நான்காம் அத்யாயம்
செளனகர்
முதலிய மகரிஷிகள் நாரதரைப்
பார்த்து கூறுகிறார்:
"ப்ரம்மாவின் புதல்வரே!
தேவரீர் பவநாசினியின்
மகிமையை கூறினீர்கள்.
மேலும் கருட மலையிலுள்ள
தீர்த்தங்களின் பெருமையையும்
சொன்னீர்கள்.
"வீட்டில்
சிற்றின்பங்களில் மனத்தைச்
செலுத்தி வீண் பொழுது
போக்குபவர்களை பார்த்தால்
மனம் ஆயாசப்படுகிறது.
இந்த தீர்த்தத்தின் பெருமையை
அவர்கள் அறியவில்லையே!
ஐயோ! எவர்கள் இந்த புனிதமான
பவநாசினியை கண்ணால் பார்க்கவில்லையோ,
இதில் ஸ்நானமும் செய்ய
வில்லையோ அவர்களுடைய
பிறப்பு வீண்!
"ஊன்வாட
வுண்ணாதுயிர் காவலிட்டு
உடலிற் பிரியாப் புலனைந்தும்
நொந்து தாம் வாடவாடத்
தவமும் செய்ய ேவ்ண்டாம்.
வேறு சில தீர்த்தங்களில்
நீராடவும் வேண்டாம்.
பல சாஸ்திரங்களையும்
வேதங்களையும் கற்கவும்
வேண்டாம். பற்பல வேள்விகளைச்
செய்யவும் வேண்டாம்.
இந்த மிகப் பரிசுத்தமான
பவநாசினி என்னும் நதியில்
ஸ்நானம் செய்வதே போதுமானது.
இந்த ஸ்நானம் அந்தப்
பகவானை நன்கு காணச் செய்யும்.
அளவற்ற பலனையும் கொடுக்கும்.
உலகத்தில் நாங்கள் மிகவும்
உயர்ந்தவர்கள் என்பதில்
சிறிதளவும் ஐயமில்லை.
ஏனென்றால், இந்த நதியின்
பெருமை தேவரீரால் உபதேசிக்கப்
பட்டு எங்களது மனத்தில்
நிலைத்திருக்கிறதல்லவா?
"மேலும்
தேவரீரிடமிருந்து இந்த
மலையிலுள்ள ஒன்பது ந்ருஸிம்ஹர்களையும்
அவர்களுடைய பெயரையும்
ஸ்தானங்களையும் கேட்க
விரும்புகிறோம். கிருபை
கூர்ந்து எங்களை உஜ்ஜீவிக்கும்படி
செய்தருள வேண்டும்."
நாரத
முனிவர், "பகவான் வசிக்கும்
ஸ்தானங்களுக்குள் கஜதீர்த்தம்
என்னும் இடம் மிகப் புனிதமானது.
1.
அஹோபில ந்ருஸிம்ஹர்
:
அங்கு நரங்கலந்த சிங்க
உருவில் தம் சத்துருவைப்
பிளந்து கொண்டு காட்சியளிக்கிறார்
பகவான். சக்ராசனத்தில்
வீற்றிருப்பவராயும்,
சக்ரம் முதலிய ஆயுதங்களைத்
தரித்தவராயும், துஷ்டர்களுடைய
கெட்ட அபிப்பிராயத்தை
அழித்துக் கொல்பவராயும்,
ஜடை, பிடரி மயிருடன் கூடியவராயும்,
அஸுரக் கூட்டத்தை வேரோடு
அழிப்பவராயும், கோரைப்
பற்களால் பிறருக்குப்
பயத்தை அளிப்பவராயும்
கூர்மை பொருந்திய வஜ்ராயுதங்களுக்குச்
சமமான நகங்களால் அஸுரனைப்
பிளக்கிறவராயும், நெற்றிக்கண்ணில்
உண்டான பயங்கரமான நெருப்பால்
மூன்று உலகங்களையுமே
கொளுத்துகிறவராயும்,
அளவிட முடியாத ஆகாரம்
அல்லது உருவத்தோடு கூடியவராயும்,
பக்தனிடம் சகஜமாக உள்ள
தயையால் அமிர்தத்தைப்
பெருக்கக் கூடிய பார்வை
உள்ளவராயும், எதிரில்
கை கூப்பி வணங்கி உடகார்ந்துள்ள
ப்ரஹ்லாதனை அன்பால் அநுக்ரகிக்கிறவராயும்,
மிகவும் சந்தோஷத்துடன்
ஸேவை சாதிக்கிறார். இது
முதல் ஸ்தானம். நான்முகன்
முதலிய தேவர்களால் உபாசிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கில் இதுபோல்
ஸ்தானங்கள் இருக்கின்றன.
