ஒன்பதாம் அத்தியாயம்
நாரத
மகரிஷியைப் பார்த்து
முனிவர்கள் கூறுகின்றனர்.
ரிஷிச்ரேஷ்டரே உம்முடைய
அளவற்ற தயையால் ஒன்பது
ந்ருஸிம்ஹனுடைய மஹிமையையும்
ந்ருஸிம்ஹனின் அவதார
வைபத்தையும் சரபவ்ருத்தாந்தத்தையும்
நன்கு அறிந்தோம். எங்களது
அக்ஞானத்தை முழுமையாக
விலக்கினீர். நாரதர்
எனப் பெயர் உமக்கு பொருத்தமாக
அமைந்துள்ளது. நரனுக்கு
(மனிதனுக்கு) ஏற்பட்ட
அக்ஞானத்தைப் போக்கடிக்கிறவர்
நாரதர். த்ருபன் முதலிய
மகான்கள் உம்முடைய உபதேசத்தால்
பெருமை பெற்றனர். நாங்கள்
உம்மை ஆசார்யராக வரித்ததும்
எங்களுடைய ஸுக்ருத விசேஷமே.
நாங்களும் பாக்யமடைந்தோம்.
பரதத்வத்தை நன்கு உணர்ந்தோம்.
மேலும் ஒரு விஷயத்தை
கேட்க ஆவலுடன் உள்ளோம்.
நதிகளில் சிறந்த இந்த
பவநாசினி என்னும் நதி,
இங்கு புளியமரத்தடியில்
உண்டானதாகவும், அது பாதாளம்
சென்று திரும்பிவிட்டதாகவும்
கேள்விப்பட்டோம். அதன்
வேகத்தை யார் தடுத்தது.
உலகத்தையே மூழ்கச்செய்யும்
வேகத்தை எப்படி நிறுத்தி
கொண்டது. இதன் வரலாற்றை
க்ருபை செய்து அருளி
செய்ய வேண்டும். மேன்மேலும்
இவ்விருத்தாந்தத்தை
கேட்க நாங்கள் ஆவலுடன்
உள்ளோம் என்றனர்.
நாரதமுனிவர்
சொல்ல ஆரம்பித்தார்.
முனிவர்களே மக்கள் அனைவரும்
ஆத்மக்ஷேமத்தை கருதாமல்
செல்வம் ஸம்பாதிப்பதிலும்
அதன் மூலம் சரீர ஸுகத்தை
அடைவதிலும் தம்மை எல்லோரும்
புகழ வேண்டும். தம்மையே
ஆதரிக்க வேண்டும் என்று
நினைத்து க்யாதிலாப பூஜையில்
இறங்கி அதற்குத்தக்கவாறு
சில தர்மகார்யங்களை செய்து
கொண்டு வருகின்றனர்.
உண்மையில் தங்களது உஜ்ஜீவனத்துக்கும்
மக்களுடைய உஜ்ஜீவனத்துக்கும்
வழி தேடுவதில்லை. ஆத்ம
ஸஞ்ஜீவினியான ஞானத்தை
அடைய வழியை ஏற்படுத்துவதில்லை.
இந்த பவத்தில் இருந்து
கொண்டு வாழ்க்கையை நடத்தவே
முன்வருகின்றனர். எம்பெருமானிடம்
சென்று தங்களுக்கு ஏற்பட்ட
அடிமையை செய்ய அதாவது
ஆதிராஜ்யத்தை (மோக்ஷ
ஸாம்ராஜ்யத்தை) பெற விருப்பமடைவதில்லை.
இதற்குறிய வழியை வேதங்கள்
கூறியுள்ளன.
