மக்களின் போக்கு
உலகிலுள்ள
மக்களின் தன்மை விந்தையானது;
மிக்க வியப்பைத் தரக்கூடியது.
ஒரு செயல் நன்றாக இருந்தாலும்,
கெட்டதாக இருந்தாலும்
அதை ஒருவன் செய்தால்,
மறறொருவனும் அதையே தொடர்ந்து
செய்ய விரும்புகிறான்.
இதைப் பார்த்து மூன்றாமவனும்
தொடருகிறான். இப்படியே
அனைவரும். இதுவே ஜனங்களின்
இயல்பாகிவிட்டது.
புராணமித்யேவ
ந ஸாது ஸர்வம் த
சாபி காவ்யம் நவமித்யவத்யம்
| ஸந்த: பரீக்ஷ்யாந்யதரத்
பஜந்தே மூட: பரப்ரத்யய
நேயபுத்தி: ||
என்றான்
மகாகவி காளிதாஸன். ஒரு
செயல் பழங்காலமாக ஏற்பட்டது
என்ற காரணத்தை முன்னிட்டு
அது குணத்துடன் கூடியதாகவே
இருக்கும் என்று சொல்ல
முடியாது. மற்றொரு செயல்
இப்போது ஏற்பட்டது என்ற
காரணத்தினாலேயே அது குற்றமுள்ளதாக
இருக்கும் என்றும் சொல்ல
முடியாது. ஆகையால் பெரியோர்கள்
குண தோஷங்களை நன்கு
ஆராய்ந்து, நடு நிலையிலிருந்து
நழுவாமலிருந்து, குணமுள்ளதை
எடுத்துக்கொண்டு மற்றதை
விட்டு விடுகிறார்கள்.
பாமரன் இதை அறிய இயலாதவனாக,
ஒருவன் போகும் வழியையே
தொடருகிறான்; அதை ஆராய்வதில்லை.
எல்லா
விஷயங்களையும் ஆராய்ந்து
செய்வதென்பது முற்காலத்தில்
பெரும்பாலும் எல்லாருக்குமே
இருந்தது. இக்காலத்திலோ
இது மாறுதலை அடைந்துள்ளது.
தாங்கள் எதையுமே யோசிப்பதில்லை.
'ஒருவன் செய்கிறான்; ஆகையால்
நானும் அதைச் செய்கிறேன்'
என்கிறான். ஆக, மக்கள்
ஆட்டுமந்தை போல் நடந்து
கொள்கின்றனர். இதற்கு
ஒரு கதையைக் கூறுகிறோம்.
ஓர்
ஊரில் ஓர் ஓவியர் இருந்தார்.
அவர் சித்திரம் வரைவதில்
மிக்க திறமை பெற்றவர்.
அவர் எழுதும் ஓவியத்தில்
ஒரு குற்றமும் சொல்ல
முடியாது. அனைவருமே அவரை
இவ்விஷயத்தில் புகழ்வர்.
ஆனாலும் ஒருவர் நற்காரியங்களை
செய்தால் அதில் பொறாமை
கொண்டு அவரை இகழ்வது
உலகத்தில் உண்டல்லவா?
அதுபோல் அவரது சித்திரத்தைக்
கண்டு பொறாமை பூண்டு
தோஷங்களைச் சொல்பவரும்
உண்டு. இதை அறிந்த ஓவியர்,
தமது சித்திரம் முறைப்படி
அமைந்திருப்பதனால் தோஷமில்லை
என்பதை நன்கு உணர்ந்திருந்தும்,
ஜனங்களின் அறிவை ஆராய
விரும்பினார். இதற்காக
ஒரு சூழ்ச்சி செய்தார்.
அவர்
புதியதாக ஓர் ஓவியத்தை
வரைந்தார். அது மிக்க
அழகு வாய்ந்தது. வரைந்த
சித்திரத்தை அவர் இரண்டாகப்
படம் பிடித்தார். இவ்விரண்டும்
எவ்விதத்திலும் வேறுபாடு
இல்லாமல் அமைந்திருந்தன.
ஜனங்களின் திறமையை ஆராய்ந்தறிய
விரும்பிய அவர், ஒரு நாள்
ஒரு படத்தைக் கடைத்தெருவில்
பலரும் பார்க்கும்படி
மாட்டி வைத்தார். அதன்
பக்கத்தில் மைக்கூடு
ஒன்றையும், தூரிகை ஒன்றையும்
வைத்தார். மற்றொரு பக்கத்தில்,
'இந்த சித்திரத்தில்
குறை இருந்தால் அதை தெரியப்படுத்த,
அந்தக் குறை இருக்கும்
இடத்தை மையால் குறிப்பிட
வேண்டும்' என்று பலகையில்
எழுதி மாட்டியிருந்தார்.
