பக்தனின் பெருமை
நாம்
வணங்க வேண்டிய மகான்கள்
எத்ததையோ பேர் இருக்கின்றனர்.
எந்த இடத்தில் எந்த விசேஷம்
இருக்கிறது என்பதை நம்மால்
உணர முடியாது. நீறு பூத்த
நெருப்புப் போல் எத்தனையோ
பெரியவர்கள் இருக்கின்றனர்.
அவர்கள் தம்மிடத்திலுள்ள
விசேஷ மேன்மையை தெரியப்படுத்தாமல்
இருப்பார்கள். அதைக்
கொண்டே அவர்களிடத்தில்
ஒருவிதமான ஏற்றமும் இல்லை
என்று நினைக்கக் கூடாது.
சிலர் தங்களிடத்திலுள்ள
விசேஷங்களை தாமாகவும்
பிறர் மூலமாகவும் வெளிப்படுத்தி
தங்களை உலகத்து மக்கள்
கெளரவிக்கும்படியாக
செய்வார்கள். இதைக் கொண்டே
அவர்களிடத்தில் ஞானம்
ஆசாரம் பக்தி முதலிய
குணங்கள் இருப்பதாக ப்ரமிக்க
வேண்டாம்.
ஒரு
கலசத்தில் தண்ணீரோ எண்ணையோ
நெய்யோ பூர்ணமாக இருந்தால்
அந்த கலசம் தளும்புவதில்லை.
அரைகுரையாக இருந்தால்
அது அதிக ஒலியை எழுப்பும்.
அது போல் சிலர் நிறைய
ஞானத்தையும் ஊக்கத்தையும்
ஒழுக்கத்தையும் பக்தியையும்
பெற்றவர்கள். தங்களைப்
பற்றி எதுவும் பேசமாட்டார்கள்.
பிறர் மூலமாக தங்களுக்கு
கெளரவத்தை உண்டாக்க முயற்சியும்
செய்ய மாட்டார்கள். இத்தகைய
மகான்களே மகான்கள். உத்தமர்கள்.
மேடையிலிருந்து தங்களை
பற்றி புகழ்ந்து கொண்டும்
ஆங்காங்கே தங்களுக்கு
ஸத்காரம் ஏற்பட்டது என்று
சொல்லிக் கொண்டும்
திரிகிறவர்கள் அப்படிப்பட்ட
மகான்களில் சேரமாட்டார்கள்.
'அப்ரயத்நாகனா:
ஸேவ்யா க்ருஹஸ்தைர் விஷயா:
ஸதா |' என்றபடி, தாமாகவே
பகவத் ஸங்கல்பத்தினால்
ஏற்படும் பிறர் மூலமான
ஸத் காரியங்களையும் லேளகீக
செளகர்யங்களையுமே அவர்கள்
பெற விரும்புவார்கள்.
இம்மாதிரி லெளகீக விஷயத்தில்
இந்த மகான்கள் முயற்சி
எடுத்துக் கொள்ளவே மாட்டார்கள்.
சந்யாவந்தனம், பகவதாராதானம்,
மற்றும் சில தர்மங்களில்
எம்பெருமானின் உவப்புக்காக
தாங்களே முயற்சி செய்ய
விரும்புவார்கள்.
சாஸ்திரங்களில்,
பகவானை சேவிக்க வேண்டும்
என்று கூறியிருக்கிறது.
ஆயினும், அந்த பகவான்
தன்னைவிட பக்தர்களே உயர்ந்தவர்கள்
என்று கூறுகிறான்; 'மம
மத்பக்த-பக்தேஷு ப்ரீதிரப்யதிகா
பவேத்' என்று. 'எனக்கு என்னிடத்தில்
ப்ரீதி உண்டு. என்னைச்
சேர்ந்து என்னிடம் பக்தி
செலுத்துகிறவரிடம் அதிகப்
ப்ரீதி உண்டு. அந்த பக்தரிடத்தில்
பக்தி செய்பவனிடத்தில்
மிக்க அதிகப் ப்ரீதி
உண்டு. இப்படி மேன்மேல்
பக்தி செய்பவனிடத்தில்
ப்ரீதிக்கு அளவே இல்லை'
என்று பகவானே கூறுகிறான்.
ஆகையால் பகவானிடத்திலும்
அந்தப் பாகவதனிடத்திலும்
எவனுக்கு உண்மையான பக்தி
உள்ளதோ அவனை நான் வணங்குகிறேன்
என்பதே பகவானுடைய ஸங்கல்பம்.