ந்ருஸிம்ஹர் வாசம் செய்யாத
இடம் க்ஷேத்திரம் ஆகாது.
அம்மாதிரி க்ஷேத்திரம்
இதுவரையில் இல்லை; இனிமேல்
இருக்கவும் போவதில்லை.
இந்த ந்ருஸிம்ஹர் எல்லா
இடமும் பரவியுள்ளார்.
பூமியிலும் உலகத்திலும்,
காற்றிலும், வார்த்தையிலும்,
நெருப்பிலும், அமுதத்திலும்,
ஆகாசத்திலும், மற்றுமுள்ள
தேசங்களிலும் இந்த எம்பெருமான்
வியாபித்துள்ளார். உடலும்
ந்ருஸிம்ஹர், தங்கமும்
ந்ருஸிம்ஹர், யாகம் ந்ருஸிம்ஹர்,
காடும் ந்ருஸிம்ஹர்,
எல்லாப் பொருள்களும்
ந்ருஸிம்ஹனே. இந்த தெய்வத்தைக்
காட்டிலும் உயர்ந்தது
எதுவும் இல்லை. அப்படி
ஒன்று உண்டு என்று எண்ணுபவன்
இரண்டு கால்களை உடைய
பசு என்றே கூற வேண்டும்.
இத்தகையவன் பிறக்கவே
வேண்டாம். எல்லோரிடத்திலும்
ஒவ்வொரு அணுவிலும் ந்ருஸிம்ஹர்
பரவிக் கிடக்கிறார் என்பதை
எவன் அறியவில்லையோ அவன்
புருஷ அதமன். பிறந்து
கெட்டவன். நான்கு சாஸ்திரங்களை
அறிந்தவர்கள் கூட சில
சமயம் ஏதோ காரண வசத்தால்
மறந்துவிடுகின்றனர்.
இவர்களே இப்படியானால்
சரீரம் வேறு, ஆத்மா வேறு
என்கிற அறிவில்லாதவர்களைப்
பற்றி சொல்லவே வேண்டாம்.
ந்ருஸிம்ஹ ரஹிதம்
க்ஷேத்ரம் ந பூதம் ந பவிஷ்யதி
| ந்ருஸிம்ஹ நாயகோ விஷ்வம்
வ்யாப்தவான் புருஷோத்தம
:||
பூமெள ந்ருஸிம்ஹோ
புவனே ந்ருஸிம்ஹோ வாயெள
ந்ருஸிம்ஹோ வசநே ந்ருஸிம்ஹ:| அக்நெள
ந்ருஸிம்ஹோ: அப்யம்ருதே
ந்ருஸிம்ஹொ: அப்யாகாச
தேசேப் யகிலே ந்ருஸிம்ஹ:||
காயோ
ந்ருஸிம்ஹ: கனகம் ந்ருஸிம்ஹ:| காயோ
ந்ருஸிம்ஹ: ஸவனம் ந்ருஸிம்ஹ:| வனம்
ந்ருஸிம்ஹ: வனதா ந்ருஸிம்ஹ: யதஸ்தி
யந்நாஸ்தி ச தந்ந்ருஸிம்ஹ:|
ந்ருஸிம்ஹ
தேவாதபரம் விஜாநந் நர:
பசு: பாதயுகப்ரஸுத:| ததோ
வரம் ஹ்யப்ரஸவோ ம்ருதிர்வா
யதோஹரிம் ஸர்வகதம் ந
வேத ||
ஜாந்தோபிந ஜாநந்தி
ஜாட்யாஸக்தச மநீஷிகா:| கிமுதேஹாத்மவிஞான
ரஹிதானாம் துராத்மநாம்
||
என்ற பிரமாணங்களை இங்கு
அவசியம் அநுஸந்திக்க
வேண்டும் எம்பெருமான்
ராமக்ருஷ்ணாதியான பல
அவதாரங்களை எடுத்துள்ளான.
