சதுரங்கம்
உலகத்தில்
எத்தனையோ விளையாட்டுக்கள்
இருக்கின்றன. பள்ளியில்
பையன்கள் கோலிக்குண்டு,
கிரிக்கெட், வாலிபால்
முதலிய விளையாட்டுக்களை
விளையாடுவார்கள், இந்த
விளையாட்டெல்லாம் உல்லாசமாகப்
பொழுது போக்குவதற்குக்
கைப்பற்றப்படுகின்றன.
அவரவர்
வயதுக்கும் உத்தியோகத்துக்கும்
நடத்தைக்கும் தகுந்தபடி
அந்த அந்த விளையாட்டுக்களில்
இறங்குவது வழக்கம், காலையிலிருந்து
குடும்ப ரக்ஷணத்திற்காகப்
பல நிர்ப்பந்த வேலைகளைச்
செய்கிறவர்கள் உடலிலும்
மனத்திலும் ஏதோ ஒருவிதமான
களைப்பை அடைவதனால் இந்த
சிரமம் தீரச் சில விளையாட்டுக்களை
கடைபிடிப்பது வழக்கம்.
கீழ்ச் சொன்ன விளையாட்டுக்களைப்போல்
நாய்-புலி, தாயக்கட்டை,
சதுரங்கம் முதலியவற்றையும்
வீீட்டில் சிநேகிதர்களும்
ஆண் பெண் தம்பதிகளும்
ஆடுவார்கள்,
தருமபுத்திரர்
துரியோதனனுடன் அக்ஷங்களை
(காய்களை)க் கொண்டு த்யூதம்
என்னும் விளையாட்டை ஆடினார்
என்பது பாரதத்தில் அனைவருக்கும்
தெரிந்ததே. இதைத்தான்
சதுரங்கம் என்றும் சொல்லுவதுண்டு.
இந்த விளையாட்டு வேடிக்கையாகப்
பொழுதுபோக்க ஆடுவதும்
உண்டு. பந்தயம் வைத்துப்
பணம் சம்பாதிக்க ஆடுவதும்
உண்டு. தருமபுத்திரர்
இம்மாதிரி ஆட்டத்தை ஆடிச்
சகுனிமூலமாகத் தோல்வி
அடைந்து தமது ராஜ்யத்தை
இழந்தார் என்பதை நாம்
அறிந்திருக்கிறோம்.
இப்படி பந்தயத்தை வைத்து
ஆட்டம் ஆடுவது அவ்வளவு
நன்மை தராது. யார் தோல்வி
அடைந்தாலும் அவர்களுக்குச்
செல்வம் போகிறபடியாலும்,
மற்றவர்கள் வறுமையை அடைவார்களாகையாலும்
மனத்துக்கு வருத்தம்
உண்டாவது நிச்சயம். ஆகையால்
விஷயமறிந்தவர்களும்,
நியாயமான வழியில் இருப்பவர்களும்
இப்படி பணத்தை வைத்து
ஆடமாட்டார்கள். மனம்
நிம்மதி அடைய வேண்டுமென்றும்,
பொழுது உல்லாசமாகப்
போக வேண்டும் என்றும்
எண்ணியே இந்தத் துறையில்
இறங்குவார்கள். வீட்டில்
தம்பதிகள் பொழுது போக
ஆனந்த விகடன், கல்கி முதலிய
பத்திரிக்கைகளைப் படிப்பது
போலச் சதுரங்கம் என்னும்
விளையாட்டையும் ஆடுவார்கள்.
இதை பல இடங்களில் நாம்
பார்த்திருக்கிறோம்.
இம்மாதிரி மனிதத் தம்பதிகள்
விளையாடுவதில் ஓர் அதிசயமும்
இல்லை. ஸாக்ஷாத் பகவானும்
அவருடைய மஹிஷியும் (திவ்ய
தம்பதிகளுமே) இந்த விளையாட்டைக்
கைப்பற்றுகிறார்களாம்.
அவர்களும் எத்தனை காலம்
தான் வெறுமனே இருப்பார்கள்?
