மூன்றாவது அத்தியாயம்
இம்மாதிரி
காருட மலையின் உத்தமமான
மகிமையை மகரிஷிகள் கேட்டு
ஆனந்தக் கடலில் மூழ்கி
மறுபடியும் நாரதரைப்
பார்த்துச் சொல்லத்
தொடங்கினர்:
'எல்லோராலும்
பூஜிக்கப்பட்ட மகரிஷியே!
உம்முடைய பிரஸாதத்தால்
காருடமலையின் வைபவத்தை
நன்கு கேட்டோம். ஆயினும்
ஒரு சந்தேகம் உண்டாகியிருக்கிறது.
"நித்தியர்கள்,
முக்தர்கள் என்று இருவகைப்
பட்டவர்கள் வைகுண்ட லோகத்தில்
இருந்துகொண்டு அங்குள்ள
பரமபத நாதனுக்குத் தொண்டு
புரிந்து வருகின்றனர்.
அவர்கள் எப்போதுமே பாபமற்றவர்கள்.
வினை என்னும் கர்மம்
அவர்களிடத்தில் இல்லை.
ஆகையால் இந்த உலகில்
பிறப்பும், மரணமும் அவர்களுக்கு
கிடையா, எனவே, அவர்கள்
தவம் புரியவும் மாட்டார்கள்.
இது சாஸ்திர ஸம்மதமான
விஷயம். இப்படியிருக்க,
கருடன் நித்யஸுரி கோஷ்டியில்
சேர்ந்தவரானபடியால்
அவர் விநதையின் புதல்வனாகப்
பிறக்கவும் முடியாது;
இந்த மலையில் தவம் புரியவும்
முடியாது. தேவரீர் இதற்கு
முரணாகக் கூறுவது எப்படிப்
பொருந்தும்? இந்த ஸம்சயத்தைப்
போக்க வேண்டும்."
நாரதர்
சொல்வார்: "முனிவர்களே!
நான் கூறுவதை நன்கு கவனித்து
மனதில் தெளிவடைவீர்கள்.
எப்பொழுது தர்மத்துக்கு
வாட்டமும், ஜனங்களிடத்தில்
அதர்மத்தில் ருசியும்
உண்டாகுமோ அப்பொழுது
பகவான் நேராகவே இந்த
உலகில் அவதரிக்கிறான்.
ஸர்வஜனங்களைக் காப்பாற்றுவதற்கும்,
பாவிகளை அழிப்பதற்கும்,
தர்மத்தை நிலை நாட்டுவதற்கும்,
கடவுள் தன்னை இந்த உலகில்
பிறப்பித்துக் கொள்கிறான்.
அவன் பிறக்கும் போது
தனது சொரூபத்திலும்
ஸ்வபாவத்திலும் ஒருவித
மாறுதலும் இன்றியே பிறக்கிறான்.
அவனைப் பின் தொடர்ந்து
கருடன் முதலிய நித்யர்களும்
பிறக்கின்றனர். இவர்களும்
மனிதர்கள், தேவர்கள்
ஆகியோரின் செயல்களையே
அநுசரித்துச் செய்கின்றனர்.
பகவான் இங்கே அவதரிக்கிறான்.
சிலருக்குப் பந்துவாக
ஆகிறான். சிலருக்குப்
பிதாவாகவும், மாதாவாகவும்
ஆகிறான். சிலர் அவனுக்கு
சிநேகிதர்களாக ஆகின்றனர்.
மற்றும் சிலர் சத்துருக்களாக
நிற்கின்றனர். சிலரை
அவன் போரில் வெல்கிறான்.
ஓர் இடத்தில் கடுந்தவம்
புரிகிறான். சிலருக்குச்
சாஸ்திரங்களை உபதேசிக்கிறான்.
ஓரிடத்தில் வரம்பை மீறி
வேலைகளைச் செய்கிறான்.
மற்றும் சில இடங்களில்
ஆசாரமின்றியே நடந்துகொள்கிறான்.
