அகஸ்த்ய முனிவர் மேலும்
கூறுகிறார் :-
ஹரிச்சந்தரனே!
இதன் மஹிமையை இன்னமும்
கேள். ஸ்ரீரங்கத்திலுள்ள
காவேரியில் ப்ராதக்காலத்தில்
ஸ்நானம் செய்து கோதானம்
செய்கிறவன் இவ்வுலகத்தில்
ஸகல போகங்களையும் அநுபவித்து
ப்ரஹ்மலோகத்திலும்
எல்லாராலும் பூஜிக்கப்
பெறுகிறான். துலா மாதத்தில்
விஷ்ணு கோயில்களில்
நெய்யைக் கொண்டோ, நல்லெண்ணெயைக்
கொண்டோ விளக்கு ஏற்றுகிறவன்
ஸூர்யலோகத்தை அடைவான்.
பிறகு இங்கும் உயர்ந்த
ஜ்ஞாநியாக ஆவான். ஏழையான
அந்தணனுக்கு வஸ்த்ரதானம்
செய்பவன் தீர்க்காயுளையும்
செல்வத்தையும் அடைந்து
மேலுலகத்திலும் நக்ஷத்ரம்போல்
விளங்குவான்.
குடும்பியான
வித்வானுக்குப் பூமியையோ
மனையையோ கொடுப்பவன்
ஸ்வர்க்கத்தை அயத்நமாக
அடைவதுமல்லாமல் இங்கே
பிறந்ததும் ராஜ்யத்தையும்
ஸுலபமாக அடைவான். தனங்களையும்
தான்யங்களையும் (காவேரி
நதி கரையில்) கொடுப்பவன்
குபேரனுக்கு ஸமனாகிறான்.
தேனை
அளிப்பவன் மலடு நீங்கி
உயர்ந்த புதல்வனை அடைவான்.
ஏழையான குடியானவனுக்குக்
காவேரிக் கரையில் எருதைக்
கொடுக்க வேண்டும். அப்போது
கோலோகத்தில் ஸகல போகங்களையும்
அடைந்து, பூமிக்கு அரசனாகிறான்.
கன்றோடு கூடியதும்,
நிறையப் பால் கொடுப்பது
அதிக வயதாகாததுமான உயர்ந்த
பசுவைக் கொடுப்பவன்
வம்சவிருத்தியை அடைவது
மாத்திரமின்றி எல்லாக்
கடன்களிலிருந்தும் விடுபட்டு
உயர்ந்த லோகத்தை அடைவான்.
துலா
மாதத்தில் காவேரிக் கரையில்
விதைதானம் செய்பவன் தீர்காயுஸ்ஸுடனும்
பஹு பத்ரர்களுடனும் இங்கு
வாழ்ந்து பதினான்கு இந்திரர்களின்
காலம்வரை ஸ்வர்க்க லோகத்தில்
வாழ்வான்; அங்கு அழகிய
பெண்களுடன் ஸுகிப்பான்.
வாழைப்பழத்தையும் தேங்காயையும்
தாம்பூலத்துடன் துலா
மாஸத்தில் ஸ்நாநம் செய்து
காவேரிக் கரையில் கொடுப்பவன்
ஸ்வர்க்க லோகத்தில்
ரம்பையுடன் ரமிப்பான்.
இதில் சிறிதளவும் ஸம்சயமில்லை.
பித்ருக்களை
உத்தேசித்துத் தில தானத்தை
(தர்ப்பணத்தை)ச் செய்கிறவன்
கயைக்குச் சென்று செய்த
ச்ராத்தத்தின் பலனைப்
பெறுவான். குளிரினால்
பீடிக்கப்பட்டவர்களுக்குக்
கம்பள தானம் செய்பவன்
வாதரோகத்திலிருந்து
விடுபடுவான். காவேரிக்
கரையில் அறுசுவையுடன்
கூடிய உணவை அளிப்பவன்
தேவனாகவே பிறப்பான்.
