ஒரே இரவு, ஒரே பகல்
உலகிலுள்ள
ஜீவராசிகள் அனைத்துக்கும்
யஜமானனான ஈச்வரன் ஒருவன்
இருக்கிறான். அவனன்றி
உலகில் ஒன்றும் நடைபெறாது.
வேதங்களில் 'ஈச்வரன்
இருக்கிறான்' என்று சொல்லியிருக்கிறபடியால்,
உத்தமாதிகாரியான ஆஸ்திகன்
அப்படியே இசைந்துவிடுவான்.
மத்தியமாதிகாரியான ஆஸ்திகனும்
சாஸ்திரங்களில் வல்லமை
பெற்ற மகான்களிடம் பழகிக்
கல்வி கற்று, 'நமக்கு யஜமானனான
பகவான் ஒருவன் உளன்' என்பதை
உணர்ந்து கொள்வான்.
மந்தாதிகாரியும் சாஸ்திரங்களைப்
பிரமாணமாக இசையாவிட்டாலும்,
மகான்களின் பழக்க வழக்கங்களை
வைத்துக் கொள்ளாவிட்டாலும்,
உலகத்தில் அவரவருக்கு
ஏற்படும் நன்மை தீமைகளைக்
கண்டு, 'நமக்கு மேற்பட்ட
சக்தி வாய்ந்த பொருள்
ஒன்று உண்டு' என்பதைத்
தீர்மானித்துக் கொள்வான்.
'நாமே ஈச்வரன்' என்றும்,
'நமக்கு வேண்டிய வற்றை
நாமே சாதித்துக் கொள்ளலாம்'
என்றும் ஏற்படும் எண்ணத்தை
விட்டுவிடுவான்.
உலகத்தில்
ஏற்படும் நன்மை முதலியவை
அவரவர் அதீனமாக இருந்துவிட்டால்
யாரும் இறந்துபோக மாட்டார்கள்.
அவர்களுடைய விரோதிகள்
ஜீவிக்கமாட்டார்கள்.
தலைவலி போன்ற வியாதிகள்
ஒருவருக்கும் ஏற்படா.
ஒருவனும் கெடுதலை அடைய
மாட்டான். கோடீச்வரனாக
இருப்பவன், 'ஐயோ! இவ்வளவு
ஐச்வர்யம் இருந்தும்
என்ன பயன்? சிறிதளவு பழரஸங்கூட
ஜீர்ணமாக வில்லையே. வாயில்
ஊற்றிக் கொண்டதும் வெளியில்
வந்து விடுகிறது. ஸாதாரண
ஸுகத்தையும் அநுபவிக்க
முடியவில்லையே!' என்று
கிலேசப்பட மாட்டான்.
ஒன்றுமில்லாத தரித்ரனுக்குக்
கல்லும் ஜீர்ணமாகிவிடுகிறது.
தரித்ரர்களுக்கு 'வேண்டாம்
வேண்டாம்' என்று இருந்தும்
ஒன்றுக்குப் பதினாறாகப்
பிள்ளைகள் பிறந்துவிடுகின்றன.
பணக்காரனுக்கு ஸந்ததி
அத்திப்பூப் போல் ஆகிவிடுகிறது.
இம்மாதிரி நடக்கும் லோகரீதியை
ஆராய்ந்து பார்த்தால்,
'நாம் நமக்கு ஸ்வாமி அல்ல;
நமக்கு மேற்பட்டவன் ஒருவன்
இருக்கிறான்' என்பதை
ஸுலபமாக உணரலாம்.
யஜமானனான
ஈச்வரன், அவனவன் செய்யும்
பாவபுண்ணியங்களை அநுஸரித்து,
உடல்களைக் கொடுத்து
நம்மைப் படைக்கிறான்.
நாம் பாரத பூமியில் பிறந்துள்ளோம்.
ஜப்பான், ஜர்மனி, அமெரிக்கா
முதலிய வெளிநாடுகளிலும்
அவன் கொடுத்த சரீரத்தையடைந்து
பலர் பிறந்திருக்கின்றனர்.