தேவர்கள் பலர் வேண்ட
ராமனின் அவதாரம், கோரூபமான
பூமி தேவதேவனான பரமசிவன்
ப்ரஹ்மா மற்றும் தேவர்கள்
வேண்ட க்ருஷ்ணாவதாரம்,
அஸுர சிசுவான பக்த ப்ரஹ்லாதன்
ஒருவன் வேண்ட ந்ருஸிம்ஹவதாரம்
பலர் வேண்டியும் ஒரே
ராமன் தான் அவதரித்தான்.
க்ருஷ்ணனும் அப்படியே.
இஙுகு ஒருவன் ப்ராத்திக்க
பல ந்ருஸிம்ஹவதாரதம்
ப்ரஹ்லாதனின் வார்த்தையை
மெய்ப்பிக்க வேண்டி எல்லா
இடங்களிலும் ந்ருஸிம்ஹ
வேஷம் தரித்தனன்றோ.
ஆக இதற்கு விசேஷம்.
2. வாராஹ ந்ருஸிம்ஹர்
:
"முனிவர்களே! க்ரமமாக
ந்ருஸிம்ஹருடைய ஸ்தானங்களை
சொல்கிறேன். கேளுங்கள்.
வராஹ ரூபத்தை எடுத்த
தன் பத்தினியான பூமி
தேவியை தாங்கிக் கொண்டு
வேத மலையின் கீழ் புறத்தில்
இருக்கிறார்.
3. மாலோல ந்ருஸிம்ஹர்
:
அந்த வேதமலையின் உன்னதமான
தலை பாகத்தில் தென் முகமாக
ஸ்ரீ ந்ருஸிம்ஹர் விளங்குகிறார்.
இந்த ஆலயத்தின் ஈசான்ய
பாகத்தில் கனக நதி என்ற
தடாகம் உள்ளது. அதிலிருந்து
எப்பொழுதுமே தாரை பிரவஹித்துக்
கொண்டே உள்ளது. வற்றாமல்
ஜலம் பெருகுகிறது என்கிற
ரீதியில் அழகாயும் மதுரமாயும்
நிர்மலமாயும் மனத்தை
கவரக் கூடிய வகையில்
அமைந்துள்ளது தெளிந்த
தண்ணீர்.
(ஸ்ரீமத்
அழிகிய சிங்கர்கள் அஹோபிலத்துக்கு
எழுந்தருளும் சமயங்களில்
அந்த கனக நதியில் நீராடி
ஜபம் முதலிய அநுஷ்டானங்களை
முடித்துக் கொண்டு ஸ்ரீமாலோலனை
மங்களா சாசனம் செய்வது
வழக்கம்). இந்த காட்சியை
எபோதும் பார்த்தவண்ணம்
இருக்கும்படி ஆனந்தத்தை
அளிக்கிறது இந்த நதி.
அங்கு மஹாலக்ஷ்மிக்கு
ஏற்றத்தைக் கொடுத்திருக்கிறார்
பகவான். ஆகையால் லக்ஷ்மி
ஸ்தானம் என்று அதை உலகம்
கூறுகிறது. 'லக்ஷ்மிகுடி',
'அம்மவாருகுடி' என்று
அங்கு இப்பொழுதும் பிரஸித்தி
உண்டு.
"நாரத முனிவரே
! முன்பு கருட மலையின்
மகிமையை தேவரீர் அருளிச்
செய்தீர். இப்பொழுது
வேத மலை என்று சொல்லுகிறீர்.
இந்த பெயர் இதற்கு எப்படி
உண்டாயிற்று? ஒரே மலைக்கு
பல பெயர்கள் ஏற்பட்டனவா?
அல்லது வெவ்வேறு மலைகளா?
இந்த சந்தேகத்தை தீர்க்க
வேண்டும்" என்றனர் முனிவர்கள்.
நாரதர், "மலைகளுக்குள்
சிறந்ததான இந்த மலைக்கு
கருடாசலம் என்றுதான்
பெயர். இதன் சில பகுதிகளுக்கு
வெவ்வேறு பெயர்கள் ஒவ்வொரு
காரண வசத்தால் உண்டாயின.
