துலா காவேரி
ஹரிச்சந்தரன்,
"மிகப் பிரபாவசாலியான
அகஸ்த்ய மாமுனிவரே, சிறந்த
பதிவ்ரதையான சந்திரகாந்தையின்
கதையையும், துலாகாவேரி
ஸ்தானத்தின் பிரபாவத்தையும்
அறிந்தேன். எப்போது
துலா மாதம் வரும் என்பதை
எதிர் பார்க்கிறேன்.
அந்த மாதத்தில் அரங்கநகரப்பனைச்
சூழ்ந்துள்ள காவேரியில்
ஸ்நானம் செய்ய வேண்டும்
என்ற விருப்பம் எனக்கு
அதிகரித்துக் கொண்டே
இருக்கிறது. மேலும் இதன்
மகிமையை எனக்கு விஸ்தாரமாகக்
கூற வேண்டும். சந்திரகாந்தையின்
கணவனான வேதராசி, தன் மனைவியை
விட்டுக் காவேரிக் கரையை
அடைந்தான் என்று கூறினீர்களே.
பிறகு அவன் என்ன செய்தான்?"
என்று கேட்டான்.
அகஸ்தியர்
கூறினார் - வேதராசி என்ற
அந்தணன் ஸஹ்யஜையின் கரையிலேயே
வாஸம் செய்தான். அந்தப்
புண்ய தீர்த்தத்திலேயே
நியமத்துடனும், ரங்கநாதனிடத்தில்
மிக்க பக்தியுடனும் துலா
மாஸத்தில் காலையில் தினமும்
ஸ்நானம் செய்தான். ஒரு
நாள் திடீரென்று ப்ரஜ்ஞையற்றுக்
கீழே விழுந்தான். இதைக்
கண்டு ஜனங்கள் அனைவரும்
கூடினர். அதே ஸயமத்தில்,
ஹம்ஸங்களாலே அலங்கரித்ததும்
புஷ்பங்களின் மணம் நிறைந்ததுமான
கோடி ஸூர்ய ப்ரகாசமான
விமானத்தைக் கண்டனர்.
அதில் அழகிய உருவமுடைய
யமபடர்களையும் பார்த்தனர்.
அதன் நடுவில் ஸர்வ அலங்காரத்துடன்
வேதராசி என்னும் அந்தணனையும்
பார்த்தனர். இந்த நிகழ்ச்சியைக்
கண்ட அனைவரும், காவேரியில்
ஸ்நானம் செய்ததனால் ஏற்பட்ட
ஆச்சரியகரமான விஷயத்தை
ஒருவரிடம் ஒருவர் கூறி
மகிழ்ந்தனர்.
விமானத்தில்
சென்ற அந்தணன் யமலோகத்துக்கு
அழைத்துச் செல்லப்பட்டான்.
அங்கு ஒரு பக்கம், 'ஐயோ,
ஐயோ! என்னை விட்டுவிடு!'
என்ற சப்தத்தையும், மற்றொரு
பக்கம், 'பால் இதோ; பழம்
இதோ; இவற்றைச் சாப்பிடு'
என்ற சப்தத்தையும் கேட்டு
ஆச்சரியம் அடைந்து, "யம
லோகத்தின் நடுவில் என்னை
அழைத்துச் செல்லுங்கள்"
என்று யமபடர்களைப் பார்த்துச்
சொன்னான். அவர்கள் அப்படியே
அழைத்துச் சென்றனர்.
அங்கே பால் பழம் தயிர்
நெய் பக்ஷணம் ஆகியவற்றைச்
சிலருக்குக் கொடுத்துக்
கொண்டிருப்பதையும்
சந்தனம் புஷ்பம் தூபதீபம்
இவற்றினால் உபசாரம் செய்து
கொண்டிருப்பதையும்
பார்த்தான். "நீங்கள்
பூலோகத்தில் அந்தணர்களுக்கு
எதை எதைக் கொடுத்தீர்களோ
அதை இங்கே பன்மடங்கு
பெற வேண்டும். யாசகனாகத்
தன் இல்லத்தை நாடி வந்தவனுக்கு
இல்லை என்று சொல்லாமல்
கொடுக்கிறவனுக்கு அளவற்ற
இன்பத்தைக் கொடுப்பதற்கு
இங்கு எங்களை நியமித்திருக்கிறார்கள்.
தானம் செய்பவன் எங்கும்
கெட்டுப் போகமாட்டான்.
தானம் செய்யாதவனுக்கு
இரண்டு உலகத்திலும் ஸுகம்
கிடையாது. தானம் செய்யாதவனின்
பணம் முதலிய சொத்துக்களும்
புத்திராதிகளும் அழிந்துவிடுவார்கள்.
கொடாதவனுக்கு, கோஸம்ருத்தி
உண்டாகாது; நரகத்தையும்
அடைவான்" என்று சிலர்
சொல்வதையும் காதால்
கேட்டான்.