அந்த வழியான
பக்தி ப்ரபத்தியை சரிவர
செய்வதில்லை. லகுவான
ப்ரபத்தியை செய்வதிலும்
ச்ரத்தை இல்லை. ப்ரபத்தி
செய்து விட்டோம் என்கிற
பெயரை மாத்திரம் ஸம்பாதிப்பதில்
ஆர்வமே தவிர அதன் நியமங்களை
கைபிடிப்பதில்லை. ப்ரபத்தி
செய்வதற்கும் முன்பும்
பின்பும் ஒரே மாதிரியான
நிலையைத்தான் அடைந்துள்ளனர்.
செய்த பிறகாவது சாஸ்த்திரமார்கத்தில்
சிறிதாவது ஊன்றியிருக்கவேண்டும்
என்ற எண்ணமும் இல்லை.
செய்யும் பாபங்களில்
அநுதாபமுமில்லை. அதிலிருந்து
உபரமம் (விடுகையும்) இல்லை.
முன்பும் பின்பும் ஒரே
துராசாரம் தான். தங்களுக்கு
பணம், புகழ் நின்றுவிடும்
என்று எண்ணி திருந்துபவரும்
இல்லை. ஆக இவர்களுக்கு
பவத்தில் ஏற்படும் கஷ்டம்
எவ்வாறு நீங்கும் என்றெண்ணியும்
இதில் ஸ்நாநம் செய்வதின்
மூலமாக தங்களது துராசாரத்தை
கைவிட ஸதாசாரத்தை கைவிடிப்பார்கள்
என நினைத்தும் எம்பெருமான்
'பவநாசினி' என்னும் நதியை
படைத்தான். சடம் என்னும்
பவவாயுவை அடக்கி ஆண்ட
நம்மாழ்வார் அவதரித்தது
புளியமத்தடியில். இந்த
நதியும் தன்னிடம் ஸ்நாநம்
செய்பவர்களின் பவவ்யாதியை
போக்கடிப்பதால் புளிய
மரத்தினடியிலேயே உண்டாயிற்று.
இதனுடைய
வேகம் கங்கையைக் காட்டிலும்
கொடியது. உலகத்தையே
மூழ்கும்படி ப்ரவஹிக்க
ஆரம்பித்தது. பூலோகத்தில்
உண்டான இது பாதாளத்தையும்
அடித்துச் செல்லும் வகையில்
ஓட ஆரம்பித்தது. பாதாளத்தையடைந்ததும்
அங்குள்ள ஆதிசேஷனைக்
கண்டு இங்குள்ள எல்லாவற்றையும்
தன்னுடைய ப்ரவாஹத்தால்
அழித்துவிடுவதாக சொல்லிற்று.
எனது வேகத்தை யாராலும்
நிறுத்தமுடியாது. நீங்கள்
எல்லோரும் இவ்விடத்தைவிட்டு
வெளியேற வேண்டும் என்று
பயப்படும் வகையில் கோபிக்க
ஆரம்பித்தது.
இப்படி
பவநாசினியின் கோரமான
வார்த்தையை கேட்டு தலையை
அசைத்துக் கொண்ட ஆதிசேஷன்,
"இந்த பாதாளத்தில் நதிகளுக்கு
இடம் கிடையாது. அவை பூமியில்
தான் பிரவகிக்கும். ஆகவே
நீர் பூமியை நோக்கி
செல்வாயாக. அங்கு இஷ்டப்படி
பிரவகிக்கலாம். எல்லாவற்றையும்
சகிக்கும் தன்மையை பெற்ற
பூமிதேவி உன் வேகத்தை
பொறுத்துக் கொள்வாள்"
என்றான்.
ஆதிசேஷனின்
வார்த்தையை ஆதரத்துடன்
அங்கீகரித்து, மறுபடி
பவநாசினி பூலோகம் சென்றது.
அங்கே கருடமலையில் இருக்கும்
ஒரு புளியமரத்தை அடைந்தது.
பிராமணர்களே! ஒவ்வொருவனுக்கும்
வாக்கு, மனம், உடல் என்ற
மூன்று கரணங்கள் உள்ளன.
