ஷத்ரியர்களாகிய பசுக்களைக்
கொன்று இவர் யாகம் செய்கிறார்.
அரசர்களுடன் போர் புரிவது
இவருடைய வேள்வி. இதனால்
இந்த பசுக்கள் தங்களது
பாபங்களைக் களைந்து புண்ய
லோகம் செல்லுகிறார்கள்.
இந்த க்ஷத்ரியப்பூண்டை
(வனத்தை) அழிப்பதற்கு
ஸாதனமானது இவரது பரசு.
"மழுவினால் அவன் அரசை
மூவெழுகால் மணி முடி
பொடியடுத்து உதிரக்குழுவுவார்
புனலுன் குறித்து வெங்கோபம்
தவிர்ந்தவன்" என்றர்.
திருமங்கை மன்னன். துஷ்ட
க்ஷத்ரிய வனத்தை அழித்தது
அவரது கோடரி. இங்கு நாமே
கோடரி என்று சொல்வதற்கு
இந்த வ்யாஸம்.
கோடரி
என்னும் பொருளை எல்லோரும்
அறிந்திருக்கின்றனர்.
இது காட்டை அழிப்பதற்கும்,
விறகுகளை வெட்டுவதற்கும்,
இன்னும் பல வேலைகளுக்கும்
உபயோகப்படுகிறது. தீச்செயல்களைச்
செய்பவர்களைக் கோடரி
என்றும், கோடரிக் காம்பு
என்றும் நிந்திப்பதுண்டு.
ஹிரண்யகசிபு என்னும்
அசுரன் எம்பெருமானிடத்தில்
பக்தி வெள்ளத்தைப் பெற்றிருந்த
தன் புதல்வனான பிரஹ்லாதனைக்
'கோடரிக் காம்பு' என்று
சொல்லுகிறான்.
தைதேயசந்தநவநே
ஜாதோயம் கண்டகத்ரும:
| யந்மூலோந் மூலபரசோர்
விஷ்ணோர் நாலாயிதோர்பக:
|| (ஸ்ரீமத் பாகவதம் 7-5-17)
அரக்கர்
குலத்தைச் சந்தனமரக்
காடாகவும், அதில் ப்ரஹ்லாதன்
என்பவன் முள்மரமாகவும்,
இந்தச் சந்தன வனத்தை
அழிக்க ஏற்பட்டிருக்கிற
ஸ்ரீவிஷ்ணுவாகிய கோடரிக்கு
ப்ரஹ்லாதன் என்ற குழந்தை
காம்பாகவும் நினைத்துக்
கூறுகிறான் ஹிரண்யகசிபு.
இவனது புத்தியை அநுஸரித்து
அரக்கர் குலத்தை சந்தன
காடாகவும், ஸ்ரீவிஷ்ணுவைக்
கோடரியாகவும், ப்ரஹ்லாதனைக்
காம்பாகவும் நினைக்கிறான்
போலும்.
இவ்வுலகத்தில்
பிறந்து உபயோகமற்றவனாக
ஒருவன் இருந்தால் அவனையும்
கோடரி என்று நிந்திப்பதுண்டு.
புவியில் பிறந்தவன் நன்கு
கல்வி கற்றும், பணத்தைச்
சேமித்தும், தானதர்மங்களைச்
செய்தும் காலத்தைப் பயனுள்ள
முறையில் கழிக்க வேண்டும்.
கம்பர்
தசரத சக்கரவர்த்தியைப்
பற்றிக் கூறுகிறார் -
ஈந்தே கடந்தான் இரப்போர்கடல்,
எண்ணில் நல்நூல் ஆய்ந்தே
கடந்தான் அறிவென்னும்
அளக்கர், வாளால் காய்ந்தே
கடந்தான் பகைவேலை, கருத்து
முற்றும் தோய்ந்தே கடந்தான்
திருவின் தொடர் போகபெளவம்.
தசரத சக்கரவர்த்தி
நான்கு கடல்களையும் தாண்டினான்.
அதாவது யாசகர்கள் வந்து
தன்னிடம் எதையாவது இரந்தால்,
இல்லை என்று சொல்லாமல்
அவர்களின் மனத்தைத் திருப்தி
செய்வித்தான். இப்படி
யாசகர்கடல் ஒன்றைத் தாண்டினான்.
அறிவு என்னும் ஸமுத்திரத்தை
நல்ல நூல்களை ஆராய்ந்து
தாண்டினான்; அதாவது கல்விகளில்
சிறந்தவனாக விளங்கினான்.
