ஐந்தாம் அத்யாயம்
நாரத
முனிவரை பார்த்து முனிவர்கள்,
"நாரத மகரிஷியே! அஹோபில
க்ஷேத்திரத்தின் மகிமையை
எங்களுக்கு தேவரீர் விசதமாக
எடுத்துக் கூறினீர்.
நாங்கள் கேட்டு ஸந்தோஷமடைந்தோம்.
ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹன்
எழுந்தருளியிருக்கும்
க்ஷேத்திரங்களின் பெயர்களையும்
கேட்டு மகிழ்ந்தோம்.
அந்த ந்ருஸிம்ஹர் கம்பத்தில்
எப்படிப் ப்ராதுர்ப்பவித்தார்?
தகப்பனான ஹிரண்யகசிபுவுக்கும்
புதல்வனான பிரஹ்லாதனுக்கும்
ஏன் விரோதம் உண்டாயிற்று?
இந்த கதையை விஸ்தாரமாகத்
தேவரீரிடமிருந்து கேட்க
விரும்புகிறோம்" என்றனர்.
நாரத பகவான் கூறலானார்:
வைகுண்ட லோகம் என்று
ஓர் உலகம் உண்டு. பிரகிருதி
மண்டலத்தில் கார்ய வைகுண்டம்
என்று பெயர் பெற்ற லோகம்
வேறு. இங்கும் ஸ்ரீதேவி,
பூமிதேவி, நீளாதேவி என்ற
மூன்று தேவிமாருடன் மகாவிஷ்ணு
எழுந்தருளியிருக்கிறார்.
பக்தர்களாலும் பாகவதர்களாலும்
துதிக்கப்பட்டவராயும்
அளவிட முடியாதவராயும்
இருக்கிறார். ஒரு சமயம்,
பிரம்மாவின் மானஸ புத்திரர்களான
ஸனகர், ஸனந்தனர், ஸனத்குமாரர்,
ஸனத்சுஜாதர் என்ற நால்வரும்
அந்த உலகத்துக்கு மகாவிஷ்ணுவை
நமஸ்கரிக்க வந்தனர்.
அவர்கள் எப்போதுமே எம்பெருமானிடத்தில்
ஈடுபட்டவர்கள் பரப்பிரம்மத்தைத்
தியானம் செய்துகொண்டே
இருப்பவர்கள். பிறந்தது
முதற்கொண்டு பகவானின்
அருளால் நல்லறிவு பெற்றவர்கள்.
தங்களுக்காக எந்த வேலையும்
செய்பவர்களல்லர். பகவானுடைய
உகப்புக்காகவே கர்மங்களைச்
செய்பவர்கள். அவர்கள்
எங்கும் தடையற்றுச் செல்பவர்கள்.
வைகுண்ட லோகத்தின்
நடுவில் ஒரு கோவில்
உள்ளது. அது பகவானின்
வசிக்கும் இடம். நவரத்தினங்களால்
செய்யப்பட்டது. தங்கமயமான
மதிள் சுவர்களுடன் கூடியது.
ஒவ்வொரு திசையிலும்
த்வஜபடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
மணிமயமான அழகிய பல கோபுரங்களுடன்
கூடியது. கல்ப விருக்ஷங்களால்
சூழப்பட்டது. சாரிகை,
சுகம் முதலிய பறவைகள்
எப்போதும் அங்கு குடி
கொண்டிருக்கும். பகவானுடைய
அந்த கோவிலுக்குள் சென்று
எம்பெருமானை ஸேவிக்க
விரும்பி இவர்கள் உள்ளே
சென்றனர்.
அப்போது
ஜயன் விஜயன் என்ற இரண்டு
காவற்காரர்கள் ஸனகாதிகளை
உள்ளே நுழைய விடாமல்
தடுத்து விட்டனர். இந்தக்
காவற்காரர்கள் உயர்ந்த
புண்ணியங்களை செய்து
இந்த பதவியை பெற்றவர்கள்.