இப்படி விளையாட்டாக நடந்துகொள்ளும்
பகவானைப் பின் தொடர்ந்து
அவதரிக்கும் நித்யஸுரிகளும்
அவ்வாறே சில வேலைகளைச்
செய்கிறார்கள். ஆனபடியால்
கருடனும் விநதையின் புதல்வனாகப்
பிறப்பதிலும், தவம் புரிவதிலும்
ஒருவிதக் குற்றமும் இல்லை,"
இவ்வாறு
நாரத மகரிஷி கூறியதைக்
கேட்டு முனிவர்கள் தெளிவடைந்து,
"பகவானே! அந்த காருடமலையின்
சிறந்த புண்ய தீர்த்தங்கள்
எவை என்பதை எங்களுக்கு
விஸ்தாரமாக கூற வேண்டும்,"
என்று கேட்டனர்.
நாரத
முனிவர், "இம்மலையில்
எந்தத் தீர்த்தம் கண்ணுக்கு
புலப்படுகிறதோ அந்தந்த
தீர்த்தம் எல்லாம் புண்ணிய
தீர்த்தமே. சாக்ஷாத்
கங்கைக்குச் சமமானவை.
பல இடங்களில் பல புண்ணிய
தீர்த்தங்கள் இருக்கின்றன.
அவற்றை எண்ணுவதற்கோ
பெயரை எடுத்துச் சொல்வதற்கோ
பிதா மகானாலும் முடியாது.
"இந்திர தீர்த்தம்,
கன்யாகூபம், கெளசிகம்,
கபால மோக்ஷம், கேதாரம்,
கங்கை, கெளசாம்பம், புஷ்கரம்,
மத்ஸ்ய தீர்த்தம், ஹ்ருததாபநாசினி,
ஸ்வாமி புஷ்கரணி, ஆகாச
கங்கை, பூ கங்கை, க்ருத்ர
புஷ்கரணி, அநந்தஸரஸ்,
கோதாவரி, காவேரி, காளிந்தி,
வேணி, வேத்ரவதி, தாம்ரபர்ணி,
நர்மதா என்று நாடும்
நகரமும், போற்றும் வகையில்
பெயர் பெற்ற எல்லாப்
புண்ணிய நதிகளும், புண்ணிய
தீர்த்தங்களும், லக்ஷ்மீந்ருஸிம்ஹனுடைய
ஆஜ்ஞையாலும், முனிவர்களின்
பிரபாவத்தாலும் இந்தக்
கருட மலையின் நான்கு
பக்கங்களிலும் அமைந்திருக்கின்றன.
"இந்தப் புண்ய
தீர்த்தங்களிலும் மேம்பட்டது
பவநாசினி. பகவானின் திருவடியினின்றும்
வெளிக் கிளம்பிய கங்கை
இந்த மலையில் பவநாசினியாக
அவதரித்தது. அஹோபில
மார்க்கத்தை அடைந்து
இந்தப் பவநாசினியைக்
கண்ணால் பார்ப்பவன் கோடிக்கணக்கான
பிறவியில் செய்த பாவத்தினின்றும்
விடுபடுகிறான். இதில்
எவ்விதமான சந்தேகமும்
இல்லை. உலகத்தில் எல்லா
நதிகளைக் காட்டிலும்
கங்கை எவ்வாறு சிறந்ததோ
அது போலவே இங்குள்ள
எல்லா தீர்த்தங்களைக்
காட்டிலும் பவநாசினி
என்னும் தீர்த்தம் மேம்பட்டது.
கங்கை, பவநாசினி என்ற
இரண்டுமே உலகத்தோரால்
போற்றப்படுகின்றன. விஷ்ணுவை
நன்கு பூஜித்து அவரது
பாத தீர்த்தமான இந்த
பவநாசினி தீர்த்தத்தை
தலையில் எவன் ப்ரோக்ஷித்துக்
கொள்கிறானோ அவன் கங்கையில்
ஸ்நானம் செய்த பலனை பெறுகிறான்.
இந்த தீர்த்தத்தைச் சுத்த
மனத்துடன் கையில் எடுத்து
இறைவனை ஸ்மரித்து ப்ரோக்ஷித்துக்
கொள்பவன் எல்லா பாபங்களினின்றும்
விடுபடுகிறான். இந்த
தீர்த்தத்தை தலையால்
தரித்து பருகுபவன் மனத்திலுள்ள
அழுக்கை அகற்றுகிறான்.
முக்தியையும் பெறுகிறான்.
இந்த மாதிரி தீர்த்தத்தைக்
குடிப்பவனைப் பார்த்தும்
பித்ருக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
பிதாமகர்கள் கூத்தாடுகின்றனர்.
