|
|
Enter subhead content here
|
|
ஆசார்ய காளமேகம்
நம்
அநுபவத்திலுள்ள அறுபது
ஆண்டுகளில் 'ஆனந்த' என்பது
ஓர் ஆண்டு. இந்த 'ஆனந்த'
என்ற ஆண்டு பிறக்கும்
போதே அனைவருக்கும் விசேஷமான
ஆனந்தம் பெருகிக் கொண்டே
வரும் என்பதை இந்தப்
பெயரிலிருந்தே அனைவரும்
அறிந்து கொள்ளலாம்.
எம்பெருமானுக்கு
பல கல்யாண குணங்கள் உள்ளன
என்பதை வேதம் பலபடியாகக்
கூறுகிறது. ஒவ்வொரு
குணத்துக்கும் அளவே இல்லை.
ஸ்ரீபாஷ்யகாரரும் சரணாகதி
கத்யத்தில் 'ஸ்வாபாவிக
- அநவதிகாதிசய' என்ற சுர்ணிகையால்
இந்த அர்த்தத்தை விசேஷமாக
அருளிச் செய்தார். இப்படி
மறைகளிலே ஸித்தமான குணங்களில்
ஆனந்தம் என்பது உயர்ந்ததோர்
குணம். இந்த குணத்தை உபநிஷத்தில்
ஆனந்த மீமாம்ஸா ப்ரகரணத்தில்
பலபடியாக விசாரித்துப்
பரமாத்மாவின் ஆனந்தத்துக்கு
அளவே இல்லை என்று முடித்துவிட்டது.
இந்த குணத்தை மேன்மேலும்
எவ்வளவு பெருக்கிக் கொண்டு
போனாலும் ப்ரஹ்மாநந்தத்தின்
முடிவை அறுதியிட முடியாது.
இந்த தன்மை எல்லா குணங்களுக்கும்
உண்டு என்பதை ஸ்ரீஆளவந்தார்
தமது ஸ்தோத்ரரத்நத்திலும்
அருளிச்செய்தார்.
இப்படிப்
பகவானுடைய குணங்களில்
ஆனந்தம் என்பது ஒரு குணம்.
அவனுடைய ஸ்வரூபமும் ஆனந்தமயம்.
எம்பெருமான் பெயரும்
ஆனந்தம்; குணமும் ஆனந்தம்.
இப்படி எல்லா பிரகாரத்தாலேயும்
மேன்மை பொருந்திய தன்மையைச்
சொல்லுகிறது 'ஆனந்த'
என்னும் பதம். இந்த பெயரை
பூண்ட இந்த ஆண்டுக்கு
ஏற்பட்ட ஏற்றம் அளவிட
முடியாதது.
இந்த வருஷம்
நன்கு மழை பெய்து ஸுபிக்ஷம்
ஏற்பட்டு அனைவருமே ஸெளக்கியத்துடன்
இருப்பார்கள் என்பதற்கு
அறிகுறியாக சென்ற வருஷத்தில்
மார்கழி மாஸத்தில் கர்ப்போடகம்
நன்றாக அமைந்திருந்தது.
ஆகையால் ஆகாயத்தில் நிறைய
காளமேகங்கள் ஸஞ்சரிக்கும்.
அவற்றை கண்டு ஜனங்கள்
குதூகலம் அடைவார்கள்.
உலகத்திலுள்ள தாபங்கள்
நீங்கும். மேகங்களைப்
பார்த்ததும் ஜனங்களுடைய
தாபங்கள் நீங்கும் என்பதை
சொல்லவும் வேண்டுமோ?
கருமேகங்கள் ஸஞ்சரித்தால்
மழை பொழியும். மழைமுகம்
காணாத பயிர்களின் வாட்டம்
நீங்கும். ஜனங்களுக்கு
ஸந்தோஷம் உண்டாகும்.
அசோக
வனத்தில் ஸீதாதேவி இருந்தபோது
ஆஞ்சநேயர் மரக்கிளையில்
உட்கார்ந்திருந்தார்.
