ஆறாம் அத்யாயம்
மகரிஷிகள்
கேட்கின்றனர் -- நாரதமுனிவரே!
புருஷோத்தமனான பகவான்
அந்த ஹிரண்யகசிபுவை எப்படி
வதம் செய்தான்? நான்முகக்
கடவுள் கொடுத்த வரத்தை
அவன் எப்படிக் காப்பாற்றினான்?
தந்தையான ஹிரண்யகசிபுவுக்கும்
புதல்வனான ப்ரஹ்லாதனுக்கும்
எப்படிப் பெரிய பகை உண்டாயிற்று?
இந்த விஷயங்களை விஸ்தாரமாகக்
கூறவேண்டும்.
நாரதர்
கூறுகிறார் - கச்யபப்
பிரஜாபதியின் புதல்வனும்,
தேவர்களிடத்தில் த்வேஷம்
கொண்டவனுமான ஹிரண்யனுக்கு
நான்கு புதல்வர்கள் உண்டானார்கள்.
அநுக்ஹ்லாதன், ஹ்லாதன்,
ஸம்ஹ்லாதன், ப்ரஹ்லாதன்
என்று. சரீர பலத்தாலும்,
மனோ பலத்தாலும், மற்றக்
குணங்களாலும் இவர்கள்
உயர்ந்தவர்களாக இருந்தனர்.
ப்ரஹ்லாதன் இவர்களில்
எல்லா விதத்தாலும் மேன்மை
பெற்றவன்; தர்மம் அறிந்தவன்,
நீதி மார்க்கத்தில் செல்பவன்,
அஸுர வம்சத்தை மேல் மேல்
சந்ததிகளால் வளர்த்தவன்.
எல்லோரிடத்திலும் ஸமமான
பற்றுதலை உடையவன். பகவானிடத்தில்
பக்தியை செலுத்துபவன்.
அவன் பால்யத்திலேயே விவேகமுள்ளவனாக
இருந்தும், ஆசார்யனிடத்திலுள்ள
கெளரவத்தால் குருவின்
இல்லத்தில் மிக்க சந்தோஷத்துடன்
பாடங்களைக் கற்க ஆரம்பித்தான்.
சில
காலம் சென்றதும் குருவுடன்
ப்ரஹ்லாதன் தந்தையின்
வீட்டிற்குச் சென்றான்;
குடிவெறியினால் மதம்
பிடித்த தந்தையின் கால்களில்
விழுந்து வணங்கினான்.
தந்தை புதல்வனைக் கைகளால்
அணைத்து நிற்க வைத்தான்.
பிறகு தர்மம் அறிந்த
பிரஹ்லாதனைப் பார்த்து,
"குழந்தாய்! இது வரையில்
உன் ஆசார்யன் கற்பித்த
விஷயங்களில் எது மிகவும்
ஸாரமானதோ அதை எனக்கு
சொல்ல வேண்டும்" என்று
கேட்டான்.
ப்ரஹ்லாதன்,
"தந்தையே! உமது உத்தரவின்
பேரில் நான் அறிந்த ஸாரத்தைக்
கூறுகிறேன். வெகு நாளாக
என் மனத்திலேயே நிலையாக
இருந்து வந்தது இதுதான்.
ஆதியும், நடுவும், அந்தமும்
இல்லாததும், அழிவற்றதும்,
ஏற்றச் சுருக்கம் இல்லாததும்,
எல்லா உலகத்துக்கும்
முதற் காரணமுமானதும்,
எப்பொழுதும் ஆனந்த ரூபமுமான
பரப்ரஹ்மத்தை வணங்குகிறேன்."
என்றான்.
இதைக் கேட்டதும்
ஹிரண்யன் கோபத்தால்
கண்கள் சிவக்க, உதடுகள்
துடிக்க, எதிரில் வணக்கத்தோடு
நின்ற குருவைபார்த்து,
"ஆசார்யரே! என்ன அநியாயம்?
மூடனான என் புதல்வன்
எனக்கு எதிரியான ஹரியின்
நாமத்தை சொல்லி புகழ்கிறானே!
