|
|
|
|
துலா காவேரி
பாவிகள்
தேவ விமானத்தில் செல்வதைக்
கண்ட யமபடர்கள், வேதராசியின்
செயலால் இப்படி நேர்ந்தது
என்பதை அறிந்து அவனிடம்,
"பாபம் செய்தவர்களை தண்டிப்பதற்கென்றே
நரகயாதனைகள் உள்ளன. கஷ்டங்களை
அநுபவித்தால் அவர்களின்
பாபங்கள் விலகும். அவர்கள்
தம் ஊழ்வினை காரணமாகப்
பூமியில் பிறப்பர். அங்கு
நற்காரியங்களைச் செய்தால்
நல்ல உலகத்தை அடைவர்.
இல்லாவிட்டால் மறுபடியும்
நரகத்தையே அடைந்து யாதனைகளை
அநுபவிப்பார்கள். அப்படியிருக்க
இவர்களுக்குக் காவேரி
ஸ்நான பலனைக் கொடுத்து
நற்கதியை அடைவித்தாயே"
என்றனர்.
"துன்புறும்
ஜனங்களின் துன்பத்தைப்
போக்கி உபகாரம் செய்வது
ஸாதுக்களின் கடமையன்றோ?
இவர்களின் கஷ்டங்களைப்
பார்த்து நான் உபகாரம்
செய்யாமற் செல்வது உசிதமல்லவே?
இவர்களும் இன்புற வேண்டுவது
அவசியமல்லவா?" என்று வேதராசி
சொன்னான்.
'இவனை இங்கு
அதிக நேரம் வைத்திருந்தால்
நமக்கு வேலையே இருக்காது.
இவன் அனைவருக்குமே நற்கதியைக்
கொடுத்துவிடுவான்' என்று
எண்ணி யமபடர்கள் அவனை
விரைவாக அழைத்துச் சென்றனர்.
காய்ச்சிய
தாமிரப் பாத்திரத்தில்
வதங்கிக் கிடக்கும் சிலரை
வேதராசி பார்த்தான்.
'தண்ணீர் கொடு' என்று
யாசித்துக்கொண்டும்,
காய்ச்சின எண்ணெயில்
வறுக்கப்பட்ட சிலரையும்
கண்டான். 'நரகத்திலுள்ள
ஜனங்களே! கோரமான பாபங்களைச்
செய்து ஏன் இந்தக் கதியை
அடைய வேண்டும்? மானிடராகப்
பிறந்தும் நற்காரியங்களைச்
செய்ய வேண்டாமா? பிறருக்கு
பால் தண்ணீர் குடை முதலியவற்றைத்
தானம் செய்ய வேண்டாமா?
காவேரி முதலிய புனித
நீரில் ஸ்நானம் செய்து
புண்ணியத்தைச் சம்பாதித்துக்
கொள்ள வேண்டாமா? ஸாலக்கிராம
சிலையிலுள்ள எம்பெருமானைக்
காவேரி தீர்த்தத்தினால்
ஒரு நாளாவது அபிஷேகம்
செய்து, துளசியினாலும்
புஷ்பத்தினாலும் நீங்கள்
அர்ச்சிக்கவில்லையா?
நீங்கள் ப்ராஹ்மணர்களுக்கு
ஏன் அன்னமிடவில்லை? கஷ்டப்படுகிறவனுக்கு
ஏன் உபகாரம் செய்யவில்லை?
நற்காரியங்களைச் செய்திருந்தால்
இம்மாதிரி துன்பத்துக்கு
ஆளாகாமல் இருக்கலாமே"
என்றான்.
தர்மாத்மாவான
வேதராசியின் உடலின் காற்றுப்
பட்டதனாலும், அவன் வார்த்தையைக்
கேட்டதனாலும் அம்ருதஸாகரத்தில்
முழுகினவர்கள் போல்
மகிழந்த நரகவாசிகள் கூறலானார்கள்
- "உயர்ந்த அந்தணனே! நாங்கள்
இதுவரையில் செய்த பாவத்துக்கு
எல்லையே இல்லை. எல்லாப்
பாவங்களும் நன்கு நினைவுக்கு
வருகின்றன. இங்கே சிலவற்றைக்
கூறுகிறோம்.
