பண்டிதன் யார்?
கடவுள்
அவரவர் செய்த வினையை
முன்னிட்டு இவ்வுலகில்
ஜீவன்களைப் படைக்கிறார்.
ப்ராம்மணர், க்ஷத்திரியர்,
வைசியர், சூத்திரர் என்ற
பிரிவுகளில் சிலர் பிறப்பை
எடுக்கின்றனர். சிலர்
ஆடு, மாடு, சிங்கம், புலி
முதலியவற்றில் பிறப்பை
எடுக்கின்றனர். மற்றும்
சிலர் செடி, கொடி, மரம்
போன்றவற்றில் பிறப்பை
அடைகின்றனர். இவை அவரவர்
செய்த வினை காரணமாகவே
ஏற்படுகின்றன. கடவுள்
தாமாகவே காரணமில்லாமல்
ஒருவனை அந்தணனாகவும்
மற்றவர்களை ஆடு, மாடு,
செடி போன்றவையாகவும்
படைக்கிறார் என்பதில்லை.
ஒருவன் நல்வினையைச் செய்திருந்தால்
அதற்குத் தகுந்தபடி அவனுக்கு
உடலமைப்பும் அழகும் புத்தியும்
சாமர்த்தியமும் மற்றும்
முக்கியமான பண்புகளும்
கொடுத்து அவனை ஆதரிக்கிறார்.
தீவினையைச் செய்திருந்தால்
அதற்குத் தகுந்தபடி பிறப்பு
முதலியவற்றை ஏற்படுத்துகிறார்.
நாம் செய்யும் கருமம்தான்
இவற்றுக்குக் காரணம்.
நாம்
உயர்ந்த ஜாதியில் பிறக்க
வேண்டும் என்றும், மிகவும்
புத்திசாலியாக இருக்க
வேண்டும் என்றும், மன்மதன்
போல் அழகுள்ளவர்களாகக்
காட்சியளிக்க வேண்டும்
என்றும், கர்ணன் போல்
தான தருமங்களைச் செய்து
உலகத்தாரிடம் நல்ல புகழுடன்
விளங்க வேண்டும் என்றும்
இருந்தால் அதற்குத் தக்கவாறு
நல்ல காரியங்களைச் செய்திருக்க
வேண்டும். குளம், கிணறு
முதலியவற்றை வெட்டி,
ஆடு மாடுகளும் பாகவதர்களும்
விடாய் தீரும்படியாக
ஏற்பாடு செய்திருக்க
வேண்டும். எம்பெருமானை
ஆராதித்திருக்க வேண்டும்.
கோயில்களை ஏற்படுத்தியிருக்க
வேண்டும். பாகவதர்களுக்கு
ஒதுங்க நிழல் கொடுத்திருக்க
வேண்டும். வைதிக வேள்விகளைச்
செய்திருக்க வேண்டும்.
இம்மாதிரி தான தருமங்களைச்
செய்திருந்தால் பகவான்
உவந்து மறுபிறவியிலும்
நம்மை உயர்ந்தவனாக மாற்றுவான்.
இந்தப் பிறவியிலும் நம்மை
மேன்மேலும் உயர்ந்தவராகவே
செய்வான். இப்படி நல்ல
காரியங்களைச் செய்யாமல்,
'எனக்கு நிறையப் பணம்
கிடைக்க வில்லையே?' எனவும்,
'நான் புத்தி உடையவனாக
இல்லையே?' என்றும், 'அழகாக
இல்லையே?' என்றும், 'நற்குணங்கள்
பலவற்றைப் பெறவில்லையே?'
எனவும் மனவருத்தம் பெறுவதில்
லாபம் இல்லை.
தட்டான்
நகைகளைச் செய்பவன். வளை,
காசுமாலை, சங்கிலி, நெக்லஸ்
முதலியவற்றை அவன் நன்றாகச்
செய்பவன். இந்த வேலையில்
அவன் மிகவும் தேர்ச்சி
உடையவன்தான். சிலருக்கு
வளை செய்து கொடுக்கிறான்.