எப்பொழுதும் சிறு குழந்தைகள்
அறிவில்லாமையால் மூடர்களாக
இருப்பர். உம்மால் சிக்ஷிக்கபட்டு
அவன் பெருமூடனாகிவிட்டான்"
என்றான்.
குரு-அஸுரசிரேஷ்டரே!
காரணமில்லாமல் என்னிடத்தில்
கோபம் கொள்ள வேண்டாம்.
நான் பள்ளியில் சொல்லும்
வார்த்தைகளில் எதையும்
உமது புதல்வன் சொல்வதில்லை.
ஹிரண்யன்
- ப்ரஹ்லாதனே! உன் குரு
என்னால் கற்பிக்கப் பட்டதன்று
இந்த வார்த்தை என்கிறார்.
அப்படியிருக்க யார் உனக்கு
இதை கற்பித்தது?
ப்ரஹ்லாதன்
- எல்லா உயிர்களுடைய உள்ளத்திலும்
பகவானான நாராயணன் வாஸம்
செய்கிறான். அந்த பரம்பொருளைத்
தவிர வேறு யாரால் எவன்தான்
கற்பிக்கப்பட முடியும்?
அந்த பகவானை விட்டு எவனும்
ஒருவராலும் பூஜிக்கப்
பெறமாட்டான். அவனை அல்லவா
நாம் ஆராதிக்க வேண்டும்?
ஹிரண்யன்-மூவுலகுக்கும்
ஈச்வரனாகவும் பர்த்தாவாகவும்
நான் இருக்க, என்னை விட்டு
விஷ்ணு என்று ஒருவன்
உள்ளதாக ஏன் வீணாக நினைத்துக்
கொண்டிருக்கிறாய்?
ப்ரஹ்லாதன்-ஸூக்ஷ்மம்
அறிந்தவனும், எங்கும்
பரவியவனும், ஒருவராலும்
அறியப்படாதவனும், தன்னையே
தரும் கற்பகம் போன்றவனும்
சொற்களால் சொல்லப்படாதவனும்
உலகங்கள் எல்லாவற்றிலும்
பரந்து இருப்பவனுமான
பகவானே மகாவிஷ்ணு. அவன்
தான் ஈச்வரன்.
ஹிரண்யகசிபு
- அந்தப் பெருமூர்க்கனான
என் புதல்வன் அஸமஞ்ஜஸமான
பேச்சுக்களை பேசுகிறான்.
துராத்மாவான இவன் மனத்தில்
எவனோ ஒரு விஷ்ணு இருக்கிறான்.
இது நிச்சயம்.
ப்ரஹ்லாதன்
- தந்தையே, என் மனத்தில்
மாத்திரம் பரமேச்வரன்
இருக்கிறான் என்று நினைக்க
வேண்டாம். உம்முடைய மனத்திலும்
மற்றுமுள்ளர்களின் ஹ்ருதயத்திலும்
அவன் வாஸம் செய்கிறான்.
ஹிரண்யன்
- துஷ்டனான ப்ரஹ்லாதனை
வெளியேற்றுங்கள் இவனைச்
சிக்ஷிக்கவேண்டும். என்
விரோதியான மகாவிஷ்ணுவை
இவன் துதிக்கிறான். இந்த
வார்த்தை யாரால் உண்டு
பண்ணப்பட்டது?
இப்படி
ஹிரண்யன் கூறியதும்,
மூடர்களான அசுரர்கள்
தர்மமார்க்கத்தில் சென்ற
ப்ரஹ்லாதனைக் குருவின்
வீட்டிற்கு அழைத்துச்
சென்றனர். அங்கே அவன்
பல நீதி நூல்களை கற்றுக்
கொண்டான்.
வெகு காலம்
சென்றது. ஹிரண்யன் தன்
புதல்வனை அழைத்து வரச்
சொன்னான். புத்திரனைக்
கண்டதும் "ஓர்அழகிய ச்லோகத்தைச்
சொல்" என்று கேட்டான்.