எதிரிகளை வாளால் வென்று
நின்றான். இதனால் பகைக்கடலைக்
கடந்தான். இவ்வுலகில்
பிறந்து சிற்றின்பங்களைப்
பலவாறு அநுபவித்தபடியால்
போகக் கடலையும் கடந்தான்.
இப்படி நற்காரியங்களைச்
செய்து கொண்டு, தன் பிறவியை
வீணாக்காமல் இருப்பவனே
உயர்ந்தவன். இதற்கு முரணாக
இருப்பவன் வெறும் கோடரிதான்.
இதை ஒரு கவி வெகு சமத்காரமாகப்
பேசுகிறார் -
-
சார்ங்கதரபத்ததி:-
ந
த்யாதம் பதமீச்வரஸ்ய
விதிவத் ஸம்ஸாரவிச்சித்தயே ஸ்வர்கத்வாரக
பாடபாடநபடுர் தர்மோபி
நோபார்ஜித: | நாரீபீநபயோதரோருயுகலம்
ஸ்வப்நேபி நாலிங்கிதம் மாது:
கேவலமேவ யெளவநவநச்சேதே
குடாரா வயம் ||
மனிதன்
ஸம்ஸாரக் கடலைத் தாண்ட
வேண்டும். இது முக்கியமானது.
ஸம்ஸாரம் என்பது மனிதனுக்குப்
பல கஷ்டங்களைக் கொடுக்கக்கூடியது.
இது பல இன்பங்களை அளிக்கும்போல்
தோற்றமளிக்கும். அவை
அனைத்தும் உண்மையில்
இன்பங்கள் அல்ல. ஒருவன்
பாழுங்கிணற்றில் புலிக்குப்
பயந்து இறங்கி அங்கே
பல ஸர்ப்பங்களையும் துஷ்ட
ஜந்துக்களையும் கண்டு
அஞ்சும் ஸமயத்தில், மேலே
வந்த புலி என்ன செய்யுமோ
என்று நடுங்கி அண்ணாந்து
பார்த்த போது அங்குள்ள
செடியின் தேன் கூட்டிலிருந்து
விழும் தேனைப் பருகினால்
எவ்வளவு சுகம் உண்டாகுமோ,
அவ்வளவுக்கு இணையானதுதான்
ஸம்ஸார இன்பம். இப்படிப்பட்ட
சுகத்தை விரும்பி, இதைப்
பெற நியாயமான மார்க்கத்தை
விட்டு அநீதி மார்க்கத்தில்
இறங்கிவிடுகிறோம். இப்படி
அற்பமான இன்பத்தை அநுபவிக்கப்
பணம் தேவைப்படுகிறது
அல்லவா? அதற்காகப் பொய்
பேசுவது, திருடுவது, கொைலை
செய்வது போன்ற தொழில்களில்
ஜனங்கள் இறங்குகின்றனர்.
உண்மையில்
மனைவி, புதல்வன், பெண்,
பேரன் முதலிய பந்துக்கள்
அனைவரும் நமக்குச் சத்ருக்களே.
ஸ்நேகிதர்கள் அல்லர்.
நாம் என்னவோ இவர்களை
அநுகூலர்களாக நினைத்திருக்கிறோம்.
உண்மையில் அப்படி நினைப்பது
தவறுதான்.
நம் மனைவி
மக்கள் முதலியவர்கள்
நமக்கு அநுகூலமாக இருக்கிறார்களே,
நாம் சொல்வதைக் கேட்கிறார்களே,
நம் விருப்பப்படி நடந்துகொள்கிறார்களே;
அப்படி இருக்க அவர்களைச்
சத்ருக்கள் என்று எப்படிச்
சொல்லலாம்? கேண்மின்.
ஆகையால்தான் இவர்கள்
அநுகூல சத்ருக்கள் ஆகின்றனர்.
நமது ஆத்மா நற்கதி பெற
வேண்டும் என்று எண்ணி
முயன்றால் அதற்கு இவர்கள்
அநுகூலர்களாகவே இருந்து
தடை செய்கின்றனர். நமக்கு
ஸ்வாமியான பகவானிடத்தில்
பக்தியை வளர விடாமல்
இகலோகத்தில் ஸுகங்களைக்
கொடுத்து மயக்கத்தை
உண்டுபண்ணுகின்றனர்.
