படித்தவன் பணக்காரனா?
உலகத்திலுள்ள
மக்கள் அனைவருமே பணக்காரர்களும்
அல்லர்; ஏழைகளும் அல்லர்.
சிலர் அளவற்ற பணத்தை
வைத்துக் கொண்டு செலவு
செய்யத் தெரியாமலும்
தாங்களும் சுகபோகங்களை
அநுபவிக்காமலும் பிறருக்கும்
கொடுக்காமலும் பாங்குகளிலும்
பெட்டிகளிலும் வைத்துக்
கொண்டு அழகு பார்த்துக்
கொண்டிருக்கின்றனர்.
சில செல்வர்கள் இஷ்டப்படி
செலவு செய்தும் மாளிகை
முதலியவற்றைக் கட்டிக்
கொண்டும் அளவற்ற இன்பங்களை
அநுபவித்துக் கொண்டும்
பொழுது போக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஏழை மக்கள் உண்டிக்கும்
உடைக்குமே இல்லாமல் கஷ்டப்பட்டுக்
கொண்டு, தினந்தோறும்
ஏற்படும் செலவுக்கே பணம்
இல்லாமல் தவித்துக் கொண்டு
ஏங்கியிருக்கின்றனர்.
அனைவரையுமே பணக்காரர்களாகச்
செய்ய முடியாது; ஏழைகளாகவும்
செய்ய முடியாது. இது உலக
இயற்கை.
தசரத சக்ரவர்த்தி
கைகேயியினிடத்திலுள்ள
ஆசையினால் அவளுடன் சுகங்களை
அநுபவிப்பதற்காக, "பணக்காரர்களையும்
ஏழையாக்குகிறேன்; ஏழைகளையும்
பணக்காரர்களாக்குகிறேன்.
உன் மனத்திலுள்ள விருப்பத்தைச்
சொல்" என்று சொன்னான்.
இதெல்லாம் வாயால் மாத்திரம்
சொல்ல முடியுமே தவிரச்
செயலில் செய்து நிறைவேற்ற
இயலாது. இப்பொழுது உள்ள
அரசாங்கங்களும் லாட்டரிச்
சீட்டுகளை நடத்தி வருகின்றன.
இதனால் ஏதோ சில மக்கள்
பணக்காரர்களாகிறார்களே
தவிர எல்லாரும் ஆக முடிவதில்லை.
இது தெய்வத்தின் செயலானபடியால்
நாம் இதனுள் புகுந்து
என்ன செய்ய முடியும்?
இப்படிப்
பெரும்பாலும் உலகில்
சில பணக்காரர்களையும்
சில ஏழைகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறோமே,
இவர்களில் யார் பணக்காரர்கள்,
யார் ஏழைகள் என்று யோசிப்போம்.
மேலே குறிப்பிட்ட தலைப்பைப்
பார்த்து யாரும் மிரள
வேண்டாம்; சீற்றமும்
கொள்ள வேண்டாம்; முணு
முணுக்கவும் வேண்டாம்.
படித்தவர்கள் ஏழை மக்களே
என்றும், பணக்காரர்கள்
முட்டாள்கள் என்றும்
சொல்வதற்காக நாம் வந்தோம்
என்று நினைக்க வேண்டாம்.
உலகரீதி எப்படி உள்ளது
என்று ஆராயவே இந்தத்
தலைப்பை எடுத்தோம்.
ஒரு
பணக்காரன் நிறையப் பணம்
வைத்துக் கொண்டு மற்றவர்களுக்குக்
கடன் கொடுக்கிறான்.
ஆனால் அவன் ஏதோ ஒரு காரணமாக
ஒரு பாரத்தில் (Form) கையொப்பம்
இடு என்றால், "ஐயோ! நான்
படிக்கவில்லையே, கையொப்பம்
போடத் தெரியாதே" என்று
சொல்கிறான். கடன் வாங்கினவன்
அவனுக்கு மணியார்டர்
மூலமாகப் பணம் அனுப்பினால்
கட்டைவிரலில் மையை வைத்துக்
கொண்டு கைநாட்டுச் செய்கிறான்.
நாம் படிக்கவில்லையே
என்ற வருத்தம் அவன் மனத்தில்
எள்ளளவும் இல்லை; பணம்
திரட்டுவதுதான் அவன்
நோக்கம்.