வாக்கின் மூலம் குற்றங்கள்
செய்பவன் பறவையாகவும்,
மனத்தால் குற்றம் செய்பவன்
சண்டாளனாகவும், உடலால்
குற்றம் செய்பவன் தாவரமாகவும்
பிறப்பான் என்று சாஸ்திரம்
கூறுகிறது. உடல் மூலமாக
செய்த வினையால் அங்கு
ஒருவன் புளியமரமாகப்
பிறந்துள்ளான். அந்த
மரத்தினிடையே இந்த நதி
சென்றது. அங்கேதான் இந்த
நதி உண்டாயிற்று.
பெரும்
புண்ணியத்தை கொண்ட நதி
உலகத்திற்கு சுத்தியை
கொடுத்து தானும் தூய்மையை
பெற்றது. அந்த புளியமரத்தின்
அடியில் உண்டான இந்த
நதி ஆதிசேஷனுடைய வார்த்தையைக்
கேட்டு, அந்த மரத்தையே
மீண்டும் அடைந்தது. அங்கே
கபாலி, பைரவன் என்ற மகானின்
புண்ணியமான தலையை ஸ்தாபித்தது.
ஜனங்கள்
வழிபடுவதற்கு உரிய அந்த
தலை எல்லோருடைய அபீஷ்டத்தையும்
கொடுக்கக்கூடியதாக
அமைந்தது. பவநாசினி கிருஷ்ணவேணியின்
சமீபத்தில், அதன் சேர்க்கையில்
இரண்டு யோஜனை தூரம்
சென்று, சமுத்திரத்தை
குறித்து சென்றது. அங்கே
தனியான நிலையில் இருந்து
கொண்டு தன் பர்த்தாவான
சமுத்திரராஜனை அடைந்தது.
கிருஷ்ணை என்ற நதியும்,
வேணி என்ற நதியும், துங்கபத்திரை
என்ற நதியும், பீமரதி
என்ற புண்ணியமான நதியும்,
மலஹாரிணி என்ற நதியும்
எப்படி தனித்தனியே சமுத்திரத்தை
அடைகின்றனவோ, அவ்வாறே
பவநாசினியும் தனியாக
சமுத்திரத்தை அடைந்தது.
தமது
தலையை பவநாசினியில் விழும்படி
வெட்டித் தள்ளிய பைரவர்
கண்ட ரூபராகத் தமது மனோரதம்
நிறைவேறியதை நினைத்து
மகிழ்ந்தவராய், ந்ருஸிம்ஹரால்
புகழப்பெற்றார். ந்ருஸிம்ஹர்,
"இவ்விதம் துஷ்கரமான
காரியத்தை செய்யும் உமக்கு
அழகிய ரூபத்தையும் அழகிய
மேனியையும் வேறு தலையையும்
வரமாகக் கொடுக்கிறேன்"
என்றார்.
பைரவர், "உக்ரமான
இந்த வேலையை செய்த எனக்கு
இந்த வரம் வேண்டாம். உமது
அருள் ஒன்றே போதுமானது"
என்று சொல்லி, கொடுக்கப்பட்ட
வரத்தை அங்கீகரிக்கவில்லை.
எல்லா தேவர்களுக்கும்
தேவனும், ஜகத்துக்கு
நாதனுமான பகவானைப் பார்த்து,
பைரவர் சொல்லத் தொடங்கினார்.
"பகவானே! பவநாசினி நதியால்
எல்லா உலகங்களுக்கும்
பெரும் விபத்து உண்டாயிற்று.
ஜகதீச்வர! உலகங்களுக்கு
க்ஷேமத்தை உண்டுபண்ணக்
கருதி, இந்த நதியை குறித்து
என் தலையை பலியாக அர்ப்பணம்
செய்தேன். இதனால் உமது
அருளுக்கு பாத்திரமானேன்.