சிலருக்குத் தோடு செய்து
கொடுக்கிறான். மற்றும்
சிலருக்குச் சங்கிலி
முதலியவற்றைச் செய்து
கொடுக்கிறான். தோடு
பெற்றுக் கொண்டவன்,
"ஏன் எனக்குச் சங்கிலியைக்
கொடுக்காமல் தோட்டைச்
செய்து கொடுத்தாய்?"
என்று கேட்டால், இதற்கு
அவன் என்ன பதில் அளிப்பான்?
நீங்களே யோசித்துப்பாருங்கள்.
"நீ என்னிடம் நகை செய்து
கொடுக்கும்படி தங்கத்தைக்
கொடுத்தபோது தோட்டைச்
செய்து கொடு என்றல்லவா
கேட்டாய்? நீ சங்கிலிதான்
வேண்டுமென்று கேட்டிருந்தால்
அதனைச் செய்து கொடுத்திருப்பேன்.
நீ எதை விரும்பினாயோ
அதைச் செய்து கொடுத்தேன்"
என்று தானே தட்டான் பதில்
சொல்வான்? அதுபோல்
பகவானை நாம், "ஏன் எனக்கு
நல்ல பிறப்பைக் கொடுக்கவில்லை?
நல்ல புத்தியையும் நற்குணத்தையும்
ஏன் கொடுக்கவில்லை?"
என்று கேட்டால், "உன் விருப்பத்தை
அநுசரித்துத்தான் நான்
கொடுத்தேன்" என்பான்.
"நற்புத்தியும் பணமும்
வீடும் உன்னதப் பதவியுமாகிய
உயர்ந்த வஸ்துக்களைத்தானே
நான் விரும்புகிறேன்?"
என்று கேட்டால், அதற்குப்
பகவான் என்ன சொல்வான்
தெரியுமா? "நீ பயனை அநுபவிக்கும்
போது நல்ல பொருள்களை
விரும்புகிறாய். இதற்குக்
காரணமாக உள்ள வேதங்களில்
சொல்லப்பட்ட நற்காரியங்களை
நீ விரும்பவில்லை. அவற்றை
நீ விரும்பிச் செய்திருந்தால்
உனக்கு நல்ல பயனை அளித்திருப்பேன்.
ஆகையால் நற்காரியங்கள்
செய்வதாகிற உன் விருப்பம்தான்
நான் உனக்குத் தரும்
பயன்களுக்குக் காரணம்.
அதை அநுசரித்துத்தான்
உனக்குப் பயனும் கிட்டும்"
என்று விடையளிப்பான்.
ஆகையால் அவனவனுடைய கர்மத்தை
அநுசரித்துப் பகவான்
அனைவரையும் படைக்கிறான்.
ஆகையால் அவன்மேல் எவ்விதக்
குற்றமும் இல்லை.
இப்படிப்
படைக்கப்பட்டவர்களில்
பண்டிதன் யார், யார் பண்டிதனாக
மாட்டான் என்பதைச் சிறிது
ஆராய்வோம். நாலாயிர
திவ்யப் பிரபந்தத்தை
ஒரு பிழையுமில்லாமல்
பூர்ணமாக அத்யயனம் செய்து,
எம்பெருமான் வீதியில்
எழுந்தருளும்போது முதல்
கோஷ்டியிலும் கோயில்களிலும்
நன்றாகச் சேவிப்பவர்கள்
இருக்கின்றனர். இவர்கள்
இந்தத் திவ்யப் பிரபந்தத்தைத்
தூக்கத்திலும் தலைகீழாகவும்
சொல்லத் திறமை பெற்றவர்கள்.
இவர்கள் பண்டிதர் ஆவார்களா?