இந்த
பக்தர்களிடத்தில் பகவானுக்கு
எவ்வளவு ஆசையிருக்கிறதோ
அவ்வளவு கோபமும் அந்த
பக்தர்களுக்கு துன்பம்
விளைவிப்பவரிடத்தில்
உள்ளது. பக்தர்களுக்கு
ஒருவன் விரோதத்தை உண்டு
பண்ணினால் அவனை பகவான்
வெறுப்பான்; அவனிடம்
கடும் சினம் கொள்வான்;
தன்னையும் அறியாமல் அவனிடத்தில்
கோபத்தை காட்டி நிக்ரஹ
பானங்களைத் தொடுப்பான்.
'கோபஸ்ய வசமேயிவாந்'
என்பதுதான் உண்மை. பாகவதர்களுக்கு
விரோதம் செய்கிற மற்றவரிடம்
மட்டுமே கோபம் கொள்வான்
என்பதில்லை. பகவான் தன்
கையே பாகவதர்களுக்கு
இடையூறு செய்யும்போல்
தோன்றினால் அதையும்
கத்தியால் வெட்டிவிடுவான்.
இதை பாகவதம் விளக்கமாக
காட்டுகிறது.
கார்ய
வைகுண்ட லோகத்தில் பகவான்
சிம்ஹாசனத்தில் லக்ஷ்மியுடன்
வீற்றிருக்கிறான். அப்பொழுது
ப்ரம்மாவின் மானஸ புத்திரர்களான
ஸனகர் முதலியவர்கள் அங்கே
செல்கிறார்னள். ஸனகர்,
ஸனந்தனர், ஸனாதனர், ஸனத்குமாரர்
என்ற நால்வரும் ஐந்து
உள்ளவர்கள். ஞானத்திலோ
முதிர்ச்சி பெற்றவர்கள்.
இவர்கள் அனைவரையும் சமமாக
பார்ப்பவர். எப்பொழுதும்
பகவத் த்யானம் செய்பவர்கள்;
முனிவர்கள்; எல்லா இடத்திலும்
செல்வதற்கு தடையற்றவர்கள்;
எந்த சமயத்திலும் செல்ல
உறிமை பெற்றவர்கள். இவர்களை
வேண்டாம் என்று யாருமே
தடுக்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட இந்த நால்வரும்
வைகுண்ட லோகத்திலுள்ள
பகவானை சேவிக்க சென்றபோது
ஜயன் விஜயன் என்ற இரண்டு
த்வாரபாலகர் தங்கள் கையிலுள்ள
பிரம்பை எடுத்து நீட்டி
தடுத்து இவர்களை கேலியும்
செய்தார்கள்.
பகவானின்
சேவையில் அபிலாக்ஷையுடன்
வந்த தங்களுக்கு இம்மாதிரி
ஏற்பட்ட ஏமாற்றத்தை கண்டு
இவர்கள் மிக்க சினம்
கொண்டனர்; 'பகவானின்
சமீபத்திலேயே வாசம் செய்தும்
அடிமையைச் செய்தும் இருக்கிற
உங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட
விபரீத புத்தி உண்டாயிற்று?
உங்களது மதி மயக்கத்திற்கு
காரணம் யாது? ப்ராசந்த
புருஷணான பகவானுக்கு
நீங்கள் வேலைக்காரராக
இருக்க தகுதியேயில்லை.
ஆகையால் சாபத்தைக் கொடுத்தோம்
என்றனர்.
அப்பொழுது,
சர்வஜ்ஞனான பகவான் ஏதோ
பெரிய அனர்த்தம் உண்டாகிவிடும்
என்று எண்ணி தன் சிம்ஹாசனத்திலிருந்து
இவர்கள் இருக்குமிடம்
வந்து ஸனகாதி முனிவர்களை
வேண்டிக்கொள்கிறான்.
'மகரிஷிகளே! எனக்கு நீங்களே
உயர்ந்த தெய்வம். உங்களுடைய
அருள் எனக்கு அவசியம்
வேண்டும். என் வேலைக்காரர்
செய்த குற்றம் என்னுடைய
குற்றமே' என்று சொல்லி
இருதியில் ஒரு ரசகனமான
விஷயத்தைக் கூறுகிறான்.
'எந்த பகவானுடைய
ஸத் சரித்திரங்களைக்
கூறுவதும் கேட்பதுமாகிய
புண்ணிய தீர்த்தத்தில்
ஸ்நானம் செய்வது எல்லா
ஜனங்களையும் பரிசுத்தமாக்குகிறதோ
அத்தகைய பகவானான நான்
உங்களால் அல்லவோ சத்தை
பெருகிறேன்? நீங்கள்
செய்யும் பூஜையினாலும்
நிவேதனங்களினாலும் ஸ்தோத்திரங்களினாலும்
மனதில் செய்யக் கூடிய
த்யானத்தினாலும் என்
உடல் பெருத்துவிடுகிறது.
