ஸ்ரீமதே லக்ஷ்மீந்ருஸிம்ஹபரப்ரஹ்மனே
நம:
மும்மதஸாரம் (மதத்ரய
ஸித்தாந்தம்)
ஸம்ஸேவ்ய
லக்ஷ்மீசம் அஹோபிலேசம் தர்மார்த்த
காமாதி பல ப்ரதம் தம்
| குரூம்ச்ச ஸர்வோத்தம
ஸத்குணெளகான் மதத்ரயேஹம்
விலிகாமி ஸாரம்||
அத்னைவதாதி
மதேஷ்வத்ர ஸாரம் ஸமபிதத்மஹே
| தத்தத் பாஷ்யோக்தயா
ரீத்யா விசதம் புததுஷ்டயே| தத்தன்
மதாசார்ய வரா: ப்ரஸீதந்து
மயி த்ருவம் யேஷா மனுக்ரஹாத்
ஸத்ய: கூடபாவா: ஸ்புரிந்திமே புதவரை:
ஸஹ்ருதயை; வைலக்ஷண்யம்
மதத்ரயே| ஸந்தோஷார்த்தம்
விசேஷேண ஞ்யாதவ்யம் அனஸுயபி தத்ரதத்ரஸ்திதான்
அர்த்தான் ஸங்க்ரு ஹ்யாத்ம
விதுஷ்டயே த்ராவிட்யா
பாஷாயா வச்மி ஜனஸந்தோஷா
லிப்ஸயா || த்ராவிட்யா
பாஷயா வச்மி ஜனஸந்தோஷ
ஸிப்ஸயா || ஸ்காலித்ய மத்ர
த்ருச்யேத யதிமந்தமதே
: க்ருதெள ஹிதைஷிபி: ப்ராக்ஞவரை:
க்ஷந்தவயம் அகிலம் க்ஷணாத்
|
ஸ்ரீமதஹோபில மலைக்கு
ஸ்வாமியும், அறம், பொருள்,
இன்பம், வீடு முதலிய பலனைக்
கொடுப்பவனும் வேதப்ரஸித்தனுமான
லக்ஷ்மீகாந்தனையும்
உயர்ந்த எல்லா குணங்களுக்கும்
இருப்பிடமான ஆசார்யர்களையும்
நன்கு ஸேவித்து மூன்று
மதங்களிலுள்ள ஸாரத்தை
எழுதுகிறேன். த்வைதம்,
அத்வைதம், விசிஷ்டாத்வைதம்
என்கிற மதங்களில் உள்ள
ஸாரத்தை அந்தந்த பாஷ்யத்தில்
காட்டியுள்ளபடி, பண்டிதர்கள்
ஸந்தோஷமடைய விசதமாகக்
கூறுகிறோம். அந்தந்த
மதாசாரியர்கள் என் விஷயத்தில்
அநுக்ரஹம் புரிய வேண்டும்.
எவருடைய அநுக்ரஹத்தால்
உட்கருத்துக்குள் தோன்றுகின்றனவோ
! ஸஹ்ருதயரான பண்டிதர்கள்
அஸூயையற்றவர்களாய், மூன்று
மதங்களிலுள்ள வேறுபாட்டை
ஸுலபமாக அறிந்து கொண்டு
ஸந்தோஷம் அடையலாம்.
ஆங்காங்கு உள்ள அர்த்தங்களை
ஸங்க்ரஹித்து, எனது மனநிம்மதியின்
பொருட்டு, தமிழ் மொழியில்
எல்லா ஜனங்களும் ஸந்தோஷமடைய
விருப்பமுற்று இதை எழுதுகிறோம்.
எனது இந்த ப்ரபந்தத்தில்
பிழைகள் ஏற்படலாம். என்னிடம்
நன்மை விரும்புகின்ற
பண்டிதர்கள் எல்லாவற்றையும்
பொறுத்தருள வேண்டும்.