காவேரிக் கரையில் அரங்கநகரப்பனை
மனத்தில் தியானம் செய்து
கொண்டு ஸ்நாநம் செய்து
எதை எதைக் குடும்பியான
அந்தணருக்குக் கொடுக்கிறானோ
அதுபோல் கோடிக்கணக்கான
மடங்கு பலனைப் பெறுகிறான்.
ஹரிச்சந்த்ரனே,
மற்றொரு விஷயத்தையும்
கேள். கங்கை என்னும் நதி
எம்பெருமானின் திருவடியிலிருந்து
உண்டானது; ஸர்வ பாபங்களையும்
போக்கடிக்க வல்லது.
நூறு யோஜனைக்கு அப்பால்
இருந்துகொண்டு 'கங்கை
கங்கை' என்று அழைத்துக்
கிணற்றிலோ குளத்திலோ
ஸ்நாநம் செய்தாலும் ஸர்வ
பாபங்களும் போகும் என்று
சாஸ்த்ரம் கூறும். அப்படியிருக்க,
ஸாக்ஷாத் கங்கை நதியிலேயே
அப்படிச் சொல்லி, ஸ்நாநம்
செய்பவனின் பலனைப் பற்றிக்
கூறவும் வேண்டுமோ? அப்படிப்பட்ட
மஹிமையுள்ள கங்கையும்,
இந்த உலகிலுள்ள மூன்றரைக்
கோடி புண்ய தீர்த்தங்களுடன்
எம்பெருமானின் உத்தரவினால்
துலா மாஸத்தில் காவேரியில்
சேருகிறது.
நூறு வருஷ
காலம் கங்கையில் விடாமல்
நியமத்துடன் ஸநானம் செய்தால்
அடையும் பலனைத் துலா
மாஸத்தில் அரங்கநகரப்பனைச்
சூழந்துள்ள காவேரியில்
மூன்று தினங்கள் ஸ்நாநம்
செய்வதனால் அடைந்துவிடுகிறான்.
ஒரு
ஸமயம் கங்காதேவி நான்முகனைப்
பார்த்து, "ப்ரஹ்மதேவரே!
நான் தேவரீருடைய கமண்டலு
ஜலத்தினால் எம்பெருமானுடைய
திருவடிகளை அலம்பும்போது
உண்டானவள். அப்படிப்பட்ட
என்னிடத்தில் வருஷம்
முழுவதும் பாபிகள் வந்து
ஸ்நாநம் செய்து, அவர்கள்
சுத்தராகி பாபத்தை முழுவதும்
என்னிடம் கொடுத்துவிடுகிறார்களே.
இந்த என்னுடைய பாபம்
என்ன செய்தால் போகும்?"
என்று கேட்டாள்.
இதைக்
கேட்ட நான்முகன், "நீ துலா
மாஸத்தில் காவேரியில்
சேர்ந்துகொள். உன் பாபம்
தானாகவே விலகும் என்றார்.
இதைக் கேட்ட கங்கை தன்னைப்
பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காகப்
பொன்னியாற்றில் சேருகிறது.
அப்படிப்பட்ட மஹிமை பெற்றது
இந்தக் காவேரி. 'கங்கையில்
புனிதமாய் காவிரி நடுவிபாட்டு'
என்று ஆழ்வாரும் அருளிச்
செய்தார்.
ப்ராஹ்மணி
துலா ஸ்நானத்தினால் பரிசுத்தியடைந்த
கதை:
ஸங்கல்பம், மந்த்ரம்
முதலிய எதுவும் இல்லாமலும்
வேறு ஜ்ஞாபகத்துடனும்,
உலக்கையை அமிழ்த்துவது
போல் தலையை அமிழ்த்தி
ஸ்நாநம் செய்பவனுக்குங்கூட
ஏழ் பிறவியில் உண்டான
பாபங்கள் போகும் என்றால்,
பாவசுத்தியுடனும், நியமத்துடனும்
ஸ்நானம் செய்பவனுக்குப்
பலனை கூற வேண்டுமோ?
ஒரு
ப்ராஹ்மணி, வேச்யைபோல
நடந்து இதில் ஸ்நானம்
செய்து நல்ல கதியை அடைந்தாள்.
ஸ்வர்க்க லோகத்தையும்
பெற்றாள்.