இந்தத் தீர்த்தத்தின்
கரையை அடைபவனே எல்லா
ப்ராயச் சித்தங்களையும்
செய்தவனாக ஆகிறான். இந்தத்
தீர்த்தத்தைக் கொண்டு
ஸாலக்ராம பூஜை செய்து,
இதைப் பருகுபவன் பிரம்மஹத்தி
முதலான பாபங்களினின்றும்
விடுபடுகிறான். அந்த
க்ஷணத்திலேயே பயனை அளிக்கவல்லது.
இந்தத் தீர்த்தம், எல்லா
மங்களங்களையும் கொடுக்க
வல்லது. மனோ வியாதியையும்
உடல் வியாதியையும் அழிக்க
வல்லது. எல்லாவற்றுக்கும்
மருந்து போன்றது இது.
மேலும் துஷ்ட க்ரஹங்களின்
கொடுமையையும் மாற்ற
வல்லது. மனத்துக்கு மகிழ்ச்சியை
அளிக்கக் கூடியது. செளனகர்
முதலிய அந்தணர்களே! இதைப்பற்றி
அதிகம் என் சொல்ல வேண்டும்?
எல்லா ஸரித்துக்களிலும்,
புண்ணிய தீர்த்தங்களிலும்
நீராடினால் எந்த எந்த
பலன்கள் கிடைக்குமோ
அந்த அந்த பலன் அனைத்தையும்
இந்த பவநாசினியில் நீராடினால்
பெற்றுவிடலாம்; போர்களத்தில்
கொல்லப்பட்டவர்களுக்கும்,
உபவாஸம் இருப்பவர்களுக்கும்,
மாமிசத்தை விட்டவர்களுக்கும்
எந்த லோகம் கிட்டுமோ
அந்த லோகத்தை இந்த தீர்த்தத்தின்
கரையில் வசிப்பதாலேயே
பெற்று விடலாம். மூன்று
உலகங்களிலும் உள்ள புண்ணிய
தீர்த்தங்கள், கூபங்கள்,
நதம், நதி, ஹ்ரதம், ஸ்ரோதஸ்,
ஸமுத்திரம், குருக்ஷேத்திரம்,
நைமிசம் முதலிய புண்ணிய
தீர்த்தங்களும், புண்ணிய
க்ஷேத்திரங்களுமாகிய
எல்லாம் ஒன்று சேர்ந்தாலும்
இந்த பவநாசினிக்கு நிகராகா.
ஆயிரத்தில் ஒரு பங்கு
மேன்மை பெற்றுள்ளவை அவை
என்றுதான் சொல்ல முடியும்.
"மேலும்
ஒரு ரஹஸ்யத்தைக் கூறுகிறேன்;
கொடியவையான பூதம், ப்ரேதம்,
பிசாசம், டாகினி முதலியவற்றின்
உபத்திரவத்தை போக்கக்
கூடியது இந்த தீர்த்தம்.
ஜுரத்தால் பீடிக்கப்
பட்டவர்கள் இந்த தீர்த்தத்தை
அருந்தினால், அதே க்ஷணத்தில்
ரோகத்தினின்று விடுபடுவர்.
உடல் நோயால் மெலிந்தவர்களும்,
விஷத்தாலும், சாஸ்த்திரத்தாலும்,
துன்பத்தை அடைந்தவர்களும்,
இந்த தீர்த்தத்தைக் குடிக்கலாம்.
அப்பொழுதே அவர்கள் எவ்வித
உபத்திரவமும் இன்றி சுகமாய்
வாழ்வார்கள். வாத, பித்த,
சிலேஷ்மங்களாலும் எவ்வித
நோயும் ஏற்படாது. இதை
பருகுபவர்களுக்கு, இந்த
தீர்த்தத்தின் கரையில்
வசிப்பவர்களுக்கும்
திருடர் பயம், அக்னி பயம்,
முதலியவை ஏற்படாது. முனிவர்களே!
இந்த தீர்த்தத்தை உட்கொள்வதற்கு
ஸூதகாசெளசமும், ம்ரதகாசெளசமும்
கிடையா. எப்பொழுதும்
இதை ப்ராசனம் செய்யலாம்.
மரண காலத்திலாவது இந்த
தீர்த்தத்தை எவன் உட்கொள்கிறானோ,
அவன் நல்ல கதியை அடைகிறான்.
