எது உண்மை ?
நாம்
வைதிக மதத்தைச் சேர்ந்தவர்கள்;
வேதத்தையும் அதன் மூலமாக
உடைய ஸ்ம்ருதி, இதிஹாஸ
புராணங்களையும் ஒப்புக்
கொண்டு அவற்றில் சொல்லும்
எல்லா அர்த்தங்களையும்
அநுஸரித்து நடக்கிறவர்கள்.
எனவே நம்முடைய மதம் வைதிக
மதம். வேதம் முதலியவற்றில்
அநேக தர்மங்கள் கூறப்
பெற்றிருக்கின்றன. செய்யக்
கூடாதவை எவை என்பதையும்
விளக்கிக் கூறியிருக்கின்றன
வேதம் முதலியவை.
செய்ய
வேண்டியவற்றைச் செய்தும்,
விட வேண்டியவற்றை விட்டும்
எவன் நடக்கிறானோ, அவனே
உத்தமன். அஹிம்ஸை என்பது
முக்கியமான தர்மம். ஒருவரையும்
ஹிம்ஸிக்காமலிருப்பது
என்பது இதன் பொருள்.
ஹிம்ஸை என்பது செய்யக்
கூடாதது. இதுபோல் 'உண்மை
பேசுவது' என்பதும் ஒரு
தர்மம். இது அனைவராலும்
முக்கியமாக அநுஷ்டிக்கப்பட
வேண்டிய தர்மம்.
வேதங்களில்
சொல்லியுள்ள பல தர்மங்களிலும்
இது உயர்ந்தது. யாகம்,
யஜ்ஞம் முதலியவற்றைச்
செய்ய எவ்வளவோ யோக்கியதைகள்
வேண்டும். பிறப்பு, சக்தி,
காலம் முதலியவற்றை இட்டுத்தான்
யாகம் முதலியவற்றை செய்ய
முடியும். உண்மை பேசுவதற்கு
இவ்வளவு வேண்டாம், எப்போது
வேண்டுமானாலும் பேசலாம்;
யாரும் பேசலாம். பணம்
காசு முதலியவற்றுக்கு
செலவில்லை. எல்லா வர்ணத்தாரும்
பேசலாம். ஆண் பெண் என்ற
நியதி இல்லை.
இதை ஒரு
நியமமாக வைத்துக் கொண்டு
இருப்பவன் சொல்வதெல்லாம்
அப்படியே பலிக்கும்.
உண்மை பேசுபவரில் அரிச்சந்திரனை
ஓர் உபமானமாக கூறி கொண்டாடுவதுண்டு.
ஸத்யம்
வதத மா (அ) ஸத்யம் ஸத்யம்
தர்மஸ் ஸநாதந: | ஹரிச்சந்த்ரச்
சரதி வை திவி ஸத்யேந சந்த்ரவத்
||
"உண்மையையே பேசுங்கள்.
பொய் பேச வேண்டாம். உண்மைதான்
உயர்ந்த தர்மம். ஹரிச்சந்திரன்
உண்மையையே பேசி வந்தபடியால்
ஆகாசத்தில் சந்த்ரன்
போல் விளங்குகிறான்"
என்பது இதன் பொருள்,
இங்கு,
'அரிச்சந்திரன் ஸத்ய
வசனத்தினால் சந்திரன்
போல் விளங்குகிறான்'
என்றபடியால் மற்றத் தர்மங்களைச்
செய்பவர்கள் நக்ஷத்திரங்கள்
போல் விளங்குபவர்கள்
என்று ஏற்படுகிறது. இதனால்
மற்ற தர்மங்களை காட்டிலும்
ஸத்யபாஷணம் சாலச் சிறந்தது
என்பதும் ஏற்படுகிறது.
ஈச்வரன்
மனிதர்களுக்கு வாக் மநஸ்
உடல் என்று மூன்று கரணங்களை
கொடுத்திருக்கிறான்.
