பெருமை பெறுவது
எதனாலே?
ஜனங்கள் எல்லாருமே
தங்களை அனைவரும் வெகுமதிக்க
வேண்டும், பெருமைப்படுத்த
வேண்டும், புகழ வேண்டும்
என்று நினைப்பது உலக
இயற்கை. ஒருவன் எல்லாராலும்
புகழப்பட்டும் பல சமயங்களில்
ஸ்துதி செய்யப்பட்டும்
இருக்கக் காரணம் எது
என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.
சாதாரணமாக அவனவன் செய்த
அதிர்ஷ்டமாகிற பாக்கியத்தின்
பயனாக எல்லாராலும் துதிக்கப்படுகிறான்
என்பது ஸர்வ ஸம்ப்ரதிபந்நம்.
பாக்கியம் எனப்படுகிற
அதிர்ஷ்டம் எல்லா விஷயங்களுக்குமே
பொதுவான காரணம். இதில்
விப்ரதிபத்தியே கிடையாது.
அதிருஷ்டம் இல்லாமல்
எவனும் எந்த வேலையைச்
செய்தாலும் பயனளிக்காது
என்பது எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்டதே.
தெய்வ ஸங்கல்பம் இல்லாமல்
எந்த வேலைதான் பயனை அளிக்கக்கூடும்!
ஆகையால், அது தவிர மற்றொரு
காரணம் பெருமையைப் பெறுவதற்கு
உண்டு. அதைப்பற்றித்தான்
இங்கு எழுதுகிறோம்.
ஒருவன்
நன்றாகப் படிக்கவில்லை;
உயர்ந்த குணத்தையும்
பெற்றவனல்லன்; ஒழுக்கத்துடனிருப்பவனும்
அல்லன்; உயர்ந்த குலத்தில்
பிறந்தவனுமல்லன்; பல
விஷயங்களைக் கண்டுபிடிக்க
வேண்டிய நுண்ணறிவு பெற்றவனுமல்லன்;
பல வித்வான்கள் கூடியிருக்கும்
அவையில் மிகவும் அழகாகவும்
ரஞ்சகமாகவும் கருத்துக்களை
எடுத்துரைக்கத் தெரிந்தவனுமல்லன்;
ஆனால் அவனை ஜனங்கள் பெருமைப்படுத்தித்
துதி செய்துவிடுகின்றனர்.
இதற்கு என்ன காரணம்? இதைச்
சொல்லித்தான் தெரிந்துகொள்ள
வேண்டுமா? அவனிடத்திலுள்ள
பணம்தான் அவனைப் பெருமைப்படுத்திவிடுகிறது.
அவனிடத்திலுள்ள பணத்தைக்
கண்டதும் அவனைப் புகழ
ஆரம்பித்துவிடுகிறார்கள்.
'நீதான் உயர்ந்த குலத்தில்
பிறந்தவன், உன்னைவிட
நுண்ணறிவு பெற்றவன் யாருமே
இல்லை. உன்னைப் போல்
பேசுபவரை எங்கே பார்க்க
முடியும்? நினைத்த காரியத்தைச்
சாதிக்கக் கூடிய சூரத்தன்மையை
உன்னிடத்தில் அல்லவா
காண வேண்டும்?' என்றெல்லாம்
சொல்லிப் புகழ்ந்து
விடுகிறார்கள். ஆக அவனுக்கு
ஏற்பட்ட லக்ஷ்மீகடாக்ஷத்தால்
உண்டான ஐச்வர்யம் அவனை
மிகப் பெரியவனாக மாற்றிவிடுகிறது.
கைநிறையப் பணம் வந்தால்
அசடுகளும் சமர்த்தாக
ஆகிவிடுவார்கள் என்று
இதை முன்னிட்டுத்தான்
பழமொழி சொல்வது.
தேவேந்திரன்
ஒரு சமயம் உத்யான வனத்தில்
ஐராவதம் என்னும் வெள்ளை
யானைமேல் சென்று கொண்டிருந்தான்.
துர்வாஸர் என்னும் மகரிஷி
அவனைப் பார்த்ததும் தம்
கையிலுள்ள புஷ்பமாலையை
அவன் கழுத்தில் அணிவித்தார்.
இந்திரன் தன் கழுத்திலுள்ள
மாலையை யானையின் தலையில்
எடுத்துப் போட்டான்.