குடிக்கக் கூடாததை குடிப்பவன்,
சாப்பிடக்கூடாத பொருளை
புசிப்பவன், செல்லக்கூடாத
இடத்திற்கு செல்பவன்,
மற்றும் பாப கர்மங்களை
செய்பவன் இந்த தீர்த்தத்தில்
ஸ்நானம் செய்வதாலும்,
இதை பானம் பண்ணுவதாலும்
பரிசுத்தியை அடைகிறான்.
எல்லா க்ருச்ரம் முதலிய
ப்ராயச் சித்தங்களைக்
காட்டிலும் மேம்பட்டது
இதனை பானம் பண்ணுவது.
ஆக இதன் மகிமைக்கு எல்லை
சொல்ல முடியாது.
"ஒரு
சமயம் தாமரையில் பிறந்த
ப்ரம்ம தேவர் "இந்த தீர்த்தம்
அனைவருக்கும் நன்மையைக்
கொடுக்கவேண்டும் என்று
எண்ணி, தர்ம தேவதையைப்
பார்த்து, "ஓ தர்மமே! லோகத்துக்கு
பரிசுத்தியைக் கொடுக்க
ஜலமாக நீ பெருகி பவநாசினி
என்ற பெயருடன் அஹோபிலத்தில்
காக்ஷி அளிக்க வேண்டும்"
என்றார். அவருடைய நியமனத்தின்படி,
தர்மந்தான் இப்படி உலக
க்ஷேமத்துக்காக பெருகி
நமக்கு நன்மையை அளிக்கிறது.
"மேலும் கேளீர்
! எவன் எவன் எந்த எந்த பலனை
விரும்பிகிறானோ அவனவன்
இதில் நீராடி அந்தந்த
பலனை அடைகிறான் என்பதில்
சந்தேகமில்லை. இந்த நதியில்
மகரிஷிகளால் சொல்லப்பட்டவையும்,
அவர்களாலேயே, அதிஷ்டிதமானவைகளுமான
எல்லா தீர்த்தங்களும்
இதில் சேர்ந்திருக்கின்றன.
விஸ்தாரமாக அவற்றை உங்களுக்கு
கூறுகிறேன்;
"மேருமலையின்
மேற்கு பாகத்தில் கீழே
நாரஸிம்ஹ தீர்த்தம் என்கிற
ஒரு தீர்த்தம் உண்டு.
முனிவர்களில் சிறந்த
காலவர் அங்கே பயங்கரமான
தவம் புரிந்தார். அந்த
தீர்த்தத்தின் கரையில்
நீண்ட கைகளுடன் பல நூற்றாண்டு
மிகவும் பக்தியுடன் முப்பத்திரண்டு
எழுத்துக்கள் அடங்கிய
உயர்ந்த நாரஸிம்ஹ மந்திரத்தை
பலதடவை ஜபித்தார். எல்லா
ம்ருத்யுக்களையும் அழிக்கக்கூடியதும்
பொறுமை முதலிய நற்குணங்களை
அளிக்கக்கூடியதும் அசுரர்களுக்கு
அறியாததாய் இருப்பதுமான
இந்த மந்திரம் எல்லா
மந்திரங்களிலும் மேற்பட்டது.
இந்த மந்திரத்தை ஜபித்துக்கொண்டு
தவம் புரிந்தபடியால்
மற்ற அனைவராலும் அறியப்படாத
பகவான் காலவருக்கு காக்ஷியளித்தார்.
'காலவா! நான் உன் தவத்தைக்
கண்டு மகிழ்ந்தேன். வேண்டிய
வரத்தை கேட்பாயாக' என்றார்.
இதைக் கேட்டு காலவர்,
'பரம ஆனந்த ஸ்வரூபனே! என்
தவத்தை மெச்சி எதிரில்
நீ தோன்றின பிறகு வேறு
என்ன வரத்தை விரும்பப்
போகிறேன்? முனிவர்கள்
உலகப் பற்றுதலை விட்டு
அசூயை அற்றவர்களாய் உன்
திருவடித் தாமரையையே
காண விரும்பிகின்றனர்.
வேறு பயன்களில் விருப்பம்
உள்ளவர்கள் கூட உன்னை
கண்டதும் அவற்றை மறந்து
உன் தரிசனத்திலேயே ஈடுபடுகின்றனர்.