'நாம் யார்? நாம் எதற்கு
இங்கு பிறந்தோம்? நம்
உடலை எம்பெருமானுக்கு
ஸமர்ப்பித்து அவனுடைய
ஏவல் தேவைகளை செய்ய வேண்டாமா?"
என்ற எண்ணங்களை மறந்து,
'நம் புதல்வன், மனைவி, புதல்வி
இவர்கள் நாம் இறந்த பிறகு
எப்படி ஆகிவிடுவார்களோ?
கஷ்டப்படாமல் இருக்க
வேண்டுமே' என்ற எண்ணத்தை
நாம் அடைகிறோம். அதற்கு
தக்கபடி பணத்தை சேமிப்பதில்
முயற்சி உண்டாகும்படி
மோகத்தை கொடுத்துவிடுகிறது
இந்த ஸம்ஸாரம். 'நாம் இறந்த
பிறகு எப்படி ஆவோம்?
எந்த ஜன்மத்தை அடையப்போகிறோம்?'
என்ற தன் விஷயமான நினைவை
மனிதன் விட்டுவிடுகிறான்.
பாவம்!
இதை நினைத்தே
கூரத்தாழ்வான் கூறினார்
-
புத்ராதய: கதமமீ மயி
ஸம்ஸ்திதே ஸ்யு:, இத்யப்ரதிக்ரியநிரர்த்த
கசிந்தநேந | தூயே, ந து
ஸ்வயமஹம் பவிதாஸ்மி கீத்ருக்,
இத்யஸ்தி ஹஸ்திகிரிநாத
! விமர்சலேச: ||
(ஸ்ரீ வரத
ராஜஸ்தவம் - 77)
ஆகையால்
பந்துக்கள் நமக்கு அநுகூல
சத்ருக்களே தவிர, உண்மையில்
ஸுஹ்ருத்துக்கள் அல்லர்.
சக்கரவர்த்தி திருமகளின்
தர்மபத்னியான சீதையை
அபகரித்து வந்த ராவணனின்
புதல்வனான இந்திரஜித்து
ராவணனுக்கு அநுகூலனா,
சத்துருவா என்பதை யோசித்துப்
பார்க்க வேண்டும். பகவானான
ராமனிடத்தில் பக்தி உண்டாகி
வளரும்படி உபதேசம் செய்தான்
ராவணனுக்கு விபீஷணன்.
இவ் வார்த்தையை, முன்பு
தூது சொன்னவனை வதம்
செய்யக்கூடாது என்று
சொன்ன விபீஷணன் வார்த்தையை
கேட்டதுபோல் ராவணன்
கேட்டிருந்தால் எவ்வளவு
நன்மையைப் பெற்றிருப்பான்!
புத்திரன் என்ற பெயரை
வைத்துக் கொண்டு இந்திரஜித்து
தன் தகப்பனான ராவணன்,
விபீஷணன் வார்த்தையை
அநுசரிக்க விடாமல் செய்துவிட்டான்
அல்லவா? எனவே புத்திரன்
என்ற பெயரைக் கொண்டு
சத்ருவாகவே இருந்தான்
தந்தைக்கு. இதையே விபீஷணன்
பகிரங்கமாகக் கூறினான்.
'புத்ரப்ரவாதேந
து ராவணஸ்ய த்வமிந்த்ரஜித்மித்ரமுகோஸி
சத்ரு; யஸ்யேத்ருசம்
ராகவதோ விநாசம் நிசம்ய
மோஹா தனுமன்யஸே த்வம்'
என்று. - யுத்தகாண்டம்
(15-10)
இப்படிப் பற்பல இடங்களில்
இவ்விஷயத்தைக் கண்டு
கொள்ளலாம். மேலும் கேண்மின்;
பூலோகத்தில் பிறந்த
நமக்குத் தேவதைகள் சத்ருக்களே
தவிர அநுகூலர்கள் அல்லர்.
ஏன்? நாம் எம்பெருமானிடத்தில்
பக்தியைச் செலுத்தினால்
அதற்கு தேவர்கள் தடங்கல்
உண்டு பண்ணுகின்றனர்.
ஸத்யம் சதேந விக்நாநாம்
ஸஹஸ்ரேண ததா தப: | விக்நாயுதேந
கோவிந்தே ந்ருணாம் பக்திர்
நிவார்யதே ||
நாம் உண்மையே
பேச வேண்டும் என்று எண்ணினால்
அதற்கு நூறு தடங்கல்கள்
உண்டாகின்றன. ஒரு வாதம்
செய்பவர். கோர்ட்டில்
அவர் 'நாம் தினமும் ந்யாய
ஸ்தலத்தில் பொய்யே சொல்லுகிறோமே.
