ஸம்பத்தும் விபத்தும்
உலகத்தில்
ஆபத்து ஸம்பத்து என்று
சொல்லும் வழக்கம் உண்டு.
தோட்டங்கள், மாளிகைகள்,
நிலங்கள் முதலிய செல்வங்களைப்
பெற்றவனைப் பெரிய ஸம்பன்னன்
என்று சொல்லுவார்கள்.
எல்லா விதமான செளகரியங்களையும்
பெற்று மிக்க மகிழ்ச்சியுடன்
இருக்கும் அவனை அதிருஷ்டசாலி
என்றும், நல்ல ஐச்வரியத்தைப்
பெற்ற மிக்க ஸம்பன்னன்
என்றும் உலகத்தோர் உரைப்பதுண்டு.
சாப்பிடுவதற்கு ஒரு செளகரியமும்
இல்லாமல் திண்டாடித்
தெருவில் திரிகிறவனை
மிகவும் துரதிருஷ்டசாலி
என்றும் மகாதரித்ரன்
என்றும் சொல்லுவதையும்
கேட்டிருக்கிறோம். இந்த
மனிதன் விபத்துக்கு ஆளானவன்.
ஸம்பத்து விபத்து என்ற
இரண்டும் ஒவ்வொருவனுக்கும்
உண்டு. ஒரு சமயம் மிகுந்த
ஐசுவரியத்துடன் வாழ்கிறவன்
மற்றொரு சமயம் அதிருஷ்டஹீனனாக
மிகவும் கவலையோடு இருப்பான்.
கஷ்டத்துக்கு ஆளான ஒருவன்
மற்றொரு சமயத்தில் எல்லாவித
ஸம்பத்துக்களையும் பெற்று
மிக்க சிறப்புடன் வாழ்வான்.
மனிதனுக்கு அதிருஷ்டம்
என்பது இவன் ஜீவித்திருக்கும்
எல்லா நாட்களிலுமே இருக்கும்
என்று சொல்ல முடியாது;
சக்கரத்தின் அரம் போல்
அது கீழும் மேலும் போய்க்
கொண்டே இருக்கும்.
நீசைர்
கச்சத்யுபரி ச தசா சக்ரநேமிக்ரமேண
|
என்று கவிகள் கூறியுள்ளனர்.
இதை நாம் அநுபவத்திலும்
கண்டிருக்கிறோம். பஞ்ச
பாண்டவர்கள் முதலில்
மிகுந்த கஷ்டத்துடன்
இருந்தவர்களே. பிறகு
அவர்களே ராஜ்யத்தில்
முடிசூடி விளங்கினார்கள்.
முதலில் துரியோதனன்
நல்ல தசையில் இருந்ததையும்
பிறகு அவனுக்கு துர்தசை
விளைந்ததையும் கேட்டுத்தானே
இருக்கிறோம்? ஆகையால்
நல்ல சுகத்துடன் வாழ்ந்து
கொண்டு பெரிய பதவியைப்
பெற்று அதிருஷ்டசாலியாக
இருப்பவன் தாழ்ந்தவர்களைத்
திடீரென்று அவமதித்து
ஏளனம் செய்யாமல் இருக்க
வேண்டும். இப்படி இருப்பவன்தான்
உத்தமன்.
சபையில் நியாயத்தைச்
சொன்ன விபீஷணனை 'வெளியில்
போ' என்று சொல்லிப்
புறக்கணித்த இலங்காதிபதியான
ராவணனின் கதி என்ன ஆயிற்று?
ஆகையால், 'நாம் பணக்காரனாக
ஆகிவிட்டோம். நமக்கு
யார் நிகர் இந்த நானிலத்தில்?'
என்று எண்ணி, ஸாதுக்களை
அலட்சியமாக நினைத்து
ஏதாவது பேசி பரிபவப்படுத்துவது,
யானை தன் தலையில் தானே
மண்ணைப் போட்டுக் கொள்வது
போலத்தான் முடியும்.