பல கல்விகளைக்
கற்றும், பல புத்தகங்களை
எழுதியும் அறிவு நிரம்பப்
பெற்றுள்ள படித்தவர்கள்
ஒவ்வொரு நாளைக் கழிப்பதற்கே
பணமில்லாமல் வருந்துகின்றனர்.
பெரிய புலவராக இருந்தும்
பணத்துக்காக, படிக்காத
பணக்காரர்களிடத்தில்
வயிறு வளர்ப்பதை முன்னிட்டுத்
தாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
உத்தியோகமோ உன்னதப்
பதவியோ படிக்காதவர்களுக்குத்தான்
வெகு எளிதில் கிடைக்கிறது.
நன்றாகப் படித்து, முதல்
வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும்
அறிவாளிகளுக்கு எளிதில்
வேலை கிடைப்பது மிகவும்
கடினமாக உள்ளது. பணத்தை
அதிகமாகத் திரட்டுகிறவன்
அதிகமாகப் படித்தேயிரான்.
நாலு
சாஸ்திரங்களையும் வேதங்களையிம்
நீதிநூல்களையும் நன்கு
கற்று மேடையில் உட்கார்ந்து
சாஸ்திர நெறிபிறழாமல்
நன்கு உபந்யாஸம் செய்பவனுக்குக்
கடைசியில் ஸம்பாவனை குறைந்தே
வருகிறது. அரைகுறையாகப்
படித்து ஆனந்த விகடன்,
கல்கி முதலியவற்றிலுள்ள
ஹாஸ்யக் கதைகளை எடுத்துச்
சொல்லி ஜனங்களைக் கவர்கிறவனுக்குக்
கடைசியில் ஸம்பாவனை நிறைய
வருகிறது. பொதுமக்களுக்கும்,
'குமுதம் முதலிய பத்திரிகைகளையும்,
சினிமா முதலியவற்றையும்
பார்த்தே இவர் சொல்லுகிற
கதைகளைத் தெரிந்துகொள்ளலாமே.
சாஸ்திர விஷயம் ஒன்றுமே
இவர் மேடையில் சொல்லவில்லையே?'
என்பதைக் கணிசிக்கும்
திறமை இல்லை.
இப்படி
எல்லா விதத்திலும் நன்கு
படித்தவர்களுக்குச்
செல்வத்தைச் சம்பாதிக்க
அவகாசமே ஏற்படுவதில்லை.
இதற்கு என்ன காரணம் என்பதைப்
பார்ப்போம். படிப்பு
என்பது கல்வி. இதற்கு
அதிஷ்டான தேவதை ஸரஸ்வதி.
செல்வத்துக்கு அதிஷ்டான
தேவதை மகாலக்ஷ்மி. இவ்விருவருக்கும்
ஒற்றுமை இல்லாமலிருப்பதுதான்
இதற்குக் காரணம். இது
தவிர வேறு என்ன சொல்ல
முடியும்? இவர்களது ஒற்றுமைக்
குறைவு மக்களுக்குத்
தீமையை விளைவித்து விடுகிறது.
படித்தவன் பணம் இல்லாததனால்
கஷ்டப்படுகிறான். பணக்காரன்
கல்வியின்மையால் திண்டாடுகிறான்.
இவர்களின்
ஒற்றுமையின்மைக்கு என்ன
காரணம்? மாமியாருக்கும்
மருமகளுக்கும் ஒற்றுமை
எப்படி ஏற்படும்? நாட்டுப்
பெண் தன் வீட்டுக்கு
வந்ததும் அவளை அயலாக
நினைத்தும் தன்னை எஜமானியாக
நினைத்தும் அவளுக்கு
எவ்வளவு தீங்கு செய்ய
இயலுமோ அவ்வளவும் செய்துவிடுகிறாளே
மாமியார். வீட்டிலுள்ள
தன் பெண்ணை எப்படிப்
பாவிக்கிறாளோ அப்படி
நாட்டுப் பெண்ணைப் பாவிப்பதில்லை.
கடைக்குச் சென்று ஏதாவது
பொருள் வாங்கினால் தன்
பெண்ணுக்கென்று எடுக்கிறாளே
தவிரத் தன் மருமகளுக்கு
எதையும் வாங்குவதில்லை.
மாமியார் என்ற பதவியில்
ருந்தாலே இந்த மோகம்
ஏற்பட்டுவிடுகிறது. முதலில்
ஒருத்தி நாட்டுப் பெண்ணாக
இருந்து தன் மாமியார்
செய்யும் கொடுமைகளை
அநுபவித்து மிகக் கஷ்டத்துடன்
இருப்பவள்தான்; அவள்
ஒரு மருமகளைப் பெறும்போது
தான் பெற்ற கொடுமைகளை
மறந்துவிட்டு, அவளைப்
படாதபாடு படுத்துகிறாள்.
