திருமகள் வசிக்கும்
இடம்
பகவானுடைய அருள்
பெற்றவனே பரலோகத்தில்
மிக்க மேன்மையுடன் விளங்கி
பல உயர்ந்த இன்பங்களைப்
பெற்று ஸுகமாக வாழ்வான்.
இறைவனுடைய அருள் எவனிடத்தில்
வரும் என்றால், பத்து
விதமான நிந்திக்கத் தகுந்த
செயல்களை விட்டவனிடத்தில்
வரும். தேகத்தினால் செய்யப்படும்
மூன்று வகைக் செயல்களை
விட வேண்டும்; வாக்கினால்
செய்யப்படும் நான்கு
வகைக் செயல்களை விட வேண்டும்;
மனத்தினால் செய்யப்படும்
மூவகைக் செயல்களையும்
விட்டொழித்தல் வேண்டும்.
தேகத்தினால்
செய்யப்படும் மூன்று
வகைக் கர்மங்கள் பரஹிம்ஸை
செய்வது, திருடுவது, பரதாரங்களை
தொடுவது என்பவை. வாக்கினால்
செய்யப்படும் நான்கு
வகை கர்மங்கள் - கெட்ட
பேச்சு, கடுஞ்சொல், கோள்
சொல்லல், பொய் சொல்லுவது
என்பன. மனத்தினால் செய்யப்படும்
மூன்று வகைக் கர்மங்கள்-பிறர்
பொருளை விரும்புவது,
ஸகலப் பிராணிகளிடத்திலும்
அன்பு செலுத்தாமலிருத்தல்,
புண்ய பாவங்களுக்குத்
தகுந்தபடி, நமக்கு யஜமானனான
எம்பெருமான் பலனைக் கொடுக்கிறான்
என்ற எண்ணமில்லாமலிருத்தல்
என்பவை. ஆக இந்த பத்தும்
பெரும் குற்றங்களில்
சேர்ந்தவை; கொடிய பாவச்
செயல்கள். எனவே ஒவ்வொருவனும்
உடலாலும் வாக்காலும்
மனத்தாலும் இந்த பாவங்களைச்
செய்யாமலிருந்தால் எம்பெருமானுடைய
அருள் அவனுக்கு கிட்டும்.
இப்படி இறைவனின் அருள்
பெற்றவன் யாருடைய மனத்துக்கும்
எட்டவொண்ணாமலிருக்கும்
இடத்தைப் பெற்று, அளவிட
முடியாத இன்பங்களை பெறுவான்.
பொருள் உடையவன்,
இவ்வுலகத்தில் சிற்றின்பங்களைப்
பெறுவான். உலக வாழ்க்கையைப்
பெற விரும்புகிறவன் பொருளைத்தான்
முக்கியமாகக் கைப்பற்ற
வேண்டும். பொருளுக்கு
அதிஷ்டான தேவதை திருமகள்;
மகாவிஷ்ணுவின் முக்கிய
மஹிஷி. இவளுடைய கடாக்ஷத்தினால்தான்
பொருளைப் பெற்றவனாகிறான்.
நாம் பொருளைப் பெற மகா
லக்ஷ்மியின் அருளைப்
பெற வேண்டும். நாம் மகாலக்ஷ்மியைப்
பெற விரும்பின மாத்திரத்திலேயே
அவள் கிட்டிவிடுவாள்
என்று சொல்ல முடியாது;
அவளுடைய மனத்தில் 'இவனை
நாம் அடைந்து எல்லாவிதமான
ஐச்வர்யத்தையும் கொடுக்க
வேண்டும்' என்ற நினைவு
இருந்தால்தான் நமக்கு
இவை கிட்டும். நமது விருப்பம்
மாத்திரம் காரணமாகாது.
நாம்
ஐச்வர்யத்தையே அடைய எண்ணி
ஆகாசமார்க்கமாக விமானத்தில்
சென்றாலும் பயனில்லை;
பாதாளத்திலுள் புகுந்தாலும்
அவ்விதமே; பல தேசங்களுக்கு
ஓரிடத்திலும் நிலையாக
நில்லாமல் இரவு பகலின்றியே
ஓடிக்கொண்டே இருந்தாலும்
பலனில்லை.
நாம் முன்
ஜன்மத்தில் பலருக்கு
தான தர்மங்களைச் செய்திருந்தால்தான்
திருமகள் திருவருள் புரிவாள்.
'கொடுத்து வைத்தது கிடைக்கும்'
என்பது பழமொழி. நாம்
ஒருவருக்கும் கொடுக்காமல்
இருந்தால், நமக்கு மாத்திரம்
யார் கொடுப்பார்கள்?