அதில் வாக்கு, பேசும்
சக்தியை யுடையது. நாம்
பேசும் ஸமயத்தில் அவ்வாக்கை
கொண்டு உண்மையையே உரைத்தால்
நம் வாக்குக்கும் பயன்
ஏற்படுகிறது; கொடுத்த
பகவானுக்கும் ஸந்தோஷம்
உண்டாகிறது. உண்மையைப்
பேசாமல் பொய்யைப் பேசினால்,
பகவான் கோபமடைந்து,
மறுபிறவியில் அவனை ஊமையாக்கிவிடுகிறான்.
உள்ளதை
உள்ளபடி சொல்ல ஒருவிதப்
பிரயத்னமும் தேவையில்லை.
பொய் பேச வேண்டுமானால்தான்,
அயலார் உள்ளபடி நினைக்க
வேண்டுமே என்று எண்ணி
சில விஷயங்களை சேர்த்து
இட்டுக் கட்டி சொல்ல
வேண்டும். இம்மாதிரி
சொல்வதுதான் சிரமம்.
உள்ளதை அப்படியே சொல்வதற்கு
ஒருவித சிரமமும் இல்லையே.
ஆனால்,
'ஸத்யம் (உண்மை) என்பது
எது?' என்று அறிவதுதான்
சிரமம். இதை நன்கறிந்து
அநுஷ்டித்து வந்தால்
நாமும் நல்ல கதியை அடையலாம்;
பிறரையும் நற்கதி அடைவிக்கலாம்.
'ஸத்யம்
என்பது எது?' என்பதை சிறிது
ஆராய்வோம். உள்ளதை உள்ளபடி
சொல்வதுதானே ஸத்தியம்?
இதற்கு படிப்பு வேண்டுமா?
ஆராய்ச்சிதான் வேண்டுமா?
ஆபால கோபாலம் இது தெரிந்த
விஷயம்தானே என்று சிலர்
நினைக்கலாம். ஆனால் இதை
ஆராய்ந்து அறிவதுதான்
கஷ்டம்.
பாரத யுத்தத்தில்
ஒரு யானைக்கு 'அச்வத்தாமன்'
என்ற பெயரிட்டு அதைக்
கொன்று தர்மபுத்திரரிடம்
'அச்வத்தாமா ஹத: குஞ்ஜர:'
என்று சொல்லச் சொன்னார்கள்.
தர்மபுத்ரர் ராஜ்யத்தில்
ஆசையால் அப்படியே சொன்னார்.
உண்மையில் 'அச்வத்தாமா'
என்ற யானை கொல்லப்பட்டது
வாஸ்தவம். ஆனாலும் இவர்
சொன்ன இந்த சொல் உண்மையாகுமா?
ஒரு
கடன்காரன் தன் வீட்டில்
நிறைய பணம் வைத்திருக்கிறான்.
கடன் கொடுத்தவன் இதை
தெரிந்து அவனை அணுகிக்
கேட்கும்போது, 'என் கையில்
பணம் இல்லையே. நான் எப்படி
கொடுப்பது?' என்று சொன்னான்.
இவன் வீட்டில் பணம் இருந்தும்
கொடுக்க இஷ்டமில்லாதவனாகவும்,
பொய் சொல்லவும் விருப்பமில்லாதவனாகவும்
தத்ஸமயம் 'கையில்' பணம்
இல்லாததை கொண்டு அவ்வாறு
இவன் சொன்ன வார்த்தை
உண்மையாகுமா?
ஒருவன்
தன் ஸ்நேஹிதனிடத்தில்
வைர மோதிரத்தை கொடுத்து,
'நான் தேசாந்தரம் சென்று
வந்ததும் கொடு' என்று
சொல்லியிருந்தான். நண்பன்
வைர மோதிரத்தை பெற்றுக்
கொண்டு ஒரு தடியிலே
வைத்து வெள்ளிப் பூணால்
மறைத்து வைத்துக் கொண்டான்.