மதத்தால் கர்வம் கொண்ட
அந்த யானை உயர்ந்த அந்த
மாலையைத் துதிக்கையால்
எடுத்துத் தன் காலின்
கீழ்ப் போட்டு மிதித்துவிட்டது.
இதைக் கண்ட மகரிஷிக்குக்
கோபம் அடங்கவில்லை.
"இந்திரனே! நான் உனக்கு
அணிவித்த மாலையை மகான்களுடைய
பிரசாதம் என்று அங்கீகரிக்க
வேண்டியிருக்க, அதை அலட்சியமாக
யானையின் தலையில் போடுவதும்,
அது அதைக் காலில் போட்டு
மிதிப்பதுமாகச் செய்து
என்னை அவமதித்துவிட்டாய்.
ஆகையால் இந்திர லோகத்தில்
நீ பதவியை இழந்து கஷ்டப்படுவாய்"
என்று சபித்துவிட்டார்.
இந்திரன்
பதவியை இழந்தான்; ஐச்வர்யத்தையும்
இழந்தான்; மிகக் கஷ்டப்பட்டான்.
பிறகு அமுதத்தை எடுக்கச்
சமுத்திரத்தைக் கடைந்தபோது
மகாலக்ஷ்மி அதிலிருந்து
ஆவிர்ப்பவித்ததும் அவளது
அநுக்ரகத்தினால், இழந்த
பதவியை அடைந்தான். இப்படி
இந்திரன் சிம்மாசனத்தில்
உட்கார்ந்தபிறகு, லக்ஷ்மீகடாக்ஷத்தால்
இது ஏற்பட்டது என்று
நினைத்து, மகாலக்ஷ்மியைப்
பலவாறு துதிக்கிறான்.
அதிலுள்ள சில ச்லோகங்களை
இங்கு எடுத்துக் காட்டுகிறோம்.
அவற்றின் சுவையை அநுபவித்துப்
பணத்தின் பெருமையைக்
கண்டுகளியுங்கள்.
ஸத்யேந
ஸத்வசௌசாப்யாம் ததா
சீலாதிபிர் குணை: | த்யஜ்யந்தே
தே நராஸ் ஸத்ய: ஸந்த்யக்தா
யே த்வயா அமலே || த்வயா
அவலோகிதா: ஸத்ய: சீலாத்யைரகிலை
குணை: | குலைச்வர்யைசச்ச
யுஜ்யந்தே புருஷா நிர்குணா
அபி ||
ஸ ச்லாக்ய: ஸ குணீ
தந்ய: ஸ குலீந: ஸ புத்திமாந்
| ஸ சூர: ஸ ச விக்ராந்தோ
யஸ் த்வயா தேவி வீக்ஷித:
|| ஸத்யோ வைகுண்யமாயாந்தி
சீலாத்யா: ஸகலா குணா: | பராங்முகீ
ஜகத்தாத்ரீ யஸ்ய த்வம்
விஷ்ணுவல்லபே ||
லக்ஷ்மியின்
கடாக்ஷம் ஏற்பட்டு ஐச்வர்யம்
வந்துவிட்டால், புத்தியில்லாதவனும்
உயர்ந்த குலத்தில் பிறக்காதவனும்
நற்குணம் இல்லாதவனும்
உயர்ந்த புத்தி, உயர்ந்த
குலம், நற்குணம் அடைந்தவர்களாக
ஆகிவிடுகின்றனர். உண்மையில்
நாலு சாஸ்திரங்களிலும்
தேர்ச்சி பெற்றவன், உயர்ந்த
குலத்தில் பிறந்தவன்,
நல்ல ஒழுக்கம் சீலம்
முதலியவற்றைப் பெற்றவன்,
லக்ஷ்மியின் கடாக்ஷமற்றவனாக
இருந்தால் அவை இல்லாதவனாகவே
கருதப்படுகிறான். ஆக,
பணம் இருந்தால் மதிக்கப்படுகிறான்.
இல்லையென்றால் உயர்ந்தவனும்
தாழ்ந்தவனாகக் கருதப்படுகிறான்.
பணத்தினால்தான் மனிதன்
பெருமைப்படுகிறான் என்று
இப்பொழுதும் பத்ரிகையில்
சிலரை துதி செய்து புகழந்து
எழுதுகிறார்களே. காரணம்
என்ன? பணம்தான். பணத்தாசையால்
இன்னொரு சமயம் மற்றவனைப்
புகழ்ந்து எழுதுபவர்.
