இரு சகோதரர்கள்
உலகில்
தாய் தந்தை, அண்ணன் தம்பி,
மாமா மைத்துனன், மனைவி
கணவன் என்ற வகையில் உறவினர்களைச்
சொல்வதுண்டு. இதில்
சகோதரர் என்று சிலரைச்
சொல்வதுண்டு. ஒரு தகப்பனாருக்குப்
பிறந்தவர்களை ப்ராதா
என்பர். ஒருவனுக்கு ஒரு
மனைவியின் வயிற்றில்
பிறந்த புத்திரர்களைச்
சகோதரர் என்று சொல்வதுபோல்
ஒரு தகப்பனாருக்கு இரண்டு
மூன்று மனைவியரின் வயிற்றில்
பிறந்தவர்களையும் சகோதரர்
என்று அழைப்பது வழக்கம்.
தசரத
சக்கரவர்த்தியின் மனைவியரான
கெளசல்யை சுமித்திரை
கைகேயி என்ற மூவரிடத்திலும்
பிறந்த ராமன் லக்ஷ்மணன்
பரதன் சத்துரக்னன் ஆகியவர்
சகோதரர்கள் என்று சொல்லக்
கேட்டிருக்கிறோம். இப்படியே
பாண்டுவின் புதல்வர்களான
பஞ்ச பாண்டவர்களையும்
சகோதரர் என்றே சொல்கிறோம்.
குந்தி பாண்டுவின் மனைவி.
இவள் கன்னிகையாக இருந்தபோதே
துர்வாஸ முனிவரிடமிருந்து
புதல்வரைக் கொடுக்கும்
ஆறு மந்திரங்களை உபதேசம்
பெற்றவள். இதில் முதல்
மந்திரத்தினால் கர்ணனைப்
பெற்றெடுத்தாள். பிறகு
மணமானதும் தர்மபுத்திரரையும்
பீமனையும் அர்ஜுனனையும்
மூன்று மந்திரங்கள் மூலமாகப்
பெற்றாள். இவளிடமிருந்து
இரண்டு மந்திரங்களை உபதேசம்
பெற்ற பாண்டுவின் மற்றொரு
மனைவியான மாத்ரி நகுலனையும்
ஸஹாதேவனையும் பெற்றாள்.
இப்படிப் பாண்டுவின்
இரு மனைவியரான குந்திக்கும்
மாத்ரிக்கும் பிறந்த
பஞ்ச பாண்டவர்களைச் சகொதரர்
என்கிறோம். இம்மாதிரியே
தக்ஷப்ரஜாபதிக்கு மனைவியரான
கத்துரு, வினதை என்ற இருவருக்குப்
பிறந்த பாம்புகளும் கருடனும்
தமக்குள் பிராத்ருகோஷ்டியில்
சேர்ந்தவர்கள்.
ஒரே
தகப்பனாருக்குப் பல மனைவியரிடத்தில்
பிறந்த பலரை ப்ராதாக்கள்
என்று சொல்வது போலவே
சகோதரர்கள் என்றும்
சொல்வதுண்டு, இவர்கள்
வெவ்வேறு தாயின் வயிற்றில்
பிறந்தவர்களாகையால்
பிந்நோதரர்களே. ஆயினும்
சகோதரர்கள் என்றே விவகரிக்கிறோம்.
ஆகையால்தான் ராமன் தனக்கு
ஸபத்தினி மாதாவான சுமித்திரைக்குப்
பிறந்த லக்ஷ்மணனைச் சகோதரன்
என்றே கூறுகிறான். 'தம்
து தேசம் ந பச்யாமி யத்ர
ப்ராதா ஸஹோ தர:' என்று.
இவ்விடத்தில் ப்ராதா
என்றும் சகோதரன் என்றும்
லக்ஷ்மணனைக் கூறுவது
எப்படிப் பொருந்தும்
என்பதை மற்றொறு வியாஸத்தில்
பரக்கக் காட்டுகிறோம்.
சாதாரணமாக
ஒவ்வொருவனும் தன்னிடத்திற்போல்
பிறனிடத்திலும் நல்ல
அபிப்ராயத்தை வைத்து
அவனுக்குத் தன்னால் இயன்றவரை
நன்மையையும் பிரியத்தையும்
செய்ய வேண்டியது அவசியம்.