இது மட்டுமல்ல, புவர்லோகம்
முதல் ஸத்திய லோக வரையிலுள்ள
ஜனங்களும் பகவானுக்கு
அதீனமாக இருந்து, அவன்
கொடுத்த ஆக்கையைப் பெற்று
வாழ்ந்து வருகின்றனர்.
இம்மாதிரியே அதலம் முதலிய
கீழ் லோகங்களிலும்.
பகவானுக்கு
அதீனமாக இப்படி அனைவரும்
இருக்க, நமக்கு ஏற்படும்
நன்மை தீமைகளை நாமாக
உண்டுபண்ணவோ விலக்கவோ
சக்தியில்லாமல் இருப்பதை
நன்றாகப் பார்த்துக்
கொண்டிருந்தும், இதை
மறந்து, காம க்ரோத லோபங்களால்,
'நாநே ஸ்வாமி, நமக்கு நிகர்
யாருமில்லை. நாம் எதைச்
செய்தாலும் யார் என்ன
செய்ய முடியும்?' என்ற
சொல்லிக் கொண்டு அநீதியான
காரியங்களைச் செய்பவனைக்
காட்டிலும் அவிவேகி யாருமே
இல்லை.
'இப்படிப் பூமியில்
பிறந்த நம் ஆயு:ப்ரமாணம்
எவ்வளவு? தேவலோகம் முதலிய
உலகங்களில் உள்ளவர்களின்
ஆயு:ப்ரமாணம் எவ்வளவு?'
என்பதை ஆராய்வோம். 'சதமாநம்
பவதி சதாயு: புருஷ:' என்னும்
ரீதியில் அனைவருடைய ஆயு:ப்ரமாணமும்
நூறு எண்ணிக்கை கொண்டதே.
ஆனால் இதை மனிதனுக்கோ
தேவதைகளுக்கோ பிரம்மாவுக்கோ
எடுத்துரைக்கும்போது
வெவ்வேறு வகைப்படும்.
அதாவது
- ஒரு மனிதனுக்கு இருபத்துநான்கு
மணிநேரம் கொண்ட ஓர்
இரவும் ஒரு பகலும் சேர்ந்து
ஒரு தினம் ஆகிறது என்பது
நமக்குத் தெரிந்ததே.
பதினைந்து தினங்கள் கொண்டது
ஒரு பக்ஷம். இரண்டு பக்ஷங்கள்
கொண்டது ஒரு மாதம். பன்னிரண்டு
மாதங்கள் கொண்டது ஒரு
வருஷம். இப்படி நூறு கொண்டது
ஒரு புருஷாயுஸ்ஸு. அவரவர்
பாவ புண்ணியங்களை அநுஸரித்துக்
குறைந்தும் அதிகமாகவும்
வருஷங்கள் ஜீவித்திருக்கிறார்கள்
என்பது வேறு விஷயம்.
பித்ருக்களுக்கு,
நமக்கு ஏற்பட்ட கிருஷ்ணபக்ஷம்
என்ற பதினைந்து தினங்கள்
ஓர் இரவு. சுக்லக்ஷம்
என்ற பதினைந்து தினங்கள்
ஒரு பகல். இவ்விரண்டும்
சேர்ந்து நமக்கு ஒரு
மாதமான நாட்கள் அவர்களுக்கு
ஒரு தினம். இந்தக் கணக்கில்
பக்ஷம், மாதம், வருஷம்
இவற்றைப் பெருக்கி ஆயு:பிரமாணத்தைக்
கணக்கிட வேண்டும்.
தேவதைகளுக்கோ
நமக்கு ஏற்பட்ட ஆறு மாதம்
கொண்ட தக்ஷிணாயனம் ஓர்
இரவு. ஆறு மாதம் கொண்ட
உத்தராயணம் ஒரு பகல்.
நம்முடைய ஒரு வருஷம்
அவர்களுக்கு ஒரு நாள்.
இம்மாதிரி மாஸம் வருஷங்களைக்
கணக்கிட்டுப் பார்க்க
வேண்டும்.