இவர்கள் தடுத்ததைக் கண்டு
மிகச் சினங் கொண்டு,
ஸனகாதி யோகிகள் இவர்களை
சபித்து விட்டனர். "எதிலும்
ஆசையற்றுப் பகவானையே
தியானம் செய்யும் எங்களை
காரணமின்றி ஏன் தடுத்தீர்கள்?
கெட்ட அபிப்ராயத்துடன்
வருபவர்களைத் தடுப்பதற்கன்றோ
உங்களை இந்த ஸ்தானத்தில்
வைத்திருப்பது? குற்றமற்ற
எங்களை நீங்கள் தடுத்தபடியால்
பெரிய பாவம் செய்தவர்களாகிவிட்டீர்.
எனவே அசுரப் பிறவியை
அடைந்து துன்புற வேண்டும்"
என்று சபித்தனர்.
அந்த
சமயத்தில், பெருமாள்
பரபரப்புடன் கைகளை உதறிக்
கொண்டு, மடியிலுள்ள
மகாலக்ஷ்மியையும் விட்டு
இவர்களருகில் வந்தார்.
இந்த யோகிகளைப் பார்த்து,
"இதோ அர்க்யம் ஸமர்ப்பிக்கிறேன்,
பாத்யம் ஸமர்ப்பிக்கிறேன்,
ஆசமனீயம் ஸமர்ப்பிக்கிறேன்.
இந்த ஆசனத்தில் அமர வேண்டும்"
என்றெல்லாம் சொல்லி
உபசரித்தார். இதைக் கண்டதும்
முனிவர்கள் பயமடைந்தனர்.
மிகவும் வேகத்துடன் பகவானை
வணங்கினர்.
எல்லாமறிந்த
பகவான் முனிவர்களைப்
பார்த்து, நீங்கள் ஸுகமாக
வாழ்கிறீர்களா? ஸத்துவகுணம்
பொருந்திய உங்களை நாங்கள்
உபசரிக்க வேண்டும். எங்களுக்கு
நீங்கள் குருக்கள்; எங்களை
ரக்ஷிக்கிறவர்கள். எங்களது
நன்மைக்குக் காரணம் நீங்கள்தாம்.
உங்களது அநுக்கிரகத்தினால்
மூவுலகமும் க்ஷேமமடைகிறது.
மனைவி, புத்திரர், பந்துக்கள்,
வேலைக்காரர், தேவர்களுக்கு
உயர்ந்த பதவி முதலிய
நன்மைகள் ஆகிய யாவும்
உங்களது திருவருளால்தான்
உண்டாகின்றன; இதில் ஐயமே
இல்லை. என் விருப்பம்
நிறைவேறுவதற்கும் நீங்கள்
தாம் காரணம். பெரும் பாக்யம்
! பெரும் பாக்யம்! உங்களை
தரிசித்ததனால் நான் தன்யனானேன்.
என் இல்லத்தை நீங்களாக
வந்து அநுக்கிரகித்ததற்கு
நான் உங்களுக்கு என்ன
செய்ய முடியும்?" என்று
பகவான் கூறினார். இதைக்
கேட்டதும் அந்த யோகிகளுக்கு
வெட்கம் ஏற்பட்டுத் தலைகுனிந்தனர்.
மேலும் சொன்னார்கள்
:
"இறைவனே! எங்களது குற்றத்தைப்
பொறுத்தருள வேண்டும்.
தேவரீருடைய காவற்காரர்களை
அறிவின்மையால் சபித்துவிட்டோம்.
நன்கு படித்தவர்கள் இம்மாதிரி
சாபங்களை கொடுக்க மாட்டார்கள்.
மூடர்கள்தாம் கோபமடைவார்கள்.