ஆகையால் நான் விலக்ஷணமான
வேலையை செய்தவன் என்று
எல்லோராலும் போற்றப்
படுகிறேன். அனைவரும்
"இப்படி சாகசமான வேலையை
செய்து பவநாசினியின்
வேகத்தை தடுத்து நிறுத்தி
உலகங்களை காப்பாற்றினார்"
என்று என்னை புகழ்வர்.
உலக க்ஷேமத்தை விரும்பி,
பூர்ணரான பைரவர் இப்படி
இந்திரன் முதலான தேவர்களாலும்
செய்ய இயலாத சாகசமான
செயலை செய்து ரக்ஷித்தார்"
என்ற பெரும் புகழ் எனக்கு
இதனால் உண்டாயிற்று;
தாங்கள் எனக்கு மறுபடியும்
தலையைக் கொடுத்து அநுக்கிரகித்தால்,
இந்த செயலின் பெருமை
மறைந்து போய்விடும்.
தலை இல்லாமல் நான் முண்டனாகவே
அனைவருக்கும் காட்சியளித்தால்
அனைவரும் என்னைக் கண்டு
"ஏன் இவர் தலையின்றி இருக்கிறார்?"
என்று கேட்டு, நடந்த விஷயங்களை
தெரிந்து கொள்வர். தலையுடன்
இருந்தால் இந்த விஷயத்தை
அனைவரும் அறிந்துகொள்ள
வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
ஆகையால் இது முதற்கொண்டு
இந்த உலகம் 'பைரவர் முண்டர்'
என்று சொல்லும். இதில்
ஸம்சயமில்லை. எனக்கு
அதனால் கவலையில்லை" என்றார்
பைரவர்.
இந்த
வார்த்தையைக் கேட்ட பகவான்
ந்ருஸிம்ஹர் "நீ இப்போது
சொன்னபடியே நடக்கட்டும்"
என்றார்.
"சாமானிய
ஜனங்கள் என்னிடத்தில்
பக்தியை செய்கின்றனர்.
அவர்கள் மிக்க சந்தோஷத்துடன்
இங்கு உன்னையும் வணங்குவர்.
இந்த க்ஷேத்திரத்திற்கு
நீ பாலகனாகிறாய். எவர்
தமது மதத்தையும், ஆசாரத்தையும்,
வர்ணாச்ரம தர்மங்களையும்
மீறி வேறு வழியை செயல்படுகிறார்களோ,
பாவத்திலேயே மனத்தை உடைய
அவர்களை நீ சிக்ஷிக்க
வேண்டும். அவரவர் செய்த
வினைகளுக்கு தகுந்த பலனை
கொடுத்து அநுக்கிரஹம்
புரிய வேண்டும். இந்த
வரத்தை நான் உனக்கு கொடுக்கிறேன்"என்று
சொல்லி பகவான் ந்ருஸிம்ஹர்
அங்கேயே அந்தர்த்தானமடைந்தார்.
நாரதர்
கூறலானார் - மகரிஷிகளே!
பவநாசினியின் இப்படிப்பட்ட்
எல்லா வைபவத்தையும் உங்களுக்கு
சொன்னேன். கீழே கூறிய
பைரவருடைய வடக்கு பாகத்தில்
மலை போன்ற ஒரு பெரிய
குகை இருக்கிறது. அந்த
குகை எட்டு யோஜனை விசாலமுள்ளது;
ஸ்ரீசைலம் என்ற மலைவரையில்
நீண்டு உள்ளது. அந்த குகையில்
அதற்கு அதிபதியான ந்ருஸிம்ஹர்
வாஸம் செய்கிறார். இந்த
குகையை அடைந்துள்ள கந்தர்வர்,
கின்னரர், கிம்புருஷர்
அனைவரும் உயர்ந்த கானத்தை
பாடுகிறார்கள். செவிக்கு
பரம ஆனந்தத்தை கொடுக்கக்கூடிய
பாட்டை கேட்டு வியப்புறும்படி
பாடுகின்றனர். "அச்யுதனே!