நான் தேவ பதத்தை விரும்பவில்லை.
இந்திரன், ருத்திரன்,
ப்ரம்மா இவர்களுடைய ஸ்தானத்தையும்
விரும்பி தவம் புரியவில்லை.
உன் திருவடிகளில் அசஞ்சலமான
பக்தி ஒன்றைத்தான் விரும்புகிறேன்.
எத்தனைப் பிறவி எடுத்தாலும்,
எனது பக்தி அழியாமல்
இருக்க வேண்டும்' என்று
கேட்டுக் கொண்டார்.
இதைக் கேட்ட பகவான் காலவரைப்
பார்த்து 'அப்படியே ஆகக்
கடவது, நீர் குற்றமில்லாமல்
தர்மங்களைச் செய்துகொண்டு
உலகத்தில் சஞ்சரிப்பீராக.
கருடனின் தோள்களில்
ஏறி உமக்கு சேவை கொடுத்து
என்னுடைய ஸ்தானத்துக்கு
அழைத்துக்கொண்டு போகிறேன்.
மேலும் இன்று முதல் இந்த
தீர்த்தத்தில் எவர் ஸ்நாநம்
செய்கிறார்களோ அவர்களும்
மோக்ஷத்தைப் பெறுவர்.
கார்த்திகை மாதத்தில்
இந்த தீர்த்தத்தில் ஸ்நானம்
செய்து தானம் புரிபவன்
பெறும் செல்வத்தையும்
பெறுவான்' என்று சொல்லி
மறைந்தார். அது முதல்
இந்த தீர்த்தம் நாரஸிம்ஹ
தீர்த்தம் என்ற பெயருடன்
விளங்குகிறது.
"ராம
லக்ஷ்மண தீர்த்தம் என்ற
மற்றொரு தீர்த்தமும்
இங்கு உள்ளது. தந்தையினுடைய
வார்த்தைக்கு இணங்கி
தண்டகாரண்யத்தில் சீதையுடனும்,
லக்ஷ்மணனுடனும் சஞ்சரித்துக்கொண்டு
ராமபிரான் ஒரு சமயம்
பவநாசினியின் கரையை அடைந்தார்.
அங்கே சூதம், பனஸம், நாளீகேரம்,
சம்பகம், அசோகம், முதலிய
மரங்களையும், தங்கமயமான
கொடிகளையும் பல புஷ்பங்களையும்
பார்த்து, சீதையுடன்
இங்கே சில காலம் வாசம்
செய்ய விருப்பமுற்றார்.
அக்கரையுலுள்ள இரண்டு
மடுவில் தம் அநுஷ்டாநங்களை
தினந்தோறும் முடித்துக்கொள்வார்.
ஆகையால் அது முதல்கொண்டு
ராம தீர்த்தம், லக்ஷ்மண
தீர்த்தம் என்ற பெயர்களுடன்
இரு குண்டங்கள் விளங்குகின்றன.
இவற்றில் ஸ்நானம் செய்பவன்
பாவங்களினின்றும் விடுபடுகின்றான்.
ராமபிரானுடைய அநுக்ரஹத்தால்,
மார்கழி மாதத்தில் இந்த
தீர்த்தங்களில் ஸ்நானம்
செய்து உயர்ந்த பொருளை
தானம் செய்பவன், அழிவில்லாததும்
அளவற்றதுமான செல்வத்தை
பெறுகிறான்; முக்தியையும்
அடைகிறான்.
"நான்காவது
பீம தீர்த்தம். இது பாப
கர்மங்களுக்கு பயங்கரமானது.
எங்கே பார்வதிபதியும்
பூஜிக்கத் தகுந்தவரும்
பரமசிவனான இந்த சிந்துவை
தடுத்து பெரும் பாறாங்கல்லை
உடைத்து இதற்கு வழியை
காட்டினாரோ, அங்கே பயங்கரமான
ஒலியுடன் இந்த நதி கலங்கின
ஜலத்துடன் மலைக்கு அழகு
தரும் மரங்களை முறித்துக்
கொண்டு ஓடுகிறது. தேவர்களும்
மகரிஷிகளும் இந்த இடத்துக்கு
பீம தீர்த்தம் பெயர்
வைத்தார்கள். இந்த தீர்த்தத்தில்
ஒரு மனிதன் ஸ்நானம் செய்து
இறைவனிடத்தில் பக்தி
உள்ளவரும், மஹா தரித்திரரும்,
வேதம் ஓதியவருமான அந்தணருக்கு
மிக பரிவுடன் தானம் செய்தால்
தசதானங்களின் பலனை அடைகின்றான்.
