ஸாது தரிசனம்
இவ்வுலகில்
புண்ணிய கர்மாக்களைப்
பலர் செய்கின்றனர். சிலர்
வேள்வி முதலிய ஸத்கர்மாக்களையே
பிரதானமாகக் கருதி அநுஷ்டித்து
வருகின்றனர். மற்றும்
சிலர் குளம் வெட்டுவது,
கோவில் கட்டுவது முதலியவற்றையே
முக்கிய நோக்கத்துடன்
செய்வர். இன்னும் சிலர்
தீர்த்த யாத்திரையையே
விசேஷ புண்ணியம் என்று
எண்ணிச் செய்வர். ஏழை
மக்களுக்குத் தம்மால்
இயன்றவரையில் அன்னம்,
வஸ்திரம் முதலியவற்றைக்
கொடுத்து உதவுவதாகிற
தானமே பிரதான தர்மம்
என்று எண்ணிச் சிலர்
செய்வர். இப்படித் தானம்
செய்பவர்களிலும், சிலர்
ஆப்தர்களுடன் கல்யாணம்
முதலிய உத்ஸவங்களுக்குச்
சென்றால் தங்களுக்கு
வெகுமதியாகக் கிடைத்திருக்கும்
வஸ்திரம் முதலியவற்றை
அங்கு வந்திருந்தும்
யோக்கியதை இல்லாத காரணத்தினாலோ
வேறு எதனாலோ கிடைக்காமற்
போனவர்களுக்குத் தாங்கள்
கொடுத்து ஸந்தோஷப்படுத்துவார்கள்.
சில மகான்களுக்குக் கொடுக்க
வேண்டும் என்ற எண்ணத்துடன்
வைத்த பொருள்களை அவர்களுக்குக்
கொடுக்கவொட்டாமல்
தடுத்துத் தாங்களே பெற்றுக்கொள்ளும்
சிலரையும் பார்த்திருக்கிறோம்.
அவர்களைப்பற்றி நாம்
சிந்திக்கவே வேண்டாம்.
இன்னும்
சிலர், எப்பொழுதும்
பகவானையே நினைந்து நினைந்து
உருகிக் கண்களிலிருந்து
நீரைத் தாரைதாரையாகப்
பெருக்கிக்கொண்டு அவனிடத்திலேயே
ஈடுபட்டிருக்கும் ஸாதுக்களுடன்
கலந்து பரிமாறியும்,
அவர்களை வணங்கியும்,
அவர்களுடைய கடாக்ஷத்தை
அடைந்தும் இருப்பதே உயர்ந்த
தர்மம் என்று எண்ணுவர்.
இப்படி எத்தனையோ ஸத்காரியங்கள்
உலகில் உள்ளன. இவற்றுள்
எந்தக் காரியம் உத்தமமான
புண்ணியம் என்றால் கடைசியில்
சொன்ன ஸாது தரிசனமே
எல்லாவற்றைக் காட்டிலும்
சிறந்தது. இதற்கு நிகர்
எதுவுமே இல்லை. சீக்கிரத்தில்
நினைத்த மாத்திரத்தில்
பலனை அளிக்கக்கூடியது
இதுவே. ஆயுள், ஆரோக்கியம்,
ஐசுவரியம், மோக்ஷம்
முதலிய எல்லாப் பலன்களையும்
இது அளிக்க வல்லது. ஸ்ம்ருதி
இதிஹாஸ புராணங்களில்
இது பிரஸித்தமானது.
கங்கை,
கோதாவரி, யமுனை, ஸரஸ்வதி,
காவேரி முதலிய புண்ணிய
தீர்த்தங்கள் உள்ளன.
இவற்றில் நீராடுவதனால்
பாவங்கள் அனைத்தும் விலகும்;
உயர்ந்த க்ஷேமமும் உண்டாகும்.
இவை வெறும் தண்ணீர்தாமே
என்று நினைக்க வேண்டாம்;
எல்லாம் புண்ணிய தீர்த்தங்கள்.
"கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
கடுவினை களைந்திடகிற்கும்"
என்று கங்கையின் பெயரைச்
சொன்ன மாத்திரத்தால்
பாவங்கள் விலகிவிடும்
என்று ஆழ்வார் பேசுகிறார்.
