வைஷ்ணவன் எவன்?
உலகத்தில்
அந்தணர் அரசர் வணிகர்
வேளாளர் என்ற நான்கு
வகுப்பினரைப் பார்த்துக்
கொண்டிருக்கிறோம்.
'ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத்,
பாஹூ ராஜந்ய: க்ருத:, ஊரூ
ததஸ்ய யத் வைஸ்ய:, பத்ப்யாம்
சூத்ரோ அஜாயத' என்று
இந்த நால்வரும் எம்பெருமானுடைய
திருமேனியிலிருந்து
தோன்றியவர்கள் என்று
வேதமும் கூறுகிறது. 'சாதுர்
- வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்'
என்று கீதாசார்யனும்,
'இந்த நான்கு வர்ணங்களும்
என்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவை'
என்று கூறினான்.
'உலகத்தில்
எத்தனையோ வர்ணங்கள்
(ஜாதிகள்) காணப்படுகின்றனவே;
கீழ்க்கூறிய நான்கு ஜாதிகள்தாம்
என்று எப்படிக் கூற முடியும்?'
என்று ஐயப்பட வேண்டாம்.
இந்த ஸந்தேஹத்தைப் போக்கவே
கீதாசார்யன், 'மயா ஸ்ருஷ்டம்'
என்று அருளிச்செய்தான்.
'நான் படைத்தது இந்த நான்கு
வகையையே. மற்ற அநுலோமம்
ப்ரதிலோமம் என்று சொல்லப்
பெறும் ஸங்கர ஜாதிகளை
அவரவரகளே படைத்துக்கொண்டனர்'
என்பது 'மயா' என்பதனால்
ஏற்படுகிறது அல்லவா?
இதில் வைஷ்ணவர், ஸ்மார்த்தர்,
மாத்வர் என்னும் பிரிவுகளையும்
பார்க்கிறோம். அப்படியே
விசிஷ்டாதவைதி, அத்வைதி,
த்வைதி என்ற விபாகங்களும்
இருக்கின்றன.
இங்கு,
'வைஷ்ணவர்கள் அனைவருமே
விசிஷ்டாதவைதிகள்தாமே.
அதேபோல் ஸ்மார்த்தர்கள்
அத்வைதிகள்தாமே. மாத்வர்கள்
த்வைதிகள்தாமே. இதில்
இரண்டு விதமான பிரிவுகளாகச்
சொல்வதில் என்ன விசேஷம்?'
என்றால், அதைச் சொல்லுகிறோம்.
ஊர்த்வபுண்ட்ரம்
முதலிய வைஷ்ணவ சின்னங்களைத்
தரித்துக்கொண்டு பிறவியிலயே
ஒருவன் வைஷ்ணவனாக இருக்கலாம்.
அவனுக்குப் பல புதல்வர்கள்
பிறக்கக்கூடும். அவர்கள்
அனைவருமே பிறவியில் வைஷ்ணவர்கள்தாம்.
இதை மறுக்க முடியாது.
ஆயினும், அவர்களில் ஒருவன்,
'விசிஷ்டாத்வைத மதம்தான்
சிறந்தது' என்று ஆராய்ச்சி
செய்து, அந்த மதத்திலேயே
ஊன்றியிருப்பான். அவன்
விசிஷ்டாத்வைதி. மற்றொருவன்,
'த்வைத மதம் சிறந்தது'
என்று அதில் ஆழ்ந்திருப்பான்.
அவன் த்வைதி ஆகிவிடுவான்.
இன்னொருவன் இதேபோல
அத்வைதி ஆகிவிடலாம்.
இது
போலவே திர்யக்புண்ட்ரதாரிகளான
ஸ்மார்த்தர் என்ற பேர்
பெற்ற சிலரிடத்தில் பலர்
பிறந்து அதில் ஒருவர்
விசிஷ்டாத்வைதமதஸ்தராக
ஆகலாம்; த்வைதமதஸ்தராகவும்
ஆகலாம். கோபீசந்தனத்தைத்
தரிக்கிற மாத்வர்களிடத்திலும்
இதேபோல ஆகலாம். நஞ்ஜீயர்
என்ற நம் பூர்வாசார்யர்களில்
ஒருவர், பிறப்பில் ஒருவிதமாக
இருந்தும், பராசரபட்டருடைய
ஸம்பந்தத்தினால் விசிஷ்டாத்வைதியானார்
என்பது தெரிந்ததே. யாதவப்ரகாசருடைய
விருத்தாந்தமும் பிரஸித்தமே.
ஆகையால் த்வைதி (மாத்வர்)
ஆக இருந்து விசிஷ்டாத்வைதியாகலாம்.
அத்வைதி (ஸ்மார்த்தர்)
ஆக இருந்து விசிஷ்டாத்வைதியாகலாம்.