சில நாளானதும் தேசாந்தரம்
சென்றவன் திரும்பி வந்து
கேட்டான். அப்போது வெள்ளிப்
பூண் போட்ட தடியை வைத்துக்
கொண்டிருந்தவன் ஸ்நேஹபாவத்தை
மாற்றிக் கொள்ளாமலே
'இந்த தடியைப் பிடி' என்று
சொல்லி சில காரியங்களை
செய்து விட்டு, "ஐயோ, நான்
உன் மோதிரத்தை முன்பே
உன் கையிலேயே கொடுத்துவிட்டேனே:"
என்று சொல்லுகிறான்.
அவனுக்கு அந்த தடிக்குள்
மோதிரம் இருப்பது தெரியாது
ஆகையால் தடியை அவன் வீட்டிலேயே
வைத்துவிட்டு, "என்னை
ஏமாற்றிவிட்டாயே" என்று
வைதுகொண்டு போகிறான்.
நீதி ஸ்தலத்தில் விசாரணைக்கு
சென்றபோதும் இம்மாதிரியே
நடக்கிறது. இங்கு மோதிரத்துடன்
கூடிய தடியைக் கொடுத்துவிட்டு,
'நான் மோதிரத்தை கொடுத்துவிட்டேனே'
என்று சொல்வது உண்மையாகுமா?
ஸீதாதேவி
அசோகவனத்தில் ஆஞ்ஜநேயரிடம்
பலவாறு பேசியபிறகும்,
ராக்ஷஸிகள் கேட்டபோது,
"நானும் அந்த குரங்கை
கண்டு பயந்தேன். காமரூபியான
ராவணன்தான் இந்த வேஷத்தைப்
போட்டுக் கொண்டு வந்திருப்பான்.
உங்களுக்குத் தான்அந்த
மர்மம் தெரியும்; எனக்குத்
தெரியாது" என்று சொன்னாள்.
இப்படி ஸீதை சொன்னது
உண்மையாகுமா? பொய்யானால்
ஸீதை பொய் பேசலாமா?
கைகேயி
வரம் கேட்டதன் பயனாக
ஸுமந்திரர், ராமனையும்
லக்ஷ்மணனையும் சீதையையும்
தேரில் ஏற்றிக் கொண்டு,
குதிரைகளை விரட்டிக்
கொண்டு போகிறார். இதைக்
கண்ட தசரதர் மனம் நொந்து
மூர்ச்சையடைந்து மெதுவாக
எழுந்திருந்து ஸுமந்திரரை
நோக்கி, "ஸுமந்திரா! நீ
தேரை ஓட்டாமல் திரும்பிவிடு.
ராமன் முதலியவர்களை அழைத்துக்
கொண்டு வந்துவிடு. காட்டுக்குப்
போக வேண்டாம்" என்று
கூச்சலிடுகிறார். இதைக்
கேட்ட ஸுமந்திரர், ராமனை
நோக்கி, "அரசர் உத்தரவுப்படி
திரும்பிவிட வேண்டும்"
என்றார். இதைக் கேட்ட
ராமன், "ஸுமந்திரா! நீ ஏன்
பயப்படுகிறாய்? எங்களைக்
காட்டில் விட்டுத் திரும்பித்
தசரதரைப் பார்க்கும்
போது, 'நான் தேரைத் திருப்பிக்
கொண்டு வந்துவிடு என்று
சொல்லியும் என் வார்த்தையை
பொருட்படுத்தாமல் ஓட்டிக்
கொண்டு போய்விட்டாயே'
என்று மிரட்டுவார் என்று
பயப்படுகிறாயா? அப்படி
கேட்டால் 'என் காதில்
விழவில்லை' என்று சொல்லிவிடு"
என்று சொல்லி, ஸுமந்திரரை
தேரோட்டும்படி செய்து
விட்டான். இங்கே, தசரதனிடம்
'காதில் விழவில்லை' என்று
ஸுமந்திரரைச் சொல்லும்படி
செய்தான். ஸுமந்திரர்
அவ்வாறு தசரதரிடம் சொன்னால்
அந்த சொல் உண்மையாகுமா?