ஸ்ரீரங்க
கார்யாத்மஜ யோகிராஜம் வித்யாஸமுத்ரம்
விதுஷாம் வரரேண்யம் | ப்ரணம்ய
தஸ்யைவ கடாக்ஷலேசாத் ஆஸ்வாத்ய
தேஸார ஸுதா மதானாம் ||
வித்யைக்கு
கடலும் பண்டிதர்களுக்கு
சிறந்தவருமான ஸ்ரீமதஹோபில
மடத்தில் 42வது பட்டத்தில்
மூர்த்தாபிஷிக்தருமான
ஸ்ரீரங்கசடகோப யதீந்த்ர
மகாதேசிகனை எமது குருவை
வணங்கி, அவருடைய அனுக்ரஹத்தால்
மூன்று மதங்களுடைய ஸார
அமிர்தமானது இங்கு அனுபவிக்கப்படுகிறது.
நதூஷணம்
பூஷணம் வா குர்யாமத்ர
மதத்ரயே கேவலம் ஸாரமாத்ரம்
து தர்சயாமி விசேஷ த: ||
தேஹாபிமானம்
ஸம்த்யஜ்ய ஹததுக்கா:
பரம் ஸுகம் ப்ராப்னுவந்து
இதி புத்யைவ மதாசார்யா
: ஸமாகதா : || ஜனக்ஷேமாபி
வ்ருத்யர்த்தம் சக்ரு
: பாஷ்யாதிகம் மித : ஸமேஷாம்
குருவர்யாணாம் லக்ஷ்யமேகம்
விபாவ்யதாம் ||
இங்கு
மூன்று மதங்களிலும் குணதோஷங்களைச்
சொல்ல நான் வரவில்லை.
ஸாரமாத்ரத்தைக் காட்டுகிறேன்.
உடலில் அபிமானத்தை விட்டு
ஸர்வ துக்கங்களையும்
போக்கடித்து பேரின்பத்தை
'ஜனங்கள் அடைய வேண்டுமென்ற
எண்ணத்தால் மூன்று மதாச்சார்யர்களும்
அவதரித்தனர். ஜனங்களின்
நன்மைக்காகவே பாஷ்யங்களைச்
செய்தனர். எல்லா ஆசார்யர்களுக்கும்
லக்ஷ்யம் ஒன்றே என அறிய
வேண்டும்.
பலவகையான
மதங்கள்
உலகத்தில் வஸிக்கின்ற
நாம் பல வகையான புறப்பொருட்களைப்
பார்த்து வருகிறோம்.
இப்படியே, நான், தான், யான்,
என்று சொல்லக்கூடிய
அகப் பொருளையும் அனுபவித்து
வருகிறோம். நான் என்று
சொல்லப்படுவதுதான்
ஆத்மா. இது ப்ரியமான பெண்டாட்டி
புத்ரன். பந்து, அன்னம்,
தனம், வீடு, ஆபரணம், வஸ்தரம்,
தோட்டம், சந்தனம், முதலியவற்றைக்
காட்டிலும் ப்ரியமானது
புத்ரன். மனைவி முதலிய
ப்ரியமான வஸ்துக்களை
நாம் விரும்புவதற்கு
காரணம் என்ன என்று ஆராய்ந்து
பார்த்தால், ஆத்மாவினிடமுள்ள
அன்புதான் காரணம் என்று
சொல்ல வேண்டியதாக உள்ளது.
இவைகளை நாம் நாடுவது
நம் அனுபவத்துக்காகவன்றோ
? ஒரு சமயம் நம் அனுபவத்துக்கு
இவை உதவாமல் போய்விட்டால்,
இவைகளை வேண்டாம் என்று
உதறித்தள்ளி விடுகிறோம்.
முன்பு அவைகளில் வைத்த
ப்ரீதியை மறந்தே விடுகிறோம்.
