இரண்டாம் அத்தியாயம்
மகரிஷிகள்
நாரத முனிவரைப் பார்த்து,
பூஜிக்கத் தகுந்தவரே!
தபஸ்விகளில் சிறந்தவரே!
இந்த மலைக்கு கருடமலை
என்ற பெயர் வந்ததற்குக்
காரணம் என்ன? என்று கேட்டனர்.
ஸ்ரீ
நாரதர் கூறுகிறார்: "மகரிஷிகளே!
மிகவும் பக்தியுடனும்
ஆதரவுடனும் நான் சொல்லும்
வார்த்தையைக் கேட்டிடுவீர்.
முன்பு புண்ணியமான க்ருதயுகத்தில்
விநதையின் புதல்வனான
கருடன் தவம் புரிய வேண்டும்
என்று எண்ணம் கொண்டு
தன் தகப்பனான கச்யபரை
நோக்கி, 'தந்தையே! நான்
ஒன்றும் அறியாதவன். கை
முதல் அற்றவன், ஸம்ஸார
ஸாகரத்தில் மூழ்கி வருந்துகிறவன்.
தேவரீரோ எனக்குத் தந்தை,
எனது அறிவின்மையைப் போக்கடிப்பவர்;
ஆசார்யர், ஆகவே எனது விருப்பத்தை
நிறைவேற்றி வைக்க வேண்டும்.
உலகத்தில் எல்லோருக்கும்
அபீஷ்டமான பலத்தைக் கொடுப்பவன்
யார்? நமது விருப்பம்
எவனுடைய அநுக்ரஹத்தால்
பூர்ணமாகிறது? எவனை வணங்கி
நாம் ஆராதிக்க வேண்டும்?
இதன் உண்மையை உபதேசிக்க
வேண்டும்? என்று கேட்டான்'
காச்யபர்
சொல்லுகிறார்: விநதையின்
புதல்வனான கருடனே! ஸம்ஸார
சாகரத்தில் மூழ்கிச்
சிற்றின்பத்தில் ஆசை
கொண்ட மனிதர்களுக்கு
மகாவிஷ்ணு ஒருவரே ஆராதனைக்கு
உரியவர். அவரைத் தவிர
வேறு ஒருவரும் கரையேற்றி
விடுபவர் இல்லை. ஆகையால்
ஜகத்துக்குப்பதியான
அந்த மஹாவிஷ்ணுவை நியமத்துடன்
நீ பூஜை செய். பகவானை ஆராதிக்காமல்
எவனும் உயர்ந்த லோகத்தை
அடைய முடியாது. எல்லாவிதமான
செல்வங்களும் பகவானை
ஆராதிப்பவனுக்குச் ஸுலபமாக
கிட்டும். நான்கு முகங்களையுடைய
பிரம்மாவும் அந்த பகவானை
ஆராதித்து உலகத்தைப்
படைக்கும் பெருமையைப்
பெற்றார். இந்திரனும்
அந்தப் பகவானைப் பூஜித்துத்தான்
இந்திர லோகத்துக்கு
யஜமானன் ஆனான். ஸம்ஸார
கஷ்டத்தை நீக்குகிற பகவான்
நம்மால் நினைக்கப்பட்டும்
பூஜிக்கப்பட்டும் மங்களத்தைக்
கொடுக்கிறான். உனக்கும்
மங்களத்தை அளிப்பான்.
அவனிடத்தில் நீபக்தி
செய்வாயாக. பலவிதமான
யாகங்களாலும், புஷ்பங்களாலும்,
அலங்காரங்களாலும், அவனை
ஆராதித்துச் ஸுலபமாகப்
பயனை அடைந்து விடலாம்
என்று நினைக்க வேண்டாம்.
கேவலம், உண்மையான பக்தியொன்றாலேதானே
அவனை ஆராதிக்க முடியும்?
பக்தியினால்
எப்படிப் பகவானை மகிழ்விக்க
முடியுமோ அப்படி ஆயிரக்கணக்கான
அச்வமேதம் முதலிய யாகங்களால்
மகிழ்விக்க முடியாது.