தான் பெற்ற தீமைகளை மறந்துதான்
செய்கிறாளோ, அல்லது
நாட்டுப் பெண்களுக்கு
இப்படித்தான் செய்ய வேண்டும்
என்று செய்கிறாளோ! இதை
உலகத்தில் பல இடங்களில்
நாம் கண்டுள்ளோம்.
இந்த
இயல்பு லக்ஷ்மியையும்
ஸரஸ்வதியையும் மாத்திரம்
எப்படி விடும்? லக்ஷ்மியின்
முதற் புதல்வர் ப்ரம்மதேவர்.
அவர் மனைவி ஸரஸ்வதி. எனவே
ஸரஸ்வதி லக்ஷ்மிக்கு
நாட்டுப் பெண்ணாகிறாள்.
இவர்களுக்கு ஒற்றுமை
எப்படி ஏற்படும்? இது
காரணமாகத்தான் மக்களுக்கு
மாறாட்டம் ஏற்படுகிறது.
ஆகையால் பணம் உடையவர்களுக்கு
அதிகப் படிப்பு வருவதில்லை.
படிப்பு உள்ளவர்களுக்குப்
பணம் கிடைப்பதில்லை.
இதற்கு ஒரு கதை கூறுகிறோம்.
ஓர் ஊரில் ஓர்
அந்தணர் இருந்தார். அவர்
நிறையக் கற்றவர்; வேதங்களை
முறைப்படி ஓதியவர்; அவைகளில்
சென்று நன்கு பேசும்
திறமை உடையவர். படிப்பு
என்பது ஓர் உருவம் எடுத்து
வந்ததோ என்று சொல்வதுபோல்
அவர் காணப்பட்டார். அவர்
எவ்வளவு கல்வி பயின்றிருந்தாரோ
அவ்வளவு வறுமை அவரைப்
பிடித்து வருத்தியது.
கந்தலாடையைத்தான் அவர்
அணிவார். கிழியாத ஆடையை
அவர் பார்த்ததே இல்லை.
பட்டுப் பீதாம்பரத்துக்கு
ப்ரஸக்தி ஏது? அவர் கட்டிக்
கொண்டிருக்கும் ஆடையில்
ஊசி நுழைவதற்குக்கூட
இடம் இராது. இப்படி இருக்கும்
இவருக்கு உண்ண உணவேது?
எனவே ஏதோ ஒரு பழம் செம்பை
எடுத்துக் கொண்டு உஞ்சவிருத்திக்கு
வெளியில் செல்வார். இவர்
முன்னோர் சம்பாதித்து
வைத்த பொருள் இந்தச்
செம்பு ஒன்றுதான்.
இவர்
தினந்தோறும் காலையில்
தம் அநுஷ்டானத்தை நன்கு
செய்து முடித்து ஒவ்வொரு
வீதியிலும் சென்று இந்தச்
செம்பில் அமுதுபடியைப்
பெற்று வருவார். இவர்
கற்றுக் கொண்ட ஸ்தோத்திரபாடங்களுக்கு
இந்தச் சமயத்தில் நல்ல
அவகாசம் ஏற்பட்டது. கிடைத்த
அமுதுபடியைப் பெற்று,
மனைவியிடம் கொடுத்துச்
சோதித்துச் சமையல் செய்யச்
சொல்வார். இவர் மனைவியும்
சிரத்தையுடனும் அன்புடனும்
அதை வாங்கி எம்பெருமானுக்கென்றெண்ணிச்
சமையல் செய்து கணவரிடம்,
"அன்னம் சித்தமாக உள்ளது"
என்று சொல்வாள். அந்தணர்
கடவுளுக்குப் பூஜை செய்து
"நீ கொடுத்த இவ்வமுதுபடியை
நீயே புசிக்க வேண்டும்"
என்று சொல்லி ஆராதிப்பார்.
பகவத் நிவேதிதமான அன்னத்தைப்
பத்தினியும் அவருமாகப்
புசிப்பார்கள்.