ஒரு நாளாவது சொல்லாமல்
இருக்க எண்ணினார். அதற்காக
ஒரு நாள் லீவ் எடுத்துக்
கொண்டார். அன்றை தினம்
செல்லவில்லை. ஆனால் இவரை
வரவழிக்கவேண்டும் என்று
தொலைப் பேசியில் பேசினார்கள்.
அப்பொழுது மனைவி எடுத்து
இவரிடம் சொன்னாள். அதற்கு
இவர் சொன்னது. நான் வீட்டில்
இல்லை என்று சொல்லிவிடு
என்று. பாருங்கள் பொய்
என்பது, தானாக வந்துவிடுகிறது.
தவம் செய்கிறவர்களுக்கு
ஆயிரக் கணக்கான விக்னங்கள்.
எம்பெருமானிடத்தில்
பக்தி செய்பவர்களுக்குக்
கணக்கிட முடியாத விக்னங்கள்.
இப்படி இடையூறுகளை தேவர்கள்
செய்து, பகவானிடத்தில்
இவர்களை சேரவொட்டாமல்
செய்து விடுகின்றனராம்.
நாம் தேவர்களுக்கு யாகம்
முதலிய புண்ணிய காரியங்களைச்
செய்து வருகிறபடியால்,
'பகவானிடத்தில் ஒருவன்
பக்தி செய்தால் முடிவில்
இவன் பகவானை அடைந்துவிடுவான்.
நமக்கு ஓர் ஆள் குறைந்துவிடுவான்'
என்று எண்ணி அதைத் தடுத்து
விடுவார்களாம். எப்படி
நமக்கு இவ்வுலகில் பசு
முதலியவை உபயோகப்படுகின்றனவோ,
அப்படித் தேவர்களுக்கு
நாம் உபயோகப்படுகிறோம்.
ஆகையால் தம் ஆட்களில்
இவர்கள் குறைந்துவிடுகிறார்கள்
என்று எண்ணி, இறைவனிடத்தில்
பக்தியை நமக்கு வளரவொட்டாமல்
தடுத்துவிடுகிறார்கள்.
ஆக,
தேவர்கள் நமக்கு மழை,
ஐச்வரியம் முதலியவற்றைக்
கொடுத்து இவ்வுலகிலேயே
என்றும் இருக்கும்படி
செய்து, அநுகூலர்களாக
நடிக்கிறார்களே தவிர,
உண்மையில் அநுகூலர்கள்
அல்லர், சத்ருக்களே. இது
போலவே நம் பந்துக்களும்
பல இன்பங்களைக் கொடுத்து
இவ்வுலகத்தில் நம்மை
ஸ்வாதீனம் செய்து கொள்கிறார்கள்.
பகவானிடத்தில் ஏற்படும்
நற்புத்தியையும் தடுத்துவிடுகிறார்கள்.
நாமும் அவர்களுக்கு வசப்பட்டு
ஸத்விஷயங்களை மறந்து,
அவர்களின் முகமலர்ச்சிக்காக
அநீதி மார்க்கத்தில்
இறங்கிப் பணம் முதலியவற்றை
சேமித்து கொடுத்து ஆத்மஹத்தியை
செய்து கொள்கிறோம்.
இதுதான் உண்மை. ஆகையால்
அற்பமாயும் அஸ்திரமாயும்
உள்ள இன்பத்தைக் கொடுக்கக்கூடிய
இந்த ஸம்ஸார அநுபவத்தை
அடியோடுவிட்டு, ஸ்திரமாயும்,
பெரியதாயுமுள்ள ஆனந்தத்தை
கொடுக்கக்கூடிய மோக்ஷத்தை
பெற விரும்ப வேண்டும்.
அதற்காக நமக்கு யஜமானனான
ஸர்வேச்வரனுடைய திருவடியைத்
தியானிக்க வேண்டும்.
இப்படி செய்பவன்தான்
பிறவி பயனை பெறுபவன்.
இவன்தான் உத்தமாதிகாரி.