அவ்வாறே நான்கு வேதங்களை
ஓதுவதாலும், தவம் புரிவதாலும்,
பலவிதமான நியமங்களாலும்
அந்த பகவானை மகிழ்விக்க
முடியாது. கை முதல் இல்லாத
மகரிஷிகள் பகவானிடம்
பக்தி செலுத்தியே மோக்ஷத்தைப்
பெற்றார்கள். மற்றுமுள்ள
பாமரர்களும் பக்தியின்
மூலமாகவே மற்றப் பயனையும்
பெற்றார்கள். இறைவனிடத்தில்
பக்தியற்றவன், புருஷ
அதமன், வேதங்களை ஓதாதவன்,
சாஸ்திரங்களை கற்காதவன்,
வேள்விகளைச் செய்யாதவனும்
கூடப் பகவானிடத்தில்
பக்தி செய்தானேயானால்
அவன்அவற்றை யெல்லாம்
செய்ததாகவே முடியும்.
கண், காது, வாக்கு, உடல்,
எல்லா உறுப்புக்களும்
தனக்கு வசமாக இருக்கும்போது
அந்த மஹாவிஷ்ணுவைப் பார்க்காதவனும்
அவரது கதையைக் கேளாதவனும்
அவருடைய குணங்களைச் சொல்லாதவனும்,
அவரைப் பூஜிக்காதவனும்
மனிதன் ஆக மாட்டான். அவன்
பிறவி எடுத்ததும் வாழ்வதும்
வீணே. பகவானைத் துதிக்கும்
வாக்கே உண்மையான வாக்கு.
அவரது பூஜையில் ஈடுபட்ட
கைகளே கைகள். அவரை நினைக்கும்
மனமே மனமாகும். அந்தப்
பகவானின் உருவத்தை எவன்
பார்க்க வில்லையோ அவன்
குருடனாவான். ருக்வேதம்,
யஜுர் வேதம், முதலிய வேதங்களாலும்,
இதிஹாஸங்களாலும் தேவதேவர்களுக்கும்
ஈச்வரனான விஷ்ணுவை எவன்
துதி செய்ய வில்லையோ
அவன் மூடன். கடவுளுடைய
குணங்களைக் காதால் கேளாதவன்
செவிடன். கருடனே! நீ சுத்தமான
மனத்துடனும், வாக்குடனும்,
உடலுடனும் ஸகல ஆனந்தமும்
அளிக்கும் அந்த பகவானை
உயர்ந்த புஷ்பங்களாலும்,
தூபங்களாலும், நீராஜனம்,
சந்தனம் முதலியவற்றாலும்
உயர்ந்த வஸ்திரங்களாலும்
பக்தியுடன் ஆராதிப்பாயாக.
பக்திதான் முக்கியம்.
உன் மனத்தில் ஏற்பட்ட
எல்லாக் கிலேசங்களையும்
போக்கடிப்பவர் அவர்.
அவர் ஒருவருக்குத்தான்
எல்லாவிதமான தாபங்களை
போக்கடிப்பதுடன் மங்களத்தை
கொடுக்கும் தன்மையும்
உண்டு.
கருடனும் இதைக்
கேட்டுத் தலையால் தந்தையை
வணங்கிப் பூமியில் படுத்து
எழுந்து, அவரை நோக்கி,
'தேவரீருடைய வார்த்தைகளைக்
கேட்டுத் தந்யன் ஆனேன்.
எல்லாப் பயனையும் பெற்றவன்
ஆனேன். எனக்கு நீர் தந்தை.
உமக்கு நான் அடிமைப்
பட்டவன். பன்முறை இவ்விஷயத்தைப்பற்றி
எனக்கு உபதேசித்தருள
வேண்டும்' என்று விநயத்துடன்
கேட்டான்.
கச்யபர், 'கருடனே!
மறுபடியும் உனக்கு உண்மையைக்
கூறுகிறேன். எல்லா உலகிற்கும்
ஆதாரமானவரும் அண்டினவர்களை
நழுவவிடாதவருமான அந்த
மஹாவிஷ்ணு ஒருவரையே மூன்று
கரணங்களாலும் மிகவும்
பக்தியுடன் பூஜிப்பாயாக.
இப்படி நீ பூஜித்தால்
அந்தப் பகவான் ப்ரஸன்னனாய்
எல்லாப் பலனையும் அளிப்பார்.
அவருக்கு நம்மிடத்தில்
ப்ரீதி ஏற்பட்டுவிட்டால்
நமக்குக் கிடைக்க முடியாதது
ஒன்றும் இல்லை. நீ தவம்
புரிவதில் ஆர்வம் கொள்.
எல்லாப் பாபங்களையும்
போக்கும் வல்லமைப் பெற்றது
அஹோபில க்ஷேத்திரம்.
உலகத்தைத் தாங்கும் பகவானான
ந்ருஸிம்ஹன் அங்கு ஆதரவுடன்
வாஸம் செய்கிறான். இந்த
க்ஷேத்திரத்தில் பல குகைகளுடன்
கூடிய மலை ஒன்று உள்ளது.