"எழுமையுங்கூடி ஈண்டிய
பாவம் இறைப் பொழுதளவினில்
எல்லாம் கழுவிடும் பெருமைக்
கங்கை" என்றும் இதன் பெருமையைப்
பரக்கப் பேசியிருக்கிறார்.
கங்கே சங்கேதியோ ப்ருயாத்
யோஜணானாம் சதைரபி என்றது
சாஸ்த்ரம். எத்தனையோ
மைல் கணக்கில் வெகுதூரத்தில்
இருந்தாலும் கங்கை என்று
சொல்லி ஸ்நானம் செய்தால்
அனைத்து பாவங்களும் ஒழிந்து
விடுமாம். 'விஷ்ணுவாம்
பாதி' என்றும் சொல்வது.
"கங்கையிற் புனிதமாய்
காவிரி" என்று காவிரியின்
பெருமையை மிகச் சிறப்பித்துக்
கூறியிருக்கிறார் தொண்டரடிப்
பொடியாழ்வார்.
கோதாவரியைப்பற்றி
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்,
"கோதாவரீ ஜகதிதம் பயஸா
புநீதே; யஸ்யாம் ஸமேத்ய
ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதீப்ரப்ருதயோபி
பவந்தி புண்யா:" என்று
புகழ்கிறார். "எந்தக்
கோதாவரி நதியில் ஸங்கமகாலத்தில்
கங்கை முதலிய நதிகள்
சேர்ந்து தங்களுடைய பாவங்களைப்
போக்கிக்கொண்டு மற்றவர்களையும்
பரிசுத்தமாக்கிப் புண்ணியங்களாகின்றனவோ
அப்படிப்பட்ட கோதாவரி
உலகத்தையெல்லாம் பரிசுத்தமாக்குகிறது"
என்றார். "தூய பெருநீர்
யமுனை" என்று யமுனையை
ஆண்டாளே ச்லாகித்திருக்கிறாள்.
இப்படி ஸ்நானம் செய்வதனால்
பரிசுத்தமாக்கும் புண்ணிய
தீர்த்தங்கள் இவை.
நம்முடைய
கண்களினால் கண்ட மாத்திரத்தினாலேயே
நம்மைச் சுத்தமாக்கும்
ஸேது. "ஸேதும் த்ருஷ்ட்வா
ஸமுத்ரஸ்ய ஸர்வபாபை:
ப்ரமுச்யதே" என்று பெரியோர்
கூறுவதுண்டு. "வ்யபஜ்யத
ஸரித்பதி: ஸக்ருத் அவேக்ஷணாத்
தத்க்ஷணாத், ப்ரக்ருஷ்டபஹுபாதகப்ரசமஹேதுநா
ஸேதுநா," "எம்பெருமானின்
தயை, எம்பெருமானை ராமனாகப்
பிறக்கச் செய்து, ஸமுத்திரத்தை
ஸேதுவைக் கொண்டு இரண்டாகப்
பிரித்தது. ஸமுத்திரத்தின்
நடுவில் அணையை (ஸேதுவை)க்
கட்டினால் ஸமுத்திரம்
இரண்டாகப் பிரியும் அல்லவா?
அந்த அணை எப்படிப்பட்டது
என்றால், ஒரு தடவை அதை
நாம் கண்களால் பார்த்துவிட்டால்,
அதே க்ஷணத்தில், எத்தனையோ
ஜன்மங்களில் நம்மால்
செய்யப்பட்ட கொடுமையான
பாவங்கள் அனைத்தையும்
அழித்துவிடும்" என்று
சொல்கிறார். திருப்புல்லாணி
- விஷ்ணுவின் இடதுகால்
கட்ட விறலிலிருந்து உண்டான
கங்கையே! என்று ப்ரார்த்தித்து
ஸ்நானம் செய்ய வேண்டும்.
அப்பொழுது எம்பெருமானிடத்தில்
தடங்கலின்றி பக்தி உண்டாகும்.