அப்பொழுது ராவணன் வந்து
ஸீதையை மிரட்டிவிட்டு
சென்றதும், த்ரிஜடை தனக்கு
ஏற்பட்ட ஸ்வப்னத்தை கூறி
ஆச்வாஸம் செய்தாள். ஸீதா
தேவிக்கும் பல சுப சகுனங்கள்
ஏற்பட்டன. இதனால் வாட்ட
மடைந்த ஸீதாதேவியின்
முகம் மிக்க ஸந்தோஷத்தை
அடைந்தது. 'காற்றினாலும்
வெயிலினாலும் வாட்டமடைந்த
நிலத்திலுள்ள பயிரின்
விதை மழையினால் ஸந்தோஷமடைவது
போல' என்று வால்மீகி
மகரிஷி பின்வரும் ச்லோகத்தினால்
அருளிச்செய்தார்:
ஏதைர்
நிமித்தைரபரைச்ச ஸுப்ரூ: ஸஞ்சோதிதா
ப்ராகபி ஸாதுஸித்தை:
| வாதாதபக்லாந்தமிவ ப்ரநஷ்டம் வர்ஷேண
பீஜம் ப்ரதி ஸங்ஜஹர்ஷ
||
எனவே, மேகங்களைப் பார்த்ததுமே
ஜனங்கள் தம்முடைய தாபங்கள்
விலகிவிடுகின்றன என்று
ஆவலுடன் இருப்பார்கள்.
இதை போலவே, ஜ்ஞாநம் அநுஷ்டானம்
வைராக்யம் முதலிய நற்குணங்கள்
நிரம்ப பெற்ற ஆசார்யர்களை
பார்த்ததுமே தங்களுடைய
எல்லாவித இன்னல்களும்
சூரியனை கண்ட பனி போல
சுலபமாக மறைந்துவிடுகின்றன
என்று நினைத்து, ஜனங்கள்
ஆனந்தப்படுகின்றனர்.
யோசித்து பார்த்தால்
ஆசார்யருக்கும் மேகத்துக்கும்
பல விதங்களிலும் ஒற்றுமைகள்
இருக்கின்றன.
1, மேகங்கள்
உப்பு கடலிலிருந்து உப்பு
ஜலத்தை எடுத்து எல்லோருக்கும்
பலவிதத்திலும் உபயோகப்படும்படியான
நன்நீராக மாற்றி அளிக்கின்றன.
ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரத்தில்
ஸ்ரீஸ்வாமி தேசிகன் 'மேகங்கள்
.... ஸர்வோபஜீவ்யமாய் உமிழுமாப்
போலே' என்று அருளிச்
செய்தார். ஆசார்யர்களும்
நான்கு வேதங்களாகிற ஸமுத்திரத்தில்
அநபேக்ஷிதார்த்தங்களை
விட்டு, அத்யாவச்யகமான
விஷயங்களை எடுத்து கொண்டு
ஜனங்களுக்கு உபதேசம்
செய்கிறார்கள். வேதங்களில்
நமக்கு மிகவும் அவசியமான
பல விஷயங்கள் இருக்கின்றன.
அவற்றை வேதங்களை கொண்டு
நேரடியாக நாமாகவே எளிதில்
புரிந்துகொள்ள முடியாது.
அந்த அர்த்தங்களை ஆரார்யர்கள்
தாங்கள் நன்கு உணர்ந்து
நமக்குப் புரியும் வகையில்
உபதேசம் செய்கிறார்கள்.
2.
மேகம் ஒரே இடத்தில் இருந்துகொண்டே
மழை பெய்வதில்லை. ஆங்காங்கு
உசித ஸ்தலங்களில் ஸஞ்சரித்து
மழை பெய்கிறது. 'உயிரளிப்பான்
மாகங்களெல்லாம் திரிந்து'
என்றார் ஆழ்வார் திருவிருத்தத்தில்.
அதுபோல் ஆசார்யரும்
ஸ்ரீரங்கம் முதலிய அந்த
அந்த திவ்யதேசங்களுக்கும்
திவ்ய க்ஷேத்ரங்களுக்கும்
சென்று ஆங்காங்குள்ள
ஜனங்களின் உஜ்ஜீவனத்துக்காக
ஜ்ஞாந ஜீவனத்தை கொடுக்கிறார்கள்.
ஸ்ரீபாஷ்யகாரர்
ஸ்ரீரங்கம் காஞ்சீபுரம்
முதலிய திவ்ய தேசங்களுக்கு
சென்று வேதாந்தார்த்தங்களை
உபதேசம் செய்து எல்லா
ஜனங்களையும் உய்விக்க
செய்தார்.
3. மேகங்கள்
மழை பெய்து பள்ளத்தை
மேடாக்குகின்றன. அதுபோல
ஆசார்யர்களும், 'நீசனேன்
நிறைவொன்றுமிலேன்' என்று
இருக்கும் ஜ்ஞாநசூன்யர்களை
ஜ்ஞாநவான்களாக உத்தம
புருஷர்களாக ஆக்குகிறார்கள்.