இவ்வாறு செய்துவிட்டு
அவர் தமது இல்லம் சென்றார்.
இது
கடைத் தெருவில் மாட்டியிருந்தபடியால்
அனைவரும் காண்பதற்கோ,
குறை கூறுவதற்கோ வசதி
ஏற்பட்டிருந்தது. தெருவில்
வந்தவர்களில் சிலர் இதை
பார்த்து, இதில் எங்கே
குறை கூறலாம் என்று யோசித்தார்கள்.
சிலர் இந்த படத்தையும்,
பலகையில் எழுதியிருப்பதையும்
கண்டு, உண்மையிலேயே இதில்
குறை இருக்கும் என்று
எண்ணித் தூரிகையில் மையைத்
தோய்த்து, அவர்களுக்கு
குறை என்று தோன்றிய
இடத்தில் குறியிட்டு
சென்றனர். யோசித்திருந்த
சிலரும் தங்களுக்குத்
தோன்றிய இடத்தில் குறியிட்டுச்
சென்றுவிட்டனர். மாலை
வரையில் அந்த தெருவில்
வந்தவர் அனைவரும் இம்மாதிரி
அந்த சித்திரத்தில் ஒவ்வோர்
இடத்திலும் குறை என்று
தோன்றும்படி செய்துவிட்டுச்
சென்றனர்.
மாலைவேளை
வந்தது. ஓவியர் வந்து
பார்த்தார். குறையைக்
காட்டும் குறி அந்தச்
சித்திரத்தில் இல்லாத
இடமே இல்லை. இதைக் கண்டு,
'ஒரு குற்றமும் இல்லாத
இந்த சித்திரத்தில் இப்படிக்
குறை கூறியிருக்கிறார்களே!'
என்று வியந்தார். 'இப்படியும்
இந்த ஜனங்களின் தன்மை
உள்ளதே!' என்று எண்ணி, மேலும்
அவர் ஜனங்களைப் பரீக்ஷிக்க
விரும்பினார்.
ஒரு மாதம்
கழிந்தது. முன்பு போல்
மற்றோர் ஓவியத்தைக்
கடைத்தெருவில் வைத்து,
பக்கத்தில் ஒரு பலகையில்,
'இந்த சித்திரத்தில்
குணமுள்ள பகுதிகளை காட்டும்படி
குறிப்பிடுங்கள்' என்று
எழுதி வைத்தார். ஜனங்கள்
தெருவில் திரண்டு சென்றனர்.
சிலர் இதில் என்ன செய்யலாம்
என்று யோசித்து நின்றனர்.
மற்றும் சிலர் இதில்
எதையும் குறிப்பிடாமல்
சென்றுவிட்டால் தங்களை
மூடர்கள் என நினைத்து
விடுவார்களோ என்று எண்ணி
சில பகுதிகளில் குணபாகத்தை
காட்ட குறியிட்டனர்.
இதை கண்டதும் சிலர், 'நாமும்
ஏதாவது செய்ய வேண்டும்'
என்று எண்ணி, அந்த சித்திரத்தின்
ஒவ்வொரு பகுதியிலும்
குறியிட்டு சென்றனர்.
மாலை
ஆனதும் ஓவியர் வந்தார்.
குறி இல்லாத இடமே அதில்
இல்லாததைக் கண்டு, 'ஐயோ!
இப்படியும் ஸ்வய புத்தி
இல்லாமல் ஜனங்கள் இருக்கின்றனரே!
இவர்களைத் திருத்த வழியே
இல்லையே!' என்று எண்ணி
வீட்டுக்குத் திரும்பினார்.
மறுநாள்
அவர், குணக்குறி காட்டும்
ஓவியம், தோஷக்குறி காட்டும்
ஓவியம் ஆகிய இரண்டையுமே
அந்தக் கடைத்தெருவில்
மாட்டினார். முன்போல்
அதன் பக்கத்தில் ஒரு
பலகையையும் வைத்து வீடு
திரும்பினார். 'ஜனங்களே!
இந்த இரண்டு ஓவியங்களும்
ஒரே மாதிரியானவை என்பதில்
சந்தேகமே இல்லை. இதில்
உண்மையில் தோஷம் என்பதே
இல்லை. நீங்கள் தோஷக்
குறியை வைத்திருக்கிறீர்கள்.
அதே இடத்தில் குணக்குறியையும்
வைத்திருக்கிறீர்கள்.
இதில் எது உண்மை என்பதை
யோசித்து நீங்களே சொல்லுங்கள்'
என்று அதில் எழுதியிருந்தது.