ஸ்ருஷ்டிகர்த்தாவான
பிரம்மாவின் ஆயு:ப்ரமாணத்தைப்
பார்போம்.
சதுர்யுகஸஹஸ்ராணி
ப்ரஹ்மணோ திநமுச்யதே
| ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம்
தேஹோராத்ரவிதோ ஜநா:
||
க்ருதம், த்ரேதா, த்வாபரம்,
கலி என்று யுகங்கள் நான்கு
வகைப்படும். மனிதர்களுக்குக்
கீழ்க்கூறியபடி தினம்
பக்ஷம் மாதம் வருஷம்
இவற்றின் கணக்கை அநுஸரித்து
ஒவ்வொரு யுகத்துக்கும்
வருஷங்களின் எண்ணிக்கை
சொல்லியிருக்கிறது
இப்படி ஆயிரம் சதுர்யுகம்
கொண்டது பிரம்மாவுக்கு
ஒரு பகல்; ஆயிரம் சதுர்யுகம்
ஓர் இரவு. இந்தக் கணக்கில்
பக்ஷம் மாஸம் வருஷங்களைக்
கணக்கிட வேண்டுமாம்.
மனிதனின் வருஷ அளவையிட்டுப்
பார்த்தால் பிரம்மாவின்
வருஷம் வெகு தூரத்தில்
போய் நிற்கும்.
இனி,
'ஒவ்வொரு ஜீவனுக்கும்
எத்தனை பகல், எத்தனை இரவு?'
என்பதைச் சிறிது ஆராய்வோம்.
'இதை ஆராய வேண்டிய அவசியம்
என்ன? ஆயு:ப்ரமாணத்தை
அநுஸரித்து அவர்கள் எத்தனை
நாள் ஜீவித்திருக்கிறார்களோ
அதையொட்டி இரவு பகல்களைச்
சொல்லிவிடலாமே. பிறந்த
ஒரு குழந்தை 25 தினங்கள்
இருந்தால், பகல் 25, இரவு
25 என்று ஸுலபமாக ஏற்படுமே.
ஒருவன் நாற்பது வருஷங்கள்
இருந்தால் அதை அநஸரித்து
அவனுடைய இரவு பகல்களைக்
கணக்கிட்டு விடலாம்.
ஆகவே மேலே கேட்ட கேள்விக்கு
அவசியமென்ன?' என்று நினைக்கலாம்.
'அவரவர்
ஜீவதசையை முன்னிட்டு
இரவு பகல்களைக் கணக்கிடலாம்'
என்று சிலர் நினைக்கலாம்.
ஆனால் வேதாந்தசாஸ்திர
பரிசயம் செய்பவர்கள்
அப்படி நினைக்க மாட்டார்கள்.
யாராக
இருந்தாலும், இந்தப்
பூமண்டலத்திலோ, தேவலோகம்,
பாதாளம் முதலிய லோகங்களிலோ
பிறந்திருந்தாலும் அவர்களுக்கு
இரவு என்பது ஒன்றுதான்;
பகல் என்பதும் ஒன்றுதான்.
இதைத் தவிரப் பல இரவு,
பல பகல் என்று நினைக்க
வேண்டாம்.
'ஸூர்யோதயம்
ஆனதும் பகல், ஸூர்ய அஸ்தமயம்
ஆனதும் இரவு' என்ற கணக்கில்
பல பகல்களையும் பல இரவுகளையும்
கண்கூடாகப் பார்த்துக்
கொண்டிருக்கும் போது,
'ஒரே பகல், ஒரே இரவு' என்று
எப்படிச் சொல்வது? 'இது
முழுப் பூசணிக்காயைச்
சோற்றில் மறைப்பதுபோல்
உள்ளதே' என்று ஸந்தேஹப்பட
வேண்டாம். அவதானத்துடன்
கேண்மின்.
இருட்டு வந்தபோது
இரவு என்றும், வெளிச்சம்
வந்த போது பகல் என்றும்
நாம் சொல்லுகிறோம்.
உண்மையில் ஸூர்யன் உதயமாகி
வரும் வெளிச்சமும் இருட்டே.