முன்பு கிருதயுகத்தில்
சோமகன் என்ற கொடிய
அசுரன் வேதங்களைப் பிரம்மாவிடமிருந்து
திருடிக்கொண்டு சென்று
விட்டான். சுவடி இழந்த
கணக்கன் போல் கலக்கம்
அடைந்தார் பிரம்மா. மூன்று
உலகமும் என்ன செய்வதென
அறியாமல் குழப்பம் அடைந்தன.
எங்கும் வேதாத்யயனம்
இல்லை, வஷட்காரம் இல்லை,
அக்கினிஹோத்ரம் முதலிய
நற்செயல்களும் நடைபெறவில்லை.
வர்ணதர்மம், ஆசிரம தர்மம்
எல்லாம் அழிந்துவிட்டன.
அவரவர் தமக்குத் தோன்றியபடி
வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டனர்.
அப்பொழுது மாறாடிக்
கிடக்கும் உலகத்தைக்
கண்ட பகவான், 'ஐயோ!' என்று
அருள் புரிந்து, சோமகன்
என்னும் ராக்ஷஸனைக் கொன்று
வேதங்களை மீட்டுக் கொடுத்தார்
பிரம்மாவிடம். பிறகு
வேதங்களெல்லாம் ஒன்று
சேர்ந்து ஆலோசிக்கத்
தொடங்கின. 'நமக்கு வேண்டிய
வரத்தைக் கொடுக்கப்
பிரம்ம தேவர் சக்தியற்றவர்.
ஏனெனில், அவரும் நம்மைப்
போல் அழுபவர். ஆக, நாம்
தவம் புரிந்து ஸர்வேச்வரனான
பகவானைக் கண்டு வரம்
பெற வேண்டும். ஒருவரிடமும்
நாம் தோல்வி அடையக்கூடாது.
அனைவரையும் நாம் வெல்ல
வேண்டும். அஸுரர்கள்.
தேவர்கள், மனிதர்கள்,
நாஸ்திகர்கள், புராணங்கள்,
ஸ்ம்ருதிகள், இதிஹாஸங்கள்
இவை மூலமாக நமக்கு எப்பொழுதுமே
பரிபவம் ஏற்படக் கூடாது.
அதற்காக நாம் முயற்சி
செய்ய வேண்டாமா?' என்று
எண்ணி தவம் செய்வதற்குரிய
இடத்தைத் தேடி சென்றன.
"ஒவ்வொரு
காட்டையும் அடைந்தன.
பிறகு அந்த வேதங்கள்
ந்ருஸிம்ஹருடைய இந்த
மலையின் மேல் பாகத்தில்
ஏறிச் சென்றன. இதுதான்
தவத்துக்குரிய ஸ்தலம்
எனத் தீர்மானித்து உக்கிரமான
தவத்தை அங்கே புரிந்தன.
பிரஸன்னரான பகவான், ஜடை
தரித்துத் தவம் புரியும்
வேதங்களைப் பார்த்து,
'உங்களது விருப்பம் என்ன?'
என்று வினவினார். வேதங்கள்,
'எல்லாம் அறிந்த பகவானே!
உலகத்துக்கு நாதனே! எங்களது
விருப்பத்தை நீர் அறியவில்லையா?
எங்களது நன்மை தீமையை
நன்கு அறிந்தும் அறியாதவர்
போல் கேட்கின்றீரே!'
என்றன. பகவான், 'உங்களது
மனத்தில் உள்ள விருப்பத்தை
அறிந்தேன். இந்திரன்
முதலிய தேவர்களாலும்,
அஸுரர்களாலும், மற்றவர்களாலும்
எப்பொழுதுமே உங்களுக்குத்
தீமை உண்டாகாது. உங்கள்
மார்க்கத்தை (வேத மார்க்கத்தை)
தூஷிப்பவர்கள் பாஷண்டிகள்.
உங்களுக்கு முரணான சாஸ்திரம்,
புராணம், இதிகாசம், ஸ்ம்ருதிகள்
முதலியவை எத்தனையேனும்
பிராமணங்கள் ஆகமாட்டா.
எல்லாம் நிர்மூலமாகிவிடும்.
இது முதற்கொண்டு நீங்கள்
இங்கே கடுந்தவம் புரிந்தபடியால்,
இந்த மலையை வேதமலை என்று
இவ்வுலகம் அழைக்கும்'
என்று சொல்லி மறைந்தார்.