பொழுதைப் போக்க ஏதாவது
ஒரு வழியைப் பிடிக்க
வேண்டும் அல்லவா?
முதலில்
சதுரங்கம் எனபது என்னவென்று
விளக்கி, அவர்கள் கைப்பற்றும்
ரீதியைப் பிறகு விளக்குகிறோம்.
இரண்டு கட்சிக்காரர்கள்
தங்கள் இருவருக்கும்
நடுவில் ஒரு சதுரங்கப்
பலகையை வைப்பார்கள்.
அந்தப் பலகையில் வெண்மை,
கருமை, செம்மை ஆகிய நிறங்களில்
கட்டங்கள் கட்டப்பட்டிருக்கும்.
சதுரங்க விளையாட்டுக்காக
ஏற்பட்டுள்ள காய்கைகளை
வைக்கவேண்டிய இடங்களும்
அந்தப் பலகையில் இடம்
பெற்றிருக்கும். பாய்ச்சிகளை
உருட்டி அந்த அந்த இடங்களில்
காய்களை வைத்து உல்லாசமாக
ஆடிப் பொழுது போக்குவார்கள்.
இது உலக இயற்கை. இந்த வகையே
கைப்பற்றி திவ்ய தம்பதிகளும்
விளையாடுவார்கள்.
நம்
ஸம்ப்ரதாயத்தில் சேதனம்,
அசேதனம், ஈஸ்வரன் என்ற
மூன்று தத்துவங்கள் உள்ளன.
இதில் சேதனன் என்பவர்
மூவர் - பத்தன், முக்தன்,
நித்யன் என்று. ஸம்ஸார
மண்டலத்தில் மூழ்கிக்
கிடந்தும் பலவிதமான ஸுகதுக்கங்களை
அநுபவித்தும் இருப்பவர்
பத்தர் என்று கூறப்பெறுவர்.
ப்ரக்ருதி ஸம்பந்தம்
பெற்றுக் கர்ம பாசத்தால்
கட்டப்பட்டிருப்பவர்
பத்தர் என்று தாத்பர்யம்.
இந்தப் ப்ரக்ருதி ஸம்பந்தத்தை
விட்டு, ஸ்ரீ வைகுண்ட
லோகத்தில் எம்பெருமான்
அனுபவத்தை பெற்று மகிழ்ச்சியுடன்
இருப்பவர்கள் முக்தர்கள்.
கர்ம பாசத்திலிருந்து
விலகி சுகானுபவம் பண்ணுகிறவர்கள்
என்றதாயிற்று. கர்ம ஸம்பந்தமே
எப்போதும் இல்லாமல்
பகவானுக்கு அடிமையைப்
பெற்று ஒருபோதும் ப்ரக்ருதி
சம்பந்தம் இல்லாமல் ஸ்ரீ
வைகுண்ட லோகத்தில் பகவதஅனுபவம்
பண்ணுகிறவர்கள் நித்யஸுரிகள்.
இவர்களுக்கு எப்பொழுதுமே
ப்ரக்ருதி மண்டலத்தில்
கர்ம ஸம்பந்தத்தினால்
பிறப்பே கிடையாது, முன்பு
பத்தனாக இருப்பவன்தான்
முக்தனாகிரான். அம்மாதிரி
அல்லர் நித்யர்கள்.
அசேதனம்
என்பது ப்ரக்ருதி, காலம்,
சுத்த ஸத்வம் என்று மூன்று
வகைப்படும். இதில் ப்ரக்ருதி
என்னும் ஒரு பொருளைச்
சாஸ்திரத்தைக் கொண்டுதான்
நாம் அறிய முடியும். அதைக்
கண்ணால் பார்த்து அறிந்து
கொள்ள முடியாது. ஆனால்
அதன் காரியத்தைக் கண்களால்
பார்த்துத் தெரிந்து
கொள்ளலாம். இப்பொழுது
நம் கண்ணுக்குப் புலப்படும்
மண், ஜலம், நெருப்பு, ஆகாயம்
முதலியவையும், இவற்றினின்று
உண்டான நமது உடல், வீடு,
வாசல், கம்பம், இரும்பு,
கலசம், தங்கம், சங்கிலி,
மோதிரம் முதலியவையும்
அந்தப் ப்ரக்ருதியின்
பரிணாமங்கள் தாம் (மாறுதல்கள்தாம்).