இது மாத்திரமா? அவனிடம்
ஒழுக்கமில்லாவிட்டாலும்
தனது புத்தியின் பெருமையைக்
காட்டுவதற்காக உன்னதமான
ரீதியில் எழுதுவது பண்டிதர்களின்
செயல். ஐயோ, இந்த விஷயத்தை
விஷ்ணுபுராணமே ஐயமறக்
கூறுகிறது.
ஜ்ஞாநவ்ருத்தாஸ்
தபோவ்ருத்தா: சீலவிருத்தாஸ்
ததாபரே | தே ஸர்வே தநவ்ருத்தஸ்ய
த்வாரி திஷ்டந்தி கிங்கரா:
||
என்று தனத்தின் பெருமை
மிகவும் அழகாகக் கூறப்பட்டுள்ளது.
வ்ருத்தன் என்றால் முதிர்ந்தவன்,
வயதானவன். ஓவ்வொரு விஷயத்திலும்
ஓவ்வொருவர் வயதானவர்கள்
(வ்ருத்தர்கள்). வயதையிட்டுச்
சிலர் பெரியவர்கள். முப்பது
வயதில் உள்ளவனைக் காட்டிலும்
எண்பது வயதில் உள்ளவர்
பெரியவர்தாமே? காலையில்
எழுந்து ஸ்நானம் முதலிய
உயர்ந்த சடங்குகளை சரிவரச்செய்து
மிகவும் வைதிகராக இருப்பவர்
இருபத்தைந்து வயதில்
இருந்தாலும், ஆசாரமே
என்ன என்பது தெரியாமலிருக்கும்
எண்பது வயதுள்ளவரைக்
காட்டிலும் பெரியவர்.
இதுபோல் சாஸ்திரங்களை
நன்கு கற்று வாக்கியார்த்தத்தில்
தோல்வியையே பெறாத மகா
வியாபகர்கள் புத்திமான்கள்
இருக்கின்றனர். இவர்கள்
அறியாத வயதைப் பெற்றவர்களானாலும்
சாமானியக் கல்விகளைப்
பெற்று முதிர்ந்த வயதை
உடையவரைக் காட்டிலும்
பெரியவர்கள்தாம்.
விப்ராணாம்
ஜ்ஞாநத: ச்ரைஷ்ட்யம்
க்ஷத்ரியாணாம் து வீர்யத:
| வைச்யாநாம் தாந்யதநத:
சூத்ராணாமேவ ஜந்மத: ||
பிராமணர்களில்
வயதை முன்னிட்டுச் சிறப்புக்
கிடையாது. அவனுடைய ஞானசம்பத்தை
இட்டுத்தான் சிறப்பு.
க்ஷத்திரியர்களுக்குப்
பராக்கிரமத்தை இட்டுத்தான்
சிறப்பு. வைச்யர்களில்
எவன் அதிகமாகத் தனதானியங்களைப்
பெற்றிருக்கிறானோ அவன்
பெரியவன். சூத்திரர்களில்தான்
முன் பிறந்தவன் பெரியவனாகக்
கருதப்படுவான் என்பது
சாஸ்திரத்தில் தேறின
பொருள். அந்தணர்களிலேயே
ஸ்ந்நியாஸ ஆசிரமத்தைப்
பெற்றவர் வயதில் சின்னவராக
இருந்தாலும் பெரியவராகக்
கருதப்படுவார். ஆசிரமப்ரயுக்தமாகச்
சின்னவர் பெரியவர் என்பதைத்
தெரிந்துகொள்ள வேண்டும்.
ஸ்ந்யாஸ ஆசிரமம் என்பது
எல்லா ஆசிரமங்களைக் காட்டிலும்
பெரியது. எனவே அந்த ஆசிரமத்தைப்
பெற்றவர் பெரியவராகக்
கருதப்படுகிறார். அங்கும்
கிருகஸ்தாச்ரமத்தில்
இருப்பவர் பெரிய ஞானியாக
இருந்தால் ஸந்யாஸ ஆசிரமத்தில்
உள்ளவரைக் காட்டிலும்
பெரியவர் என்றே கருத
வேண்டும் - அந்தணர்கள்
எந்த ஆசிரமத்தில் இருந்தாலும்
ஞானத்தை இட்டே அவர்களுக்குச்
சிறப்பு ஏற்பட்டபடியால்.