மாசி மாசத்தில் சூரியோதய
சமயத்தில் மிக பரிசுத்தியுடன்
மந்திர பூர்வமாக ஒருவன்
ஸ்நாநம் செய்தானேயானால்,
அளவற்ற பலத்தை அடைவான்
என்பதில் ஐயம் இல்லை.
அதே சமயத்தில் தண்ணீரின்
நடுவில் ஆயிரம் தடவை
காயத்ரியை ஜபித்துக்
கொண்டிருப்பவன் தேவர்களால்
பூஜிக்கப் படுவான். இந்த
இடத்தில் புரந்தரன் ஒரு
மாத காலம் விரதம் பூண்டிருந்தான்.
ப்ரம்மாவும் பூஜைக்கும்
தகுதி உடையவனான். ஆக இங்கு
நித்யம் ஸ்நானம் செய்பவன்
அழிவில்லாத செல்வத்தை
பெறுவான்.
"ஐந்தாவது
சங்க தீர்த்தம். சங்கர்
என்னும் பெரிய முனிவர்
தம் ப்ராதாவான லிகிதருடன்
இங்கே தவம் செய்தார்.
லோகத்தின் நன்மைக்காக
கலைந்திருந்த வேதத்தை
ஒன்று சேர்த்து இரண்டு
யுகம் ஸ்தோத்ரம் செய்தார்.
ஆகையால் உலகத்திலேயே
இது சிறந்த தீர்த்தமாக
விளங்குகிறது. இந்த தீர்த்தத்தில்
ஆறு வருஷகாலம் தப்பாமல்
ஸ்நானம் செய்பவனுக்கு
ஜன்மாந்திர நினைவும்
தர்ம புத்தியும் உண்டாகும்.
பித்ருக்களைக் குறித்து
மாசிமாசத்தில் இதில்
ஸ்நாநம் செய்து அந்தணர்களை
ஆராதிப்பவன் நற்கதி அடைவான்.
அவனது தலைமுறை பித்ருக்களும்
சந்தோஷமடைவர்.
"ஆறாவது
வாராஹ தீர்த்தம். இது
வராஹ அவதாரம் எடுத்த
பகவானின் மூலம் வெளி
வந்தது. முன்பு ப்ரளய
காலத்திலே ஸமுத்திரத்தில்
மூழ்கிய பூமியை எடுக்க
வேண்டுமென்று எண்ணிப்
பகவான் வராஹ அவதாரதம்
எடுத்தார். ரிஷிகளாலும்,
தேவ கந்தர்வர்களாலும்
பிரம்மாவினாலும் பூஜிக்கப்பட்டார்.
உலக நன்மைக்காக பூமியை
அவர் வெளியில் எடுத்தார்.
அப்போது அசைவு பெற்ற
வராஹத்தின் திருமேனியினின்றும்
தண்ணீர் வெளி வந்தது.
ஆகையால் இதற்கு வாராஹ
தீர்த்தம் என்ற பெயர்
உண்டாயிற்று. இப்படிப்
பட்ட பெருமையை முன்னிட்டு
அந்த வராஹ பகவான் மகாதேவியின்
பொருட்டுப் புராணத்தை
உபதேசித்தார். புராணம்
ஸாத்வீக புராணம், ஸத்வகுணம்
நிறைந்த பகவானைப் பற்றி
இதில் சொல்லப் பட்டிருக்கிறது.
தர்மம், அர்த்தம், காமம்,
மோக்ஷம் என்ற எல்லாப்
புருஷார்த்தங்களையும்
கொடுக்க வல்லது இந்தத்
தீர்த்தம். இதில் ஸ்நானம்
செய்து பகவானை அர்ச்சித்து
மூன்று வேளை உபவாஸம்
இருப்பவன் மூன்று உலகங்களுக்கும்
ஈஸ்வரனாவான். கோரைக்
கிழங்கு, அரிசி, வெல்லம்
இவற்றை கலந்து ஸர்வேச்வரரான
வராஹப் பெருமானுக்கு
நிவேதனம் செய்பவன் ஸித்தியைப்
பெறுவான். சித்திரை மாதத்து
சுக்ல பக்ஷ த்வாதசியில்
அல்லது பெளர்ணமியில்
இங்கே கொடுக்கப்பட்ட
பொருள் அளவற்றதாகிறது.