ப்ரஹ்லாதன்
சொல்லத் தொடங்கினான்
:-
எவனிடமிருந்து பிரகிருதி,
ஜீவாத்மா, பிரபஞ்சம்
உண்டாயிற்றோ, அந்த தேவன்
எல்லாவற்றுக்கும் காரணக்
பொருள். அவன் அருள்புரிய
வேண்டும்.
இதைக் கேட்ட
ஹிரண்யன் கடுஞ்சினம்
கொண்டு "இவனை கொல்லுங்கள்!
இவனது பிழைப்பு வீண்.
தன் குலத்தையே அழிக்கக்
கூடியவன் இவன்" என்றான்.
இதைக்
கேட்டதும் அசுரர்கள்
ஆயிரக் கணக்கில் ஒன்று
சேர்ந்து, நெருப்பை உமிழ்கின்ற
பல பாணங்களால் அவனை அடித்தனர்.
ப்ரஹ்லாதன்,
"அசுரர்களே! உங்களிடத்திலும்
என்னிடத்தலும் இந்தப்
பாணங்களிடத்திலும் பகவான்
விஷ்ணு உட்புகுந்திருக்கிறான்.
இது உண்மை. ஆகையால் இந்த
பாணங்கள் என்னை துன்புறுத்த
மாட்டா" என்றான்.
இப்படி
அவன் கூறியதைப் பொருட்படுத்தாமல்
அசுரர்கள் ஆயுதபாணிகளாக
ப்ரஹ்லாதனை சூழ்ந்து
மிகக் கோபம் கொண்டு
அடித்தனர்.
ஹிரண்யன்
- ப்ரஹ்லாதனே! சத்ருவின்
பேச்சை விடு. குழந்தாய்!
உனக்கு அபயம் கொடுக்கிறேன்.
இந்த மடத்தன்மை உனக்கு
எப்படி வந்தது?
ப்ரஹ்லாதன்
- எல்லாப்பிராணிகளுக்கும்
முதல்வனான மகாவிஷ்ணு
என் மனத்தில் நிலைத்திருக்க
எனக்கு எங்கே பயம் உண்டாக
போகிறது? பிறப்பையும்
முதுமையையும் நீக்க வல்ல
பகவான் இருக்க, எவனுக்கு
ஆபத்து உண்டாகும்?
ஹிரண்யன்,
"காலகூடம் போன்ற விஷயத்தைக்
கக்குகிற ஸர்ப்பங்களே!
உலகத்துக்குப் பாரமாக
இருக்கும் இந்த ப்ரஹ்லாதனை
சீக்கிரமாகக் கடித்து
யமலோகத்துக்கு அழைத்துச்
செல்லுங்கள்" என்றான்.
இப்படி சொன்னதும் தக்ஷகன்
முதலிய ஆயிரக்கணக்கான
பாம்புகள் ப்ரஹ்லாதனின்
மர்மமான இடங்களில் விஷத்தை
கக்கிக் கொண்டு எல்லா
பிரதேசங்களிலும் கடித்தன.
வேதாத்மாவான கருடன் மேல்
அமர்ந்துள்ள மகாவிஷ்ணுவை
ப்ரஹ்லாதன் தியானித்தான்.
பாம்புகளால் ஏற்பட்ட
பயங்கரமான வேதனையயும்
அவன் அறியவில்லை.
ஸர்ப்பங்கள்
ஹிரண்யனை பார்த்து, "எங்களுடைய
ஹ்ருதயத்தில் தாபம் உண்டாயிற்று.
பற்கள் சிதறி விழுந்தன.
உன் புதல்வனில் உடம்பில்
நாங்கள் கடித்த அடையாளமே
தெரியவில்லையே! என்றன.
பிறகு
தேவவிரோதியான ஹிரண்யன்
அனுப்பிய மதயானைகள் மலைகளில்
உச்சிகளிலிருந்து ப்ரஹ்லாதனைப்
பூமியில் தள்ளின. பயங்கரமான
தந்தங்களை கொண்டு அந்த
சிறுவனை குத்தின. கோவிந்தனிடத்தில்
மனத்தை செலுத்திய ப்ரஹ்லாதன்
இதனால் சிறு கஷ்டத்தையும்
அடையவில்லை. யானையின்
தந்தங்கள் உடைந்தன. தந்தை
ஹிரண்யனை பார்த்து ப்ரஹ்லாதன்
"எல்லோருக்கும் ஆத்மாவான
பகவானின் ப்ரபாவத்தால்
இவையெல்லாம் ஏற்பட்டன.