மேலும் மோக்ஷமாகிற உன்னதமான
பலனும் கிட்டும். ஆதி
சங்கர பகவத்பாதர் இதன்
பெருமையை இப்படியாகப்
புகழ்ந்திருக்கிறார்.
திருப்புல்லாணியில்
ஸமுத்ரஸநானம் விசேஷபலனைக்
கொடுக்கும். 'அர்த்த
ஸேது ஸ்நானம்' எனச் சொல்வர்.
இரண்டு முறை செய்தால்
பூர்ண ஸ்நாநம். இது ஸுலப
மானது.
ஆகையால் மேல்கூறிய
தீர்த்தங்கள் எல்லாம்
வெறும் தண்ணீர்மயம் என்று
நினைக்கக் கூடாது, உத்தமமான
புண்ணிய தீர்த்தங்கள்.
இப்படியே
திருக்கோவில்களில்
பிரதிஷ்டை செய்யப்பெற்று,
கண்டு வணங்கினவர் களுக்கு
எல்லாப் பலன்களையும்
அளிக்கும் தெய்வங்களை
வெறுங் கல் மரம் செம்பு
என்று நினைக்கக்கூடாது.
"எவனொருவன் ஆசார்யனை
நம்மைப் போல் ஒரு சாதாரண
மனிதர்தாம் என்று எண்ணுகிறானோ,
கோயில்களிலுள்ள எம்பெருமானை
ஸாதாரணமான மரம் மண் கல்
என்று எண்ணுகிறானோ அவன்
உடனே அழிந்து விடுவான்,
நரகத்தையும் அடைவான்"
என்று சாஸ்திரம் கூறுகிறது.
கோயில்களிலுள்ள
எம்பெருமான் எந்த உபாதான
த்ரவ்யத்தால் செய்யப்பட்டான்
(அதாவது மரம், கல், சுண்ணாம்பு,
செம்பு) என்று ஆராய்ச்சி
செய்வது 'மாத்ரு யோநிபரீக்ஷாதுல்யம்'
என்று பெரியோர் பணிப்பர்.
ஆகையால் தீர்த்தங்களும்
புண்ணிய தீர்த்தங்கள்;
கோயில்களில் அர்ச்சையில்
எழுந்தருளியிருப்பவனும்
எம்பெருமானே. இதில் ஐயம்
இல்லை. இந்தப் புண்ணிய
தீர்த்தங்களும் எம்பெருமானும்
நம்முடைய பாவங்களைப்
போக்கி, க்ஷேமங்களைக்
கொடுப்பது வாஸ்தவம்.
ஆனால் உடனடியாக இதைச்
செய்வதில்லை. ஸாதுக்களின்
தரிசனமோ அடுத்த க்ஷணமே
நம்மைப் பரிசுத்தமாக்கிவிடும்;
எல்லாப் பலனையும் கொடுக்கும்.
அப்படிப்பட்ட பெருமை
பெற்றது ஸாது தரிசனம்.
இவ்விஷயத்தில் பெரியோர்
பரம்பரையாகக் கூறியுள்ள
ஒரு புராணக் கதையை இங்கு
எடுத்துக் காட்டுகிறோம்.
ஓர்
ஊரில் ஓர் அந்தணர் இருந்தார்.
அவர் கல்வி அனைத்தும்
கற்றவர்; புராணங்களை
பயின்றவர்; ஒழுக்கத்துடன்
இருப்பவர்; நல்ல காரியங்களைச்
செய்பவர்; பெரிய பணக்காரர்.
அவர் தமது செல்வத்துக்குத்
தகுந்தாற்போல் பெரிய
மடம் கட்டி அங்கே சிஷ்யர்களுக்கு
ஆஹார ஸெளகரியங்களைச்
செய்து வைத்து வேதம்
முதலியவற்றைக் கற்றுக்
கொடுத்தார். ஆங்காங்கு
அன்னசாலைகளை ஏற்படுத்திப்
பசியுடன் வந்தவர்களுக்கு
அன்னதானமிடச் செய்தார்.
ஏழை மக்களுக்கு வஸ்திரம்
முதலியவற்றைக் கொடுத்து
உதவி செய்தார். பல இடங்களில்
யாகம் முதலயவற்றைச் செய்து
வைத்தார். தாமும் தம்மால்
இயன்றவரை தமக்கு உசிதமான
வேள்விகளைச் செய்து வந்தார்.