ஆக அவைகள் போலியான ப்ரிய
வஸ்துக்கள். தான் எனப்படும்
ஆத்மா அவ்யாஜமான ப்ரீதிக்கு
எல்லை நிலம். ஆகையால்
அகண்ட ப்ரேமமயமான ஆத்மாவுக்காகவே
உலகம் படைக்கப்பட்டதாக
நினைக்கிறோம். ஆக ஆத்மவஸ்து
எனப்படும் அகப்பொருள்
ப்ரியதமம், ப்ரேயம் என்று
சொல்லப்படுகிறது. புறப்பொருட்களில்
வைக்கப்படும் ப்ரீதி
பல காரணங்களால் பாதிக்கப்படுகிறது.
ஒரு சமயம் அப்ரியமாகவும்
மாறிவிடுகின்றன. ஆத்மாவில்
உள்ள அன்பானது ஆழ்ந்து
கிடக்கிறபடியால் ஒரு
சமயத்திலும் எந்தகாரணத்தாலும்
ஓர் அணுமாத்திரமும் பாதிக்கப்படாமல்
நிலையாய் இருந்து வருகிறது.
ஒருவன் வெறுப்பால் தற்கொலை
செய்துகொள்வதும்கூட
ஆத்மாவினிடமுள்ள அன்பாலே
தான். ஆக, எல்லாப் பிராணிகளும்
தங்களுக்கு வேண்டிய ஹிதங்களைக்
கூட்டிக் கொள்கின்றன.
வேண்டாத அஹிதங்களைக்
கழித்துக் கொள்கின்றன.
ஆகையால் இவ்வாத்மாபிமானம்
எல்லாப் பிராணிகளுக்கும்
உண்டு. ப்ரியதமமான ப்ரேயமான
ஆத்மாவின் கண் உள்ள அபிமானத்தினாலன்றோ
ஈ, எறும்பு, பசு, பக்ஷி முதலியவைகள்
கூட ப்ரயத்னங்களை செய்கின்றன.
அவை செய்யும் ப்ரயத்னத்தைப்
பார்த்தால் அவைகளின்
ஆத்மாபிமானம் புலப்படும்.
இது எல்லாப் பிராணிகளுக்கும்
ஸமமாக இருந்த போதிலும்
அகப் (தத்தம்) பொருளைப்
பற்றி ஒவ்வொரு ப்ராணிகளுக்கும்
வெவ்வேறு விதங்களான தீர்மானங்கள்
உள்ளபடியால் அதற்கு தகுந்தாற்போல்
அபிருசி மாறி விடுகிறது.
பசுக்கள், புல், வைக்கோல்,
தவிடு முதலியவைகளை விரும்புகின்றன.
மனிதர்கள் அன்னம், பாயஸம்,
பக்ஷ்யம் முதலியவைகளையும்,
தேவர்கள் அம்ருதத்தையும்,
விஷயமறிந்த பண்டிதர்கள்
பகவத்தாஸ்யத்தையும்
விரும்புகின்றனர். இப்படி
பலவகையில் ருசி இருப்பதற்கு
காரணம், அவைகள் தங்களது
உடலையே ஆத்மாவாக நினைத்திருப்பதுதான்.
உடலைக்காட்டிலும் வேறுபட்டது
ஆத்மா என்று உணர்ந்திருப்பவனான
ஒருவன்தான் சரீர போஷகமான
பொருளை விரும்பாமல்
ஆத்மபோஷகமான பொருளை
விரும்புவான். அவன் ஒருவன்தான்
ஸத் எனப்படுகிறான். தான்
என்று தோன்றப்படும்
பொருள் ஆத்மா அதை போஷிக்க
வேண்டும் என்கிற எண்ணம்
எல்லோருக்கும் பொது.