இவையெல்லாம் மதங்கள்.
அவரவர் பிரமாணங்களைக்
கொண்டு ஆராய்ச்சி செய்து
ஒரு முடிவுக்கு வருகின்றனர்.
இப்போது உலகத்திலுள்ள
வ்யவஹாரம் ஒரு விதம்.
அவரவர் புத்தியை அநுஸரித்தும்
ஆசார்யர்கள்ளுடைய அநுக்ரகத்தை
அநுஸரித்தும் 'இதுதான்
உயர்ந்த மதம்' என்று அந்த
அந்த மதங்களில் பிரவேசித்து
விடுகின்றனர். தற்சமயத்தில்
அரசியலிலும் கட்சி மாறுவதைப்
பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறோம். ஆனால்
ஸ்மார்த்தராகப் பிறந்து
அத்வைதியாகவும் இருந்து
பிறகு ஏதோ காரணவசத்தால்
விசிஷ்டாத்வைதியாக மாறினால்
பிறகு வைஷ்ணவர்களுடைய
நடை உடை பாவனைகளிலேயே
இருக்கின்றனர். இது போலத்தான்
மற்றவற்றிலும்.
தர்க்கம்
வ்யாகர்ணம் மீமாம்ஸை
அலங்காரம் என்கிற வகையில்
பல சாஸ்திரங்களும் உள்ளன.
இவைகளை அப்யஸிக்கிறவர்களும்
உண்டு. தர்க்கத்தை படித்தவன்
குமாரன் தர்க்கத்தையே
படிக்கவேண்டும் என்பதில்லையே.
வ்யாகர்ணத்தையும் படிக்கலாம்.
டாக்டர் பிள்ளை இன்ஜினீயர்
ஆகலாம் அல்லவா? அவரவர்களுடைய
விருப்பம்தான் காரணம்.
சமயல் செயபவன் புத்திரன்
பாசகனாகவே இருக்கவேண்டும்
என்கிற நிர்பந்தம் இல்லை.
இங்கு,
யாரை வைஷ்ணவன் என்று
சொல்லுகிறோம்? "யார்
தங்கள் கழுத்தில் துளஸீமாலையையும்
தாமரைமணி மாலையையும்
தரித்துக்கொள்ளுகிறார்களோ,
இரண்டு புஜங்களிலும்
பகவானுடைய அடையாளமான
சங்க சக்ரங்களைத் தரிக்கின்றனரோ,
நெற்றி முதலிய இடங்களில்
ஊர்த்வபுண்ட்ரத்தை இட்டுக்கொள்கின்றனரோ
அவர்கள்தாம் வைஷ்ணவர்கள்"
என்று பலர் பல விதமாகக்
கூறுகின்றனர்.
இதைப்பற்றி
விரிவாகக் கூற நாம் இங்கு
இறங்கவில்லை. நம் ஆசார்யர்கள்
அதிகமாக உகந்து அருளிய
ஒரு வைஷ்ணவ லக்ஷணத்தை
இங்கு இப்போது அநுபவிப்போம்.
'யார்
வைஷ்ணவன்?' என்றால், பகவத்
(விஷ்ணு) ஸம்பந்தமுடையவன்.
பகவத்ஸம்பந்தம் யாருக்கு
உண்டு என்றால், ஒருவன்
கஷ்டப்படும்போது அதைப்
பார்த்தவுடன், 'ஐயோ! இவனுக்கு
இப்படியும் கஷ்டம் உண்டாயிற்றே.
இதை இவன் எப்படிப் பொறுப்பான்?'
என்று எவன் மனத்தில்
க்லேசம் அடைகிறானோ அவன்
பகவத்ஸம்பந்தம் உடையவன்;
அவன் தான் வைஷ்ணவன். உலகில்
தனக்கு ஒரு கண் போனாலும்
மற்றவனுக்கு இரு கண்களும்
போக வேண்டும் என்று
எண்ணுகிறவர் எத்தனையோ
பேர் உண்டு. ஒருவனுக்கு
வியாதி கடுமையாக இருந்து
அவனைக் கஷ்டப்படுத்தும்போது
அவன் நினைக்க வேண்டுவது
என்ன என்றால், 'இப்படிப்பட்ட
வியாதி நம் சத்துருவுக்கும்
வரக்கூடாது' என்பது. அவன்தான்
உத்தமன். அது போலவே முள்தைத்து
அவஸ்தைப்படுகிறவனையும்,
வியாதியுடன் கஷ்டப்படுகிறவனையும்,
கல்தடுக்கிக் கீழே விழுந்து
கஷ்டப்படுகிறவனையும்,
இதேபோல் இன்னும் பல
சிரமங்கள் ஏற்பட்டு வருந்துபவர்களையும்
பார்த்து எவன், 'இவ்வளவும்
இவர்களுக்குப் போதாது;
இன்னமும் வேண்டும்' என்று
எண்ணாமல், 'ஐயோ! இந்தக்
கஷ்டங்கள் ஏற்பட்டுவிட்டனவே.