எப்படி ஒரு மண்ணுருண்டையினின்று
கலசம், அகல், மடக்குப்
போன்றவை உண்டாகின்றனவோ
அதுபோல் ப்ரக்ருதியினின்று
மஹத், அஹங்காரம் என்ற
வரிசையில், ஆகாயம், காற்று,
நெருப்பு, நீர், மண் முதலியவை
உண்டாகின்றன.
நேற்று,
இன்று, நாளை, க்ஷணம், திவஸம்
என்ற ரீதியில் நம்மால்
வ்யவகரிக்கப் பெறுவது
காலம். சுத்த ஸத்வம் என்பது
ஸ்ரீவைகுண்ட லோகம்.
இதையும் சாஸ்திரத்தைக்
கொண்டே அறிய வேண்டும்.
ஈஸ்வரன் என்பவன் ஸ்ரீமந்நாராயணன்.
இந்தத் திவ்ய தம்பதிகள்
தாம் உலகத்தை உண்டுபண்ணுவதும்
ரக்ஷிப்பதும் அழிப்பதும்
செய்கிறார்கள். ஆக இவர்கள்
ஜகத்துக்குக் காரணம்.
இவர்களைத் தான் ப்ரஹ்மம்
என்று வேதம் கூறுகிறது.
இவ்விருவருக்கும் கீழ்
கூறிய ஆறு பொருள்களும்
அடங்கியவை. இதைத்தான்,
'ஸ்வாதீன - த்ரிவித சேதனா
சேதன - ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி
- பேதம்' என்று ஆன்றோர்
கூறுவர்.
இப்படி நமது
ஸம்ப்ரதாயம் தத்துவங்களைக்
கூறும். இங்கு நம் திவ்ய
தம்பதிகள் சதுரங்கம்
விளயைாடுகிற அழகே ஒரு
அழகு, கீழ்க் கூறிய பிரகிருதி
என்பது ஒரு பலகை. இதுதான்
சதுரங்கப் பலகை. சதுரங்கப்
பலகைக்கு வெண்மை. செம்மை.
கருமை நிறங்கள் உள்ள
கட்டங்கள் இருக்குமே,
அம்மாதிரி இதற்கு உண்டா
என்றால் இதற்கும் உண்டு.
இந்த மூல ப்ரக்ருதி என்னும்
பலகைக்கு ஸத்துவம், ரஜஸ்,
தமஸ் என்ற முக்குணங்கள்
உண்டு. இந்தக் குணங்களுடன்
கூடிய ப்ரக்ருதியே நமக்குச்
சரீரமாக மாறுகிறது. அப்பொழுது
இந்த முக்குணமும் வேலை
செய்வது என்பதை நாம்
அறிந்திருக்கிறோம்.
பொறுமை, நல்லறிவு, கோபதாபங்களோ,
முதலியவையோ, துாக்கம்
ஆலஸ்யம் முதலியவையோ
நமக்கு ஏற்படுகின்றனவே,
அவைதாம் இந்த முக்குணங்களின்
காரியம். ஆக இந்தப் பலகைக்கு
மூன்று குணங்கள் உள்ளன
என்பதை நாம் அறிந்து
கொள்ளலாம். அதில் ஸத்வம்
- வெண்ணிறம், ரஜஸ் - செந்நிறம்,
தமஸ் - கருநிறம், என நாம்
நினைத்துக் கொள்ள வேண்டும்.
இப்படி
இந்தப் பலகையின் மூலமாகப்
படைக்கப்பட்ட ப்ரஹ்மலோகம்,
சிவலோகம், இந்திரலோகம்
மற்றுமுள்ள இடங்கள் தாம்
காய்களைப் போடும் இடங்கள்.