ஹரிச்சந்த்ரன்,
"அகஸ்த்ய முனிவரே, ப்ராஹ்மணி
எனபவள் யார்? யாருடைய
மனைவி? அவள் எப்படிப்பட்டவள்?
ஏன் வ்யபிசாரிணியாக ஆனாள்?
ஸ்வர்க்கத்தை எப்படி
அடைந்தாள்? இந்த வரலாற்றை
அடியேனுக்கு விஸ்தாரமாக
தேவரீர் உரைத்தல் வேண்டும்.
உலகத்தின் நன்மைக்காக
அன்றோ நீங்கள் இருப்பது?
ரஹஸ்யமான விஷயங்களை எனக்கு
உபதேசிக்க வேண்டும்"
என்றான்.
அகஸ்த்ய முனிவர்
கூறலானார் - சிறந்த அரசனே,
இந்த ப்ராஹ்மணியின் கதையை
விஸ்தாரமாகக் கூறுகிறேன்.
ஸஹ்ய மலையிலிருந்து உண்டான
காவேரியின் ப்ரபாவத்தை
இதிலிருந்தும் நீயே நன்கு
உணருவாய். அவதானத்துடன்
கேள்.
முன்பொருகால்,
வைகையாற்றின் கரையில்
திருமாலிருஞ்சோலை மலையருகில்
அழகிய ஒரு பட்டணம் இருந்தது;
தங்கமயமான ப்ராகாரங்கள்
சூழ்ந்தது. யானைகளும்
குதிரைகளும் தேர்களும்
நிரம்பியது. நான்கு வர்ணத்தினரும்
அங்கு வாழந்து வந்தனர்.
அங்குள்ளவர்கள் மன நிம்மதியையும்
புஷ்டியையும் பெற்றவர்கள்.
இயல், இசை, நாடகங்களிலும்
பல கலைகளிலும் தேர்ச்சி
பெற்ற பலரும் இருந்தனர்.
ஆகாயமளாவிய உயர்ந்த மாடங்கள்
சூழ அந்த நகரம் விளங்கியது.
அதில், ஐம்புலன்களை அடக்கினவனும்,
பொறுமையுள்ளவனும், பேராசையற்றவனும்,
விஷ்ணுவிடத்தில் பக்தியுள்ளவனுமான
வேதராசி என்னும் அந்தண
மஹாயோகி ஒருவன் வசித்து
வந்தான். அவன் தன் பெயருக்குத்
தக்கபடி வேதமனைத்தையும்
கற்றவன். வேதங்களின்
அர்த்தங்களை நன்கு உணர்ந்து
அதன்படி நடப்பவன். பஞ்ச
மஹாயஜஞத்தை விடாமல் நடத்துபவன்.
ப்ராதக்காலத்திலேயே
சோம்பலை விட்டு எழுந்திருந்து
ஸ்நாநம் செயபவன்.
இவனுக்குச்
சந்த்ரகாந்தை என்ற மனைவி
இருந்தாள். அவள் தன் கணவன்
சொற்படி நடப்பவள்; கற்புள்ளவள்;
பரம ஸாது. சுட்டுரைத்த
நற்பொன் போல் மேனியுள்ளவள்.
நல்ல யெளவனப் பிராயத்தில்
இருப்பவள். எப்போதும்
ஆபரணங்களைக் கொண்டு
அலங்கரித்துக் கொள்பவள்;
புன்மறுவலுள்ளவள்; தொண்டை
வாயாள். உலகத்தையே மோஹிக்கும்படி
செய்யக்கூடிய அழகையுடையவள்.
கணவனான வேதராசிக்குச்
சோம்பலோ, வேறு விதமான
எண்ணமோ இல்லாமல் பரிசர்யை
புரிந்து வந்தாள்.
இவளது
பக்கத்து வீட்டில் வித்யாவளி
என்னும் ஒரு ப்ராஹ்மண
ஸ்த்ரீ வஸித்து வந்தாள்.
இவள் சந்தரகாந்தைக்கு
எல்லா விதத்திலும் நேர்மாறானவள்.