அவன் நமக்குப் பந்து
அல்ல, இவன் பந்து என்று
வேறுபாட்டைக் காட்டாமலிப்பது
உத்தமனின் உயர்ந்த குணம்.
பந்துக்களிடத்திலாவது
அவசியம் எவன் நன்மையைப்
பாராட்டுகிறானோ அவன்
மத்தியம புருஷன். ப்ராதாக்களிடத்திலாவது
ப்ரீதி வைப்பவன் சாமானியன்.
தன்னுடன் பிறந்த ப்ராதாவையும்
மதிக்காமலும், தான் மிக்க
செளகரியத்துடன் வாழும்போது
அவனைக் கவனிக்காமலும்,
தன் வாழ்வையே முக்கியமாகக்
கருதிச் சகோதரனுக்கு
நன்மையே செய்யாமலும்
இருக்கிறவன் மனித கோஷ்டியிலேயே
சேர்ந்தவனல்லன்.
தான்
எல்லாச் சுகங்களுடனும்
இருந்து தன் சகோதரன்
கஷ்டப்படும் தசையைப்
பார்த்து, 'ஐயோ!' என்று
எள்ளளவும் இரக்கமில்லாதவன்
எப்படி உயர்ந்த மனிதனில்
சேர்வான்? தன் புதல்வன்
கஷ்டப் பட்டால் அதை எப்படிப்
பார்த்துப் பொறுக்க
மாட்டானோ அது போலல்லவோ
சகோதரனிடத்திலும் இருத்தல்
வேண்டும்? சகோதரனையும்
புத்திரனையும் சமமாகவே
பாவிக்க வேண்டும் என்று
சாஸ்திரம் கூறுகிறது.
வாலியும் சுக்ரீவனும்
ப்ராதாக்களாக இருந்தபோதிலும்
இருவருக்குமே மற்றவரிடத்தில்
ப்ராத்ருவாஞ்சை இல்லை.
தம்பியான சுக்ரீவனைத்
துரத்திவிட்டுத்தான்
ஒருவனாகவே ராஜ்யத்தில்
மகுடம் சூடித் தம்பியின்
மனைவியையும் காதலித்து
வாலி இருந்தான். சுக்ரீவனும்
ராமனுடன் சிநேகம் செய்துகொண்டு,
தமையனான வாலியை கொல்ல
முயன்றான். இப்படி இருந்த
இவர்களுக்கு தம்பி தமையன்
என்ற பற்றுதல் எப்படி
இருக்கக் கூடும்?
ராவணனும்
விபீஷணனும் உடன் பிறந்தவர்களே.
இவர்களில் விபீஷணனுக்குத்
தமையனான ராவணனிடத்தில்
ஓரளவு ஆசை இருந்தது. ஆகையினாலேயே
பல முறை தமையனுக்கு இவன்
உபதேசம் செய்தான். "சீதையை
ராமனிடத்தில் கொடுத்துவிடு.
நாம் அனைவரும் சுகமாக
வாழலாம். நான் சொல்வது
இப்போது உனக்குக் கசப்பைக்
கொடுக்கும். பிற்காலத்தில்
இது நன்மையை விளைவிக்கும்.
உலகத்தில் எப்பொழுதும்
சிரிக்கச் சிரிக்கச்
சொல்லிப் ப்ரீதியை உண்டுபண்ணுகிறவர்கள்
நிறைய இருக்கின்றனர்.
உனக்கு நன்மையை தேடி
விஷயத்தைச் சொல்கிறவர்யாருமில்லை.
இது உலக இயற்கை. ராமனின்
பாணத்தால் அடிபட்டு நீ
வருந்தும் நிலையை நான்
பார்க்க விரும்பவில்லை"
என்று பல முறை உபதேசித்தான்.
விபீஷணனுக்கு ராவணனிடத்தில்
எவ்வளவு அன்பு இருந்ததோ
அதில் சிறிதளவும் ராவணனுக்கு
விபீஷணனிடத்தில் இருக்கவில்லை.