என்ன செய்வார்கள்?' என்று
அதிகக் க்லேசம் மனப்பூர்வமாக
அடைகிறானோ அவன்தான்
வைஷ்ணவன்.
ஒருவன் வியாதி
முதலிய துன்பங்களால்
சிரமப்படும்போது அவன்
வீட்டுக்கு வந்து, 'ஐயோ!
இந்த வியாதி வந்துவிட்டதா?
மிகவும் சிரமப்படுகிறாயே!'
என்று உதட்டளவில் மிகவும்
விசாரிப்பான். தன் வீட்டுக்குப்
போனதும் தன் மனைவி முதலியவரிடத்தில்,
'இன்னும் இவனுக்கு வேண்டும்'
என்று சொல்கிறவரும்
உண்டு. இவர்களெல்லாரும்
வைஷ்ணவ ஆபாஸர்கள். ஆகையால்
கீழ்க்கூறிய வகையில்
எவன் உண்மையில் நடந்து
கொள்கிறானோ அவன்தான்
உண்மை வைஷ்ணவன்.
இங்கு,
ஈட்டிலுள்ள ஒரு ஸ்ரீஸூக்தியை
எடுத்துக்காட்டுகிறோம்
- "ஒருவனுக்கு வைஷ்ணவத்வம்
உண்டு, இல்லை என்னுமிடம்
தக்கே தெரியும்காண் என்று
ஜீயர் பலகாலும் அருளிச்செய்வர்;
பிறர் அநர்த்தம் கண்டால்
'ஐயோ!' என்று இருந்தானாகில்
நமக்கு பகவத்ஸம்பந்தம்
உண்டு என்று இருக்க அடுக்கும்;
'இத்தனையும் பட்டிடுவானுக்கு
(படக்கடவன்)' என்று இருந்தானாகில்
'நமக்கு பகவத்ஸம்பந்தம்
இல்லை' என்று இருக்க அடுக்கும்"
என்று.
இப்படி அருளிச்செய்வதற்கு
ஒரு காரணம் உண்டு - 'சராசராணி
பூதாநி ஸர்வாணி பகவத்வபு;
| அதஸ் ததாநு - கூல்யம் மே'
என்ற ரீதியில், நாமும்
பிறரும் பகவானுடைய சரீரம்.
இப்படி இருக்க, 'பிறனுக்கு
அனர்த்தம் மேன்மேலும்
வரவேண்டும்' என்று எப்படி
நினைக்கலாம்? பகவத்ஸம்பந்தம்
அற்றவன்தானே இப்படி நினைப்பான்?
தன் கையே தன் கண்ணை குத்திக்கொள்ளுமா?
கண்ணில் தூசி விழுந்தால்
கையால் அதை எடுத்துவிட
வேண்டும அல்லவா? அது போல்,
எல்லாம் பகவத் சரீரமானபடியால்
நாம் பிறருடைய கஷ்டத்தைப்
பார்த்து வருத்தப்பட
வேண்டும்; அதை நீக்க முயற்சியும்
செய்ய வேண்டும். இதுதான்
இங்கே தத்துவம்.
இப்படிச்
சிறந்த வைஷ்ணவத்தை நம்மாழ்வாரும்
அநுஷ்டித்துக் காட்டுகிறார்.
ஆழ்வார் திருவாய்மொழி
அருளிச்செய்தார். அதில்
முதல் திருவாய்மொழி,
'உயர்வற' என்று ஆரம்பிக்கிறது.
இது எம்பெருமானுடைய பரத்வத்தை
மிகவும் ஸந்தோஷமாக அநுபவிக்கிறார்.
அது ஒரு பெரிய திருநாள்
போலே இருந்தது. இந்த
ஆழ்வார் தம் நெஞ்சை இழந்தார்;
பகவானிடத்திலே செலுத்தினார்;
அக்கம்பக்கத்திலுள்ள
எல்லா வஸ்துக்களையும்
மறந்தார்; இப்படி தம்மையும்
மறந்து, பிறரையும் மறந்து,
எம்பெருமானிடத்திலேயே
மனத்தைச் செலுத்தி, அவனுடைய
பரத்வத்தை அநுபவித்துப்
போந்த இவர், திடீரென்று
அடுத்தத் திருவாய்மொழியில்,
'வீடுமின் முற்றமும்'
என்று பிறருக்கு உபதேசம்
செய்ய தொடங்கிவிட்டார்.
ஒரு நூறு பாசுரமாவது
அருளிச்செய்த பின்பு
சிறிது சிறிதாக வேறு
விஷயத்தில் மனம் சென்று
பிறருக்கு உபதேசம் செய்ய
ஆரம்பித்தார் என்றாலும்
சிறிது பொருந்தும்.