இக்காரணத்தால் அது முதற்கொண்டு
இவ்விடத்தை வேதாசலம்
என்று அனைவரும் அழைக்கத்
தொடங்கினார். மஹாலக்ஷ்மியின்
கடாக்ஷம் எப்பொழுதும்
இங்கு விழுகிறபடியால்
பலம், புஷ்பம், கொடி முதலியவை
சூழ இம்மலை விளங்குகிறது.
4. யோகாநந்த ந்ருஸிம்ஹர்
:
மேற்கு பாகத்தில் கீழே
கூறப்பட்ட லக்ஷ்மீ ஸ்தானத்தின்
சமீபத்தில் தென்முகமாக
யோகாநந்த ந்ருஸிம்ஹர்
ஸேவை அளிக்கிறார். பிரஹ்லாதனுக்கு
இவர் யோகப் பயிற்சி
செய்து வைத்தபடியால்,
இவரை யோகாநந்தர் என்று
உலகம் கூற ஆரம்பித்தது.
அந்த மலையின் வாயவ்ய
பாகத்தில் (வட மேற்கில்)
குகையில் யோக ஆனந்த
ரூபியாக இந்த ந்ருஸிம்ஹர்
பிரகாசிக்கின்றார்.
5. பாவன ந்ருஸிம்ஹர் :
உலகத்துக்கே மிக்க பரிசுத்தியை
அளிக்கக் கூடிய பாவனம்
என்ற க்ஷேத்திரம் முன்பு
சொல்லப் பெற்றது. பரத்வாஜர்
என்ற முனுவர் முன்பு
பிரம்மஹத்தியை நீக்கிக்
கொண்ட இடத்தைத்தான்
பாவன க்ஷேத்திரம் என்கின்றனர்.
பெரும் பாதகர்களும் இங்கு
வந்து தமது பாவங்களை
விலக்கிக் கொள்கின்றனர்.
தமது வர்ணம், ஆச்ரமம்
முதலியவற்றுக்குத் தகுந்தபடி
வேலைகளைச் செய்யாமலும்,
ஜாதியிலிருந்து ப்ரம்சம்
வரும்படியான செயல்களைச்
செய்து கொண்டும், ஸாது
கோஷ்டியில் சேர்க்கப்
படாதவர்களாய் இருந்து
விலக்கப்பட்டவர்களும்
கூட இந்த க்ஷேத்திரத்தை
அடைந்து, இங்குள்ள பகவானை
ஸேவிப்பார்களேயானால்,
அவர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும்
விடுபட்டு எல்லா க்ஷேமங்களையும்
பெறுவர். அத்தகைய மகிமை
பெற்றது இந்த க்ஷேத்திரம்.
6. காரஞ்ச ந்ருஸிம்ஹர்
:
கரஞ்ச விருக்ஷத்திலுள்ள
மூலத்தில் வசிக்கும்
பகவானுக்குக் காரஞ்ச
ந்ருஸிம்ஹர் என்று பெயர்.
இவர் சங்கம், சக்ரம், வில்
முதலிய ஆயுதங்களைத் தரித்திருக்கிறார்.
இந்த க்ஷேத்திரத்துக்குக்
காரஞ்ச க்ஷேத்திரம் என்று
பெயர். பவநாசினி என்ற
நதி இங்கு ஓடுகின்றது.
இங்கு ஸ்நானம் செய்பவர்களும்
ஸ்நானம் செய்ய விரும்புகிறவர்களும்
விரும்பிய பலனைப் பெறுவர்.
உயர்ந்த ஞான ஸம்பந்தத்தைப்
பெற ஆசைப்படுகிறவர்கள்
இங்குள்ள பகவானை ஸேவிக்க
வேண்டும். இங்குள்ள பகவான்
அவர்களுக்கு இஷ்டமான
பலனைத் தந்தருள்வார்.
முன்பு துர்வாஸ மகரிஷியால்
சபிக்கப்பட்ட கபில முனிவர்
சில காலம் இங்கே தவம்
புரிந்தனர். அவர் ந்ருஸிம்ஹ
மந்திரத்தைப் பல நாள்
ஜபித்தார். எல்லாக் கலைகளிலும்
அறிவாளியாகவும் முதன்மை
பெற்று எல்லோராலும்
பூஜிக்கப் பட்டவராகவும்
ஆகவேண்டுமென்று நிச்சயித்து
அந்த மந்த்ரத்தை ஜபித்தார்.