அதனால்தான் திக்காரம்
செய்து விபீஷணனைத் திரஸகரித்துவிட்டான்.
பாண்டுவின்
புதல்வர்கள் பஞ்ச பாண்டவர்கள்.
திருத்ராஷ்டிரனின் புதல்வர்கள்
துரியோதனாதிகள். பாண்டுவும்
த்ருதராஷ்டிரனும் ப்ராத்ரு
கோஷ்டியைச் சேர்ந்தவர்கள்.
ஆகையால் இவ்விருவரின்
புத்திரர்களான பாண்டவர்களையும்
துரியோதனாதிகளையும்
ப்ராத்ரு கோஷ்டியில்
சேர்த்துச் சொல்வது
வழக்கம். நேர்முகமான
ப்ராதாக்கள் அல்லராயினும்
அருஜுனன் யுத்த சமயத்தில்,
"இவர்கள் ப்ராதாக்ளாகையால்
இவர்களைக் கொல்வது ந்யாயமல்ல.
இவர்களது இரத்தம் சூழ்ந்த
இந்தப் பூமியை ஆள்வதும்
உசிதமல்ல" என்று சொல்லித்
தன் காண்டீவத்தையும்
அம்புகளையும் கீழே போட்டுவிட்டான்.
இவனது ப்ராத்ருவாஞ்சை
எப்படி இருக்கிறது என்பதை
இதிலிருந்து நன்கு உணரலாம்.
நெருப்பை
இட்டுக் கொளுத்துகிறவன்,
விஷத்தைக் கொடுப்பவன்
போர் செய்ய ஆயுதங்களைக்
கையில் எடுப்பவன், செல்வத்தை
திருடுகிறவன், பத்தினியையோ
பூமியையோ அபகரிப்பவன்
ஆகியவர்களை 'ஆததாயி' என்பர்.
இப்படிப்பட்ட ஆததாயியைக்
கண்டால் சிறிதளவும் யோசனை
செய்யாமல் அவன் அகப்பட்ட
மாத்திரத்தைக் கொண்டே
அவனைக் கொன்றுவிட வேண்டும்
என்று சாஸ்திரம் கூறுகிறது.
இப்படியிருந்தும் அர்ஜுனன்,
இவர்களைக் கண்டதும் இரக்கத்துடன்
பேசலானான். பஞ்ச பாண்டவர்களின்
விஷயத்தில் துரியோதனாதிகள்
இந்த ஆறுவித அக்ரமங்களையும்
செய்தவர்கள். அர்ஜுனனுக்கு
அவர்கள் செய்த அக்ரமத்தில்
சிறிதவளவும் நோக்கமே
இல்லாமல், தமையன், தம்பி
என்ற பாசமே ஊன்றியிருந்தது.
இது அவனுடைய உயர்ந்த
குணத்துக்கு எடுத்துக்காட்டு.
இவ்வளவு நல்ல எண்ணத்தை
அர்ஜுனன் பெற்றிருந்தும்.
அர்ஜுனன் முதலிய பாண்டவர்களிடத்தில்
துரியோதனாதிகளுக்கு
நல்ல எண்ணமே இல்லை.
சிலர்
சகோதரர்களிடத்தில்
அதிகப் பற்றுதலை உடையவர்போல்
பாவனை செய்வார்கள். பேசும்போது,
'நம்மிடத்தில் இவர் இவ்வளவு
பாசம் வைத்திருக்கிறாரே!'
என்று கருதும்படியாகப்
பேசுவர். அக்கம்பக்கத்தில்
உள்ளவர்களும் அவர் பேச்சைக்
கண்டே மயங்குவார்கள்.
ஆனால் அவர்கள் தம் ப்ராதாவினிடத்தில்
சிறிதளவும் உள்ளன்பு
உடையவர்களாக இருக்க மாட்டார்கள்;
ஒரு சிறிய உபகாரமும்
செய்யமாட்டார்கள்; ஒரு
சல்லிக்காசுகூடக் கொடுத்து
உதவ மாட்டார்கள். சிலர்
உபதேசத்தில் மாத்திரம்
பெயர் பெற்றவர்கள்; தமது
அநுஷ்டானத்தில் சிறிதளவும்
கைதேர்ந்தவரல்லர்.