பகவானுடைய அநுக்ரகத்தினால்
நமக்கு கிடைத்துள்ள ஸம்பத்தை
நல்ல வழியில் விநியோகப்படுத்தி
ஸாதுக்களை உபசரிப்பது
மேன்மேலும் ச்ரேயஸ்ஸைக்
கொடுக்கும். மகா லக்ஷ்மியின்
கடாக்ஷலேசம் எவனிடத்தில்
விழுகிறதோ அவன் பெரிய
செல்வனாகிறான், எவனிடத்தில்
விழவில்லையோ அவன் வறியவனாகிறான்.
இதை ஸ்ரீகுணரத்நகோசத்தில்
ஸ்ரீபராசரபட்டர் மிகவும்
அழகாகவும் சமத்காரமாகவும்
அருளிச் செய்கிறார்.
'ஒருவன் மகாராஜாவாக ஆகிறான்.
அவன் ஓதநீர் வையகமாண்டு
வெண்குடைக்கீழ்ப் பூதேவர்கள்
உகக்கும்படி விளங்குகிறான்.
அவனது தலைக்கு நேராக
இருக்கும் வெண்குடையில்
எல்லாப் பக்கங்களிலும்
மணிகள் கட்டியிருக்கின்றன.
அதனால் 'கல் கல்' என்று
செவிகளைத் துளைக்கும்படி
மணியோசை கேட்கிறது.
இப்படிப் பெரிய ஸம்பன்னனாக
அவன் விளங்குவதற்கு காரணம்
மகாலக்ஷ்மியின் கடாக்ஷவீக்ஷணம்தான்.
அவனுக்கு எதிரிலேயே பற்களை
வரிசையாக காட்டிக் கொண்டு
பெருந்தரித்ரன் யாசகத்துக்குக்
கையை நீட்டி எதையாவது
கேட்டு நிற்கிறானே, அது
அந்த மகாலக்ஷ்மியின்
கடாக்ஷவீக்ஷணம் இல்லாமையால்
ஏற்பட்டது" என்கிறார்.
ஏகோ
முக்தாதபத்ரப்ரசயமணிகணாத்
காரிமெளலிர் மநுஷ்ய: த்ர்ப்யத்தந்தாவலஸ்தோ
ந கணயதி நதாந் யத் க்ஷணம்
க்ஷோணிபாலாந், | யஸ் தஸ்மை
திஷ்டதேசந்ய: க்ருபணமசரணோ
தர்சயந் தந்த பங்க்தீ தத்தே
ஸ்ரீரங்கராஜப்ரணயிநி
! நயநோதஞ்சிதந்யஞ்சிதாப்யாம்
||
(ஸ்ரீகுணரத்ந கோசம்
- 16)
இந்த ஒரே ச்லோகத்தில்,
பெருஞ் செல்வத்துக்கும்
கொடிய வறுமைக்கும் காரணம்
மகாலக்ஷ்மியின் கடாக்ஷம்
விழுவதும் விழாததுமே
என்று தெளிவாகச் சொன்ன
இந்த ஆசார்யரின் கருத்து
என்னவென்றால், லக்ஷ்மீகடாக்ஷத்தினால்
பெருஞ் செல்வத்தைப் பெற்ற
ஒருவன்மிக்க ஏழைமையுற்றவர்களை
மதிக்காமல் கர்வத்துடன்
அவமதித்தால் அவனுக்கே
இரண்டாவது தசை ஏற்பட்டுவிடும்
என்பதுதான். ஆகையால்,
பிற்பாடு நமக்கு ஏற்படும்
நிலையையும் அநுஸரித்துச்
சரியான பாகவதர்களிடத்தில்
செல்வத்தை விநியோகித்து
வாழ வேண்டும்.
இதுவரையில்
உலகத்தில் ஏற்படும் ஸம்பத்தையும்
விபத்தையும் பற்றிக்
கூறினோம். இனி உள்நுழைந்து
ஆராய்ந்து பார்த்தால்,
பணம் ஐச்வர்யம் வீடு
வாசல் முதலியவை ஸம்பத்து
அல்ல; உலகத்தில் ஏற்படும்
துன்பங்களும் விபத்தல்ல.
பின் எது செல்வம் என்றால்,
எம்பெருமானை எப்போதும்
ஸ்மரிப்பதுதான் ஸம்பத்து.