ஸ்ரீநிகமாந்தமஹாதேசிகன்
கிருகஸ்தாசிரமத்தில்
இருந்தும் அவரது ஞானத்தை
மதித்து அந்த மகானிடத்தில்
ஸந்யாஸிகள் காலக்ஷேபமே
செய்தார்கள். மேலும்
துறவி வேஷம் பூண்ட ஆஞ்சனேயர்
ராம-லக்ஷ்மணர்களைக் கண்டதும்,
'இவர்கள் ஞானத்தால் சிறந்தவர்கள்'
என்று அறிந்தபடியால்,
ஸாஷ்டாங்கமாக வணங்கி
அவர்களைப் பெருமைப்படுத்தினார்
என்று ஸ்ரீராமாயணத்தில்
சொல்லப்பட்டுள்ளது.
இது சாஸ்திரஸித்தமான
அர்த்தம்.
ஆக, வயதில்
பெரியவர்கள், ஆசாரத்தில்
பெரியவர்கள், ஞானத்தில்
பெரியவர்கள், தவத்தில்
பெரியவர்கள்-இப்படி ஒவ்வொரு
விஷயத்தை இட்டுப் பெரியவர்கள்
என்று உலகத்தில் பார்க்கிறோம்.
இதில் எல்லாரைக்காட்டிலும்
தனத்தில் பெரியவன் அதாவது
மகாதனிகன் தாழ்ந்தவன்.
வித்தத்தினால் (செல்வத்தினால்)
அறியப்படுகிறவன் (வித்தவ்ருத்தன்),
ஞானத்தினால் அறியப்படுகிறவனைக்காட்டிலும்
(ஞானவ்ருத்தனைக் காட்டிலும்),
சீலவித்தனைக் காட்டிலும்
தாழ்ந்தவனே. இப்படி இருந்தபோதிலும்
தனவிருத்தனுடைய வாசற்படியில்
மகான்களான ஞானவிருத்தர்
முதலியவர்கள் கையைக்
கட்டிக்கொண்டும் கிங்கரர்போல்
வாயைப் பொத்திக்கொண்டும்
நிற்கிறார்கள். இதற்கு
என்ன காரண்ம்? தனவிருத்தனிடமுள்ள
தனம்தான் காரணம். இவர்களோ
பணமில்லாமல் கஷ்டப்படுகிறவர்கள்.
குடும்பத்தை நடத்தக்
கைமுதல் இல்லாததனால்
அந்தப் பணக்காரர்களிடம்
தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
எவ்வளவு
கல்வி கற்றால் என்ன? எவ்வளவு
ஆசாரத்துடன் இருந்தால்
என்ன? எவ்வளவு நற்குணங்கள்
பெற்றால் என்ன? இவையெல்லாம்
பசியைப் போக்கிவிடுமா?
தனம் இருந்தால் தானே
அதைக் கொண்டு பசியைத்
தணிக்க முடியும்? ஆகையால்,
இப்படிப்பட்ட மகான்களும்
பணக்காரர்களைக் கண்டதும்
எழுந்து நின்று கைகூப்பி
வரவேற்பளித்துப் புஷ்பமாலையைக்
கழுத்தில் அணிவித்துப்
புகழ்மாலையை வாசித்துக்
கௌரவப்படுத்துகின்றனர்.
இவ் விஷயத்தில் ஒரு கவியின்
ரஸகனமான ச்லோகத்தைக்
கேட்டு ஆனந்தப்பட வேண்டும்.
கோ
நாம நா நுவ்ருத்தம் விசேஷதோ
தநவத: குருதே | வித்தேசபவநபித்தே:
ஸமீபமுபஸேவதே சம்பு:
||
குபேரனுடைய இடம் வடக்குத்
திக்கு. இந்திரனின் இடம்
கிழக்கு. வடக்குக்கும்
கிழக்குக்கும் நடுவிலுள்ள
திசை ஈசான்யம். ஈச்வரன்
என்ற ருத்திரன் அந்த
மூலைக்கு யஜமானன். குபேரன்
தனது இடமான வடக்குத்
திக்கில் பெரிய மாளிகை
கட்டிக் கொண்டு வசிக்கிறான்.
வடகிழக்கிலுள்ள பரமசிவன்
அவனது வீட்டுச் சுவரில்
தொங்கிக்கொண்டு நிற்கிறார்.