பிரமன், சிவன், இந்திரன்
முதலான நம் வரையிலுள்ள
ஜீவர்கள்தாம் காய்கள்.
இந்த ஜீவர்கள் பத்தர்கள்.
நித்யரும், முக்தரும்
இந்தப் பலகைக்கு காய்களாக
ஆக மாட்டார்கள். புண்ணியம்,
பாவம் என்ற வினைகளை உடையவர்கள்தாம்
காய்களாக ஆவார்கள். அநாதியாக
இந்தப் ப்ரக்ருதி மண்டலத்தில்
உழன்று கொண்டிருக்கிற
நாம் எப்பொழுதும் புண்ணிய
பாவங்களாகிற வினைகளைச்
செய்துகொண்டிருக்கிறபடியால்
கர்மஸம்பந்தம் நமக்கு
உள்ளது,
'விதை முதலிலா
மரம் முதலிலா'? என்ற கேள்வி
எப்பொழுதும் உள்ளது.
அதுபோல், 'வினை முதலில்
இருந்து அதன் மூலமாகப்
ப்ரக்ருதி ஸம்பந்தம்
உண்டாகிறதா'? என்ற கேள்வி
எப்பொழுதும் இருக்கும்.
இந்த ஸம்பந்தமும் வினையும்
அநாதியானபடியால் இந்தகேள்விக்கு
அவகாசமில்லை. ஆக இந்த
தம்பதிகள், அவரவர் செய்த
வினையாகிற பாய்ச்சிகளை
உருட்டிப் பார்க்கிறார்கள்.
அப்பொழுது அதற்குத்
தகுந்தவாறு அந்த அந்த
உலகங்களாகிய கட்டங்களில்
அந்த அந்த ஜீவனாகிற காய்களைப்
போட்டு மகிழ்கிறார்கள்.
அவரவர்களுக்குத் தகுந்த
வினையைக் கொண்டு அவரவர்களை
அந்த அந்த ஸ்தானங்களில்
வைக்கிறார்கள்.
அதாவது
உலகத்திற்கு ஸ்ருஷ்டி,
பிரளயம் என்ற இரண்டு
தசைகள் உள்ளன. இப்பொழுது
கண்ணால் அனைத்தையும்
பார்க்கிறோமே. இதுதான்
ஸ்ருஷ்டி தசை. இவை எல்லாம்
அழிந்து, ப்ரக்ருதி என்ற
ஒரே பொருளே எப்பொழுது
இருக்கிறதோ அதுதான்
ப்ரளய தசை. அப்பொழுது
பத்த ஜீவர்கள் இந்தப்
ப்ரக்ருதியில் ஓரிடத்தில்
ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பொன்வேலை செய்பவன் அவ்வப்போது
தங்கத்தை அராவும்போது
ஏற்படும் தங்கத் துாள்களை
ஒரு மெழுகில் ஒற்றி எடுத்து
வைப்பதுண்டு. அதுபோல
இந்த ஜீவர்கள் ப்ரக்ருதி
எனப்படும் மெழுகில் ஒற்றி
வைக்கப் பட்டிருக்கிறார்கள்.
'இந்த ஜீவர்கள் அறிவில்லாத
அசேதனப் பொருளைப் போல்
ஓர் அறிவும் இல்லாமலும்
நன்மை தீமைகளை ஆராய்ந்தெடுப்பதற்கும்
செய்வதற்கும் தகுதியற்றவர்களாகவும்
இருக்கிறார்களே, இப்படியே
இவர்கள் இருந்தால் எப்படி
நற்கதியைப் பெற இயலும்?
இன்ப ஸுகங்களை எப்படி
அடைய முடியும்?' என்று
எண்ணி, பகவான் இந்த ப்ரக்ருதியைக்
கொண்டு மண் நீர் நெருப்பு
முதலிய பல பொருள்களைப்
படைக்கிறான். இவற்றுள்
ஒன்றோடொன்று பொருள்களைக்
கலந்து அண்டம் என்ற ஒரு
வஸ்துவை ஸ்ருஷ்டிக்கிறான்.
இந்த அண்டத்தில் பதினான்கு
உலகங்கள் அடங்கியுள்ளன.