ஸாஹஸப்
பக்ஷி என்று ஒரு பறவை;
அது, 'சாகசமான காரியங்களைச்
செய்யாதே' என்று உபதேசம்
மாத்திரம் செய்யுமாம்.
அது தனது செயலில் சாகச
வேலையையே எப்பொழுதும்
செய்யுமாம். அதாவது ஒரு
காட்டில் சிங்கம் நன்றாக
மாமிசங்களைத் தின்று
குகையில் படுத்து உறங்கும்.
பாதித் தூக்கத்தில் வாயைத்
திறந்து கொட்டாவி விடும்.
அந்தச் சமயத்தைக் கவனித்துக்
கொண்டே இருக்கும் இந்தப்
பறவை, சிங்கத்தின் பற்களில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
மாமிசப் பருக்கைகளை ஒரு
நொடியில் கொத்தி எடுத்துக்
கொண்டு ஓடிப் போகுமாம்.
இதன் செயல் எப்படிப்பட்டது.
இதன் உபதேசம் எப்படிப்பட்டது
என்பதை கவனியுங்கள்.
'சாகச செயலை செய்ய வேண்டாம்'
என்று பிறருக்கு உபதேசித்து,
தான் பெரும் சாகசத்தை
அல்லவா செய்கிறது? சிங்கத்தின்
பற்களிலுள்ள மாமிசத்தை
இது எடுக்கும்போது சிங்கம்
வாயை மூடிக்கொண்டால்
இதன் கதி என்னவாகும்?
ஒரு
தகப்பன் தன் புதல்வனுக்கு
நீதிநூல்களை கற்று கொடுக்கிறான்.
'தாய் தந்தையரிடத்தில்
அன்புடன் இரு. அவர்கள்
சொல்வதைக் கேள். பெரியோர்களை
வணங்கு. நல்லவன் என்று
பெயர் பெறு. பொய் பேசாதே'
என்று நீதிகளை சிறிய
புதல்வனுக்கு கற்பிக்கிறான்.
அந்த சமயத்தில், இவனுக்கு
ஆறு மாதம் முன்பு ஆயிரம்
ரூபாய் கடன் கொடுத்த
கடன்காரன் இவனிடம் பணம்
வாங்க வருகிறான். அவனைப்
பார்த்ததுமே இவன் வயிற்றில்
நெருப்பைக் கொட்டியது
போல் இருந்தது. இந்த
சமயத்தில்தான், 'பொய்
சொல்லாதே' என்பதை தன்
புதல்வனுக்கு நன்கு கறிபிக்கிறான்.
கடன்காரனை பார்த்ததும்,
நாம் என்ன செய்வது என்று
யோசித்து பையனை பார்த்து,
"குழந்தாய்! அதோ ஒருவர்
வருகிறாரே, அவர் இங்கு
வருவார். நான் வீட்டுக்குள்
சென்று என்னை மறைத்துக்
கொள்கிறேன். அவர் வந்ததும்
'உன் தந்தை எங்கே?" என்று
கேட்பார். அதற்கு நீ, "என்
தந்தை வெளியூருக்கு சென்றிருக்கிறார்.
அவர் திரும்பி வர இரண்டு
மூன்று நாளாகும்' என்று
சொல்லிவிடு" என்று கூறி
உள்ளே சென்றுவிட்டான்.
கடன்காரன் வந்து கேட்க,
புதல்வனும் தகப்பன் சொன்னபடியே
சொல்லி அனுப்பிவிட்டான்.
பிறகு
தகப்பன் வெளியில் வந்ததும்
பையன், "அப்பா! பொய் சொல்லாதே
என்று எனக்கு நீங்கள்
கற்றுக் கொடுத்தீர்கள்;
பிறகு பொய் சொல்லும்படியாகவே
செய்து விட்டீர்களே?"
என்று கேட்டான். புதல்வனின்
கேள்விக்கு தகப்பன் தலைகுனிவதை
தவிர வேறு என்ன செய்ய
முடியும்? இதற்கு அவர்
பதில் ஒன்றை சொன்னார்.