பர்த்தாவின் பிராணனை
வாங்கும் தன்மையுள்ளவள்;
கெட்ட நடத்தையுள்ளவள்;
அயற்பெண்களின் பாதிவ்ரத்யத்தையும்
அழிப்பவள். இவர்கள் இருவரும்
பக்கத்தில் இருந்ததனால்
சில சமயம் ஒன்று சேர்ந்து
பேசுவதுண்டு.
ஒரு ஸமயம்,
வித்யாவளி சந்தரகாந்தையைப்
பார்த்து, "என் கண்களுக்கு
ஒப்பானவளே, சந்தரனைப்
போல அழகியவளே, ஏதோ நீ
மனத்தில் நினைத்துக்
கொண்டவளைப் போலக் காண்கிறாய்.
ரஹஸ்யமாக இருந்தாலும்
அதை என்னிடம் சொல்லு.
உனக்கு நான் எப்போதும்
பிரியத்தையே தேடுகிறவள்.
உன் அருகில் பர்த்தா
எப்போதும் இருந்த போதிலும்
உனக்கு அடங்கினவனாக இரான்
என்று தோன்றுகிறது.
உன் அழகைக் கண்டால் யார்தாம்
மயங்கமாட்டார்கள்? நதியில்
போகும் ஆற்று ஜலம்போல்
யெளவனம் நிலையாக இராது.
எப்போது எதை அடைய வேண்டுமேன்று
விரும்புகிறோமோ அதை
அப்போதே அநுபவிக்க வேண்டும்.
நீ புருஷனுடன் சேருவதை
விரும்பியவள் போல் காண்கிறாய்."
என்றாள்.
இதைக் கேட்டதும்
சந்தரகாந்தை கோபமும்
வெட்கமும் கொண்டு, "நீ
சொல்லுவது நன்றாயில்லை.
உனக்கு நான் பதில் கூறுவது
உசிதமல்ல. ஆயினும் உனக்குப்
பயந்து கூறுகிறேன். ஆண்
பெண் சேரும் காலம் ரதி
காலம் எனப் படும். மாத
விலக்கான ஐந்தாவது தினம்
ஆரம்பித்துப் பதினாறு
பதிநாறு தினங்கள் வரைதான்
சேரும் காலம். அதற்குப்
பிறகு சேரக்கூடாது என்று
சாஸ்த்ரங்கள் சொல்லுகின்றன.
அந்தப் பதிநாறு தினங்களிலும்
சேரக்கூடாத தினங்களும்
உண்டு. ஷஷ்டி, அஷ்டமி, ஏகாதசி,
த்வாதசி, சதுர்த்தசி,
அமாவாஸ்யை, பெளர்ணமி,
ஸங்க்ரமணம் (மாஸப்பிறப்பு),
ஜன்ம நக்ஷத்ரம், ச்ரவணம்,
வ்ரத தினம், பகல், ஸந்த்யை
இவற்றில் சேரக்கூடாது
என்று சாஸ்த்ரம் சொல்லுகிறது.
இந்த நிஷித்த தினங்களில்
சேர்ந்து கர்ப்பம் உண்டானால்
பிறக்கும் குழந்தை அல்பாயுஸ்ஸாகவோ
கோபமுள்ளவனாகவோ ரோகமுள்ளவனாகவோ
ஆரோக்மற்றவனாகவோ பெற்றோர்களை
ஹிம்ஸிப்பவனாகவோ ஆவான்.
அநிஷித்த தினங்களில்
உண்டாகும் குழந்தை வித்வானாகவும்,
நீண்ட ஆயுளை உடையவனாகவும்,
தனிகனாகவும் ஆவான் என்று
என் கணவர் என்னிடம் சொல்லி,
அநிஷித்த தினங்களில்
சேருவார்." என்றாள்.
இதைக்
கேட்டதும் வித்யாவளி
கூறலானாள் :- " பாக்கியமற்றவளே!
உலகில் ஒவ்வொருவனும்
தான் மிகுந்த ஸுகத்தை
அடைய வேண்டுமென்றே விரும்புவான்.