இம்மாதிரியே, வேதத்தை
லக்ஷணத்துடன் அத்யயனம்
செய்து வீதியில் எம்பெருமான்
பின் கோஷ்டியிலும் கோயில்களிலும்
பாராயணம் செய்கிறவர்கள்
எத்தனையோ பேர் இருக்கின்றனர்.
இவர்களைத் தூக்கத்தில்
எழுப்பிக் கேட்டாலும்
ஒரு தவறுமில்லாமல் சொல்வார்கள்.
ஸலக்ஷண கனபாடி என்ற பெயரையும்
பெற்றவர்கள். இவர்கள்
பண்டிதர் ஆவார்களா? தர்க்க
சாஸ்திரத்தில் தேர்ச்சி
பெற்றவர்கள் பலர் உள்ளனர்.
அவர்கள் ஆங்காங்கே சபையில்
தங்களது தர்க்க பாண்டித்யத்தினால்
பெரிய வாதம் செய்வார்கள்.
கால்கள் இல்லாமலே பந்தலைப்
போட்டுக் கொண்டு போவார்கள்.
பரிஷ்காரம், அநுகமம்
முதலியவற்றைச் செய்து
பிறரைப் ப்ரமிக்கச் செய்து
ஆனந்த சாகரத்தில் மூழ்க
அடிப்பார்கள். இவர்கள்தாம்
பண்டிதரா?
வ்யாகரணம்
என்னும் ஒரு சாஸ்திரம்
உண்டு. இந்தச் சாஸ்திர
வல்லுநர், 'மகாபாஷ்யம்
என்னும் உயர்ந்த க்ரந்தத்தைப்
படித்தவர்கள்தாம் உயர்ந்த
பண்டிதர்கள்' என்பார்கள்.
இவர்கள்தாம் பண்டிதர்
ஆவார்களா? இப்படி மீமாம்ஸை,
வேதாந்தம் முதலிய கல்வித்
துறைகளை நன்கு அப்பியஸித்து
வாதப் போராடும் வகையில்
தேர்ச்சி பெற்ற எத்தனையோ
மகான்கள் உள்ளனர். இவர்கள்
பண்டிதர் ஆவார்களா? இப்படி
வைதிகத் துறையில் உள்ளவர்களைப்
பற்றி விசாரிப்பது போல்
லெளகிகத் துறையில் உள்ளவர்களையும்
விசாரிப்போம்.
ஆகாயவிமானம்
செய்வதிலும், பஸ் முதலியவற்றைச்
செய்வதிலும், கணித சாஸ்திரத்திலும்,
சங்கீதத்திலும், விஞ்ஞானத்
துறையிலும் தேர்ச்சி
பெற்றவர் பலர் உள்ளனர்.
இவர்களைத்தான் பண்டிதர்கள்
எனச் சொல்லலாமா? இவ்விஷயத்தில்
நாமாக ஒன்றும் கூறுவதற்கு
வரவில்லை. க்ருஷ்ணன்
அர்ஜுனனுக்கு ஓர் அழகிய
உபதேசம் செய்கிறான்.
அவன் சிலரைப் பண்டிதர்
என்று ஒப்புக் கொள்கிறான்.
கீதாசாரியனான பகவான்
யாரைப் பண்டிதர் என்று
மனமார்ந்து கூறுகிறானோ
அவர்களை தவிர வேறு யார்
பண்டிதராகமுடியும்?
உலகத்தில்
கீதையைப் புகழாதவர் யாருமில்லை.
கிருஷ்ண பகவானே சொன்னபடியால்
அதற்கு ஒப்பற்ற ஏற்றமுண்டு.
கீதையில் கூறப்படும்
பொருளெல்லாம் உண்மையே
என்பது அனைவரும் இசைந்த
விஷயம்.
கீதையில் பின்வரும்
ச்லோகத்தை அனைவரும்
அப்யஸித்திருப்பார்கள்.
கீதையிலேயே இது ஸாரமான
உபதேசம் எனவும் கூறலாம்.