நாராயணசிகரம் என்ற ஒரு
சிகரம் அங்கு உள்ளது.
அங்கு நீ சென்று கடுமையான
தவம் புரி. அப்படிச் செய்தால்
பகவான் உன் முன் தோன்றி
வரமளிப்பார். நீ தவம்
புரிவதனால் கருடமலை என்ற
பெயர் அதற்கு வழங்கப்
போகிறது" என்றார்.
நாரதர்
மேலும் கதையைச் சொல்லத்
தொடங்கினார். 'இம்மாதிரி
உபதேசம் பெற்ற பெரிய
திருவடி அந்தப் பெரிய
மலைக்குச் சென்று அதைப்
பார்த்தார். மிக விஸ்தாரமாகவுள்ள
இம்மலையில் எந்த இடத்தில்
தவம் புரிந்தால் சீக்கிரத்தில்
ஸித்தி பெறமுடியும் என்று
பெரிய திருவடி யோசிக்கும்
சமயத்தில், ஆகாயத்தில்
ஒரு வாக்குக் கேட்டது.
ஓ சிறுவனே! தேவர்களால்
பூஜிக்கப்பட்டவனே! நீ
என்ன யோசிக்கிறாய்?
இந்த க்ஷேத்திரந்தான்
ந்ருஸிம்ஹனுடையது. இதற்குதான்
அஹோபிலம் என்று பெயர்.
இம்மலை தேவர்களாலும்,
கந்தர்வர்களாலும் பூஜிக்கப்பட்டது.
முனிவர்களும், பித்ருக்களும்,
சித்தகந்தர்வர்களும்,
மனிதர்களும் இங்கே வஸிக்கின்றனர்.
ந்ருஸிம்ஹனுடைய அநுக்கிரஹத்தால்
விரும்பிய பலனை இவர்கள்
பெற்றார்கள். எனவே இவ்விடத்திலேயே
நீயும் புலன்களை அடக்கி,
ஆஹாரத்தை நீக்கிச் சுத்த
மனத்துடன் தவம் புரிவாயாக.
உனக்கும் அந்த பகவான்
நன்மை அளிப்பான்.
'இப்படி
ஆகாயவாணி சொன்னதைக்
கேட்டு மன மகிழச்சியடைந்த
கருடன், என்னுடைய முந்தைய
பாக்கிய விசேஷத்தாலோ
பகவானுடைய ப்ரபாவத்தாலே
இத்தகைய ஓர்ஆகாச வாக்கைத்
திடீரென்று கேட்கும்
பாக்கியம் எனக்குக் கிட்டியதே'
என்று நினைத்து நினைத்து
ஸந்தோஷப்பட்டான். பிறகு
அவ்விடத்திலேயே பவநாசினியின்
கரையில் கஜகுண்டத்தின்
ஸமீபத்தில் தவம் புரியத்
தொடங்கினான்.
ஆசாரியருடைய
உபதேசத்தின்படி த்வாதசாக்ஷர
மந்திரத்தை ஜபித்துக்
கொண்டு மெளனத்துடன்
இந்திரியங்களை அடக்கி,
வாயுவை மாத்திரம் உட்கொண்டு
கோவிந்தனை மனத்தால்
நினைத்தார். பகவானும்
இந்தக் கருடனுடைய மனத்தில்
நிலையாக நின்றுவிட்டார்.
ஸகல துன்பங்களினின்றும்
பக்தவத்ஸலனான பகவான்
அவனைக் காப்பாற்றினார்."
இறைவனைத்
துதித்ததாலும், அவனது
நாமத்தைச் சொன்னதாலும்,
உண்மைப் பொருள் மனத்தில்
தோன்றியதாலும். அவரைப்
பூஜித்ததாலும், மேன்மேலும்
கருடனது தவம் விருத்தியடைந்தது.
முன்பிறவியில் செய்த
பாவங்களும் இந்தப் பிறவியில்
செய்த பாவங்களும் அழிந்துவிட்டன.
பகவானிடத்தில் மனத்தைச்
செலுத்தி பூஜிப்பவர்களுக்கு
மோக்ஷமே கிட்டும். இப்படி
பகவானை மனத்தில் வைத்துக்
கொண்டு தவம் புரியும்
கருடனைப் பூமியானது சுமக்கச்
சக்தியற்றதாகிவிட்டது.
பூமி அசைய ஆரம்பித்தது.
கடல்கள் தாபத்தால் கலக்கமுற்றன.