இப்படி இருக்க, இவர் இப்படிப்
பிறருக்கு உபதேசம் செய்யக்
காரணம் என்ன? உலகத்தில்
சில விஷயங்கள் உயர்ந்தவையாக
இருக்கலாம்; அவை மிகவும்
ஸ்வல்பமாக இருக்ககூடும்.
கேஸரிபாத் மிகவும் ஸ்வாத்யமானது;
ஆனால் அது ஒரு ஸ்பூன்
அளவுதான் கிடைத்தது.
அதை ஒருவன் சாப்பிட்டுவிட்டான்.
அதையே மேலும் சாப்பிட
வேண்டும் என்றால் எப்படி
முடியும்? உள்ளதே அவ்வளவுதான்.
அது போல் எம்பெருமானாகிற
விஷயம் மிகவும் உயர்ந்ததுதான்;
ஆனால் அது, குணம் முதலியவற்றினால்
மிகவும் ஸ்வல்பமானது;
ஆகையால், தாம் அநுபவித்த
விஷயத்தின் எல்லையைப்
பார்த்துவிட்டார்; மேற்கொண்டு
அநுபவிக்க விஷயமே இல்லை;
ஆகையால், அதிலிருந்து
திரும்பி ஜனங்களைப் பார்த்து
உபதேசிக்கத் தொடங்கிவிட்டார்
என்று சொல்லலாமோ என்றால்
அது சரியல்ல. எம்பெருமானுடைய
ஸ்வரூபம், கல்யாணகுணம்,
விபவம், ஐச்வர்யம் முதலியவை
ஓர் எல்லைக்குள் அடங்குமா?
'யதோ வாசோ நிவர்த்தந்தே
அப்ராப்ய மநஸா ஸஹ' என்றல்லவோ
வேதம் கூறுகிறது?
'ஆனந்தம்'
என்ற ஒரு குணத்தைப் பற்றி
அதற்கு அளவே கிடையாது
என்று சொன்னது, எம்பெருமானின்
ஸெளலப்யம், ஸெளசீல்யம்,
தயை முதலிய எல்லா குணங்களுக்கும்
இப்படியே அளவே இல்லை
என்பதில் தாத்பர்யம்
என்றார் ஆளவந்தார். அது
மாத்திரம் அல்ல; எம்பெருமானுக்கு
குணங்கள் போல், ஸ்வரூபம்,
ரூபம், விபவம், ஐச்வர்யம்
முதலியவை எல்லாம் உண்டு.
இதில் ஒவ்வொன்றுக்கும்
அளவு கிடையாது என்பதை
கவனிக்க வேண்டும். ஆகையால்
எம்பெருமானுக்கு (ஸ்பூன்
அளவு கேஸரிபாத் என்பது
போல) அளவு காட்ட முடியாது.
'தனக்கும் தன் தன்மையறிவரியான்'
என்று நம்மாழ்வார் (8-4-6)
அருளிச்செய்தார். ஸமுத்திரராஜனிடத்தில்,
ஸ்ரீராகவன் உடனே அவன்
வராததைக் கண்டு ப்ரஹ்மாஸ்திரத்தைப்
பிரயோகித்துவிட்டான்.
ஸமுத்திர ராஜன் பயந்து
அஞ்ஜலி பந்தத்துடன் வந்து
ஸ்ரீராமனைத் துதி செய்யும்போது,
கம்பர் சொல்லும் பாசுரம்
கேண்மின்:-
அன்னை நீ, அத்தன்
நீயே, அல்லவை எல்லாம்
நீயே; பின்னும் நீ, முன்னும்
நீயே, பேறும் நீ, இகழ்வும்
நீயே; என்னை நீ இகழந்தது
என்றது எங்ஙனே? ஈசனாய உன்னை
நீ உணராய், நாயேன் எங்ஙனம்
உணர்வேன் உன்னை?
உலகத்தில்
சில வஸ்துக்களின் அநுபவத்தில்
வைராக்கியம் வந்துவிடுவதுண்டு.
அது போல இந்த ஆழ்வாருக்கு
பகவதநுபவத்தில் வைராக்கியம்
வந்துவிட்டதோ என்றால்
அதுவும் சரியல்ல. கேஸரிபாத்
பெரிய அண்டா நிறையக்
கிடைத்துவிட்டது. ஆயினும்
அவ்வளவையும் சாப்பிட
முடியுமா? சிறிது சாப்பிட்டதும்
தெவிட்டுவிடும். அதனால்
அதில் போதும் என்ற மனோபாவம்
வரும். இப்படிச் சில விஷயங்கள்
உண்டு. அது போல அல்ல பகவத்
விஷயம். 'எப்பொழுதும்
நாள் திங்கள் ஆண்டு ஊழி
ஊழிதோறும் அப்பொழுதைக்கப்
பொழுது என் ஆராவமுதமே'
என்றன்றோ இந்த ஆழ்வாரும்
அருளிச்செய்கிறார்? எத்தனை
காலம் அநுபவித்தாலும்
அவ்வப்பொழுது புதிது
புதிதாக அன்றோ எம்பெருமானின்
அநுபவம் கொடுக்கிறான்?