உபநிஷதங்களிலெல்லாம்
சொல்லப்படும் விஷயமே
கீதையில் மிகவும் விரிவாகவும்,
அனைவரும் எளிதில் புரிந்து
கொள்ளும் வண்ணமும் சொல்லப்பெறுகிறது.
உபநிஷத்தில் எது ஸாரமோ
அந்த ஸாரமான அர்த்தத்தைக்
கூறும் ச்லோகம் இதோ
-
வித்யா வி நயஸம்பந்நே
ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி
| சூநி சைவ ச்வபாகே ச பண்டிதா:
ஸமதர்சிந: ||
'உடலைக் காட்டிலும்
உயிர் என்று சொல்லப்படும்
ஆத்மா வேறுபட்டது' என்பதை
அனைவரும் அறிந்திருக்கின்றனர்.
இதைப்பற்றி நாம் இங்கு
விவரிக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த ஆத்மாவும் ஒன்றா
பலவா. பலவாக இருக்கும்
பக்ஷத்தில் ஒருவருக்கொருவர்
ஸ்வரூபத்தில் வேறுபாட்டை
உடையவர்களா இல்லையா என்பதை
இங்கே கவனிக்க வேண்டும்.
ஒரே ஆத்மாதான்; அதுவே
பல சரீரங்களை எடுத்து
உலகத்தில் பிறக்கிறது
என்று ஒரு மதத்தைச் சார்ந்தவர்
சொல்லுகின்றனர். இந்த
அர்த்தத்தை மனத்தில்
கொண்டுதான் கீதாசார்யன்
இந்த ச்லோகத்தைப் படித்தான்
என்று சிலர் மருளுவர்.
"படிப்பு, அடக்கம் முதலிய
நற்குணங்களைப் பெற்ற
அந்தணனிடத்திலும், சாமானியப்
ப்ராமணனிடத்திலும், பசுவினிடத்திலும்,
யானையினிடத்திலும், நாயினிடத்திலும்,
மாமிசத்தைப் புசிப்பவர்களிடத்திலும்
எவன் சமதர்சியோ (உள்ள
ஆத்மா ஒன்று என்று நினைக்கிறானோ)
அவன்தான் பண்டிதன் என்று
சொல்லியிருக்கிறபடியால்,
ஆத்மா ஒன்றுதான் என்று
ஏற்படுகிறது" என்பது
அவர்களின் கருத்து.
ஆயினும்,
இங்கு 'ஏகம்' என்று சொல்லாமல்
'சமம்' என்று சொல்லியிருப்பதைப்
பார்த்தால் கீழ்க்கூறிய
ஒவ்வொரு வஸ்துவிலும்
ஒவ்வோர் ஆத்மா உள்ளது;
அவற்றை ஒன்றாக (சமமாக)ப்
பாவிக்க வேண்டும் என்றே
ஏற்படுகிறபடியால் எல்லாத்
தேகங்களிலுமுள்ள ஆத்மா
ஒன்றுதான் என்று சொல்வது
பொருத்தமல்ல. மேலும்,
எல்லா உடல்களிலும் ஒரே
ஆத்மாதான் என்று இருந்தால்,
ஒருவருக்கு வரும் சுக
துக்கங்களை எல்லோருமே
பெறவேண்டி நேரிடும்.
அதாவது பக்கத்து வீட்டில்
நல்ல பால், பழம், பக்ஷணம்
முதலியவற்றுடன் நன்றாகச்
சாப்பிட்டால் அவன் மட்டும்
சுகம் அநுபவிப்பது நியாயமல்ல.
எதிர் வீட்டில் இருப்பவனும்,
"நான் இன்று நல்ல பாயசம்,
பக்ஷணம் முதலியவற்றுடன்
உண்டேன்" எனக் கூறவேண்டி
வரும். மேலும், இவனுக்குப்
பசியும் ஏற்படாது. ஒரு
நாயை மற்றொரு நாய் கடித்தால்
அந்த நாய்க்குத் துன்பம்
வருவதுபோல் கடித்த நாய்க்கும்
துன்பம் வரவேண்டும்.