ப்ரஹ்மலோகம் முதல் பாதாள
உலகங்கள் வரை இதில் உள்ளது.
இப்பொழுது நாம் வசிக்கும்
பூலோகமும் இதில் உள்ளது.
இம்மாதிரி எத்தனையோ
அண்டங்கள் பரமாத்மாவினால்
ப்ரக்ருதி என்னும் பொருளை
வைத்துக்கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த அண்டத்தில் அடங்கியுள்ள
உலகங்களில் எத்தனையோ
பேர் ஸ்ருஷ்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதில் பிரமனும் சிவனும்
இந்திரனும் குபேரனும்
வருணனும் மற்றுமுள்ள
நாமும் ஒவ்வொரு ஸ்தானத்தில்
வைக்கப்பட்டிருக்கிறோம்.
ப்ரஹ்மாவின் பட்டத்தில்
யாரை வைக்கலாம் என்று
பகவான் பார்க்கிறான்.
யுககோடிஸஹஸ்ராணி
விஷ்ணுமாராத்ய பத்மபூ:
புநஸ்
த்ரைலோக்யதாத்ருத்வம்
ப்ராப்தவாநிதி சுச்ரும.
என்ற
கணக்கில். தன்னை யுககோடி
ஸகஸ்ரம் எவன் ஆராதித்திருக்கிறான்
என்பதை பகவான் கவனிக்கிறான்.
அந்த ப்ரக்ருதியில் ஒட்டிக்கொண்ட
ஜீவன்கள் அனைவரும் ஏற்கனவே
ஏற்பட்ட ஸ்ருஷ்டியில்
புண்ய பாவங்களைச் செய்திருக்கிறார்களானபடியால்,
கீழ்க்கூறிய நல்வினையைச்
செய்திருக்கும் ஒருவனை
ஆராய்ந்தெடுத்து ப்ரஹ்ம
பட்டத்தில் பகவான் வைக்கிறான்.
இம்மாதிரி நுாறு அச்வமேதம்
செய்து சதக்ருது என்று
பேர் பெற்றவனை அவனிடத்தில்
உள்ள முந்திய நல் வினையை
முன்னிட்டு இந்திரப்
பட்டத்தில் வைக்கிறான்.
இம்மாதிரியே சிவனையும்
குபேரனையும் வருணனையும்
நம்மையும் அவரவர் வினையை
முன்னிட்டு ஸ்ருஷ்டிக்கிறான்.
பகவான் தானாகவே ஒருவனைப்
ப்ராமணனாகவும், மற்றவனை
மற்றொரு இனத்தவனாகவும்,
ஒருவனை பணக்காரனாகவும்,
மற்றவனை தரித்ரனாகவும்,
ஒருவனைப் புத்திசாலியாகவும்,
இன்னொருவனை மூடனாகவும்
ஸ்ருஷ்டிக்கிறான் என்று
நினைக்க வேண்டாம். அவரவர்
செய்யும் நல்வினையையும்
தீவினையையும் அநுசரித்துப்
பிறப்பையும் குணத்தையும்
ஸ்வபாவத்தையும் ஒழுக்கத்தையும்
உண்டுபண்ணுகிறான். பொன்நகை
செய்பவன் நமது விருப்பத்தை
அநுசரித்துத்தானே வளையம்,
மோதிரம், சங்கிலி முதலியவற்றை
செய்கிறான்? அவனாகவே
ஒரு பொருளை செய்து, 'நீ
இதை எடுத்துக்கொள்'
என்று சொல்வதில்லை.
அதுபோல் பகவானும் நமது
வினையாகிற விருப்பத்தை
முன்னிட்டு அவற்றை உண்டுபண்ணுகிறான்.
"தத: பரிவ்ருத்தெள கர்மபல
சேஷேண ஜாதிம் ரூபம் பலம்
வர்ணம் மேதாம் ப்ரஜ்ஞாம்
த்ரவ்யாணி தர்மாநுஷ்டாநம்
இதி ப்ரதிபத்யதே" என்று
ஆபஸ்தம்பரும் சொன்னார்.