இங்கே ஜீர்ணமான வஸ்திரத்தை
அணிந்தவனுக்கு உயர்ந்த
நூதன வஸ்திரத்தைக் கொடுப்பவன்
அந்த வஸ்திரத்தில் உள்ள
ஒவ்வொரு நூலுக்காகவும்
பத்து மடங்கு ஸுகம் சுவர்க்க
லோகத்திலேயே அநுபவிப்பான்.
"ஏழாவது,
ஸெளதர்சன மகாதீர்த்தம்.
இங்கு ஸ்நானம் செய்யும்
மனிதர்கள் துக்கத்தை
அடையமாட்டார்கள். அம்பரீஷர்
என்னும் மகா பாகவதர்
நான்முகக் கடவுளின் அநுக்ரஹத்தால்
சுதர்ஸன மஹாமந்திரத்தை
இங்கே ஜபித்தார். சுதர்ஸன
பகவானும் ஆயிரம் கரங்களுடன்
இங்கு அவருக்கு சேவை
கொடுத்தார். அது முதற்கொண்டு
இந்த பெயர் இதற்கு வழங்குகிறது.
இதை எவர் நினைத்தாலும்
நேரில் கண்டாலும் அவர்
நல்லறிவு பெற்றவராகிறார்.
இந்த தீர்த்தத்தின் கரையில்
பிருகு முதலிய மகரிஷிகள்
இன்றும் வேதம் ஓதுகின்றனர்.
வைசாக மாதத்தில் விசாக
நக்ஷத்திரத்தன்று இங்கே
பிறருக்கு தயிர் சாதம்
கொடுப்பவன் எப்பொழுதும்
எல்லா வகையிலும் மகிழ்ச்சியுடன்
விளங்குவான்.
"எட்டாவது
சூத தீர்த்தம். ஸம்ஸார
கஷ்டத்தை போக்கக் கூடியது
இது. துஷ்டர்களுக்கும்
விரும்பிய பலனை கொடுக்க
வல்லது. இந்த ஸ்தலம் எண்பதனாயிரம்
மகரிஷிகளுக்கு வாசஸ்தலமாக
இருந்தது. முன்பு பன்னிரண்டு
வருஷ காலம் துர்பிக்ஷத்தால்
அனைவரும் பீடிக்கப் பட்டார்கள்.
அன்ன ஆகாரம் இல்லாமல்
கொடும் பசியால் மகரிஷிகளும்
மற்றும் உள்ள ஜந்துக்களும்
தவித்திட, மூன்று உலகத்திலும்
தேடிப்பார்க்கும் ஏதும்
கிடைக்கப் பெறாதவர்களுக்கு
பகவான் ஒரு ஆம்ரமரமாக
(சூதம் - மாமரம்) அதிலும்
சிறு பிராயத்தில் உள்ளவர்களும்
சுலபமாக எட்டிப் பறிப்பதற்கு
தகுந்தார்போல் அவதரித்தார்.
அமிர்த ரசங்களை உள்ளடக்கிய
பழங்களுடன் இந்த மரம்
தோற்றம் அளித்தது. ஒவ்வொருவருக்கும்
தம் பசியை இந்த மரத்தில்
உள்ள பழங்களின் மூலமாக
போக்கடித்துக்கொண்டனர்.
ஆகையால் இங்குள்ள தீர்த்தம்
சூத தீர்த்தம் என்று
பெயர் பெற்றது. இந்த தீர்த்தத்தில்
ஸ்நானம் செய்பவன் பாவத்தினின்றும்
விடுபடுகின்றான். ஜேஷ்ட
மாதத்தில் கேட்டை நக்ஷத்தன்று
படித்த அந்தணர்களுக்கு
கன்னிகையையும், பூமியையும்,
ஸ்வர்ணத்தையும், இங்கே
தானம் செய்ய வேண்டும்.
கன்னிகையை தானம் செய்பவன்
கல்பம் வரை ப்ரம்மாவுடன்
ஆனந்தத்தை அநுபவிப்பான்.