மற்றுமுள்ள மனிதர்களுக்கும்
அந்த துன்பம் ஏற்பட வேண்டும்.
ஒருவனைப் பாம்பு கடித்து
விட்டால் விஷம் ஏறி அவன்
மூர்ச்சையடைந்து கீழே
விழுகிறான். உலகத்திலுள்ள
அனைவருக்குமே இந்தத்
தசை ஏற்படவேண்டும். எல்லாத்
தேகங்களிலும் ஒரே ஆத்மா
இருக்கிறபடியால் சுகதுக்கங்களை
அநுபவிக்கிற ஆத்மாவுக்கு
இவ்விஷயத்தில் வேறுபாடு
இருக்கவே நியாயமில்லை.
எனவே ஒருவன் பசியில்லாமல்
நன்கு சாப்பிட்டுக் காரில்
பவனி வருகிறான்; மற்றொருவன்
நடந்து போகவும் சக்தியின்றித்
தவிக்கிறான்; ஒருவன்
ஆனந்த சாகரத்தில் மூழ்கிக்
கிடக்கிறான்; மற்றொருவன்
துயரக்கடலில் விழுந்து
துன்புறுகிறான். இப்படி
உள்ளபடியால் ஒவ்வொர்
உடலிலும் உள்ள ஆத்மவஸ்து
வெவ்வேறு என்றே புலப்படுகிறது.
மற்றும்
சிலர், "உடல் வேறு, ஆத்மா
வேறுதான். ஆனாலும் இந்தப்
பல ஆத்மாக்களையும் உடல்
வெவ்வேறாக இருப்பதைக்
கண்டு வேறுபாடாகக் கருதுவது
நியாயமல்ல. எல்லோரையும்
ஸமமாகவே நினைத்துப் பெண்
கொடுப்பது, வாங்குவது,
ஒன்றாக உட்கார்ந்து உண்பது
முதலியவற்றைச் செய்தல்
வேண்டும். ஆக, ஜாதியிலோ
மதத்திலோ வேறுபாடு காட்டக்
கூடாது. இதுதான் கீதாசாரியனின்
அபிப்ராயம்" என்று நினைத்து
ஏமாறுவர். இதுவும் நியாயமல்ல.
இப்படிச் சொல்லும் சிலர்
யானைக்குப் பெண்ணைக்
கொடுக்கிறார்களா, அல்லது
பூனைக்கத்தான் தம் பெண்ணைக்
கொடுக்கிறார்களா? நாய்க்கும்
தன் பெண்ணுக்கும் மணத்தை
நடத்துகிறார்களா? அல்லது
சிங்கக்குட்டியைத் தாங்கள்
மணந்துகொள்ளுகிறார்களா?
ஏதோ ஒரு துரபிபராயத்தை
மனத்தில் கொண்டு தங்கள்
விருப்பத்தின்படி மேடையில்
நின்று எதை எதையோ பேசுகிறார்கள்.
மனிதர்களில் மாத்திரம்
ஏன் இப்படிப்பட்ட அநீதிச்
செயலைச் சொல்ல வேண்டும்?
காட்டிலுள்ள மிருகங்கள்
அவ்வவற்றுக்கு ஏற்பட்ட
சடங்குகளையே செய்கின்றன.
ஒரு நரி பெண் சிங்கத்துடனா
சேர்கிறது. யானைதான்
நரியுடன் சேர்கிறதா?
கிராமங்களிலுள்ள ஆடு
மாடுகளும் ஒலே நியமத்துடன்தான்
உள்ளன. திர்யக்குகள்
அவ்வவற்றின் தர்மங்களைப்
பூர்ணமாகவே நடத்துகின்றன.