ரோகமில்லாமலும் கிழத்தனமில்லாமலும்
இருக்க வேண்டும்மென்று
நினைப்பான். அழகான இந்த
உன் வயதை ஏன் வீணாக்கிக்
கொள்ளுகிறாய் ? பக்குவமான
பழத்தைச் சரியான வேளையில்
உண்ணாமல் அப்படியே வைத்தவிட்டால்
அது அழகித்தானே போகும்?
வஸ்த்ரங்களுக்கு வெயிலும்,
மனிதர்களுக்கு நடந்து
செல்வதும், குதிரைகளுக்கு
ஒரே இடத்தில் இருப்பதும்,
பெண்களுக்குப் புருஷனுடன்
சேராமலிருப்பதும் கிழத்தனத்தைக்
கொடுக்கும்; ரோகத்தையும்
கொடுக்கும். இப்படி
நாள் நக்ஷத்ரங்களைப்
பார்த்து உன் கணவர் உன்னுடன்
சேராமலிருந்தால் உன்
யெளவனம் வீணாகப் போய்விடுமே.
கிழவியான பிறகு உன்னை
ஒருவருமே விரும்பமாட்டார்களே.
உன்னுடன் சேராமலிருந்தால்
கணவருக்கும் ரோகம் உண்டாகிவிடும்.
பிறகு உன்னை அவர் எப்படி
அநுபவிக்கமுடியும்? என்தோழி
என்னிடம் உன்னையும் உன்
கணவரையும் பற்றிப் பல
சொல்லியுள்ளாள். உன்
கணவர் வஞ்சகம், ஏமாற்றுகிறவர்,
வேறு ஸ்த்ரீயினிடத்தில்
ஆசையிள்ளவர். சக்தியுள்ள
உன்கணவர் உன்னையும் அணுகாமல்
எப்படி இருக்க முடியும்?
இதைக்கொண்டே நீ அவர்
வேறு பெண்ணிடத்தில் ஈடுபட்டிருக்கிறார்
என்பதை உணராயோ? என்றாள்.
இதைக்
கேட்டதும் சந்த்ரகாந்தை,
"முட்டாளாகவும் தூர்த்தராகவும்
கெட்ட நடவடிக்கையுள்ளவராகவும்
என் கணவர் இருந்தாலும்
அவரே எனக்குத் தெய்வம்.
பல ரோகங்களால் பீடிக்கப்பட்டவராக
அவர் இருந்தாலும் அவருக்கே
நான் பணிவிடை செய்வேன்.
எனக்கு மற்றொரு தெய்வமும்
வேண்டாம். வேறு அநுஷ்டானமும்
வேண்டாம். கடவுளிடத்தில்
பக்தியும் வேண்டாம்.
என் கணவரே எனக்கு ஈச்வரன்,
கணவனை நிந்திப்பவன் நாய்க்கு
ஸமானமானவள்"" என்றாள்.
வித்யாவளி,
" ஐயோ உலகமறியாதவளே! உருவசி,
ரம்பை, மேனகை, புஞ்ஜிகஸ்தலை
முதலிய தேவதாஸிகளைப்
பற்றி நீ கேள்விப்பட்டதில்லையோ?
உன் அங்கங்களின் அழகை
ஏன் வீணடித்துக் கொள்ளுகிறாய்?
இங்குள்ளவர்களோ பரலோகத்திலுள்ளவர்களோ
ஸுகத்தையே விரும்புகின்றனர்.
உன் கணவனால் உனக்கு ஸுகமே
இல்லை. ஸ்வர்க்கலோகம்
என்பது உனக்குக் கிட்டும்
என்று சொல்ல முடியாது.
பெரும்பாலும் ஜந்துக்கள்
நரகத்தைத்தான் அடைகின்றனர்.
புண்ய பாபங்களை நான்
நன்கறிவேன். பர்த்தாவைக்
கொன்று பயமற்றவளாய்
ஸ்வாதீனையாக இருக்க வேண்டும்.
பிறர்க்கு அடங்குபவன்
ஸுகத்தை அடைய மாட்டான்;
சிறந்த தபஸ்ஸையும் செய்ய
முடியாது. ஐம்புலன்களைக்
கொண்டு இங்கு ஸுகத்தை
அடையாதவன் ம்ருகப்ராயன்.