இதன் காரணம் என்ன? பணக்காரனை
உபசரித்துச் சேவித்தால்தான்
நமக்கும் பணம் கிடைக்கும்
என்று. இங்கு இதை நாம்
யோசிக்கவேண்டும். பரமசிவன்
திரிமூர்த்திகளில் ஒருவர்.
நினைத்தமாத்திரத்தில்
எல்லாவற்றையும் அழிக்கும்
சக்தியைப் பெற்றவர்.
பலராலும் கோயில் கட்டி
வணங்கி வழிபடும் தெய்வம்.
எல்லாம் அறிந்தவர், ஸர்வஜ்ஞர்
என்று இவரை எல்லாரும்
சொல்வதுண்டு. இப்படிப்பட்டவர்
- பெரிய மகான் - குபேரனுடைய
வீட்டுச் சுவரில் சாய்ந்துகொண்டு
பணத்துக்காகத் தவம் கிடக்கிறார்
என்றால் எவர்தாம் பணத்துக்காகப்
பிரபுக்களை உபசரிக்கமாட்டார்கள்?
பரமசிவனைப்போல் ஸர்வஜ்ஞராக
இருந்தபோதிலும் பிச்சையெடுத்துச்
சாப்பிடுபவர்கள்தாமே
பண்டிதர்கள்? எனவே வயிற்றை
நிரப்பப் பிரபுக்களை
உபசரித்தே ஆகவேண்டும்.
ஆகையால், ஞானம் முதலியவற்றினால்
எவ்வளவு பெரியவர்களாக
இருந்தபோதிலும் தனத்தால்
பெரியவனுடைய வீட்டுவாசலில்
கைகட்டி இருக்க வேண்டிய
நிலை ஏற்படுகிறது. ஆகையால்
மனிதர்களுக்குப் பணத்தினால்தான்
பெருமை ஏற்படுகிறது.
இந்தத்
தனிகனும் தான் பெருமையைச்
சம்பாதித்துக் கொள்வதற்காக
இந்த வித்வானின் பேச்சுக்களில்
மயங்கித் தன்னையும் மறந்து
பணத்தை வாரி இறைத்துவிடுகிறான்.
'இவர் நம்மிடத்தில் பிறரைத்
தூஷித்து நம்மைத் துதிசெய்கிறாரே
பணத்துக்காக, இப்படியே
நம்மையும் பிறரிடத்தில்
பணத்தாசையால் தூஷித்துப்
பிறரைத் துதிசெய்வார்'
என்பதை நினைப்பதே இல்லை.
தற்சமயம் தன்னை அவர்
புகழ்வதைக் கொண்டே எல்லாவற்றையும்
மறந்துவிடுகிறான். பெரும்பாலும்
வித்வான்களுக்கு இது
ஒரு குணம்: நல்லதோ கெட்டதோ
தெரியாது. இயற்கையாகத்
துதி செய்வது என்பது
ஏற்பட்டுவிடுகிறது. துந்துபி
என்பது ஒரு வாத்தியவிசேஷம்.
அதை அடிக்கும்போது அதன்
முகத்திலிருந்து 'தனம்
தனம்' என்றே வருகிறது.
அறிவில்லாததான அதன் வாயிலிருந்து
உண்டாகும் சப்தம் தனத்தையே
பேசுகிறது என்றால் அறிவுள்ள
மனிதனின் வாயிலிருந்து
தனம் தனம் என்ற சொல்
ஏன் கிளம்பாது?
துந்துபிஸ்
து நிதராம் அசேதநஸ் தந்முகாதபி
தநம் தநம்தநம் ஏவமேவ
நிநத: ப்ரவர்த்ததே கிம்
புநர் யதி ஸசேதநோ ஜந:
தனமுள்ளவன்
எவனாக இருந்தாலும் சரி,
அவனைத் துதித்துப் பணத்தைப்
பறித்துக்கொள்ளும்
தன்மை அறிஞர்களுக்கும்
உண்டு. ஒரு சமயம் தேவேந்திரன்
தன் பதவியிலிருந்து நழுவிவிட்டான்.