வஜ்ராயுதம்போல் மிகக்
கூர்மையான யானைத் தந்தங்கள்
உடைந்து விழுந்தன. இதற்கு
நான் காரணமன்று" என்றான்.
மிக்க
சினம் கொண்ட ஹிரண்யகசிபு
தன் படைகளிடம் "யானைகளை
அனுப்பிவிடுங்கள். பல
கட்டைகளைப் போட்டு பயங்கரமான
நெருப்பை உண்டுபண்ணுங்கள்.
வாயுவே! நீ நெருப்பை வளரச்
செய். பாவியான ப்ரஹ்லாதனை,
நெருப்பே! நீ கொளுத்து"
என்றான். அஸுரர்கள் அப்படியே
செய்தார்கள். காற்று
பலமாக அடித்தது. அதில்
தள்ளப்பட்ட குழந்தை,
தகப்பனை பார்த்து, "இந்த
நெருப்பு என்னை கொளுத்தவில்லை,
தாமரை மலர்கள் பரப்பின
படுக்கையில் நான் அமர்ந்திருக்கிறேன்"
என்றான்.
அஸுரர்களின்
புரோகிதர்கள் கோபம்
கொண்ட அரசனைப் பார்த்து
"இவன் சிறு குழந்தை. அறியாத்தன்மையால்
நல்லது கெட்டது அறியாமலிருக்கிறான்.
நாங்கள் இவனை அழைத்து
சென்று நல்ல புத்தியை
உண்டு பண்ணுகிறோம்.
அப்படி இவன் சரிவர நடக்காவிட்டால்
அவன் மேல் பூதத்தை ஏவி
விடுகிறோம். இறந்துவிடுவான்"
என்றார்கள்.
அரசனின்
அநுமதியைப் பெற்று அவர்கள்
அந்த குழந்தையை வீட்டுக்கு
அழைத்துச் சென்றனர்.
அங்கு விஸ்தாரமாக நீதி
சாஸ்திரங்களை அவன் கற்றுக்
கொண்டான். சரியான சமயம்
பார்த்து, அந்தப் புரோகிதர்களிடம்,
"உங்களுக்கு சிறிதேனும்
அறிவே இல்லை. ஸாரமற்ற
இந்த ஸம்ஸாரத்தில் சுகம்
ஏது? பலவிதமான அவஸ்தைகளைப்
பெற்று இந்த ஜீவாத்மா
துக்கங்களோடு கூடியே
பிழைக்கிறான். இந்த பூமியில்
பிறந்து பால்யம், இளமை,
முதுமை, போன்ற பல விகாரங்களை
அடையாமல் எப்படி இருக்க
முடியும்? இந்த கஷ்டங்களை
நீக்குவதற்கு பகவானின்
த்யானம் ஒன்றே மருந்து"
என்றான்.
இவ்வாறு ப்ரஹ்லாதன்
சொன்னதைக் கேட்ட அவர்கள்
அரசனுக்கு பயந்து எல்லாவற்றையும்
அரசனிடம் விண்ணப்பித்தார்கள்.
அசுரன் கோபத்தால் சிவந்த
கண்ணினனாய் சமையற்காரர்களை
அழைத்து, "ஹாலஹால விஷத்தோடு
சேர்த்து அவனுக்கு அன்னத்தைக்
கொடுங்கள். யமலோகம்
சென்று விடுவான்" என்றான்.
அப்படி
அவர்கள் கொடுத்த அன்னத்தை
ப்ரஹ்லாதன் பகவானை மனத்தில்
நினைத்துக் கொண்டு சாப்பிட்டான்.
விஷம் உயர்ந்த அன்னம்
போல் ஜர்ணமாகிவிட்டது.