ஒருவன்
ஒன்றுமே செய்யாமலிருக்கிறான்.
எங்கும் போவதில்லை.
பணம் திரட்ட ஆவலும் அடைவதில்லை.
திடீரென்று அவனிடம் பணம்
குவிந்து விடுகிறது.
மற்றொருவன் நாடெங்கும்
ஓடியும் ஒரு சல்லிக்காசும்
பெறுவதில்லை. 'ஐயோ! நான்
பல இடங்களுக்குச் சென்றேன்.
பல பெரிய மனிதர்களையும்
பார்த்தேன். ஆயினும்
என்னிடத்தில் பொருள்
சேரவே இல்லை. இவனோ வீட்டில்
இருந்து கொண்டே பெரிய
தனிகனாகிவிட்டான்' என்று
அஸூயைப்படுகிறான். இதற்கு
யார் என்ன செய்வது? அவனவனுடைய
அதிர்ஷ்டம்தான் அதற்குக்
காரணம். எனவே லக்ஷ்மியின்
அநுக்கிரகம் யாரிடத்தில்
இருக்கிறதோ அவனுக்குத்தான்
ஐச்வர்யம் கிடைக்கும்.
'திருமகள் யாரிடத்தில்
திருப்தியுடன் வஸிப்பாள்?'
என்றால் இதை தேவி தானே
கூறுகிறாள்.
ஸ்ரீபீஷ்மாசார்யர்,
சரதல்பத்தில் படுத்திருந்தபோது,
தம்பிமார்களுடன் தர்மபுத்திரர்
பீஷ்மாசார்யரிடம் பல
தர்மங்களைக் கேட்கிறார்.
அவற்றுடன், "ஸ்ரீ என்ற
லக்ஷ்மி எத்தகைய ஆண்களிடத்திலும்
எத்தகைய பெண்களிடத்திலும்
எப்போது குடியிருப்பாள்?
அதை எனக்கு சொல்ல வேண்டும்"
என்று கேட்டார்.
ஸ்ரீபீஷ்மர்
கூறுவதாவது :- தர்மபுத்திரனே,
முன்பு ஒரு காலத்தில்
இவ் விஷயத்தைப் பற்றிப்
பெரியவர்களிடம் கேட்டிருப்பதை
உன்னிடம் கூறுகிறேன்.
ருக்மிணி ப்ரத்யும்னனுடைய
தாய், க்ருஷ்ணனுடைய பத்னி.
இவள் தன் கணவனான க்ருஷ்ணனுடன்
இருந்த போது நாராயணனுடைய
மடியில் அமர்ந்துகொண்டும்,
மின்னல் போல் பிரகாசித்துக்கொண்டும்,
தாமரை மலர்கள் போல்
மலர்ந்த கண்களையுடையவளுமான
ஸ்ரீதேவியைப் பார்த்து,
"எல்லா உலகுக்கும் தாயே!
ப்ருகு மகரிஷியின் புதல்வியே!
உலகில் சிலர் மிக்க தனிகர்களாக
இருக்கின்றனர்; பலரோ
மிகவும் தரித்ரர்களாக
இருக்கிறார்கள். ஸாதாரணமான
உணவுக்கும் உடைக்குங்கூட
கஷ்டப்படுகிறார்களே;
எல்லா விதமான ஐச்வர்யத்துக்கும்
உன் அருள்தான் காரணம்
என்று எனக்குத் தெரியும்.
ஏழை மக்களிடத்தில் உன்
அருள் இருப்பதில்லை;
நீ அவர்களிடத்தில் வஸிப்பதில்லை
என்பது நன்கு வெளியாகிறது.
அது ஏன்? நீ யாரிடத்தில்
நிலையாக வஸிக்கிறாய்?
நீ யாரை விரும்புவதில்லை?
இதனுடைய உண்மையை விளக்கிக்
கூற வேண்டும்" என்ற கேட்டாள்.
இதற்கு
ஸ்ரீதேவி கூறுகிறாள்:
"உலகமெல்லாவற்றுக்கும்
யஜமானன் ஸ்ரீமகாவிஷ்ணு.
அவன்தான் நாராயணன். அவன்
எனக்குப் பர்த்தா. எல்லா
உலகங்களையும் படைத்துப்
பிரளய பாலத்தில் அசேதன
வஸ்துக்கள் போல் சிறிதேனும்
அறிவில்லாமல் இருக்கும்
ஜீவராசிகளுக்குச் சரீரம்
இந்திரியம் முதலியவற்றையும்,
புத்தியையும், வேதம்
முதலிய நல்ல நூல்களையும்
கொடுக்கிறான். 'இந்த
வேதம் முதலிய நூல்களைக்
கொண்டு நல்ல வழியில்
நடந்து நல்ல கதியைப்
பெறுவார்கள் மக்கள்'
என்று எண்ணுகிறான். அப்படி
யார் நடக்கிறார்களோ
அவர்களிடத்தில் அதிக
அன்பைப் பாராட்டுவான்.