வக்கீல் தொழிலைச் செய்பவர்
ஒருவர். எப்பொழுது கோர்ட்டில்
பொய் சொல்லித்தானே
இருக்க வேண்டும். ஒருநாளாவாது
சொல்லாமல் இருக்க வேண்டும்
என்று எண்ணி ஒரு நாள்
விராமம் எடுத்துக்கொண்டார்.
வீட்டில் இருக்கும்போது
போன் அடித்தது. மனைவி
எடுத்தாள். வக்கீலை அவசியம்
வரச்சொல் என்று இவளிடம்
சொல்ல அதற்கு இவர் சொன்ன
பதில்: நான் இங்கு இல்லை
என்று சொல்லிடு என்று.
ஆக இப்படியெல்லாம் பொய்
பேச சமயம் வந்துவிடும்
என்றார்.
இது
போலவே சிலர் சொல்வதொன்று,
செய்வதொன்று. அர்ஜுனன்
உண்மையிலேயே சொல்வதைச்
செய்கையில் நீரூபித்து,
ப்ராத்ருப் பற்றைக் காட்டி,
'போர் புரிய மாட்டேன்'
என்று கூறி, வில்லை எறிந்துவிட்டான்
என்றால், அவனது இந்த உயர்ந்த
குணம் மிகச் சிறப்புள்ளது.
இம்மாதிரி, ப்ராதாக்கள்
ஒருவருக்கொருவர் ஆசையில்லாதவர்களையும்
ஆசை உள்ளவர்களையும் பார்த்து
வருகிறோம். ஆயினும்
இனிக் கூறப்போகிற தாழ்ந்த
புத்தியுடைய இரு சகோதரர்களைப்
போல் உலகத்தில் எங்கும்
பார்த்திரோம். அந்த
இரு சகோதரர் கதையைக்
கேண்மின் -
ஒரு காட்டில்
விபாவசு, சுப்பிரதீகர்
என்ற இரண்டு சகோதரர்கள்
இருந்தனர். இவர்கள் ஒரு
முனிவரின் புதல்வர்கள்.
இவர்கள் தங்களது சொத்தைப்
பிரித்துக் கொள்ள சமயம்
நேர்ந்தது. 'இந்த சொத்தை
நான்தான் எடுத்து கொள்வேன்'
என்று விபாவசு சொன்னார்.
சுப்பிரதீகரும், 'இதையேதான்
நானும் எடுத்துக் கொள்வேன்'
என்று விவாதித்தார்.
ஒரே சொத்தை இருவரும்
அடைய வேண்டும் என்ற விருப்பம்
ஏற்பட்டதனால் ஒருவருடன்
மற்றவர் குரோதமாகப்
பேச முயன்றனர். கோபம்
அதிகமாகிவிட்டது. இக்காலத்திலும்
சொத்து பிரிவினை விஷயமாக
பிணக்கு ஏற்படுவதை பல
இடங்களில் பார்த்திருக்கிறோம்.
பிராதாக்களில் எவனாவது
ஒருவன் நல்லவனாக இருந்தால்,
"ஐயோ! இதற்காகவா சண்டை!
இதை நீயே எடுத்துக் கொள்.
எனக்குச் சம்மதம்" என்று
சொல்லிவிடுவான். இருவரும்
துஷ்டர்களாக இருந்தால்
சண்டை முதிர்ந்து, ஒருவரை
மற்றவர்தடியாலோ கத்தியாலோ
அடித்துக் கொண்டு இறந்நு
போவதை தவிர வேறு தீர்மானத்தை
பார்க்க முடியாது.
இந்த
சகோதரர்களுக்கு கோபம்
அதிகமானபடியால், விபாவசு
சுப்ரதீகரை பார்த்து,
"நீ யானையாய் போக வேண்டும்"
என்று சபித்துவிட்டார்.
தம்பி சுப்ரதீகர், விபாவசுவை
ஆமையாக போக வேண்டும்
என்று சபித்தார். முனிபுத்திரர்களான
இவர்களுக்கும் சொத்து
பிரிவினை எதில் முடிந்தது
என்பதை கவனியுங்கள்.