அனந்தனே! கோவிந்த! முகுந்த!
முராரி! ந்ருஸிம்ஹ! ஜகத்தாம!"
என்று உரத்த குரலில்
பாடி ஆனந்தமடைகின்ளனர்.
இது போலவே அங்குள்ள
பல குகைகளில் ரிஷிகளும்,
தபோதனர்களும், ரிக்
வேதம், யஜுர் வேதம், ஸாம
வேதம், என்ற மூன்று வேதங்களையும்
ஓதி பரவசமடைந்து ஸஞ்சரிக்கின்றனர்.
புராணக்கதைகளையும் வேதார்த்தங்களையும்
பல வகையாக சொல்லி கொண்டு
வாஸம் செய்கின்றனர்.
உபநிஷத்துக்களில், பகவானை
அடைந்து ஆனந்தத்தை அநுபவித்தலாகிய
மோக்ஷத்திற்கு காரணமாக
பல வித்யைகள் ஓதப்பட்டிருக்கின்றன.
ஸத் வித்யை, அந்தராதித்ய
வித்யை, பூமவித்யை, தஹரவித்யை,
சாண்டில்ய வித்யை, என்று
பல வித்யைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
அந்த குகைகளில் ஸதவித்யையை
உபாஸிக்கிற மகான்கள்
சிலர். சிலர் அந்தராதித்ய
வித்யையில் தேர்ச்சி
பெற்றவர். பூமவித்யையை
அறிந்தவர் சிலர். இப்படி
ப்ரஹ்ம வித்யையை அப்யஸித்த
மகான்கள் எப்பொழுதும்
யம, நியம, ஆஸன, ப்ராணாயாம,
ப்ரத்யாஹார, தாரண, தியான,
ஸமாதி ரூபமான அஷ்டாங்க
யோகமான பக்தியை செய்து
ஆனந்த பரிதர்களாய் அந்த
குகைகளில் வாழ்கின்றனர்.
அந்த
குகையின் கர்மாவை புகழ்ந்து
சில மகான்கள் பேசுகின்றனர்.
பரமைகாந்திகளாக எப்பொழுதும்
இருந்து கொண்டு பகவானையே
அடையக்கூடிய பொருளாக
நினைத்துக் கொண்டு சிலர்
வஸிக்கின்றனர். பாஞ்சராத்திர
ஆகமத்தை அறிந்தவர் சிலர்.
சிலர் ஸம்ஹிதாபாகத்தில்
கரை கண்டவர்கள். இவர்கள்
காபிஞ்சல ஸூத்திரத்தில்
சொன்ன மார்க்கத்தில்
ஜகந்நாதனை அர்ச்சிக்கின்றனர்.
தந்திரங்களில்
ஸாத்துவிக சாஸ்திரம்
எல்லா வேதங்களையும் மூலமாக
கொண்டது. இது மிக சிறந்தது.
பாஞ்சராத்திர சப்தத்தால்
சொல்லப்படுகிறது. எல்லா
தந்த்ரங்களுக்கும் மேற்பட்டது.
வேதத்தின் ஸாரம் அதில்
சொல்லப்படுகிறது. இன்பத்தை
கொடுக்கக் கூடியது;
இது ஐஹிக பலனைப் போல்
ஆமுஷ்மிக பலனையும் கொடுக்கக்கூடியது;
பரப்ரஹ்மப்ராப்தியையும்
தர வல்லது. எல்லோருக்கும்
பத்யமானது; ரிக் வேதம்,
யஜுர் வேதம், ஸாம வேதம்,
அதர்வணவேதம் எல்லாவற்றிற்கும்
ஸமமானது இந்த பஞ்சராத்திர
சாஸ்திரம். ஸாக்ஷாத்நாராயணன்
அருளியதனால் எல்லாப்
பிரமாணங்களையும் விடச்
சிறந்த பிரமாணம் இது.