இப்படி உலக இன்பத்தில்
வைராக்யம் இல்லாதவன்
இந்தப் பூலோக வாழ்க்கையை
விட்டு ஸ்வர்க லோகத்தில்
ஏற்படும் ஆனந்தத்தையாவது
விரும்ப வேண்டும். அதற்காக
ஸ்வர்க்லோக வாசற்கதவைத்
திறப்பதற்கு சாஸ்திரங்கள்
ஏற்படுத்தின ஸோமயாகம்
முதலிய தர்ம காரியங்களைச்
செய்தல் நல்லது. இப்படி
செய்பவன் இரண்டாம் அதிகாரி.
இவ்வகையில்
மூன்றாம் அதிகாரி ஒருவன்
இருக்கிறான். மோக்ஷத்திலும்
பரலோகத்திலும் ஆசையற்றவனாக
இருந்த போதிலும், இகலோகத்தில்
ஏற்படும் சிற்றின்பத்தில்
ஆசையுள்ளவனாய், அதற்கு
தகுந்த உபாயங்களை செய்து
சுகங்களை அநுபவிக்க அவன்
முயலுகிறான். எவ்வளவொ
பணத்தை பெற்று பெரிய
தனிகராக இருந்ததும்,
தாம் சிறிதளவும் அநுபவிக்காமல்
பணத்தை சேமித்து வைப்பதில்
மாத்திரம் கண்ணோட்டமுடையவர்
பலர் இருக்கின்றனர்.
அந்தோ! இவர்கள் தேனீக்கள்
தேனைத் திரட்டி வைப்பதுபோல்
பணத்தை திரட்டி வைக்கிறார்களே
தவிர, அதை அநுபவிப்பதில்லை.
பணம் இருந்தும், உயர்ந்த
மாளிகை இல்லை; உன்னத உடைகள்
இல்லை; வாகனங்கள் இல்லாமல்
நடந்தே செல்லுவார்கள்.
சரியான உணவும் உண்பதில்லை.
பசி இருந்தும், வெறும்
கேழ்வரகு மாவை உபயோகப்படுத்திப்
பசியை நீக்கிக் கொள்ள
முயல்வர். எதற்கும் செலவு
செய்யாமல், திரட்டிய
பணத்தை பார்ப்பதில் மாத்திரமே
இவர்களுக்கு ஆனந்தம்.
இவர்களது பணத்தை எவனோ
கொள்ளையடித்துக்கொண்டு
போகப் போகிறான். அவன்
உயர்ந்த உப்பரிகையைக்
கட்டிக் கொண்டு ரம்பைக்கும்
ஊர்வசிக்கும் சமமான பெண்களுடன்
கலந்து அநேகவிதமான போகபோக்கியங்களை
அநுபவிக்கப் போகிறான்.
பிறருக்குத்தான தர்மங்களைச்
செய்து உலகில் பிரசித்தியையும்
பெறுவான். பணத்தை திரட்டியவன்
இவ்வுலகத்திலும் சுகத்தை
அநுபவிக்காமல் வெறும்
ஏமாற்றத்தை பெறுவான்.
ஒரு
வேடிக்கையை பாருங்கள்.
இதை நன்கு கேட்டு ஆலோசியுங்கள்,
ஒருவன் பல வங்கிகளில்
டிபாசிட்டு செய்து உள்ளான்.
எவ்வளவு தெரியுமா? கணக்கில்லை.
அவன் எப்பொழுதும் வங்கி
புஸ்தகத்தைப் புரட்டிப்பார்த்து
ஆனந்திப்பான். ஆனால்
அதில் செல்லாக்காசு கூட
பிறருக்கு எடுத்துக்
கொடான். தானும் அப்பணத்தின்
மூலம் ஸுகத்தை அநுபவிக்கமாட்டான்.
ஆனாலும் நான் பணக்காரன்.
நானே பணக்காரன் என்று
மார்பு தட்டித்திரிவான்.
இவன் இப்படியிருக்க மற்றொருவன்
பரம தரித்ரன். அவனிடம்
நானே பணக்காரன் செல்வந்தன்
என்று சொல்லுகிறாயே.
அது தவறு. நானும்தான்
செல்வன்தன் என்று கோஷமிட்டான்.
அது எப்படி நீதான் மஹாதரித்ரனாச்சே
என்றான் பணக்காரன். அதற்கு
தரித்ரன் சொன்ன பதில்
- மிக ஆச்சர்யமானது - நீ
எவ்வளவு பணம் வைத்திருந்தாலும்
அதைக் கொண்டு ஏதாவது
ஸுகத்தை அநுபவிக்கிறாயா?