இருட்டில், பதார்த்தங்களை
உள்ளபடி அறிந்து கொள்வதில்லை.
நாம் பகல் என்று எதைக்
கூறுகிறோமோ அந்த ஸமயமும்
உண்மையான பொருள்களை
நாம் அறிந்து கொள்வதில்லையே.
கலசம், துணி, நெல், மனிதன்,
மாடு முதலியவற்றைத் தெரிந்துகொள்ளுகிறோமே
என்றால், இவற்றை அறிவதனால்
என்ன லாபம்? உண்மையான
பரப்ரஹ்மத்தையும் அதை
அநுஸரித்த மற்ற முக்கியமான
விஷயங்களையும் எவ்வளவு
நாள் பார்க்கவில்லையோ,
அது வரையில் அஞ்ஞானமாகிய
அந்தகாரம் நம்மைச் சூழ்ந்துதானே
இருக்கும்?
இரவு வேளையில்
விளக்கை ஏற்றி வைத்துச்
சில பதார்த்தங்களை அறிந்து
கொள்ளுகிறோம். அதனாலேயே
இரவு பகலாகிவிடுமா? இரவு,
இரவுதானே? அதுபோல் நமக்குப்
பகலாகத் தோன்றும் வேளையில்
ஏதோ சில பதார்த்தங்களை
ஸூர்ய வெளிச்சத்தைக்
கொண்டு பார்க்கிறபடியாலேயே
அவ்வேளை உண்மைப் பகலாக
ஆகிவிடாது. எல்லாப் பதார்த்தங்களையும்
எந்த வேளையில் நாம் அறிகிறோமோ
அந்த வேளைதான் பகல். நமக்கு
இரவாகத் தோன்றும் காலத்தில்
சில பதார்த்தங்களைத்
தான் அறிந்து கொள்ளுகிறோம்;
சிலவற்றை அறிந்து கொள்வதில்லை.
அதுபோல் பகலிலும். பகலிலேயே,
வெளிநாட்டிலுள்ளவற்றையோ
லோகாந்தரத்திலுள்ளவற்றையோ
பார்க்கிறோமோ? நம்
முதுகின் மீது இருப்பவற்றையே
பார்க்க முடியவில்லையே!
மேலும்,
இவ்விஷயத்தை ஆழ்ந்து
நோக்க வேண்டும்.
யா
நிசா ஸர்வபூதாநாம் தஸ்யாம்
ஜாகர்த்தி ஸம்யமீ | யஸ்யாம்
ஜாக்ரதி பூதாநி ஸா நிசா
பச்யதோ முநே: ||
யோகாப்பியாஸம்
செய்பவன் பரப்ரஹ்மத்தினிடத்திலேயே
மனத்தைச் செலுத்தியிருப்பான்.
வெளி விஷயங்களில் கண்ணோட்டத்தைச்
செய்யான். ஸாமானிய ஜனங்களோ
வெளி விஷயத்திலேயே நோக்கமுள்ளவர்கள்;
பரப்ரஹ்மத்தைச் சிறிதும்
நினைக்க மாட்டார்கள்.
ஆகையால் யோகம் செய்பவனுக்குப்
பரப்ரஹ்மம் பகலாகிறது;
வெளி விஷயங்கள் இருட்டு.
பாமர ஜனங்களுக்கு வெளி
வியாபாரங்கள் பகல்; பரப்ரஹ்மம்
இரவாகிறது.
எனவே, சாஸ்திர
ரீதியிலும் உலகத்தை ஒட்டியும்
படித்தவர்களுக்குப்
பரப்ரஹ்மம் பகலாகவும்,
மற்ற விஷயங்கள் இரவாகவும்
ஆகின்றன. ஆகையால், இந்த
ஸம்ஸாரத்தில் உள்ளவரையில்
நேராகப் பரப்ரஹ்மத்தைப்
பார்க்க முடியாதாகையால்,
எத்தனை ஸூர்யர்கள் உதித்தாலும்
இரவும் பகலும் ஒரே இரவேதான்!