ஆனால் அது எது என்றால்
அவரவர்கள் தங்கள் புத்திக்கு
எட்டியவரை, ஆத்ம வஸ்துவை
நிர்ணயிப்பார்கள். ஆகக்
கண்களுக்கு புலப்படுகிறது
உடலானபடியால் இதையே ஆத்மா
என நினைக்கின்றனர். அகப்பொருளுக்கும்
புறப்பொருளுக்கும்
பேதத்தை அறியாதவர்களானபடியால்
அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.
உண்மையில் நான் யார்
என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும்
மனதில் தோன்றுகிறது.
அதற்காக ஆத்ம விசாரணையில்
இறங்குகின்றனர். இந்த
ஆத்ம விசாரணையேதான் மதம்
எனப்படுகிறது. இந்த ஆத்ம
தத்வ நிர்ணயத்தில் இழியும்
புத்திமான்கள் ஆத்ம ஸ்வரூபத்தின்
உண்மையைக் கூறுகின்றனர்.
அதை அடையும் வழியையும்
அதற்கு வேண்டிய உதவிகளையும்
தீர்மானிக்கின்றனர்.
இதைத்தான் தத்வ, ஹித, புருஷார்த்தம்
என்கிறோம். இவைகளைப்
பற்றிய நிர்ணயம்தான்
மதம். இந்த மதத்தைப் போதிக்கின்றவை
சமய நூல்கள். தான் என்று
தோன்றப்படும் ஆத்மவஸ்துவை
நிர்ணயிக்க வந்தவர்கள்
அனைவரும் ஒரேவிதமான தீர்மானத்தைச்
செய்வதில்லை. தங்கள்
புத்திக்கு அனுசாரமாகவே
ஒவ்வொருவழியை போதிக்கின்றனர்.
ஸுலபமாக நிர்ணயிக்கக்கூடிய
விஷயமல்லவே அந்த அகப்பொருள்.
புறப்பொருள் வெட்டவெளியாகத்
தோன்றுகின்றது. அதை
ஸுலபமாக அறிந்து கொள்ள
முடியும். இதுதான் அகப்பொருள்
ஆயிற்றே. இதை எவ்வாறு
ஸுலபமாக அறிந்து கொள்ள
முடியும்? ப்ரமாணத்துறையில்
புகுந்துதான் அறியவேண்டும்.
ப்ரமாணங்களும் ஒருவகையாகத்
தீர்மானிக்கப்படுபவை
அல்ல. அவரவர்களுக்கு
ஏற்பட்டுள்ள அனுபவம்,
அதற்குத் தகுந்ததான யுக்திகள்,
அபிலாஷைகள், ப்ரமாணங்கள்
இவையெல்லாம் வேறுபடுகின்றன.
அதனால் மதம் பின்னமாகிறது.
உடலே ஆத்மாவென்றால்,
அதற்குத் தகுந்தபடி தத்வஹித
புருஷார்த்தங்கள் வேறுபடுகின்றன.
அழியக் கூடிய உடலைக்
காட்டிலும் வேறுபட்டது
என்றால் அதற்குத் தகுந்தபடி
தத்வஹித புருஷார்த்தங்கள்
மாறிவிடுகின்றன.
இவ்வாறு
ஆத்ம தத்துவத்தையும்
ஹிதத்தையும் புருஷார்த்தத்தையும்
போதிக்கின்ற மதங்கள்
பலவாகின்றன. அவை : 1. சார்வாக
மதம், 2. தார்கிக மதம், 3. ஸாங்க்ய
மதம், 4. புத்த மதம், 5. ஜைன
மதம், 6. ஒளபநிஷத மதம் என்பவை.