அல்லது பிறருக்குத்தான்
தானம் கொடுக்கிறாயா?
தானம் போகம் இரண்டுக்கும்
பயன் படாத பணம் உன்னுடையது.
எனக்கும் பணம் நிறைய
உள்ளது. ஸ்வர்ணமயமாகவே
உள்ளது. இதோ உள்ளதே மேருமலை.
இது என்னுடையது. இது தானத்துக்கும்
போகத்துக்கும் பயன்
படாதே என்கிறாயா? ஆம்.
உன்னுடையதும் அப்படித்தானே.
இதில் என்ன எவ்வளவு வாசியுள்ளது
என்று பரிஹஸித்தான்.
"தான
போக விஹீனேன தனேந தனவான்
யதி | தான போக விஹீனேன
மேருணா தனவானஹம் | என்பது
நீதி.
ஆகையால் மோக்ஷத்தைப்
பெற விரும்பி பகவானின்
திருவடிகளில் த்யானம்
செய்பவன் உத்தம அதிகாரி.
ஸ்வர்கத்தை விரும்பி
அதற்கு உறுப்பான வேள்வி
முதலியவற்றைச் செய்பவன்
இரண்டாம் அதிகாரி. இகலோகத்தில்
சுகத்தை விரும்பி அதற்கு
தகுந்தபடி முயற்சி செய்து
சுகங்களை அநுபவிப்பவன்
மூன்றாம் அதிகாரி. இம்மூன்று
வழிகளிலும் இறங்காமலும்,
மூன்று விதமான பலனையும்
பெறாமலும் பூவுலகத்தில்
பிறந்து இருக்கிறவன்
வெறும் கோடரியாகிறான்.
கோடரி வனத்தை அழிப்பதுபோல்
இவனும் ஓர் வனத்தை அழிக்கிறான்.
அந்த வனம் எது என்றால்
யெளவனம்தான். அதாவது
ஒரு தாயின் வயிற்றில்
ஒரு குழந்தை பிறந்தால்
அந்தத் தாயின் யெளவனம்
போய்கிடுகிறது. 'ஒரு
சால் ஓட்டினாலும் புழுதிதான்,
ஒரு குழந்தை பெற்றாலும்
கிழவி தான்' என்று பழமோழி
சொல்வதுண்டு. இப்படி
குழந்தைகள் பிறக்க பிறக்க
தாய்க்கு யெளவனம் போய்
மிகவும் கிழத்தன்மை உண்டாகிறது.
பிறந்த
குழந்தை பெரிதாக வளர்ந்த
பிறகு மேற்கூறியபடி மூன்று
வகையில் ஏதாவது ஒரு வகையை
கைப்பிடித்து ஸுகங்களை
அநுபவித்தால் தாயின்
யெளவனம் சென்றாலும்,
தான் ஸுகப்பட்டான் என்பதாவது
உண்டு. அதுவும் இல்லாதவனுக்குத்
தாயின் யெளவனத்தைப் போக்கடித்தது
ஒன்றுதான் அவன் செய்தது.
இங்கு யெளவனம் என்பதில்
வனம் என்று இருப்பதையும்
கவனிக்க வேண்டும். ஆக
இவன் வெறும் கோடரிதான்.
ஆகையால் இப்படி நாம்
இல்லாமலிருப்பதற்கு
தகுந்தபடி நல்ல காரியங்களை
செய்து உயர்ந்த ஸுகத்தை
அநுபவிக்க முயற்சி செய்வோமாக.
தானம்
என்பது எல்லோருக்கும்
வரும் ஸ்வபாவமல்ல. சிலருக்குத்தான்
ஏற்படும். கொடுப்பது
ப்ரியமாகப் பேசுவது தைர்யமாக
இருப்பது ஸமயத்துக்குத்
தகுந்தபடி பேசுவது இவையெல்லாம்
அப்யாஸத்தால் வருவதல்ல.
உடன் பிறக்க வேண்டும்.
முன் பிறவியில் கேட்பவர்களுக்கு
நாஸ்தி இல்லை. நாஸ்தி
இல்லை என்று சொன்னபடியால்
இந்த பிறவியில் தேஹி
- தேஹி கொடு கொடு என்று
சொல்லுகிறோம். அப்பொழுதும்
இரண்டு எழுத்து. இப்பொழுதும்
இரண்டு எழுத்து.
*****
|