பிறகு பகவான் பிரஸன்னராகி
அந்த முனிவரைப் பார்த்து
ஆதரவுடன், "உம்முடைய தவத்துக்கும்
ஜபத்துக்கும் ஸந்தோஷமடைந்தேன்.
உமக்கு நன்மை உண்டாகக்கடவது.
எல்லாக் கல்விகளிலும்
நிபுணராக விளங்குவீர்.
இது ஸாரம், இது அஸாரம்
என்ற பகுத்தறிவு உமக்கு
உண்டாகக்கடவது. கடைசியில்
வைராக்கியம் அடைந்து
என்னிடத்தில் பக்தி செய்து
என் இடத்தையும் பெறுவீர்.
இது முதற்கொண்டு இந்த
இடத்தில் என்னை வணங்கி,
உயர்ந்த ந்ருஸிம்ஹ மந்த்ரத்தை
ஜபிக்கிறவர்களுக்கு
வேண்டிய பலனை அளிப்பேன்."
என்று முனிவரிடம் கூறி
மறைந்துவிட்டார்.
7. சத்ரவட ந்ருஸிம்ஹர்
:
சத்ரவடம் என்ற க்ஷேத்திரம்
இந்திரன் முதலிய தேவர்களால்
பூஜிக்கப் பெற்று விளங்குகிறது.
இங்கு ந்ருஸிம்ஹர் கிழக்குத்
திசையைப் பார்த்துக்
கொண்டு அனைவரையும் அநுக்கிரகித்துக்
கொண்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான
சித்த கணங்கள் கந்தர்வ
கூட்டங்கள், யக்ஷர்கள்
இந்த க்ஷேத்திரத்திற்கு
வந்து புருஷோத்தமனான
பகவானை பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஹா ஹா, ஹூஹூ என்ற இரண்டு
கந்தர்வர்கள் கான சாஸ்திரத்தில்
தேர்ச்சி பெற்று அனைவரும்
கொண்டாட விளங்குகிறார்கள்.
அவர்கள் அப்படி விளங்குவதற்கு
காரணம் இந்த க்ஷேத்திரத்தில்
உள்ள எம்பெருமானின் அநுக்ரஹம்தான்.
ஒரு சமயம் அவர்கள் மேரு
மலையிலிருந்து இந்த க்ஷேத்திரத்திற்கு
வந்து ந்ருஸிமஹனுக்கு
எதிரில் ஸ்வரத்துடன்
பாடினார்கள். நிஷாதம்,
ரிஷபம், காந்தாரம், ஷட்ஜம்,
மத்யமம், தைவதம், பஞ்சமம்
என்று ஏழு ஸ்வரங்கள்
பிரஸித்தமானவை. அனைவருக்கும்
மங்களத்தைக் கொடுக்கக்
கூடியவை. அந்த ஸ்வர விசேஷத்தை
அறிந்த கந்தர்வர்கள்
பாடியதை தலை சாய்த்து
ஆனந்தத்துடன் கேட்டுக்
கொண்டிருந்த பகவான்
சந்தோஷமடைந்து உயர்ந்த
வரத்தை அளித்தார். "உலகத்தில்
இது முதற்கொண்டு பாடுகிறவர்களில்
சிறந்தவர்களாக நீங்கள்
இருப்பீர்கள். யாரும்
உங்களைப் போல் உலகத்தில்
இருக்க மாட்டார்கள்.
பரத ஸாஸ்த்திரத்தில்
திறமை பெற்ற மஹான்கள்
உங்களை புகழ்வார்கள்."
என்று பகவான் அருளினார்.
8. பார்கவ ந்ருஸிம்ஹர்
:
ஸ்வர்க்கத்தையும் மோக்ஷத்தையும்
கொடுக்கக் கூடிய பார்க்கவம்
என்ற புண்ணிய க்ஷேத்திரம்
ஒன்று உண்டு. இங்கே அக்ஷய
தீர்த்தம் மூன்று உலகங்களையும்
ரக்ஷிக்கக் கூடியதாக
அமைந்திருக்கிறது. இங்கு
மலையில் சமீபத்தில் ந்ருஸிம்ஹர்
வசிக்கிறார். நறுமணமுள்ள
தாமரை, கரு நெய்தல் முதலிய
அழகிய மலர்களால் விளங்கப்
பெற்றது இந்த தீர்த்தம்.