அப்போது மகாபலி சக்ரவர்த்தி
பதவியைப் பெற்றான். பிரம்மஞானம்
பெற்றவர்களும், இதுவரையில்
இந்திரனுக்கு அநுகூலமாக
இருந்தவர்களும், அவனைப்பற்றியே
யாகம் முதலியவை செய்து
வந்தவர்களுமான மகரிஷிகள்,
இந்திரன் பதவியை விட்டு
நழுவினதைக் கண்டு, அவனால்
நமக்கு ஸத்காரம் ஏற்படாது
என்று கருதி, மகாபலியைத்
துதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
முன்பெல்லாம் ரிஷிகள்
வேள்வி செய்யும்போது
இந்திரனைப்பற்றிய 'இந்த்ரோ
மே பலே ஸ்ரித:' என்ற மந்திரத்தைக்
கூறிவந்தனர். மகாபலி
பதவிக்கு வந்ததும், 'பலிர்
மே பலே ஸ்ரித:' என்றனர்.
'அக்நிர் மே பலே ஸ்ரித:'
என்பதை விட்டு, 'நமுசிர்
மே பலே ஸ்ரித:' என்று சொல்ல
ஆரம்பித்தனர். இதை ஒரு
கவி பரக்கக் கூறுகிறான்
-
ப்ரஹ்மர்ஷயோபி தநுஜேந்த்ரஸபாம்
ப்ரவிஷ்டா:, மந்த்ராக்ஷராணி
மகவாதிபதாங்கிதா நி | ஊஹேந
தாநவபதாந்யுபவேசயந்தோ ஹர்ஷாய
பேடுரஸூரேந்த்ரபுரோஹிதாநாம்
||
இப்படிப் பணத்தைக்
கொண்டு காலத்தைக் கழிக்க
வேண்டுமாகையால், அதைச்
சம்பாதிக்கக் கருதிப்
பணமுள்ளவர்களைச் சிலாகித்துப்
பேசச் சந்தர்ப்பம் ஏற்பட்டுவிடுகிறது.
அவர்களுடைய குலம், குணம்,
புத்தி முதலியவற்றை மறந்துவிடுகின்றனர்.
இப்படிப் புகழாதவன்,
இகலோக ஸுகத்தை இழந்துவிடுகிறான்.
எனவே இக்காலத்தில் பணத்தினால்தான்
மனிதனுக்கு மகிமை ஏற்படுகிறது.
ஆனால், ஞானம் முதலியவற்றால்
உண்மையில் மகிமையைப்
பெற்றவனுடைய புகழ் என்றைக்கும்
அழியாது; பணக்காரனுடைய
பெருமை தற்காலத்தில்
மாத்திரம்தான் இருக்கும்.
இதுதான் உண்மை.
பணத்தால்தான்
மனிதனுக்கு மதிப்பு.
உத்கர்ஷம் புகழ் என்று
சொன்னோம். வேலையில்லாத
புத்ரனை ஸம்பாதனம் இல்லாததால்
தாய் திட்டுவாள். "சோம்பேறி,
உனக்கு சோறு வடித்து
கொட்டுவது எப்படி"? என்று.
பிதாவும் அவன் விஷயத்தில்
ஸந்தோஷப்படமாட்டான்.
ஸஹோதரன் இவனுடன் பேச
ஸம்மதிக்க மாட்டான்.
வேலைக்காரன் சரியான ஸமயம்
சம்பளம் கொடுக்கவில்லை
என்று கோபம் கொள்வான்.
பிள்ளையும் தனக்கு உபயோகமில்லாத
பிதாவின் வார்த்தையை
செவிகொடுத்து கேளான்.
பரமஸுஹ்ருத் என்பவனும்
இவனைக் கண்டதும் ஏதாவது
பணம் கேட்பான் என்று
தூரத்தில் பார்த்தவுடன்
விலகி விடுவான். ஆக இவனை
மதிப்பார் இல்லை என்றான்
பர்த்ருஹரி என்னும் கவி.
இது வரையில் செல்வத்தான்
பெரியவன் என்பதைச் சொன்னோம்.
இனி
பார்ப்போம். ஒரு மூடனை
ஆயிரம் பேர்கள் சேர்ந்து
ஒரு காரண வசத்தால் மேடையில்
மணையை சேர்த்து உட்காரவைத்தால்
பெரியவன் ஆகிவிடுவானா?
சதாந்தம் நியாயம் என்று
சொல்வது உண்டு. நூற்றுக்
கணக்கான குருடர்கள் வெள்ளை
நிறமுள்ள காகத்தைப் பார்த்தேன்
என்று பலாத்கரித்துப்
பேசினால் வெள்ளை நிறமுள்ளதாய்
இருந்துவிடுமா? ஏதோ
சந்கேதம் வைத்து பூஜை
செய்ததால் பெரியன் ஆகிவிடுவானா?