என் கணவனான எம்பெருமான்
யாரை விரும்புகிறானோ
அவனைத்தான் நானும் விரும்புவேன்.
அவனிடத்தில் நித்தியவாஸம்
செய்வேன். அவனுக்கு எல்லாவித
ஐச்வர்யத்தையும் கொடுப்பேன்.
"ருக்மிணி
தேவியே! நீ உயர்ந்த விஷயத்தைக்
கேட்டு விட்டாய். நான்
சொல்லும் பதிலிலிருந்து
எல்லா ஜனங்களும் நல்ல
மார்க்கத்தில் இருந்து
என் அருளைப் பெற விரும்பியே
இவ் விஷயத்தைக் கேட்டாய்
போலும். முக்கியமாகச்
சில விஷயங்களை கூறுகிறேன்.
"எவன்
ஆஸ்திக்யத்தில் தைரியத்தை
அடைந்திருக்கிறானோ,
அதன்படி நல்ல வேலைகளைச்
செய்கிறானோ, பிறர் தன்னைத்
தூஷிக்கும் போது மனத்தில்
கோபமடையாமல் இருக்கிறானோ,
தெய்வத்தினிடத்தில்
அதிக பக்தியை செலுத்துகிறானோ,
செய்நன்றியை மறவாமல்
இருக்கிறானோ, எல்லா
புலன்களையும் அடக்கி
ஸன்மார்க்கத்தில் செல்கிறானோ,
அவனிடத்தில் நான் வஸிப்பேன்.
"ரஜோகுணத்தையும்
தமோ குணத்தையும் அடக்கி
ஸத்வகுணம் மேல் நோக்கியிருக்கும்படி
எவன் நடந்து கொள்கிறானோ
அவனிடத்திலும் வாஸம்
செய்வேன்.
"தர்மம் என்பது
க்ஷேமத்தை கொடுக்க கூடியது;
நம்மால் அது காப்பாற்றப்பட்டு,
நம்மை அது காப்பாற்றுகிறது.
அதை நன்கு செய்கிறவனிடத்திலும்,
தர்மங்களை அறிந்த பெரியோர்களை
வணங்கி அவர்களிடத்தில்
அடக்கமுடையவர்களிடத்திலும்,
பகவான் கொடுத்துள்ள
இரவு பகல் என்ற காலங்களில்
வீணேபேச்சு முதலிய அநாவசியமான
வேலைகளில் ஈடுபடாமல்
காலத்தை வீணாக்காமல்
பகவத் விஷயத்தில் பொழுது
போக்குகிறவர்களிடத்திலும்
நான் வஸிப்பேன்.
"தானம்
செய்வதிலும், தனக்குப்
பொருள் இல்லாமலிருந்தாலும்
இதை எப்படியாவது தானம்
செய்வது நல்லது என்பதிலும்
நினைவு இருக்கிறவர்களிடத்திலும்,
தன்னையும் தன்னைச் சேர்ந்த
வீடு முதலிய பொருள்களையும்
சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பவர்களிடத்திலும்,
பசு, பிராம்மணன் இவர்களிடத்தில்
அதிக ஆவலைக் காண்பிக்கிறவர்களிடத்திலும்
எப்போதும் வஸிப்பேன்.
அவர்களை ஒரு கணமும் விட்டுப்
பிரியேன்.
'அழகு, அடக்கம்,
கற்பு, புருஷனிடத்தில்
பணிவிடை, அயல் வீட்டுக்குச்
செல்லாமை, குழந்தைகளிடத்தில்
அன்பு, மாமியார் மாமனார்களிடத்தில்
பக்தி, பணிவிடை, ஸ்நானம்
செய்யும்போது லெளகிக
வஸ்துக்களை உபயோகித்தாலும்
பசுமஞ்சளை நன்றாக தேய்த்து
உடம்பு முழுவதும் பூசிக்
கொள்வது முதலிய நற்செயல்களைச்
செய்யும் பெண்களிடத்தில்
நான் ஸ்திரமாகவே வஸிப்பேன்.
"பசு
பாத்திரம் தானியம் இவற்றினிடத்தில்
ஊக்கமுடைய பெண்களிடத்தில்
எப்போதும் வஸிப்பேன்.