4.
மேகங்கள் எப்போதுமே
மழை பெய்வதில்லை. சிற்சில
கால விசேஷங்களில்தான்
மழையைக் கொடுக்கின்றன.
ஆசார்யர்களும் எப்போதுமே
உபதேசம் செய்வதில்லை.
சில கால விசேஷங்களில்தான்
செய்கிறார்கள். 'ஸமித்பாணி'
என்ற ரீதியில் சிஷ்யன்
வந்து கேட்கும்போதுதான்.
5.
சரியான சமயங்களில் மேகம்
மைாழயை கொடுக்காவிட்டால்
வியாதி, துர்ப்பிக்ஷம்
முதலிய கெடுதல்கள் உண்டாகின்றன.
அதுபோல் ஆசார்யரும்
உபதேசம் செய்யாமல் இருந்துவிட்டால்
அநேக ஆபத்துக்கள் ஏற்படும்.
'சரீரமே ஆத்மா' என்ற எண்ணம்,
'நாநே ஈச்வரன்' என்ற எண்ணம்
முதலியவை உண்டாகி 'அதோத:
பாபாத்மா சரணத நிமஜ்ஜாமி
தமஸி' என்கிற ரீதியாம்.
6.
மேகங்கள் சில காலங்களில்
மழை பெய்து கொண்டே இருக்கும்.
எவ்வளவு பெய்தாலும் அவற்றுக்கு
திருப்தி இல்லையோ என்று
தோன்றும். அதுபோல ஆசார்யர்களும்
உத்ஸாஹம் கரைபுரண்டு
பொழுது போவதும் தெரியாமல்
உபதேசம் செய்து கொண்டே
இருப்பார்கள்.
7. மேகங்கள்
உபகாரத்தை எதிர்பாராமல்
மழை பொழியும். ஆசார்யர்களும்
பணம் முதலியவற்றை எதிர்
பார்த்து உபதேசம் செய்யமாட்டார்கள்.
8.
மேகம் சில சமயங்களில்
மழைத் துளிகளாக பெய்யும்.
சில சமயங்களில் பெருமழையாக
(ஜனங்கள் போதும் போதும்
என்று சொல்லும்படி)
அதிகமாக பெய்யும். அதுபோல
ஆசார்யர்களும் சில சமயங்களில்
மந்த்ரங்களை மாத்திரம்
உபதேசிப்பார்கள்; சில
சமயங்களில் மந்த்ரார்த்தங்களை
விஸ்தாரமாக உபதேசிப்பார்கள்.
9.
மேகம் பயிர் காடு ஏரி
வீடு வீதி முதலிய எல்லா
இடங்களிலும் ஸமமாகத்தான்
பெய்கிறது. ஆனால் பயிர்
முதலிய இடங்களில் பெய்யும்
மழை ஸபலமாகிறது. முத்துச்
சிப்பியில் விழும் மழைத்
துளி முத்தாகிறது. அதுபோல
ஆசார்யர்களும் எல்லோருக்கும்
ஸமமாகத்தான் உபதேசம்
செய்கிறார்கள். ஒருவரிடத்தில்
விசேஷமாக பலிக்கிறது;
இன்னொருவரிடத்தில்
ஸாதாரணமாக பலிக்கிறது;
மற்றொருவரிடத்தில்
பயனற்றதாக ஆகிறது.
இவ்வகையில்
மேகத்துக்கும் ஆசார்யர்களுக்கும்
பலவிதமாக ஒற்றுமைகளை
ஆன்றோர் கூறுவதுண்டு.
இங்கு நம் பெரியோர்களால்
கூறப்பட்ட ரஸகனமான ஒரு
ச்லோகத்தின் அர்த்தத்தை
அநுபவிப்போம்.
லக்ஷ்மீகாந்தாக்யஸிந்தெள
சடரிபுஜலத: ப்ராப்ய காருண்யநீரம், நா
தாத்ராவப் யக்ஷிஞ்சத்
ததநு ரகுவராம்போஜசக்ஷுர்ஜராப்யாம்
| கத்வா தாம் யாமுநாக்யாம்
ஸரிதமத யதீந்த்ராக்யபத்மாக
ரேந்த்ரம், ஸம்பூர்ய
ப்ராணிஸஸ்யே ப்ரவஹதி
ஸததம் தேசிகேந்த்ரப்ரமெள
கை: ||
உலகத்தில் சாதாரணமாக
மேகங்கள் ஸமுத்ரத்திலிருந்து
தண்ணீரை எடுத்து மலையில்
பொழியும். பிறகு மழைஜலம்
மலையிலிருந்து அருவியாக
வரும். பிறகு நதியை அடையும்.