என் ஸ்வரூபமும் நிலை
பெறுகிறது. ஆகையால் உங்களுக்கு
தடை செய்பவர்களை இப்பொழுதே
கொல்ல வேண்டும். உங்களுக்கு
பிரதிகூலமாக என் கையே
இருக்க நேர்ந்தால் அதையும்
அறுத்துதள்ளுவேன் என்றான்.
இதிலிருந்து பக்தனின்
மகிமை எப்படிப்பட்டது
என்பதை நாம் நன்கு உணரலாம்.
பகவான் தன் கைகளையே அறுத்து
தள்ளுகிறேன் என்று சொல்லுகிறான்
என்றால் விரோதத்தைச்
செய்யும் மற்றவர்கள்
விஷயத்தை பற்றி கேட்கவும்
வேண்டுமா?
பக்தர்களிடத்தில்
பகவான் இப்படி அதிகமான
அபிநிவேசத்தை வைத்திருப்பதனால்
அவர்களிடத்தில் விரோத
மனப்பான்மையை காட்டவே
கூடாது. அவர்களுக்கு
இயன்ற வரையில் அநுகூலமாகவே
நடந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொருவனுக்கும் மனம்
வாக்கு சரீரம் என்று
மூன்று கரணங்கள் உள்ளன.
இந்த முக்கரணங்களினாலும்
பாகவதர் விஷயத்தில் அபசாரப்படாமல்
இருப்பதும் உபசாரம் செய்துகொண்டு
இருப்பதுமே கடமை.
ஸ்ரீவைகுண்டம்
என்ற உலகத்தையடைந்து
அங்கு எம்பெருமானுடைய
அநுபவத்தை பெறுவதாகிற
மோக்ஷத்தை அடைய, வேதாந்தங்களில்
முப்பத்திரண்டு வழிகள்
கூறப்பட்டுள்ளன. இவற்றுக்கு
'ப்ரஹமவித்யா' என்று பெயர்.
சாண்டில்ய வித்யை, உபகோஸல
வித்யை, தஹர வித்யை, ஸத்
வித்யை இம்மாதிரியானவை
அவை. இவற்றுள் ஏதாவது
ஒரு ப்ரஹமவித்யையை பயின்று
வந்தால் பரிபூர்ண ப்ரஹமாநுபவம்
என்ற மோக்ஷம் கிடைக்கும்.
இவற்றை அநுஷ்டிப்பவன்தான்
பக்தன், பாகவதன், ப்ரபன்னன்
என்று சொல்லப் பெறுகிறான்.
இவன் விஷயத்தில் பகவானுக்கு
அளவற்ற உவப்பு உண்டாகிறது.
'உண்ணும் சோறு பருகு
நீர் தின்னும் வெற்றிலையும்
எல்லாம் கண்ணன்' என்றும்
'வாசுதேவ: சர்வம்' என்றும்
எம்பெருமானையே தனக்கு
தாரகணாகவும் போஷகணாகவும்
போக்யணாகவும் நினைப்பவன்
இவன். உலகத்திலுள்ள மாந்தர்
தங்கள் தங்களுக்கு சோறு
பால் வெற்றிலை முதலியவற்றை
தார: பொஷ: போக்யங்களாக
நினைப்பார்கள். இந்த
பக்தன் இவற்றில் பற்றற்று,
'எல்லா பொருள்களும்
பகவானே என்று நினைக்கிறான்
அல்ப சுகங்களில் ஆசையற்று
'எல்லாம் பகவானுக்கே'
என்று எண்ணி தன் முக்கரணங்களையும்
பகவானிடத்திலேயே அர்ப்பனம்
செய்கிறபடியால் இவனை
பகவான் 'மகாத்மா' என்று
சொல்கிறான். உலகத்தில்
ஏதோ சில காரணத்தை முன்னிட்டு
ஒருவனை 'மகாத்மா' என்று
சொல்லுவது வழக்கம்.
அதுபோல் இல்லாமல் பகவானே
கொண்டாடிய இவன்தான்
மகாத்மா. இத்தகைய மகாத்மாவை
பகவான் தான் பெற்றபிறகு
ஒரு சமயத்திலும் கைவிடமாட்டான்.