மற்றொரு
பக்கம் திரும்பிப் பார்த்தான்.
"கற்புடைய பெண்களே, நீங்கள்
பூலோகத்தில் உங்கள்
கணவன்மாரிடத்தில் பக்தியுடன்
இருந்து பணிவிடை செய்தீர்கள்.
அழகில்லாதவனாயும், கோபம்
உள்ளவனாயும் உங்கள் கணவன்
இருந்தபோதிலும் மறுமாற்றம்
கூறாமல் பக்தியைச் செலுத்தினீர்கள்.
இப்படி இருந்த உங்களுக்கு
எவ்வளவு உபசாரம் செய்தாலும்
போதாது" என்று சொல்லிக்
கொண்டே சில பெண்கள்
பதிவ்ரதா ஸ்த்ரீகளுக்குச்
செய்யும் உபசாரத்தைப்
பார்த்தான். 'பூவுலகில்
செய்யும் நற்காரியங்கள்
என்றும் வீணாவதில்லை.
உயர்ந்த பயனை அவை கொடுத்தே
தீரும். வேதம், ஸ்ம்ருதி
முதலியவற்றில் கூறப்பெறும்
ஸத்கர்மங்களின் ஏற்றம்
அளவிட முடியாதது' என்று
எண்ணினான்.
இப்படி நினைத்துக்கொண்டிருந்த
போது மற்றொரு பக்கத்திலிருந்து
பயங்கரமான சப்தம் ஒலித்தது.
அதைக் கேட்டதும் வேதராசி
திரும்பிப் பார்த்தான்.
கத்தி, கோடரி, கதை முதலியவற்றை
வைத்துக்கொண்டு சில
யமபடர்கள் சில பாவிகளைக்
கையால் பிடித்து 'அறு,
வெட்டு, குத்து' என்று
சொல்லும் சப்தத்தைக்
கேட்டான். தகதகவென்று
எரியும் மணலில் சிலரைப்
புரட்டுவதைக் கண்டான்.
சிலரை முட்களில் தள்ளி
நெருப்பால் கொளுத்துவதையும்
கண்டான்; விஷத்தைக் கக்கும்
பாம்பு, தேள் முதலியவை
சூழ்ந்த பள்ளத்தின் சிலரைத்
தலைகீழாக நிறுத்தி, ஆயுதங்களினால்
ஹிம்ஸை செய்கிற யமபடர்களையும்
கண்ணுற்றான்.
'ஜலமும்
ஜனமும் இல்லாத இவ்விடத்தில்
எங்களைக் காக்கச் சிநேகிதர்களும்
பந்துக்களும் இல்லையே!
ஐயோ! நாங்கள் என்ன செய்வோம்?'
என்று சிலர் சொல்லிக்
கொண்டிருந்தனர். அவர்களைப்
பார்த்து யமபடர்கள்,
"நீங்கள் பிறருடைய பொருள்களை
முன்பு அபகரிக்கவில்லையா?
காரணமில்லாமல் பிறரை
ஹிம்ஸிக்கவில்லையா? வேதமறிந்து
நல்லொழுக்கத்துடன்
வாழும் அந்தணர்களை அவமதித்தீர்களே!
ஸ்நானம், ஸந்த்யை முதலியவற்றை
விட்டு, உண்டியையும்
உடையையும் உகந்து கெட்ட
நடத்தையில் மூழ்கினீர்களே.
ஒரு நாள் கூடத் தேவதையை
அர்ச்சிக்கவில்லையே!
'பித்ரு ஸ்ராத்தம் ஏன்
செய்ய வேண்டும்?' என்று
சொன்னதுடன் செய்தவர்களையும்
தடுத்தீர்களே! எம்பெருமானைத்
துதிக்க ஏற்பட்டிருக்கும்
நாவைக் கொண்டு பண ஆசையால்
மகாபாபிகளைத் துதித்தும்
மகாபாகவதர்களைத் தூஷித்தும்
பொழுது போக்கினவர்கள்
நீங்கள். அந்தணர் குலத்தில்
பிறந்தும், பால் அரிசி
முதலியவற்றை விற்று ஜீவனம்
செய்தீர்கள். 'தெய்வமில்லை,
கோயிலை இடிக்க வேண்டும்.
வீணாகப் பால் தயிர்களை
ஏன் அபிஷேகம் செய்ய வேண்டும்?
ஹோமம் என்று சொல்லி
நெய்யை ஏன் வீணாக்க வேண்டும்?'
என்றெல்லாம் ஜனங்களுக்கு
உபதேசம் செய்து நாஸ்திகத்தைப்
பரப்பியவர்கள் நீங்கள்.
கன்றுக்குப் பாலில்லாமல்
எல்லாவற்றையும் கறந்தவர்கள்.
வயல்வரப்பைக் கொஞ்சங்
கொஞ்சமாகத் தள்ளி அயலானுடைய
வயலை அபஹரித்தீர்கள்.