இவ்வாறு ராமன் ஸுமந்திரரைச்
சொல்லச் சொன்னதுதான்
நியாயமாகுமா?
ஒருவன்
கையில் கத்தியை எடுத்துக்
கொண்டு பசுவைக் கொல்ல,
பசுவின் பின் தொடர்ந்து
ஓடினான். அந்தப் பசு பல
இடங்களிலும் வேகமாக ஓடி,
ஓர் முனிவரின் ஆசிரமத்துக்குள்
புகுந்துவிட்டது. முனிவரும்
அதைப் பார்த்தார். சிறிது
நேரம் ஆனதும் கத்தியை
வைத்திருந்தவன் (காதுகன்)
அங்கு வந்து, 'இங்கு ஒரு
பசு ஓடி வந்ததா?' என்று
கேட்டான். முனிவர், "இங்கு
ஒரு பசுவும் வரவில்லை,
பார்க்கவும் இல்லை" என்று
சொன்னார். இங்கு இவருடைய
இந்த வார்த்தை உண்மையா?
பொய்யா?
வெண்ணையைத்
திருடி உட்கொண்ட கண்ணனைத்
துரத்திக் கொண்டு வந்தாள்
யசோதை. தன் ஆத்திரம்
தீர இவனை அடிக்க வேண்டும்
என்ற எண்ணத்துடன் ஓடி
வருகிறாள். மாயாவியான
கண்ணன் அவளை காட்டிலும்
வேகமாக பயந்து ஓடுகிறான்.
இவனது மாயையைக் கேட்க
வேண்டுமா? மறைந்து மறைந்து
கண்ணன் ஓடிவந்து 'ததிபாண்டன்'
என்னும் ஓர் தயிர் வியாபாரியை
அடைந்தான். தன்னை காக்க
கெஞ்சி கூத்தாடினான்.
அவன் கண்ணனை தயிர்ச்சாலுக்குள்
வைத்து மறைத்து, அதன்
மேல் உட்கார்ந்துவிட்டான்.
யசோதை அங்குமிங்கும்
தேடி, ததிபாண்டனையும்
பார்த்து, "இங்கே கண்ணன்
வந்தானா?" என்று கேட்டாள்.
அவன், "உன் திருட்டு கண்ணன்
திருடுவதற்கு எங்கே சென்றிருக்கிறானோ?
வெண்ணையையோ பெண்களையோ
களவு செய்வதற்கு எங்காவது
போயிருப்பான். நாங்கள்
ஏமாறுபவர்களல்ல. இங்கு
வரவில்லை" என்று சொல்லிவிட்டான்.
இப்படி இவன் சொன்னது
உண்மையா, பொய்யா?
இம்மாதிரி
பல விஷயங்கள் உள்ளன. உலகத்திலும்
புராணங்களிலும் சில பேச்சுக்கள்
உண்மைபோல் தோன்றுகின்றன;
சில பொய்போல் தோன்றுகின்றன.
அதனால் இதன் மர்மம் அறிவது
கஷ்டம். எனவே பெரியோர்கள்
'உண்மை எது' என்பதை ஒரு
விதமாக நிஷ்கர்ஷம் செய்திருக்கிறார்கள்.
சில
உண்மை போல் தோற்றமளிக்கும்;
ஆனால் அவை பொய்யே. சில
பொய் போல் தோற்றமளிக்கும்;
ஆனால் அவை உண்மையாகிவிடும்.
மக்களுக்கு
நன்மையைக் கொடுப்பதாகவும்,
பிரியமாகவும் எது இருக்கிறதோ
அது ஸத்யம். 'ஸத்யம் பூதஹிதம்
வாக்யம்' என்றும், 'ந ப்ரூயாத்
ஸத்யம் அப்ரியம்' என்றும்
சொல்லியிருப்பதனால்
இப்படி ஏற்படுகிறது.