பல திவ்யதேசங்களில் கோவில்களைக்
கட்டினார். பல இடங்களில்
தடாகங்கள் முதலியன வெட்டித்
தீர்த்தஸெளகரியம் செய்து
வைத்தார். இப்படிப் பல
நல்ல காரியங்களைச் செய்து
வந்தபோதிலும் ஒரு நாள்
இரவு இவர் மனத்தில் ஏதோ
ஒரு எண்ணம் உண்டாயிற்று;
அதாவது - 'வேதம், ஸ்ம்ருதி
முதலியவற்றில் எத்தனையோ
நல்ல காரியங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
அவற்றை நாம் செய்துகொண்டுதான்
வருகிறோம். ஆனாலும்
இந்த நற்காரியங்களில்
எது பிரதானம், உத்தமம்?
இதை நாம் அறிந்துகொள்ள
வேண்டும்' என்று.
காலை
எழுந்தவுடன் ஒரு ஸபையை
ஏற்படுத்தி அதன் மூலமாக
அறிய முயன்றார். அந்த
ஸபையில் வந்த பெரியோர்கள்
அவர்வர்களுக்குத் தெரிந்த
வரையில் சாஸ்திரங்களைக்
கொண்டு எதை எதையோ சொன்னார்கள்.
இவர் திருப்தியடையவில்லை.
சில நாள் கழிந்த பிறகு
ஒரு குளத்தில் வழக்கம்போல்
ஸ்நானம் முதலியவற்றைச்
செய்து வீட்டுக்கு வரக்
கிளம்பினார். அப்பொழுது
நாரத மகரிஷி அங்கு வந்து
இவரைப் பார்த்து, "நீர்
ஏதோ மனக்கலக்கத்துடன்
இருப்பதாகத் தெரிகிறது.
அது என்னவென்று சொன்னால்
அந்தக் கலக்கத்தைப் போக்கடிக்கலாம்"
என்றார். உடனே இந்த அந்தணர்
தம் மனத்திலிருக்கும்
ஸந்தேஹத்தை எடுத்துரைத்தார்.
நாரதர் இதைக் கேட்டு,
'நாம் சொல்வதால் மாத்திரம்
இவரது ஸந்தேஹம் தீராது'
என்று எண்ணி, இவரைப் பார்த்து,
"நான் ஒன்று சொல்லுகிறேன்;
அதன்படி செய்தால் உம்முடைய
ஐயம் தீரும்" என்றார்.
இதைக் கேட்ட அந்தணர்,
"அப்படியே செய்கிறேன்"
என்று இசைந்தார்.
"அந்தணரே!
இங்கிருந்து பத்து மைலுக்கு
அப்பால் தெற்கே ஒரு மலை
இருக்கிறது. அங்கு ஒரு
தவளை வசிக்கிறது. அதைச்
சீக்கிரத்தில் அணுகிக்
கேட்டால் விடை கிடைக்கும்"
என்றார் நாரதர். இதைக்
கேட்டதும் அந்தணர் பரபரப்புடன்
அந்த மலைக்குச் சென்று
அந்தத் தவளையைக் கண்டுபிடித்தார்.
தவளை இவரைக் கண்டு ஸமீபத்தில்
வந்து பேச ஆரம்பித்தது.
இவருக்கு அடக்க முடியாத
ஸந்தோஷம். இந்த ஸமயம்
எதிர்பாராமல் அந்தத்
தவளையை ஒரு மலைப் பாம்பு
வந்து விழுங்கிவிட்டது.
ஐயோ பாவம்! இவர் என்ன
செய்வார்? மறுமடியும்
நாரதர் இருக்குமிடம்
வந்து நடந்ததைச் சொன்னார்.
நாரதரும்,
"தவளை போனால் போகட்டும்.
ஐந்து மைலுக்கு அப்புறம்
ஓர் ஆலமரம் இருக்கிறது.