நீங்கள் ப்ராஹ்மண போஜனத்தைத்
தடுத்தவர்கள்; பெற்ற
தாய் தந்தையரை விரட்டி,
மனைவியின் பேச்சைக் கேட்டவர்கள்.
குலந்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும்தான
நாராயண நாமத்தை நீங்கள்
ஒருபோதும் ஜபித்ததில்லை;
புண்ணிய க்ஷேத்திரத்துக்குச்
சென்றதில்லை; புண்ணிய
நீரில் ஸ்நானம் செய்ததில்லை.
'நாம் பணக்காரன், கல்வி
கற்றவன், உயர்ந்த குலத்தில்
பிறந்தவன், பெருத்தவன்,
நமக்கு நிகர் யார்?' என்றெல்லாம்
முன்பு மார்பைத் தட்டிக்
கொண்டு அக்கிரமங்களை
செய்தவர்கள் நீங்கள்.
ஆகையால் உங்களை இத்துடன்
விடுவதில்லை; இன்னமும்
தண்டிக்கப் போகிறோம்"
என்றனர்.
இம்மாதிரி
சொல்லிக் சிலரை ஆகாயத்தில்
சுழற்ற ஆரம்பித்தனர்.
சில பாபிகளைப் பாறாங்கல்லில்
தள்ளி அடித்தனர். சிலரை
முதுகில் கத்தியால் வெட்டிப்
புண்களில் உப்பையும்
மிளகாயையும் விஷத்தையும்
சேர்த்து எரிக்கும்படி
செய்தனர். பர்த்தாவிடம்
சண்டை செய்த பெண்களைப்
பார்த்து, "நீங்கள் பர்த்தாவை
ஹிம்ஸித்தவர்கள், மாமியார்
மாமனார் என்ற கெளரவத்தை
விட்டு அவர்களை அழச்
செய்தவர்கள். பரபுருஷனிடம்
காதலுற்றவர்கள். ஆகையால்
அந்தப் பாவப் பலனை இப்போது
நீங்கள் அநுபவிக்க வேண்டும்"
என்று சிலர் மிரட்டிக்
கொண்டிருந்தனர். இம்மாதிரி
மிரட்டுவதை அந்தணன் கேட்டான்.
ஹா ஹா என்ற சப்தமே வழியில்
நிறைந்திருந்தது. இவற்றைக்
கேட்டும், அங்குள்ளவர்களின்
கஷ்டங்களைக் கண்டும்
வேதராசிக்கு இரக்கம்
பிறந்தது.
'இப்படிக்
கஷ்டப்படுகிறவர்களைக்
கண்ணால் பார்த்துச் செல்வது
பொருத்தமன்று. இவர்களின்
கஷ்டங்களை நீக்க வேண்டியது
நம் கடமை. ஒருவன் வருந்தும்போது
அதை நீக்கும் சக்தி கொண்டு
மற்றொருவன் வாளாகப்
போவது நியாயமில்லை என்றும்,
அப்படிப் போனால் பாவம்
சேரும் என்றும் சாஸ்திரங்கள்
கூறுகின்றன. பிறர்க்கு
உபகாரம் செய்வதற்கென்றே
இறைவன் நமக்கு உடலைக்
கொடுத்திருக்கிறான்.
ஆகையால் இவர்களை இந்தக்
கஷ்டங்களிலிருந்து எப்படி
நீக்குவேன்?" என்று சிந்திக்கலானான்.
அவனுக்கு
ஓர் எண்ணம் உண்டாயிற்று.
'துலா மாதத்தில் காவேரியில்
நியமத்துடன் ஸ்நானம்
செய்தேனே. அந்த ஸ்நானத்துக்கு
அளவில்லாத பலன் உண்டென்று
பெளராணிகர், புராணம்
கூறும்போது சொன்னார்.
நான் செய்த ஸ்நானங்களில்
மூன்று தினங்களில் செய்த
ஸ்நான பலனை இவர்களுக்குக்
கொடுப்பேன்' என்று தீர்மானித்தான்.
அவன்
எம்பெருமானைத் தியானம்
செய்துகொண்டு, தேவதைகள்,
கந்தர்வர்கள், ரிஷிகள்
எல்லாருடைய காதிலும்
விழும்படி, "துலா மாதத்தில்
மூன்று தினங்கள் காவேரியில்
நான் ஸ்நானம் செய்த பலனை
இவர்களுக்குக் கொடுக்கிறேன்.
இது உண்மை உண்மை உண்மை"
என்று உரக்கச் சொன்னான்.
இதைக்
கேட்டதுமே அங்கு இருந்தவர்கள்
தங்கள் துன்பங்களிலிருந்து
நீங்கி மனநிம்மதி அடைந்தனர்.
தாகம் பசி முதலியவற்றிலிருந்து
விடுபட்டனர். யமபாசங்கள்
அறுந்து கீழே விழுந்தன.
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு
தேவவிமானம் வந்து அழைத்துச்சென்றது.