அவனை இடைவிடாமல் வாசித்தும்
கேட்டும் வணங்கி வழிபட்டும்
ஸர்வகாலமும் தியானிப்பது
உயர்ந்த செல்வத்தில்
சேரும். "ஸா ஹி ஸ்ரீரம்ருதா
ஸதாம்". எம்பொருமானுடைய
நினைப்புத்தான் அழியாத
செல்வம்' என்று ச்ருதியிலும்
சொல்லியிருக்கிறது.
விபத்து என்பது, பகவானை
ஸ்மரிக்காமல் இருப்பதுதான்.
பகவானை ஒரு கணமும் எவன்
நினைக்காமல் இருக்கிறானோ
அவனுக்கு அந்தக் கணமே
பேராபத்தை விளைவிக்கக்
கூடும் க்ஷணம்.
யந் முஹூர்த்தம்
க்ஷணம் வாபி வாஸுதேவோ
ந சிந்த்யதே | ஸா ஹாநிஸ்
தந் மஹத் சித்ரம் ஸா ப்ராந்திஸ்
ஸா ச விக்ரியா ||
என்று
சாஸ்திரம் கூறுகிறது.
ஆகையால், எந்த க்ஷணம்
நாம் பகவானை ஸ்மரிக்கவில்லையோ
அந்த க்ஷணமே ஆபத்தைக்
கொடுக்கக்கூடியது; சித்தத்துக்குப்
பிரமத்தைக் கொடுக்கக்
கூடியது; அனர்த்தத்தைக்
கொடுக்கக் கூடியது.
எல்லாச் செல்வங்களையும்
இழந்த க்ஷணம் அது. எனவே,
பகவானை ஸ்மரிப்பதுதான்
ஸம்பத்து; பகவானை மறப்பதுதான்
ஆபத்து.
விபதோ நைவ விபத:,
ஸம்பதோ நைவ ஸம்பத: | ஹரிஸம்ஸ்மரணம்
ஸம்பத், ஹரிவிஸ்மரணம்
விபத் ||
உண்மையில் நாம்
கஷ்டப்பட்டுச் ஸம்பாதிக்கும்
செல்வமாகிய ஸம்பத்து,
ஸம்பத்தில் சேராது; விபத்தில்தான்
முடியும். ஸ்ரீஹர்ஷன்
என்ற மகாகவி நைஷத காவியத்தில்
இதுபற்றி மிகவும் அழகாக
சொல்லியிருக்கிறான்:-
பூர்வ
புண்யவிபவவ்யயலப்தா; ஸம்பதோ
விபத ஏவ விம்ருஷ்டா: | பாத்ரபாணிகமலார்ப்பணமாஸாம் தாஸு
சாந்திகவிதிர் விதித்ருஷ்ட:
||
"ஒருவன் வீடு வாசல் பணம்
ஐச்வர்யம் அதிகாரம் முதலியவற்றைப்
பெற்று மிக்க சுகத்துடன்
இருக்கிறான் என்றால்,
அவன் தன்னை மஹா ஸம்பன்னன்
என்றும், தனக்கு ஏற்பட்டுள்ள
ஸம்பத்துக்கு அளவே இல்லை
என்றும் மகிழ்ச்சி கொள்கிறான்.
இவனது அறியாமையினால்
இப்படி நினைக்கிறான்.
இவனுக்கு அமைந்தது ஸம்பத்து
அல்ல; நன்கு ஆராய்ந்து
பார்த்தால் அது விபத்துத்தான்.
ஏனென்றால், இவ்வளவு ஐச்வரியம்
இவனுக்கு எதனால் ஏற்பட்டது?
பூர்வஜன்மங்களில் இவன்
செய்த புண்யங்களே இதற்குக்
காரணம். புண்யபலனான பணம்
முதலிய ஐச்வர்யம் இவனுக்குக்
கிடைத்தவுடனே இவனுடைய
புண்யங்கள் அழிந்துவிடுகின்றன.
பலன் கொடுக்கும் வரையில்தான்
இவன் முன்பு சம்பாதித்த
புண்யங்கள் இருக்கும்.