திசைகளும் தெரியவில்லை.
இந்திரன் முதலிய தேவர்கள்
அச்சமுற்றனர். உலகமும்
தபோக்கினியால் கொளுத்தப்பட்டுத்
தவித்தது. எங்கும் புகை
சூழ்ந்தது.
இந்திரன்
கருடனின் தவத்தை அறிந்து
தன் லோகத்துக்கு தீங்கு
வந்துவிடுமேன்று ஐயம்
கொண்டான். நான்கு பக்கங்களிலும்
கண்ணைச் செலுத்தினான்.
அழகாலே எல்லாரையும் மயக்கும்
இயல்பு பெற்றுக் கர்வம்
கொண்ட ஊர்வசி அவனருகில்
நின்றாள். அவளைப் பார்த்தும்
மனத்தில் ஒரு தீர்மானத்துக்கு
வந்த இந்திரன், "ஊர்வசியே!
தேவர்களின் நன்மைக்காக
உடனடியாக ஒரு தந்திரம்
செய்ய வேண்டும். கருடன்
முனிவேடம் தரித்து அஹோபிலத்தில்
தவம் புரிவது உனக்குத்
தெரிந்ததே. அங்கே சென்று
பல விலாசங்களைக் காட்டி
அவனை உன்மீது மயல் கொள்ளச்
செய்யவேண்டும். அவனது
தவத்தைக் கெடுக்க வேண்டும்.
ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன்
முதலியவர்களே உன்னுடைய
முகத்தை பார்த்து மோகம்
அடைகின்றனர் என்றால்,
மற்றவர்களைப் பற்றி கேட்க
வேண்டுமா? மகரிஷிகளும்,
உன் மோக வலையில் சிக்கினவர்கள்.
கருடனும் உன் மீது மோகம்
கொள்வான் என்பதில் சந்தேகம்
இல்லை, என்று சொல்லி
அனுப்பினான்." ஊர்வசியும்
இந்திரனின் உத்திரவின்படி
பல அப்ஸர ஸ்த்ரீகளுடன்
அஹோபிலம் என்னும் மலைக்கு
வந்து சேர்ந்தாள். மதுரமான
வார்த்தைகளை பேசத்தொடங்கினாள்.
அழகிய கீதங்களையும் பாடினாள்.
தன்னுடன் வந்த பெண்மணிகளோடு
நர்த்தனம் செய்யவும்
ஆரம்பித்தாள். கருடன்
அவளை பார்க்கவும் இல்லை.
மதிக்கவும் இல்லை. 'இந்திரன்
அனுப்பி வந்தவள் நான்.
ஊர்வசி என்பது என் பெயர்.
ஒரே கணத்தில் எல்லோரையும்
என்வசமாக்க சக்தி உடையவள்.
என் கண்ணுக்கு இலக்கானவர்கள்
எல்லோருமே எல்லா துன்பங்கினின்றும்
விடுபட்டவர்கள் ஆவார்கள்.
காமரஸத்தில் ஈடு படுவோர்
வேறு ரஸங்களை விரும்ப
மாட்டார். உண்மையில்
யோசித்து பார்த்தால்
பெண்களைத் தவிர பரப்ரஹ்மம்
என்று வேறு என்ன இருக்கிறது?
அவர்கள்தாம் ப்ரஹ்ம:
பரமானந்தத்தை அவர்கள்
கொடுக்கின்றனர். ப்ரஜைகளை
உண்டு பண்டுகின்றனர்.
எனவே பெண்கள்தான் ப்ரஹ்மம்.
உயர்ந்த அறிவாளிகள் பெண்களை
உயர்ந்த அமிர்தமாகவே
நினைப்பார்கள். எவன்
ஒருவன் பெண் அமுதத்தை
விட்டு இதைக்காட்டிலும்
உயர்ந்த பொருள் உண்டு
என்று நினைக்கிறானோ,
அவன், தன் கையில் கிடைத்த
பொருளை விட்டுவிட்டு
பூமியில் புதையல் இருக்கிறது
என்று தேடுகிற மூடனுக்கு
சமானமாவான். ஐயோ! இது
பெருந்துயரத்தைக் கொடுக்கக்
கூடியது. ஜனங்கள் விபரீதமான
செயலில் ஈடுபடுகின்றனர்.