இவற்றில், நான்காவதான
புத்த மதத்தில் நான்கு
பிரிவுகள் உள்ளன. வைகாஷிக
மதம், ஸெளத்ராந்திக மதம்,
யோகாசார மதம், மாத்யமிக
மதம் என்று. இதேபோல்
ஆறாவதான ஒளபநிஷத மதத்திலும்
பல பிரிவுகள் உள்ளன. அவற்றில்
முக்கியமானவை அத்வைதம்,
விசிஷ்டாத்வைதம், த்வைதம்
என்பன. இங்கு வேதாந்த
ஸம்பந்தமான இம்மூன்று
மதங்களின் உண்மையை வெகு
ஸுலபமாக அனைவரும் அறிய
வேண்டும் என்றெண்ணத்தால்
இம்மதங்களை நூல்முறையாக,
தமிழில் எளிய நடையில்
எழுத ஆரம்பிக்கிறோம்.
இவைகளை நன்கு படித்து
வாசகர்கள் ஸந்தோஷமடைவார்கள்
என நம்புகிறோம்.
த்வைதம்,
அத்வைதம், விசிஷ்டாத்வைதம்
என மூன்று ஸித்தாந்தங்களையும்
பிரசாரத்துக்குக் கொண்டு
வந்த மும்மத ஆசார்யர்களுமே
வேதம், உபநிடதம் இவைகளை
பரமப்ரமாணமாக ஏற்றுக்
கொண்டவர்கள். உபநிடதங்களின்
சுருக்கம்தான் ப்ரஹ்மசூத்ரம்.
18 புராணங்களையும் மஹாபாரதத்தையும்
ஜனங்கள் உய்ய இயற்றிப்
ப்ரகாசப்படுத்தியவர்
வேதவியாசர். இவர்தான்
ப்ரஹ்மசூத்ரத்தையும்
இயற்றியவர். உபநிடதம்
எனப்படும் வேதங்களின்
உண்மைகளை சுலபமாக மக்கள்
அறிய வேண்டும் என்ற அவாவுடன்
இதை அருளினார். இந்த சூத்ரத்திற்கு
மூன்று ஆசார்யர்களும்
பாஷ்யம் இட்டனர். மூன்று
பாஷ்யமும் சூத்ரங்களை
விளக்கவே வந்தன. ஆனாலும்
இவ்விளக்கத்தில் பெரிய
மாறுபாடுகள் ஏற்பட்டுவிட்டன.
ஒவ்வொறு ஆசார்யரும்
வெவ்வேறு அபிப்ராயத்தை
முன்னிட்டு உரையிட்டுவிட்டனர்.
இது காரணமாக, த்வைதவேதாந்தம்,
அத்வைத வேதாந்தம, விசிஷ்டாதவைத
வேதாந்தம் எனப் பெயரும்
ஏற்பட்டுவிட்டது. மத்வாசார்யரின்
கொள்கையைக் கூறும் வேதாந்தம்
த்வைத வேதாந்தம். சங்கராச்சாரியரது
கொள்கையைக் கூறும் வேதாந்தம்
அத்வைத வேதாந்தம். ராமானுஜ
முனிவரது கொள்கையைக்
கூறும் வேதாந்தம் விசிஷ்டாத்வைத
வேதாந்தம் என்னும் பெயரும்
வழங்கிவிட்டது.
அத்வைதம்
- இந்தச் சொல்லின் கருத்தை
முதலில் அறிய வேண்டும்.
அ த்வைதம் - அத்வைதம். அ
என்பதற்கு அல்ல, இல்லை
என்று பொருள். அயோக்யன்
அநீதி என்கிறவிடத்தில்
'அ' என்பதற்கு அல்ல என்பது
பொருள். த்வி, த்வைதம்
என்பதற்கு இரண்டு என்று
பொருள். இரு பதத்தையும்
சேர்த்துப் பொருள் கூறினால்,
இரண்டு அல்ல எனப் பொருள்படும்.
ஆக அத்வைதம் என்ற சொல்
இரண்டல்ல என்ற கருத்தை
வெளிப்படுத்துகிறது.
இரண்டு
என்பவை எவை? அவற்றை இல்லை
என்று ஏன் சொல்ல வேண்டும்
என்ற வினா வரும். இறைவனும்
ஜீவனுமாகிய ஆன்மாவுமே
இரண்டுபொருள். இவை இரு
பொருள்களாகத் தோன்றிய
போதிலும் உண்மையில்
இவை இரண்டும் இரண்டல்ல,
ஒன்றே என்பதைக் குறிக்கிறது.