ஆகையால் திவ்ய தம்பதிகளான
லக்ஷ்மி நாராயணன் என்ற
இவர்கள் இப்படி அவரவர்களுக்கு
ஏற்பட்ட புண்ணிய பாவங்களை
அநுஸரித்து அந்த உலகங்களில்
ஆட்சியில் வைத்தும் வேலையில்
வைத்தும் லீலாரஸத்தை
அநுபவித்துப் பொழுது
போக்குகிறார்கள்.
இதுதான்
அவர்களுக்கு ஓர் விளையாட்டு.
இதைத்தான் 'லோகவத்து
லீலாகைவல்யம்' என்று
வியாஸ மகரிஷி ஸூத்ரமிட்டார்.
ஸ்ரீபாஷ்யகாரரும், 'அகில
புவநஜந்மஸ்தேம பங்காதிலீலே'
என்று தமது ஸ்ரீபாஷ்ய
ஆரம்பத்தில் குறிப்பிட்டார்.
ஆகையால் பொய் பேசுவது,
களவு செய்வது, பிற பெண்களை
க்கவர்வது காரணமின்றியே
ஹிம்ஸை செய்வது, பாகவதர்களிடத்தில்
அபசாரப்படுவது, அவர்களுக்கு
உண்டாகும் மேன்மையைக்
கெடுப்பது முதலிய தீய
செயல்களை எவர் செய்கின்றனரோ
அவர்களின் வினையை அநுசரித்துப்
பிறப்பிலும் படிப்பிலும்
பணத்திலும் உடலழகிலும்
மற்றுமுள்ளவற்றிலும்
ஸர்வேஸ்வரன் ஏதாவது ஒரு
மாசை உண்டுபண்டுகிறான்.
நல்ல காரியங்களைச் செய்பவருக்கு
நல்ல உடல், பணம், ஸுகம்
முதலியவற்றைக் கொடுத்துச்
சந்தோஷத்தை உண்டுபண்ணுகிறான்.
இப்படி செய்வதுதான் திவ்ய
தம்பதிளுக்குச் சதுரங்க
விளையாட்டு, இந்த விளையாட்டை
வேதங்களும் நித்யஸுரிகளும்
கண்டு மகிழ்கின்றனர்,
இதைத்தான் ஸ்ரீவேதாந்த
தேசிகன் ஸ்ரீஸ்துதியில்
ஒரு ஸ்லோக ரூபமாக வரைந்துள்ளார்.
அந்த ஸ்லோகம் இதோ -
பஸ்யந்தீஷு
ஸ்ருதிஷு பரித: ஸூரிப்ருந்தேந
ஸார்தம்,
மத்யேக்ருத்ய
த்ரிகுணபலகம் நிர்மிதஸ்தாநபேதம்
விச்வாதீசப்ரணயிநி
ஸதா விப்ரமத்யூதவ்ருத்தெள
ப்ரஹ்மேசாத்யா
தததி யுவயோரக்ஷசாரப்ரசாரம்,
திவ்ய
தம்பதிகளின் ஜகத்வ்யாபாரத்தை
விவரிக்கும் இந்த ஸ்லோகம்
இதை ஒரு விளையாட்டாக
வர்ணிப்பதில் ரஸம் இருக்கிறது.
பிராட்டிக்கு பரிஹாஸ
ரஸம் உண்டாக்க பகவான்
நாடகம் நடத்துவதாக பட்டர்
கூறுகிறார். ஆனால் ஜகத்வ்யாபாரத்தில்
பிராட்டிக்கு உள்ள தொடர்பு
இந்த ஸ்லோகத்தால் உருவகப்படுத்தப்படுகிறது.
இந்த ஆட்டத்தை சுருதிகளும்
(பெண்களும்) ஸுரிகளும்
(ஆண்களும்) சுற்றுமிருந்து
ரஸித்துப் பார்க்கிறார்களாம்.