அதைத் தாங்க முடியாமல்
சபிப்பார்கள். உடலிலும்
கண் முதலிய புலன்களிலும்
அபிமானம் உள்ளவர்களுக்குத்தான்
இப்படி ஏற்படும். நல்ல
அறிவு பெற்றவர்கள் எதையும்
பொறுத்துக் கொள்வார்கள்.
காமம், கோபம், முதலிய
துர்குணம் உள்ளவனுடைய
மனத்தில் பகவான் வசிக்கமாட்டார்.
அழுக்கடைந்த தண்ணீரில்
அன்னம் எப்படிக் குடியிருக்கும்?"
என்று பலவாறாகத் தங்களது
தாழ்மையை கூறி பகவானை
சரணடைந்தனர்.
பகவான்,
"முனிவர்களே! இந்த துவாரபாலகர்களுக்கு
உங்கள் மூலமாக உயர்ந்த
ஓர் அநுக்கிரகம் கிடைத்தது.
நீங்கள் சபித்தபடியே
மூன்று பிறவிகளில் இவர்கள்
எனக்கு விரோதிகளாக பிறப்பார்கள்.
பிராம்மணர்களான உங்கள்
வாக்கு பொய்யாக மாட்டாது"
என்று சொல்லி, அவர்களைத்
தேற்றி, அந்த துவாரபாலகர்
மேலே செய்ய வேண்டிய காரியகர்மத்தையும்
காட்டி அங்கு அப்போதே
மறைந்துவிட்டார். யோகியரும்
பகவானுடைய பேச்சை நினைத்து
உருகி மயிர் கூச்சமுற்று
தங்களது இல்லத்தை அடைந்தனர்.
ஜயன்
விஜயன் என்ற இரண்டு காவற்காரர்களும்,
ஹிரண்யகசிபு, ஹரண்யாக்ஷன்
என்ற அசுரர்களாகப் பிறந்தார்கள்.
அவர்கள் உலகத்தை நடுங்க
செய்தனர். பயங்கரமான
ரூபத்தை பெற்றனர். தேவர்களைக்
கலங்க செய்தனர். பிரம்மாவை
தவத்தினால் ஆராதித்தனர்.
அவர் கொடுத்த வரத்தினால்
கர்வம் கொண்டனர். ஹிரண்யாக்ஷன்
மிகவும் பலவானாக இருந்தான்.
வராகரூபம் எடுத்து பகவான்
அவனை கொன்றான்.
ஹிரண்யகசிபு
என்பவன் மிக்க புத்திமானாக
இருந்து, பிரம்மாவை ஆராதித்து
வரம் பெற்று, எல்லோரையும்
அடக்கினான். அவனது வீரியத்தைக்
கண்டு அனைவரும் அஞ்சினர்.
அவன் மூன்று லோகத்தையும்
வென்றான். தேவர்களையும்
அசுரர்களையும் கந்தர்வர்களையும்
அடக்கி ஆண்டான். அவன்
சொன்னான் -- "நானே ஈச்வரன்,
எல்லாப் போகங்களையும்
நானே அநுபவிப்பவன். ஸித்தியைப்
பெற்றவனும் நானே. மிக்க
பலம் கொண்டவனும் நானே.
பணக்காரனும், உயர்ந்த
குலத்தில் பிறந்தவனும்
நானே. எனக்கு நிகர் யாரும்
இலர். விஷ்ணு, பிரம்மா,
சிவன் எல்லாம் நானே. படைப்பதும்,
காப்பதும், அழிப்பதும்
எல்லாம் என்னுடைய தொழில்.
விஷ்ணுவும் நான்முகனும்
ஈச்வரனும் வேறு இருக்கிறார்கள்.
அவர்கள்தாம் முத்தொழிலுக்கும்
காரணம் என்று சொல்வது
மூடர்களின் பேச்சு. நமக்கு
எல்லாவிதத்திலும் திறமை
இருக்க பிறரை ஏன் துதிக்க
வேண்டும்? மற்றொரு தேவதையை
முன்னிட்டு அக்னிஹோத்ரம்
முதலியவற்றை செய்ய வேண்டாம்.