இவர்கள் ஸ்ரீவைகுண்டத்தை
அடைந்தபிறகு ஏதாவது ஒரு
காரணத்தைச் சொல்லி 'நான்
மறுபடி ப்ரக்ருதி மண்டலத்திற்கு
போய் வருகிறேன். எனக்கு
பதிலாக மற்றொரு பொருளை
ப்ரதிநிதியாக வைக்கிறேன்'
என்று சொன்னாலும் பகவான்
இவனை அனுப்பமாட்டான்.
'பிணை கொடுக்கிலும்
போக ஒட்டாரே' என்றன்றோ
சொல்வது?
இந்த பக்தர்கள்
தங்களது பக்தியோகம்
முடிந்து உடலை மோக்ஷத்துக்கு
போகவிடும்போது தங்களுடைய
பாவங்களையும் புண்ணியங்களையும்
தங்களது சத்ருக்களிடத்திலும்
ஸ்நேகிதர்களிலத்திலும்
விட்டு போகிறார்கள்
என்று சாஸ்திரம் கூறுகிறது.
பகவானிடத்தில் அதிக பக்திபெற்ற
இவர்களுக்கு பாவம் இருக்குமா
என்று நினைக்கவேண்டாம்.
அனாதிகாலமாக ஸம்ஸாரத்தில்
சூழன்றுகொண்டு இருந்தவர்கள்தாமே
இப்பொழுது பக்தர்களானார்கள்?
அந்தந்த உடலை எடுத்து
ப்ரக்ருதி மண்டலத்தில்
இருக்கும்போது அளவற்ற
பாவங்கள் அனைவருக்கும்
ஏற்படுவது சகஜம்தானே?
அறிவு பெற்று ஆசார்யனை
அடைந்து காலக்ஷேபங்களை
செய்து வேதாந்த ஞானம்
முதிர்ந்து வந்து பிறகுதான்,
'பகவானுடைய உத்தரவுபடி
நாம் இருக்கவேண்டும்.
அவனிடம் அடைக்கலம் நாம்.
அவனுடைய சட்டதிட்டங்களுக்கு
அடங்கியிருக்கவேண்டும்.
பாவங்களை செய்யக் கூடாது'
என்ற எண்ணங்கள் பெரும்பாலும்
உண்டாகும். ஆகையால் எத்தனையோ
பிறவிகளில் இவர்கள் அநேக
பாவங்கள் செய்திருக்கலாம்,
ஆகவே இவர்கள் செய்த எல்லா
பாவங்களும் இருதியில்
உடலை விடும்போது இவர்களிடத்தில்
அபசாரப்பட்டிருக்கும்
விரோதியினிடத்தில்
சேர்ந்துவிடும். ஆகையால்தான்
பக்தர்களிடத்தில் விரோத
மனப்பான்மை காட்டக்கூடாது.
சாதாரணமாக நாம் செய்த
பாவங்களே அளவற்று இருக்க,
பாகவதர்களிடத்தில் அபசாரப்பட்டு
அதனால் வரும் அவரது பாவங்கள்
அனைத்தையும் பெற்றுக்
கொண்டால் இவற்றுக்கு
விமோசமே இல்லாமல் போய்விடும்.
அதனால்தான் ஒரு பாகவதனிடத்தில்
தெரிந்தோ தெரியாமலோ
ஏதாவது குற்றம் செய்துவிட்டால்
அவருடைய பாவமும் நம்மிடம்
வந்துவிடுமே என்று எண்ணி,
அவரது கடைசி காலத்திலாவது
அவரிடம் சென்று, 'அடியேன்
தேவரீரடத்தில் பல குற்றங்களை
செய்திருப்பேன். அடியேனை
மன்னிக்க வேண்டும்' என்று
ப்ரார்த்திப்பார்கள்.
ஆகையால் அவருடைய
பாவங்கள் நமக்கு வந்துவிடுமே
என்று அஞ்சி அவரிடம்
கோபத்தை காட்டாமல் இருப்பவன்
உத்தமன்.
ப்ரஹ்மவித்பாபவர்காணாமநந்தாநாம்
மஹீயஸாம் | தத்த்வேஷிஸங்க்ரமம்
ஜாநந் த்ரஸ்யேத் ததபராதத:
||
'அந்த பாகவதர் நம்மிடத்தில்
ஏதாவது விரோதத்தைக்
காட்டினால் நாம் எப்படி
வெறுமனே இருப்பது ? பதிலுக்குப்
பதில் ஏதாவது செய்ய வேண்டாமா?
அவர் எவ்வளவோ நம்மிடத்தில்
விரோதத்தைக் காட்டுகிறாரே.
ஆகவே நாமும் அவருக்கு
ஏதாவது விரோதத்தைச்
செய்வது நல்லது' என்று
நினைக்கக் கூடாது. அவர்
செய்த பாவங்களுக்கு சிக்ஷையைக்
கொடுக்க பகவான் இருப்பதனால்
நாம் வாளா இருப்பதே நல்லது.