இத்துடன்
வாக்குக்கும் மனத்துக்கும்
'ஐகரூப்ய' மும் வேண்டும்.
மனத்தில் ஒன்றை வைத்துக்
கொண்டு வாக்கை வேறு
விதமாக உபயோகப்படுத்தினால்
அந்த வார்த்தை உண்மையாகாது.
மனத்தில் எதை நினைக்கிறானோ
அதையே பேச்சளவில் கொண்டுவர
வேண்டும். அப்போதுதான்
'ஐகரூப்யம்' உண்டாகும்.
அப்படிச் சொல்பவன்தான்
மகாத்மா. மனத்திலும்
வாக்கிலும் உடலிலும்
ஏகரூபமாக நடப்பவன் மகாத்மா
என்றும், முக்கரணங்களினாலும்
மாறி நடப்பவன் துராத்மா
என்றும் சொல்லப்படுகிறது.
ஏகரூபமாக
நடப்பவன் கபடமாக பேசமாட்டான்.
கபட வார்த்தையை, 'சலபாஷணம்'
என்பர். 'யத் சலேந அநுவித்தம்
ந தத் ஸத்யம்' என்று மகரிஷி
சொல்லுகிறார். ஆகையால்,
கபடமற்ற பேச்சும், பிற
உயிர்களுக்கு நன்மை தரும்
பேச்சும் 'ஸத்யம்' என்று
கொள்ளவேண்டும்.
'அச்வத்தாமா
ஹத: குஞ்ஜர:' என்ற தர்மபுத்திரர்
பேச்சும், 'கையில் பணமில்லை'
என்ற கடன்காரன் பேச்சும்,
தடியைக்கொடுத்து, 'மோதிரத்தை
கொடுத்துவிட்டேனே' என்றவன்
பேச்சும் கபடத்துடன்
வந்த பேச்சானபடியால்
(மனத்தில் ஓர் அபிப்ராயத்தை
வைத்துக் கொண்டு வாக்கினால்
வேறு விதமாக சொன்னபடியால்)
இவை உண்மை பேச்சு ஆகா.
ஸீதை
'இந்த குரங்கை நான் அறிய
மாட்டேன்' என்று சொன்னதும்,
'ஆசிரமத்துக்குள் பசு
வரவில்லை' என்ற முனிவரின்
பேச்சும், 'கிருஷ்ணன்
இங்கு வரவில்லை' என்ற
ததிபாண்டன் வார்த்தையும்
பொய் போல் தோன்றினாலும்
பொய் அல்ல. அவை உண்மை
பேச்சுக்கள்தாம் - ஆஞ்சநேயருக்கும்
கண்ணனுக்கும் ஹிம்ஸை
வராமலிருக்க வேண்டுமென்று
ஹிதத்தை நினைத்து பேசினபடியால்.
"பசுமாம்ஸத்தை
தின்ன வேண்டுமென்ற எண்ணத்துடன்
கத்தியை எடுத்துக் கொண்டு
வந்தவனக்கு 'பசு இங்கு
இல்லை' என்று சொன்ன வார்த்தை
எப்படி ஹிதமாகும்? பசுவுக்குத்தானே
அது ஹிதமாகும்?" என்று
கேட்கலாம். தத்ஸமயத்தில்
அந்த பசுவை தின்று மனோரதம்
பூர்ணமானாலும் பிறகு
இவனுக்கு அது நரகத்தை
கொடுக்கும்; ஆகையால்
அப்படி நடக்காமல் இவ்வார்த்தை
தடுத்தபடியால் இது அத்யந்த
ஹிதமாயிற்று. "யத் பூதஹிதம்
அத்யந்தம் தத் ஸத்யம்
இதி தாரணா" என்று வியாஸர்
கூறினார்.