அத்வைதம் என்ற சொல்.
இறைவன், ஆன்மா என இரு பொருள்
இருக்க ஒன்றுதான் என
எப்படிக் கூறமுடியும்
என்றால், உபநிடத வசனங்கள்
ஒன்றே பொருள்; மற்றவை
கல்பிதங்கள் எனக் கூறுகிறபடியால்
இவ்வாறே இசைய வேண்டும்.
உலகில் எண்ணற்ற பலகோடி
உயர்களைப்பார்க்கிறோம்.
பசு, பக்ஷி, பாம்பு, மனிதன்,
ஈ, எறும்பு, கொசு இவ்வகையில்
ெவ்வேறு ஆத்மாக்களைக்
காண்கிறோம். ஆனாலும்
ஆத்மா ஒன்றுதான். ஏக ஆத்ம
வாதம் என்று தான் சொல்ல
வேண்டும். இதைத்தான்
அத்வைதம் எனச் சொல்கிறது.
இந்த
ஏகாதமவாதத்தை அத்வைதிகள்
பலவழிகளில் ஸாதிக்கின்றனர்
(1) பிம்பபிரதிபிம்ப வாதம்
(2) அவச்சேதவாதம் (3) உபாதிவாதம்.
பூமியில்
கிணறுகள், குளங்கள், குட்டைகள்
முதலிய நீர் நிலைகள்
இருக்கின்றன. ஒவ்வொரு
நீர் நிலையிலும் வானத்திலுள்ள
சந்திரன் தோன்றுகிறான்.
நீர் நிலை எத்ததையோ
அத்தனை சந்திரன் காணப்படுகிறான்.
ஆனாலும் வானில் ஒரே ஒரு
சந்திரன்தான் உண்மையில்
இருக்கிறான். பிம்பமான
ஒரு சந்திரன்தான் ஸத்யம்;
மற்றவை பிரதிபிம்பங்கள்.
உண்மையில் இவைகள் சந்திரன்
அல்ல. இதுபோல் இறைவன்
பிம்பம்;ஆன்மாக்கள் பிரதிபிம்பங்கள்.
பிம்பமான இறைவன் ஒருவனே
ஸத்யம். பிம்பமான இறைவன்
அவித்யைகளில் ப்ரதிபலிக்கிறான்.
ஆக பலஜீவாத்மாக்களாகத்
தோற்றமளிக்கிறான். நீரில்
கலங்கிய நீரும் தெளிந்த
நீரும் உண்டு. தெளிந்த
நீரில் தோன்றும் சந்த்ர
ப்ரதிபிம்பம் கலக்கமற்றது.
கலங்கிய நீரில் கலக்கமுற்றது.
நீரின் அசைதலை அனுசரித்து
ப்ரதிபிம்ப சந்திரனின்
அசைதலும் உண்டு. இதுபோலவே
அவித்யையும் பலவகைப்படுகிறது.
அதற்குத்தக்கபடி ஜீவர்களிலும்
பலவேறுபாடுகள் ஏற்படுகின்றன.
அவித்யை, மாயை, அறியாமை
எனப்பெயர். இம்மாயையை
வசனங்களால் விவரிக்க
முடியாது. எனவே அநிர்வசனீயம்
எனக் கூறுவார்.
இவ்வாறே
அவச்சேதாவாதத்தையும்
இசைந்து அத்வைதத்தை ஸ்தாபிக்கின்றனர்.
வெளி என்பது ஆகாசம். இது
எல்லாவிடத்திலும் பரவியிருக்கிறது.
இது ஒன்றே ஒன்றுதான்.