இதன்படியே பகவானை முனிவர்களுக்கு
மற்றவர்களும் முறைதவறாமல்
பூஜிக்கின்றனர்.
அந்த
குகைகளிலுள்ள மகான்கள்
சிறந்த பக்தி உடையவர்கள்.
பாஞ்சகாலிக ப்ரக்ரியையைக்
கை கொண்டவர்கள் வர்ணாச்ரம
தர்மங்களிலிருந்து சிறிதும்
நழுவாதவர்கள். ஸதா பகவானான
ந்ருஸிம்ஹனையே மனத்திற்
கொண்டு சிந்திக்கிறவர்கள்;
வேத வேதாந்தங்களின்படியும்,
தர்மசாஸ்திரங்களின்படியும்
பகவானை பூஜித்துக் கொண்டு
வஸிக்கின்றனர். இப்படி
பைரவர் என்ற கபாலியின்
வடக்கு பாகத்தில் மலை
போன்று உள்ள ஸ்ரீசைலம்
வரையில் சென்றுள்ள குகையும்
மற்றும் அங்குள்ள பிற
குகைகளும் சிறப்பு மிக்கனவாய்
திகழ்கின்றன.
இவ்வாறு
பவநாசினி நதியின் பிரபாவம்
வாசாம கோசரம். எல்லா
ஜனங்களுடைய எல்லா பாவங்களையும்
எப்பொழுதும் போக்கடிக்க
வல்லது பவநாசினி. இதன்
பெயரை சொன்ன மாத்திரத்திலேயே
கங்கை நதி போல எல்லோரையும்
சுத்தமாக்குகிறது. ஸர்வபாப
ஹரமான கங்காநதியின் பெயரை
வெகு தூரத்திலுள்ள மனிதன்
சொன்னாலும் அவனுடைய
பாவங்களை அழித்து மங்களங்களை
தர வல்லது. அது போலவே
பவநாசினி நதியும் தரவல்லது.
இதுவும் கங்கா நதியைப்
போலவே பரமனுடைய திருவடியினின்று
உண்டாயிற்று. அல்லவா?
சம்சார விஷத்தை நீக்க
வல்ல இந்த நதி அளவற்ற
ப்ரபாவத்தோடு கூடியது;
ஆகையால் எப்போதும் எல்லோருடைய
ஹ்ருதயத்திலும் வஸிக்கத்
தக்கது. அந்திம காலத்திலாவது
அந்த நதியை ஸ்மரித்து,
'பவநாசினி' என்று வாயால்
சொல்ல வேண்டும். சரியான
காலத்தில் இந்த நதியின்
பாவன தீர்த்தத்தில் ஸ்நாநம்
செய்ய வேண்டும். அநேக
கல்பங்களில் செய்த மகாபாதக
உபபாதகங்களான எல்லா பாவங்களையும்
போக்கி கொள்ள வேண்டும்.
அஸுர கூட்டங்களின் பலத்தை
அழித்து லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ
ஸ்வாமியின் திருவடித்தாமரைகளில்
பரிசர்யை செய்ய, பவநாசினியில்
ஸ்நானம் செய்து, பாவங்களை
போக்கி கொண்டவனுக்குத்தான்
அதிகாரம் உண்டு.
மகரிஷிகளே!
இந்த நிலவுலகில் அளவற்ற
செல்வத்தை சம்பாதிப்பதினால்
என்ன பயன்? எவ்வளவு சம்பாதித்தாலும்
நாம் மேலுலகம் செல்லும்போது
அதை உடன் கொண்டு செல்லப்
போவதில்லை. வாழ்கிற
காலத்திலும் அது நிலை
நின்று இருக்க போவதுமில்லை.