"இரவு முழுவதும்
தூங்கினபோதிலும் அதிகாலை
வேளையில் சுகமாகத் தூங்க
வேண்டும் என்ற விருப்பம்
அனைவர்க்கும் உண்டு.
அருணோதயமாகியும் ஸ்நானம்
ஜபம் முதலியவற்றை விட்டுத்
தூங்குவது மிகப் பெருங்குற்றம்.
அதை நாங்கள் செய்தோம்.
ஹோமம் முதலிய நற்காரியங்கள்
எவை என்பதே எங்களுக்குத்
தெரியாது. அதிதிகளை நாங்கள்
ஸத்கரித்ததில்லை. நடுப்பகலிலும்
இரவு வேளைகளிலும் 'பிச்சை'
என்று கேட்டவர்க்கு அன்னதானம்
செய்ததில்லை. அன்னம்
நெய் எண்ணெய் தயிர் எள்
வஸ்திரம் முதலியவற்றை
விலைக்கு விற்றோம்.
அந்தணர்களின் பொருளை
அபகரித்தோம். சேரக்கூடாத
நாட்களில் பெண்களுடன்
சேர்ந்தோம். தாய் தந்தை
ஆசார்யன் தேவதைகள் ப்ராஹ்மணர்கள்
இவர்களை உபசரிக்காமல்
வாயால் தூஷித்தோம்.
'பிறருக்குக் கொடுக்காமல்
என்னைப் போல ஆக வேண்டாம்.
கொடுத்துக் கொடுத்து
உன்னைப் போலவே பணக்காரனாக
இரு' என்று, ஆசார்யனைப்
போல உபதேசம் செய்ய ஒவ்வொரு
வீட்டு வாசலிலும் ஏறி
இறங்கிய யாசகனுக்கு நாங்கள்
இனிதாக உரைத்து எதையும்
கொடுக்கவில்லை. தீர்த்த
யாத்திரைக்கோ கோவில்களில்
மஹாவிஷ்ணுவின் உத்ஸவங்களுக்கோ
எங்கும் சென்றதில்லை.
யாகங்கள் செய்யும் இடத்தை
மனத்தாலும் நினைக்கவில்லை.
வீண்பொழுது போக்காமல்
ஸத் விஷயங்களை எடுத்துக்
கூறும் மஹான்களைக் கண்ணாலும்
பார்த்ததில்லை.
"காலையில்
ஆறு நாழிகைக்கு முன்பே
எண்ணெய் தேய்த்து ஸ்நானம்
செய்தோம். பகலில் பாலையும்,
இரவில் தயிரையும் பருகினோம்.
இறைவனுக்கு நிவேதனம்
செய்யாததைப் புஜித்தோம்.
பசியுடன் வந்த குழந்தைகளை
விரட்டி அனுப்பினோம்.
ஸ்நானம் செய்யாத பெண்
சமைத்ததை உண்டோம். நாங்களும்
ஸ்நானம் செய்யாமல் சாப்பிட்டோம்.
பகலில் தூங்கினோம்.
எப்போதும் சூதாடினோம்.
மனைவியுடன் ஒரே பாத்திரத்தில்
ஆஹாராதிகளை எடுத்துக்கொண்டோம்.
வேதத்தை நன்கு கற்றிருந்தும்
அது சொன்னபடி தர்மங்களைச்
செய்யாமல் இருந்துவிட்டோம்.
சம்பளம் பெற்றுக் கொண்டு
வேதம் முதலிய கலைகளைச்
சொல்லிக் கொடுத்தோம்.