நித்ய அபூர்வமான வஸ்துவன்றோ
பகவான்? 'பண்டிவரைக் கண்டறிவது
எவ்வூரில் யான்?' என்று
பிச்சேறும்படி அல்லவோ
பகவான் அநுபவம் கொடுப்பது?
உண்மையில் இந்த ஆழ்வார்
எம்பெருமானித்தில் அளவில்லா
காதல் வைத்திருக்கிறார்.
'காதல் கடலில் மிகப் பெரிது'
என்றார். 'சூழ்ந்த தனிற்
பெரிய என் அவா' என்கிறார்.
'உலகில் ஒன்றைவிட மற்றொன்று
பெரியது. இந்த கணக்கில்
உலகத்தில் எது மிகப்
பெரியதோ அதைக்காட்டிலும்
உன்னிடத்தில் எனக்கு
இருக்கும் அவா மிகப்
பெரியது' என்கிறார்.
ஆகையால்,
இந்த ஆழ்வார் திடீரேன்று
பிறருக்கு உபதேசம் செய்ய
ஏன் ஆரம்பித்தார் என்றால்,
தாம் அநுபவிக்கும் விஷயம்
தான் தனியாக இருந்து
அநுபவிக்கும் விஷயம்
அல்ல; துணை இல்லாமல் பிரவாகத்தில்
இறங்குவதுபோல் இருக்கும்.
ஆகவே பிறர் உதவியடைய
ஸம்ஸாரிகளிடத்தில் கண்ணை
வைத்தார். அவர்களைப்
பார்த்ததும் 'ஐயோ!' என்ற
எண்ணம் உண்டாயிற்று.
தாம் பகவத் விஷயத்தில்
எவ்வளவு ஆஸக்தராக இருக்கிறாறோ
அவ்வளவு, விஷயங்களில்
அவர்கள் ஆஸக்தராக இருக்கின்றனர்.
அதனால் பலவித அனர்த்தங்களையும்
அடைகின்றனர். இதைப்பார்த்ததும்
இதை பரஹரிக்க வேண்டும்
என்ற எண்ணம் உண்டாகி,
அவர்களுக்கு உபதேசம்
செய்ய தொடங்கிவிட்டார்.
பிறர் அனர்த்தம் கண்டதும்
''ஐயோ!' என்று எண்ணி அதை
பரிஹரிக்க முயல்கின்றவன்
தான் வைஷ்ணவன். இதை ஆழ்வார்
அநுஷ்டித்து காட்டினார்.
ஆகையால், ஆழ்வார்
அநுஷ்டித்துக் காட்டியதும்
ஆசார்யர்கள் உகந்தருளியதுமான
வைஷ்ணவத்வம் இதுதான்.
இது எல்லா மனிதர்களுக்கும்
வேண்டும். இது ஒன்றே இருந்துவிட்டாலும்
கூட அவன் விஷயத்தில்
பகவான் ப்ரசன்னனாகி சகல
பலனையும் கொடுப்பான்;
இது திண்ணம்.
எவன்
ஸ்ரீவைஷ்ணவன்?
எவன்
ஸ்ரீவைஷ்ணவன்? கேள்வியில்
தொனிக்கும் சங்கை ஸ்ரீவைஷ்ணவன்
அல்லாதவரும் உண்டு என்பதே.
"விஷ்ணோரயம் வைஷ்ணவ:"
என்று விஷ்ணு சப்தத்தின்
மேல் ஸம்பந்தார்த்தத்தில்
ப்ரத்யயம் சேர்ந்து "வைஷ்ணவ:"
என்று ஆகி விஷ்ணு ஸம்பந்தமுள்ளவன்
என்ற அர்த்தம் ஏற்படுகிறது.
"யச்ச
கிஞ்சத் ஜகத்யஸ்மின்
த்ருச்யதே சுரூதே வா
| அந்தர் பஹிச்ச தத் ஸர்வம்
வ்யாப்ய நாராயண: ஸ்தித:
"
என்ற ச்ருதியின்படி
உலகத்திலுள்ள எல்லா பொருள்களும்
உள்ளும் புறமும் விஷ்ணுவினாலேயே
வ்யாபிக்கப்படுகிறது
என்பதால் விஷ்ணு ஸம்பந்தமில்லாத
பொருள் ஏதும் இல்லை
என்றும் எல்லாமே வைஷ்ணவம்
என்றும் ஆகிவிடுகிறது.