அதில் கிளிக்குஞ்சு ஒன்று
வசிக்கும். அதை அணுகிக்
கேளும்" என்றார். அந்தணர்
ஆலமரத்தினிடம் சென்று
கிளிக்குஞ்சைப் பார்த்தார்.
கிளிக்குஞ்சு பேச ஆரம்பித்து,
இவர் இருக்கும் பக்கம்
திரும்பி வர முயன்றது.
அப்போது அது பிடி தவறிக்
கீழே விழுந்து ஒரு நாயால்
கொல்லப்பட்டு இறந்துவிட்டது.
அந்தணர் மறுபடி நாரதரிடம்
வந்து நடந்ததைச் சொன்னார்.
அவர், "சரி, இங்கே அருகிலிருக்கும்
குன்றின் பக்கத்தில்
பசு ஒன்று கன்றுடன் இருக்கிறது.
அந்தக் கன்றைக் கேளும்"
என்றார். இவரும் ஓடினார்.
அந்தக் கன்றைப் பார்த்துக்
கேட்கவும் கேட்டார்.
அந்தக் கன்று ஏதோ சொல்ல
ஆரம்பித்தபோது திடீரென்று
ஒரு புலி பாய்ந்து கன்றைத்
தின்றுவிட்டது. இவர்
பயந்து ஓடி வந்து நாரதரிடம்
சொன்னார்.
நாரதர், "இதுதான்
கடைசித் தடவை. இதைச் செய்துவிடும்.
வடக்கே ஓர் அரசன் இருக்கிறான்.
அவனுடைய பத்தினி பத்து
மாதம் கர்ப்பவதியாக இருக்கிறாள்.
நீர் அங்கே போகும்போது
அவள் குழந்தையைப் பெற்றெடுப்பாள்.
அந்தக் குழந்தையைத் தங்கத்
தட்டில், பிறக்கும் போது
ஏந்தும்படி செய்து அந்தக்
குழந்தையை நீர் கேட்டால்
உமது ஸந்தேஹம் நீங்கிவிடும்"
என்றார்.
இதைக் கேட்டதும்
அந்தணர், "எனக்கு ஸந்தேஹமும்
போக வேண்டாம். நானும்
அங்கே போக வேண்டாம்.
நான் மூன்று இடங்களில்
சென்றபோதும் ஆங்காங்கே
அவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டது.
இங்கும் ஏதாவது அம்மாதிரி
நடந்தால் அரசன் என் தலையை
வெட்டிவிடுவான்" என்றார்,
நாரதர்,
இதைக் கேட்டதும் புன்னகை
புரிந்து, "நீர் பயப்பட
வேண்டாம். தைரியமாகச்
செல்லும்" என்று ஆசீர்வதித்தார்.
அந்தணர் அவரது ஆசீர்வாதததைப்
பெற்றுக்கொண்டு அவ்வரசனிடம்
சென்று, தங்கத் தட்டில்
அந்தக் குழந்தையைப் பார்க்க
வேண்டும் என்றார். அரசன்
ஆச்சரியப்பட்டு அவ்விதமே
செய்தான். பிறகு இவர்
குழந்தையைப் பார்த்துப்
பேசத் தொடங்கினார்.
குழந்தை சிரித்துக் கொண்டு
தலையில் கையைக் குவித்து
நமஸ்கரித்து, "உம்மை நாரதர்தாமே
அனுப்பினார்?" என்று கேட்டு,
"இன்னமும் உமக்கு விடை
ஏற்படவில்லையா?" என்றது.
"எனக்கு
ஒன்றும் விளங்கவில்லையே!"
என்றார் அந்தணர்.
"தவளையாகவும்
கிளிக்குஞ்சாகவும் பசுங்கன்றாகவும்
இப்போது குழந்தையாகவும்
இருப்பது நான்தான். ஸாதுவான
உம்முடைய தரிசனம்தான்
படிப்படியாக என்னை உயர்ந்த
பிறவியை அடையும்படி செய்தது.
உம்முடைய தரிசனம் எனக்கு
உண்டாகாமலிருந்திருந்தால்
தவளையாகவே எத்தனையோ
வருஷம் இருக்க வேண்டியதாக
இருக்கும். இந்த க்ஷத்திரிய
வம்சத்துக் குழந்தையாகப்
பிறந்திருக்க நேரிடாது.