சுகத்தையும் துக்கத்தையும்
நன்கு அறியாமல் கஷ்டத்தை
விளைவிக்கக் கூடிய வேள்வி,
தவம் முதலியவற்றை செய்யத்
தொடங்குகின்றனர். பெண்ணின்
உருவத்தை நேரில் பார்த்ததும்,
அதை ஆதரிக்காமல் வேறு
பொருளை விரும்புகிறவன்
மிக்க தாகத்தோடு இருந்தும்
கையில் கிடைத்திருக்கும்
தண்ணீரைவிட்டு ஆகாயத்தில்
உள்ள மேகத்தை எதிர்பார்ப்பவனுக்கு
சமானமாகிறான்' என்று
பரிவுடன் கூடிய ஆயிரக்கணக்கான
வார்த்தைகளால் கச்யபருடைய
புதல்வனான கருடனை ஏமாற்ற
முயன்றாள்.
"இத்தகைய
அஸம்பத்தமான கேவல ஆடம்பரம்
உபயோகமற்றது. தீமையைக்
கொடுக்கக்கூடியது. கேட்பவர்களுக்கும்
முரணானது' என்று நினைத்து
முதலில் கருடன் பேசாமல்
இருந்துவிட்டான்.
பிறகு
மறுபடியும் இரக்கத்தால்
கருடன் அநாதரத்துடன்
சில வார்த்தைகளைச் சொல்லத்
தொடங்கினான்; "ஏ ஊர்வசியே!
கொடிய பெண்ணே! நீ உன்
இருப்பிடம் செல். உன்னுடைய
விருப்பம் என்னிடத்தில்
பயன் பெறாது. கொட்டு
மழையால் தாக்குண்டாலும்
மலைகள் எப்படித் துன்பத்தை
அடைவதில்லையோ அதுபோல்
பகவானிடத்தில் மனத்தைச்
செலுத்தியவர்கள் எந்தவிதத்திலும்
துன்பப்படமாட்டார்கள்.
அச்சுதனிடத்தில் ஈடுபட்ட
மஹா மனஸ்விகளின் உயர்ந்த
குணம் எங்கே? பெண், புதல்வன்,
மனைவி, பணம் இவ்விஷயத்தில்
அறிவிலிகள் கொள்ளும்
பற்றுதல் எங்கே? தம் விருப்பப்படி
இந்தப் பூலோகத்தில்
ஏற்படும் ஸுகங்களில்
ஈடுபட்டு நன்மை தீமை
ஒன்றும் அறியாத ஆண்களுக்குத்
தீங்கும் இன்பமாகப் படுகிறது.
கையில் சிறங்கு வந்த
போது அதை சொறிந்தால்
மேல் தீமை ஏற்படும் என்றறிந்தும்
தற்காலத்தில் உண்டாகும்
இன்பத்துக்கா சொறிவது
போல் உள்ளது மக்களின்
செயல். ஆக தீங்கும் இன்பமாகத்
தோன்றும். "பவவ்யதா ஸுகாயதே"
ஆகையினாலன்றோ மாமிசம்,
ரத்தம் முதலியவற்றின்
சேர்க்கையைப் பெற்ற கொடிய
அழுக்கு உடம்பினிடம்
மூடர்கள் ஆசை காட்டுகின்றனர்!
இப்படிப் பட்டவர்கள்
நரகத்திடமும் ஈடுபாடு
கொள்வார்கள். வெறுப்புக்
காட்டமாட்டார்கள். பெண்கள்
சிலரிடத்தில் சிநேகம்
பாராட்டுவார்கள். சிலரை
மயக்குவார்கள்; ஓரிடத்திலும்
நிலையுடன் இருக்கமாட்டார்கள்.
இவர்களுடைய மனத்திலேயே
ஒரு நிச்சயமும் ஏற்படாது.
இப்படிப் பலவகையில் கச்யபரின்
புதல்வனான கருடன் ஊர்வசியை
கடிந்து கூறி, ஹரியின்
திருவடிகளில் மனத்தைச்
செலுத்தி தியானம் செய்யத்
தொடங்கினான்.
ஊர்வசியும்
வெட்கத்தால் முகந்தாழ்ந்து
தேவேந்திரனிடம் திரும்பிச்
சென்றாள். இந்திரனைப்
பார்த்து "ஓ புரந்தரா!
முன்பு பலஇடங்களுக்கு
என்னை அனுப்பியிருக்கிறாய்.
தபோ லோகத்திலோ, ப்ரம்ம
லோகத்திலோ, அதற்கும்
மேலான உலகத்திலோ, பாதாளம்
முதலிய உலகங்களிலோ,
என்னுடைய திறமையைக் காட்டி
உன் விருப்பத்தை நிறைவேற்றிக்
கொடுத்திருக்கிறேன்.