ஒருவன் சொர்க்கலோகத்தில்
சுகத்தை அநுபவிக்கக்
கருதி ஒரு வேள்வியைச்
செய்தால் அதனால் ஏற்படும்
புண்யம் இவன் சொர்க்க
லோகம் சென்று சுகத்தை
அநுபவிக்கும் வரையில்தான்
இருக்கும். சுகத்தை அநுபவித்தவுடன்
அதற்குக் காரணமான புண்யம்
அழிந்துவிடும். ஒருவன்
ஜன்மாந்திரத்தில் பண்ணின
பாவங்களினாலோ இந்த ஜன்மத்தில்
பண்ணின பாவங்களினாலோ
கஷ்டங்களை அநுபவித்தால்
அவன் அநுபவித்தபிறகு
அவனுடைய பாவங்கள் செலவாகிவிடுகின்றன.
அது போலவே, நமக்கு இப்பொழுது
கிடைக்கும் செல்வம் முதலியவை
பூர்வபுண்ய பலனாக வந்தபடியால்
நாம் பண்ணின புண்யத்திற்கு
வ்யயம் (நாசம்) ஏற்படுகிறது.
நமக்கு ஏற்படும் செல்வசுகத்தைப்
பார்த்துக் களிக்கக்
காரணமே இல்லை. நாம் பண்ணின
புண்யங்களுக்கு அழிவல்லவோ
இதனால் ஏற்பட்டது? ஆகையால்,
நன்கு யோசித்துப் பார்த்தால்,
நம் புண்ணியங்கள் அழிந்துவிட்டபடியால்,
அவற்றினால் விளையும்
ஸம்பத்து விபத்தில்தான்
முடியும்.
முற்காலங்களில்
சதுச்சாஸ்திர பண்டிதனாக
இருப்பவன் நல்ல விவேகியாக
இருந்தால் பிறரிடமிருந்து
ஸம்மானத்தை எதிர்பார்க்க
மாட்டான். ராஜஸதஸ்ஸுக்குச்
செல்லமாட்டான். அங்கே
ஸத்காரங்களைப் பெற மாட்டான்.
பல்லக்கில் இவனை அழைத்து
வரவேண்டும் என்று அரசன்
நினைத்தால் அதை இவன்
நிராகரித்துவிடுவான்.
'நாம் கஷ்டப்பட்டு வேதங்களையும்
வேதாந்தங்களையும் பெற்றோம்.
பிரம்மஞானத்தை விசாரம்
செய்து அடைந்தோம். இதனால்
நமக்குப் பெரிய புண்யம்
(பகவானுடைய அநுக்ரகம்)
ஏற்பட்டுள்ளது. இந்த
அரசன் நம்மை மரியாதையுடன்
பல்லக்கில் அழைத்துச்
சென்று ஸத்காரங்களைச்
செய்தால், நாம் ஸம்பாதித்து
வைத்துள்ள புண்யத்தை
நாம் இழந்துவிடுவோம்;
அவற்றை அரசன் பெறுவான்
என்று எண்ணி, இத்தகைய
மரியாதைகளை ஒப்புக் கொள்ளவே
மாட்டார்கள் மகான்கள்.
பெரிய க்ருபணன் மிகவும்
சிரமப்பட்டுச் சம்பாதித்த
தன் பணத்தை செலவழிக்க
எப்படி விரும்பமாட்டானோ
அப்படித்தான் வித்வானான
மகானும் க்யாதி லாப பூஜைகளுக்கு
ஆசைப்பட்டுத் தன் பெருமையை
இழக்கும் விஷயத்தில்
க்ருபணனாக இருப்பான்.
தண்டகவனத்திலிருந்த
ரிஷிகள் ஸ்ரீராமனிடம்
சரணாகதி செய்த போது
அவர்கள் கூறிய மிகவும்
அழகான வாக்கியத்தைக்
கவனித்து ரஸிக்க வேண்டும்.
(ஸ்ரீமத் ராமாயணம் - அரண்யகாண்டம
- 1-21) 'ரக்ஷிதவ்யா ஸ்த்வயா
வயம் சச்வத் கர்பபூதாஸ்
தபோதநா:' என்கிறார்கள்.