அன்னம் முதலிய பறவைகள்
சூழ்ந்து கொண்டு இந்த
தீர்த்தத்திற்கு அழகை
கொடுக்கும். ஸம்ஸார
ஸாகரத்தில் துன்புறும்
ஜனங்களின் துயரத்தை அழிக்க
வல்லது இந்த தீர்த்தம்.
பலா, கமுகு முதலிய பல மரங்கள்
இந்த தீர்த்தத்தின் கரையில்
சூழ்ந்து கொண்டு வரும்
மக்களுக்கு நிழலைக் கொடுத்து
தாபத்தை போக்குகின்றன.
வனங்களும், உபவனங்களும்
சூழ்ந்தது இந்த தீர்த்தம்.
இந்த தீர்த்தத்தில் மிக்க
பக்தியுடன் பகவானை நினைத்துக்
கொண்டு ஸ்நானம் செய்து,
புலன்களை அடக்கி ஸ்திரமான
மன உறுதியுடன், தேவர்களுக்கெல்லாம்
ஈசனான பகவானை வழி படுகிறவன்
பிரம்மதேவனின் பதவியை
பெறுவான். பூலோகத்திலும்
மற்றுமுள்ள உலகங்களிலும்
ஏற்படும் போகங்கள் அவனுக்கு
அநாயஸமாகவே கிடைக்கும்.
மோக்ஷமும் அவன் கையில்
கிட்டியுள்ளது. இன்றும்
இவ்விடத்தில் பார்கவர்
என்ற முனிவர் திட மனத்துடன்
தவம் புரிகிறார். இங்கு
இஷ்டமான பலனை விரும்பி
இந்த பக்தவத்ஸலனான பார்கவ
முனிவரை துதிப்பவர்களுக்கு
அந்த அந்த பலனைக் கொடுத்து
அநுக்ரஹித்துக் கொண்டு
விளங்குகிறார் இந்த முனிவர்.
இந்த தீர்த்தத்தின் கரையை
அடைந்து இங்கு ஸ்நானம்
செய்து பல நியமனங்களுடன்
வாசமும் செய்து எம்பெருமானை
வணங்கி வழிபட்டார்கள்
வசிஷ்டர் முதலிய மகரிஷிகள்.
இந்த ந்ருஸிம்ஹருடைய
அநுக்ரஹத்தினால் அவரவர்
பதவியையும் பெற்று இன்றும்
ஆனந்திக்கின்றனர்.
9. ஜ்வாலா ந்ருஸிம்ஹர்
:
ஜ்வாலா ந்ருஸிம்ஹர்
எழுந்தருளியிருக்கும்
மற்றொரு க்ஷேத்திரம்
மிக மிக உயர்ந்தது. இங்கு
வந்து ஸேவிப்பவர்களுக்கு
மனத்திலுள்ள கல்மஷத்தையும்
கலக்கத்தையும் நீக்க
வல்லமை பெற்றது. முக்தியையும்
தரக்கூடியது. க்ரஹங்களால்
ஏற்பட்ட கோளாறுகளையும்,
பேய் பிசாசு முதலிய பூதங்களால்
ஏற்பட்ட உபத்திரவங்களையும்
அடியோடு அழிக்கக் கூடியது.
பல மகரிஷிகள் உயர்ந்த
விரதத்துடன், இங்கே இன்றும்
வசிக்கின்றனர். கார்த்திகை
மாதத்தில் மிக்க நியமத்துடன்
நெய் அல்லது எண்ணெய்
கொண்டு தேவ தேவனான பகவானுடைய
ஸந்நிதில் விளக்கை ஏற்றி
வைப்பவன் உடலில் மிக்க
ஒளியையும் அழகையும் பெறுவான்.
பிறரை எல்லா வகையிலும்
வெல்லும் திறமையையும்
பெறுவான். அழியாத ஞான
விளக்கை மனத்தில் ஏற்றிக்
கொள்வான்; பகவானுடைய
சாயுஜ்யத்தையும் பெறுவான்.