இம்மாதிரி
சில காலம் சென்றது. ஸரஸ்வதி,
"நம்மிடம் பக்தியுடன்
கல்வியைப் பெற்றுள்ள
இவ்வந்தணர் வறுமையில்
ஆழ்ந்திருக்கிறாரே; இவருக்கு
ஏதாவது உதவி செய்ய வேண்டும்'
என்று நினைத்தாள். ஒரு
நாள் இவர் ஸ்நானம் செய்யப்
பொய்கைக்குச் சென்றிருந்தார்.
இதுதான் சமயம் என்றெண்ணி
ஸரஸ்வதி தேவி, "அந்தணரே,
இங்கே வாரும்" என்று கூப்பிட்டாள்.
இவர் நான்கு பக்கமும்
பார்த்தார். கண்ணுக்கு
யாரும் புலப்படவில்லை.
ஏதோ ப்ரமம் என்று எண்ணித்
தமது வேலையில் ஆழ்ந்தார்.
மறுபடியும் ஸரஸ்வதியின்
அழைப்பு இவர் காதில்
ஒலித்தது. திரும்பிப்
பார்த்தார். அழகிய மாது
ஒருத்தி இவர் கண்ணுக்குப்
புலப்பட்டாள். "அந்தணரே,
நீர் கவலைப்பட வேண்டாம்.
எவ்வளவோ கல்வியைப் பயின்றும்
வறுமையால் வருந்துகிறீர்.
இதோ என் கையிலுள்ள விலையுயர்ந்த
முத்துக்களை உமது செம்பில்
பெற்றுக் கொள்ளும்"
என்றாள்.
இதைக் கேட்டு
அந்தணர் மிக்க மகிழ்ச்சியுடன்
அதைச் செம்பில் பெற்றுக்கொண்டார்.
ஸரஸ்வதி மறைந்துவிட்டாள்.
இவர் மிக்க சந்தோஷத்துடன்,
'ஏதோ ஜன்மாந்தரத்தில்
செய்த புண்ணிய விசேஷம்'
என்று எண்ணி மிக்க பரபரப்புடன்
வீட்டுக்கு வந்தார்.
அந்த மாது இவரது செம்பில்
இரத்தினங்களைப் போட்டபோது
பார்த்திருந்த ஒருவன்
இவரைத் தொடர்ந்தே வந்தான்.
இவர் தமது இல்லத்துக்கு
வந்ததும் மனைவி அங்கில்லாதது
கண்டு, உள்ளே இருக்கும்
மேடையில் செம்பை வைத்துவிட்டுத்
தோட்டத்துப் பக்கம்
சென்றார். பின் தொடர்ந்தவன்,
'இது தான் சரியான சமயம்'
என்று எண்ணி அந்தச் செம்பை
அபகரித்துக் கொண்டு
போய்விட்டான்.
இவர்
மனைவியிடம் நடந்த சமாசாரத்தைச்
சொல்லி உள்ளே வந்து
பார்த்தபோது ரத்தினத்தையும்
காணவில்லை; செம்பையும்
காணவில்லை. அப்பொழுது
இவர்களுக்கு ஏற்பட்ட
மனவருத்தத்தைச் சொல்ல
வேண்டுமா? ஏதோ மனத்தைத்
தைரியப்படுத்திக் கொண்டு
அன்றைத் தினத்தைக் கழித்தார்கள்.
மறுதினம்
அந்தணர் வழக்கம்போல்
ஸ்நானம் செய்யக் குளத்துக்குச்
சென்றார். இவருக்கு அளவற்ற
ஐசுவரியத்தைக் கொடுத்தபடியால்
இவர் எப்படி வருகிறார்
என்று காண ஸரஸ்வதி அங்கு
வந்தாள். முன்போலவே
இவர் காட்சியளிப்பதைக்
கண்டு, "அந்தணரே, ஏன் இன்றும்
இம்மாதிரி வேஷத்துடன்
வருகிறீர்? நேற்று நான்
கொடுத்த பொருள்களைக்
கொண்டு எவ்வளவோ செளகரியங்கள்
செய்து கொண்டிருக்கலாமே?"
என்றாள். இவருக்குக்
கண்களில் நீர் தாரை தாரையாகப்
பெருகிற்று. "அம்மணி, நீ
எனக்குக் கொடுத்தது,
என் செம்பும் பறிபோன
நிலையை உண்டாக்கியது.
உஞ்சவிருத்தி செய்யச்
செம்பும் இல்லாமல் இப்பொழுது
தவிக்கிறேன்" என்றார்.