அப்படியானால் உலகத்தில்
வைஷ்ணவன் என்றோ அவைஷ்ணவன்
என்றோ வியவஹரிக்க முடியாதே!
ஆகையால் வைஷணவன் என்ற
சொல்லிற்கு விஷ்ணு ஸம்பந்த
ஜ்ஞானம் உள்ளவன் என்று
பரிஷ்காரம் பண்ண வேண்டியதாகும்.
அப்படியானால் விஷ்ணு
சம்பந்த ஜ்ஞானமில்லாதவனே
அவைஷ்ணவனாக ஆகுவான்.
கீழே சொல்லப்பட்ட ஒருவடினை
விஷ்ணு சம்மந்தம் என்ற
ச்ருதி அர்த்தம் புரிந்து
கொண்டாலும் அவன் நம்பிக்கையில்லாதவனாக
இருந்தால் அவனை எப்படி
வைஷ்ணவன் என்று வ்யவரிக்க
முடியுமா? ஆகையால் விஷ்ணு
தாஸத்வ ரூப ஸம்பந்த ஞானம்
என்று சிறிது மாற்றி,
மேலும் விஷ்ணு தாஸ்ய
ரஸிகத்வ ஞானம் என்று
பரிஷ்கரித்தால் அவனை
வைஷ்ணவன் என்று சொல்லலாம்.
"பாகவதர் என்பது பகவச்
சேஷத்வ ஞான ரஸிகரை" என்று
ஸ்வாமி தேசிகன் அருளிய
படியே இங்கும் ஸ்ரீவைஷ்ணவன்
ஒருவனை அப்படிச் சொல்லலாம்.
மேலும்
ஸர்வ பிராணிகளிடத்திலும்
ஸமமாக இருப்பவன், வர்ணாச்ரம
தர்மங்களை சரியாக அநுஷ்டிப்பவன்,
பிறருடைய கஷ்டங்களைக்
கண்டு அவற்றைத் தவிர்க்க
முயல்பவன், ஏழைகளிடம்
இரங்கி உபகரிப்பவன்,
தன்னை ஒருவன் நிந்தித்தால்
நிந்திப்பவனிடம் சிறிதும்
த்வேஷம் காட்டாமல் பொறுமையுடன்
அவனை வணங்கி க்ஷமாபணம்
யாசிப்பவன், துளஸி தாமரை
மணி மாலைகளை தரித்து,
தோள்களில் சங்கு சக்கரங்களை
அடையாளமாகக் கொண்டு
நெற்றியில் திருமண் காப்பு
தரித்திருப்பவன் - இவர்களை
யெல்லாம் வைஷ்ணவர்கள்
என்று சொல்லும் பல புராண
வசனங்கள் இருக்கின்றன.
காரணம், இச் செயல்களெல்லாம்
விஷ்ணு தாஸ்ய ரஸிகதையின்
கார்யங்களாகச் சொல்லலாம்.
உதாரணமாக ச்ரவணம் கீர்த்தனம்
விஷ்னோ: என்ற பக்தியின்
கார்யங்களை பக்தியாக
சொல்வதுபோல், வெளி
அடையாளங்களாவது மனத்திலிருக்கும்
பகவத்தாஸ பாவ ஜ்ஞானத்துக்கு
அனுகுணமாக அமைகின்றன.
இப்படி
இருப்பவனே உத்தம வைஷ்ணவன்.
ஸ்வ நிஷ்டாபிஞானாதிகாரம்,
உத்தரக்ருத்யாதிகாரம்
இவைகளில் ஸ்வாமி தேசிகன்
ஒரு ப்ரபன்னனின் நடையுடை
பாவனைகள் எப்படி இருக்கவேண்டும்
என்று அருளியிருப்பதை
இங்கு நினைவில் கொள்ள
வேண்டும். மனத்தில் மாத்திரம்
பாவத்தோடும் வெளி அடையாளங்கள்
இல்லாதவர்களை மத்திய
வைஷ்ணவ கோஷ்டியில் சேர்க்கலாம்.
மனதில் பாவமே இல்லாது
வெளி வேஷத்தோடு நடப்பவர்கள்
அதம வைஷ்ணவர்களே. குலசேகராழ்வார்
அருளிய பெருமாள் திருமொழியில்
பாகவதர்கள் எப்படிப்பட்டவர்கள்
என்று பேசுகிறார் -
தேட்டருந்திறல்
தேனினைத் தேன்னரங்கனைத்
திருமாதுவாழ் வாட்டமில்
வனமாலை மார்வனை வாழ்த்தி
மால் கொள் சிந்தையராய் ஆட்டமேவிய
லந்தழைத்து அயர் வெய்தும்
மெய்யடியார்கள் தம் ஈட்டம்
கண்டிடக் கூடுமேல் அது
காணும் கண் பயனாவதே (இரண்டாம்
திருமொழி)
கெட்ட எண்ணங்களோடு
வெளிவேஷம் போட்டுக்
கொண்டு திரியும் பாகவதர்கள்
குப்பிகளில் விஷத்தை
நிரப்பி மேலே தேன் என்று
எழுதி விற்பனைக்கு சென்றால்
எப்படியிருக்குமோ அப்படிப்பட்டவர்கள்.