இதைக் கண்டு அஞ்சிய
சமையற்காரர்கள் "பலவிதமான
பக்ஷணங்களுடனும் அன்னத்துடனும்
கொடுத்த விஷம் ஜீர்ணமாகிவிட்டது;
இம்மாதிரி எங்கும் கண்டதில்லை"
என்றார்கள்.
இதைக் கேட்ட
அஸுரன் புரோகிதர்களைப்
பார்த்து "பெரும் பூதத்தை
உண்டுபண்ணி இவனை அழியச்
செய்யுங்கள்" என்றான்.
புரோகிதர்கள், மிக்க
அடக்கம் கொண்ட ப்ரஹ்லாதனிடம்
"நீ உயர்ந்த குலத்தில்
பிறந்துள்ளாய். உன் தகப்பனோ
எல்லோருக்கும் அரசர்.
அற்பமான பலத்தையுடைய
தேவர்களோ, மகாவிஷ்ணுவோ,
பரமசிவனோ இந்த அரசரிடத்தில்
என்ன செய்ய முடியும்?
ஆகவே விரோதியான விஷ்ணுவைத்
துதிக்காதே" என்றனர்.
ப்ரஹ்லாதன்,
"நீங்கள் சொல்லுவது
உண்மையல்ல. மகாவிஷ்ணு
என்ன செய்ய முடியும்
என்று நீங்கள் கூறியது
உண்மையாகாது. நம் அனைவருக்கும்
நன்மையையோ, தீமையையோ
அவன் ஒருவன்தானே உண்டு
பண்ணுகிறான்? அறம், பொருள்,
இன்பம், வீடு என்ற பலன்களை
அனைவர்க்கும் அளித்து
காப்பாற்றுகிறவன் அனந்தன்
ஒருவனே. மரீசி முதலிய
முனிவர்களும், ஜனகர்
முதலிய அரசர்களும் தங்கள்
தங்கள் விருப்பத்தை அவன்
மூலமாகவே பெற்றனர். அப்படி
இருக்க, அந்த அனந்தனை
அற்பன் என்று எப்படிச்
சொல்ல முடியும்? நீங்கள்
எனக்கு ஆசார்யர்கள்.
ஆயினும் நான் சொல்வதையும்
கேட்க வேண்டும்" என்றான்.
இதைக்
கேட்டு கோபமடைந்த புரோகிதர்கள்
நான்கு பக்கங்களிலும்
நெருப்பைக் கக்கும் பெரும்
பூதத்தை உண்டு பண்ணினார்கள்.
பயங்கரமான அந்த பூதம்
மூன்று உலகத்தையும் அழிக்கும்
தன்மையில் கிளம்பி கூரிய
சூலத்தால் ப்ரஹ்லாதனை
அடித்தது. அபாத்ரத்தில்
கொடுத்த தானம் போலவும்,
அலியினிடத்தில் கொடுத்த
கன்னிகை போலவும் ப்ரஹ்லாதனது
சரீரத்தில் நுழைந்த சூலம்
பயனற்றதாகி விட்டது.
சூலமும் உடைந்தது.
இதைக்
கண்ட பூதம் வெட்கமடைந்தது.
அரசனின் புரோகிதர்களையே
கொளுத்த ஆரம்பித்தது.
தருமமறிந்த ப்ரஹ்லாதன்
மிக்க கிருபை கொண்டு
பகவானை சரணமடைந்தான்.
"தேவதேவனே! உலகத்துக்கு
நாதனே! எங்கும் பரந்த
பொருளே! உயர்ந்த புருஷனே!
இந்த பூதத்தால் கொளுத்தப்பட்ட
என்னை காப்பாற்றினாய்.
என்னிடத்தில் எப்படியோ
அப்படியே அவர்களிடத்திலும்
எல்லா ஜந்துக்களிடத்திலும்
அவதரித்திருக்கிறாய்.
அந்த அந்தணர்களைக் காப்பாற்று.
ஸர்ப்பங்களும் யானைகளும்
எப்படி என்னை அழிக்க
சக்தியற்றவை ஆயினவோ
அவ்வாறே இந்த பூதம் பிராம்மணர்கள்
விஷயத்தில் ஆகவேண்டும்."
என்றான்.