வேதாத்யயனம், வஷட்காரம்,
வேள்வி முதலியவற்றை யாரும்
செய்யக்கூடாது. என்னை
உத்தேசித்தே எல்லா வேலைகளையும்
செய்ய வேண்டும். வேள்விகளில்
கொடுக்கும் ஹவிர்பாகத்தை
நானே பெறுவேன். பயனைக்
கொடுப்பவனும் நானே.
பகவானையோ, நான்முகனையோ,
பரமசிவனையோ ஆராதிக்க
விரும்பி வேள்விகளைச்
செய்பவர்களை விரட்டியடிக்க
வேண்டும் என்று."
இப்படி
சொல்லி, இந்த அசுரன்
பூமி அனைத்தையும் ஆண்டு
வந்தான். இவனது பயத்தால்
தேவதைகளும், இந்திரனும்
மனம் கலங்கித் தங்கள்
குருவான பிருகஸ்பதியை
சரணமடைந்தனர். குலகுருவான
பிருகஸ்பதி இந்திரனை
பார்த்து "பாற்கடலின்
வட பாகத்தில் கேசவன்
எழுந்தருளியிருக்கிறார்.
அந்த மகாவிஷ்ணுவை நீங்கள்
எல்லோரும் சேர்ந்து
துதிப்பீர்களாக. உங்களது
துதிக்கு மகிழ்ந்து அவர்
அந்த அசுரனை கொல்ல வழி
வகுப்பார்" என்றார்.
தேவர்கள்
இதை கேட்டு சந்தோஷித்து
பாற்கடலுக்கு சென்றனர்.
உயர்ந்த திதியிலும்,
தினத்திலும், லக்னத்திலும்,
ஸ்வஸ்தி மங்களங்களை கூறி
பரமசிவனை முன்னிட்டு
கொண்டு பலவிதமான ஸ்தோத்திரங்களினால்
பகவானை பூஜித்தார்கள்.
பரமசிவனும் மிக்க பக்தியுடன்
பகவானான ஜனார்த்தனனை
புண்ணிய நாமங்களை கொண்டு
ஸ்தோத்திரம் செய்தார்.
"எல்லா
பொருளிலும் நீர் பரவியிருக்கிறீர்.
நீர் எல்லோரையும் வெல்பவர்.
வேள்வியும் நீர், அதற்கு
தேவதையும் நீர். அதை காப்பாற்றுபவரும்
நீர். எல்லாவற்றுக்கும்
காரண பொருளும் அழிப்பவரும்
நீர், உலக நாயகனும் நீர்,
நீர் செந்தாமரைக் கண்ணன்;
சந்தோஷத்தை அளிப்பவர்;
பாற்கடலில் வாஸம் செய்பவர்;
எல்லோராலும் பூஜிக்கப்
பெறுபவர். ஈச்வரனும்
நீர், செயல்களில் தூண்டுகிறவரும்
நீர், பாவத்தை அழிப்பவர்;
அஞ்ஞானத்தை நீக்குகிறவர்;
லக்ஷ்மீகாந்தன். தேவர்களால்
நமஸ்கரிக்கப் பெறுபவர்.
யாகம், வஷட்காரம், ஓங்காரம்,
அக்னி, ஸ்வாஹா, ஸ்வதா, ஸுதா
எல்லாம் நீர். உத்தம புருஷரும்
நீரே. எல்லாத் தேவர்களுக்கும்
அதிபரான மகாவிஷ்ணுவான
உம்மை நமஸ்கரிக்கிறேன்"
என்று பலவகையாகப் பார்வதிபதியான
பரமசிவன் துதித்தார்.