இதைக்கேட்ட
ஸரஸ்வதி, "நீர் கவலைப்பட
வேண்டாம்" என்று சொல்லிப்
புதிய வஸ்திரத்தில் வைரங்களையும்
ரத்தினங்களையும் கட்டி,
"இதை எடுத்துச் செல்லும்'
என்று கூறினாள். இவர்
சந்தோஷத்துடன் அதைப்
பெற்றுக் கொண்டு இல்லம்
திரும்பினார். இவர் கையிலுள்ள
மூட்டையில் ஏதோ சாப்பிடும்
பொருள் உள்ளது என்று
எண்ணி ஒரு கழுகு ஆகாயத்திலிருந்து
தெய்வச் செயலாக வந்து
மூட்டையைப் பறித்துக்
கொண்டு போயிற்று. இதைக்
கண்டு துக்கசாகரத்தில்
மூழ்கினார் அந்தணர்.
மறுதினமும்
வழக்கம் போல் குளத்தில்
ஸநானம் செய்யும் சமயத்தில்
ஸரஸ்வதி இவரைக் கண்டாள்.
'அடடா! இது என்ன ஆச்சரியம்!
நேற்றுப் போலவே இன்றும்
காணப்படுகிறார். இவருக்கு
நாம் கொடுத்தது உபயோப்படாமற்
போய்விட்டதே!' என்று
எண்ணி, இவரை அழைத்து ஒரு
பூசணிக்காயைக் கொடுத்தாள்.
அதில் விலையுயர்ந்த ரத்தினங்களை
வைத்திருந்தாள். ஆனால்
இவரிடம் அதைச் சொல்லாமல்
கொடுத்து, "வீட்டுக்குச்
சென்று சமையல் செய்து
சாப்பிடும்" என்று சொன்னாள்.
அதிர்ஷ்டஹீனரான இவர்
அதைப் பெற்றுக் கொண்டு
நடந்தார். வழியில் இவருக்கு
ஓர் எண்ணம் உண்டாயிற்று;
'அரிசி முதலிய எவையும்
நம் வீட்டில் இல்லையே.
இந்தக் காயை மாத்திரம்
எப்படிச் சமைத்துச் சாப்பிடுவது?
ஆகையால் யாருக்காவது
இதை விலைக்குக் கொடுத்து
அரிசி முதலியவற்றை வாங்கிக்
கொள்ளலாம்' என்று இவர்
நினைத்த சமயத்தில் எதிரில்
ஒருவன் வந்து பூசணிக்காயை
விலைக்குக் கேட்டான்.
இரண்டு ரூபாயைப் பெற்றுக்
கொண்டு அதைக் கொடுத்துச்
சாமான்களை வாங்கி அன்றைத்
தினத்தைக் கழித்தார்.
மறுநாள் வழக்கம்போல்
குளக்கரைக்கு வந்த இவரை
ஸரஸ்வதி கண்டு விசாரிக்க
முயன்றாள். இவர் நடந்ததைக்
கூறினார். அப்போது ஸரஸ்வதி
மிக்க வருத்தமடைந்து,
'நம்மை அடைந்தவர்களுக்கு
இப்படியும் ஒரு துர்த்தசை
ஏற்பட்டுவிட்டதே! இவரை
எவ்விதமாவது செல்வராக்குவது
நம் கடமை. முயன்றும் பயன்
இல்லாமல் போய்விட்டதே.
இனி என்ன செய்வது?" என்று
வருந்தினாள். செல்வத்துக்கு
அதிஷ்டான தேவதையான மகாலக்ஷ்மியிடம் இவ்விஷயத்தை
அறிந்துகொள்ள வேண்டும்
என்று எண்ணி மகாலக்ஷ்மியை
துதித்தாள். மகாலக்ஷ்மி
பிரசன்னமாகி வந்து, "என்னைக்
கலக்காமல் ஒருவனைப் பணக்காரனாக்குவது
உன்னால் முடியாது. முன்பே
என்னிடம் இதைச் சொல்லியிருந்தால்
இவரைப் பணக்காரராக்கியிருப்பேனே.
ஆனாலும் உன் விருப்பப்படி
இவரைச் செய்கிறேன். இவரை
வீட்டுக்குப் போகச்
செய்" என்று சொல்லி மறைந்தாள்.
அந்தணர்
ஸரஸ்வதியிடம் விடை பெற்று
வீட்டுக்கு வந்தார்.