இருவருக்கும் சாபத்தால்
உருவம் மாறிவிட்டது.
உருவம் மாறியும் ஒரே
காட்டில் இருந்தபடியால்
பகைமை வளர்ந்தே வந்தது.
வினதையின்
புதல்வனான கருடபகவான்
வேடச்சேரி முழுவதையும்
உண்டார். அப்படியும்
பசி அடங்கவில்லை. தம்
தகப்பனாரிடம் சென்று
தமது பெரும் பசியை கூறினார்.
தந்தை கருடனை பார்த்து
"இதோ அந்த காட்டிலுள்ள
யானையையும் ஆமையையும்
சாப்பிடு" என்றார். கருடபகவான்
தந்தை கூறியபடியே யானையையும்
ஆமையையும் உயிருடன் தம்
கால் நகங்களால் எடுத்துக்
கொண்டு ஒரு பொய்கைக்கு
சென்றார். இரண்டு நகங்களிலும்
தொங்கிக் கொண்டிருந்த
யானையும் ஆமையும் 'ஐயோ!
நம் உயிர் போய்விடப்
போகிறதே!' என்று எண்ணாமல்,
அப்போதும் தமக்குள்
சண்டையிட்டன. கருடன்
தம் நகங்களின் நுனியில்
அவற்றை இடுக்கிகொண்டு
ஓர் ஆலமரத்தை அடைந்தார்.
பிறகு பெரிய கற்பாறையை
அடைந்தார். தமது அலகின்
நுனிக்கு அவற்றை எடுத்து
சென்றார். பிறகு கழுத்துக்கும்
எடுத்து சென்றார். பிறகு
வயிற்றுக்குள் தள்ளினார்.
இந்த
யானையும் ஆமையும் எங்கே
கொண்டு போனாலும் எங்கே
வைத்தாலும் தமக்குள்
போர் செய்துகொண்டே
இருந்தன; சண்டையை நிருத்தவேயில்லை.
தங்களுக்கு கருடபகவானால்
ஏற்பட்ட ஆபத்தையும் துன்பத்தையும்
சிறிதளவும் மதிக்காமல்,
இவை முற்பிறவியில் ஏற்பட்ட
சொத்துப் பிரிவினை மூலமான
சண்டையை செய்துகொண்டே
இருந்தன. இவற்றின் சகோதரபாசம்
எப்படி இருக்கும் என்பதை
அனைவரும் சிந்தியுங்கள்.
'ஐயோ! நம் உயிர் இப்போதே
போய்விட போகிறதே!' என்று
கொஞ்சமும் கலங்காமல்,
அப்பொழுதும் இவை ஓயாமல்
சண்டையிட்டன. பிறவி மாறியும்,
ஆபத்து நேர்ந்தும் பூர்வ
வாஸனையை இவை விடவில்லை.
இப்படியும் உலகில் அண்ணன்
தம்பிகள் இருக்கிறார்கள்
என்றால் அவர்களை நாம்
என்ன செய்வது! இதை ஸ்ரீவேதாந்ததேசிகன்
கருட பஞ்சாசத்தில் அழகாக
இந்த ச்லோகத்தில் எடுத்துக்
காட்டினார் -
ஸாந்த்தக்ரோதாநுபந்தாத்
ஸரஸி நகமுகே பாதபே கண்டஸைலே துண்டாக்ரே
கண்டரந்தரே ததநு ச ஜடரே
நிர்விசேஷம் யுயுத்ஸூ
| அவ்யாதஸ்மாநபவ்யா தவிதிதநகரச்ரேணி
- தம்ஷ்ட்ராபிகாதேள ஜீவக்ராஹம்
க்ருஹீத்வா மகடகரடிநெள
பக்ஷயந் பக்ஷிமல்ல: ||
ஆகையால்,
கீழ்க்கூறிய சகோதரர்போல்
இருக்காமல், மற்றவருடைய
சுக துக்கங்களை தம் சுக
துக்கங்களாக கருதியும்,
மேலும் மேலும் அன்பு
காட்டியும், ஒற்றுமையுடன்
ப்ராதாக்கள் இருப்பது
மிக்க சிறப்பை தரும்.
*****
|