விஷ்ணுர்
ஜிஷ்ணுர் விபுர்யஜ்ஞெள
யஜ்ஞேசோ யஜ்ஞபாலக; |
ப்ரபவிஷ்ணுர்
க்ரஸிஷ்ணுச்ச லோகாத்மா
லோகநாயக : ||
மோதக: புண்டரீகாக்ஷ:
க்ஷீராப்திக்ருத கேதந:
|
பூஜ்ய: ஸுராஸுரைரீச: ப்ரேரக:
பாபநாசந: ||
வைகுண்ட: கமலாவாஸ:
ஸர்வதேவநமஸ்க்ருத :|
த்வம்
யஜ்ஞஸ் த்வம் வஷட்காரஸ்
த்வமோங்கார த்வமக்நய:|
த்வம்
ஸ்வாஹா த்வம் ஸ்வதா தேவஸ்
த்வம் ஸுதா புருஷோத்தம:|
நமோ
தேவாதிதேவாய விஷ்ணவே
சாச்வதாய ச||
அநந்தாயாப்ரமேயாய
நமஸ்தே கருடத்வஜ |
இதி
ஸ்தோத்ரம் மஹச் சக்ரே
பகவாந் பார்வதீபதி:||
பகவான்,
"தேவர்களே! என்னை எதற்காக
நீங்கள் துதிக்கிறீர்கள்?
மகாத்மாவான பரமசிவன்
என்னைத் துதித்ததற்கு
காரணம் என்ன? அதைச் சொன்னால்
எல்லாவற்றையும் முடித்துத்
தருகிறேன்" என்றார்.
தேவர்கள்,
"தேவதேவனே! புலன்களை வெல்லுபவனே!
செந்தாமரைக் கண்ணனே,
மாதவனே! எல்லாவற்றையும்
நீர் அறிந்திருக்கிறீர்.
தெரிந்தும் எங்களைக்
கேட்கிறீர்" என்றார்கள்.
பகவான்,
"தேவர்களே! உங்களது வரவையும்
அதன் காரணத்தையும் நன்கு
அறிவேன். ஹிரண்யகசிபுவை
அழிப்பதற்காக உங்களால்
துதிக்கப் பெற்றேன்.
உயர்ந்த புண்ணிய நாமங்களால்
பரமசிவனாலும் துதிக்கப்
பெற்றேன். மிகச் சந்தோஷமடைந்தேன்.
பரமசிவன் செய்த ஸ்தோத்திரத்தைக்
கொண்டு எவனொருவன் தினந்தோறும்
என்னைத் துதிக்கிறானோ,
அவனால் பூஜிக்கப் பெற்று
நான் எல்லா நன்மைகளையும்
அவனுக்கு அளிப்பேன்."
என்று சொல்லி, பரமேச்வரனைப்
பார்த்து, "நான் சந்தோஷமடைந்தேன்.
நீர் கைலாசம் செல்வீராக.
ஹிரண்யகசிபுவை நான் ஸம்ஹரிக்கிறேன்.
தேவர்களும் அவரவர்களின்
இடத்தை அடையட்டும். தேவசத்ருவான
அந்த அசுரனை ஸம்ஹரிக்க
நான் வழி வகுக்கிறேன்"
என்று கூறி மறைந்தார்.
தேவர்களும் சென்றனர்.
தன் காலத்தை எதிர்பார்த்துக்
கொண்டான் பகவான்.
ஹிரண்யகசிபு
பிராம்மணர்களைத் துன்புறுத்தினான்,
தன் புஜபல பராக்ரமத்தைக்
கொண்டு பூமியை ஆண்டான்.
வைதிக ஆசாரம் அடியோடு
சூனியமாகிவிட்டது. பிரம்மாவின்
உயர்ந்த வரத்தால் கர்வமடைந்த
அசுரராஜன் இந்திரனையும்,
சிவனையும், விஷ்ணுவையும்,
பிரம்மாவையும், மதிக்கவேயில்லை.
மனிதர்களை அவன் எப்படி
மதிப்பான்?
*****