ஆனால் இந்த கருடனிடம்
என் முயற்சி பலன் அளிக்கவில்லை.
மதங்கொண்ட யானையைத்
தாமரைத் தண்டின் நூலால்
எப்படிக் கட்ட முடியாதோ,
உக்ரமான க்ரணங்களை உடைய
சூரியனை இருட்டால் எப்படி
அழிக்க இயலாதோ, சமுத்ர
ஜலத்தால் பாடவாக்கினியை
(வடவைக் கனலை) எப்படி அணைக்க
முடியாதோ, சமுத்ரத்தின்
ஒலியை தவளையின் கூச்சலால்
எப்படி அடக்கமுடியாதோ,
அவ்வாறே பகவானிடத்தில்
எல்லா புலன்களையும் செலுத்தி
பேரறிவைப்பெற்ற மகான்களின்
மனத்தை அழிக்க முடியாது"
என்றாள்.
மேலும்,
"கருடன் தேவ லோகத்தையோ
உன்னுடைய பதவியையோ ப்ரம்மாவின்
ஸ்தானத்தையோ விரும்பித்
தவம் புரியவில்லை. பகவானின்
திருவடித்தாமரைகளை காணவேண்டும்
என்று விரும்பியே தவம்
புரிகின்றான். இதை நான்
நன்கு அறிவேன்" என்று
சொல்லி இந்திரனுடைய
பயத்தை ஒருவாறு போக்கினாள்
ஊர்வசி. கருடனும் வேறுவிதமான
எந்த பலனையும் எதிர்பாராமல்
புருஷோத்தமனை தன் மனத்தில்
திடமாக வைத்து கடுந்தவத்தில்
ஈடுபட்டான்.
பகவானும்
ப்ரஸன்னனாய் அந்த கருடனுக்கு
ஸேவை கொடுத்தார். சங்கம்,
சக்கரம், கதை முதலிய ஆயுதங்களை
தரித்தவரும், நான்கு
கைகளை உடையவரும், இந்திரன்
முதலிய தேவ கணங்களால்
பூஜிக்கப்பட்டு நீர்
கொண்ட மேகத்திற்கு ஒப்பானவரும்
செந்தாமரைக்கண்ணை உடையவரும்
ஒரே சமயத்தில் உதித்த
கோடிக்கணக்கான சூரியர்களின்
ஒளியைப் பெற்ற க்ரீடத்தால்
விளங்கியவரும், அழகிய
உன்னதமான மூக்குடன் கூடியவரும்
கருத்த கேசங்களுடன் கூடியவரும்
அழகிய தளிர் போன்றவரும்,
குண்டலதாரியாய் கெளஸ்துபம்
உடையவரும், பீதாம்பரதாரியுமான
பகவானை கருடன் தன் கண்களால்
கண்டு ஆனந்த பரவசனாய்
நின்றான்.
நக்ஷத்திர
மண்டலத்தோடு கூடிய சந்திரன்
போலவும், மேருமலையின்
நடுவிலுள்ள சூரியன் போலவும்,
அநந்தன் முதலிய சுரகணங்களோடு
சேவை அளிக்கும் பகவான்,
கருடனின் முன் வந்து
அழகிய வார்த்தை சொல்லத்
தொடங்கினார். "குழந்தாய்!
விநதையின் மனத்துக்கு
இனியவனே! உனது உக்கிரமான
தவத்தால் மகிழ்ச்சியுற்றேன்.
எழுந்திருப்பாய். உன்
விருப்பம் என்ன? நான்
அதை நிறைவேற்றுகிறேன்"
என்றார். இதைக் கேட்டதும்
கருடன் பலதடவை பகவானை
வணங்கி அபூர்வமான அவரது
ரூபத்தைக் கண்டு மலர்ந்த
கண்களைப் பெற்றவனாய்
உடல் முழுவதும் மயிர்க்கூச்சலடைந்தவனாய்
கடவுளை துதி செய்ய ஆரம்பித்தான்.
"எல்லா உலகத்தையும்
ஆக்கவும், நிலைபெறுக்கவும்,
அழிக்கவும், திறமைப்பெற்ற
உன்னை நமஸ்கரிக்கிறேன்.
காரிய காரண ரூபனான உன்னை
நமஸ்கரிக்கிறேன். பல
ரூபங்களை எடுத்து எங்கும்
வியாபித்த உன்னை வணங்குகிறேன்.
சார்ங்கம் முதலிய ஆயுதங்களை
ஏந்திய உன்னை வணங்குகிறேன்.