அப்படி ஏதாவது நாம் செய்ய
ஆரம்பித்தால் ஈர்வரன்
செய்ய வேண்டிய வேலையை
நாம் எடுத்துக் கொண்டதுபோல்
ஆகிவிடும். அதனால் நம்மை
ஈச்வரன் வெறுப்பான்.
'வோடுமீச்வரக்ருத்யாநி
தத்விரோதாதபீப்ஸதி'
என்று அருளிச் செய்தார்
ஸ்ரீஸ்வாமி தேசிகன்.
இப்படியும்
சிலர் நினைக்கலாம்: இரண்டு
பாகவதர்கள்; அவர்களில்
ஒருவன், 'நானும் பகவத்
பக்தன்தானே?. மற்றொரு
பக்தனிடத்தில் விரோதத்தை
செய்தால் நமக்கு ஒரு
வித தீங்கும் வராது. அவருடைய
பாவங்கள் நம்மிடம் வந்துவிடுமே
என்று அஞ்சவேண்டாம்.
நாமும் பக்தரானபடியால்
நமது பாவம் நம் விரோதிகளிடத்தில்
போவது போல் நம்மிடம்
வந்த அவரது பாவங்களும்
நமது விரோதிகளிடத்தில்
போய்விடப்போகின்றன.
ஆகையால் நமக்கு ஒருவித
தீங்கும் இல்லை என்று
எண்ணலாம் அல்லவா? நமது
பாவம் போலவே பாகவதர்களின்
பாவம் நம்மிடம் வந்ததும்
நமது பாவங்களாகவே ஆகிறபடியால்
அது கடைசியில் நம் விரோதியினிடத்தில்
போகப்போவது வாஸ்தவம்தான்.
ஆனாலும் அந்த பாவம் உடல்போவதற்கு
முன்பாகவே பலன் கொடுக்கக்கூடியதாக
இருந்தால் அது உடனே பலித்து
பெரிய அநிஷ்டத்தை கொடுத்துவிடும்;
பெரும் கஷ்டத்தை கொடுத்து
துன்புறுத்தும். எல்லா
பாவங்களும் வெகுகாலம்
கழித்துதான் பக்குவமாகும்
என்ற நிர்பந்தம் இல்லையே?
ஆகையால் இப்படிப்பட்ட
கஷ்டங்கள் நமக்கு வராமல்
இருக்கவேண்டும் என்று
எண்ணி பக்தர்களும் ஒருவரிடம்
ஒருவர் அபசாரபடாமல் இருப்பதுதான்
நல்லது.
இப்படியே
பாகவதரின் புண்ணியங்களும்
அவர்களின் ஸ்நேகிதர்களிடத்தில்
வரும்; ஆகையால் சில்லரையான
சில தொண்டுகளை பாகவதர்களிடத்தில்
செய்து அவர்களது அளவற்ற
புண்ணியங்களை எளிதில்
பெற்றுவிடலாம். ஆகையால்
அவர்களிடத்தில் அபசாரப்படாமல்
இருப்பதும் சில நற்காரியங்களை
செய்திருப்பதும் நன்மையை
கொடுக்கும். எனவே பாகவர்கள்
எல்லோரிடத்திலும் ஒரேவிதமான
அபிமானத்தை வைத்தும்,
வேறுபாட்டை காட்டாமலும்
இருந்து உபசரிக்கவேண்டும்.
இதில், 'நமக்கு இவர்தான்
வேண்டியவர். இவர் வேண்டாதவர்
என்ற பாகுபாட்டை காட்டக்
கூடாது. ஏனெனில் பகவத்
பக்தி என்ற ஒரு பெரும்
குணத்தை இட்டுத்தானே
நாம் பாகவதர்களை உபசரிக்கிறோம்?
அது யாரிடத்தில் இருந்தால்
என்ன? ஒரே விதமாகத் தானே
நாம் அவர்களை கருதவேண்டும்?
இப்படி கருதாமல் விஷம
புத்தியுடன் நடந்தால்
நம்மை எம்பெருமான் வெறுப்பானே
தவிர உவக்கமாட்டான்.
கல்விகளை நன்கு கற்று
ஞானம், அநுஷ்டானம், வைராக்யம்,
பக்தி இவற்றை பெற்ற வித்வான்களிடத்தில்
சமமான எண்ணத்தை வைத்து
எல்லோரையும் நாம் ஒரே
விதமாக ஆதரிப்பதுதான்
பகவானை சந்தோஷிப்பிக்கும்.
*****
|