'என் காதில்
விழவில்லை" என்று தசரதரிடம்
சொல்லு என்று ராமன்
ஸுமந்திரரிடம் சொன்னதும்
அதை அநுஸரித்து ஸுமந்திரர்
தசரதரிடம் சொன்னதும்
நியாயமே.
"தசரதருடைய
வரத்தை அநுஸரித்து, அவரை
ஸத்ய ஸந்தராக்க நினைத்து,
நான் காட்டுக்கு போவது
நிச்சயமானபடியால், மறுபடியும்
தசரதரிடம் தேரை திருப்பி
ஓட்டிக் கொண்டு வந்தாலும்
பயனில்லை. அவருக்கு துக்கம்
இரண்டு பங்காகுமே தவிர
குறையாது. இப்போது நாம்
அவ்வளவு தூரம் வந்துவிட்டபடியால்
நம் உருவம் மறைந்ததும்
அவரது துக்கம் மாறினாலும்
மாறிவிடலாம். எனவே அவரது
ஹிதத்தை உத்தேசித்து
'என் காதில் விழவில்லை'
என்று சொல்லு" என்று
சொல்லிவிட்டான் ராமன்.
ஆகையால் இந்த வாக்கியம்
உண்மையிலேயே முடிந்தது.
வாஸத்தவத்தில்
கேட்பது என்பது மூன்று
வகை. 1, வாயால் கேட்பது. 2,
காதால் கேட்பது. 3. சொன்னபடி
நடப்பது. நான் தர்மங்களை
உபதேசம் செய்தேன். ஆனால்
அவன் அதன்படி கேட்கவில்லை
என்றால் இதன் அர்த்தம்
என்ன ? நான் சொல்படி நடக்கவில்லை
என்பதுதானே பொருள்?
"நச்ரோஷயஸீ விநங்க்ஷ்யஸி"
என்று அர்ஜுனனிடம் க்ருஷ்ணன்
கூறினார். இதன் பொருள்
என்ன? இவர் சொல்வதை அர்ஜுனன்
காதால் கேட்டுக்கொண்டுதானே
உள்ளான்? ஆக நான் சொல்படி
செய்யாவிட்டால் என்று
அர்த்தம். அதுபோல் ராமன்
சுமந்தரனிடம் "நாச்ரெளஷம்"
என்று சொன்னதற்கு நீ
சொன்னது காதில் விழுந்தது
ஆனால் நீ சொற்படி நடக்க
மாட்டேன் என்று பொருள்
கூறி நிர்வகிக்கலாம்.
ஸவையில் தீர்மானித்த
பிறகு ஏகாந்தத்தில் வேண்டாம்
என்றால் அத ஞாயம் இல்லை
என அபிப்ராயம் ராமனுக்கு.
அஹிம்ஸையை
முக்கியமான தர்மமாக்
கொண்டாடும் நாம் யாகம்
முதலியவற்றில் விலக்கை
காண்கிறோம். பசு ஹிம்ஸை
செய்து யாகத்தை பூர்த்தி
பண்ணுகிறோம். அது போல்
'ஸத்யம் வத' என்று சொன்ன
ஸத்ய தர்மத்துக்கம் விலக்கு
உண்டு.
விவாக காலத்திலும்,
ஸ்த்ரீயுடன் சேரும் காலத்திலும்,
பிராணாபத்திலும், ஸர்வதனத்துக்கும்
அபஹாரம் நேரும் காலத்திலும்,
பசுவுக்கும் பிராமணர்களுக்கும்
ஆபத்து வரும் காலத்திலும்
பொய் பேசலாம். இது பாவத்தை
கொடுக்காது.
உண்மையில்
யாகங்களில் பசுவை கொல்வது
ஹிம்ஸையில் சேராது என்று
சாஸ்திரம் கூறியிருக்கிறது.
அது போல மேலே சொன்ன
ஸமயங்களில் ஏற்படும்
பேச்சுக்களும் பொய்யில்
சேரா; உண்மையானவையே.