இங்கே, 'தபோதநா:' என்ற சொல்லின்
பொருளைச் சுவைத்து அநுபவிக்க
வேண்டும். தனிகன் எப்படி
தனத்தைச் செலவு செய்ய
விரும்பமாட்டானோ அது
போலவே மகரிஷிகளும் மிகவும்
சிரமப்பட்டுச் சம்பாதித்த
செல்வமான தவத்தைச் செலவழிக்க
மறுப்பார்கள். ஆகையால்
கீழ்ச் சொன்ன வகையில்
ஸம்பத்து விபத்தில்தான்
முடியும்.
புத்திசாலியான
ஸமர்த்த புருஷன், 'இப்படி
நம்முடைய பூர்வ புண்யங்கள்
அழிந்துவிடுகின்றனவே;
இதற்கு என்ன பரிகாரம்?'
என்பதை ஆழ்ந்து ஆலோசித்துப்
பார்க்க வேண்டும். இதன்
சாந்திக்காகச் சாஸ்திரங்களில்
சொல்லும் வகையில் இவன்
நடந்துகொள்ள வேண்டும்.
அதாவது இவன் தனக்குக்
கிடைத்துள்ள செல்வத்தைத்
தக்க பாத்திரத்தில் விநியோகிக்க
வேண்டும். அப்படிச் செய்தால்
மறுபடியும் பூர்வ புண்யங்களுக்குச்
சமமாக அதேமாதிரி புண்யங்கள்
உண்டாகிவிடும். பூர்வ
புண்யங்களின் வ்யயம்
இதனால் ஏற்பட்டதாக ஆகாது;
அதாவது இவன் தன்னிடத்தில்
பூர்வ புண்யத்தினால்
உண்டான செல்வங்களைத்
தான் அநுபவிப்பதுடன்
நில்லாமல், சரியான பாத்திரத்தில்
கொடுக்க வேண்டும். நான்கு
பேருக்குத் தானம் செய்ய
வேண்டும். கொடுக்கும்போது,
பெறுகிறவன் உயர்ந்த பாத்திரமா
என்பதை யோசிக்க வேண்டும்.
சில சமயம் 'இவன்தான் உயர்ந்தவன்'
என்று எண்ணித் தெரியாத்தனமாக
அஸத்பாத்திரத்தில் கொடுத்துவிடுவான்.
ஸத்பாத்திரத்தை அஸத்பாத்திரம்
என்று எண்ணிக் கொடுக்காமல்
இருந்து விடுவான். இதனால்
இவனுக்கு பாவமே விளையும்.
எவன் நல்லவன், எவன் தீயவன்
என்பதை கவனிப்பது யாருக்கும்
எளிதல்ல. இம்மாதிரி சமயங்களில்
ஸத்பாத்திரத்தை நிச்சயித்து
அவனுக்குத் தானம் செய்வது
எப்படி முடியும்? இதையெல்லாம்
யோசித்து, மொத்தத்தில்
ஒரு நூறு பேருக்கு சில
வஸ்துக்களைத் தானம் செய்தால்,
அவர்களில் ஒருவனாவது
நல்லவனாக இருப்பான்.
ஆகையால், அதனால் நமக்குப்
புண்யம் ஏற்படும் என்று
எண்ணி பெரியவர்கள் மொத்தத்தில்
வைஷம்யம் பார்க்காமல்
கொடுப்பார்கள். அதனால்
புண்யத்தையும் பெற முடியும்.
இதுதான் செல்வனின் புண்யம்
அழியாமல் இருப்பதற்கு
வழி. அரசன் தன் பதல்வனின்
அப்த பூர்திக்காக ததியாராதனத்தை
ஏற்பாடு செய்தான். அனைவரும்
சாப்பிடும் சமயம். அப்த
பூர்த்திக்கான குழந்தை
தவழ்ந்து வந்து மஹா னஸம்
சென்றது. அது சுட சுட இருக்கும்
பால் பாயஸத்தை தன்மேல்
கொட்டிக்கொண்டது. அந்த
சுடுகையினால் மூர்ச்சையடைந்துவிட்டது.
இதை மடப்பள்ளிக்காரர்கள்
அரசனிடம் விக்ஞாபித்தார்கள்.
அரசன் மிக புத்திசாலி.