இங்கு சுருதிகள் பிரதானம்;
ஸ்த்ரிகளும் பார்ப்பதாகச்
சொல்வதின் ரஸம் ஜகத்வ்யாபாரத்திற்க்கும்
பிராட்டியைத் தவிர வேறு
யாருக்கும் ஸம்பந்தம்
இல்லை என்பதே இதற்கு
சாக்ஷி. சுருதிகளே என்பது
தாத்பர்யம். இந்த விளையாட்டால்
வேறுபயன் ஏதும் இல்லை
- விளையாட்டிற்காகவே
செய்யப்படும் லீலை இது.
"ஸூரிப்ருந்தம்" என்ற
நபும்ஸகலிங்க பிரயோகம்
ஏன்? அந்தப் புரத்தில்
கூனர், அலிகள் தான் இருப்பார்கள்.
புருஷன் என்றால் பரம
புருஷன் - ஸ்த்ரி என்றால்
மஹாலக்ஷ்மி, மூன்றாவதாக
இருப்பவர்கள் அலிகள்
தானே - இவர்கள் நித்ய ஸுரிகளே
என்றும் ரசிப்பது உண்டு.
"லோகவத்து
லீலா கைவல்யம்" என்கிற
வியாஸ ஸூத்ரத்தின்படி
கேவல லீலைதான் பிரயோஜனம்.
பரம புருஷன் அவாப்த ஸமஸ்தகாமனானாலும்
லீலாரஸத்தை அநுபவிக்கவே
ஜகத்தை ஸ்ருஷ்டிக்கிறான்.
ஆனால் இந்த விளையாட்டு
"அசித வசிஷ்டான் ப்ரளயே
ஜந்தூன் அவலோக்ய ஜாத
நிர்வேதா | கரண களேபா யோகம்
விதரஸி" என்று ஸ்வாமி
தேசிகன் அருளியபடி அசேதன
ப்ராயர்களாக பிரளய காலத்தில்
கிடக்கும் சேதனர்களைக்
கண்டு இரங்கி அவர்களுக்கு
ஜ்ஞானத்தைக் கொடுத்து
நல்லதைச் செய்து நற்கதியை
அடையட்டும் என்னும் எண்ணத்துடன்
கரணக ளேபராதிகளை கொடுத்து
ஸ்ருஷ்டிக்கிறான்.
"முகுந்த
கருணாம் வந்தே முக்தேஷு
அதி வத்ஸலாம் |
ஸ்வரூப
ஸமஸ்தவெள யஸ்யா: நிர்ஹேதுக
ஸஹேது கெள ||
என்று ஸ்வாமி
தேசிகன் ஸாதித்தார்.
ஜகத்தை ஸ்ருஷ்டிக்கும்போது
நிர்ஹேதுக க்ருபையும்
மோக்ஷம் கொடுக்கும்போது
ஸஹேதுக க்ருபையும் என்ற
கருத்தில் சொல்கிறார்.
ஆக
இந்த விளையாட்டின் நோக்கம்
பந்தயமோ வெற்றியோ தோல்வியோ
என்பதில் கிடையாது. திவ்ய
தம்பதிகள் கர்மானுகுணமாகவே
ஸ்ருஷ்டிக்கிறார்கள்.
என்றும் அவர்களின் எல்லா
லீலைகளும் க்ருபா விசேஷத்தின்
பலன்களே என்றும் தேறுகிறது,
"ஸர்க
ஸ்தித்ய வஸான கேளிரஸிகெள"
என்று அருளியபடி ஜகத்
வ்யாபாரத்தை பெருமாளும்
பிராட்டியும் ஐஏகமத்யத்தோடு
ரஸிக்கிறார்கள்.
"அகில
புவன ஜன்ம ஸ்தேம பங்காதி
லீலே" என்பது போன்ற பிரமாணங்களிலிருந்து
பெருமாளும் பிராட்டியும்
சேர்ந்தே எல்லாவற்றையும்
ஸங்கல்பத்தாலேயே நிகழ்த்துகிறார்கள்
என்று தெளிவு.
இந்த விஷயத்தை
கம்பநாட்டாழ்வானும்
தனது இராமயணத்தில் மிக
ஸ்பஷ்டமாக கூறியுள்ளார்.