முன்போல்
தெருவில் வந்த அதே ஜனங்கள்,
அந்தப் படங்களையும் பலகையையும்
பார்த்து, நேற்றுத் தோஷக்குறி
இட்ட இடத்திலேயே மறுபடியும்
குணக்குறி இட்டிருக்கிறோமே
என்று எண்ணி, ஒருவர் முகத்தை
ஒருவர் பார்த்தும், சொல்லிக்கொள்ள
முடியாமலும் மனத்தில்
நொந்து கொண்டார்கள்.
இதில் 'எது உண்மை?' என்று
கேள்விக்குத் தங்களுக்கு
ஸ்வயபுத்தி இல்லாமல்
இருப்பதுதான் உண்மை என்பதை
தவிர வேறு என்ன எழுத முடியும்
என்று எண்ணி அவரவர் வீடு
திரும்பினர்.
இப்படி
இவ்விஷயத்தில் மற்றொரு
கதையும் நாம் கேட்டிருக்கிறோம்.
ஒருவன் ஸேது ஸ்நானத்துக்குச்
சென்றான். கையில் ஒரு
தாமிர பாத்திரம் வைத்திருந்தான்.
அங்கே ஜனங்களின் பெருங்கூட்டத்தைக்
கண்டு, இதைக் கரையில்
வைத்துவிட்டு ஸ்நானம்
செய்யப் போனால் எவனாவது
எடுத்துவிடுவானோ என்று
பயந்து மணற்குவியலில்
மறைத்து வைத்து மணலாற்
செய்த ஒரு லிங்கத்தை
அதன்மேல் அடையாளத்துக்கு
வைத்து, ஸ்நானம் செய்யச்
சென்றான். அவன் ஸ்நானம்
செய்து வந்ததும் தன்
தாமிர பாத்திரத்தை எடுக்க
முயன்றான். கோடிக்கணக்கான
மணற் குவியல்கள் புலப்பட்டன.
எதைத் தள்ளினாலும் அதில்
ஒன்றுமில்லை. இவன் போகும்போது
இவன் செய்தது ஒரே குவியல்தான்.
பிறகு அங்கு வந்தவர்கள்
இவனது குவியலைப் பார்த்து,
'இம்மாதிரி செய்துவிட்டுத்தான்
ஸ்நானம் செய்ய வேண்டுமாக்கும்'
என்று எண்ணிப் பல குவியல்களை
ஏற்படுத்தி விட்டனர்.
தாமிர பாத்திரத்தை வைத்தவன்
மக்களின் போக்கை எண்ணி,
ஒரு ச்லோகத்தை சொன்னான்
-
கதாநுகதிகோ லோகோ
ந லோக: பாரமார்த்திக:
| ஸேதெள ஸைகதலிங்கேந நஷ்டம்
மே தாம்ரபாஜநம் ||
ஆக ஒருவன்
ஒன்று செய்தால் அதை தாமும்
செய்ய வேண்டும் என்று
மக்கள் எண்ணுகின்றனர்.
ஒருவன் அலங்காரம் செய்து
கொண்டால் தாமும் அம்மாதிரியே
செய்து கொள்ளவேண்டும்
என்று நினைக்கின்றனர்.
இதைப் பெரும்பாலும் பெண்களிடத்தில்
காண்கிறோம். ஒருவன்
ஒருவனைப் பூஜித்தால்
அவனை நாமும் பூஜிக்க
எண்ணுகிறோம். ஒருவன்
ஒரு விஷயத்தை மேடையில்
பேசும்போது அது நன்றாக
இருந்தாலும் இல்லாவிட்டாலும்
அவனிடத்திலுள்ள அபிமானத்தினால்
அவனைச் சிலர் ஸ்தோத்ரம்
செய்தால் மற்றவர்களும்
அவர்களைத் தொடர்ந்து
அதை ஆமோதித்து ஸ்தோத்ரம்
செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
இப்படி இவ்வுலகத்தில்
பல இடங்களில் பார்த்து
வருகிறோம். இதனால் நல்லவர்களுக்கு
மகிமை இல்லாமற் போகிறது.
ஸாதாரணமானவர்களுக்கு
ஏற்றம் ஏற்படுகிறது.
இதுவும் இந்த கலியின்
செயல் போலும்.
உண்மையை
யோசிப்பதில்லை. ஒரு
பொய்யை ஆயிரம் தடவை
ஆயிரம் பேர்கள் சொன்னால்
அது உண்மையாகிவிடுகிறது.
ஒருவனை யோக்யன் என்று
சொன்னால் எல்லோரும்
சொல்லிவிடுகிறார்கள்.
அயோக்யன் என்றாலும்
அப்படித்தான். இதில்
உண்மையை கண்டு பிடிப்பது
கஷ்டம்.
*****
|
|
|
|
|
|
|
|