அடியவர்களிடத்தில் இரக்கமுள்ளவனே!
உன் மகிமையைச் சொல்லி
துதிசெய்ய யாருக்குத்தான்
சக்தி உண்டு? ஜகத்குருவே!
மந்தமதியுள்ளவனான நான்
எப்படித் துதிப்பேன்?
என் நாக்கு எப்படி முன்
வரும் ? ப்ரம்மாவின் ஆயுளைப்
பெற்றும் சுத்தமான மனத்தைப்
பெற்றும் இருந்தபோதிலுங்கூட
உன் குணங்களின் ஏகதேசத்தை
எடுத்துச் சொல்லி துதி
செய்ய முடியாததன்றோ?
ஆயுள், ஆரோக்யம், செல்வம்,
போகம், முதலியவைகளை
உன்னை த்யானம் செய்பவர்களுக்கு
அளிப்பவனே! உன்னை பலர்
ஆராதித்து தேவராகவும்
கந்தர்வர்களாகவும் சித்தராகவும்
ஆகின்றனர். இந்திரன்
நூறு வேள்வி செய்து தன்
பதவியைப் பெற்றான். விதேகதேசத்தில்
உள்ள அரசர்கள் ஏழு தலைமுறை
உன்னை ஆராதித்து மோக்ஷம்
பெற்றனர். எவன் ஒருவன்
அதிகமான செல்வத்தை விரும்பி
உன்னை ஆராதிக்கிறானோ,
அவன் சந்தேகம் இல்லாமல்
அந்த செல்வத்தை அடைகிறான்.
துந்துமாரன் என்னும்
அரசனே இதற்கு உதாரணம்.
கார்த்தவீரியன் உன்னை
ஆராதித்துத்தான் சிறந்த
ராஜ்யத்தைப் பெற்றான்.
தர்மன் முத்கலன், பாஷ்கலன்,
க்ருநீ, மற்றும் நகுஷன்
முதலிய அரசர்கள் உயர்ந்த
பதவியை பெற்றனர். குசத்வஜர்,
ஜனகர் முதலிய அரசர்களும்
உன் அனுக்ரஹத்தால் முக்தி
பெற்றனர். இம்மாதிரியே
பல முனிவர்களும் உன்னை
அடைந்து நற்கதி அடைந்தனர்.
சைத்யத்தால்
உண்டான உபத்திரவத்தை
நெருப்பு எவ்வாறு போக்கடிக்குமோ
இருட்டை எப்படி விலக்குமோ,
பசி உள்ளவர்களுக்கு சமையல்
மூலம் பசியை எப்படி போக்கடித்து
சுகத்தை கொடுக்குமோ
அம்மாதிரியே புருஷோத்தமனான
பகவான் எல்லாவித போகங்களையும்
அளிக்கிறான். வைத்தியனை
அடைய, வியாதி அழிவது போல்
ஸர்வேஸ்வரனான உன்னை அடைந்தால்,
மேருமலைபோல் உள்ள பாபமும்
அழிந்துவிடுகிறது. உன்னை
அடைந்தவர்கள் எல்லா ஆபத்துகளினின்றும்
விடுபடுகிறார்கள். உன்னிடத்தில்
உள்ள எல்லா ஆயுதங்களும்
உன்னை அடைந்தவனை காப்பாற்ற
காத்துக் கொண்டிருக்கின்றன.
எல்லா க்ரஹங்களும் நன்மையை
அளிக்கின்றன. தேவர்களுக்கும்
புலப்படாத நீ பூமியில்
உன்னை அடைந்தவனுக்கு
வெற்றியை அளிக்கிறாய்.
இது மாத்திரமா? எல்லா
உலகங்களிலும் ஜயத்தை
அளிக்கிறாய். உடல் வியாதி,
மனோ வியாதி முதலிய நோய்களும்
அண்டுவதில்லை. பேய் பிசாசு
முதலியவை இத்தகையவனைக்
கிட்டுவதில்லை. சொப்பனத்திலும்
பயம் உண்டாவதில்லை. உடலில்
ஆரோக்யமும் ஸர்வ ஸம்பத்
ஸம்ருத்தியும் இவனை நாடுகின்றன.
இதில் சந்தேகமே இல்லை.