அவரது பாசுரம் இதோ-
'உலகம்
யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெருத்தலும் நீக்கலும்
நீங்கலா அலகிலா விளையாட்டுடையார்
அவர் தலைவர் அன்னவர்க்கே
அரண் நாங்களே' - என்பது.
"ஜகத் ஜன்மஸ்தேம ப்ரளயரசனாகேளி
ரஸிக:" என்றார் தயா சதகத்தில்.
"பால: க்ரீடனகை: இவ' என்பது
விஷ்ணுபுராணம். குழந்தை
பந்தை எடுத்து விளையாடுவது
போல் பகவானுக்கு இது
ஒரு விளையாட்டு.
பகவான்
நம் வினையை அநுஸரித்து
தன் இஷ்டப்படி செய்பவன்.
அதில் திறமையையும் உடையவன்.
ஒருவனை இந்திரனாக ஆக்கலாம்.
குபேரனாகவும் ஆக்கலாம்.
சதுர்முகனாக்கவும் செய்யலாம்.
பக்தனாகவும் செய்யலாம்
முக்தனாக்கவும் செய்யலாம்.
நமது கர்மம் சுபமாக இருந்தால்
ஸந்தோஷமடைவான். ஆசுபமாக
இருந்தால் வெறுப்பான்.
அவ்வளவுதான். ஒரு அரசன்
ஸமர்தன் ஸ்வதந்தன் அவன்.
ஒரு சோழியை காலனா ஸ்தானத்திலும்
வைக்கலாம். ஒரு சபரன்
ஸ்தானத்திலும் வைக்கலாம்.
இப்பொழுது நடப்பதையும்
கவனியுங்கள். ஒரே கடிதம்.
அதை 100 ரூபாய் ஸ்தானத்திலும்
இருக்கச் செய்யலாம்.
1000 ரூபாய் ஸ்தானத்திலும்
இருக்கச் செய்யலாம்.
மதிப்பு என்பது அரசாங்கத்தில்
கீழ்பட்டது. அது போலத்தான்
ஜீவனுடைய தசை. குபேரன்
இந்திரன் ப்ரஹ்மா சிவன்
ஏழை பண்க்காரன், நொண்டி
ஸுந்தரன் குருடன் முதலியவையும்
அவனதீனம். கருப்பு வர்ணம்
உடையவன், சிவப்பு வர்ணம்
உடையவன் எல்லாம் நம்
கர்மாவை முன்னிட்டு அவன்
அதீனம். ஸீதையை மிரட்டும்
ராக்ஷஸிகள் எத்தனை வகையில்
இருந்தனர் என்பதையும்
ஸுந்தர காண்டத்தில் பார்க்கலாம்.
ஆக ரங்கநாதனே, நீதான்
என்னை சரியான வகையில்
வைக்க வேண்டும் என்றார்
பட்டர். கீழ் சொன்ன விஷயத்தைதான்
சமத்காரமாகப் பேசினார்.
அவர் பத்யம் இதோ -
"படுனனக
வராடிகேவ க்லுப்தா ஸ்தலயோ:
காகணிகா ஸுவர்ண கோட்யோ:
|
பவமோக்ஷணயோ: த்வயைவ
ஜந்து: க்ரியதே ரங்கநதே
த்வமேவ பாஹி ||
பையன் பந்தை
எடுத்து பூமியில்தட்டி
விளையாடினால் அப்பந்து
கீழும் நடுவிலும் மேலும்
செல்லும். அதுபோல்தான்
கீழ் நரகத்திலும் நடுவான
பூலோகத்திலும் மேல்
லேகமான ஸ்வர்கத்திலும்
இன்னும் மேலும் நாம்
செல்கிறோம்.
இதைத்தான்
மனதில் வைத்து "வந்தார்
விரலி உன் மைத்துனன்
பேர் பாட' என்று கோதை
பாடினாள். 'பந்தனைந்த
மென்விறலாள்' என்பன பல
பாசுரங்கள் உள்ளன.
*****