ஆனாலும் இவ்வாகாசம் பல
அடைப்புப் பொருள்களாலும்,
பல தடுப்புப் பொருள்களாலும்
தனித்தனியான கூறுகளால்
காணப்பட்டு பிரிக்கப்படுகிறது.
உதாரணமாகக் குடம் முதலிய
பாத்திரங்களில் ஆகாசம்
நிரம்பியுள்ளது. ஓர்
அறையிலும் நிரம்பியுள்ளது.
அந்த வடிவங்களுக்கேற்ப
ஆகாசம் பிரிந்தும் தனித்தும்
நிற்கின்றது. ஆகவே கடாகாசம்,
அறையாகாசம் குட்யாகாசம்
என்று சொல்கிறோம்.
குடத்துக்கு உள்ளே உள்ள
ஆகாசமும், அதற்கு வெளியே
உள்ள ஆகாசமும் ஒன்றுதான்.
தற்காலிகமான தடுப்பினால்
அது வெவ்வேறாகிறது. இது
போல் ப்ரஹ்மம் ஒன்றுதான்
உண்மைப் பொருள். பல தடுப்புகளால்
பல ஆத்மாக்களாகத் தோற்றமளிக்கிறது.
ஒரு ஆத்மாவே, பல அமைப்புகளால்
பந்திக்கப்பட்டு பல ஜீவன்களாகக்
காணப்படுகிறது. இதுதான்
அவச் சேதவாதம். சேதம்
என்பதற்குப் பிரித்தல்,
வெட்டுதல் எனப் பொருள்.
இந்த சேதத்திற்குக் காரணம்
மாயை. இம்மாயை ஒன்றையே
பலவாக்கிக் காட்டும்
தன்மையை உடையது.
த்வைதம்
- இரண்டு பொருள்கள் உள்ளன
என்பது இதன் கருத்து.
ஸுலபமாகவே இதை இவர்கள்
கூறுகின்றனர். பொருள்கள்
இரண்டு உள்ளன, இதுதான்
உண்மை. வேதவசனங்களும்
இதை வலியுறுத்துகின்றன.
ஆன்மாக்களிலும் பல வேறுபாடுகள்
இருக்கின்றன. இதையும்
வேதம் கூறுகிறது. ஆக, த்வைத்மே
ப்ரமாணிகம்.
விசிஷ்டாத்வைதம்
- த்வைதம் என்ற சொல் இதில்
அடங்கியுள்ளது. ஆயினும்
கருத்து வேறு. உலகம், உயிர்கள்,
இறைவன் என மூன்று வகையாக
பொருள்கள் பிரிக்கப்படுகின்றன.
மண், ஜலம், நெருப்பு முதலியவைகளையும்
இவைகளின் கலப்பால் உண்டான
பொருள்களையும் (அசித்தையும்)
உடலோடு கூடிய உயிர்களையும்
(சித்தை) பார்க்கிறோம்.
இவை அனைத்தையும் வியாபித்து
ஆட்டி வைக்கும் ஈச்வரனையும்
இசைந்துள்ளோம். இந்த
உடலை இந்த உயிர் (ஜீவாத்மா)
இயக்குகின்றான். ஆகையால்
கண்ணுக்குப்புலப்படும்
உடலுக்கு உயிராகிய ஜீவாத்மாவுக்கும்
இறைவன் உயிராகிறான்.
எனவே, எல்லாம் இறைவனுக்கு
உடல். நமது உடலை நோக்கினால்
நாம் உயிராகின்றோம்.
நம்மை நோக்கினால் இறைவன்
உயிராகின்றான். எல்லாம்
அவனது சரீரம்; அவன் சரீரீ.
நம்மை நோக்கினால் நமது
உடல் அஸ்வதந்த்ரம். ஆக
அது ப்ரதானமன்று. உடல்
உயிரைச் சார்ந்ததன்றோ?
இதுபோல் நாமும் அவனது
உடலானபடியால் நாம் ஸ்வதந்த்ரமன்று;
அவன்தான் ஸ்வதந்த்ரன்.