இந்தச் சமயத்தில், இரண்டு
ரூபாயைக் கொடுத்துப்
பூசணிக்காயைப் பெற்றுக்
கொண்டவன் வீட்டுக்குச்
சென்று அதை அரிந்தான்.
அரிந்தவுடன் அதிலிருந்து
ரத்தினங்கள் கீழே குவிந்தன.
இதைக் கண்டு அவன் திக்ப்ரமம்
அடைந்தான். 'இது என்ன! காயில்
எப்படி ரத்தினங்கள் இருக்கும்?
ஏதோ தெய்வச் செயலாக
உள்ளது. இதை நம் வீட்டில்
வைத்துக் கொண்டால் அரசர்
மூலமாக அனர்த்தங்கள்
ஏற்படும்' என்று எண்ணி,
இவரது இல்லத்துக்கு வந்து
அந்தக் காயை இவரிடம்
கொடுத்துவிட்டான்.
முன்பு
பணமூட்டையை எடுத்துச்
சென்ற கழுகு அந்த மூட்டையை
இவர் இல்லத்தின் நடுவே
போட்டுவிட்டது. காய்
மூட்டை இரண்டையும் கொண்டு
அந்தணர் பெரிய பணக்காரராகிவிட்டார்.
ஒருவரிடம் பணம் நிறைய
இருந்தாலே அவர் அனைவர்
மதிப்புக்கும் உரியவர்
ஆகிறார் என்பது இயல்பு.
அதுபோல் இவரும் எல்லோராலும்
மதிக்கப்ட்டார். இதைக்
கண்டு, முன்பு செம்பைத்
திருடிக் கொண்டு போனவன்,
'நமக்கு இவர்மூலமாக ஏதாவது
துன்பம் ஏற்பட்டுவிடும்'
என்று பயந்து, அந்த செம்பை
இவரது வீட்டில் வைத்துப்
போய்விட்டான். இவர்
அதைப் பெற்று மேலும்
பணக்காரரானார். இப்படி
இந்தக் கதையை பெரியோர்
சொல்வதுண்டு.
ஆகையால்
பணம் இருந்தால் படிப்பு
இராது: படிப்பு இருந்தால்
பணம் இராது. புலவர்களுக்கு
வறுமைதான் அதிகம். எத்ததையோ
புலவர்கள் வறுமையினால்
துன்பப்பட்டார்கள் என்று
கேட்டிருக்கிறோம். பல
பிரபுக்களிடம் சென்று
தன் வறுமையைக் கூறிப்
பணம் சம்பாதிக்க முயன்றிருக்கின்றனர்.
ஒரு புலவர் போஜ அரசனிடம்
சென்று, "மிகச் சூடான கஞ்சியை
நான் சாப்பிடுவதனால்
என் கண்டத்தில் இருக்கும்
ஸரஸ்வதி வெப்பத்தைத்
தாங்க முடியாமல் கண்டத்திலிருந்து
வெளிவந்துவிட்டாள்' என்கிறார்.
இதிலிருந்து அவரிடத்தில்
வறுமையும் ஸரஸ்வதியும்
குடிகொண்டிருக்கிறார்கள்
என்பது விளங்குகிறது.
ஓரிரண்டு
இடங்களில் மாமியாரும்
நாட்டுப்பெண்ணும் சண்டையிடாமல்
மிகக் கெளரவமாகவும் ஒரவரிடம்
ஒருவர் மிக்க அன்புடனும்
இருப்பதுண்டு. அதுபோல்
ஏதோ சிலரிடத்தில் ஸரஸ்வதியும்
லக்ஷ்மியும் குடிகொண்டிருப்பர்.
ஜன்மாந்தரத்தில் செய்த
ஸுக்ருதம்தான் அதற்குக்
காரணம். அப்படிப்பட்ட
மனிதன் மிகப் பணக்காரனாகவும்
கல்வி கற்றவனாகவும் இருந்து,
கற்றதன் பயனாகத் தன்
செல்வத்தைத் தான் நன்கு
அநுபவித்தும் பிறருக்குப்
பல விதத்தில் கொடுத்து
உபகாரம் செய்தும், கோயில்
முதலியன கட்டியும், பல
ஏழை மக்களுக்கு அன்னமிட்டும்
வஸ்திரங்களைக் கொடுத்தும்
கல்வியைக் கற்பித்தும்
கற்பிக்க உபகாரம் செய்தும்
எல்லா ஜனங்களாலும் புகழப்பெற்று
வாழ்வான்.
*****
|