தெரிந்து புரிந்தவடன்
அவர்களிடமிருந்து தூர
விலகத்தான் வேண்டியிருக்கும்
உலக விவஹாரத்தில். அவர்களிடம்
த்வேஷம் கொண்டால் நம்முடைய
பாவசுத்திக்கு தீங்கு
விளைக்கும்.
இப்படியாக
ஸ்ரீவைஷ்ணவ ஸமூகம் எப்படியிருக்கும்
என்று தேறினாலும், அந்த
குலம் இப்போது பிரிந்து
பிளந்து குலைந்து கிடக்கிறதே
! ஊர்த்வ புண்டரம், அதன்
நிறம் அமைப்பு கச்சம்
அங்கவஸ்த்ரம் தரிக்கும்
பாணி, வணங்கும் முறையில்
பேதம், பகவானிடம் சரணாகதி
செய்வதில் வேற்றுமை இப்படி
பலவிதமாக ஸ்ரீவைஷ்ணவர்கள்
உள் பிரிவு ஏற்படுத்திக்
கொண்டிருப்பதால் இவர்களிடம்
கீழே புராண வசனங்களில்
சொல்லப்பட்ட வைஷ்ணவ
மனோ தர்மங்கள் இருப்பதாக்
சொல்ல முடியாதே. இவர்களை
வைஷ்ணவர்கள் என்று சொன்னால்
எப்படி ஒப்ப முடியும்?
இது சிந்திக்க வேண்டிய
விஷயம்.
ஆகையால் "எவன்
வைஷணவன்" என்ற தலைப்பைக்
காட்டிலும் "எங்கே வைஷ்ணவன்"
என்ற தலைப்பே பொருத்தமாகயிருக்கும்.
அது விசார விஷயமாகத்
தோன்றுகிறது! ஆனால்
உண்மையான உத்தமமான வைஷ்ணவனுக்கு
இப்படிப்பட்ட விசாரம்
செய்வது பொருத்தம் இல்லைதான்!
ஸ்ரீவைஷ்ணவர்கள் க்ஷமிக்க
வேண்டும்.
எவன் தீய புத்தியை
உடையவனோ எல்லாம் எம்பெருமான்
உடலாக இருக்க மற்றவன்
கஷ்டப்படும் போது எப்பெருமான்
சரீரத்துக்குத்தான்
கஷ்டம் என்ற எண்ணம் நினைக்க
இல்லையே, பொருமையினால்
அவனுக்கு கஷ்டங்கள் வரவேண்டும்
என்றும் நினைக்கிறானே.
இப்படி பல தோஷங்கள்
இருந்தவன் வைஷ்ணவன் ஆகமாட்டான்.
அவனுக்கு யமலோகம்தான்
வரும் நல்கதி கைடையாது
எனது ஆட்சியில் துன்பப்
படுவான் என்று யமதர்மராஜனே
தனது தூதர்களிடம் கூறுகிறான்.
இவன் வேண்டாதவன்.
இவன் வேண்டியவன் என்ற
எண்ணமுள்ளவன் விஷ்ணுபக்தனாகான்.
குணங்கள் நிறைந்தவனும்
தோஷமற்றவனுமான பகவானிடத்தில்
மனது செலுத்தினவனுக்கு
மாத்ஸர்ப்பம் முதலிய
துர்குணங்கள் வரப்ரஸத்திலேயே
இல்லை. ப்ரியமாயும் ஹிதமாயும்
பேசுபவன் ஹ்ருதயத்தில்தான்
பகவான் வஸிப்பான்.
தென்
கலையாரில் ஒருவன், பக்ஷபாதத்தால்
எல்லா கோயிலையும் தென்கலைகோயிலாக
ஆக்கி விடுகிறேன் என்கிறான்.
வடகலையாரில் ஒருவன் எல்லா
கோயிலையும் வடகலை கோயிலாக
செய்து விடுகிறேன் என்கிறான்.
இதனால் காமம் க்ரோதம்
முதலான துர்குணங்கள்
ஏற்படுகின்றன. இப்படியுள்ளவர்கள்
எப்படி வைஷ்ணவர்.