ஆசையற்ற பல முனிவர்கள்
இவ்விடத்தில் வந்து இன்னமும்
தவம் புரிகின்றனர். ஒரே
காலத்தில் உதித்த ஆயிரக்கணக்கான
சூரியர்களின் ஒளியைப்
போன்ற ஒளியை உடையவராக,
மின்னல் போல் தோற்றமளிப்பவராக,
தமது கண்களிலிருந்து
உடனாகவே நெருப்பை கக்குகிறவராக,
மின்னல் கூட்டம்போல்
பரவிய பிடரி மயிர்களால்
பார்ப்பவர்களுக்கு அச்சத்தை
விளைவிப்பவராக, பயங்கரமும்,
அழகியதுமான திருமேனியை
உடையவராக தீக்ஷணமான நகங்களோடும்,
நீண்ட அநேக புஜங்களோடும்
கூடியவராக ஹிரண்யகசிபு
என்றஅசுரத் தலைவனை கைகளால்
பிளந்து கொண்டு அழக்குடம்பற்றவருமாக
வீற்றிருக்கும் ந்ருஸிம்ஹரை
வணங்குகிறோம். இந்த
ந்ருஸிம்ஹரே ஜ்வாலா ந்ருஸிம்ஹர்.
உத்யத்பாஸ்வத்ஸஹஸ்ரப்ரபம்
அசநிபம் ஸ்வேக்ஷணைர்
விஷ்கிரந்தம் வஹ்நீநஹ்நாய
வித்யுத்ததிவித திஸடா
பீஷணம் பீஷணைச்ச | திவ்யைராதீப்த
தேஹம் நிசித நகலஸத்பாஹூதண்டைர
நேகை : ஸம்பிந்நம்பிந்நதைத்
யேச்வரதநுமதநும் நாரஸிம்ஹம்பஜாம
: || இவ்வாறு ஒன்பது ந்ருஸிம்ஹர்கள்
எழுந்தருளிறிருக்கும்
க்ஷேத்திரங்களின் மகிமை
சொல்லப்பட்டது. இந்த
ந்ருஸிம்ஹரால் அதிஷ்டானம்
செய்யப் பெற்ற க்ஷேத்திரங்கள்
ஆயிரக்கணக்கில் உள்ளன.
இந்த க்ஷேத்திரங்கள்
யாவும் ஸ்வயம்பூ க்ஷேத்திரங்கள்.
ஆங்காங்கே லக்ஷ்மீ ந்ருஸிம்ஹர்
பூமியிலிருந்து தாமாகவே
பிளந்து கொண்டு ஒரு
விலக்ஷணமான மூர்த்தியுடன்
கிளம்பினவர். இதுதான்
இங்கு மகிமைக்குக் காரணம்.
இப்படி இந்த எம்பெருமானுடைய
வைபத்தையும் இந்த க்ஷேத்திரத்தின்
பெருமையையும் எவர் கேட்கிறார்களோ,
சொல்லுகிறார்களோ, அவர்கள்
உயர்ந்த பயனைப் பெறுவர்;
ஐஸ்வர்யம், ஸந்தானம்,
ஆயுஸ் முதலிய நற்பயனை
அவசியம் பெறுவர். கடைசியில்
ஸாயுஜ்யத்தையும் பெற்று
மகிழ்வர். இப்படி இந்த
ஒன்பது ந்ருஸிம்ஹர்களையும்,
க்ஷேத்திரங்களையும்
தினந்தோறும் காலையில்
அநுஸந்திக்க வேண்டும்.
இப்படி நினைப்பவர் நல்ல
பலனைப் பெற்று மகிழ்வர்.
"பக்ஷீந்திரம் ப்ரோத்ரஸம்ஜ்ஞம்
ஜலநிதிதநயா ஸம்ஜ்ஞிதம்
யோகஸம்ஜ்ஞம் காரஞ்ஜம்
க்ஷேத்ரவர்யம் பலிதபலசயம்
சத்ரபூர்வம் வடம் ச | ஜ்வாலாக்யம்பார்கவாக்யம்பகவத
பிமதம்பாவிதம் யோகிவர்ய
: புண்யம் தத் பாவநாக்யம்
ஹ்ருதி ச கலயதாம் கல்பதே
ஸத்பலாய ||"
*****
Chapter-5
|