இதை மனதில் வைத்துக்கொண்டே,
உன்நிடதங்கள் ஒன்றே பொருள்
எனக்கூறிற்று. இறைவன்
ஒருவன் தானே ஸ்வதந்த்ரமான
பொருள். மற்ற பொருள்களும்
உண்டு. ஆனால் அவை ஸ்வதந்தரங்கள்
அன்று. ஆக உலகம் இல்லவே
இல்லை எனக்கூறுதல் சரியன்று.
உடலோடு கூடிய
ப்ரஹ்மம், விசிஷ்டம்
எனச் சொல்லப் படுகிறது.
அது ஒன்று என்பதுதான்
விசிஷ்டாத்வைதம் என்ற
சொல்லுக்கு உடகருத்து.
உலகம், உயிர்கள், இறைவன்
ஆகிய மூன்றும் சேர்ந்து
ஒரு பொருள். உலகமும்
உயிர்களும் அங்கங்கள்.
இறைவன் அங்கி அதாவது
அந்த அங்கங்களை உடையவன்.
உலகு, உயிர் இவைகளை தனக்கு
உறுப்புக்களாக உடையவன்
எம்பெருமான். அவனுக்கும்
அவன் உறுப்புக்களாக உடையவன்
எம்பெருமான். அவனுக்கும்
அவன் உறுப்புக்களுக்கும்
உள்ள தொடர்பு மிக நெருக்கமானது.
இந்த ஸம்பந்தத்திற்கு
அப்ருதக் ஸித்தி எனப்
பெயர். பிரிக்க முடியாத
தொடர்பு எனப்பொருள்.
பழத்துக்கும் அதன் சுவைக்கும்
இருக்கும் தொடர்பு போல்
இது அமைந்திருக்கிறது.
மேலும், சுவை பழத்தில்
தங்கியுள்ளது. பழமிருந்தால்தான்
சுவை இருக்கும். எனவே,
சுவை நிலைத்து நிற்பதற்குப்
பழம் இன்றியமையாதது.
இதைப் போலவே, உலகுக்கும்
உயிர்க்கும் இறைவன் இன்றியமையாதவன்.
இதனால்தான் அவை இரண்டும்
நிலைத்து நிற்கும் தன்மை
உடையது.
அங்கி இல்லாமல்
அங்கமில்லை. அரசனில்லாமல்
ப்ரஜைகளில்லை. உயிரில்லாமல்
உடலில்லை. அதுபோல் அங்கமில்லாமல்
அங்கியில்லை; ப்ரஜைகளில்லாமல்
அரசனில்லை; உடலில்லாமல்
உயிரில்லை என்று சொல்லலாமே
என்ற ஐயம் ஏற்படும். ஆயினும்
இதுயுக்தமன்று. சுவையில்லாமல்
பழமில்லை என்பதைக் கொண்டு
சுவைக்குப்ராதாந்யம்
(முக்யத்துவம்) கூறுவதில்லையே.
பழம்தான் ப்ரதானம். ரத்னத்துக்கு
ஒளியினால் ஏற்றமிருந்த
போதிலும் தர்மியான ரத்னத்துக்குத்தானே
ப்ரதான்யம் கூறுகின்றோம்.
ஆக பகவானுக்கே ப்ரதான்யம்.
எனவே அவன்தான் ஸ்வதந்த்ரன்.
இப்படிப்பட்டவன் ஒருவனே.
இவ்வகையில் அத்வைதம்,
த்வைதம், விசிஷ்டாத்வைதம்
என்கிற சொற்களின் கருத்தை
உணர வேண்டும். இனி இம்மதங்களின்
விரிவை மதாசார்யர்கள்
கூறிய வழிப்படி விஸ்தாரமாகக்
கூறுகிறோம். முதலில்
அத்வைதத்தைப்பற்றி விளக்குகிறோம்.
|