நம்மை விட்டு அயலாரிடம்
செல்வோம்' என்று சொல்லிக்
கொண்டே செல்வம் என்றாவது
ஒரு நாள் நம்மை விட்டுக்
போக போகிறது. இது அழியும்
செல்வம். ஆக பணம் பணம்
என்று சொல்லி கொண்டு
பணத்தை திரட்டுவதிலேயே
மனம் வைத்து மனிதனை புகழ்வது
மூடத்தனம். ஆகையால் அழியாத
செல்வத்தை பெறவே முயல
வேண்டும். அளவற்ற கல்யாண
குணங்களுக்கு இருப்பிடமான
நம் ந்ருஸிம்ஹ மூர்த்தியினிடம்
பக்தியை அதிகமாக செய்ய
வேண்டும். இதில் தைரியத்தை
அடைய வேண்டும். நம்பிக்கையுடன்
பக்தியில் ஈடுபட வேண்டும்.
பக்தியே உங்களுக்கு அளவற்ற
உயர்ந்த ஸுகத்தை கொடுக்கும்.
ஐயோ!
ஜனங்கள் மதியின்றி அற்பமான
தேவதைகளை வணங்குகின்றனரே!
ஒரே சங்கிலியில் கட்டுண்டவர்கள்
ஒருவரிடம் ஒருவர் 'என்னை
ந்த விலங்கிலிருந்து
அவித்துவிடு' என்று சொல்லி
வேண்டிக் கொள்வது போல்
உள்ளது. கர்மக்கயிற்றால்
கட்டுண்டிருக்கும் தேவர்களிடம்
வேண்டிக் கொள்வது. அப்படி
அந்த தேவதைகளுக்கும்
ஈச்வரனான பகவானை நாம்
ததித்த மாத்திரத்தில்
அவர் எப்பொழுதும் எல்லா
இன்பங்களையும் அளித்து
அநுக்கிரகிக்கிறார்.
இல்லறத்தில்
உள்ளவன் பல துன்பங்களுக்கு
ஆளாகி அல்லற்படுகிறான்.
எத்தனையோ உபத்திரவங்கள்!
மனைவி, புதல்வர், பந்துக்கள்
முதலானவர்களால் பல தோல்லைகள்
ஏற்படுத்துகின்றன. ஆகையால்
பகுத்தறிவு பெற்றவர்கள்
நகரத்தில் வாஸம் செய்வதை
விட்டு, காடுகளில் வாழ
விரும்புகின்றனர். அதிலும்
ஏகாந்தமான குகைகளில்
இருந்து கொண்டு தவம்
புரிகின்றனர். புண்ணிய
திர்த்தங்களில் ஸ்நாநம்
செய்கின்றனர். சிங்கப்பிரானுடைய
கதாம்ருதத்தை செவியால்
பருகுகின்றனர். அங்கு
வாஸம் செய்யும்போது
தமது சரீரங்களையும் புலன்களையும்,
கனிகளையும் செந்நெல்லையும்
உண்கின்றனர். இதுவே அவர்களின்
உணவு வேறு சுகபோகங்களை
அநுபவிப்பதற்காக பால்,
நெய் முதலியவற்றை புசிப்பதில்லை.
பவநாசினியின் கரையில்
இருந்து கொண்டு மதுத்
வேஷியான பகவானின் உயர்ந்த
கதைகளில் மனத்தை செலுத்தி
எப்போதும் அங்கு வஸிக்கின்றனர்.
இந்த அஸாரமான ஸம்ஸாரத்தில்
பரமார்த்த விஷயத்தை சிந்திக்க
இடமில்லை. அனந்தனான பகவானிடத்தில்
பக்தியும் மலைத் தாழ்வரைகளிலும்
குகைகளிலும் வஸிப்பதுமே
மிகவும் ஸாரமானது என்று
நாரதர் மகரிஷிகளை பார்த்து
கூறினார்.
*****