பூமியைக் கொடுப்பவன்
அழிவில்லாத ஸாம்ராஜ்யத்தை
அடைவான். ஸ்வர்ணத்தைக்
கொடுப்பதால் தங்கமயமான
உடலைப் பெற்று குபேரனது
இடத்தை அடைந்து அங்கு
அதற்கு அரசனாவான்.
"ஒன்பதாவது
தாரா தீர்த்தம். முக்தி
தாரையை பெருக்கக் கூடியது
இது. சிறைக்கு சமமான இந்த
உலக ஸம்பந்தத்தை விலக்கக்
கூடியது. பகவானான மஹா
விஷ்ணு என்று சொல்லப்
பட்ட நரஸிம்ஹனுடைய ஆராதனத்திற்கு
உபயோப்படும் தண்ணீரை
இங்கே எடுத்துக் கொள்வார்கள்.
ஆஷாட மாதத்தில் த்வாதசியில்
இதில் ஸ்நானம் செய்து,
நன்கு வளர்ந்த பசுக்களை
அந்தணர்க்கு கொடுப்பவன்
விஷ்ணுவின் ஸ்தானத்தை
பெறுவான். ஸாலக்ராமத்தைக்
கொடுப்பவனுக்கு ஏற்படக்கூடிய
பயன் சொல்லில் அடங்காது.
"பத்தாவது கஜ
குண்டம். இதில் இறங்கி
ஸ்நானம் செய்வது அரிது.
பருத்த யானைகள் இங்கும்
அங்கும் ஓடுகின்றன. காருட
மலையின் வட பாகத்தில்
அந்த யானைகள் இங்குள்ள
தீர்த்தத்தின் ருசியால்
இழுக்கப் பட்டு தாமாகவே
ஓடிவருகின்றன. குடை போன்ற
குகையில் நரஸிம்ஹன் வசிக்கிறான்.
அந்த பெருமானுக்கு எதிரில்
இந்த தீர்த்தம் கம்பீரமாக
விளங்குகிறது. யானைகள்
சிங்கத்தைக் கண்டதும்
பயந்து நடுங்கி வேகமாக
ஓடுவதுபோல் இந்த தீர்த்தத்தில்
ஸ்நானம் செய்பவனைக் கண்டு
பயந்து நடுங்கி பாவங்கள்
அப்பொழுதே ஓடிவிடுகின்றன.
முன்பு சாபவசத்தால் கஜேந்திர
ஆழ்வானாக மாறிய அரசன்
இங்கு ஸ்நானம் செய்து
ஜன்மாந்திர நினைவைப்
பெற்றான். ஆவணி மாதத்தில்
இதன் கரையில் தான்ய தானம்
செய்தால் அதன் பலனை ப்ரம்மாவினாலும்
விவரித்துக் கூற முடியாது.
"பதினோராவது
வைநாயக தீர்த்தம். விக்நேசுவரர்
இங்கே தவம் புரிந்தார்.
புரட்டாசி மாதத்தில்
இங்கே பித்ருக்களுக்கு
அன்னம் படைப்பவன் அளவற்ற
பலனைப் பெறுகிறான். மோக்ஷத்தையும்
பெறுகிறான்.
"பன்னிரண்டாவது
பைரவ தீர்த்தம். இங்கே
பைரவர் என்பவர் தலை இல்லாமல்
உலகம் நடுங்கும் வகையில்
வாசம் செய்கிறார். இங்கு
ஐப்பசி மாதத்தில் ஸ்நானம்
செய்து ஸ்வர்ணத்தை கொடுக்க
வேண்டும். அத்தகைய ஒருவனுக்கு
விஷ்ணு எதிரில் காக்ஷி
அளிப்பார். அவனுக்கு
புத்திர ஸந்ததி அபிவிருத்தி
ஏற்படும்.
"பதிமூன்றாவது
ருக்ம குண்டம். இவை யாவும்
புண்ய தீர்த்தங்கள்.
பவநாசினி மிகப் புனிதமானது.
அது நிலைபெற்றுள்ள பிரதேசத்தில்
இந்த தீர்த்தங்கள் கலந்திருக்கின்றன.
ஒவ்வொன்றின் மகிமையும்
வேறு பட்டது. எல்லா வைபவங்களும்
இந்த பவநாசினி என்னும்
புண்ணிய தீர்த்தத்துக்கு
உண்டானபடியால் இதன் பெருமை
சொல்லத் தரமன்று.
*****