மறுகணமே பூதம்
அழிந்து விட்டது. உயிர்
பிழைத்த புரோகிதர்கள்
தெளிவடைந்தவர்களாய்
ப்ரஹ்லாதனை ஆசீர்வதித்தனர்.
பிறகு கைகளை கூப்பிக்
கொண்டு நடந்த விஷயத்தை
அஸுர அரசனிடம் கூறினர்.
ஹிரண்யனும்
ஆச்சரியமடைந்து "ப்ரஹ்லாதனே!
நீ மிக பிரபாவசாலியாக
இருக்கிறாய். இது எப்படி
உனக்கு உண்டாயிற்று?"
என்று கேட்டான்.
ப்ரஹ்லாதன்
தந்தையின் காலில் விழுந்து
வணங்கி "எனக்கு இது இயற்கையாக
உண்டானதுமல்ல; மந்திரத்தால்
ஏற்பட்டதுமல்ல. எல்லோருக்கும்
இது பொதுவாக உண்டாகக்
கூடியதே. எவனுடைய ஹ்ருதயத்தில்
கேசவன் வாஸம் செய்கிறானோ
அவனுக்கு இது உண்டாகக்
கூடியது.
எந்த உயிரினிடத்திலும்
நாம் பாவச் செயலை நினைக்கக்
கூடாது. அப்படி உள்ளவனுக்கு
பாவமே ஏற்படாது. நான்
பிறர் குற்றங்களையும்
பிறரிடத்தில் தீமையையும்
நினைப்பதில்லை. எல்லா
இடத்திலும் உள்ள பகவான்
ஒருவனையே த்யானம் செய்கிறேன்.
அவன் எல்லோருக்கும்
ஈச்வரன். அவன் எல்லாப்
பூதங்களிலும் வாஸம் செய்கிறான்.
பண்டிதர்கள் அவனிடத்தில்
பக்தி செய்ய வேண்டும்"
என்றான்.
இதைக் கேட்டு,
மாடியின் மேல் உள்ள ஹிரண்யன்,
கண்களால் இரத்தத்தைக்
கக்கிக் கொண்டு, "நூறு
யோஜனைக்கு மேல் உள்ள
இந்த மாடியினின்றும்
இவனைக் கீழே தள்ளுங்கள்"
என்றான்.
அப்படியே கிங்கரர்கள்
செய்தனர். ஹ்ருதயத்திலே
வாஸம் செய்கிற பகவானை
கைகளால் பிடித்துக் கொண்டு
ப்ரஹ்லாதன் கீழே விழுந்தான்.
பூமி தேவி அவனுக்கு ஒரு
வித தீங்கும் ஏற்படாதபடி
தாங்கிக் கொண்டாள்.
புதல்வனுக்கு ஓரிடத்திலும்
அடிபடாமல் அபாயமில்லாமல்
இருப்பதை அறிந்த அசுரன்,
சாம்பரன், என்ற அசுரனை
ஏவினான்: "நீ பெரிய சக்தியுள்ளவன்.
ஆயிரக்கணக்கான மாயைகளை
உண்டு பண்ணுகிறவன். என்
புதல்வனையோ ஒருவனும்
ஜயிக்க முடியாது. இவன்
திறத்தில் உன் வலிமையைக்
காட்ட வேண்டும்" என்றான்.
இதைக் கேட்ட சம்பரன்,
"என் மாயாபலத்தைப் பார்.
ஒன்று ஆயிரம் கோடி என்ற
கணக்கில் மாயைகளை படைத்து
இவனை யமலோகம் அனுப்புகிறேன்"
என்று சொல்லி பலமாயைகளை
ஸ்ருஷ்டித்தான்.
இதைக்
கண்ட ப்ரஹ்லாதன் தன்னை
நலிய வந்த அசுரனிடத்திலும்
மாத்ஸர்யம் கொள்ளாமல்
பரிசுத்தமான மனத்துடன்
பகவானைத் தியானம் செய்தான்.