"பாண்டங்களில்
ஆதரவில்லாமல் 'தடார்
மடார்' என்று கீழே தள்ளி
உடைக்கிற பெண்களிடத்திலும்,
எதையும் ஆராயாமல் திடீரென்று
கோபமடைந்து எதிர்வார்த்தை
சொல்லும் மாதர்களிடத்திலும்,
எப்போதும் கணவனுக்கு
முரணாகப் பேசுகிறவர்களிடத்திலும்,
தன் வீட்டில் தங்காமல்
அண்டை வீட்டில் நோக்கமுள்ளவர்களிடத்திலும்,
நாணமில்லாதவர்களிடத்திலும்
நான் வஸிக்கவே மாட்டேன்.
"நெற்றியில்
அடையாளமில்லாதவர்களிடத்திலும்,
அலங்காரம் செய்துகொள்ளாதவர்களிடத்திலும்,
'பவதி பிக்ஷாம் தேஹி' என்று
தன் வீட்டை அடைந்தவர்களுக்குப்
பிச்சை போடாதவர்களிடத்திலும்
நான் வஸிக்கவே மாட்டேன்.
"நாஸ்திகனிடத்திலும்
ஜாதிஸங்கரம் செய்பவனிடத்திலும்,
ஒழுக்கம் தவறி நடக்கிறவனிடத்திலும்,
நன்றி செலுத்தாதவனிடத்திலும்,
கொடுஞ்செயலைச் செய்பவனிடத்திலும்,
பொறாமைப்படுகிறவனிடத்திலும்,
எப்போதும் தூங்குகிறவனிடத்திலும்,
கிடைத்ததைக்கொண்டு
ஸந்தோஷப்பட்டு, 'இதுவே
போதும். இனிமேல் ஸம்பாதிக்க
முயல வேண்டாம்' என்பவனிடத்திலும்
நான் வஸிக்கமாட்டேன்.
"அந்தணர்களையும்
பசுக்களையும் ஹிம்ஸை
செய்பவரிடத்திலும், சுத்தமான
புண்ணிய தீர்த்தத்தை
அசுத்தம் செய்பவரிடத்திலும்,
நிர்வேதமுள்ளவரிடத்திலும்,
மிக உத்ஸாகமில்லாமல்
எப்போதுமே துயரப்பட்டுக்கொண்டிருப்பவனிடத்திலும்,
நினைத்த வேலையை செய்ய
முயலாதவனிடத்திலும்
நான் வஸிக்கவே மாட்டேன்.
"புஷ்பங்களிலும்
மேகங்களிலும் ஆபரணங்களிலும்
நக்ஷத்திரங்களிலும்
யாகங்களிலும் யானை மாடு
முதலியவற்றை கட்டும்
இடத்திலும் குளங்களிலும்
உயர்ந்த பக்ஷிகளும் ஜலக்கரையிலுள்ள
மரங்களிலும் பெருஞ்சொலைகளிலும்
நான் வஸிப்பேன்.
"நாராயணனிடத்தில்
நான் வஸிப்பேன். என் கணவனான
இவனிடத்தில் வஸிக்கும்போது
உருவத்துடனும், மற்ற
இடங்களில் உருவமில்லாமலும்
வஸிப்பேன்.
"பொய் கொலை
முதலிய கெட்ட செயல்களைச்
செய்பவர்கள் பணக்காரர்களாக
இருக்கிறார்களே என்று
நினைக்கலாம். நான் அவர்களிடத்தில்
நிலைத்திருக்க மாட்டேன்.
நற்காரியங்கள் செய்பவரிடத்தில்
ஸ்திரமாக இருப்பேன்"
என்று திருமகள் விரிவாக
உரைத்தாள். இவ்வாறு ஸ்ரீபீஷ்மர்
தர்மபுத்திருக்குக்
கூறினார்.
பகவான் ஸர்வவ்யாபி.
அவனை அநந்தன் என்று வேதம்
ஓதுகிறது. அவன் நாராயணன்.
சேதனம் அசேதனம் என இரண்டு
பொருளுக்கு ஆதாரம் என்றும்
இரண்டு பொருள்களிலும்
வ்யாபித்திருக்கிறான்
என்று பெரியோர்கள் கூறுவர்.
அப்படியே நானும் எல்லா
வஸ்துக்களிலும் வ்யாபித்து
இருக்கிறேன். அதாவது
பரவியிருக்கிறேன். இது
பொதுப்படை கருத்து.
இப்பொழுது சொல்வதெல்லாம்
விசேஷ அபிமானம் கொண்டு
இருப்பேன் என்பது சொல்லப்படுகிறது.
*****
|