ஆகையால் (இப்படிப் பல
விதமான அக்கிரமங்களைச்
செய்தபடியால்) பலவித
நரகங்களுக்கு ஆளானோம்.
நாங்கள் அடையும் யாதனைகளைக்
கணக்கிட்டுச் சொல்ல
முடியாது.
"கும்பீபாகத்தில்
தள்ளுகிறான்; நன்கு காய்ந்த
ஜலத்தைக் குடிக்கச் செய்கிறான்;
எரியும் நெருப்பில் தள்ளுகிறான்;
கொதிக்கும் ஆற்று மணலில்
புரட்டுகிறான்; கொதிக்கும்
எண்ணெயில் அமிழ்த்துகிறான்;
நெருப்பு இரும்புக் குண்டை
வாயில் அடைக்கிறான்;
பாம்பு தேள் முதலிய துஷ்ட
ஜந்துக்கள் சேர்ந்த பள்ளத்தில்
தள்ளுகிறான்; அசுத்தமான
வஸ்துக்களை உண்ணச்செய்கிறான்.
பாவம்! பாவம்! இந்தக் கஷ்டங்களை
வாயால் சொல்ல முடியவில்லை.
இன்னும் எவ்வளவு கோரமான
துன்பங்களுக்கு ஆளாகப்
போகிறோமோ! ஏழு மன்வந்த்ரம்
எங்களில் சிலர் நரகத்தில்
இருக்கின்றனர். சிலர்
பதினான்கு மன்வந்தரம்
நரகத்தில் இருக்கின்றனர்.
எங்களுக்கு இங்கிருந்து
விமோசம் எப்போது ஏற்படுமோ?
"இதோ
ஒரு பெண் தலைகீழாக மரத்தில்
கட்டப்பட்டுத் தொங்குகிறாளே;
இவள் உடம்பெல்லாம் தேளால்
கொட்டப்பட்டவை; கோரமான
ஸர்ப்பங்களால் கடிக்கப்பட்டவை.
இவளைக் கத்தியால் யமபடர்கள்
வெட்டுகிறார்கள். இவள்
முன்பு ப்ராஹ்மணியாக
இருந்தவள். உஜ்ஜயினி
என்னும் நகரத்தில், நன்றாக
அலங்கரிக்கப்பெற்றுக்
கணவனுக்கு வாழ்க்கைப்பட்டவள்.
ஆசாரம் என்றால் என்ன
என்று கேட்பாள். தன் வயிறு
நிரம்பினால் போதும்
என்று எண்ணிக் கணவனுக்கும்
உணவு கொடுக்கமாட்டாள்.
பல குழந்தைகளைக் கொன்று,
அவர்கள் பூண்டிருந்த
ஆபரணங்களைத் திருடிக்
கொண்டவள். பர்த்தாவை
விரட்டினவள். கணவன் சில
சமயம் இவளை மிரட்டினால்,
'நான் கிணற்றில் விழுந்துவிடுகிறேன்,
விஷத்தை சாப்பிட்டுவிடுகிறேன்'
என்று சொல்லிப் பயத்தை
உண்டுபண்ணினவள். தன்
இல்லத்துக்கு வரும் யாசகர்களைத்
தடியால் அடித்து விரட்டினவள்.
கணவனுக்குத் தெரியாமல்
அக்கிரமமாகச் செலவழித்தவள்.
"இவள்
அருகில் அதோ இரண்டு
புருஷர்கள் காண்கிறார்களே;
அவர்களுள் ஒருவன் அரசன்;
மஹாபாவம் செய்தவன்; ப்ராஹ்மணர்களைக்
காரணமில்லாமல் துன்புறுத்தியவன்;
அக்கிரமமாக அரசை ஆண்டவன்;
நியாயமில்லாமல் வரி விதித்துப்
பணத்தை வசூலித்தவன்;
வேதாத்தியயனம் செய்தவர்களைத்
தண்டித்தவன். இப்படிப்
பல அக்கிரமங்களைச் செய்தபடியால்
இங்கே பல யாதனைகளை அநுபவிக்கிறான்.