பிறகு நதி கால்வாய் வழியாக
ஏரியை அடையும். ஏரியிலிருந்து
மதகுகள் வழியாக பயிரில்
பாய்ந்து செழிக்க செய்யும்.
அதுபோல் இங்கும் நம்மாழ்வார்
என்ற காளமேகம் ஸ்ரீமந்நாராயணன்
என்ற ஸமுத்ரத்திலிருந்து
தயை என்னும் தண்ணீரை
எடுத்து, நாதமுனிகள்
என்னும் மலையில் வரஷித்தது.
பிறகு அந்த தண்ணீர் உய்யக்
கொண்டார், மணக்கால்
நம்பி என்ற இரண்டு அருவிகளாக
வெளியில் வந்தது. ஆளவந்தார்
என்னும் நதியை அடைந்தது.
அந்த நதியிலிருந்து பெரிய
நம்பிகள் என்ற பெரிய
வாய்க்கால் வழியாக ஸ்ரீபாஷ்யகாரர்
என்னும் ஏரியை அைட்ந்தது.
பிறகு எழுபத்துநான்கு
ஸிம்ஹாஸனாதிபதிகள் என்ற
மதகுகள் வழியாக பிராணிகள்
என்னும் பயிரில் பாய்ந்தது.
அதனால் பிராணிகளாகிற
நாம் க்ஷேமமடைந்தோம்.
இப்படி
ஆசார்ய பரம்பரை மூலமாக
ஜ்ஞாந உபதெசம் பெற்று
எம்பெருமானுடைய தயாநுகூலத்துக்கு
பாத்திரராகி ஆத்மலாபத்தை
அடைகிறோம்.
ஆழ்வார்கள்
தாங்கள் நாயிகாபாவத்தை
அடைந்து பறவைகளையும்
மேகங்களையும் தூதாக விடுகின்றனர்.
ஆண்டாள் மேகத்தை தூதாக
விடுவது நாச்சியார் திருமொழியில்
ஸ்பஷ்டம். காளிதாஸன்
மேகஸந்தேசம் என்னும்
காவியத்தை இயற்றினான்.
அதில் ஒரு யக்ஷன் தன்
மனைவிக்கு மேகத்தை தூது
விடுவதாக சொல்லப்பட்டுள்ளது.
எல்லா இடங்களிலும் 'தேசிகாஸ்
தத்ர தூதா:' என்ற ரீதியில்,
தூது விடப்பட்டவர்கள்
ஆசார்ய ஸ்தானத்தில் சேர்ந்தவர்கள்.
'தூமஜ்யோதிஸ்ஸலிலமருதாம்
ஸந்நிபாத:' க்வ மேக:' என்ற
இடத்தில் புகை, நெருப்பு,
தண்ணீர், காற்று இவற்றின்
சேர்க்கையே மேகம் என்று
சொல்லியிருக்கிறது.
ஆசார்யர்களுக்கு ஜ்ஞாநம்,
அநுஷ்டானம், வைராக்யம்
ஆகிய மூன்றும் அவசியம்
வேண்டும். அதுபோல ஸலில
(ஜல) ஸ்தானத்தில் காட்டப்பட்டது
காருண்யம். இதை காட்டத்தான்
'ப்ராப்ய காருண்யநீரம்'
என்று அபியுக்தர் ப்ரயோகம்
செய்தார். ஜ்ஞாநம், அநுஷ்டானம்,
வைராக்யம் இவை எவ்வளவு
இருந்தபோதிலும் 'ஐயோ!
இந்த சேதனன் இவ்வளவு
கஷ்டப்படுகிறானே. இவனும்
உபதேசம் பெற்று நல்ல
கதியை அடைய மாட்டானா?'
என்ற இரக்கம் இல்லாவிட்டால்
பயன் யாது? ஆகவே, இந்த தயை
என்பது ஜனங்களுக்கு தண்ணீர்
போல் ஜீவனாடியாகிறது.
இப்படி நான்கு குணங்களோடு
கூடிய ஆசார்யர்கள் மேகத்துக்கு
ஒப்பாகின்றனர்.
*****
|
|
|
|
|
|
|
|
Enter supporting content here
|
|
|
|