'எல்லாப்
பதார்த்தங்களையும் நேராகப்
பார்க்கும் வேளையான பகல்
உண்டா? அது எப்போது?' என்று
கேட்டால், 'உண்டு. அதுதான்
மோக்ஷ தசை.' ஆகையால் ஸம்ஸாரத்தில்
அநாதிகாலம் சுழன்றுகொண்டு
இருக்கும் காலம் முழுவதும்
இராப்பொழுதே. பிறகு
சரணாகதியாகிற உபாயத்தை
அநுஷ்டித்து வைகுண்டத்தை
அடைகிறோம். அங்கு மேலே
இருக்கும் காலமேல்லாம்
ஒரே பகல். அதனால் எல்லா
ஜீவர்களுக்கும் ஒரே பகல்தான்.
ஒரே இரவுதான். இதுதான்
உண்மை.
பூதத்தாழ்வார்,
"பகற் கண்டேன், நாரணனைக்
கண்டேன்" என்று வெகு ரஸமாக
அருளிச் செய்தார். உண்மையில்
மோக்ஷதசையில் பகவான்
அல்லவா உத்தம ஸூர்யன்?
இவ்வுலகில் ஸாமானியமான
ஸூயன் உதிக்கிறான்; அதே
தினத்தில் அஸ்தமித்துவிடுகிறான்.
அதனால் இரவும் பகலும்
மாறிமாறி வருகின்றன.
'அச்யுதபானு' வுக்கு இம்மாதிரி
இல்லாததனால், மோக்ஷதசையில்
ஒரே பகல்தான் நமக்கு.
உலகில்
மனிதனுக்கு இரவு பகல்
உண்டாகும்போது நடுவில்
'விடியற்காலம்' என்று
ஒன்று ஏற்படுகிறது. அம்மாதிரி
இங்கும். ஆசார்ய ஸம்பந்தம்
ஏற்பட்ட ஜீவன் தேஹாவஸாநத்தில்
மோக்ஷத்தை அடையப் போகிறான்.
ஆசார்ய ஸம்பந்தம் ஏற்பட்டு
மோக்ஷத்தை அடையும் வரையில்
உள்ள காலம் 'விடியற்காலம்';
அதற்கு முந்திய காலம்
'உறக்கம்'. இதற்குப் பிந்திய
காலம் 'விழிப்பு'. இந்த
நடுவான காலம் 'ஸ்வப்னத்தைப்
போன்ற காலம்'.
இதைத்தான்
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்,
"ஸ்வாபோத்போதவ்யதிகரநிபே
போக மோக்ஷாந்தராலே"
என்று அருளிச் செய்திருக்கிறார்.
இதனால்
என்ன ஏற்படுகிறது என்றால்,
நாம் செய்த வினையின்
பயனாக ஸம்ஸாரத்தில் பிறக்கிறோம்.
பெரும் இருட்டிலே சுழன்று
சுழன்று தவிக்கிறோம்.
புலி, கரடி, பாம்பு, ராக்ஷஸன்,
முள், கல் முதலியவை சூழ்ந்த
பெரிய காட்டில் இரவில்
தன்னந்தனியனாக ஒருவன்
அகப்பட்டுக் கொண்டால்,
'இருள் போய் வெளிச்சம்
எப்போது உண்டாகப் போகிறது?
இவ்விடத்தை விட்டு எப்போது
போகப் போகிறோம்?" என்று
தவிப்பானே, அம்மாதிரி
ஸம்ஸாரமாகிற 'இருள் சூழ்ந்த
இந்தக் காட்டில் தவிக்கும்
நாம், 'இந்தக் காட்டை விட்டு
நற்கதியை எப்படி அடைவோம்?'
என்று எண்ணுகிறோம்.
ஸதாசார்யனை அணுகி, உபாயத்தை
அநுஷ்டித்து, ஒரே பகலாக
உள்ள மோக்ஷத்தை அடைந்து,
பகவானைப் பிரத்யக்ஷீகரித்து
ஸர்வவித ஸுகங்களையும்
அநுபவிக்க வேண்டும் என்றும்.
*****
|