நாம் ஸங்கேதத்தை விட்டு
குணத்தை சொன்னால் நம்மை
கோஷ்டியில் சேர்க்கமாட்டார்
என்று நினைத்து உண்மையை
விட்டு மற்றவர் போன
வழியில் செல்கிறான்.
இதுதான் உண்மை. கட்டுப்பாடு
என்பதுதான் அவர்களுக்கு
ப்ரதானம். நல்மார்க்கமில்லை.
ஆக குணம் படிப்பு தயை
மரியாதை ஸர்வபூத ஸுக்ருத்வம்,
கீதையில் சொன்ன அமானித்வாதிகள்
இவைகள் எவனிடமுள்ளதோ
அவன்தான் பெரியவன். கோடிக்கணக்கான
மக்கள் தேவதாந்தரத்தினிடம்
ஈடுபடுகின்றன. விழாக்களும்
நடத்துகின்றன. அதனால்
எம்பெருமானைவிட பெரியவன்
ஆகிவிடுவார்களா? கக்ஷிக்காரனும்
பலம். தோத்திரமும் பல
இரைச்சலோ அதிகம். ஆனாலும்
நல் நடத்தை இல்லை என்றால்
எப்படி பெரியவனாக முடியும்.
ஆக உண்மையில் பெருமை
பெறுவதற்கு ஆத்ம குணாதிகள்தான்
காரணம். "மஹாத்மா காந்திஜி
அவர்களுக்கு பெருமை உண்டாயிற்று.
ஊரெல்லாம் கொண்டாடினார்கள்.
இதற்கு காரணம் பணமா. அவர்
கதர்த் துணியைத்தான்
கட்டிக் கொண்டவர். அவர்
அஹிம்ஸை முதலான தர்மங்களை
உபதேசித்து அனைவருடனும்
ஸெளஹார்த்தத்தை காட்டினார்.
அங்கு பணம் காரணமா.
ஒருவருக்கு
நான்கு நாட்டுப் பெண்கள்.
அதில் ஒருத்தி மாமனார்
மாமியார் கணவனைச் சேர்ந்த
பந்துக்கள் முதலியவரிடமும்
பாசத்துடனும் கார்யங்கள்
செய்வதில் திறனும் பர்தாவுக்கு
அநுகூலமான நற்குணமுமுடையவள்.
ஆக அவளுக்கு பெருமை அதிகம்.
இவளை எல்லோரும் துதி
செய்வார்கள். மற்றவர்கள்
ராக்ஷஸிகளாகவும் தன்
கார்யத்திலேயே கண்ணோட்டமுடையவர்கள்.
அவர்களை எப்படி மற்றவர்
நினைப்பார்கள். பெருமை
அவர்களுக்கு எப்படி வரும்.
இப்படித்தான் ஆசார்யன்
சீடன் பர்தா, மனைவி புத்ரன்
தகப்பன் விஷயங்களிலும்
கண்டு கொள்வது. ஸ்ரீராமபிரானுக்கு
பெருமை என்பது உண்டு.
அதுதானே உஜ்வலம். இதைதான்
நாம் ஆலோசித்து நடக்கும்
முறையை அநுஸரிக்க வேண்டும்.
கைகேயி
சூர்பணகை அயோமுகி கூனி
இவர்கள் எல்லாத்தன்மையையும்
ஒரே உருவாக வந்த நாட்டுப்
பெண்ணுக்கு பெருமை ஏது.
பர்தாவும் அவளிடம் பயந்து
எதையும் சொல்லாமல் தவிக்கிறான்.
இப்படித்தான் இந்த உலகம்.
துறவியாக
ஆகிவிட்டார். மடாதிபதியாகவும்
ஆனார். ஆனால் ஞானமில்லை
என்றால் அவரை எப்படி
ஆதரிப்பார்கள். ஆத்ம
குணமில்லை என்றால் எப்படி
ஆதரிப்பார். சில இடங்களிலே
ஸங்கேதத்தால் ஆதரவு.
மூட ஜனங்கள். ஆட்டு மந்தை
போல் மேல் விழுவர். அவர்
எப்படி பெரியவர்? ஆக ஆத்ம
குணம் ஞானம் இருப்பவர்தான்
பெரியவர்.
*****
|