அறம், பொருள், இன்பம்,
வீடு ஆகிய புருஷார்த்தங்களையும்
உன்னை அடைந்தவன் அநாயஸமாக
பெருகிறான். காமம், கோபம்,
பேராசை முதலிய தோஷங்களோடு
கூடிய மனத்தை உடையவனும்
உன்னை ஆராதித்தால் பாபம்
விலகப் பெற்று நற்புத்தியைப்
பெருகிறான். தண்ணீரில்
இட்ட உப்பு எப்படி கரைந்துவிடுமோ
அப்படியே அவனது பாபமும்
கரைந்துவிடும். எல்லா
உலகத்துக்கும் குருவான
பகவானை மனத்தில் எவன்
த்யானம் செய்கிறானோ
அவனுக்கு எந்த தொழிலும்
அசாத்யம் அன்று. போரில்
அவன் தோல்வி அடைய மாட்டான்.
எந்த காரியத்திலும் பற்றற்றவனாகவே
இருப்பான். ஸர்வேஸ்வரா!
மண், காற்று, ஆகாசம், நீர்,
நெருப்பு, சந்திரன், சூரியன்
எல்லாம் உன் உடல், உன்
மகிமையை யாரால் உரைக்க
முடியும்?" என்று கருட
பகவான் துதி செய்து விநயத்துடன்
நின்றான்.
மிகத் தெளிவு
பெற்ற முகத்துடன் பகவான்
கருடனைப் பார்த்து சொல்லத்
தொடங்கினான்: "விநதையின்
புதல்வா! நான் உன் தவத்தை
மெச்சுகிறேன். உனக்கு
எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.
உன் விருப்பம் என்ன? சொல்லாய்!
அதை நான் நிறைவேற்றி
வைக்கிறேன்." என்றார்.
கருடன் "தேவ தேவா!
நான் பூமியிலோ மூன்று
உலகங்களிலோ ஜயம் பெற
விரும்பி தவம் புரியவில்லை.
இன்று முதல் வாகனமாக
எனது தோளில் தேவரீர்
அமர வேண்டும். இதுதான்
எனக்கு மகிழ்ச்சியைக்
கொடுக்கக் கூடியது.
எல்லாவற்றுக்கும் ஆதாரனான
உனக்கு நான் ஆதாரமாகவேண்டும்.
இந்த மகிமை எவற்கும்
கிடைக்கத் தகுந்ததன்று.
இந்த பெரும் பாக்கியம்
எனக்கு கிட்டவேண்டும்"
என்றான். பின்பு அவன்
மேலும் சொல்லத் தொடங்கினான்.
"புருஷோத்தமா! இந்த மலையில்
இருந்துகொண்டு நான்
கடும் தவம் புரிந்தேன்.
இங்கே என் தவம் வெற்றி
அடைந்தது. உன்னை தரிசிக்கும்
பாக்யத்தை கொடுத்தபடியால்
இந்த மலைக்கு ஒரு பெருமை
ஏற்பட்டுள்ளது. எனவே,
இதற்கு கருடமலை என்ற
பெயர் ஆசந்த்ரார்க்கம்
வழங்க வேண்டும். இந்த
இரு வரங்களையும் கொடுக்க
வேண்டும்" என்று கேட்டுக்
கொண்டான்.
பகவான்,
"கருடா! நீ இளம்பிராயம்
உள்ளவனாக இருந்த போதிலும்
புத்தியால் பெரியவனாக
விளங்குகிறாய். உன்னைக்காட்டிலும்
உயர்ந்தவன் யாரும் இல்லை.
பல முனிவர்கள் தவம் புரிந்தனர்.
நானும் அவர்களுக்கு ஸேவை
தந்தேன். அவர்கள் வேறு
எதையோ பலனாக விரும்பி
வேண்டிக் கொண்டார்களே
தவிர தங்களை எனக்கு வாகனமாக்கிக்
கொள்ள விரும்பவில்லை.
நீ விரும்பியபடி இரு
வரமும் தந்தேன். உன்னை
கருடன் என்றும், ஸர்ப்பங்களுக்கு
சத்ரு என்றும், வேத ஸ்வரூபி
என்றும், பக்ஷீராஜன்
என்றும், நாராயண ரதம்
என்றும் சொல்லி அழைப்பார்கள்"
என்று சொல்லி, பகவான்
அங்கேயே அந்தர்த்தானமானார்.
இப்படி பவநாசினி என்னும்
நதியின் தென் கரையை அடைந்த
பக்ஷிராஜனின் தவத்துக்குரிய
இடமாக காருட மலை இருந்தபடியால்
எல்லா மேன்மையையும் உடையதாயும்,
தேவதைகள் பூஜிப்பதாயும்,
எல்லோருக்கும் நன்மை
அளிப்பதாயும் இன்றும்
விளங்கிக் கொண்டிருக்கிறது.
*****