ஈச்வரன் நமக்கு இத்தனை
அழகைக் கொடுத்தும் என்ன
பயன்? நீயே யோசனை செய்து
பார்" என்று சொல்லி, இவளது
தூய மனத்தைக் கலக்கிவிட்டாள்.
சந்த்ரகாந்தை
முன் செய்த வினையினால்
நல்லறிவு பெற்றிருந்தும்
இவளுடைய துர்ப்போதனையில்
மயங்கிவிட்டாள். அவள்
கணவன் பேச்சைக் கேட்பதில்லை;
சஹஸ்யமாகப் பல புருஷர்களிடம்
பேச ஆரம்பித்தாள்; தன்
நல்லோழுக்கத்தைக் கைவிட்டாள்.
'கண்கள் முதலிய புலன்களுக்குக்
கண்டதே ஸூகம்' என்று பஹிரங்கமாகவும்
கெட்ட நடத்தையில் ஈடுபட்டாள்.
இதைக் கண்டதும் கணவன்,
'முன்பிருந்த மனைவியா
இவள்!' என்று ஸந்தேஹமுற்று,
'இவள் அடங்க மாட்டாள்'
என்று நினைத்துத் தன்
இல்லத்தையும் செல்வத்தையும்
மனைவியையும் விட்டு,
இதுவரை இவளிடம் கூடியிருந்ததனால்
உண்டான பாபத்தைக் கழிப்பதற்குக்
காவேரி நதிக்கரையில்
வசிக்க ஆரம்பித்தான்.
சந்த்ரகாந்தை,
இல்லத்தையும் மிகுந்த
சொத்துக்களையும் விட்டுத்
தன் கணவன் வெளியேறியதை
நினைத்து உள்ளம் மகிழ்ந்து,
மேலும் தன் விருப்பப்படி
நடக்க ஆரம்பித்தாள்.
அவ்வூரிலுள்ள அழகிய யுவாக்களை
அழைத்துக் காலை, பகல்,
மாலை, இரவு என்ற வித்தியாசமில்லாமல்
அநேக போக உபகாரணங்களைக்
கொண்டு வித்யாவளி கூறியது
போல் ஸுகங்களை அநுபவித்தாள்.
இதைக்
கண்ட ஆகாயத்திலுள்ள தேவதைகள்,
முன்பு இவள் கணவனிடத்தில்
நடந்துகொண்ட விதத்தையும்,
இப்போது இருக்கும் இருப்பையும்
நினைத்து ஆச்சரியப் பட்டனர்.
ஹரிச்சந்த்ர மஹாராஜனே!
கணவனையே தெய்வமாகக் கொண்டும்,
அவன் உண்ணாது தான் உண்ணாமலிருந்தும்,
எப்போதும் அவனுக்கே
பணிவிடை செய்தும் போந்த
இவளுடைய மனத்தையும்,
தீய ஸ்வபாவமுள்ளவளுடைய
சேர்க்கை எப்படிக் கெடுத்துவிட்டது,
பார்த்தாயா. ஆகவே, துர்ஜனங்களுடைய
சேர்க்கை எப்போதும்
பொல்லாதது. அதனால் அதை
அடியோடு விலக்க வேண்டும்
என்று பெரியோர் கூறுகின்றனர்.
இப்படி
இவளுடைய நடத்தையைக் கண்ட
அவ்வூர் அரசன், 'இவளால்
நம் ஊருக்கே கெடுதல்
ஏற்படும்' என்று எண்ணி
இவளை ஊரிலிருந்து வெளிப்படுத்திவிட்டான்.
சந்த்ரகாந்தை வெட்கமற்றவளாய்
மிகவும் உல்லாஸத்துடன்
சோரஜாரர்களை அழைத்துக்
கொண்டு வேறு இடம் சென்று
அவர்கள் திருடிக் கொணர்ந்து
கொடுத்த பணத்தைக் கொண்டு
அவர்களுடன் ஸுகமாகக்
காலத்தைக் கழித்தாள்.