மற்றொருவன் பிரம்மசாரியாக
இருந்து ஆசார்ய த்ரோஹம்
செய்தவன்; தாம்பூலத்தைச்
சாப்பிட்டவன். இவன் போகாத
அன்னசாலை இல்லை. தாஸிகளுடன்
இருந்து பொழுது போக்கினவன்.
பாவத்துக்கு அஞ்சாதவன்.
எத்தனையோ காலமாக இவ்விருவரும்
இந்த நரகத்தில் இருந்து
யாதனையை அடைகிறார்கள்.
"சிறந்த
அந்தணரே, உம்மைப் பார்த்தும்,
உம் வார்த்தையைக் கேட்டும்
யாதனைகளிலிருந்து விடுபட்டு
ஸுகத்தை அடைகிறோம்.
நீர் ஸாக்ஷாத் ஹரியே,
நாராயணனே" என்றனர்.
இப்படி
'ஹரி' என்ற இரண்டு எழுத்துச்
சொல்லைச் சொன்னவுடனே
அவர்கள் எல்லா வினைகளிலிருந்தும்
விடுபட்டு விமானமேறி
மேலுலகம் சென்றனர். இதைக்
கண்டதும் வேதராசி காவேரி
ஸ்நானத்தின் மஹிமையையும்
'ஹரி:' என்ற இரண்டு எழுத்தின்
பிரபாவத்தையும் நினைந்து
ஆனந்த ஸாகரத்தில் மூழ்கினான்.
"அவரவர்
தாம் செய்த பாவங்களை
அநுபவித்தே தீர்க்க வேண்டும்.
ப்ராயச்சித்தம் செய்து
போக்கடிப்பது எளிதன்று.
மேன்மேலும் பாவங்கள்
சேர்வதனால் அநுபவிக்க
அவகாசம் போதாது. இப்படியிருந்தும்,
'ஹரி:' என்ற இரண்டு எழுத்தின்
மஹிமை எப்படிப்பட்டது
! இதை வாயால் சொன்ன மாத்திரத்தில்
எல்லாப் பாவங்களிலிருந்தும்
விடுபட்டு அழகிய விமானமேறி
மேலுலகம் சென்றனரே" என்று
சொல்லி, அந்தணன் எம்பெருமானைத்
துதித்தான்.
"அரிச்சந்திரனே,
வேதராசி என்ற அந்தணனைக்
கண்ணால் பார்த்தும்,
அவன் வார்த்தையைக் கேட்டும்,
எம்பெருமான் திருநாமத்தைச்
சொல்லியும் புண்ணிய
லோகத்தை நரகத்து மக்கள்
அடைந்தனர் என்றால் அந்த
அந்தணனின் மஹிமை அளவிட
முடியாதது என்று ஏற்படவில்லையா?
அவன் துலா மாஸத்தில்
நியமத்துடன் காவேரியில்
ஸ்நானம் செய்தபடியால்
அவ்வளவு மஹிமையைப் பெற்றான்.
காவேரியின் மஹிமையை ஆயிரம்
தலைகொண்ட ஆதிசேஷனாலும்
பகர முடியாது. காவேரியில்
துலா மாஸத்தில் ஸ்நானம்
செய்தவன் தான் புனிதனாவதுடன்
பிறரையும் புனிதராக்குகிறான்.
நரகத்தில் யாதனையை அநுபவிக்கிறவர்களும்
இவனது வார்த்தையினால்
பாவங்களிலிருந்து விடுபட்டு
உயர்ந்த லோகத்தை அடைகின்றனர்.
இவ்வளவு உயர்ந்தது துலா
காவேரி ஸ்நானம்" என்று
அகஸ்த்யர் சொன்னார்.
Chapter-5
Chapter-3
Chapter-2
Chapter-1
|
|
|
|
|
|
|
|
Enter supporting content here
|
|
|
|