உங்களுடைய அநுக்கிரகத்தால்
தீர்க்கமான ஆயுள், ஆரோக்கியம்,
ஐசுவரியம் இவற்றைப் பெற்றுச்
சக்கரவர்த்தி பதவியில்
இருக்கப் பொகிறேன்.
மேலும், வேதமோதும் பிராம்மண
குலத்தில் பிறந்து நித்யகர்மாநுஷ்டானங்களை
விடாமல் சரிவரச் செய்து
உயர்ந்த ஆசார்ய ஸம்பந்தத்தைப்
பெறப்போகிறேன். அதன்
மூலமாக நற்கதியைப் பெற்றுப்
பரம நிஸ்ரேயஸமான மோக்ஷத்தையும்
அடையப் போகிறேன். ஆகையால்
எல்லா ஸத்காரியங்களைக்
காட்டிலும் 'ஸாது தரிசனம்'
என்னும் ஸத்காரியமே உத்தமமானது.
இதைத்தான் நாரத மகரிஷி
செய்கையிலே காட்ட விரும்பி
இம்மாதிரி ஏற்படுத்தினார்"
என்று சொல்லித் தங்கத்
தட்டிலிருந்து கீழே விழுந்து
'க்வா, க்வா,' என்று அழ ஆரம்பித்துவிட்டது.
அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
அந்தணர் ஸந்தேஹம் தெளிந்து
தமது இருப்பிடம் வந்து
சேர்ந்தார்.
மேலும்
ஆளவந்தார் தனது ஸ்தோத்ர
ரத்னத்தில் 'மஹாத்மபிர்மாம்
அவலோக்யதாம் நய' என்றார்.
அதாவது 'எம்பெருமானே
தேவரீர் இதை செய்தால்
போதும். மஹாத்மாக்களான
ஸாதுக்கள் என்னைக் குளிர
கடாக்ஷிக்க வேண்டும்.
இந்த அநுக்ரஹமே போதும்
என்று. இதனால் சாது தரிஸனம்
மிகைப்படுத்தப்பட்டது.
முக்யமான விஷயம் ஒன்று
கேண்மின். சபரி இராமனைப்
பார்த்துச் சொல்லுகிறாள்.
"சக்ஷஷா தவ ஸெளம்யேன பூதாஸ்மி
ரகுந்தன" என்று. எவன் ராமனைப்
பார்க்கவில்லையோ, எவனை
இராமன் பார்க்கவில்லையோ,
அவ்விருவருடைய பிறப்பு
பயனற்றது. தன்னைத்தானும்
நிந்தித்துக் கொள்வான்
என்பது ராமாயணம். ஆக எனக்கு
உன் தர்சனமும் கிடைத்தது.
நீயும் என்னை குளிர கடாக்ஷித்தாய்.
ஆகையால் நான் பாவங்களிலிருந்து
விடுபட்டு ப்ரஹ்மலோகத்தை
அடைகிறேன் என்றாள். இப்படி
உன் தர்சனத்துக்குக்
காரணம் மஹான்களை ஸந்தித்து
அவர்களுக்கு பணிவிடை
செய்தது தான். 'யானஹம்
பர்யசாரிஷம்' என்றாள்
அவர்களது தர்ஸனமும் பணிவிடையும்
வீணாகாது. மிக உயர்ந்த
பலத்தை கொடுத்தே தீரும்.
ஸ்வாமி தேசிகனும் ரகுவீரகத்யத்தில்
"அவன்த்ய மஹ்ம" என்கிற
சூர்ணிகையால் சொன்னார்.
ஆக உனது தர்சனம் மஹான்களுடைய
பரிசர்யயால் ஏற்பட்டது.
உன்னத பலத்தைக் கொடுக்கும்
திறமையும் பெற்றது என்பது.