சில
காலமானதும், இவள் உடலில்
பெரிய ரோகங்கள் உண்டாயின.
இவளிடம் அன்பு கொண்ட
ஜாரர்களே இவள் நோயைக்
கண்டு இவளை வெறுத்தனர்.
ரோகத்தாலும் பசியாலும்
பீடிக்கப்பட்டு மிகவும்
மனவருத்தடைந்து உயிர்
நீத்தாள்.
யமபடர்கள்
இவளை அழைத்துக்கொண்டு
போய் சித்திரவதை செய்து
இருபத்தொரு விதமான நரகங்களிலும்
தள்ளினார்கள். இவள் நிசுளா
பட்டணத்தில் மறுபடி தாஸியின்
வீட்டில் பிறந்தாள்.
அங்கும் க்ஷயம் குஷ்டம்
முதலிய ரோகங்களால் பீடிக்கப்பட்டாள்.
'ஐயோ! ஐயோ!' என்று எப்போதும்
நோவு தாங்காமல் அழுதுகொண்டே
இருந்தாள். புழு முதலிய
விஷப்பூச்சிகளால் உடலெல்லாம்
அழுகிவிட்டது. முதலில்
கணவனுக்குச் செய்த பணிவிடையால்
உண்டான புண்யம் காவேரிக்
கரையில் இவளைக் கொண்டு
போய் விட்டது.
அங்கு
ஒரு மஹான் காவேரி மாஹாத்ம்யத்தை
ஜனங்களுக்குச் சொல்லிக்
கொண்டிருந்தார். அதைக்
கேட்டதும் தன் பாபங்கள்
தொலைய நினைத்துக் காவேரியில்
துலா மாதத்தில் மூன்று
நாள் மிகவும் பக்தியுடன்
இவள் ஸ்நானம் செய்தாள்.
உடனே மரணமடைந்தாள்.
அப்பொழுது,
அழகிய உருவம் கொண்ட
யமபடர்கள் உயர்ந்த விமானத்தில்
இவளை அழைத்துக்கொண்டு,
தேவ லோகத்தை அடைவித்தனர்.
ஆங்காங்கு வழியில் பழங்களையும்
புஷ்பங்களையும் சந்தனங்களையும்
உயர்ந்த அன்ன வஸ்த்ரங்களையும்
கொடுத்து இவளை உபசரித்தனர்.
"மஹாபாவியான உன்னை, காவேரியில்
ஸ்நானம் செய்ததனால் இவ்வளவு
உபசாரத்துடன் தேவலோகத்துக்கு
அழைத்துச் செல்லுகிறோம்"
என்றனர். சந்த்ரகாந்தை
பொன்னியாற்றை வணங்கி
ஸ்துதி செய்துகொண்டே
சென்றாள்.
முன்பு இவள்
மனத்தைக் கலக்கின வித்யாவளி
செந்நாய்களாலும் பன்றிகளாலும்
கழுத்திலே கடிக்கப்பட்டவளாய்,
பயங்கரமான யமபடர்களால்
நரகத்துக்கு அழைத்துச்
செல்லப்பட்டுப் பலவிதமான
யாதனைகளை அடைந்தாள்.
பிறகு நாயாக இருபது பிறவி
அடைந்தாள். மூன்று பிறவி
பன்றியாகவும் பிறந்து
பலவித அல்லல்களுக்கு
ஆளானாள்.
இவள் ஒரு சமயத்திலும்
கணவனிடத்தில் நன்னடத்தையுடன்
இல்லாதவளானபடியால் இவளுக்கு
உயர்ந்த புண்ய தீர்த்தமான
காவேரிக் கரையை அடைய
வழியே இல்லாமற் போய்விட்டது.
ஆகவே நற்கதி பெறவும்
மார்க்கமில்லை.
சந்த்ரகாந்தை
நடுவில் எவ்வளவு பாபங்களைச்
செய்தவளாக இருந்தபோதிலும்
துலா காவேரி ஸ்நானத்தினால்
நல்ல கதியடைந்து வாழ்ந்தாள்.
ஆக, இதன் பெருமை அளவிட
முடியாதது.