ஏகாந்தத்தில்
ஸுவர்ணத்தைப்பார்த்தாலும்
இது பிரர்த்ரவ்யம் என்று
பார்க்க வேண்டும். அவன்தான்
வைஷ்ணவன். மாத்ஸர்யத்தாலும்
காமத்தால் அதை எடுப்பதிலும்
பிறர் கஷ்டத்தில் ஸந்தோஷப்படுபவனும்
விஷ்ணுபக்தன் ஆக வாய்ப்பில்லை.
பிறர் செல்வத்தைப் பொருக்காதவன்
பிறர் கஷ்டத்தை எதிர்பார்க்கிறவன்
ஸ்நேஹிதனிடத்திலும்
பந்துக்களிடத்திலும்
கலத்ரமிடத்தில் பிள்ளை
பெண் வேலைக்காரனிடத்திலும்
பணத்தை வாங்கிக் கொள்பவன்
இவர்கள் எல்லாம் அதர்மர்கள்
விஷ்ணுபக்தன் ஆகமாட்டான்.
எப்பொழுதும்
மனப்பூர்வமாக வாஸுதேவ,
கமலநயன விஷ்ணோ என்று
ததேகபரனாக இருப்பவன்
வைஷ்ணவன். டம்பன் தர்பன்
போல் மேல் வேஷதாரிகள்
விஷ்ணுபக்தரல்லர். ஆக
நான் வைஷ்ணர்களிடம் அதிகாரத்தை
செலுத்தமுடியாது எனக்கும்
விஷ்ணு அதிகாரி.
நேர்
மாறாக இருப்பவர்களிடம்
அதிகாரம் செலுத்தி அவர்களை
யமயாதனைக்கி வசமாக்குவேன்
என்றான் யமதர்மராஜன்.
ஆக கீழ் கூறிய வைஷணவர்களாக
இருக்க முயற்சி செய்யக்
கடவோம்.
1, விஷ்ணு புராணத்தின்
மூலம் நமக்கு ஏற்பட்டது
என்ன என்பதை அறிந்து
கொள்ள வேண்டும்.
2, காமம்
க்ரோதம் பொறாமை ஆக்ரஹம்
புலனிஷ்டப்படி திரிகை,
பணமுள்ளவனிடம் அஸூய முதலிய
துர்குணங்கள் உள்ளவனிடம்
விஷ்ணு வெருத்திருப்பான்.
என்னிடம் பக்தி செய்பவனாக
இருந்தாலும் வைஷ்ணவன்
ஆக மாட்டான். அவன் யமனுக்கு
வச்யனாய் யாதனையை அநுபவிப்பான்.
அவனுக்கு ஸ்வர்கதி கிடையாது
என்பது.
3. வடகலை தென்கலை
மடம் முனித்ரயம் ஸ்மார்த்தர்
மாத்வர் என்று வேறு பாடுவைத்துக்கொண்டு
த்வேஷத்தை காட்டுபவனிடம்
யமன் தன் அதிகாரத்தை
க் காட்டுவான்.
4. உதாஹரணமாக
வடைகலையார் எல்லோரையுமே
வடகலைகாரர்களாக செய்ய
வேண்டும் எல்லா கோயில்களிலும்
வடகலை திருமண் போடவைக்க
வேண்டும். எங்கள் கோயிலில்
தென் கலையார், தங்களது
ப்ரபந்தத்தை சொல்ல கூடாது
எனக்கருதிகின்றனர். தென்கலையார்
எல்லாம் தென்கலையாக்க
வேண்டும் தங்கள் கோயிலில்
அவர்கள் ப்ரவேசம் கூடாது.
ஸவாமி சரணம் ஐயப்பா சரணம்
என்று பிறர் சொல்வதையும்
ஒப்புக் கொள்வோம் இவர்கள்
சொல்லத் தடுத்திருக்க
வேணும் என அபிப்ராயம்
உடையவர்கள். இது போல்
எல்லோரும் மடத்து சீடர்கள்
ஆகவேண்டும் என்று இவர்கள்
எண்ணுவது போல், எல்லோரும்
எங்களது சீடர்கள் ஆக
வேண்டும் என்றும் பரஸ்பரம்
எண்ணுகிறார்கள். இதன்
மூலம் காமம் க்ரோதம்
பொறாமை ஒருவர்க்கு ஒருவர்
விவாதம் ஏற்பட்டு கொலை
பர்யந்தம் நடந்து விடுகிறது.
ஆக இவர்கள் எப்படி வைஷ்ணவர்கள்?
இவர்களுக்கு யமதர்ம ராஜன்
ஏன் அரசனாக மாட்டான்?
எம்பெருமான் தனக்குத்தான்
எவ்வாறு பக்தர்கள் ஆவர்?
இதை யோசிக்க வேண்டும்.
வைஷ்ணவ லக்ஷணம் பொருந்துவனாக
நடத்தி எம்பொருமானுக்கு
உகப்பாக இருக்கவேண்டும்.
*****
|