ஸம்பாஷா தர்சனம் ஸ்பர்ச:
கீர்த்தனம் ஸ்மரணம் நதி:
பாவனானி கிலைதானி ஸாதூநாம்
இதிசுச்ரும. ஸேவ்யா: ச்ரேயோசர்திபி:
ஸந்த: புண்ய தீர்த்த பலோபமா:
க்ஷணோபாஸந யோ | கோபி
நதேஷாம் நிஷ்பலோ பவேத்
| ஸாதுநாம் தர்சனம் புண்யம்
தீர்தபூதா: ஹிஸாதவ:" காலேன
பலதம் தீர்தம் ஸத்ய: ஸாது
ஸமாகம:.
'ஸாதுக்களை பார்ப்பது
தொடுவது சொல்வது ஸ்மரிப்பது
வணங்குவது, இவை பரிசுத்தியைக்
கொடுக்கும். ஸ்ரேயஸ்ஸை
விரும்பும் மனிதன். க்ஷண
காலமாவது ஸாதுக்களுடன்
சேரவேண்டும். அது நிஷ்டலமாகாது.
சீக்ரத்தில் பலம் கொடுக்கவல்லது'
என்று புராணம். சேர்ந்தால்
ஸாதுக்களுடன் சேரவேண்டும்;
இவர்களுடன் சண்டை செய்தாலும்
நன்மையைக் கொடுக்கும்.
வஸிஷ்டருடன் விவாதம்
செய்த விச்வாமித்ரர்
ப்ரஹ்மரிஷியானார் என்பதைக்
கேட்டுள்ளோம். மூடர்களுடன்
சேர்க்கை நற்புத்தி பெற்றவனையும்
கெடுத்து விடும். ஸுவர்ணமலையை
ஆச்ரயித்த கருப்பான பக்ஷியும்
ஸ்வர்ணமாக மாறிவிடுகிறது.
ஆக அவர்களுடன் வாஸம்
செய்ய வேண்டும்.
மஹான்களுடைய
வீட்டில் புழு ஜன்மம்
எடுத்தாலும் உயர்ந்தது.
தனிகனுடைய வீட்டில் ஸ்ரீமானாக
பிறப்பும் வேண்டாம் என்றார்
ஆளவந்தார். எனவே மனிதனோ
பக்ஷியோ எவனாக இருந்தாலும்
வைஷ்ணவ ஸம்பந்தமிருந்தால்
நல்ல கதியை அடைவான் என்கிற
சாஸ்த்திரத்தை நோக்க
வேண்டும்.
ஜலத்தின்
சேர்க்கையால் எவ்வாறு
மண் கட்டி கறைந்து விடுகிறதோ
அதே போலத்தான் அஸத்
புருஷர்களுடன் தர்சனம்
ஸ்பர்சனம் சேர்க்கை ஸம்பாஷணம்
முதலியவை நம்முடைய தர்மத்தையும்
ஆசாரத்தையும் அழித்துவிடும்.
'உள் ஆசாரமில்லாமல்
கேவலம் ஜடை பவித்ரமாலை
முதலியவைகளை மாத்திரம்
தரித்தும் யக்ஞோபவீதம்,
பவித்ரம் இருகையிலும்
தரித்து வேஷதாரிகளான
அஸத்துக்களுடன் சேர்வதும்,
பித்ருதர்பணம் ச்ராத்தம்
முதலிய செய்ய வேண்டிய
கடமைகளை செய்யாதவனும்
எவனோ அவனுடன் சேர்வதால்
நரகம்தான் வரும் என்றது
நீதி.
"தல சயனத்துரைகின்ற
ஞானத்தின் ஒளி உருவை
நினைவார் என் நாயகரே",
'நச்சித்தொழுவாரை நச்சென்றன்
நன் நஞ்சே', என்றும் பாகவத
சேர்கையை திருமங்கை யாழ்வார்
கூறினார்.
குலசேகரப்
பெருமாளும் இதை வலியுருத்தினார்.
அயர் வெய்தும் மெய்யடியார்கள்
தம் ஈட்டம் கண்டிடக்
கூடுமேல் அது காணும்
கண் பயனாவதே என்றார்.
இங்கு பதிகத்தில் பாகவதப்
பெருமையும் அவர்களின்
சேர்கைப் பெருமையும்
நன்கு அனுபவிக்கப்பட்டுள்ளது.
*****
|