பகவான் ஆயிரம் சூரியர்களின்
ஒளியைப் பெற்றதும், ஆயிரம்
முகங்களையுடையதும், ஹாரம்
கேயூரம் முதலிய ஆபரணங்களைப்
பெற்றதும், ராக்ஷஸர்களை
அழிப்பதும், பெரும் ஓசை
கொண்டதும், துஷ்டர்களைத்
தீய கண்களால் பார்ப்பதும்,
வணங்கினவர்களின் கஷ்டத்தை
போக்கடிப்பதும், சிவந்த
மாலைகளையும் வஸ்திரங்களையும்
அணிந்ததும், ஸுகந்த சந்தனத்தால்
பூசப் பட்டதும், சிவந்த
கண்களையுடையதுமான ஸ்ரீஸுதர்சனத்தை
அனுப்பினான். சம்பரனுடைய
எல்லா மாயைகளையும் சக்கரத்தாழ்வான்
அறுத்துத் தள்ளினான்.
மாயையுடன்
சம்பரன் அழிந்ததும்,
ஹிரண்யகசிபு சோஷக வாயுவை
ப்ரஹ்லாதனிடத்தில் அனுப்பினான்.
அந்த காற்றுக்கும் சோஷகமான
பகவானை ப்ரஹ்லாதன் நினைத்தான்.
அதுவும் அழிந்தது. இப்படிப்
பல வேலைகள் வீணானதும்
ப்ரஹ்லாதன் ஆசார்யனின்
இல்லத்துக்கு சென்றான்.
அங்கே சில கல்விகளைக்
கற்றான். மறுபடியும்
தந்தையின் இல்லத்துக்கு
வந்தான். கோவிந்தனிடத்தில்
மனத்தைச் செலுத்திய அவன்,
"சாஸ்திரங்களும், சாஸ்திரத்தால்
வரும் பயனும் பகவானிடத்தில்
மனத்தை செலுத்தாதவனுக்கு
வீண்" என்று உபதேசித்தான்.
இதைக்
கேட்ட ஹிரண்யன், "இந்த
சிறுவன் நம் குலத்தையே
அழிப்பவன். நல்ல சுபாவமற்றவன்.
இவனை நாக பாசங்களால்
நன்றாகக் கட்டிப் பயங்கரமான
நடு சமுத்திரத்தில் தள்ளிவிடுங்கள்"
என்றான். கிங்கரர்கள்
சிறுவன் எப்படியும் கரையேறி
வர முடியாதபடி சமுத்திரத்தில்
தள்ளிவிட்டார்கள். பெரிய
மரங்களையும் மலைகளையும்
சமுத்திரத்தில் விழுந்த
அவன் மேல் தள்ளினார்கள்.
ப்ரஹ்லாதன் பரிசுத்த
மனத்துடன், பகவானை நினைத்தான்.
ஒரே கணத்தில் கரையை அடைந்து
விட்டான். எந்த விதமான
கஷ்டத்தையும் அடையவில்லை.
எவன்
கிருஷ்ணனிடத்தில் மனத்தை
செலுத்துகிறானோ அவன்
ஸாம்ஸாரிகமான கஷ்டத்தை
அடைவதில்லை. கனவில் கண்ட
செல்வம் எப்படி க்ஷண
காலத்திலேயே இல்லாமற
போய்விடுமோ அப்படி
ஆபத்துக்கள் அழிந்துவிடும்.
உயர்ந்த புருஷனை நாம்
ஸேவிக்க வேண்டும். மகாவிஷ்ணுதான்
உயர்ந்தவன். அவனால் அன்றோ
இந்த குழந்தை காப்பாற்றப்
பட்டது? சாதாரணமாக மனிதர்கள்
தாழ்ந்த புருஷர்களை சில
பயன்களைப் பெற விரும்பி
பற்றுகின்றனர். எல்லா
பலன்களையும் அளிக்கவல்ல
பகவானை நினைப்பதில்லை.
பயங்கரமான பல விதமான
துக்கங்களைக் கொடுக்க
கூடிய பல செயல்களால்
துன்புறுத்தப்பட்டிருந்த
போதிலும் ப்ரஹ்லாதன்
கலக்கத்தை அடையவில்லை.
பகவானிடத்தில் உள்ள பக்தியை
விட்டுவிடவில்லை,
*****