மாறாட்டத்தை அவை செய்து
கொள்வதில்லை. இவ்விஷயத்தை
நாமும் பார்த்துக் கொண்டுதான்
இருக்கிறோம். ஆகையால்
இவர்கள் கூறியதும் பொருத்தமற்றதே.
அப்படியானால் இந்த ச்லோகத்துக்கு
என்ன பொருள் என்றால்
கூறுகிறோம்.
ஒவ்வொருவருக்கும்
உடல் வேறு, ஆத்மா வேறு
என்பதில் ஐயமில்லை. அவரவர்களின்
வினையை அநுசரித்து அவரவரகளுக்கு
உடல் வெவ்வேறாக வரும்
என்பதையும் நாம் ஒப்புக்
கொண்டிருக்கிறோம்.
ஆனால் ஒவ்வோர் உடலிலுமுள்ள
ஆத்மா ஒரே ரூபமாக (ஒரே
ஆகாரமாக) உள்ளது. இந்த
உடலிலுள்ள ஆத்மா எவ்வளவு
சிறியதோ எவ்வளவு பிரகாசமாக
உள்ளதோ, எப்படி ஞானானந்த
ஸ்வரூபமாக உள்ளதோ அப்படியேதான்
மற்றோர் உடலிலுள்ள ஆத்மாவும்
இருக்கிறது. இதில் வேறுபாடே
இல்லை. உடலில் வேறுபாடு
மாத்திரம் வினையை அநுசரித்தது.
ஒரு ப்ராமண இனத்திலேயே
ஒருவன் சிவப்பாகவும்
மற்றொருவன் கறுப்பாகவும்,
ஒருவன் பெருத்தவனாகவும்
மற்றொருவன் மெலிந்தவனாகவும்
ஒருவன் அழகனாகவும் மற்றொருவன்
குரூபனாகவும் இருக்கிறார்கள்.
இப்படி எல்லா இனத்திலும்
உண்டு. இதற்கெல்லாம்
காரணம் அவரவர் செய்த
வினையே. இதைப் போலத்தான்
ப்ராமணன், க்ஷத்திரியன்
முதலிய வேறுபாடும், ஆடு,
மாடு, புல், பூண்டு போன்ற
வேறுபாடும் ஏற்படுகின்றன.
இதுதான் உண்மை. இந்த அர்த்தத்தைத்
தான் கீதாசார்யன் இந்த
ச்லோகத்தில் கூறியுள்ளான்.
ஆகவே
இம்மாதிரி அறிவு பெற்றவன்தான்
பண்டிதன். பல கல்விகளைக்
கற்றிருந்த போதிலும்,
பல ஆராய்ச்சிகளைச் செய்திருந்த
போதிலும், ஆகாயத்திலே
பறப்பதற்கு வேண்டிய யந்திரங்களைப்
படைப்பவனாக இருந்தபோதிலும்,
வேதம் சாஸ்திரம் முதலியவற்றைக்
கற்றறிந்தவனாக இருந்தபோதிலும்
இந்த அறிவு இல்லாதவன்
பண்டிதனாக மாட்டான்.
இப்படிப்பட்டவன்தான்
மிகவும் உயர்ந்தவன்.
இவனைத்தான் கீதாசார்யன்
புகழ்வான்.
இப்படிப்பட்ட
அறிவைப் பெறுவதற்கு ஸதாசார்ய
ஸம்பந்தத்தைப் பெறுதல்
வேண்டும். தான் தோன்றியாகப்
புஸ்தகத்திலுள்ள ஏட்டை
மட்டும் புரட்டி அறிவைச்
சம்பாதித்துக்கொள்ளுதல்
இயலாது. இதை அநுசரித்துத்தான்,
"ஆசார்யனிடம் பல முறை
வணங்கிப் பணிவிடைகளைச்
செய்து நல்ல ஞானத்தைப்
பெற்றுக் கொள்; அவர்கள்
நல்ல உபதேசம் செய்வார்கள்"
என்று கீதாசார்யன் முதலிலேயே
உபதேசித்தான்.
*****
|