இதை தெரியப்படுத்தினால்
ததியாராதனம் நின்றுவிடும்
என்று எண்ணி தனது மடியில்
சிசுவை வைத்துக் கொண்டு
போஜனத்துக்கு பிறகு
அவர்களிடம் இருந்து ஆசியைப்
பெற்றான். ஒவ்வொருவரும்
குழந்தைமேல் மந்திராக்ஷதையை
சேர்க்கச் சொன்னான்
100 அல்லது 200 சேர்த்த பிறகு
ஒரு வைதீக ப்ராஹ்மணன்
சேர்க்கும்போது சிசு
'க்வ' 'க்வ' என்று கூச்சலிட்டது.
அலறி எழுந்தது. உடனே அந்த
ப்ராஹ்மணன் கையை பிடித்து
எல்லோரிடமும் சொன்னான்
நடந்ததை. அதாவது எவனிடம்
எந்த மஹிமை உள்ளது என்பதை
எப்படி அறியமுடியும்.
ஆகையால் பல பேருக்கு
தான தர்மங்கள் செய்தால்
அதில் ஒருவனிடமாவது நியமம்
இருக்கும். அதனால் நன்மை
ஏற்படும். தான தர்மாதிகளின்
செய்கை ஸபலமாகும் என்று.
அதனால்தான் ஸமஷ்டியாக
ஸமாராதனம் தானம் முதலியவைகளை
செய்வது. ஆக ஸத்பாத்ரத்தை
கண்டுபிடிக்க முடியும்.
எல்லோரும் ஸத்பாத்ரமாக
இருந்தாலும் ஒருவனிடம்
உத்கர்ஷம் உண்டு. எனவே
நம்முடைய ஸம்பத்தை விபத்தென்று
கருதி அதற்கு தகுந்தாற்போல்
நடந்துகொள்ள வேண்டும்.
1.
உலகத்தில் ஏற்படும் சுக
துக்கங்கள் ஸம்பத்து
விபத்துக்கள். 2. பகவானை
நினைப்பதுதான் ஸம்பத்து;
அவனை மறப்பதே விபத்து. 3.
உலகத்தில் கிடைக்கும்
ஸம்பத்தே விபத்து என்று
கருதி, அந்த விபத்துக்குப்
பரிகாரமாக ஸத்பாத்திரங்களில்
செல்வத்தை விநியோகிக்க
வேண்டும்.
பள்ளிக்கூடம்
பல இடங்களில் நடை பெறுகிறது.
அங்கு ஆசிரியர் பணத்தை
வாங்கிக்கொண்டு பசங்களை
சிக்ஷிக்கிறார். இது
ஆச்சர்யமல்ல. வீடு வீடாகச்
சென்று ஒருவன் சிக்ஷிக்கிறான்.
அதுதான் ஆச்சர்யம். யார்
அவன் என்றால் பிச்சைக்காரன்.
இவனுக்கு சம்பளமில்லை.
எதை கற்றுக்கொடுக்கிறான்
தெரியுமா? ஓ பணக்காரனே!
எப்பொழுதும் எல்லா பிறவியிலும்
உன்னைப் போல் பணக்காரனாகவே
இருக்க வேண்டும. நான்
பிறர்க்கு கொடாமல் இருந்தேன்.
இப்படி எனக்கு நிலை ஏற்பட்டது.
என்னைப் போல் நீ ஆகாமல்
உன்னைப் போலவே இருக்கவேண்டும்
என்று நம்மை சிக்ஷிக்கிறான்.
இதுதான் ரஹஸ்யம்.
இங்கு
"ஒரு நாயகமாய் ஓட உலகுடன்
ஆண்டவர்" என்ற பதிகத்தில்
சொன்னது என்ன? லெளகீக
ஸம்பத்தையும் லெளகீக
விபத்தையும் சொல்ல வந்ததல்ல
பாசுரம். இவையெல்லாம்
நசித்துவிடும். ஆக அழியாத
செல்வம் அவனை நினைப்பதுதான்.
திருநாரணன் தாளை கெட்டியாக
பிடித்துக்கொள்வதுதான்
உன்னதமான ஸம்பத்து. அதுதான்
நமக்கு உய்யும் வழி என்பதை
பலபடியால் உபதேசம் செய்கிறார்.
*****
|