இப்படி
உண்மை பேசுவதனால் தானும்
நல்ல லோகத்தை அடைகிறான்;
பிறர்க்கும் நற்கதி கொடுக்கிறான்.
இதையே தர்மமாக கைக் கொண்டபடியால்
இவன் பேசும் பேச்செல்லாம்
அர்த்தத்திலும் உண்மையிலேயே
முடிகிறது.
ஸ்ரீராமன்
ஜடாயுவுக்கு ஸம்ஸ்காரம்
செய்து, "உனக்கு நான் நற்கதியை
கொடுத்தேன்" என்றான்.
'இவன் பரமாத்மா; இவனுக்கு
கொடுக்க சக்தி உண்டு'
என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
மனுஷ்ய பாவனையை வைத்து
இவன் பேசும் போது இப்படி
கூறுகிறார். என்ன காரணம்?
இவன் 'உண்மை பேசுவது' என்பதையே
கைக் கொண்டவன். இவன்
பேச்சு எப்படி பொய்யாகும்?
இவன் சொல்வதேல்லாம்
பலித்தேதானே ஆகவேண்டும்?
சிலர், நடக்க போகும்
விஷயத்தை அநுஸரித்து
பேசுவர். சிலர் பேச்சை
அநுஸரித்து விஷயம் நடக்கும்.
ஸ்ரீராமன் இரண்டாவது
வகையை சேர்ந்தவன். 'ஸத்யேந
லோகாந் ஜயதி' என்று வால்மீகி
இவனை கொண்டாடுகிறார்.
ஓர்
அரசனை கொல்வதற்காக பகைவனான
அரசனும் அவனது ஸேனையும்
ஓடி வந்தனர். பயந்த அரசன்
வீதஹவ்யருடைய ஆசிரமத்துக்குள்
நுழைந்துவிட்டான். விரோதி
அரசன் வீதஹவ்யரைப் பார்த்து,
"இங்கு யாராவது அரசன்
ஓடிவந்தானா?" என்று கேட்டான்.
அதற்கு முனிவர், "ந ஹ்யஸ்தி
க்ஷத்ரிய: கச்சித் ஸர்வே
ஹீமே த்விஜாதய:. இங்கு
ஒரு க்ஷத்திரியனும் இல்லை.
அனைவரும் பிராம்மணர்களே"
என்று கூறிவிட்டார்.
விரோதி அரசன் சென்றுவிட்டான்.
ஆசிரமத்துள் நுழைந்து
பார்த்தால், பயந்து ஓடி
வந்த அரசன் க்ஷத்திரிய
அடையாளங்கள் போய் பிராமண
அடையாளங்களை பெற்றுவிட்டான்.
இந்த முனிவரின் வார்த்தை
இவ்வுலகிலேயே உண்மையாகிவிட்டது.
ஆகையால்,
ஸத்ய தர்மத்தை நன்கு
அறிந்து அநுஷ்டித்து
வந்தால் எல்லாவித மேன்மைகளையும்
பெறலாம்.
வஸுதேவர் கம்ஸனிடம்
தனது எட்டாவது குழந்தையை
கொண்டு கொடுப்பதாக
வாக்களித்தார். என்ன
செய்தார். க்ருஷ்ண ஜனனமானது.
யசோதை வீட்டில் குழந்தையை
ஒப்படைத்தார். பெண்தான்
பிறந்தது என்றும் பொய்
சொன்னார். இங்கு க்ருஷ்ணன்
வஸுதேவரிடம் பொய் சொல்லும்படி
நியமித்துவிட்டார். பகவானான
க்ருஷ்ணனே பொய் பேசச்
சொன்னார். இது தர்மமா?
அதர்மமா? ஸத்யமா, பொய்யா
என்பதை கவனித்துக் கொள்ள
வேண்டும். இப்படி பல இடங்கள்.
ஆகையால் எது பொய் எது
மெய் என்பதை ஆராய்ந்து
கொள்ளவேண்டும்.
*****
|